வரம் 1

Loading

“டாக்டர் ஆண்ட்டி.. உங்களுக்கு கல்யாணமா?” என்று அந்த பத்து வயது சிறுமி கேட்க, அவள் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை வந்தது.

“யார் சொன்னா உங்களுக்கு?”

“அம்மா.. சொல்லுங்க டாக்டர் ஆண்ட்டி”

“ஆமா..”

“ஐஐ..! அப்போ நிறைய ஸ்னாக்ஸ் கிடைக்கும்ல?”

அவளுக்கு சிரிப்பு வர, சிரித்துக் கொண்டே அந்த சிறுமியின் உடலை பரிசோதித்தாள்.

“ம்மா.. எனக்கு எப்போமா கல்யாணம் பண்ணுவ? எனக்கும் நிறைய ஸ்னாக்ஸ் வேணும்” என்று சிறுமி அன்னையிடம் கேட்க, “நீ டாக்டர் ஆண்ட்டி மாதிரி பெரிய பொண்ணா வளர்ந்தப்புறம் கல்யாணம் பண்ணலாம்” என்றாள் அன்னை.

“அப்படியா? நான் இவ்வளவு பெருசாகனுமா?”

“ஆமா”

உடனே மெத்தையில் ஏறி நின்றவள், “இப்ப பெருசாகிட்டேனே” என்று கேட்டு வைக்க, அன்னை பதில் சொன்ன முடியாமல் முழித்தாள்.

“ஓகே ஓகே.. நீங்க வளர்ந்துட்டீங்க தான். ஆனா வளர்ந்தா மட்டும் போதாது. நிறைய படிச்சு, டாக்டர் ஆண்ட்டி மாதிரி டாக்டர் ஆகனும். நிறைய பேர காப்பாத்தனும். எல்லாம் பண்ணப்புறம் கல்யாணம் பத்தி பேசுங்க. இப்போ.. நோ”

“ம்ம்…” என்று முகத்தை சுருக்கினாள் சிறுமி.

“உடனே சேட் ஃபேஸ் வச்சுக்கக் கூடாது. இப்போ நீங்க ஒழுங்கா டேப்ளட்ஸ் எல்லாம் போட்டுக்கிட்டா, என் கல்யாணம் முடிஞ்சதும் உங்களுக்கு நிறைய ஸ்னாக்ஸ் கொண்டு வருவேன்”

“நிஜம்மாவா?”

“ஆமா.. டாக்டர் ஆண்ட்டி பொய் சொல்ல மாட்டேன்ல? சோ சமத்தா இருங்க. ஓகே?” என்று கூறி விட்டு சிறுமியை பெற்றவளிடம் பேசி விட்டு, அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.

“மேடம்” என்று யாரோ அழைக்க, நின்று திரும்பிப் பார்த்தாள்.

“என்ன சிஸ்டர்?”

“அங்க ஒரு பாப்பா ரொம்ப அழுகுது. வாங்களேன்”

தலையசைத்து விட்டு வேகமாக சென்றாள்.

“இங்க பாரு தங்கம்.. ஒரு ஊசி தான். அப்புறம் நாம இங்க வரவே வேணாம். சரியா?” என்று சிறு குழந்தையிடம் ஒருவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“மாட்டேன் ஊசி போட மாட்டேன்” என்று குழந்தை அழ, நர்ஸ் பாவமாக நின்று இருந்தார்.

குழந்தைகள் எல்லோரும் இப்படி அடம்பிடிப்பது சகஜமே. அதனால் நர்ஸை தாண்டி உள்ளே சென்றாள்.

“என்ன ஆச்சு பாப்பாக்கு? ஏன் அழ வைக்கிறீங்க?” என்று கேட்டவளை, வேகமாக திரும்பிப் பார்த்தான் அவன்.

“லாலி” என்று அவனது வாய் முணுமுணுத்தது.

வைசாலி அவனை சரியாக கவனிக்காமல், குழந்தையை பார்த்தாள்.

