Episode 7

Loading

மாலை, வேலைகளை முடித்துக் கொண்டு கடற்கரைக்கு சென்று அமர்ந்து விட்டாள் சுலோக்ஷனா. மனம் பல விசயங்களை புரட்டி பார்த்துக் கொண்டிருந்தது. திருமணம் செய்து கொள்ளலாம் தான். ஆனால் அதன் பின்? வாழ்க்கை முழுவதும் அவளால் நடிக்க முடியாது. அதற்கு இப்படியே இருந்து விடலாம் என்று முடிவெடுத்தாள். அவளது இந்த முடிவு நிச்சயமாக ஜானவியையும் நித்தினையும் பாதிக்கும். அதை நினைக்கும் போது தான் மனம் கனத்து கண் கலங்கி போனது.

“ஹாய்” என்று பக்கத்தில் குரல் கேட்க, கண்ணை சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தாள். சற்று இடைவெளி விட்டு செழியன் அமர்ந்து இருந்தான்.

லேசாக புன்னகைத்து, “ஹாய்” என்றாள்.

“என்ன விசயம் இவ்வளவு டல்லா இருக்க?”

“ஏன் உங்களுக்கு தெரியாதோ?”

“கல்யாணம் தானே? அதுக்கு எதாவது வழி கிடைக்கும். சரி ஏன் கூப்பிட்ட?” நேரடியாக விசயத்திற்குள் நுழைந்தான்.

“எனக்கு இந்த கல்யாணத்த எப்படி நிறுத்தனு தெரியல. நீங்க எதாவது பண்ணுங்களேன்.” என்று சோர்ந்த குரலில் கேட்க, அவளை திரும்பி பார்த்தான்.

“இந்த கல்யாணம் பிடிக்கலயா? இல்ல கல்யாணமே பிடிக்கலையா?”

சுலோக்ஷனாவிடம் பதில் இல்லை. கடலை வெறித்தபடி அமர்ந்து இருந்தாள்.

“சோ கல்யாணமே வேணாம். ஏன் லவ் பெயிலியரா ?லவ்வர மறக்க முடியலையா?” என்று கேட்க, அவளுக்கு சிரிப்பு வந்தது.

“நானு? லவ்வு? செம்ம காமெடி” சொல்லி விட்டு சிரித்தவளை, கண்ணெடுக்காமல் பார்த்தான். அவனுக்கும் தெரியும். சுலோக்ஷனா யாரையும் விரும்பவில்லை என்று.

“அப்புறம் என்ன சன்னியாசம் போக போறியா?”

“இது வேண்டாத கேள்வி” என்று பட்டென கத்தரித்தாள். அமைதியாகி விட்டான். திரும்பி பார்த்தாள். கடலலைகளை ரசித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் செழியன். அவனது அழகு அவளை மயக்கியது என்னவோ உண்மை. என்ன பேச வந்தாள் என்பதே மறந்து போனது.

பல நிமிடங்கள் கடக்க, யாரோ சிரிக்கும் சத்தத்தில் சுயநினைவை அடைந்தாள். இவ்வளவு நேரம் தன்னை மறந்து செழியனை பார்த்துக் கொண்டிருந்தது புரிய, வெட்கத்தில் முகம் சிவக்க திரும்பிக் கொண்டாள்.

அவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை. மனம் தான் அவள் என்ன செய்கிறாள் என்று கூப்பாடு போட்டு கூறிக் கொண்டிருக்கிறதே கண்ணுக்கு என்ன வேலை. அதை கடலின் மீதே நிலைத்து நிற்க விட்டான்.

“நான் ஒரு ஜெர்னலிஸ்ட். எனக்கு எப்பவுமே உயிர் ஆபத்து சுத்திட்டே தான் இருக்கும். அது என்ன கல்யாணம் பண்ணிக்குறவங்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் கூட வரும். இப்போ பிரச்சனையே இல்லையானு கேட்காதீங்க. இப்போவும் இருக்கு. ஆனா இப்போ அப்பா சப்போர்ட் இருக்கு. அப்பாவ தாண்டி யாரும் உள்ள வர முடியாது. அத விட மாமா. எல்லாரையும் பத்தடி தள்ளி நிக்க வச்சுடுவார். எனக்கும் எந்த வீக்னெஸூம் இல்ல. சுத்தி இருக்க எல்லாருமே என்னோட பலம். கல்யாணத்துக்கு அப்புறம்? அதே போல பலமா ஹஸ்பண்ட் கிடைக்குறது கஷ்டம். அப்படியே என்னோட பலமா ஒருத்தன் அமைஞ்சுட்டாலும், பிள்ளைனு வந்துட்டா பலம் தன்னால காணாம போயிடும். நான் சொல்ல வர்ரது புரியுதா?” என்று அமைதியாக கேட்டாள்.

‘உன் அப்பா, மாமா, தம்பிய விட நூறு மடங்கு அதிகமா பாதுக்காக்க என்னால முடியும். அவங்கள விட என் காதல் உனக்கு யானை பலம் கொடுக்கும் சனா..’ என்று கட்டி அணைத்து கூற தோன்றிய மனதை கடிவாளமிட்டு அடக்கினான்.

