Episode 5
![]()
அடுத்த நாள் இரவு ரகுவை அழைத்தான் அன்பு செழியன்.
“சொல்லு டா”
“என்னடா பண்ணிட்டு இருக்க ஃபோன் போட்டதுமே எடுக்குற? தூங்கலையா?”
“இல்லடா அண்ணனும் நானும் வேலை பார்த்துட்டு இருக்கோம். இரு ஸ்பீக்கர்ல போடுறேன்” என்றவன் ஸ்பீக்கரில் போட்டு டீபாய் மேல் வைத்தான்.
“ஹாய் அத்தான்”
“ஹாய் ஹாய்” -ராம்
“அண்ணன் தம்பி ரெண்டு பேரும் தூங்காம ஃபைல கட்டிட்டு அழுறீங்களே. என் அக்கா தங்கச்சிங்க உங்கள சும்மாவா விட்டாங்க?”
“இல்லையே..அவங்களும் பசங்கள தூங்க வச்சுட்டு வேலைய தான் பார்த்துட்டு இருக்காங்க” – ரகு
“விளங்கும்” – செழியன்.
ரகுவிற்கும் பையன் பிறந்து இருந்தான்.
“சரி என்ன இன்னேரத்துல போன்?”
“உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்ல தான்”
“என்ன நியூஸ்?”
“நானும் உங்க கூட்டத்துல ஐக்கியமாக போறேன்”
“என்னது கூட்டமா?” ரகு புரியாமல் முழிக்க, “கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்டியா?” என்று ராம் அதிர்ச்சியாக கேட்டான்.
“ஆமா அத்தான்”
“டேய் என்ன அதிசயம்? எங்கயாவது வானம் இடிஞ்சு விழுந்துருச்சா.” என்று ராம் கிண்டலடிக்க, “அப்படி தான் இருக்கும்” என்று சிரித்தான்.
“யாரு பொண்ணு?” என்று ரகு கேட்க, சுலோக்ஷனாவை பற்றி கூறினான்.
“நித்தின தெரியும். அவர் கிட்ட ரெண்டு டைம் பேசி இருக்கேன். அவங்க ஃபேமிலியா? சூப்பர். மேடம் ஒத்துக்குமா?” என்று ராம் கேட்டான்.
“அது தான தெரியல. இன்னும் எந்த பதிலும் அந்த பக்கம் இருந்து வரல”
“கவலைய விடு. கடவுள் உன்னையும் கிணத்துல தள்ள ப்ளான் போட்டுட்டார். அது கண்டிப்பா நடக்கும்” – ரகு
“இரு தங்கச்சி கிட்ட போட்டு கொடுக்குறேன்” என்று செழியன் மிரட்ட, “சொல்லு. நானும் என் தங்கச்சிட்ட, நீ இப்ப சொன்ன திமிரு பிடிச்சவ ராங்கி ரங்கம்மா.. இன்னொன்னு என்னமோ சொன்னியே… வாய் கொழுப்பு எல்லாத்தையும் சொல்லி கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை அலைய விட வைக்குறேன் “என்றான்.
அவன் சுலோக்ஷனாவை பற்றி கூறிய வார்த்தைகள் தான் இவை.
“இதுக்கு தான கல்யாணமே வேணாம்னு இருந்தேன் ஆண்டவா” என்று செழியன் வாய் விட்டு புலம்ப, ராம் விழுந்து விழுந்து சிரித்தான்.
மேலும் சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பை துண்டித்து விட்டனர்.
..”.*.
அதிகாலையில் எல்லோருமே தூங்கிக் கொண்டிந்தனர் அந்த வீட்டில். இரவு வேலையால் வந்த களைப்பு. விஜயநந்தனுக்கு மட்டும் தூக்கம் கலைந்து விட்டது. கண் விழித்து மெத்தையிலேயே படுத்து இருந்தான். இன்று இரவு இந்தியாவை விட்டு பறந்து விடுவான். ஐந்து வருடம் பெற்றவர்களை பார்க்க முடியாது. சூலோக்ஷனாவுடன் சண்டை போட முடியாது.