“ஃபீவர் டாக்டர். ஊசி போட மாட்டேன்னு அழுறா பாப்பா.” என்றார் நர்ஸ்.

“அப்படியா? ஊசி வேணாமா?”

“வேணாம். வலிக்கும்”

“அப்போ பாப்பா காய்ச்சல் எப்படிப்போகும்?”

குழந்தை சினுங்க, “சரி ஆண்ட்டி வலிக்காம ஊசி போடவா?” என்று கேட்டாள்.

குழந்தை அதற்கும் மறுத்து முகத்தைத்திருப்ப, “இங்க பாருங்க. இப்ப நீங்க ஊசி போட்டா தான் ஃபீவர் போகும். அப்ப தான் உங்க அப்பா நிறைய சாக்லேட் வாங்கித்தருவாரு. இல்லனா நோ சாக்லேட். அப்படித்தானே சார்?” என்று அவனிடம் கேட்டாள்.

மெலிதாக புன்னகைத்தவன், “சாக்லேட் வேணுமா? வேணாமா?” என்று குழந்தையிடம் கேட்டான்.

“வேணும்”

“அப்போ அழாம ஊசி போட்டுக்க. ரூம் போகும் போது வாங்கித்தர்ரேன்”

சினுங்கிக் கொண்டே இருந்தாலும் பெரிதாக அழாததால், நர்ஸ் ஊசியை போட்டு விட்டார். வலியில் உதட்டைப்பிதுக்கி குழந்தை அழ, தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தான்.

“அரை மணி நேரமா பக்கத்துலயே வரவிடாம அழுதுட்டு இருந்தா. தாங்க்ஸ்”

வைசாலி தலையைசைத்து விட்டு நகல, “லாலி” என்று விட்டான்.

சட்டென நின்று திரும்பிப் பார்த்தாள்.

“ஸ்ஸ்..” என்று நாக்கை கடித்து விட்டு, “வைசாலி..” என்று புன்னகைத்தான்.

அவனை உடனே கண்டுகொண்டவள், விழிவிரித்துப் பார்த்தாள்.

“கிங்?” என்று கேள்வியாக நிறுத்த, அவன் முகத்தில் புன்னகை.

“நான் தான். டாக்டரா நீ?” என்று ஆச்சரியமாகக் கேட்க, “அப்படித்தான இருக்கேன்?” என்று ஒரு மிடுக்கோடு கேட்டாள்.

“டான்ஸ் ஆடப்போறியா நீ?” என்று கேட்டதும், “அப்படித்தான ட்ரஸ் பண்ணி இருக்கேன்?” என்று தலையை நிமிர்த்தி பதில் கேள்வி கேட்ட வைசாலி தான் அவன் நினைவில் வந்தாள். உடனே புன்னகை விரிந்தது.

“ஆமா பார்க்க அச்சு அசல் டாக்டர் மாதிரியே இருக்க” என்று கூறி வைக்க, வைசாலி அவனை போலி முறைப்போடு பார்த்தாள்.

“அரசன் சோப்பு” என்று மெல்லிய குரலில் கூறி அவனை வம்பிழுத்து விட்டு, “எப்போ கல்யாணம் ஆச்சு?” என்று விசாரித்தாள்.

“ஏன்?”

“ஏன்னா? பாப்பா இருக்காளே?”

“பாப்பா என்னை மாதிரியா இருக்கா?” என்று கேட்க, குழந்தையையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.

“இல்லயே.. அம்மா மாதிரியோ?”

“இல்ல அப்பா மாதிரி தான்”

“மாமா..” என்று குழந்தை அவன் கன்னத்தில் கைவைக்க, “என்னடாமா?” என்றான்.

“பசிக்கு”

“பசிக்குதா? இதுக்கு தான் அப்பவே சாப்பிடுனு சொன்னேன். சொல் பேச்சு கேட்காம அடம் பிடிக்கிறது.” என்று கன்னத்தை கிள்ளி வைத்து முத்தமிட்டவன், “என்ன கொடுக்கலாம்? இட்லி ஓகே தானே?” என்று வைசாலியிடம் கேட்டான்.

