Episode 8

Loading

அழகாக அலங்கரிக்க பட்டிருந்த அந்த மேடை, பார்ப்பவர்களை வாயை பிளந்து பார்க்க வைத்துவிடும். லாவண்டர் நிறத்துடன், வெள்ளை கலந்து அலங்கரிக்க பட்டு இருக்க, அதை எடுத்துக் காட்டும் விதமாக சுற்றி விதவிதமான பூக்களை வைத்து அலங்கரித்து இருந்தனர்.

மேடையின் அழகை கைபேசியில் புகைப்படம் எடுப்பதும், தானும் அதோடு புகைபடம் எடுத்துக் கொள்வதுமாக இருக்க, இரண்டு பேர் மட்டும் அதை கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. ஒன்று செழியன். அவனுக்கு தங்க சிலையாக எதிரில் அமர்ந்து இருந்த சுலோக்ஷனாவை தவிர, சுற்றுப்புற அழகு எதுவுமே கருத்தில் பதியவில்லை.

சுற்றி குடும்பங்கள் அமர்ந்திருக்க, மேடைக்கு கீழ் அமர்ந்து இருந்த சுலோக்ஷனாவோ, ஏக போக கடுப்பில் இருந்தாள். அவளுக்கும் அந்த அழகை ரசிக்க மனமில்லை.

இன்று திருமண நிச்சயம்.

ஒரு வாரத்திற்கு முன்பு, அவளது தாத்தா மணிமாறன் வீடு திரும்பினார். இரவு வேளை வந்தவரை காலையில் தான் பார்த்தாள்.

“தாத்தா..” என்று வேகமாக ஓடிச் சென்று அவர் பக்கத்தில் அமர்ந்து, கையை பிடித்துக் கொண்டாள்.

“எப்போ வந்தீங்க?” என்று ஆர்வமாக கேட்க, “நைட் வந்தேன்மா.எல்லாரும் தூங்கிட்டீங்க அதான் எழுப்பல” என்றார் மணிமாறன்.

பேத்தியை ஒரு கையால் அணைத்த படி பேசிக் கொண்டிருக்க, தூக்க கலக்கத்தில் கண்ணை தேய்த்துக் கொண்டே ஸ்வரண் வெளியே வந்தான். சோபாவில் அமர்ந்து இருந்த தாத்தாவை பார்த்து விட்டு அவனும் ஓடி வந்தான்.

ஒரு பக்கம் சுலோக்ஷனாவும் மறுபக்கம் நித்தினும் அமர்ந்து இருக்க, சட்டென அவரது காலடியில் மண்டியிட்டு அமர்ந்தான்.

“எப்போ தாத்தா வந்தீங்க? என்னை எழுப்பி இருக்கலாம்ல?” என்று கேட்க, அவனது தலையை பிடித்து ஆட்டியவர், சுலோக்ஷனாவிற்கு சொன்ன பதிலை தான் சொன்னார்.

“எனக்காக என்ன வாங்கிட்டு வந்தீங்க?” என்று ஆர்வமாக ஸ்வரண் கேட்க, அறையில் இருக்கிறது என்று அனுப்பி வைத்தார்.

“அப்போ எனக்கு?”

“உனக்கு இல்லாததா? கொஞ்ச நாள்ல எங்க குட்டி சுலோக்ஷனா ஒரு குடும்ப பொறுப்ப ஏத்துக்க போறானு நினைக்கும் போது எவ்வளவு சந்தோசமா இருக்கு.” என்றவர் தோளோடு அணைத்துக் கொண்டு, நித்தினை பார்த்தார்.

“ஆமாபா. சிரிச்சுட்டே ஸ்கூல் போன அதே சுலோக் தானா இதுனு அதிசயமா இருக்கு.” என்று சொல்ல அவளுக்கு கண்கலங்கியது.

இவ்வளவு நாள் இருந்த குழந்தை தனத்தை எவ்லாம் இனி மூட்டை கட்டி ஓரமாக வைக்க வேண்டும். அன்பு செழியனது குடும்பத்தைப் பற்றி அவ்வளவாக தெரியாது. இது வரை பேசியதும் இல்லை. எப்படி சமாளிப்போமோ? என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அடுத்த வீடு, வேறு குடும்பம் என்று யோசித்து யோசித்து ஓய்ந்து போனாள்.

பெரியவர்கள் மளமளவென நாளை குறித்து விட்டனர். நந்தனை கேட்டால், வர முடியாது என்று கூறிவிட்டான்.

