Episode 9

Loading

நிச்சயம் முடிந்து ஒருவாரம் கடந்து இருந்தது. இன்னும் மூன்று வாரத்தில் திருமணம். சுலோக்ஷனா எவனுக்கு வந்த விருந்தோ என்று இருந்தாள். ஜானவியும் நித்தினும் தான், வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தனர்.

இன்று பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருக்கிறது. ஸ்வரண் எப்போதும் போல் விளையாடிக் கொண்டிருந்தான்.

அவனிடம் வந்த சுலோக்ஷனா, “ஏன்டா உனக்கு ரிசல்ட் நினைச்சு பயமே இல்லையா?” என்று கேட்க, ” பயந்தா மட்டும் வர மார்க் மாத்தி வர போகுதா? அடப்போக்கா.. பயமெல்லாம் எக்ஸாம் எழுதும் போது இருக்கனும். அத ஒழுங்கா எழுதியாச்சுல? ரிசல்ட் ஒழுங்கா தான் வரும்” என்று அசால்ட்டாக பதிலளித்தான்.

அவள் தான் வாயை பிளந்தாள். விஜயநந்தனும் இப்படி தான் இருந்தான். அவள் தான் பொது தேர்வு முடிவு வருவதற்குள், ஒரு வழியாகி விட்டாள். பையன்கள் எப்போதும் எதையும் சாதரணமாக தான் எடுத்துக் கொள்வார்களோ? என்று யோசித்தபடி, ஸ்வரண் தூக்கிப்போட்ட பந்தை பிடித்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் வீட்டில் இருக்கும் கூடை பந்து மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்க, நித்தின் வந்து சேர்ந்தான். கூடவே கையில் எதையோ எடுத்து வருவது தெரிந்தது. இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

எல்லோரையும் கூப்பிட்டவன், கையில் இருந்த பரிசை மகனை நோக்கி நீட்டினான். தேர்வு முடிவு வந்து விட்டது. பள்ளியில் இவன் முதல் இடம். பார்த்து விட்டு முதலிலேயே வாங்கி வைத்த பரிசு கொடுக்க, ஸ்வரண் சந்தோச மிகுதியில் குதித்து தந்தையை அணைத்துக் கொண்டான்.

அதே துள்ளலோடு அன்னையை அணைத்தவன், கையில் இருந்த பரிசு ஆர்வமாக பார்த்தான். அதை பிரிக்க அமர்ந்தவன், சுலோக்ஷனாவையும் இழுத்து அருகில் அமர்த்திக் கொண்டான்.

பாட்டியும் தாத்தாவும் வீட்டில் இல்லை. எதோ வேண்டுதல் என்று கோவிலுக்கு சென்று இருந்தனர். அவசரமாக பிரித்து பார்க்க, டேப் ஒன்று இருந்தது. பல நாட்களாக அவனுக்கு அதை வாங்க ஆசை. ஆனால் தேவையில்லாத போது வாங்கி என்ன செய்வது என்று விட்டு விட்டான்.

அவன் மனம் அறிந்து வாங்கி வந்த தந்தையை அவன் சந்தோசமாக கட்டிக் கொள்ள, “நான் வாங்கலடா. நந்து தான் உனக்கு இத வாங்குனான். உன் மேல அவ்வளவு நம்பிக்கை. அமெரிக்கா போறதுக்கு முன்னாடியே வாங்கி வச்சுட்டான்” என்று சொல்ல, அவனுக்கு அண்ணனை நினைத்து பெருமையாக இருந்தது.

உடனே பேச வேண்டும் என்று தோன்றிய ஆவலை அடக்கிக் கொண்டான். இப்போது அவன் தூங்கிக் கொண்டிருப்பான். மனதை கட்டு படுத்திக் கொண்டு, எல்லோருடனும் டேப் -ல் படம் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான்.

அதே நேரம் யாழினியும் துள்ளிக் கொண்டிருந்தாள். ஓடி வந்தவள் அன்னையை கட்டிக் கொண்டு, “ம்மா நான் ஸ்டேட் தேர்ட் மா” என்று என்றவளின் கண்கள் ஆனந்த மிகுதியில் கலங்கி இருந்தது. என்ன தான் நன்றாக எழுதி இருந்தாலும், முடிவு வரும் போது படபடப்பாக தான் இருந்தது அவளுக்கு.

முடிவை பார்த்து விட்டு படபடப்பு அப்படியே வடிய, அளவில்லாத மகிழ்ச்சி அந்த இடத்தை ஆட்கொண்டது. சாலினியில் இரண்டு கையையும் பிடித்து, “சாலு சாலு நான் ஸ்டேட் தேர்ட்… ஸ்டேட் தேர்ட்” என்று துள்ளி குதிக்க, அவளுக்கு இணையாக குதித்துக் கொண்டே, “வாழ்த்துக்கள்டி பட்டு குட்டி” என்றாள். துள்ளியபடி அந்த வீட்டை சுற்றி விட்டனர்.