“ம்ம்.. சாப்பிட்டதும் டேப்ளட் மறக்காம போட வச்சுடுங்க. உங்க சிஸ்டர் பொண்ணா?”

அரசேந்திரன் தலையாட்டி சிரிக்க, வைசாலி புன்னகைத்து வைத்தாள்.

நர்ஸ் அவனிடம் மருந்து எழுதிய காகிதத்தை வந்து நீட்ட, வாங்கிக் கொண்டான். எது எப்போது கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டவன், “மணி செல்லம்.. ஆண்ட்டிக்கு பை சொல்லு” என்றதும் கையாட்டினாள்.

“பைடா” என்று வைசாலியும் கையாட்ட, “கிளம்புறேன்” என்று அரசேந்திரனும் புன்னகைத்து விட்டு வெளியேறி விட்டான்.

“உங்களுக்கு தெரிஞ்சவரா மேடம்?” என்று நர்ஸ் கேட்டதும், தலையை மட்டும் ஆட்டி விட்டு வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள்.

ஹோட்டலுக்கு வந்தவன் இட்லியை வாங்கி வைத்து, தூங்கிக் கொண்டிருந்த மணிகர்ணிகாவை எழுப்பி, இட்லியை பாலில் தோய்த்து ஊட்ட ஆரம்பித்தான். அந்நேரம் கைபேசி இசைக்க, எடுத்து ஸ்பீக்கரில் போட்டான்.

“பாப்பா எப்படி இருக்கா அரசு?” என்று கவலையாக ஒலித்தது மணிகர்ணிகாவின் அன்னை அஞ்சனாவின் குரல்.

அன்னையின் குரலை கேட்டதும், “ம்மா ம்மா” என்றாள் மணிகர்ணிகா.

“என்னமா? பட்டு குட்டிக்கு ஃபீவரா?”

“ம்ம் ம்ம்” என்று முணங்கினாள்.

“எதாச்சும் சாப்பிட்டாளா அரசு?”

“இப்ப தான் இட்லி சாப்பிடுறா. தூக்கத்துல சாமியாடிட்டே உன்னை மாதிரியே சாப்பிட்டுட்டு இருக்கா அஞ்சு. இந்த விசயத்துல இவ உன்னை மாதிரி தான். அத்தான் மாதிரி இல்ல”

“ப்ச்ச். காய்ச்சலோட சமாளிச்சுட்டு இருக்க. இங்க வேலைய விட்டுட்டு அகலவே முடியல”

“இப்ப என்ன? நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன்ல? வேலையை முடி முதல்ல”

“ஹாஸ்பிடல்ல என்ன சொன்னாங்க?”

“சாதாரண காய்ச்சல் தான். ஊசி போடத்தான் அடம்பிடிச்சு அழுதுட்டா”

“ம்மா.. ஊசி போட்டாங்க. வலிக்கு” என்று தடவ, “ஐஸ்கிரீம் வேணும்னு கேட்டு காய்ச்சல இழுத்துட்டு, வலிக்கு வலிக்குனு சொல்லிட்டு இரு” என்று மருமகளை முறைத்தான்.

மணிகர்ணிகா தாய்மாமனை இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

“என்ன முறைப்பு? இனிமே ஐஸ்கிரீம் கேளு. வாயில ஊசி போடச்சொல்லுறேன்”

“உங்க வாயில போடுவாங்க ஊசி. எனக்கு போட மாட்டாங்க”

“நானா ஐஸ்கிரீம் கேட்டேன்?”

“நீங்களும் தான் சாப்பிட்டிங்க?”

மாமன் மருமகள் சண்டை போட ஆரம்பித்து விட, அப்போது தான் அஞ்சனாவிற்கு நிம்மதி வந்தது. மணிகர்ணிகா நல்ல நிலையில் இருந்தால், அரசேந்திரனுடன் எப்போதும் பேசிக் கொண்டே தான் இருப்பாள்.

