Episode 10

Loading

“ரகு…” என்று அந்த வீடே அலறும்படி அஸ்வினி கத்த, அவன் வீட்டில் இருந்தால் தானே? வெளியே ஓடி தோட்டத்தில் அமர்ந்து கொண்டான்.

“என்ன அஸ்வினி?” என்று கேட்டபடி யுவா வர, “இங்க பாருங்க க்கா” என்று அறையை காட்டினாள்.

அறை அத்தனை அலங்கோலமாக இருந்தது.

“ஏய் என்ன இது?” என்று கேட்கும் போதே யுவாவிற்கு சிரிப்பு வந்தது. நிச்சயமாக ரகு செய்த வேலை தான்.

“உங்க கொழுந்து பண்ண கூத்து. எங்க அவன்?” என்று கேட்டு பல்லை கடித்தாள்.

“தெரியல.. ஓடிட்டான்” என்ற யுவா சிரித்தபடி வேலை செய்பவரை அழைத்தாள்.

பத்து நிமிடங்கள் அவனது மகன் ஆனந்தராமை பார்த்துக் கொள்ள சொன்னதன் விளைவு. தரையெல்லாம் பால் கொட்டி, குழந்தையின் துணிகளும், விளையாட்டுப் பொருட்களும் சிதறிக் கிடந்தது. ரகுவின் காதை பிடித்து ராம் உள்ளே இழுத்து வந்தான்.

“என்ன டா இது? உன்னால அஸ்வினிக்கு இப்போ வேலை அதிகமாகிடுச்சு” என்று ராம் கண்டிக்க, அஸ்வினி முறைத்து பார்த்தாள்.

“அறிவிருக்கா?” என்று அஸ்வினி திட்ட, “ஏன் உனக்கு வேணுமா?” என்று கேட்டு வைத்தான்.

“உன் கிட்டயே இல்ல.. இதுல தானம் பண்ணுறானாம்” என்று திருப்பிக் கொடுத்தாள் அஸ்வினி.

ராம் யுவா இருவருமே சிரித்து விட்டனர்.

“என்ன கொழுந்து இப்படி பண்ணி வச்சிருக்க?” என்று யுவா கேட்க, முகத்தை சோகமாக வைத்தவன், “ஆனந்த கையில கொடுத்துட்டு ஃபோன் பேச போயிட்டா அண்ணி. அவன் திடீர்னு அழ ஆரம்பிச்சுட்டான். விளையாட்டு காட்டலாம் இத எடுத்தேன். அழுக நிக்கல. சரி பாசிக்குதோனு பால எடுத்தேன். குடிக்காம தட்டி விட்டுட்டான். டிரஸ்ல கொட்டுனத பார்த்தா கத்துவானு ட்ரைஸ்ஸ எடுத்தேன். இப்படி ஆகிடுச்சு” என்று சொல்லி முடித்தான்.

“ஒரு புள்ளைய பத்து நிமிசம் சமாளிக்க முடியலயாடா உனக்கு” என்று அஸ்வினி கடுப்பாக கேட்க, “இவ்வளவு மோசமா இருக்கியே தம்பி பா…ப்பா….” என்று ராம் கிண்டலடித்தான்.

“பாப்பானு சொல்லாதீங்க அண்ணா. இப்போ ரெண்டு பிள்ளைக்கு தகப்பன் நான்” என்று ரகு முறைக்க, “இரு… யுவன்…” என்று ராம் திரும்பி குரல் கொடுத்தான்.

ராமை நோக்கி ஓடி வந்த யுவன், “ப்..ப்பா… சிப்பாப்பா” என்றான் ராமையும் ரகுவையும் பார்த்து.

சட்டென அவனை கையில் துக்கியவன், “அடேய் மகனே… உங்கப்பா கூப்பிடுறது பத்தாதா? நீ வேற உன் பங்குக்கு பாப்பானு கூப்பிடுறியே” என்று கேட்டபடி, யுவனை தூக்கி போட்டு பிடித்தான்.