ஸ்வரணுடன் வெளியே சுற்ற முடியாது. எல்லாவற்றையும் நினைக்கும் போது, போய் தான் ஆக வேண்டுமா? என்று தோன்றியது. ஆனால் எதிர்காலம்? அதனால் கிளம்பினான்.
எழுந்து பால்கனி பக்கம் சென்றான். இன்னும் முழுதாக சூரியனும் சோம்பல் முறித்து எழவில்லை. அந்த நேரம் வீசிய காற்று இதமாக மனதை நிறைத்தது. கண்ணை மூடி ஆழ்ந்து சுவாசித்து நுரையிலில் காற்றை நிரப்பிக் கொண்டே திரும்ப, யாழினி கண்ணை மூடி யோகாவில் இலயித்து இருப்பது கண்ணில் பட்டது.
ஒவ்வொரு அறைக்கு வெளியேயும் சிறிய பால்கனி இருந்தது. அதில் சில செடிகளும் உண்டு. சுலோக்ஷனாவின் ஏற்பாடு. பச்சை வண்ண செடிகளுக்கிடையில் மஞ்சள் கலந்த வெண்மை உடை அணிந்து, கண்ணை மூடிக்கொண்டு அவள் அமர்ந்து இருந்தது அத்தனை கவிதையாக இருந்தது.
‘பார்ரா! இந்த வாயில்லா பூச்சிக்கு இதெல்லாம் தெரியுமா?’ என்று நினைத்துக் கொண்டான்.
திரும்பி தன் சாதாரணமான உடற்பயிற்சியை செய்ய ஆரம்பித்தான். எப்போதும் எதாவதொரு இசையை ஒட விட்டு செய்பவன், இன்று அமைதியாக செய்தான்.
அவனது இசை ,யாழினியை தொந்தரவு செய்து விடக்கூடாது என்று அமைதியாக செய்து முடித்தவன் திரும்பி பார்க்க, அப்போது தான் தரையில் விரித்து இருந்த துண்டை எடுத்து உதறி மடித்துக் கொண்டிருந்தாள் யாழினி.
அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க, உள்ளுணர்வு உந்த திரும்பி பார்த்தாள். கையில்லாத பனியனுடன் ட்ராக் பேன்ட் அணிந்து இருந்தான். சற்று முன் செய்த உடற்பயிற்சியில் வியர்வை உடலில் ஓட நின்றவனை பார்த்து யாழினிக்கு மூச்சடைத்தது.
அவன் சினேகமாய் புன்னகைத்து, “குட் மார்னிங்” என்றான். அவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, புன்னகைக்க முயன்று தோற்றாள்.
அறைக்குள்லிருந்த சுலோக்ஷனா எழுந்து வந்தாள்.
“என்ன யாழு இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட?” என்று கண்ணை தேய்த்துக் கொண்டே வினவ, “உன்னை போல தூங்கு மூஞ்சிக்கு இது சீக்கிரம் தான். மணிய பாரு ஆறு ஆகுது” என்று நந்தன் பதில் சொன்னான்.
யாழினி புன்னகையுடன் நிற்க, “போடா டேய். ஓவரா பேசாத. நீ என்ன யோகா பண்ணியா? நேத்து இருந்த டயர்ட்க்கு கொஞ்சம் நேரம் தூங்கி இருக்கலாம்ல?” கேட்டாள்.
“தூக்கம் வரல அண்ணி. யோகா பண்ணல க்ஷனா மனசு ஒரு மாதிரி இருக்கும் அதான்” என்று பதிலளித்தாள் யாழினி.
அதன் பின், ஒவ்வொருவராக எழுந்து வர தொடங்கினர். சோம்பலாகவே வேலைகளை செய்தனர். விரேந்திரனும் நித்தினும் வீட்டில் தான் இருந்தனர்.
நந்தன் மாலை விமானம் ஏற வேண்டும். டெல்லி சென்று சில வேலைகளை முடித்து விட்டு, அமெரிக்காவிற்கு பறக்க வேண்டும்.
மாலை நெருங்க நெருங்க, ஜானவியின் முகம் கலையிழந்தது. அவரை சமாதானம் செய்து விமானநிலையம் அழைத்து செல்வதற்குள் போதும் போதும் என்றானது.