“வாய் வாய்.. உங்கம்மா மாதிரியே வாய்.. அத்தான் கிட்ட சொல்லித் தரேன் இரு” என்று அவளோடு பேச்சு பேச்சாக இருந்தாலும், உணவை ஊட்டி வாயைத் துடைத்து விட்டான்.

“அப்பா கிட்ட நான் சொல்லுவேன். மாமா தான் ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடிச்சாங்கனு”

“அவ்வா..! எப்படி அப்பட்டமா பொய் சொல்லுறா பாரு. என்ன பிள்ளை வளர்த்து வச்சுருக்க நீ?” என்று அஞ்சனாவிடம் தான் சண்டைக்கு போனான்.

“நான் நல்லா தான் வளர்த்தேன். அவ மாமனும் அப்பாவும் தான் கெடுத்து விடுறாங்க”

அஞ்சனாவின் பேச்சைக்கேட்டு, மணிகர்ணிகா கட்டை விரலை ஆட்டி நாக்கை துருத்தி பழிப்பு காட்டி சிரித்தாள்.

“ஆறு வயசு தாண்டல.. அறுபது வயசு கிழவி மாதிரி சேட்டை. உட்காரு. மாத்திரை டானிக் ரெண்டையும் ஒழுங்கா சாப்பிடுற” என்று மிரட்டி விட்டு, மடியில் அமர வைத்து மாத்திரையை போட வைத்தான்.

“மணி… நாளைக்கு காலையில அம்மா வந்துடுவேன். அது வரை சமத்தா மாமா கிட்ட இருக்கனும். ஓகே?”

“ஓகே ம்மா” என்றவளுக்கு தூக்கம் கண்ணை சுழட்டியது.

“நீ வை அஞ்சு. நான் அப்புறம் கூப்பிடுறேன்” என்று கூறி விட்டு, மணிகர்ணிகாவை நன்றாக படுக்க வைத்து தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான்.

மணிகர்ணிகா நன்றாக தூங்கியதும், அஞ்சனாவை அழைத்தான்.

சற்று தள்ளி அமர்ந்து கொண்டவன், “வேலை எப்படிப்போகுது அஞ்சு?” என்று விசாரித்தான்.

“ஏன் கேட்குற? ஒன்ன தொட்டா ஈசல் மாதிரி நூறு கிளம்புது. எப்படிடா இவனுங்க இவ்வளவும் பண்ணிட்டு சாதாரணமா சுத்துறானுங்க?”

“பார்த்துக்கலாம் விடு. அத்தான் எங்க?”

“அவரு அரசியல்கட்சி ஆளுங்க கூட மீட்டிங்னு போனாரு. இன்னும் வரல. வந்ததும் கிளம்பிடுவோம்”

“ஓகே பத்திரமா வாங்க”

“பாப்பாவ பார்த்துக்க”

“பார்த்துப்பேன். இன்னைக்கு ஹாஸ்பிடல்ல வைசாலிய பார்த்தேன் அஞ்சு”

“வைசாலியா? யாரு?”

“அதான் லாலி”

லாலி என்றதுமே அஞ்சனா கண்டுபிடித்து விட்டாள்.

“லாலி? வைசாலியா? எப்படி இருக்கா?”

“மேடம் டாக்டர். அதுவும் பீடியாட்ரிஷன். மணிய ஊசி போட சமாளிச்சதே அவ தான் “

“வைசாலி டாக்டரா? பாரேன்! எவ்வளவு வருசம் ஆச்சு அவள பார்த்து! காலம் ரொம்ப ஸ்பீடா போகுதுல?”

“ம்ம்..”

“நீ பேசுனியா?”

“இல்ல.” என்றவன் நடந்தை கூறினான்.

“ஓஓ.. இன்னொரு கால் வருது. நான் கிளம்பிட்டு பேசுறேன் அரசு” என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

மணிகர்ணிகாவை ஒரு நிமிடம் பார்த்தவன், மெத்தையில் சரிந்து படுத்துக் கொண்டான். மனதில் வைசாலி வந்து போனாள். இங்கு இப்படி அவளை சந்திப்பான் என்று நினைத்து பார்க்கவே இல்லை.

