சித்திரமே சிதைவதேனோ (prologue)

Loading

“இதெல்லாம் கதையா? டைம் வேஸ்ட் மணி வேஸ்ட்”

“அது ஏன்டா அரைச்ச மாவவே அரைக்கிறீங்க? ஆன்டி ஹீரோனா வேற சப்ஜெக்ட்டே இல்லையா? டிஸ்கஸ்டிங்”

“வாவ்.. கெத்து ஹீரோ.. இது போல கதைய நிறைய எழுதுங்க ரைட்டர்”

“இந்த ஹீரோயின் ஏன் பைத்தியமா இருக்கா? பழி வாங்குனவன் மேல லவ் வர்ர கான்சப்ட்ட விடவே மாட்டிங்களா ரைட்டர்? புதுசா எதையாவது யோசிங்க ப்ளீஸ்”

“ஏன் தான் படிச்சேனோனு வருத்தப்பட வைக்கிறீங்க ரைட்டர். உங்க கதைனு நம்பி வந்தது தப்பா போச்சே…….”

“ஓய்.. சீக்கிரமே வந்துட்டியா?” என்று கேட்டுக் கொண்டே முன்னால் அமர்ந்த தோழியின் பேச்சில், ஆன்லைன் கருத்துக்களை வாசிப்பதை விட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன பார்த்துட்டு இருக்க இவ்வளவு ஆர்வமா?”

“ஸ்டோரிக்கு வந்த கமெண்ட்ஸ்”

“உன் ஸ்டோரிக்கா? இங்க கொடு” என்று ஆர்வமாக வாங்கியவளிடம் கைபேசியை கொடுத்து விட்டு, ஆரஞ்சு பழச்சாறை ஒரு மிடறு விழுங்கினாள் அவள்.

அது ஒரு ரெஸ்டாரன்ட். தோழியோடு மாலை சிற்றுண்டியாக எதையாவது வாயில் போட்டு கொறித்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அதற்கு தான் இன்றும் வந்திருந்தார்கள்.

“அதெப்புடிடா? இரக்கமே இல்லாம அவள நாசமாக்கிட்டு போயிடுவான். ஆனா பிள்ளை இருக்குனு தெரிஞ்சதும் திருந்திடுவானாம். எங்க இருந்துடா இந்த கான்சப்ட்ட பிடிக்கிறீங்க?”

“இதுல ஹீரோயின எனக்கு பிடிக்கல. அதான் அவன் சாரி கேட்டு கெஞ்சுறானே.. ஓவரா ஆட்டிட்டியூட் காட்டுறா. ஹீரோ பாவம்”

“நல்ல காதல் கதை. நிறைய எழுத வாழ்த்துக்கள்”

“நைஸ்”

“வொர்ஸ்ட்”

“தேவை இல்லாத பார்ட் சில கட் பண்ணா கதை கொஞ்சம் ஓகே”

கருத்துக்களை எல்லாம் படித்தவள், “என்ன இவ்வளவு நெகடிவ் கமெண்ட்?” என்று அதிர்ந்து போனாள்.

முன்னால் இருந்தவள் சிரிக்க, “ஹேய் என்ன சிரிக்கிற?” என்று அதட்டினாள்‌.

“வேற என்ன பண்ண?

“இது உன் கதைக்கு வந்த கமெண்ட்ஸா?”

“இல்ல”

“அதான பார்த்தேன். வெண்பனி கதைக்கு போய் இப்படி கமெண்ட்டானு சாக் ஆகிட்டேன்”

வெண்பனி இதைக்கேட்டு அமைதியாக புன்னகைத்தாள். வெண்பனி அவளது உண்மைப்பெயரல்ல. புனைப்பெயர். கதைகளுக்காக அவள் வைத்துக் கொண்ட பெயர்.

“இத ஏன் படிச்சுட்டு இருக்க?”

“சும்மா”

“இந்த கதைய படிச்சியா?”

“ம்ம்..”

“எப்படி இருந்தது?”

“நோ கமண்ட்ஸ்” என்று வெண்பனி புன்னகைக்க, தோழி சலித்துக் கொண்டாள்.

“ஸ்னோ.. இருந்தாலும் நீ பண்ணுறது ஓவர். நீ எழுத ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி, ஒரு கதை படிச்சா அத பத்தி நிறைய பேசுவ. இப்பலாம் எந்த கதை படிச்சாலும் எதையும் சொல்ல மாட்டேங்குற”

“உனக்கு தெரிஞ்சது எல்லாம் கதை படிக்கிறதும் கமெண்ட் பண்ணுறதும் தான். இதுக்குள்ள எவ்வளவு பாலிடிக்ஸ் இருக்கு தெரியுமா?”