சாலினி, யமுனா இருவராலும் வர முடியாமல் போக, வீட்டிலேயே விடை கொடுத்தனர். ஸ்வரணும் யாழினியும் வேகமாக காரில் ஏறி விளையாடினர். யாழினி மற்ற நேரங்களில் அமைதியாகவும், ஸ்வரணுடன் இருக்கும் போது மட்டும் வால்தனம் செய்வதை கவனித்துக் கொண்டான் நந்தன்.
விமான நிலையம் சென்றதும் சுலோக்ஷனாவின் முகம் சோகத்தை காட்டியது. அதை அடக்க அவள் பெரும்பாடு படுவது போல் தோன்ற, தோளில் கை போட்டுக் கொண்டான் நந்தன்.
“என்ன மிஸ் பண்ணுவியா ஸ்பீட் பேபி?”
அவளால் எப்போதும் ஓட்டபந்தயத்தில் நந்தனை வெல்ல முடியாது. அதற்கு அவன் வைத்த பட்டப்பெயர் தான் ஸ்பீட் பேபி. மலையளவு சோகம் இருந்தாலும் வெளியில், “இல்லை” என்று தலையாட்டினாள்.
“அப்போ சரி. நான் வரும் போது நீ கேட்ட எதுவுமே வாங்கிட்டு வர தேவை இல்ல”
சோகத்தை மறைத்து அவனை முறைத்து பார்த்தாள்.
“அப்படியே பயந்துட்டேன்…” என்று நக்கலாக சொன்னவன், “நான் திரும்பி வரும் போதாவது சாப்பாட்ட குறைச்சு ஓடி ஜெயிக்க முயற்சி பண்ணு சரியா?” என்று கேட்டான்.
அவன் இந்தியா வரும் போது, ஒரு அடி கூட எடுத்து வைக்காமல் அவனது தமக்கை தோற்று நிற்க போவது அவனுக்கு தெரியவில்லை. அவளை சாப்பிட வைக்க அவன் போராட வேண்டும் என்றும் தெரியவில்லை.
“சும்மா சும்மா எல்லாரையும் வேணாம்னு சொல்லாத. இப்ப காட்டின பையன் சூப்பர். கல்யாணம் பண்ணிக்கோ. அப்ப தான் என் ரூட் க்ளியராகும்” என்று நந்தன் சொல்ல, தலையில் கொட்டு வைத்தாள்.
“எல்லா வெங்காயமும் எனக்கு தெரியும். எவ ப்ரபோஸ் பண்ணாலும் அசிங்க படுத்துற நீ எல்லாம் கல்யாணத்த பத்தி பேசாத” என்று சொல்ல, நந்தன் முழித்தான்.
‘எவனோ போட்டுக் கொடுத்துட்டான் போலையே’ என்று அவன் யோசிக்க, “ஃபாரின்ல எவளாச்சும் சிக்குறாளா பாரு. இங்க எந்த பொண்ணும் உனக்கு செட்டாகாது” என்று சொல்லி விட்டு, சுலோக்ஷனா முன்னால் நடந்தாள்.
ஒரு ஓரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த யாழினியை மோதுவது போல் சிலர் வைத்திருந்த லக்கேஜ் ட்ராலி வந்து கொண்டிருக்க, வழக்கம் போல் பார்த்து விட்டு கண்ணை மூடிக் கொண்டாள்.
நந்தன் அவளது கையை பிடித்து மறுபக்கம் இழுக்க, அவனது நெஞ்சில் யாழினியின் தோளின் பின்புறம் இடித்து தடுமாறி நின்றாள்.
“ஹே நீ எதையும் பார்த்துட்டா அடுத்து என்னனு யோசிக்க மாட்டியா? எப்போவும் கண்ண மூடிட்டு ஆபத்து வரட்டும்னு வெயிட் பண்ணிட்டே இருப்பியா?” என்று கோபமாக கேட்டவனை பரிதாபமாக பார்த்தாள்.
“ஏன்னு தெரியல. அடுத்தவங்களுக்கு நடக்கும் போது வேலை செய்யுற ப்ரையின் எனக்கு ப்ராப்ளம்னா ஸ்டாப் ஆகிடுது” என்று சொல்லி விட்டு தலையை குனிந்து கொண்டாள்.
