Episode 1

Loading

எனது முதல் இரு கதைகளான உருகும் நிலவாய், தகிக்கும் மலரவள் கதைகளின் தொடர்ச்சி…

*.*.*.*.

தகிக்கும் கதிரவன் கூட அன்று தன் வெப்பத்தை குறைத்து வெளிச்சத்தை மட்டும் உலகிற்கு வழங்கி எழுந்து கொண்டிருக்க, அவனது முகமோ, கோபத்தில் செந்தனலாக கொதித்து சூரியனின் வெப்பத்தை கொண்டு வந்து இருந்தது.

உதிக்கும் சூரியனை முறைத்துக் கொண்டு காதில் மாட்டிய ப்ளூடூத் வழியாக வந்த செய்தியை கேட்டுக் கொண்டிருந்தான்.

“அடேய் உதிச்சது ஒரு குத்தமாடா” என்று புலம்பிய படி சூரிய பகவான் வானத்தை தொட்டு விட்டார்.

அவன் முறைத்த முறைப்பை எல்லாம், “நீ முறைச்சா நாங்க பயப்படனுமா?” என்று நக்கலாக பார்த்து விட்டு அவன் மேலேயே வந்து விழுந்தது கதிரவனின் குழந்தைகளான வெளிச்சகதிர்கள். இன்னும் இன்னும் சிவந்த முகம் ஜொலித்து உச்சத்தை அடைந்த நேரம் அழைப்பை பட்டென துண்டித்து விட்டான்.

‘உனக்கு இன்னைக்கு பொழுது நல்லதா விடியல. எவனா இருந்தாலும் என் கையில மட்டும் சிக்கு. அடுத்த சன் ரைஸைஸ் பார்க்க இருக்க மாட்ட’ என்று அவன் மனதில் தாளிக்க, “அப்பவும் நான் தானா டா” என்று ஞாயிறு தலையில் கை வைத்துக் கொண்டது.

குளித்து முடித்து கிளம்புவதற்குள் வந்த நூறு அழைப்புகளை, ஏற்று பதில் சொல்லும் முன் ஓய்ந்து போனான். அத்தனை கோபமும் முகம் தெரியாத அந்த நபரின் மீது பாய்ந்தது. இறுதியாக அறையை விட்டு இறங்கி வரும் போது, அவனது செயலாளரிடமிருந்து அழைப்பு வந்தது.

“சார் அந்த நியூஸ் போட்டது ஒரு பொண்ணு சார். மிடில் க்ளாஸ்னு சொல்லுறாங்க. அதுக்கு மேல அவங்க குடும்பத்த ஆராய முடியல. நேரா அந்த ஆபிஸ்க்கு போயிடவா?” என்று பம்மியபடி கேட்க, ” வேணாம்” என்ற ஒற்றை வார்த்தையில் கத்தரித்து விட்டான்.

சாப்பாட்டை முடித்துக் கொண்டு கிளம்பிய தந்தையை பார்த்து, “மார்னிங் டாட்” என்றான்.

அவனுக்கு பதில் சொல்லியவர் வேறெதுவும் பேசவில்லை. தன் உடமைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். பிரச்சனையை பற்றி அவருக்கு தெரியும். ஆனால் மகனிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவனே சரி செய்து விடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு.

“செழியா” என்று கிளம்பும் போது அழைக்க, “சொல்லுங்க” என்றான் தட்டில் வைத்த இட்லியை பார்த்துக் கொண்டு.

“ரெண்டு நாள்ல பொண்ணு பார்க்க போறோம். ஞாபகம் இருக்குல? மீட்டிங் அது இதுனு இந்த தடவ காரணம் வரக்கூடாது. நீ வரனும்” என்றார் அன்பு செல்வம்.

“ம்ம் ம்ம்” என்றவனின் குரல் வெளி வராமல் இருக்க, வாயில் சாப்பாட்டை அடைத்துக் கொண்டே கூறினான்.

‘எவன்டா கண்டு பிடிச்சான் இந்த கல்யாணத்த?’ என்று பத்தாயிரத்து பத்தாவது தடவையாக யோசித்து (திட்டி?) இருப்பான்.

அடுத்த அழைப்பு. சலித்துக் கொண்டே எடுத்து பார்க்க, ரகு என்று காட்டியது.

“சொல்லுடா… ஆனா நீயும் அந்த நியூஸ் பத்தி கேட்ட கொலை காண்டாகிடுவேன்” என்றான் அன்பு செழியன்.

“ஹா ஹா.. ரொம்ப கடுப்பேத்திட்டாங்களா என்ன?”