எல்லோரும் சிரித்து விட்டனர். அடுத்த இருபது நிமிடத்தில் சென்னை நோக்கி புறப்பட்டு விட்டனர். செழியனின் திருமணத்தில் கலந்து கொள்ள!

அங்கு சென்றதும் யுவன், “மாமா மாமா”என்று செழியனோடு ஒட்டிக் கொண்டான்.

ரகு அவனை தனியாக பிடித்து, “அப்புறம் சாமியாரு சம்சாரியாக போறீங்க. ட்ரீட் எல்லாம் இல்லையா?” என்று கேட்டு கிண்டலடிக்க, “ஏன் டா நீ வேற?” என்று கேட்டவன் முகத்தில் சின்னதாய் வெட்கம்.

“பாருடா வெட்கத்த!!! சரி தங்கச்சி வீட்டுல எல்லாம் ஓகே வா?” என்று கேட்க ராம் வந்து சேர்ந்தான். இருவரும் சில நிமிடங்கள் அவனை போட்டு வறுத்தெடுத்தது விட்டனர்.

“எப்பா சாமி ஆள விடுங்க?” என்று அவன் கெஞ்ச, “அதெப்புடி விடுறது” என்று ரகு பிடித்துக் கொண்டான்.

“என்னை விடுங்க பா. உங்க அடுத்த ப்ளான் என்ன? அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ஆளுக்கொரு மகன உங்கள மாதிரியே பெத்து இருக்கீங்க.. ஒரு மருமகள பெக்குறது?”

“நீ முதல்ல எங்க மகனுங்களுக்கு மருமகள பெத்து கொடு. அப்புறம் நாங்க பார்க்குறோம்” என்று ராம் அவன் பக்கமே அம்பை திருப்பி விட்டான்.

“தெய்வமே.. பச்ச பிள்ளைய எவ்வளவு தான் அழ விடுவீங்க? விட்ருங்க” என்றான் அழும் குரலில்.

அவர்களது சிரிப்பு கும்மாளம் நாட்களை வேகமாக கடத்திவிட, திருமண நாளும் வந்து சேர்ந்தது.

திருமணம்.. பலருக்கு பல கனவுகளை அள்ளி கொடுக்கும். புதுவித எதிர் பார்ப்பு சந்தோசம் என மணமக்கள் பூரித்து இருக்க வேண்டிய நேரத்தில், சுலோக்ஷனா நகத்தை கடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். திருமணத்திற்கு முதல் நாள் விஜயநந்தன் வந்து சேர்ந்தான். அந்த சந்தோசம் கூட அவளது முகத்தில் இல்லை. நேற்று வந்த மிரட்டல் அப்படி.

மூன்று நாளுக்கு முன்னால் தான் ஒரு பெரிய தொழிலதிபரின் கருப்புப் பக்கம் இவளது கைகளில் சிக்கியது. அதைப் பற்றித் தெரிந்த ஆட்கள் சிலரே. இருந்தும் அந்த தொழிலதிபனுக்கு விசயம் தெரிந்து விட்டது.

ஆதாரம் சுலோக்ஷனா கையில் இருந்ததால் தப்பியது. காரணம் ஆதாரத்தை கொடுத்தவன் இப்போது மண்ணுக்குள். விசயம் தெரிந்து அவனைக் கொன்று விட்டனர். இதை கேள்விப்பட்ட சுலோக்ஷனாவிற்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது.

சும்மா இல்லை. கிட்டதட்ட பலகோடி கருப்பு பணத்தை வெள்ளையாக்கி கொண்டிருக்கிறான். மேலும் போதை மருந்து, போலி மருந்து போன்ற விசயங்கள் அவன் பார்வைக்குள் தான் இந்தியா வந்து சேருகிறது.

இப்படிப் பட்டவனை சும்மா விடமுடியாது என்று சுலோக்ஷனா முடிவெடுத்தாள். அவனிடம் வேலை பார்த்த ஒருவனை எதோ ஒரு இடத்தில் அவமானப்படுத்தி இருக்கிறான். அதை மனதில் வைத்து தான், ஆதாரங்களை திரட்டி சுலோக்ஷனாவிடம் ஒப்படைத்து விட்டான்.