“பயப்படாத முதல்ல.. எதுவும் நடந்தா அடுத்தவங்களுக்கு நடக்குற மாதிரியே நினைச்சு உன்னை நீயே கைட் பண்ணு.. ஓகே?”
தலையை ஆட்டி வைத்தாள்.
“எங்க ஸ்வரண்?” என்று கேட்க ஒரு பக்கம் கை காட்டினாள். அவன் நித்தினுடன் முன்னால் சென்று கொண்டிருந்தான். அரை நிமிடத்தில் நடந்ததை யாரும் சரியாக கவனிக்க வில்லை.
“வா” என்று அவளை அழைத்துக் கொண்டு முன்னால் சென்றவர்களோடு சேர்ந்து கொண்டான். அறிவிப்பு வரும் வரை எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, யாழினி அமைதியாக யோசனையோடு அமர்ந்து இருந்தாள்.
கிளம்பும் நேரம் வந்ததும், சுலோக்ஷனாவின் கண் கலங்கி போனது. ஜானவியை கேட்கவே வேண்டாம். இரண்டு பேரையும் கட்டிக் கொண்டவன் தந்தையிடமும் விடை பெற்று கிளம்பினான்.
வீடு திரும்பும் போது எல்லோருமே அமைதியாக தான் இருந்தனர். பிறந்ததிலிருந்து பிரியாத மகனை, அவர்கள் பிரிந்து வந்தது மனதை கனக்கச் செய்தது.
வீட்டிற்கு வந்ததும் யமுனாவும் சாலினியும் தான் அவர்களை சரி செய்தனர். விரேந்திரன் தான் திசை திருப்பும் பொருட்டு, “பேபிமா… உனக்கு ஒரு ஃபோடோ கொடுத்தோமே. பார்த்தியா?” என்று சுலோக்ஷனாவிடம் கேட்டான்.
அப்போது தான் செழியனை பற்றி சுலோக்ஷனா எதுவும் சொல்லாதது ஞாபகம் வர, “என்னடா பார்த்தியா?” என்று நித்தினும் கேட்டான்.
“பார்த்தேன் பா” என்றாள் யோசனையோடு.
“அவன பத்தி எதுவும் கேட்கலையே பிடிக்கலையா?” என்று கேட்கும் போதே நித்தினின் குரல் சோர்ந்து ஒலித்தது.
அந்த சோர்வு பிடிக்காமல், “அப்படிலாம் இல்லபா.. எனக்கு அவங்கள பத்தி எல்லாம் தெரியும். பேசி இருக்கேன்” என்றாள் அவசரமாக.
நித்தின் ஆச்சரியமாக பார்க்க, “எப்போ பேபி?” என்று விரேந்திரன் கேட்டான். அவள் பேசிய தருணத்தை சொல்லி முடித்தாள்.
“இதுவும் நல்லது தான். உனக்கு முடிவெடுக்க ஈசியா இருக்கும். யோசிச்சு சொல்லு” என்றான் விரேந்திரன்.
“முதல்ல நான் தான் பொண்ணுனு அவங்க கிட்ட சொல்லுங்க மாமா. தெரிச்சு ஓடாம இருந்தா பார்க்கலாம்” என்று கிண்டலாக சுலோக்ஷனா சொல்ல, “நீ ஓட விடாம இருந்தா சரி.” என்று ஜானவி சொல்லி விட்டு எழுந்தார்
முப்பத்து இரண்டு பல்லையும் காட்டி சிரித்து வைத்தாள் சுலோக்ஷனா. வரும் பையன்களை எல்லாம், “நான் ஒரு ரிப்போர்ட்டர் என உயிருக்கு எப்போதும் ஆபத்து இருக்கும். என்னை கட்டிக்கொண்டால் நீயும் செத்து செத்து பிழைப்பாய்” என்று பயமுறுத்தி துரத்துவதே அவள் தான்.
செழியன் இதற்கெல்லாம் பயப்பட மாட்டான் என்று நன்றாக புரிந்தது. என்ன சொல்லி துரத்துவது என்று யோசிக்க தேவையில்லை. ஏனென்றால் தான் பேசிய பேச்சுக்கு தன்னை பார்த்து விட்டு அவனே வேண்டாம் என்பான் என்ற நம்பிக்கை அவளுக்கு.