இது உண்மை காரணம் அல்லவே. திருமணத்தை மறுப்பதற்காக அவள் உருவாக்கிய காரணம் இது. இதற்கு ஆறுதல் சொல்லி எந்த பயனும் இல்லை. அவன் அமைதியாகவே அமர்ந்து இருக்க, சுலோக்ஷனா ஆச்சரியப்பட்டுப் போனாள்.

மற்ற எல்லோரிடமும் இந்த காரணத்தை சொன்னதும், “நான் பார்த்து கொள்வேன்” என்று பதில் நொடி கூட யோசிக்காமல் வரும். அதற்கும் அவள் பதில் வைத்து இருப்பாள்.

“என்ன பாதுகாத்தாலும், என் எதிரிங்க டார்கெட் நீங்களும் உங்க குடும்பமுமா தான் இருக்கும். முதல்ல உங்கள தான் தூக்குவாங்க. இத பிரச்சனையா காட்டி, என் வேலைய விட சொன்னா, டைவர்ஸ்ல தான் முடியும்” என்று ஒரே போடாக போட்டு துரத்தியடிப்பாள்.

பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிடுவார்கள். ஆனால் இவன் அப்படி எதுவும் பேசாமல் இருக்க, அடுத்து என்ன பேசுவது என்று புரியவில்லை. வாயை மூடி அமர்ந்து கொண்டாள்.

சில நிமிடங்கள் அமைதியாக கழிய, “நீ ஏன் ஓகே சொன்ன?” என்று செழியன் கேட்டான். “நீங்க வேணாம்னு சொல்லிடுவீங்கனு தைரியத்துல தான்” என்றாள் மெதுவாக.

மெல்லிய குரலில் சிரித்தான்.

“ரெண்டு பேருமே சம்மதம் சொல்லியாச்சு. பிடிக்காமலே..” என்று சொல்ல, சுலெக்ஷனா பதில் பேசவில்லை. அவளுக்கு அவனை பிடிக்கும். அவனுக்கு தான் அவளை பிடிக்காது என்பதில் உறுதியாக இருந்தாள்.

“உனக்கு பிடிக்கலனா உங்க அப்பா கிட்ட சொல்லிடு. எனக்கு தெரிஞ்சு அவர் ப்ரண்ட்லி டைப் தான். ஏன் தயங்குற?”

எப்படிச் சொல்லுவாள்? எல்லோரிடமும் சொல்லும் இந்த பொய் காரணத்தை நித்தினிடம் சொல்ல முடியுமா? முடியவே முடியாது. ஒரே நொடியில் அது பொய் என்று கண்டு பிடித்து விடுவாரே. அவளுக்கு தெரியவில்லை, தந்தைக்கு பிறகு ஒருவன் தன் பொய்யை கண்டு பிடித்து விட்டான் என்று.

“அப்பாக்கு எப்படியாவது எனக்கு நல்ல மாப்பிள்ளைய பார்த்துடனும்னு ஆசை. நான் வேணாம்னு சொல்லிட்டே இருந்தா அவருக்கும் கஷ்டமா இருக்குமே”

“ஒன்னு பண்ணு. நீயே ஒரு நல்ல மாப்பிள்ளைய தேடிக்கோ. கண்டிப்பா உங்க வீட்டுல நோ சொல்ல மாட்டாங்க. நீ சொன்னியே இப்போ இந்த சில்லி ரீசன்… செக்யூரிட்டி அது இதுனு. இந்த பிரச்சனை இல்லாத பையனா பார்த்து சொல்லு. ஈசி வொர்க்”

ஆரம்பிக்கும் போது கட்டுப்படுத்திய நக்கல் தொனி, போகப் போக வெளிப்பட்டு விட்டது.

அவனது நக்கலான பேச்சில் தான் சொன்னதை அவன் நம்பவில்லை என்று சுலோக்ஷனாவிற்கு புரிந்து விட, உதட்டை கடித்துத் திரும்பிக் கொண்டாள்.

செழியன் யாரையோ கைபேசியில் அழைத்து, “ஹலோ அங்கிள் உங்க பொண்ணுக்கு உங்க கிட்ட எதோ சொல்லனுமாம்” என்க, சுலோக்ஷனா அதிர்ந்து திரும்பினாள்.

“இந்தா பிடி” என்று கையில் திணித்து விட, பதறி போனாள்.

நடுங்கிய கரங்களோடு காதில் வைக்க, “என்னமா? என்ன விசயம்? இந்த கல்யாணம் பிடிக்கலையா?” என்று நித்தின் மகளின் மனதை சரியாக கவனித்து கூற, அமைதியாகவே இருந்தாள்.

“பரவாயில்லடா. அதுக்கு ஏன் இவ்வளவு தயங்குற. நீ வீட்டுக்கு வா.” என்ற நித்தினின் குரலில் சோர்வு தெரியத்தான் செய்தது.

“ம்ம்” என்று அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

கைபேசியை வாங்கி பாக்கெட்டில் வைத்தபடி செழியன் எழுந்து நிற்க, அவனை முறைத்தபடி சுலோக்ஷனாவும் எழுந்து நின்றாள்.