“ஆமா டா ச்சை. சரி நீ எதுக்கு கூப்பிட்ட?” என்று பேச்சை மாற்றினான்.

“அங்கிள்க்கு கால் பண்ணேன் எடுக்கல. சரி வீட்டுல இருப்பார்னு உனக்கு போட சொல்லி அண்ணன் சொன்னாங்க”

“அப்பா இப்ப தான் கிளம்புறார். ட்ரைவிங்ல இருப்பார். நீ அவர் பி.ஏக்கு போடு.”

“போட்டேன். ரீச் ஆகல”

“சரி அப்புறம் அப்பாவே கூப்பிடுவார். என்ன விசயம்?”

“அதான் அந்த பார்ட்னர்சிப் மீட்டிங்க்கு தான். எதோ அண்ணன் கேட்கனுமாம்.”

“ஓஓஓ… ராம் அண்ணா நல்லா இருக்காங்களா?” என்று கேட்டு வைக்க, ரகு பல்லை கடித்தான்.

“அடேய்! அவர் உனக்கு அத்தான். அண்ணன்னு கூப்பிடுற”

“தெரியுமே..! ஆனா அண்ணானு கூப்பிட்டா தான உன்னைக் கடுப்பேத்த முடியும்” என்றான் செழியன் குறுஞ்சிரிப்போடு.

அடுத்த ஐந்து நிமிடம் வாக்குவாதம் தான். இறுதியில் ராம் ரகுவை அழைக்க, “உன்னை அப்புறம் வந்து கவனிக்குறேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டான்.

ரகுவை விட, செழியன் ஒரு வயது தான் பெரியவன். நண்பர்களாக தான் எப்போதும் பழகுவார்கள். ஒன்றாக தான் படித்தனர். அதனால் இந்த வயது வித்தியாசம் தெரியவில்லை. சிரித்தபடி அழைப்பை துண்டித்தவன் தட்டை பார்த்தான். அது எப்போதோ காலியாகி இருந்தது. பக்கத்தில் இருந்த அன்னை விசாலாட்சி இன்னும் இரண்டு இட்லி வைத்து, அதையும் பேச்சு மும்முரத்தில் காலி செய்து இருக்க வேண்டும். வயிறு நிரம்பியது நன்றாகவே தெரிந்தது.

காலையில் இருந்த கடுப்பிற்கு சாப்பாட்டே ஆக வேண்டுமா?, என்று நினைத்தவனை முழுதாக மாற்றிய பெருமை ரகுவையே சேரும். கை கழுவி விட்டு அன்னையிடம் விடை பெற்றவன், தன் அலுவலகத்திற்கு எதிர் திசையில் பயணிக்க ஆரம்பித்தான்.

செழியனின் கார் நேராக வழுக்கிக்கொண்டு வந்து நின்ற இடம் ஒரு மாதாந்திர பத்திரிக்கை அலுவலகம். காரை நிறுத்தி விட்டு உள்ளே நுழைய, வரவேற்பு இடத்தில் அமர்ந்து இருந்த பெண் அவனை, “ஆ” வென வாயை திறந்து பார்த்தாள். எதிரில் நிறபவன் தான் இந்திரனோ என்னும் அளவு, ஆண்மை அழகு அள்ளி தெறிக்க நின்றால் அப்படித் தானே பார்க்க தோன்றும்!

அவன் அதை கண்டு கொள்ளாமல், “உங்க சீஃப் எடிட்டர பார்க்கனும்” என்றான்.

வாய் திறந்து கம்பீரமாக வந்த குரலை காதில் வாங்கி மூளைக்கு அனுப்பி வைத்தவள், ஒரு வழியாக பதிலை தேடி பிடித்துச் சொன்னாள்.

“அப்பாயிண்ட்மென்ட் இருக்கா சார்?”

“இல்ல ” என்றவன், தனது அடையாள அட்டையை கொடுத்து காட்டச் சொன்னான்.

அவள் தொலைபேசியில் எல்லாம் சொல்ல, அவனே அழைத்து வரும் படி பதில் வந்தது.

வழியை கேட்டுக் கொண்டு தானாகவே சென்றான். உள்ளே நுழைந்தவனை எழுந்து நின்று வரவேற்றார் எடிட்டர்.

“என்ன சார்? பத்திரிக்கை ரொம்ப நல்லா போகுது போல? சும்மா வா அன்பு சூப்பர் மார்க்கெட் பத்தி ஆர்ட்டிகல் எழுதி புரட்சி பண்ணி இருக்கீங்களே?”

அவனது குரலில் ஏளனமும் கண்டனமும் போட்டி போட்டது.