  • ••

வைசாலி வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

இந்த மருத்துவமனைக்கு வேலைக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிறது. அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக இங்கு வேலையில் சேர்ந்திருந்தாள்.

வெளியே வந்து காரை எடுக்க, கைபேசி அதிர ஆரம்பித்தது. காரை அப்படியே நிறுத்தி விட்டு, அழைப்பை ஏற்றாள்.

“வைசு டியூட்டி முடிஞ்சதா?”

“இப்போ தான். வீட்டுக்குக் கிளம்பிட்டு இருக்கேன். நீங்க என்ன பண்ணுறீங்க?”

“எனக்கு இன்னும் வேலை இருக்குமா”

“இன்னைக்கு என்னோட சைல்ட்ஹூட் ஃப்ரண்ட பார்த்தேன்பா”

“ஓஓ சூப்பர்டா”

“ப்ச்ச்.. அவங்க நம்பர் வாங்க மறந்துட்டேன். போயிட்டாங்க”

“திரும்ப பார்த்தா வாங்கிடலாம். யார் அவங்க?”

வைசாலி பதில் சொல்லும் முன், அந்த பக்கம் எதோ பேச்சுக்குரல் கேட்டது.

“வைசு.. நான் அப்புறம் பேசுறேன். வீட்டுக்கு பத்திரமா போ” என்று கூறி வைத்து விட்டான்.

வைசாலியும் கிளம்பி விட்டாள். போகும் வழியெல்லாம் அரசேந்திரனின் நினைவு தான்.

அவனை அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். சிறு வயது என்றால் மிக மிக சிறிய வயதில் அவனை பார்த்தது. அந்த நினைவுகளில் அவளது முகம் மலர்ந்தது.

இருவரும் படித்த பள்ளி, ஆரம்ப பள்ளியிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை இருக்கும் தனியார் பள்ளி. அதில் அரசேந்திரன் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம்.

பள்ளிப்பேருந்தில் ஒரு நிறுத்தத்தில் அவள் ஏறினாள். எங்கும் பிள்ளைகள் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சுற்றி முற்றி பார்த்தபடி, அரசன் அருகே சென்று அமர்ந்து விட்டாள்.

தன் நண்பனை தவிர யாரையும் அருகே அமர விடாத அரசேந்திரன், அவளை துரத்தி விடுவதற்காக திரும்பினான்.

கொழுக் மொழுக் குழந்தையாக, தன் குட்டி முடியில் இரட்டை குதிரை வாலை போட்டுக் கொண்டு, பையை பிடித்தபடி பேருந்தை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள் வைசாலி.

“ஓய்.. என்ன இங்க உட்கார்ந்து இருக்க?” என்று அரசன் கேட்டதும், அவன் பக்கம் திரும்பியவளின் முட்டைக்கண் அவனை அதிர வைத்தது.

“முட்டக்கண்ணி” என்று வம்பிழுக்க, “என் பேரு முட்டக்கண்ணி இல்ல சாலி” என்றாள்.

அது அவன் காதில் “லாலி” என்று விழுந்து வைத்தது.

“லாலியா?” என்று கேட்டவன் வாயில் கை வைத்து கிண்டலாக சிரிக்க, “லாலி இல்ல சாலி வைசாலி” என்று மிடுக்காக கூறினாள்.

“உனக்கு லாலி தான் நல்லா இருக்கு. என்ன க்ளாஸ்?”

“யூகேஜி”

“அப்ப எல்கேஜி படிக்கலயா?”

“அது எங்க ஊருல படிச்சேன்.”

“உங்க ஊருல யூகேஜி ஸ்கூல் கட்டலயா?”

“என் அப்பா இங்க தான் வேலை பார்க்குறாரு. அதான் இங்க ஸ்கூல் படிக்கலாம்னு வந்தோம்”

நீளமாக நிறுத்தி நிறுத்தி அவள் பேச, அரசன் பொறுமையாக கேட்டுக் கொண்டான்.

“உன் பேரென்ன?”