“இவ்வளவு தான். இதுக்கு போய் தயங்கிட்டு இருக்க. சரி கல்யாணம் தான் இல்ல. நல்ல ஃப்ரண்டா இருப்போமே” என்று கூறியவன், அவளை நோக்கி கை நீட்டினான்.

நீட்டிய கையை பட்டென தட்டி விட்டாள்.

“ஹேய்.. என்ன? உனக்கு நல்லது பண்ணி இருக்கேன். நீ இப்படி முறைச்சுட்டு நிக்குற?”

“இதுக்கு பேரு நல்லதா?” என்று கேட்டு அதிகமாக முறைத்தாள்.

“எனக்கு அப்பா கிட்ட சொல்ல தெரியாம தான் உன்னை கல்யாணத்த நிறுத்த சொன்னனா… லூசு மாதிரி… ச்சே… இப்போ அப்பா செம்ம சேட்.. உன்னால” என்று அவள் போக்கில் பொரிய தொடங்கினாள்.

“ஏய் என்ன இது? அத்தனையும் என் பக்கம் திருப்புற?”

“ஆமா உன்னை யாரு ஓகே சொல்ல சொன்னது. அதுனால வந்த வினை”

“ஓஓஓ அத நீ பண்ணி இருக்க வேண்டியது தான? நீ ஏன் சொன்ன?”

“எனக்கு எங்கப்பாம்மா முக்கியம்”

“அப்ப எங்களுக்கு மட்டும் என்னவாம்?”

” நீ கல்யாணத்த நிறுத்துனு கேட்டா… எங்க வீட்டுல சொல்லி வைக்குற. ஏன் நீ சொல்ல முடியாதா?”

செழியன் பதில் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“இப்போ தான் எல்லாம் முடிஞ்சுடுச்சே. அப்புறம் என்ன?” என்று குரலில் உணர்ச்சியில்லாமல் செழியன் கேட்க, சுலோக்ஷனா பெருமூச்சு விட்டாள்.

“எனக்குத் தெரியாது. என் அப்பா இப்போ நல்ல மூட்க்கு மாறனும்”

“அதுக்கு நீ என்னை கல்யாணம் தான் பண்ணிக்கனும்.”

பட்டென வந்த பதிலில் அவள் தடுமாறி நின்றாள்.

“உனக்கு என்னை பிடிக்காதுல?”

“இது வேண்டாத கேள்வி” என்று அவள் படித்த பாடத்தை திருப்பிப் படித்தான். சுலோக்ஷனாவிற்கு மனதில் சுருக்கென இறங்கியது.

அப்படித் தானே அவனுக்கும் இருக்கும் என்று யோசிக்கவில்லை. மாறாக, “அப்போ இந்த பிடிக்காதவள கட்டிட்டு வாழ ரெடியா இரு” என்றவள், விருவிருவென சென்று விட்டாள்.

கோபத்தில் சொல்லி விட்டு, விருவிருவென ஸ்கூட்டியில் பறந்து விட்டாள். அவள் போகும் திசையை பார்த்தபடி நின்றவனின் உதட்டில் சிறு புன்னகை.

‘கொஞ்ச நேரத்துல கலங்கடிச்சு இழந்துட்டோம்னு நினைக்க வச்சுட்டாளே’ என்று தனக்குள் கூறியவன், தலையை அழுந்த கோதிக் கொண்டான்.

......

சுலோக்ஷனா வீட்டில் நுழையும் போது அசாதாரண சூழ்நிலையை எதிர் பார்க்க, நேர்மாறாக எல்லோரும் சிரிக்கும் சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்க்க, நந்தனிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

மடிக்கணினியின் முன்பு மொத்த குடும்பமும் அமர்ந்து இருந்தது. சுலோக்ஷனாவை கூப்பிட, தந்தையின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“ஹாய் நந்து”

“என்ன ஸ்பீட் பேபி. செம்ம டயர்டா இருக்க?”

“பீச் போயிட்டு வந்தேன் டா”

“தனியாவே எவ்வளவு நாள் தான் சுத்துவ? சீக்கிரம் ஜோடியா சுத்த ஏற்பாடு பண்ணு”

“ஜோடியா தான் சுத்திட்டி வர்ரேன்” எனும் போது அவளையும் அறியாமல் முகம் லேசாக சிவந்தது.

ஸ்வரண், “ஹேய்…” என்று கத்த, மற்றவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.

நித்தின் மட்டுமே யோசனையாக பார்த்தார். மகளின் வெட்கம் அந்த யோசனையை போக்கி விட, நிம்மதியுடன் அவளை தோளோடு அணைத்துக் கொண்டார்.

“அடடா..! சுனாபானா..! உனக்கு ஒரு அடிமை சிக்கிடுச்சா..? வாழ்த்துக்கள்”

“அடிங்க. அமெரிக்கால இருக்க தைரியமா? பிச்சுடுவேன்” சுலோக்ஷனா விரலை நீட்டி மிரட்டினாள். எல்லோரும் ஆனந்தமாக பேசி முடித்தனர்.

Leave a Reply