“பெரிய பாலிடிக்ஸ். நல்லா இருக்கு இல்லனு சொல்லுறது குத்தமா?”

“நல்லா இருக்குனு சொன்னா ஜால்ரானு சொல்லுவாங்க. நல்லா இல்லனு சொன்னா பொறாமைனு சொல்லுவாங்க. ஒரு ரைட்டரா இதெல்லாம் யோசிச்சுட்டு தான் பேசவே முடியும். விடுடா. இந்த பிரச்சனை எல்லாம் உனக்கு வேணாம். நீ எதாவது ஆர்டர் பண்ணு சாப்பிடலாம்” என்று முடித்து விட்டாள் வெண்பனி.

உணவுகளை ஆர்டர் கொடுத்து அது மேசையில் வந்து சேரும் வரை, அந்த கதையின் கருத்துக்களை பொறுமையாக வெண்பனி படித்துக் கொண்டிருக்க, அவளது தோழி தன் கைபேசியில் மூழ்கி இருந்தாள்.

உணவுகள் வந்ததுமே இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

“ஸ்னோ.. அடுத்த கதை எப்போ எழுதுவ? இங்க பாரு.. ஆளாளுக்கு உன் கதை எப்போ வரும்னு தான் கேட்குறாங்க” என்று தன் கைபேசியை காட்டினாள்.

“அடுத்த மாசம் ஆரம்பிக்கிற ஐடியால இருக்கேன்”

“நிஜம்மாவா? அப்போ எனக்கு முதல்ல அனுப்பிட்டு போஸ்ட் பண்ணுவியா?”

“மாட்டேன். கதை சர்ப்ரைஸ்”

“ஹேய்.. என்ன ஜனர் கதை?”

“அத அப்லோட் ஆகும் போது படி. இப்ப சாப்பிட்டு கிளம்புவோம். மழை வர்ர மாதிரி இருக்கு” என்று பேச்சை திசை திருப்பினாள்.

_________

கண்ணை திறந்த மித்ரா, முதலில் சற்று குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை. தன்னைத்தானே குனிந்து பார்த்தாள். நன்றாகவே தெரிந்தது. இருட்டு அறையில் அவளுக்கு மட்டும் “ஸ்பாட் லைட்” போட்டது போன்று இருந்தது.

“இது என்ன இடம்?” என்று அவள் குழம்பி நிற்க, “ஹாய்” என்று வந்தாள் வெண்பனி.

“ஹாய் மித்ரா. என்னை தெரியுதா?”

“உன்னை மறப்பனா? என்னை கொலை பண்ண வெண்பனி தான நீ?”

மித்ரா எரிச்சலோடு கேட்க, வெண்பனி சிரித்து விட்டாள்.

“நான் உன்னை கொல்லல மித்ரா. அது கதையில நடந்த ஆக்ஸிடென்ட்”

“கடுப்ப கிளப்பாத. எப்படியும் ஹீரோ ஹீரோயின்னு அவங்கள தான் சேர்த்து வைப்பனா, முன்னாடியே என் கிட்ட சொல்லிருக்கலாம்ல? அதுங்க எக்கேடோ கெட்டுப்போகட்டும்னு நான் போயிருப்பேன்”

“நீ தான் ஹீரோ மேல உயிரயே வச்சுருந்தியே”

“அது நீ போட்ட ப்ளாட். நானா ஆசை பட்டு ஒன்னும் அந்த லூசு மேல லவ்வ வைக்கல. சாகுற வரை அது ஒரு கதைனே தெரியாம, உன் இஷ்டத்துக்கு ஆடி செத்து போய்ட்டேன். அப்புறம் அந்த இருட்டு ரூம்க்குள்ள கிடந்தேன். இப்ப இங்க நிக்கிறேன். ஆமா இது என்ன இடம்?”

“என்னோட மனசுனு சொல்லலாம்”

“உன் மனசுக்குள்ளயா நாம இருக்கோம்? அது எப்படி முடியும்?”

“நான் மனசுல உருவாக்குன கதாபாத்திரம் தான் நீ. அப்ப இங்க தான இருப்ப?”

“ஓ..”