“அரசேந்திரன்”

அவன் பெயர் புரியாமல் வைசாலி முழிக்க, “அரசன்” என்றான்.

“அரசன் சோப்பா?” என்று வைசாலி இப்போது சிரிக்க, அரசேந்திரன் முறைக்க வேண்டியிருந்தது.

“அரசன் சோப்பு உங்க சோப்பா?”

“இல்ல.. என் பேரு அரசன் மீன்ஸ் கிங். சோப்பு இல்ல” என்று பல்லைக்கடித்தான் எட்டு வயது மாணவன்.

“கிங்கா? சரி”

அடுத்த சில நிறுத்தத்தில் ஏறிய அரசனின் நண்பன், அவனருகே இருந்த வைசாலியை பார்த்து முறைத்தான்.

“நான் தான் இங்க உட்காருவேன். எந்திரி” என்று அவன் கத்த, “நான் தான் ஃபர்ஸ்ட் வந்தேன்” என்று வைசாலி அசராமல் கூறினாள்.

அவன் அரசனை முறைத்தான். ‘துரத்தி விடாமல் இருக்கிறானே?’

“நீ போய் முன்னாடி உட்காருடா. இது புது பாப்பா ஸ்கூல்க்கு” என்று அரசன் கூறும் போதே, அவர்களை பேருந்தில் கவனித்துக் கொள்ள இருக்கும் ஆள் வந்து விட்டார்.

“ஏன் நிக்கிற? போய் உட்காரு” என்று அதட்டவும், அரசனையும் வைசாலியையும் முறைத்து விட்டு முன்னால் சென்று விட்டான்.

“இது உன் ஃப்ரண்ட்டா?”

“ஆமா.”

வைசாலி தலையை ஆட்ட, அரசன் பேசிக் கொண்டே இருந்தான். வைசாலியும் பேசினாள். பள்ளி வரும் வரை பேசிக் கொண்டு தான் இருந்தனர். முதன் முதலில் சந்திப்பவர்கள் என்ற தயக்கமெல்லாம் அந்த குழந்தைகளுக்கு இல்லை. இருவரும் நன்றாக பேசும் அறிவாளிக் குழந்தைகள். இடையிடையே கிண்டல், சிரிப்பும், கோபமும் வேறு வந்தது. அன்றே இருவரும் நன்கு தெரிந்தவர்களாக மாறி விட்டனர்.

அதன் பின் இதுவே தொடர்கதையானது. தினமும் அவனருகே வந்து அமர்ந்து விடுவாள் வைசாலி. மாலை திரும்பும் போதும் இதே நிலை தான். இருவரிடையே அழகான பெயரிடப்படாத நட்பு உருவானது.

அது அன்று மட்டுமல்ல அடுத்த ஆறு வருடமும் தொடர்ந்தது. அந்த பேருந்து பயணம் இருவருக்கும் மறக்க முடியாத பயணம். ஆறு வருடங்கள் இருவரும் ஒன்றாகவே சென்று வருவார்கள். இடையில் யார் விடுமுறை எடுத்தாலும், வேறு யாரையும் அருகே அமர விட்டது இல்லை.

சிறுவயதில் கல்மிசமில்லாத நட்பு மிக மிக அழகானது. இருவரும் வயது வித்தியாசத்தை மறந்து பழகிய அந்த காலம் பொக்கிஷம் என்றே நினைத்தாள் வைசாலி.

பல நேரங்களில், வீட்டில் விளையாடி விட்டு பேருந்தில் வந்து படிப்பாள் வைசாலி. அதற்கெல்லாம் அரசனிடம் கொட்டும் வாங்கிக் கொள்வாள்.

சில நேரம் பொறுத்துப்போய்விடுபவள், பல நேரம், “போடா அரசன் சோப்பு” என்று திட்டி விடுவாள்.

“போடா சொல்லுவியா? சொல்லுவியா?” என்று நன்றாக கொட்டி வைப்பான்.

இருவரும் சாதாரணமாக பேசுவதென்றால், “லாலி” என்றும் “கிங்” என்றும் தான் பேசுவார்கள்.