இப்போது.. நந்தன் வேறு காலையிலிருந்து அழைப்பை ஏற்கவில்லை. தூங்கி விட்டானோ? என்று சமாதானம் செய்து கொண்டாள். ஆனாலும் மனம் தம்பி இல்லாமல் நடக்கும் இந்த நிசசயத்தை ஏற்க மறுத்தது.

நேரம் காலம் தெரியாமல் பக்கத்திலிருந்த சுலோக்ஷனாவின் அலுவலக தோழி கிண்டலடிக்க, முறைத்து பார்த்தாள்.

என்னடி இது. வெக்கபடுவனு பார்த்தா முறைக்குற?”

“மூடிட்டு போயிடு. செம்ம கடுப்புல இருக்கேன்.” என்று மெல்லிய குரலில் முணுமுணுப்பாக கூறினாள்.

“அடிப்பாவி. இன்னைக்காவது பொண்ணு மாதிரி வெட்கப்படுடி. “

“முடியாது”

“எதாவது பிரச்சனையா?” என்று வேறொரு தோழி கேட்க, “நந்து வரல. பேசவும் இல்ல” என்று சோகமாக பதிலளித்தாள்.

“ஓஹ்… இப்ப அங்க நைட்ல தூங்கி இருப்பான்” என்று சாமாதானம் செய்த அடுத்த நொடி, சுலோக்ஷனாவின் மடியில் கிடந்த கைபேசி சினுங்கியது.

நந்தனது பெயர் வர, ஆர்வமாக எடுத்துப் பார்க்க, விடியோ கால் போட்டு இருந்தான். அதை உயிர்ப்பித்து பேச, “ஹாய் ஸ்பீட் பேபி” என்று ஆர்வமாக சொல்ல, ஏனோ சுலோக்ஷனாவிற்கு கண்கலங்கியது.

அவள் கையிலிருந்து வேகமாக பறித்த ஸ்வரண், “ஹாய் அண்ணா” என்றான்.

“ஸ்வரா எல்லா இடத்தையும் காட்டு பார்ப்போம்” என்று நந்தன் கேட்க, சுலோக்ஷனா, “டேய் எருமை. எங்கடா போற?” என்று யாருக்கும் கேட்காத குரலில் கோபத்தை காட்டி கேட்டாள்.

“அய்யோ லூசு அக்கா. ஒழுங்கா பங்சன கவனி. அண்ணனுக்கு எல்லா இடத்தையும் சுத்தி காட்டனும்னு நேத்தே சொல்லிட்டார். அத தான் செய்ய போறேன்” என்றவன், கைபேசியை சுலோக்ஷனாவும் தானும் தெரிவது போல் பிடித்துக் கொண்டான்.

“உங்க ஸ்பீட் பேபி இன்னைக்கு அழுகாச்சி பேபியா மாறிட்டாங்க. நம்ம இந்த இடத்துல இருந்து ஓடிரலாம்” என்று சொல்லிக் கொண்டே எழுந்து சென்று விட்டான்.

நேராக செழியனிடம் வர, “ஹாய் அத்தான்” என்று சொல்லி விட்டு நந்தனை காட்டினான்.

“ஹாய் நந்து” என்று வீடியோவில் தெரிந்தவனை பார்த்து கையாட்டினான் செழியன்.

“ஹாய் அத்தான். உங்களுக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள். ” என்று விஜயநந்தன் ஆரம்பிக்க செழியன் சிரித்தான்.

“உங்க எல்லாரோட அனுதாபமும் ரொம்ப தேவைப்படும் நந்து. எதிர்ல உட்கார்ந்து முறைச்சுட்டு இருக்கா உங்க அக்கா” என்றவன் கைபேசியில் சுலோக்ஷனாவை பார்க்கும் படி மாற்றிக் காட்டினான்.

அவளுக்கு ஏகபோக கடுப்பு. தன்னிடம் பேசாமல், செழியனிடம் அப்படி சிரிக்க சிரிக்க என்ன பேசிக் கொண்டிருக்கிறான்? என்று பல்லை நறநறவென கடித்துக் கொண்டிருந்தாள்.

அவள் முறைப்பை பார்த்த விஜயநந்தன் சிரித்து விட்டான்.

“நிவி மேடம் நான் உங்க கிட்ட பேசுற கடுப்புல இருக்கா.. அப்புறம் பேசிக்கிறேன் விடுங்க.” என்றவன், மேலும் நலம் விசாரித்து விட்டு ஸ்ரவணிடம் செழியனின் குடும்பத்தை காட்ட சொன்னான்.