“சரி விடு. இப்ப உன்னை வேற ஒரு கதையில போட போறேன். அதுக்கு தான் கூப்பிட்டேன்”

“இன்னொரு கதையா? மறுபடியும் கொல்லுறதுக்கா? நான் அந்த இருட்டு ரூம்ல தூங்குறேன் ஆள விடு”

“நில்லு மித்ரா.. முதல்ல சொல்லுறத கேளு. நான் எழுதுன அந்த கதையில நீ வில்லி. உன் நெகடிவ் குணாதிசயங்கள் ஓட ஹீரோவ லவ் பண்ணுற மாதிரி எழுதினேன். அதுல ஹீரோ எப்பவும் ஹீரோயினுக்கு தான்னு உன்னை கொல்ல வேண்டியதா போச்சு. ஆனா உன்னை எனக்கு பிடிக்கும். நான் உருவாக்குன கேரக்டர்ல ரொம்ப பிடிச்ச வில்லி நீ தான். அதான் அடுத்த கதைக்கு உன்னை சூஸ் பண்ணேன்.”

“பிடிச்சதால தான் கொன்னியா?”

“அது கொலை இல்லமா.. நீயும் ரீடர்ஸ் மாதிரியே பேசுறியே. நான் கொல்லல. கதை ப்ளாட் அப்படி”

“எனக்கு ஒன்னும் புரியல போ”

“இதுக்கு மேல நாம பேசனும்னா நீ கதை உலகத்த பத்தி முழுசா தெரிஞ்சுக்கனும். இங்க நிறைய புத்தகங்கள் இருக்கும். எடுத்து படி. கதை உலகத்த தெரிஞ்சுக்க. நான் அப்புறமா வர்ரேன்”

“இங்க இருட்டா இருக்கே. புக் எங்க இருக்கு?”

மித்ராவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் வெண்பனி மறைந்து போக, மித்ராவின் இடப்பக்கம் பளிச்சென வெளிச்சம் தோன்றியது. திரும்பிப் பார்த்தாள். அங்கு பல புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

“இத படிச்சே ஆகனுமா? என்னடா இது உலகம்?” என்று தலையை தேய்த்துக் கொண்டு, அந்த புத்தகங்களின் அருகே சென்றாள்.

“இது அவ மனசாம். அப்ப வெண்பனி புத்தகமும் இருக்குமோ?” என்று தேட எதுவுமே இல்லை.

மற்ற புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள். பாதிக்கும் மேல் படித்துக் கொண்டிருக்க, மீண்டும் வெண்பனி வந்தாள்.

“என்ன பாதி படிச்சாச்சா? இப்ப கதைகள பத்தி புரிஞ்சுருக்குமே?”

வெண்பனி புன்னகையுடன் அவளருகே வந்து அமர, மித்ரா புத்தகத்தை மூடி வைத்தாள்.

“ஓரளவு புரிஞ்சது. ஆனா ஒரு விசயம் தெளிவா தெரிஞ்சது. ரைட்டருக்கு எல்லாம் இரக்கமே கிடையாது. எவ்வளவு கொடுமை படுத்துறாங்க. அதுவும் வில்லன் வில்லிய போட்டுத்தள்ளிடுறாங்க. இவ்வளவு கொடூரமா ரைட்டர்ஸ் எல்லாரும்?”

வெண்பனி இதைக்கேட்டு வாய் விட்டு சிரிக்க, “சிரிக்காத. நீயும் ரைட்டர் தான. இப்படி தான் இருப்ப” என்று பொறிந்தாள்.

“நீ என்னை புரிஞ்சுக்குறதுக்கு தான் கதைய படிக்கவே சொன்னது. இப்பவும் கோபப்பட்டா எப்படி?”

“அதான நிஜம்?”

“ப்ச்ச்.. சரி இத விடு. இப்ப நான் எதுக்காக உன்னை கூப்பிட்டேன்னு சொல்லுறேன்”

மித்ரா, “சொல்” என்பது போல் பார்க்க, “உன்னை வேற ஒரு கதையில போடப்போறேன்” என்றாள் வெண்பனி.

“பார்ட் டூ வா?”

“நீ முதல்ல இருந்த கதையோட பார்ட் டூ இல்ல இது. இது வேற கதை. இது ஏற்கனவே நான் எழுதி முடிச்சுட்டேன். ஆனா அதுல இருந்த ஹீரோயின எனக்கு பிடிக்கல. அதுனால ஹீரோயின தூக்கிட்டு உன்னை ஹீரோயினா போட்டு ஃபேன்டஸி கதை எழுத போறேன்”

“நான் ஹீரோயினா போறதால என்ன மாறிடும்?”

“நீ ஹீரோயினா இருப்ப. முக்கியமா சாக மாட்ட. இது போதாதா?” என்று வெண்பனி சிரிக்க, மித்ரா முறைத்து வைத்தாள்.