கோபம் வந்தால் மட்டும் லாலி, முட்டைக்கண்ணி ஆகிவிடுவாள். கிங், அரசன் சோப்பாகிவிடுவான்.

இப்போதும் அதை நினைத்ததும், வைசாலியின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது.

முக்கால் மணிநேரம் பயணம். முழுவதுமே அவன் நினைவு தான். வீடு வந்து சேர்ந்தவளை அக்கம் பக்கமிருந்தவர்கள் பார்த்தனர்.

“வாமா கல்யாணப்பொண்ணு. வர்ர நேரமா இது?”

“ஹாஸ்பிடல்ல இருந்து நேரா கிளம்பி இங்க தான் சித்தி வர்ரேன். வேலை அப்படி” என்று கை விரித்தவள், காரிலிருந்து தன் உடமைகளை கீழே எடுத்து வைத்தாள்.

“இப்ப தான் வர்ரீங்களா அக்கா?” என்று கேட்டபடி பக்கத்து வீட்டுப்பெண் வர, “ஆமாடா. அம்மா எங்க?” என்று கேட்டாள்.

“பூசாரிய பார்க்க போனவங்க இன்னும் வரல. சாவி எங்க கிட்ட கொடுத்து கொடுக்க சொன்னாங்க” என்றவள் கதவை திறந்து விட, வைசாலி பெட்டிகளை உள்ளே தூக்கிச் சென்றாள்.

“இந்தாங்க கா. நான் கிளம்புறேன்” என்று ஓடி விட்டாள்.

வீட்டுக்குள் வந்து உடமைகளை ஓரமாக வைத்து விட்டு, குளிக்கச் சென்று விட்டாள்.

குளித்து முடித்து வந்தவள், அவளுக்கு நிச்சயத்திருக்கும் மாப்பிள்ளைக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

மீண்டும் அரசனின் நினைவு வர, “ச்சே.. நம்பர் வாங்கி இருக்கலாம்” என்று சலிப்பாக நினைத்துக் கொண்டாள்.

திடீரென எதோ நினைவு வந்தவளாக, தன் அலமாரியின் பக்கம் சென்றாள். வீட்டுக்குள் இருந்த இரண்டு அலமாரிகளில் எதையோ தேட ஆரம்பித்தாள்.

பிறகு அலமாரிக்கு மேல் இருந்த பெட்டிகள் உள்ளே இருந்த மற்றொரு பெட்டியை எடுத்தாள். அதில் இருந்தது எல்லாம் வரைவதற்காக அவள் பயன்படுத்திய பொருட்கள்.

சிறிய டப்பாவில் நான்கைந்து தூரிகைகள் இருந்தது. அது தன் முடியை இழந்து மொட்டையாக இருந்த போதும், பத்திரமாக வைத்திருந்தாள்.

அதில் ஒன்றை எடுத்தவளுக்கு கொடுத்தவனின் நினைவு தான். அரசன் கொடுத்தது.

அவன் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்பு கொடுத்தது.

ஒன்றாக ஒரே பேருந்தில் போய்க் கொண்டிருந்தவர்கள், ஏழாம் வருடத்தில் பிரிவை சந்தித்தனர். அரசன் ஒன்பதாம் வகுப்பில் அடி எடுத்து வைத்தான்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, பத்தாம் வகுப்பின் பாடங்களை சேர்த்து எடுக்கும் வழக்கத்தை வைத்திருந்தனர் பள்ளி நிர்வாகம். பத்தாம் வகுப்பின் பொதுத்தேர்வை எதிர் கொள்ள, அப்போதிலிருந்தே மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தனர்.

அரசன் வழக்கமாக செல்லும் நேரத்தை விட, ஒரு மணி நேரம் முன்னதாக வேறு பேருந்தில் பள்ளி செல்ல ஆரம்பித்தான். மாலையும் சிறப்பு வகுப்பு முடிந்து தாமதமாக வீடு சென்று சேர்ந்தான்.