விசயம் தெரிந்து வேகமாக வீட்டிற்கு வந்த விரேந்திரனை ஓடிச் சென்று கட்டிக் கொள்ள, அவனும் வாழ்த்தை தெரிவித்தான். யமுனா அண்ணனுக்கு அழைத்து அண்ணன் மகளின் மதிப்பெண்களை கேட்டு விட்டு யாழினியிடம் சொன்னாள்.

“சொன்னேலடா உன்னை விட என் மார்க் நிறைய தான் வரும்னு யாரு கிட்ட” என்று யாழினி பெருமை குரலில் அவனை கிண்டலடிக்க, அவன் பொருட்டாக கூட மிதிக்கவில்லை.

“நீ எழுதுனதுக்கு உன் மார்க் வந்து இருக்கு. அது போல தான் எனக்கும். இதுல என்ன பெருமை? எனிவே மேடம் ட்ரீட் கொடுங்க. தேர்ட் ப்ளேஸ்ல இருக்கீங்க” என்ற அவனது ஆனந்தமான வாழ்த்தில் யாழினி அகமகிழ்ந்து போனாள்.

“ட்ரீட் தான.. கொடுத்துட்டா போச்சு. அம்மா கிட்ட செய்ய சொல்லி வாங்கி தர்ரேன்” என்றவள் நித்தினின் மொத்த குடும்பத்தின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டாள்.

மாலை நந்தன் அவளை அழைத்து வாழ்த்து தெரிவித்து விட்டு, “அடுத்து என்ன படிக்க போற?” என்று கேட்டான்.

“எம். பி.பி.எஸ். யாழினி எம். பி. பி. எஸ்” என்றவளின் குரலில் ஏகபோக மகிழ்ச்சி.

“பார்ரா! நீ தான் பிரச்சனை வந்தா கண்ண மூடிப்பியே. டாக்டராகி ஃபேஷன்ட் பிரச்சனையோட வந்தா என்ன செய்வ?”

“ஹலோ.. அடுத்தவங்களுக்கு வந்தா இல்ல. எனக்கு வரும் போது தான் பயம்.. அதையும் கூட சீக்கிரமா சரி பண்ணிடுவேன்” என்று உதட்டை சுழித்தாள்.

சிரித்துக் கொண்டே அழைப்பை துண்டித்தான் விஜயநந்தன். ஸ்வரண் கணினி பிரிவை தேர்நதெடுக்க, யாழினி நீட் தேர்விற்கு தயாரானாள்.

......

அன்று… மாலை செழியன் வீட்டில் எப்போது இருப்பான் என்று சுலோக்ஷனாவிற்கு தெரியவில்லை. எப்போது இருந்தாலும் சரி, என்று ஒரு நேரத்தை முடிவு செய்து அழைப்பு விடுத்தாள்.

“ஹலோ..” என்று இவள் ஆரம்பிக்க, “சொல்லுமா” என்றான் செழியன்.

அவனது அழைப்பில் தடுமாறியவள், “பிசியா?” என்று கேட்டாள்.

“இல்ல வீட்டில தான் இருக்கேன். எதுவும் முக்கியமான விசயமா நிவி?”

“இல்ல சும்மா தான்”

“அப்போ ஒரு டென் மினிட்ஸ்க்கு அப்புறம் கூப்பிடவா? குளிச்சுட்டு வரேன்”

சரி என அழைப்பை துண்டித்து விட்டாள். வீட்டு உறுப்பினர்கள் யாரும் அவளை நிவி என்று அழைத்தது கிடையாது. ஆனால் அந்த பெயர் அவளுக்கு ரெம்பவும் பிடிக்கும். தன் தந்தை தாயின் பெயரை இணைத்து வைத்த பெயரல்லவா. அதை சொல்லி அழைக்கும் போது, அவளையும் அறியாமல் உள்ளம் பெருமை கொள்ளும். இப்போது செழியன் அப்படிக் கூப்பிட்டது கூட அவளுக்குப் பிடித்து இருந்தது.

சரியாக பத்து நிமிடம் கழிய, டேப்-ல் விடியோ கால் வந்தது. மேசையில் டேப் -பை எடுத்து வைத்து அழைப்பை ஏற்றவள், வாயில் பக்கோடாவை திணித்துக் கொண்டே, “ஹாய்” என்றாள்.

“என்ன பக்கோடா?” என்று அவன் புன்னகை முகமாக கேட்க, “ஆமா.. அம்மா பண்ணது. வேணுமா?” என்று கேட்டாள்.