அவன் வரிசையாக அறிமுகபடுத்தி வைத்தான். அதன் பின் எழுந்து நடந்தவன், ஒரு இடத்தில் நின்றான். யாழினி ஒரு முழு லட்டை வாயில் திணித்துக் கொண்டு நிற்க, கைபேசி வழியாக பார்த்த நந்தனும் நேராக பார்த்த ஸ்வரனும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

சிரிப்பு சத்தத்தில் திரும்பிய யாழினி முறைத்துக் கொண்டே லட்டை முழுங்கினாள்.

“என்ன பூசணிக்கா அனுமார் வேசம் போட்டுருக்க?” என்று அவள் வாயை பார்த்து ஸ்வரண் கிண்டிலடிக்க, அவசரமாக வாயிலிருந்ததை உள்ளே தள்ள ஆரம்பித்தாள்.

அவள் முழுங்கும் வேகத்தை பார்த்த ஸ்வரண், “முழுங்கிட்டானா திட்டி தீத்துடுவா. வாங்க ஓடிரலாம்” என்று ஓட போன ஸ்வரணின் கை சட்டையை பிடித்து நிறுத்தினாள்.

“அய்யோ சட்டை கசங்குது விடு பூசணிக்கா” என்று கோபமாக சொன்னவனை ஒரு பொருட்டாக மதிக்காமல், வாயில் இருந்ததை முழுங்கி விட்டு அவனிடமிருந்து கைபேசியை பறித்தாள்.

“என்ன பார்த்து சிரிக்குற இவன் மட்டும் பெரிய இவனா) கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி” என்று யாழினி ஆரம்பிக்க, “அய்யோ வேணாம்” என்று ஸ்வரண் அலறினான்.

“என்ன பண்ணான்?” என்று நந்து ஆர்வமாக கேட்க, “ரெண்டு சமோசாவ சுட்டுட்டான். அது கூட பரவாயில்லை. ஒன்னு ஒன்னா திங்க வேண்டியது தான? ரெண்டையும் ஒரே வாய்ல அமுக்கி… அது விக்கி… தண்ணி எடுக்க போனா, அங்க நின்ன ஒரு ஆண்ட்டி இவன் கண்ணத்த பிடிச்சு கிள்ள… வாயில இருந்தத துப்பவும் முடியல முழுங்கவும் முடியல” என்று சொல்லி முடிப்பதற்குள் நந்தன் விழுந்து விழுந்து சிரித்தான்.

கூடவே தான் அங்கு இல்லையே என்கிற ஏக்கமும் வந்தது.

“ஏன்டா ஒன்னு ஒன்னா தின்ன வேண்டியது தானா?” என்று கேட்க, “ஹி ஹி.. அது யாரோ வர மாதிரி இருந்துச்சு. கீழ வைககவும் மனசு இல்ல” என்றான் ஸ்வரண் வழிந்து கொண்டு.

“தூ… ஓடு.. வேஸ்ட் ஃபெல்லோ.. நீ என்ன சுத்தி காட்டுறது? நான் சுத்தி காட்டுறேன்.” என்றவள் கைபேசியோடு இடத்தை விட்டு அகன்றாள். ஸ்வரனும் எதுவும் சொல்லவில்லை.

நந்துவுக்கு ஒவ்வொரு இடமாக காட்டினாள். மேடை அலங்காரத்திலிருந்து ஆரம்பித்தாள்.

“வாவ்! யாரோட ஐடியா? இவ்வளவு அழகா இருக்கு” என்று நந்து கேட்க, வேகமாக சுடிதாரிலிருந்த இரண்டு காலரையும் தூக்கி விட்ட யாழினி, “நான் இல்ல” என்றாள்.

“அட பக்கி காலர தூக்கவும் நீனு நினைச்சேன்” என்று கேட்டு முறைக்க, “அது தூசி தட்டுனேன்.” என்று சிரித்தாள்.

“எல்லாமே உங்க அக்கா சொன்னது. இதுவும்” என்று ஒவ்வொன்றாக காட்டி பேசிக் கொண்டே நடந்தாள்.