இதில் முதலில் அதிகம் பாதிக்கப்பட்டது வைசாலி தான். அவனுடன் செல்லாமல் பேருந்தே பிடிக்காமல் போனது அவளுக்கு. ஆனாலும் வேறு வழியில்லை.

“நீ ஹோம் ஒர்க் சொல்லியே தரல. நான் ஃபெயிலாகிடுவேன்” என்று உதட்டை பிதுக்கி அழப்போனாள்.

அப்போது அரசன் தான் அவளை சமாதானம் செய்து வைத்தான். போகப்போக அரசன் இல்லாமல் சரியாக படித்துப்பழகிக் கொண்டாள்.

இதுவும், அரசனின் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு வரும் போது முடிவுக்கு வந்தது. பொதுத்தேர்விற்கு முன்பு அவளை சந்தித்து இந்த பெட்டியைக் கொடுத்தான்.

“ஐ!” என்று வாங்கிக் கொண்டவள், “எதுக்கு?” என்று குழப்பமாக கேட்டாள்.

“பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சு நான் காலேஜ் போயிடுவேன்ல? எல்லாரும் பிரிய போறோம்னு கிஃப்ட் வாங்கிக் கொடுத்தோம். அப்புறம் ஸ்லாம் புக் எழுதுனோம். உன்னையும் இனி பார்க்க முடியாதுல? அதான் உனக்கு கிஃப்ட். நீ தான் நல்லா கிறுக்குவியே.. இத வச்சு இன்னும் நல்லா கிறுக்கு”

“அரசன் சோப்பு” என்று பல்லைக்கடித்தாலும், அந்த பரிசை ஏற்றுக் கொண்டாள்.

“உன் ஸ்லாம் புக் கொடு. நான் எழுதித் தர்ரேன்”

“க்ளாஸ்ல இருக்கு.. இரு எடுத்துட்டு வர்ரேன்” என்று எடுத்து வந்து கொடுத்தான்.

என்ன எழுதுவதென்று தலையில் தட்டி யோசித்தவள், திடீரென எழுத ஆரம்பித்தாள்.

“நீ ரொம்ப ஸ்வீட் கிங். நல்ல மார்க் எடுத்து, நிறைய படிச்சு, சோப்பு கம்பெனி ஆரம்பிச்சு, எனக்கு நிறைய சோப் ஃப்ரியா கொடுக்கனும். ஆல்திபெஸ்ட். லாலி” என்று சுத்தமான ஆங்கிலத்தில் அழகான கையெழுத்தில் எழுதிக் கொடுத்தாள்.

வாங்கிப்படித்தவன், அவள் தலையில் நறுக்கென கொட்டு வைத்தான்.

“உன்னை எழுதச்சொன்னா சோப்பு கம்பெனி வைக்கச் சொல்லுற? உனக்கு ஃப்ரியா வேற கொடுக்கனுமா? முட்டக்கண்ணி” என்று திட்ட, வைசாலி அவனை அடித்து விட்டு ஓடியிருந்தாள்.

அது தான் அவனிடம் கடைசியாக பேசியது. தேர்வு முடிந்து முடிவுகள் வந்த பின்னும், அவனை அவள் பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்களுக்குப்பிறகு இன்று தான் பார்க்கிறாள்.

அரசன் தன்னை உடனே கண்டுபிடித்ததை நினைத்து, மனதுக்குள் சந்தோசமாக இருந்தது.

“ச்சே.. நம்பர் வாங்கி இருக்கலாம்” என்று மீண்டும் ஒரு முறை தலையில் தட்டிக் கொண்டாள்.

அதே நேரம் அவனும் அதைத்தான் நினைத்தான்.

“லாலி நம்பர் வாங்கி இருக்கலாம். முட்டக்கண்ணி டாக்டர் ஆகியிருக்கா. பாராட்டி இருக்கலாம். நாலு வார்த்தை கூட பேசல. பட் பார்த்ததுல ஹாப்பி” என்று சந்தோசப்பட்டுக் கொண்டான்.

One Comment

Leave a Reply