அந்த எடிட்டர் எச்சிலை கூட்டி விழுங்க, “நியூஸ் போட்ட ஆள பாராட்டிட்டு போகலாம்னு வந்தேன். கூப்பிடுங்க” என்றவன் அவருக்கு எதிரில் போட்டு இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

“சார் அது.. ” என்று ஆரம்பிக்க, “எதுவும் வேணாம் மிஸ்டர் மோகன். அவங்கள கூப்பிடுறீங்களா?” என்றான்.

இம்முறை குரலில் கடுமை கூடி இருந்தது.

அவரும் பாவம். நேற்று விடுமுறையில் இருந்தார். முக்கிய பொறுப்பில் இருக்கும் இருவருமே, நேற்று விடுமுறை எடுக்க வேண்டிய சூழ்நிலை.  ஆனால் இப்படிஅடுத்த நாளே பிரச்சனையில் மாட்ட வைத்து விடுவார்கள் என்று கனவா கண்டார்கள்? இதில் அந்த பத்திரிக்கை நிறுவனத்தின் உரிமையாளர், காலையில் செய்தியை பார்த்து விட்டு வறுத்தெடுத்தது விட்டார்.

அந்த சோகத்தில் நொந்து போய் அமர்ந்து இருந்தால், செழியன் நேராக வந்து நிற்கிறான். செய்தி எழுதிய வாசுவை அழைத்து வரச் சொன்னார் மோகன்.

வாசுவின் இடத்தில், ஒரு பெண் குனிந்து கொண்டு சிதறிய பொருட்களை எல்லாம் அள்ளிக் கொண்டிருந்தாள்.

“வாசு” என்று கூப்பிட அவள் நிமிர்ந்தாள்.

“நிவி வாசு எங்க?”

“வாசு இன்னைக்கு வரல. ஏன்னு இன்ஃபார்ம் கூட பண்ணல. என்ன விசயம்?”

“மோகன் சார் கூப்பிடுறார்.. வரலனு சொல்லிடவா?”

“நான் போய் பேசிக்குறேன். நீ போ” என்றவள், கையில் இருந்த மொத்த காகிதங்களையும் பேப்பர் வெயிட் வைத்து அடக்கினாள். கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தவளை, அங்குலம் அங்குலமாக பார்த்தான் செழியன்.

அவனது செயலாளர் சொன்னது போல் நடுத்தர குடும்பம் என்று சொல்லும் அளவு அவளிடம் எதுவும் இல்லை. காதில் இருந்த ஒற்றை வைரத்தோடு, கழுத்தில் இருந்த முத்து தங்கம் கலந்த சின்ன செயின், கையில் இருந்த தங்க கை செயின்,  எதுவும் அவளை சாதாரணமாக காட்டவில்லை. பார்த்தவன் முகத்தில் ஏளனம் படிந்தது.

மோகன் எதோ பேச வர, “நீங்க கொஞ்சம் வெளிய இருக்கீங்களா?” என்றான்.

கட்டளை குரலில் சொல்லியும் அவர் மீண்டும் பேச வர, வாசலை நோக்கி கையை காட்டினான்.

‘யாருடா இவன்? இம்புட்டு பந்தா பண்ணுறான்’ என்று நினைத்தபடி நின்று இருந்தாள் நிவி.

மோகனும், இனி நிவி சமாளிப்பாள் என்ற நம்பிக்கையில் வெளியே சென்று விட்டார். நிவி நடப்பதை புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, “சோ இது எல்லாம் நீ விலை போனதுக்கு கிடச்சதா?” என்று அவள் அணிந்திருந்த நகைகளை காட்டி கேட்டான்.

நிவிக்கு சுள்ளென ஏறியது.

“ஹலோ மிஸ்டர். மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” என்றவளின் குரலில் இறுக்கம் மட்டுமே.

“நான் யாருனு கூட உனக்கு தெரியாது. என்னைப் பத்தி பக்கம் பக்கமா எழுதும் போது உன் வேர்ட்ஸ மைண்ட் பண்ணலையே மிஸ் வாசு” என்றான் எள்ளலாக.

அப்போது தான் அவன் யாரென புரிந்தது. தன்னை வாசு என்று நினைத்துக் கொண்டு பேசுகிறான் என்றும் விளங்கியது. காலையில் அவள் பார்த்த அந்த செய்தி இவனை பற்றியது தான் போல என்று யோசித்தவள், முதலில் தான் யாரென விளக்க முடிவெடுத்தாள்.