நேற்று அந்த தொழிலதிபனே அழைப்பு விடுத்தான்.

“ஹலோ மேடம்.” என்று ஆரம்பிக்க, “யார் நீஙக?” என்று கேட்டாள்.

“என்னை தெரியலையா? நான் தான் மேடம் தீனா” என்று சொன்னதுமே அவளுக்கு புரிந்து விட்டது.

“இவன் எதுக்கு நமக்கு ஃபோன் பண்ணி இருக்கான்னு யோசிக்குறீங்களா? என்ன பண்ண துரோகிங்கள வளர்த்து விட்டுட்டேன். அதுல ஒன்னு தீட்டின மரத்துலையே பதம் பார்த்துடுச்சு. சரி அத விடுங்க. உங்க கிட்ட என்ன ஆதாரம் எல்லாம் இருக்கு? அத சொல்லுங்க”

சுலோக்ஷனாவிற்கு நம்ப முடியவில்லை. தவறான தொழிலை செய்பவன், நிச்சயமாக ஒரு நாற்பது வயதை தாண்டியவனாக இருப்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் பேசுபவனின் குரலை கேட்டால் முப்பதை கூட தொட்டிருக்க மாட்டான் போலவே?

“ஆதாரமா? எந்த ஆதாரம்?”

“ஹா ஹா. நல்ல நடிப்பு. உங்க தொழில் பத்திரிக்கையில எழுதுறதுனு நினைச்சேன். நடிப்பா?” என்று கேட்டு அவளது கோபத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவனுக்கு, பெருத்த ஏமாற்றத்தை தந்தாள் சுலோக்ஷனா.

“சார். முதல்ல நீங்க யாருனு கேட்டேன் அதுக்கு பதில் சொல்லுங்க சார்.” என்றாள் எரிச்சல் மறையாத குரலில்.

இவன் தான் ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டான். பொறுமையை வரவைத்துக் கொண்டு, “அதான் சொன்னனே மேடம் தீனானு” என்றான்.

“ஓ.. நீங்க தான அந்த அஜீத்? சூப்பர் சார். எவ்வளவு பெரிய ஆக்டர் நீங்க? எனக்கு ஃபோன் பண்ணி இருக்கிங்க” என்று நக்கல் தொனியில் பேச, தீனாவிற்கு ஏகபோக கடுப்பு.

சுலோக்ஷனா பேசியதில் பல்லை கடித்தவன், “ஏய் என்ன விளையாடுறியா?” என்று எகிறினான்.

“பின்ன பேர சொன்னதும் தெரிஞ்சுக்க நீங்க என்ன பி.எம் ஆ? ஏன் சார் இப்படி ஃபோன போட்டு புரியாமலே பேசுறீங்க” என்று சலித்த குரலில் கூற, அவன் தான் குழம்பி போனான்.

உண்மையில் அவளுக்கு தெரியவில்லையோ? என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டான்.

“என்ன மிஸ். நிவி ஒன்னும் தெரியாத போல பேசிட்டா தப்பிச்சுடலாம்னு பார்க்குறீங்களா? அந்த எவிடன்ஸ் எல்லாமே நாளைக்குள்ள என் கைக்கு வரனும். இல்லனா கல்யாண மாப்பிள்ளைக்கு வாங்குன மாலை… புரியும்னு நினைக்குறேன்” என்று முடித்தவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

சுலோக்ஷனா கைபேசியை ரொம்ப நேரமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை திருமணம் செய்பவன் ஒன்றும் சாதாரணமானவன் அல்ல. யாரும் அவன் நிழலை கூட நெருங்க முடியாது. ஆனாலும் இவனது மிரட்டல் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் விசயமில்லை.

இதை செழியனிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தாள். சொன்னால் இன்னும் ஜாக்கிரதையாக இருப்பான் என்று தோன்ற, அழைத்து விட்டாள். இரண்டு ரிங் போகும் போதே யாரோ அறைக்குள் வர, பட்டென அணைத்து விட்டாள்.