அவன் தான் இதை ஆரம்பித்தது என்று தெரிந்தால்?
“நான் ஒரு தடவ அவங்க கிட்ட பேசிடுறேன்பா. நம்பர் இருக்கா?” என்று கேட்க நித்தின் கொடுத்தான். அதை வாங்கியவள் எதுவும் பேசாமல் சென்று விட விரேந்திரனுக்கு நம்பிக்கை பிறந்து இருந்தது. எப்படியும் செழியன் தான் சுலோக்ஷனாவிற்கு என்று அவன் மனம் அடித்துச் சொல்லியது.
அதையே தான் நித்தினும் சொன்னான். ஆனால் சம்பந்த பட்டவர்கள்?
சுலோக்ஷனா அப்போதே செழியனுக்கு அழைக்க, காரில் வந்து கொண்டிருந்தவன் அவளது எண்ணை பார்த்து விட்டு ஒரு புன்னகையோடு துண்டித்து விட்டான். சட்டென கடுப்பான சுலோக்ஷனா கைபேசியை முறைக்க, அவனிடமிருந்து செய்தி வந்தது.
“ட்ரைவிங் கால் யூலேட்டர்” என்று. ஏறிய கோபம் அப்படியே வடிய, ஒரு ஓரமாக வைத்து விட்டு தன் வேலையை கவனித்தாள்.
காரை நிறுத்திய அடுத்த நொடி, அவளுக்கு அழைப்பு விடுத்தான்.
“ஹலோ”
“நான் நிவி பேசுறேன் சார்”
“சொல்லுங்க மிஸ். நிவி” என்று உதட்டில் அடக்கிய சிரிப்போடு கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
சிரிப்போடு வரும் மகனை பார்த்து விசாலாட்சி என்னவென்று ஜாடையாக கேட்க, “உங்க மருமக” என்றான் சத்தம் வாராமல் உதட்டசைவில்.
அவர் முகம் மலர, மறுபக்கம் சுலோக்ஷனா என்ன கேட்டாளோ, “இல்லையே அப்படியா?” என்றான் போலி அதிர்ச்சியோடு.
“ஆமா. எங்க வீட்டுல உங்கள பத்தி தான் சொன்னாங்க. எதுக்கும் நீங்களும் கேட்டுக்கோங்க”
“கேட்குறேன். இப்போ இதுக்கு தான் ஃபோன் போட்டிங்களா?”
“ஆமா”
“சரி நான் போய் நிவியா எனக்கு பார்த்த பொண்ணுனு கேட்குறேன்”
“என் பெயர் நிவி இல்ல. அது மேகஸின்காக வச்ச நிக் நேம். பெர்த் நேம் சுலோக்ஷனா”
“ஓ.. ஓகே. சுலோச்சனா”
“சுலோச்சனா இல்ல சுலோக்ஷனா”
“கஷ்டம்.. பரவாயில்லை மனப்பாடம் பண்ணி கூப்பிடுறேன்.
“ஓகே பை”
“இத சொல்ல மட்டும் தான் ஃபோன் பண்ணிங்களா?”
மட்டும் என்ற வார்த்தையை அளவுக்கு மீறி அழுத்தினான்.
“ம்ம்… இல்ல”
“வேற என்ன?”
“உங்க முடிவு என்னனு தெரிஞ்சக்க தான் கால் பண்ணேன். உங்களுக்கு விசயம் தெரியல. சரி கேட்டுட்டு சொல்லுங்க”
“என் முடிவு என்னவா இருக்கும்னு நினைக்குற சுலோக்ஷனா?”
“நோ வந்தா சந்தோசப்படுவேன்”
“சரி பை” என்றவன் அதற்கு மேல் பேசாமல் அழைப்பை துண்டித்து விட்டான்.
அடுத்த நிமிடம் அவன் மறுத்து விடுவான் என்ற நம்பிக்கையில், சுலோக்ஷனா வீட்டில் உள்ளவர்களிடம், “எனக்கு பிரச்சனை இல்ல பா. உங்களுக்கு ஓகேனா எனக்கும் ஓகே” என்று முடித்து விட்டாள்.
அவன் என்ன செய்வான்? நேராக பெற்றோர்களிடம் சென்று அடுத்த கட்ட வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டான்.