“கிண்டலா?”

“சரி நான் என்ன செய்யப்போறேன்னு சொல்லுறேன். நீ ஹீரோயினா அங்க இருப்ப. ஆனா அது உனக்கு கதை உலகம்னு தெரியும். நீ உன் இஷ்டப்படி பேசலாம் நடக்கலாம். என்னவேணா செய்யலாம். நான் உன்னை கண்ட்ரோல் பண்ண மாட்டேன்.

நீ சொன்னியே.. நான் ஹீரோவ லவ் பண்ணுற மாதிரி உனக்கு கேரக்டர் செட் பண்ணிட்டேன்னு. அது இந்த கதையில இருக்காது. உன் இஷ்டத்துக்கு இருக்கலாம். சில ரெஸ்பான்ஸிபிலிட்டி தவிர எல்லாமே உன் முடிவு தான்.

அண்ட்.. நீ சொன்ன மாதிரி அது கதை உலகம்னு உனக்கு நல்லா தெரியும். முதல் கதை மாதிரி எதுவுமே தெரியாம என் விருப்பத்துக்கு நீ வளைய தேவை இல்ல.”

“நல்லா இருக்கே ஐடியா. அப்புறம்?”

“நீ அங்க எப்படி எல்லாம் நடந்துக்கிறியோ நினைக்கிறியோ அதெல்லாம் நான் கதையா எழுதுவேன். சிம்பிள்”

“நான் நினைக்கிறது எப்படி உனக்கு தெரியும்?”

“இப்ப கதை படிக்கலையா? அதுல ஹீரோ ஹீரோயின் மைண்ட் வாய்ஸ் சேர்த்து தான எழுதி இருப்பாங்க”

“ஆமா ஆமா. அப்போ உங்களுக்கெல்லாம் மைண்ட் ரீடிங் தெரியுமா?”

“நீங்க எல்லாம் நாங்க உருவாக்குன கேரக்டர். நீங்க என்ன பண்ணாலும் எங்களுக்கு தெரியும். எங்க உலகத்துல கடவுள்னு ஒருத்தர் இருப்பார். எங்கள எல்லாம் படைச்சவர். நாங்க என்ன பண்ணாலும் என்ன நினைச்சாலும் அவருக்கு தெரிஞ்சுடும். அது போல தான் எங்களுக்கு நீங்க. சோ நீ நினைக்கிறத நான் எழுதிக்கிறேன். பிரச்சனை இல்ல”

“அப்போ என் இஷ்டத்துக்கு நடந்துக்கலாம். ஐம் ரெடி. இப்பவே ஆரம்பிக்கலாமா?”

“தாராளமா. நீ எப்ப நினைக்கிறியோ அப்போ ஆரம்பிச்சுடும். ஆனா ஒரு கண்டீஷன். எந்த காரணத்துக்காகவும் இது கதை உலகம்னு கதையில இருக்க மத்தவங்க கிட்ட நீ சொல்லக்கூடாது”

“ஏன்?”

“இதுக்கான பதில நான் பின்னாடி சொல்லுறேன். நீ சொல்லக்கூடாது. மீறி சொல்ல நினைச்சாலும் நான் விட மாட்டேன்”

“ஓகே. சொல்ல மாட்டேன்.”

“குட். நாளைக்கு ஆரம்பிக்கலாமா?”

“ஏன் இன்னைக்கு என்னவாம்?”

“தூங்கனும். பத்து நிமிசமா உன் கிட்ட பேசிட்டு இருக்கேன். டயர்டாகிட்டேன்”

“பத்து நிமிசமா? நான் அந்த கதைய படிக்கவே பல நாள் ஆச்சே”

“பல நாள் எல்லாம் ஆகல. வெறும் அஞ்சே செகண்ட் தான்‌. நான் போயிட்டு திரும்பி வந்தது அஞ்சு செகண்ட் தான். ஆனா உனக்கு அது பல நாள் ஆன மாதிரி தெரியுது”

“அடப்பாவி..! நான் மாங்கு மாங்குனு படிச்சதெல்லாம் வெறும் அஞ்சு செகண்ட்டா?”

“ஆமா. நான் நினைச்சா உன்னை இப்பவே மொத்த புத்தகத்தையும் தெரிஞ்சுக்கிட்ட மாதிரி மாத்த முடியும்”

மித்ரா அவளை சந்தேகமாக பார்க்க, “என்ன? இவ கதையில நம்மல அனுப்பிட்டு அவ இஷ்டத்துக்கே எழுதுவானு தோனுதா?” என்று வெண்பனி புன்னகைத்தாள்.