இடையிடையே அவளை போல இனிப்பை தூக்கி வாயில் அமுக்குபவர்கள், எதையாவது தட்டி விட்டு விட்டு ஒன்றுமே தெரியாதது போல் சென்று விடுபவர்கள், இளம்பெண்களின் பின்னால் சுற்றும் காதல் வாலிபர்கள், பெரியவர்களை கண்டால் பம்மிக் கொண்டு செல்லும் இளஞ்சிட்டுக்கள்.. மேக்கப்பை அள்ளி பூசுபவர்கள், திருட்டுத் தனமாக ஹாலின் பின்னால் சிகரெட் பிடித்து கொண்டிருந்தவர்கள், என ஒவ்வொரு விஷயத்தையும் அழகாக காட்டிக் கொண்டே நடந்தாள் யாழினி.

பல இடங்களில் இருவரும் சிரித்து, அதிசயத்து, கடுப்பாகி என எல்லா உணர்வுகளையும் வெளிபடுத்தினர். அவன் அங்கு தான் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டாள்.

லக்ன பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிக்க, வேகமாக சென்று சுலோக்ஷனாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். தட்டு மாற்றும் சடங்கு போன்றவற்றை நேரலையாக பார்த்து கொண்டிருந்தான் நந்தன்.

சுலோக்ஷனாவிற்கு தம்பி பார்ப்பதே போதுமானதாக இருந்தது. அடுத்ததாக மோதிரம் மாற்ற வேண்டும். மேடையில் ஏறி விட்டனர். யாழினி கீழேயே நின்று கொண்டாள். கைபேசி வழியாக நந்தனுக்கு காட்டியபடி நிற்க, மேலே கலாட்டா நடந்தது.

சுலோக்ஷனா கையை கட்டிக் கொண்டு நின்றாள்.

“ஹலோ மேடம் கைய நீட்டுறது” என்று செழியன் கேட்க, “ஏன் நீட்டனும்?” என்றாள்.

“இந்த மோதிரத்த உங்களுக்கு போட்டு விடனுமாம். நான் சொல்லல சுத்தி இருக்கவங்க சொன்னது” என்றவனுக்கு, “அப்படி எல்லாம் நீட்ட முடியாது” என்று பதிலளித்தாள்.

“இப்போ கைய நீட்டலனா…” என்று அவன் இழுக்க, “நீட்டலனா?” என்று எடுத்துக் கொடுத்தாள்.

“என் கழுத்துல இருக்க செயின உன் கழுத்துல போட்டு இப்போவே கூட்டிட்டு போயிடுவேன். எப்படி வசதி?” என்று கேட்டான்.

சுலோக்ஷனா முறைத்து பார்த்தாள். செய்தாலும் செய்வான் என்று தோன்ற, கையை நீட்டி விட்டாள்.

இவர்களது ஒவ்வொரு செய்கைக்கும் பின்னால் இருந்த நண்பர்கள் கூட்டம் சத்தம் கொடுத்து ஆர்பரித்தனர்.

அதை எல்லாம் பார்த்த நந்தன், “சுனாபானாவ சமாளிக்க அத்தானால மட்டும் தான் முடியும் ” என்று சொல்ல, “எக்ஸாட்லி” என்றாள் யாழினி.

அடுத்து செழியன் கையை நீட்டுவதும் மடக்குவதுமாக இருக்க, “ஒழுங்கா மோதிரம் போடுக்கோங்க” என்று அவன் கையை பற்றப் போக, போக்கு காட்டிக் கொண்டே இருந்தான்.

“இப்போவே போட்டா நல்லது. இன்னும் ரெண்டு நிமிசத்துல ராகு காலம், எமகண்டம் எல்லாம் வந்துடும். அப்புறம் என்னைய குறை சொல்லக் கூடாது” என்று மிரட்ட, செழியன் முகத்தை சுழித்து கொண்டு ஒழுங்காக கை நீட்டினான்.

நந்தனுக்கு மனநிறைவாக இருந்தது. இருவரையும் யாரும் கிண்டலடிக்கவில்லை. அவர்களே அவர்களை காலைவாரிக் கொண்டு இருக்க, யாழினி சாப்பிடும் இடத்தை அடைந்தாள்.

குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக காட்ட ஆரம்பித்தாள். முதலில் நின்றது ஜானவி தான்.

“அத்த இங்க பாருங்க ” என்று கூப்பிட, “ஹாய் மா” என்றான் நந்தன்

“நந்து நல்லா இருக்கியா டா? காலையில இருந்து இங்க வேலை வேற.. பேச முடியல” என்று ஜானவி சோகமாக சொல்ல, “ம்மா ம்மா… எல்லாத்துக்கும் சோக ரியாக்ஷன் தானா?” என்று கேட்டு கிண்டலடித்தான்.

