Episode 3
![]()
வீட்டுற்குள் நுழைந்த செழியனை முறைப்போடு வரவேற்றனர் அவனது பெற்றோர்கள். அவர்கள் கோபத்தை ஒரு நொடி புரியாமல் பார்த்தவன், அடுத்த நொடி நுனி நாக்கைக் கடித்து, ஒற்றை விரலால் நெற்றியை தேய்த்துக் கொண்டான். இன்று பெண் பார்க்க வேண்டும் என்று தந்தை சொன்னதை மறந்தே போய் விட்டான்.
“ஹாய் டாட்” என்றவன் எதிரில் வந்து அமர்ந்தான்.
“சாரி சாரி சுத்தமா மறந்து போயிட்டேன். ரொம்ப முக்கியமான விசயம். அதான் இது ஞாபகம் வரவே இல்ல” என்று மன்னிப்பு கேட்கும் குரலில் கூற, செல்வம் இன்னும் முறைத்தார்.
விசாலாட்சியோ, “எப்பவும் ஒரே காரணம் தானா? புதுசா எதாவது காரணம் கண்டுபிடி டா” என்றார்.
“ம்மா.. ஏன் ம்மா? நிஜம்மாவே முக்கியமான வேலை தான் மா. அன்னைக்கு வந்த நியூஸ் பத்தி தான் வேலை. அத முடிச்சுட்டு நேரா வீட்டுக்கு தான் வரேன்”
“சரி இப்போ பார்த்த பொண்ணு போட்டோவ கொண்டு வந்து கொடு விசா. பார்த்துட்டு முடிவ சொல்லட்டும் உன் மகன்” என்ற செல்வத்தின் குரலில் இன்னும் கோபம் குறையவில்லை.
அவரது கோபத்தை மேலும் ஏற்றுவது போல் செழியன் அடுத்த பதிலை சொன்னான்.
“தேவையே இல்லபா. அந்த பொண்ணு ரிஜெக்ட் தான்”
படு கூலாக வந்த பதிலில் செல்வம் முறைத்துப் பார்க்க, விசாலாட்சி கடுப்பாகப் பார்த்தார்.
“என்னடா நீ. காலம் முழுக்க இப்படியே இருக்கப் போறியா? எப்ப தான்டா உனக்கு புத்தி வரும்? எங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்லனு நினைச்சியா? பார்க்குற பொண்ண எல்லாம் பார்க்காமலே ரிஜெக்ட் பண்ணிட்டே இருந்தா, என்ன தான்டா முடிவு?” என்று விசாலாட்சி பொறிந்து தள்ளி விட்டார்.
“ம்மா கூல். ஏன் இப்ப இவ்வளவு டென்சன் ஆகுறீங்க? உட்காருங்க முதல்ல. கல்யாணமே வேணாம்னு சொல்லலையே. இந்த பொண்ணு வேணாம்”
“ஓ.. அப்ப வேற பொண்ண பார்த்தா மட்டும் உடனே சரினு தலையாட்டிடுவ?” என்று செல்வம் கேட்ட, மறுப்பாக தலையசைத்தான்.
“நீங்க பார்க்குற பொண்ண எல்லாம் எனக்கு பிடிக்கலயேபா”
“அந்த பொண்ணுங்க யாரையுமே நீ பார்க்கவே இல்லயேடா. பார்க்காமலே தான் வேணாம்னு சொல்லிட்டு இருக்க. இதுல துரைக்கு நாங்க பார்க்குற பொண்ணு தான் பிடிக்கலையாம்” என்று விசாலாட்சி காய்ச்சி எடுத்தார்.
செழியன் அட்டகாசமாக சிரித்தான்.
“ம்மா.. எத்தனையோ டீல்ல அசால்ட்டா பேசுறேன். உங்க கிட்ட மட்டும் வாய கொடுத்தா வாங்கவே முடியல” என்று சொன்னவன் நிறுத்தாமல் சிரித்து வைத்தான்.
மகனது சிரிப்பில் புன்னகை அரும்பிய போதும், பெற்றவர்கள் முகத்தை இறுக்கமாகவே வைத்துக் கொண்டனர்.
“இப்போ உங்க பிரச்சனை எனக்கொரு பொண்ணு பார்க்கனும் அதான? இவள பாருங்க” என்றவன், தன் கைபேசியை எடுத்து ஒரு, படத்தைக் காட்டினான்.