அழைப்பை எடுப்பதற்குள் அவளே துண்டித்ததை பார்த்தவன், திரும்ப அழைக்கவில்லை. நிச்சயமாக யாராவது அவளுடன் இருக்க வேண்டும் என்று யூகித்தவன் குறுஞ்செய்தியை தட்டி விட்டான்.

அது சென்று பத்து நிமிடமாகியும் சுலோக்ஷனா பார்க்கவில்லை. அவனது எண்ணம் சரி என்று உறுதியாக தெரிய, மீண்டும் ஒரு செய்தியை தட்டி விட்டு வைத்தான்.

அதை ஒரு மணி நேரம் கழித்து பார்த்தவள், தற்போதைக்கு அழைக்க முடியாது என்று தோன்ற விசயத்தை மளமளவென செய்தியாக அனுப்பி வைத்தாள். “நான் பார்த்துக்கிறேன்” என்று மட்டுமே பதில் வந்தது.

அதன் பின் பேசவில்லை. இப்போது அதை நினைத்து பதட்டமாக இருக்க, சுற்றி இருக்கும் தோழிகளுக்கு தான் கடுப்பானது.

“ஏன் டி நீ எல்லாம் ஏன் கல்யாணம் பண்ணிக்குற? மூஞ்சிய பாரு உர்னு. நிச்சயத்தப்போ தம்பிய நினைச்சு ஃபீல் பண்ண. இப்போ தான் அவனும் இருக்கானே. அப்புறம் என்ன?” என்று கேட்டு அவள் தோளில் தட்டி முறைத்தாள் ஒருத்தி.

“ப்ச்ச் படுத்தாதீங்க எருமைங்களா. அவன் அவன் கஷ்டம் அவனுக்கு தான் புரியும்”

“ஆனா உன்னை கட்டிக்கிட்டு எங்க அண்ணன் படப்போற கஷ்டம் எங்களுக்கு இப்போவே நல்லா புரிஞ்சுடுச்சு”

“பெரிய நொண்ணன்” என்று முறைத்து பார்த்தாள்.

“என்ன தான் இவளுக்கு பிரச்சனையோ” என்று அவர்கள் சலித்துக் கொண்டு சென்று விட்டனர்.

இவள் நிலைமையை விட செழியனின் நிலைமைபடுமோசமாக இருந்தது. அவன் சீப்பை கையில் எடுத்தால், “மாப்பிள்ளையா லட்சணமா உட்காருடா.. நாங்க சீவி விடுறோம்” என்று ரகு பிடுங்கிக் கொண்டான்.

வேட்டி சட்டையை மாற்றிக் கொண்டு வர குளியலறைக்குள் போக, “டேய் நாங்க கட்டி விடுறோம்டா” என்று அதற்கும் மல்லுக்கு நின்றனர்.

முறைத்து பார்த்தவன், “ஏன் குளிக்கும் போது முதுகு தேய்ச்சு விடேன்” என்றான் காரமாக.

“ஐ.. அதுக்கு என் தங்கச்சில வரனும்.”

“அய்யோ படுத்துறானே… அத்தான் இதெல்லாம் ஏன்னு கேட்க மாட்டீங்களா?” என்று ராமை துணைக்கு அழைத்தான்.

கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டு இருந்த ராம் நிமிர்ந்து, “அதான? என்னடா இப்போ பிரச்சனை? அவன் வேட்டி கட்டிட்டு வரட்டும். வந்ததும் நீ அவுத்து திரும்ப கட்டு. அவ்வளவு தான?” என்று ரகுவைப் பார்த்துக் கேட்டு வைத்தான்.

“ஹய்யய்யோ” என்று செழியன் குளியலறைக்குள் ஓடி கதவை அடைக்க, வெளியில் எல்லோரும் சிரித்தனர்.