அவளிடம் பேசி விட்டு, “வாங்க வாங்க.. என் மாமா உங்க மாமா ரெண்டு பேருகிட்டயும் போகலாம்” என்ற யாழினி நித்தினும் விரேந்திரனும் இருந்த இடத்தில் சென்று நின்றாள்.

அவர்களிடம் பேச, “நீ இல்லனு ஒரே குறை தான். மத்தபடி எல்லாமே நல்லா போகுது” என்று விரேந்திரன் கூறினான். “கல்யாணத்துக்கு வர்ரேன் மாமா.. ஆனா நான் அங்க இல்லனு தோனவே இல்ல. அவ்வளவு அழகா யாழினி காட்டிட்டு இருக்கா” என்றான்.

உண்மையும் அது தான். விரேந்திரன் சிரித்துக் கொண்டே மகளது தலையை ஆட்டி விட்டுச் சென்றான்.

யமுனாவிடம் செல்ல, அவளோ சாலினியிடம் மல்லுக்கு நின்று இருந்தாள்.

“ம்மா ம்மா உங்க சண்டைய விடுங்க. இங்க பாருங்க” என்று நந்தனை காட்டினாள்.

இருவரும் பேச, “என்ன சண்டை? ” என்று சாலினியிடம் கேட்டாள்.

“பாரு யாழு. என் ஃபிரண்ட்ஸ் கூட பேசுனா அவங்களோடயே இருக்க. போய் கெஸ்ட்ட பாருங்குறாங்க. அப்ப என் ஃபிரண்ட்ஸ் கெஸ்ட் இல்லையா?” என்று கேட்க, அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

“ம்மா அத்தை, மாமா, அப்பா யாருமே சாப்பிடல. போய் அத கவனிங்க” என்று அவளை அனுப்பி வைத்து விட்டு சாலினியிடம் வந்தாள்.

“மாமா மகனே உங்க அக்கா கல்யாணம் முடிஞ்சதும் என்னை கட்டிக்குறேன்னு சொல்லிட்டு, இப்படி நாட்ட விட்டே ஓடிட்டீங்களே நியாயமா?” என்று சாலினி விஜயநந்தனிடம் கேட்க, யாழினி வாயை மூடி சிரித்தாள்.

நந்தனை விட சாலினி ஒரு வயது மட்டுமே சிறியவள். இது போன்று பேசி விளையாடிக் கொள்வது வழக்கம். ஆனால் அதில் தவறாக எதுவும் இருக்காது.

“அப்படியா சொன்னேன்!” என்று நந்தன் போலியாக வியக்க, “என்ன இப்படி ஏமாத்திட்டீங்களே அயித்தான்” என்று சாலினி க்ண்ணை கசக்கினாள்.

“அய்யோ சாலு காஜல் கலையுது பாரு” என்க அவசரமாக, “நிஜம்மாவே கலஞ்சுடுச்சா?” என்று கேட்டாள்.

அவள் செய்யும் அலப்பறையில் நன்றாக சிரித்து விட்டு, “யாழினி ஃபோன பிடுங்கிட்டு ஓடு.. உனக்கு புண்ணியமா போகும்” என்று நந்தன் கதறினான்.

அதை வாங்கியவள் ஒரு மேசையில் சாப்பிட அமர்ந்தாள்.

“ஏய் என்ன சாப்பிட உட்கார்ந்துட்ட?”

“ஹலோ இது உங்களுக்கு தான் இயர்லி மார்னிங். இங்க டின்னர் டைம். பசி உயிர் போகுது. வேணும்னா நீங்களும் சாப்பிடுங்க வாங்க” என்றவள் சாப்பாட்டு தட்டோடு தனி மேசையில் சென்று அமர்ந்தாள்.

டிஸ்யூ பேப்பர் டப்பாவின் மீது கைபேசியை வைத்து விட்டு, அவனிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டது, ஏனோ அவளுக்கு மனநிறைவாக இருந்தது. அவனுக்கும் அப்படி தானோ?

“தாங்க்ஸ் யாழினி. அங்க இருந்தா கூட இவ்வளவு என்ஜாய் பண்ணி இருப்பனானு தெரியல” என்று உண்மையாக கூற, புன்னகையோடு சாப்பிட்டாள்.

Leave a Reply