“ஆமா. பாரு இப்ப கூட என் மைண்ட்ட படிக்கிற. நீ மாத்திட்டா?”

“மாத்த மாட்டேன்னு சத்தியம் பண்ணுறேன். உன் வேலை நீ கதை உலகத்துல போய் ஹீரோயினுக்கு பதிலா வாழப்போற. அங்க ஹீரோயினுக்காக நியாயம் வாங்கிக் கொடுக்க போற. உன் வேலை முடிஞ்சதும் நீ கிளம்பிடுவ. அவ்வளவு தான்.”

“சரி ஃபேன்டஸி கதைனு சொன்னியே.. எந்த மாதிரி? இந்த ஹாரி பாட்டர் மாதிரியா? நான் ஹெர்மாயினி இல்ல ஜென்னி மாதிரி கேரக்டரா?”

“ஆசை ஓவரா இருக்குமா.. நான் எழுதப்போற ஃபேன்டஸி கதை… கதை உலகம்னு தெரிஞ்சு ஹீரோயினுக்கு பதிலா போன வில்லி என்னலாம் செய்யுறானு தான். இதுவே ஃபேன்டஸி தான். ஆனா கதை ரொம்ப சாதாரணம். ஆன்டி ஹீரோ கதை”

“வாவ்.. அப்ப ஸ்னேப் மாதிரி ஒரு ஆள் தான் ஹீரோவா?”

“உன்னை ஹாரி பாட்டர் படிக்க விட்டது தப்பா போச்சு. அந்த ஆன்டி ஹீரோ எல்லாம் வேற. இங்க இருக்கவன் வேற.”

“நீ கதையோட கொஞ்சத்த சொல்லு. அங்க போய் முழிக்காம இருப்பேன்ல?”

“அதெல்லாம் நீ அங்க போயிட்டாலே உனக்கு எல்லாம் புரிஞ்சுடும். இருந்தாலும் சொல்லுறேன். ஹீரோ ஹீரோயின் லவ் பண்ணுவாங்க. ஆனா ஹீரோ ஹீரோயின ஏமாத்திடுவான். ஹீரோயினோட அப்பாவ பழி வாங்க தான் உன்னை யூஸ் பண்ணேன்னு சொல்லி ஹீரோயின துரத்திடுவான். இப்ப ஹீரோயின்க்கு பிள்ளை இருக்கும். அது தெரிஞ்சு ஹீரோ திரும்ப வருவான் குழந்தைய கொடுனு கேட்பான். அங்க தான் கதை ஆரம்பிக்கும்”

“இவன் எல்லாம் ஒரு ஹீரோவா? பழி வாங்க ஏமாத்துனவனுக்கு பிள்ளை எதுக்கு? ஏய் இது தான பல கதையில வித்தியாச வித்தியாசமா வருது. அதையே தான் நீயும் எழுதி வச்சியா?”

“அதெல்லாம் பேசாத. ஹீரோ உன்னை ஐ மீன் அந்த ஹீரோயின ஏமாத்திட்டான். பிள்ளையையும் புடுங்கிட்டு போக வருவான். அந்த ஹீரோயின் அப்பாவி. ஏமாந்துட்டே இருப்பா. நீ சொல்லு எவவனாச்சும் உன்னை இப்படி ஏமாத்தி பிள்ளையோட விட்டா என்ன செய்வ?”

“நடுத்தெருவுல நிக்க வச்சு சூட் பண்ணிடுவேன். என் கன் இருந்தா நல்லா இருக்கும்”

“அதெல்லாம் அந்த கதையில தான் கன். இங்க நீ சுடவெல்லாம் முடியாது.”

“என்னவோ.. அந்த ஹீரோவ பார்த்தா நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்குறேன். லவ் பண்ணா கட்டிட்டு வாழுவானா.. ஏமாத்திருக்கான் ராஸ்கல். ஆமா.. ஹீரோயினோட அப்பா என்ன பண்ணான் அவன?”

“அத நீ அங்க போயி தெரிஞ்சுக்க. இது சிம்பிள் கதை தான். அத சுவரஸ்யமா மாத்த வேண்டியது உன் பொறுப்பு. நாளைக்கு பார்க்கலாம். நீ மிச்சம் இருக்க கதைய படிச்சுட்டு ரெடியாகு. பை”

வெண்பனி கையாட்டியபடி மறைந்து போக, மித்ரா அடுத்த புத்தகத்தை கையில் எடுத்தாள்.

தொடரும்.

Leave a Reply