ஒருவழியாக அடித்து பிடித்து தயாராகி மணமேடையில் வந்து அமர்ந்து விட்டான். முகூர்த்த பட்டை கட்டி கொண்டு செழியன் பக்கத்தில் வந்து அமர்ந்த சுலோக்ஷனா லேசாக கண்ணை மட்டும் திருப்பிப் பார்த்தாள்.

பட்டு வேட்டி சட்டையில், கழுத்தில் மாலையுடன் அமர்ந்து இருந்த செழியனும் பக்கத்தில் அமர்ந்து இருந்தவளை தான் ஓரகண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் தங்களது இணையின் அழகை கண்டு வாயடைத்துப் போயிருந்தனர்.

சுலோக்ஷனாவிற்கு அவளையும் மீறி வெட்கத்தில் முகம் சிவந்தது. வேண்டுமென்றே அவளை உரசியபடி செழியன் சடங்குகளை செய்து கொண்டிருந்தான். உடலில் பரவிய வெப்பம் புது உணர்வில் தள்ளி இருக்க, அவளால் நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை.

அவளது முகத்தில் இருந்த சந்தோசம் நந்தனை சாந்தப்படுத்தியது. அவளிடம் வந்ததிலிருந்து சரியாக பேச முடியவில்லை. மணப்பெண் என்று அவளை சுற்றி கூட்டம் இருக்க, விஜயநந்தனுக்கும் தந்தைக்கு உதவ வேண்டி இருந்தது.

இப்போது நேரடியாக அவளது சந்தோசத்தை பார்த்து விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்.

சுற்றியிருப்போர் அட்சதை தூவ, பொன் தாலியை செழியன் சுலோக்ஷனாவின் கழுத்தில் அணிவித்து, மூன்று முடிச்சும் போட்டு முடித்தான். சுலோக்ஷனாவிற்கு உள்ளம் படபடத்தது.

தன்னையும் மீறி, இனி வாழ்க்கை எப்படி இருக்குமோ? என்கிற பயம். அதையும் தாண்டி, எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு. எல்லாம் கலந்த உணர்வில், என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

குங்குமத்தை வைக்கும் போது அவனது விரல் பட்ட இடம் குறுகுறுத்தது. கண்ணை மூடி ஏற்றுக் கொண்டாள். அக்னியை வலம் வந்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணத்தை முடித்தனர்.

எல்லோர் காலிலும் விழுந்து எழுந்திரிக்க, முதுகு ஒடிந்து கையில் வந்துவிடும் போல் இருந்தது. வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். விளக்கேற்றி முடித்து விளையாட்டுக்கள் ஆரம்பமாகின.

பெண்கள் எல்லோரும் செழியன் பக்கம் சென்று விட, ஆண்கள் எல்லோரும் சுலோக்ஷனாவின் பக்கம். சோர்ந்து கலைத்திருந்த போதும் இருவரும் போட்டியை விட வில்லை.

விளையாடி முடிக்கும் போது, சோர்வையும் மீறிய ஒரு உற்சாகம் பிறந்து இருந்தது.

எல்லோரும் சுலோக்ஷனாவை விட்டு விட்டு, மறுவீட்டிற்கு அழைத்து விட்டு கிளம்பினர். சுலோக்ஷனா கண்கலங்கி நிற்க, நந்தனுக்கும் எதோ தொண்டையில் அடைத்தது. அவளை அணைத்துக் கொண்டவன், “பத்தரமா இருக்கா” என்றான்.

அவனை போல் ஸ்வரண் உணர்வுகளை கட்டுப் படுத்தவில்லை. அழுதே விட்டான். அவனையும் ஜானவியையும் சமாதானம் செய்து அழைத்துச் சென்று காரில் அமர்த்த, நித்தின் மகளை அணைத்து விடுத்தான். கலங்கிய கண்ணை புன்னகை கொண்டு மறைத்து விட்டு விடை பெற்றுக் கிளம்பினர். கார் மறையும் வரையிலும் பார்த்துக் கொண்டிருந்தவளை செழியன் தோளோடு அணைக்க, அவளையும் மீறி அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

2 Comments

Leave a Reply