பார்த்ததும் பெற்றவர்கள் கண்கள் அகல விரிந்தது.
“அடேய் நீ என் மகன் தானா? விசா இவன் நம்ம மகன் தானா?”
“அதான் எனக்கும் சந்தேகமா இருக்கு. அடேய் எப்படிடா? பொண்ணுங்க பக்கமே போகாத என் மகன், ஒரு பொண்ணு படத்த போன்ல வச்சுட்டு சுத்துற அளவுக்கு மாறுன?” என்று ஆச்சரியமாக கேட்க, குபீரென சிரித்தான்.
“ம்மா ரொம்ப ஓட்டாதீங்க. பொண்ண பாருங்க ஃபர்ஸ்ட்”
“நல்லா ஆழகா மூக்கும் மூழியுமா இருக்கா”
“பொண்ண பத்தி சொல்லு. மருமகளாக்கிட்டு தான் அடுத்த வேலை ” என்றார் செல்வம்.
“இவ பேரு ஊருக்குள்ள, வேலை பார்க்குற இடத்துல நிவி. பெர்த் நேம் சுலோக்ஷனா. நித்தின் பத்தி தெரியுமா பா? **** பெயிண்ட்ஸ் அண்ட் கலர்ஸ்… கம்பெனி பத்தி?”
“ஆமா டா தெரியும் தெரியும்” என்றார் செல்வம் ஆர்வமாக.
“அவங்களோட மகள். மேடம் ஒரு ஜெர்னலிஸ்ட். இவ வொர்க் பண்ணுற மேகஸின்ல தான் அந்த நியூஸ் வந்துச்சு. போட்டது இவனு நினைச்சு திட்டிட்டேன். எப்பா!!! என்ன திமிரு? செய்யாத தப்புக்கு திட்டுனுதுக்கு, என்னை நோஸ் கட் பண்ணி விட்டுட்டா. இன்னைக்கு மேடம் தான் பிரச்சனைய முடிச்சு வச்சாங்க” என்று கூறி முடித்த மகனை அதிசயமாக பார்த்தனர்.
“எப்படியோ குடும்பம் நல்ல குடும்பம். நீ தப்பு பண்ண. வாங்கிக் கட்டிக்கிட்ட. அதெல்லாம் பிரச்சனை இல்ல. இந்த பொண்ணு தான் என் மருமகள். ஆமா பேரு என்ன சொன்ன?” என்று விசாலாட்சி கேட்க, “நிவி அட் சுலோக்ஷனா.. அப்பா அம்மா பேர சேர்த்து நிவினு இவளா வச்சுகிட்டா” என்று கூறினான்.
“அதுவும் நல்லா தான் இருக்கு குட்டியா” என்று விசாலாட்சி சொல்ல, செல்வம் அந்த படத்தை தன் கைபேசிக்கு மாற்றிக் கொண்டார்.
“இன்னொரு விசயம் இது லவ் மேரேஜ் இல்ல. அரேன்ஜ் மேரேஜ்” என்ற செழியனை அதிர்ச்சியாக பார்த்த செல்வம், “அப்போ மருமகளுக்கு உன்னை பிடிக்காதா?” என்று கேட்டார்.
“நிச்சயமா பிடிக்காது” என்றான் அன்று அவள் அவனை பார்த்த பார்வையையும், அவள் சொன்ன பதிலையும் நினைத்துக் கொண்டே.
“ஆனா அவ தான் எனக்கு வேணும்” என்று உறுதியாக சொன்ன மகனை பார்த்த செல்வம், “பார்த்தியா விசா? ரெண்டே நாளுல பையன் எவ்வளவு ஸ்ட்ராங் ஆயிட்டான்னு?” என்று கேட்டார்.
“அதான? ஏன்டா இத ஒரு ரெண்டு வருசதுக்கு முன்னாடி பண்ணி இருந்தா நாங்க அலையாம இருந்து இருப்போம்ல?”
“என்னமா பண்ண? இப்ப தான கண்ணுல பட்டா. உறுதியா இவ தான் உங்க மருமக. இனி உங்க பாடு” என்றவன், கைபேசியைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டான்.
அறைக்குள் நுழைந்தவன், “எவ்வளவு தைரியம்? என் முன்னாடியே என்னை சைட்டிச்சுட்டு அப்பாடக்கரானு கேட்ப… இனி இந்த அப்பாடக்கர காலம் முழுக்க சைட்டடி. உனக்கு லைசன்ஸ் வாங்கித் தரேன்” என்று சுலோக்ஷனாவின் படத்தை பார்த்து சொன்னவன், சிரித்தபடி அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டான்.