“அத தின்ன மட்டும் தான் தெரியுமா? இல்ல செய்ய தெரியுமா?”

“செய்யவா? நோ நோ. ஒன்லி தின்ன தான் தெரியும்”

“அதான் இப்படி இருக்கியா?” என்று கையை பக்கவாட்டில் விரித்து குண்டு என்பது போல் காட்ட, முறைத்து பார்த்தாள்.

“எனக்கு இந்த டயட்.. ஜீரோ சைஸ் மேல எல்லாம் நம்பிக்கையே கிடையாது.” என்று தலையை சிலுப்பினாள்.

“அடேங்கப்பா…” என்று அவன் இழுக்க, “ஏன் மளிகை கடைகாரருக்கு வாங்கிப் போட முடியாதா? சொத்து அழிஞ்சுடுமா?” என்று கேட்டாள்.

ஒரு நொடி ஜெர்க் ஆனான்.

“என்னது மளிகை கடக்காரனா?” என்று அதிர்ச்சியுடன் கேட்க, “ஆமா” என்றாள்.

இப்போது செழியன் முறைத்தான். எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம். இந்தியாவில் அவனது சூப்பர் மார்க்கெட் இல்லாத மாநிலங்களே இல்லை. அப்படி வளர்த்து முதல் இடத்தில் இருப்பவனை மளிகை கடைக்காரன் என்றால்? அவனுக்கு ஏக போக கடுப்பு. அதோடு சிரிப்பும் வந்தது.

யாரும் அவனை இப்படி அசிங்க படுத்த முடியாது. தைரியம் தான் என்று மனதில் நினைத்தவன், வெளியில் முறைத்தான்.

“நான் நடத்துறதுக்கு பேரு சூப்பர் மார்கெட்” என்றான் கடுப்பாக.

“ஆமா. சூப்பர் மார்கெட்க்கு தமிழ்ல என்ன? எனக்கு என்னமோ மளிகை கடை தான் வரும்னு தோனுச்சு அதான் கூப்பிட்டேன்” என்றவளின் குரலில் குறும்பு கொப்பளித்தது.

“பக்கத்துல இருந்து இருந்த தலையில கொட்டி தரையோட புதைச்சு இருப்பேன். என்னை சொல்லுற நீ யாரு?” என்று கேட்க அவளோ படு கெத்தாக, “இங்கிலீஷ்ல ஜெர்னலிஸ்ட். தமிழ்ல பத்தரிக்கையாளர்” என்றாள்.

அவனுக்கு தான் செம்ம கடுப்பாக இருந்தது.

“சரி தான் போடி”

“என்னது போடியா?” என்று கொந்தளித்தவளை, கூலாக பார்த்தான்.

“டினு கூப்பிட்டிங்க கொலை விழும்”

“அப்படி தான்டி கூப்பிடுவேன்டி என்னடி பண்ணுவடி டி டி டி”

“டேய்… ” என்று கத்தி விட்டாள்.

அதற்கு மேல் முடியாமல் செழியன் சத்தமாக சிரித்து விட்டான்.

“இது அழகு. நீங்க போங்க வாங்கனு நல்லாவே இல்ல. போ வானு கூப்பிடு சனா” என்று சிரிப்போடு கூற, அவள் முழித்தாள்.

“சனாவா ? யாரு அது?” குழப்பமாக கேட்க, அவள் பக்கம் விரலை நீட்டினாள்.

“வாவ்! நல்லா இருக்கே.. அன்பு செழியன்… இத எப்படி கூப்பிடுறது?” என்று அவனிடமே கேட்டாள்.

அவன் தோளை குலுக்கி “ஃபிரண்ட்ஸ் எல்லாரும் செழியானு கூப்பிடுவாங்க. மத்த இடத்துல செழியன்னு கூப்பிடுவாங்க. உனக்கு எப்படி தோனுதோ அப்படி கூப்பிடு” என்றான்.

“அன்புனு யாரும் கூப்பிட்டது இல்லையா?”

“இல்ல அது அப்பா பேரும் இருக்கு. அதுனால யாரும் அத சொல்லி கூப்பிட்டது இல்ல”

சுலோக்ஷனா அடுத்து எதோ ஆரம்பித்து, கப்பென வாயை மூடிக் கொண்டாள்.

“என்ன?” என்று கேட்க இடவலமாக தலையசைத்தவள், “எதுவும் தோனல. செழியன்னே கூப்பிட்டுக்கிறேன்” என்று முடித்தாள்.

இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர். பல இடங்களில் சண்டை வருவது போல் இருந்தாலும், சிரித்து அதை இலகுவாக்கி பேசி முடித்து வைக்கும் போது இருவருக்குமே நன்றாக நெருங்கிய உணர்வு.

அடுத்து வேலைகள் துரிதமாக நடந்தது. திருமண புடவை எடுத்து, பத்திரிக்கை அடித்து, என வேலைகள் ஒரு பக்கம் செல்ல, இவர்களது உரையாடலும் ஒரு பக்கம் நிற்கவில்லை.

பிடிக்காத திருமணம் என்று நினைத்தவர்கள், அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எங்கே பேசினால் இனிமை கலைந்து விடுமோ என்று இருவருமே பயந்தனர்.

எதை வாங்கினாலும் நந்தனுக்கு காட்டி அவனது அபிப்பிராயம் கேட்டுக் கொண்டாள். பிடிக்காத திருமணம் என்று அவள் வருத்தப்பட்ட போது நந்தன் தான் அவளை தேற்றினான்.

அன்று பீச்சிலிருந்து வந்து சம்மதம் சொல்லி விட்டாலும், அவள் முகத்தில் தெளிவில்லை. தனியாக அவளை அழைத்த நந்தன், “என்னகா என்ன பிரச்சனை?” என்று கேட்டான்.

நந்தன் அக்கா என்று அழைத்து விட்டால், விசயத்தை வாங்காமல் விட மாட்டான். சுலோக்ஷனா அமைதியாக இருந்தாள்.

“எதாவது பிரச்சனையா கல்யாணத்துல?” என்று கேட்டான்.

“எனக்கு கல்யாணமே வேணாம் நந்து.” என்றாள் கசங்கிய குரலில்.

“லூசு. கல்யாணமே பண்ணாம இப்படியே இருக்க நினைக்குறியா? நம்ம அம்மா அப்பா கல்யாணம் பண்ணாம இருந்து இருந்தா, நாம இந்த உலகத்துல இருந்து இருப்போமா? கல்யாணம் வாழ்க்கைய அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போறதுகா. அத போய் வேணாம்னு சொல்லுற. மாப்பிள்ளைய பிடிக்கலையா சொல்லு. உனக்கு பிடிச்ச ஒருத்தர கல்யாணம் பண்ணி வைக்குறோம். அத விட்டுட்டு வேணாம்னு அடம்பிடிக்குற. உண்மைய சொல்லு. என் கிட்ட எதையாவது மறைக்குறியா?” என்று அறிவுரையாக ஆரம்பித்தவன் சந்தேகமாக முடிக்க ஒரு நிமிடம் தடுமாறியவள், “நான் ஏன்டா மறைக்க போறேன். எனக்கு ஒரு பயம். அம்மா, அப்பா, நீ, ஸ்வரண், இல்லாம எப்படி வாழுறதுனு” என்று வாய்க்கு வந்ததை உளறி வைத்தாள்.

“பயப்படாதகா. அப்பா எப்படி அம்மா மேல உயிரயே வச்சு இருக்கார். அது போல அத்தான் உன் மேல உயிரையே வைப்பார் “

‘ஆமா வச்சுட்டாலும் அவனுக்கு என்ன பிடிக்குறதே பெருசு. இதுல லவ் வேற’ என்று மனதில் நினைத்தவள், பதில் பேசவில்லை.

“உன் பயத்தை எல்லாம் அம்மா கிட்ட சொல்லு. அவங்க தான் உனக்கு பெஸ்ட் கைட். நானும் சின்ன பையன் தான். அம்மா கூட வேணாம். பாட்டி கிட்ட பேசு பேசுறியா?” என்று கேட்க சம்மதம் தெரிவித்தாள்.

அதன் பின் அவள் சிரிக்கும் வரை பேசி விட்டு தான் அழைப்பை துண்டித்தான். பாட்டியிடம் எல்லாவற்றையும் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் தான் நல்ல முறையில் அறிவுரை கூற முடியும் என்று புரிந்து கொண்டு அவரிடம் சென்றாள்.

அவளது பயத்தை போக்கி தெளிவை கொடுத்தார் லோகேஸ்வரி. அப்போது தான் முடிவெடுத்தாள். செழியனிடம் பேசி அவனை பற்றி தெரிந்து கொண்டால் வாழ்க்கை சுலபமாக செல்ல வாய்ப்பு உள்ளது என்று. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் எதற்கு?

அந்த முடிவின் படி அடிக்கடி பேசிக் கொண்டனர். நந்தனுக்கும் இது தெரியும். அக்கா வாழ்க்கையின் புது மகிழ்ச்சியை எண்ணி அவன் பூரிக்க, விதி அவனை கதிகலங்க வைக்கும் என்று யார் அறிவார்?

Leave a Reply