“இங்க பாருங்க..வா…” எனும் போதே இடையில் மறித்தவன், “உனக்கு இத செய்ய சொல்லி காசு கொடுத்தது யாருனு சொல்லிடு. உன்னை விட்டுரேன். இல்ல…” என்று இழுத்தான்.

நிவிக்கு இன்னும் கடுப்பானது. சொல்ல வருவதை சொல்ல விடாமல் நடுவில் பேசுபவனை என்ன செய்தால் தகும்? என்று யோசித்தவள், “இல்லனா?” என்றாள்.

“கம்பி எண்ண ரெடியா இரு. போலிஸ் யாருனு கண்டு பிடிப்பாங்க”

நிவிக்கு அவனிடம் விளையாடி பார்த்தால் என்ன என்று தோன்றியது. இவ்வளவு நேரம் நின்றவள், இப்போது அவனுக்கு பக்கத்தில் இருந்த நாற்காலியை சற்று தள்ளி போட்டு அமர்ந்தாள்.

கால் மேல் கால் போட்டுக் கொண்டு, “அப்படியா… கம்பி எண்ண வைக்குற அளவு அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா நீ?” என்று கேட்டு உச்சி முதல் அவனை ஆராய தொடங்கினாள்.

ஸ்டைல் என்று கண்டபடி கத்தரித்து விடும் காலத்தில், அடர்த்தியான முடி அலையலையாய் பரவி நின்றது. பரந்த நெற்றி தான். கடவுள் பக்தி இல்லையோ? சின்னதாக நீறு கூட பூசவில்லை. அடேங்கப்பா! ஆளை எடை போடும் கண்கள். அவளை சுவராசியமாக பார்க்கிறதோ? எடுப்பான நாசியின் கீழ் அடர்ந்து இருந்த மீசை. சிரிக்க துடிக்கிற உதடுகள். சிரிப்பை கட்டுபடுத்துவது போல் தோன்றியது. இரண்டு நாள் சவரம் செய்யாதது போல் வைத்திருந்த தாடியும் அவனது அழகை கூட்டி தான் காட்டியது. கையில் கூலிங் கிளாஸ் வீற்று இருக்க, கம்பீரமாக இளவரசன் தோற்றத்தில் அமர்ந்து இருந்தவனை பார்த்து முடித்தாள்.

மீண்டும் கண்ணை பார்த்தவளின் உதடு நக்கலாக கீழ் நோக்கி வளைந்தது.

“அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்ல” என்றவள் நாற்காலியில்லேசாக சுழன்றாள். அவளது மனமோ ‘இவன் அழகு இல்லனா வேற எவன்டி அழகு?’ என்று கேட்டது. அதை கண்டு கொண்டால் தானே?

எதிரில் இருந்தவனுக்கு நியாயமாக கோபம் வந்து இருக்க வேண்டும். ஆனால் ஆச்சரியம் தான் வந்தது. அவனது அழகை பருகும் அளவு பார்த்த பெண்களை தான் இது வரை கடந்து வந்து இருக்கிறான். தன்னை பொருட்டாக மதிக்காமல் திமிராக அமர்ந்து இருப்பதை முதன் முதலாக பார்க்கிறான்.

அவனுமே அவளை அளந்து கொண்டுதானிருந்தான். கொஞ்சம் பூசிய உடல் தான். ஜீரோ சைஸ் முயற்சி செய்ய மாட்டாள் போலும். சாப்பாட்டை மதிக்கும் பெண் என்பது நன்றாகவே புரிந்தது. அழகி தான். பேரழகி தான். எந்த குறையும் அவன் கண்ணுக்கு தெரியவில்லை. அவளது புற அழகை விட, எதிரில் திமிராக அமர்ந்திருந்த அழகு தான் பேரழகியாக காட்டியது.

அவள் சொன்ன பதிலில் சிரிக்க தோன்றியது. உதட்டில் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “நீ மார்க் போட இங்க வந்து உட்காரல. என் சூப்பர் மார்க்கெட் பத்தி இப்படி ஆர்ட்டிக்கல் போட உனக்கு எவ்வளவு கொடுத்தாங்க யாரு கொடுத்தாங்கனு சொல்லிட்டு நீ போய்ட்டே இருக்கலாம்” என்றான்.

“ஹ்ம்ம் சொல்லலாமே. ஆனா ஏன் சொல்லனும்?” என்று ஆரம்பித்தது ஒரு பக்கம், முடிக்கும் போது வேறு பக்கமாக போனவளை குழப்பமாக பார்த்தான்.

‘என்ன சொல்ல வர்ரா இவ?’ என்று யோசித்தவன், பேச ஆரம்பிக்கும் முன் கதவு தட்டப்பட்டது.