......
அதே நேரம் சுலோக்ஷனா நந்தனுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்தாள்.
“டேய் மெதுவா ஓடேன்” என்று சுலோக்ஷனா கத்த, “அடிப்பாவி உனக்கு மூளையே இல்லனு அடிக்கடி நிரூபிக்குற. ஓட்டபந்தயத்துல எவனாவது ஸ்லோவா ஓடுவானா ஸ்லோ பேபி? கடைசியில இப்படி முட்டாளா போயிட்டாளா என் அக்கா” என்று இரண்டு கையால் தலையில் அடித்துக் கொண்டே ஓடினான்.
எதிரில் வந்த ஜானவி தான் பதறிப்போனார். இரண்டு கையால் தலையிலடித்தபடி எதையோ புலம்பிக் கொண்டு, தலை தெறிக்க ஓடி வரும் மகனை பார்த்தால் யாருக்கு தான் பதறாது.
நடுவில் வந்து, “என்ன நந்து என்ன ஆச்சு?” என்று கேட்ட ஜானவியை சுற்றிக் கொண்டு ஓடியவன், இலக்கை தொட்டு விட்டே வந்து நின்றான்.
பின்னால் ஓடி வந்த சுலோக்ஷனாவை பார்த்ததும் நான் ஜானவிக்கு விளங்கியது.
“ம்மா ரேஸு ம்மா. அதுக்கும் ஏன்மா கவலை படுறீங்க? ரீடர்ஸ் எல்லாம் ஜானவிக்கு கவலைப்படுற வியாதினு நினைச்சு மருந்து வாங்கவே போயிட்டாங்க” என்று நந்தன் மூச்சு வாங்கிக் கொண்டே கூற, ஜானவி அவனை முறைத்து பார்த்தார். தோற்றப் பின்னும் கூட, சுலோக்ஷனா இலக்கை தொட்டு விட்டுத் தான் அங்கு வந்தாள்.
“என்னங்கடா சந்தடி சாக்குல என் ஜான் பேர சொல்லி கூப்பிடுறீங்க?” என்று கேட்டுக் கொண்டே நித்தின் வர, “அதெப்படிபா இப்ப வர அம்மாவ விட்டுக் கொடுக்கவே மாட்டேங்குறீங்க?” என்று சுலோக்ஷனா கேட்டாள்.
“எல்லாம் லவ்டா… ஏன் ஜான்?” என்று கேட்டு கண்ணடிக்க, ஜானவிக்கு முறைக்கத் தோன்றியது. வழக்கம் போல் அது முடியாமல் போக அங்கிருந்து ஓடிவிட்டார்.
பிள்ளைகள் இருவரும் சிரிக்க, “என்னங்கடா சிரிப்பு? என் பொண்டாட்டிய பார்த்து சிரிச்சீங்க கொண்ணுடுவேன்” என்றார் நித்தின்.
“சரி சரி சிரிக்கல. உங்க காதலின் ரகசியத்த கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று இருவரும் நச்சரித்தனர்.
“என்ன ரகசியம்? உலகத்துல எல்லா காதலும் இப்படி தான். நம்ம உயிர விட பெருசா ஒருத்தரோட சந்தோசத்த நினைக்க தோனும். உயிர கொடுத்தாவது அவங்கள நாம இழந்துடாம பார்த்துக்கத் தோனும். எந்த இடத்துலையும் அவங்க கண்ண பார்த்து செயல்பட தோனும். அவங்க வேற நம்ம வேற இல்லனு உயிரோட கலந்துடறது தான் காதல்… உங்களுக்கும் உங்க லைஃப் பார்ட்னர் கிட்ட இதெல்லாம் நிச்சயம் தோனும்”
“கஷ்டம் தான். இந்த சூனாபானாவ பார்த்து அப்படி எல்லாம் அத்தானுக்கு தோனுறது ரொம்ப கஷ்டம் தான்” என்று நந்தன் இழுக்க, “உன்னை சூனாபானானு சொல்லாதனு எத்தன தடவ சொல்லி இருக்கேன்” என்று சுலோக்ஷனா அடிக்க பாய, நந்தன் மீண்டும் தலைதெறிக்க ஓடினான்.