“சார்” என்று அழைத்தபடி ஒரு பெண் உள்ளே எட்டிப் பார்த்தாள். மோகன் இல்லாமல் வேறு இருவர் அமர்ந்து இருக்க, “நிவி சார் இல்லையா?” என்று கேட்டாள்.

“கேன்டின்ல காபி கணக்கு…க்கும்… குடிச்சுட்டு இருப்பார் போ”

அந்த பெண் சென்று விட, “காபி கணக்கு???” என்று இழுக்க “அது எதுக்கு உங்களுக்கு?” என்றாள்.

“நீ சொல்லுறியா அவரையே கூப்பிட்டு கேட்கட்டுமா?”

முகத்தில் சலிப்பை காட்டியவள், “காபி கணக்க ரெயிஸ் பண்ணிட்டு இருப்பார்னு சொல்ல வந்தேன்” என்றாள்.

கணக்கில் கிடத்தட்ட ஒரு நாளுக்கு பத்து பதினைந்து காபி குடிப்பதில் மோகன் வல்லவர். அந்த அலுவலகத்தில் அது அவருக்கே தெரியாமல் வைத்த புனைப்பெயர்.

“கழுத கெட்டா காபி கப்பு” என்று நிவி எப்போதும் வம்பிழுத்துக் கொண்டிருப்பாள்.

அவள் சொன்ன தோரணையை யோசித்து பார்த்தவனுக்கு சிரிப்பு பொங்கி வந்தது. உதட்டை அழுந்த மூடிக்கொண்டான். தன்னை பற்றியும் தன் நிறுவனத்தை பற்றியும் தவறாக எழுதி இருக்கும் பெண். நிச்சயமாக பணம் வாங்கிக் கொண்டு தான் இந்த வேலையை செய்து இருக்க வேண்டும். அவன் தொழிலில் தவறை என்றும் அனுமதித்தது இல்லை. அப்படிப் பட்ட பெண்ணிடம் கோபம் வராமல் அவள் பேசுவதற்கு சிரிப்பும் சுவாரசியமும் வருகிறதே! ஆச்சரியமாகத் தான் இருந்தது.

அவளது பெயரை நிவி என்று அந்த பெண் சொல்லும் போது, அது அவளது உண்மை பெயராக இருக்கலாம் வாசு எழுத்துலகிற்கு வைக்கப்பட்ட பெயராக இருக்கலாம் என்று நினைத்தான். எல்லோருமே தங்களது சொந்த பெயரில் எழுதுவதில்லையே.

முகத்தை தீவிரமாக மாற்றியவன், “இப்போ யாருனு சொல்ல முடியுமா முடியாதா?” என்று கேட்க கையை விரித்தாள்.

“அந்த நியூஸ் பத்தின டீட்டெயில் உங்களுக்கு வேணும்னா ரெண்டு நாளுக்கு அப்புறம் வாங்க”

“ஏன்?” என்று ஒற்றை புருவத்தை ஏற்ற, “அப்போ தான்… அது எதுக்கு உங்களுக்கு? ரெண்டு நாள்ல உங்களுக்கு கிடைக்கும். நம்பலாம்” என்றாள் முடிவாக.

ஏனென்றால் வாசுவை பிடிப்பது இப்போதைக்கு கடினமான காரியமாகத்தான் இருக்கும்.

செழியனுக்கு அவளது பேச்சை நம்பத் தோன்றியது. மூளை மறுத்தும் மனம் நம்ப சொல்ல நம்பி எழுந்து விட்டான்.

செல்லும் போது, “தப்பான செய்தி போட்டுட்டு இவ்வளவு திமிர் ஆகாது” என்று கூறிவிட்டு சென்றான்.

அதை அவள் மதிக்கவே இல்லை. அவள் போட்டால் தானே மதிக்க? எவளோ செய்த காரியம்.

மோகனை பிடித்தவள், லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாள். அவருக்கு தெரியாமல் செய்தியை போட விட்டது எவ்வளவு பெரிய தவறு? அதற்கு அவளல்லவா வாங்கி கட்டி இருக்கிறாள். அவளுமே மூன்று நாள் விடுமுறை முடிந்து இன்று தான் வருகிறாள்.

காய்ந்து விட்டு சென்று விட்டாள். நிவி அவருக்கு கீழ் தான் வேலை செய்கிறாள். ஆனால் நிவிக்கு அங்கு அதிகாரம் அதிகமாக இருக்கும். செய்தியை எழுதிய வாசு எங்கே?

Leave a Reply