சித்திரமே 1
![]()
ஐந்து மணி அலாரம் மெல்ல சத்தமெழுப்ப ஆரம்பிக்க, தூக்கம் கலைந்து கண்ணை திறந்தாள் சித்தாரா. அந்த அறையில் இருள் பாதி வெளிச்சம் பாதியாக இருக்க, சரியாக எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை.கண்ணை தேய்த்து விட்டபடி எழுந்து அமர்ந்தாள். சுற்றியும் பார்த்தவளுக்கு புரிந்து விட்டது.’ஓ கதை ஆரம்பிச்சுடுச்சா?’ என்று நினைத்துக் கொண்டே திரும்ப, அருகே சிறுவன் படுத்து இருந்தான். அவனது பொம்மை ஒன்று கிடக்க, அதன் மீது காலை போட்டுக் கொண்டு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.உடனே வெண்பனி சொன்ன எல்லாமே நினைவில் வந்தது. அவள் கதையின் நாயகி. அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.’என் பையன்!’ என்று நினைத்தவளுக்கு எதோ பிடித்து இருந்தது.அவனின் தலையை வருடி விட்டவள், எழுந்து வெளியே வந்தாள். வீட்டை நன்றாக பார்த்தாள். மிகச்சிறிய வீடு. ஒரு அறை மட்டுமே உள்ள சிறிய வீடாக இருந்தது.தான் முதலில் தோன்றிய கதையை நினைத்துப்பார்த்தாள். அதில் இருந்த பங்களாவும் ஏசியும் காரும் நினைவில் வர, சிரிப்பு வந்தது.’வில்லிக்கு தான் எல்லா வசதியும் போல. ஹீரோயின கஷ்டப்படுறவளா காட்டுறது எல்லாம் ஒரு டெம்ப்ளேட். அதையும் எத்தனை கதையில தான் யூஸ் பண்ணுவாங்களோ..’ என்று சலித்துக் கொண்டவள், தன்னைத்தானே குனிந்து பார்த்தாள்.சேலை தான் கட்டி இருந்தாள். அதுவும் சாதாரண சேலை.’ஏன் மார்டர்ன் ட்ரஸ் எல்லாம் ஹீரோயின் போடக்கூடாதா?’ என்று கடுப்பாக நினைத்தவள், உடனே அலமாரியை திறந்து சோதித்தாள்.முழுக்க முழுக்க சேலையும் சில சுடிதார்கள் மட்டுமே இருந்தது.’சுத்தம். அட்லீஸ்ட் சுடிதாராச்சும் வாங்கி வச்சாளே’ என்று முன்னாள் நாயகியை நினைத்து சலித்து விட்டு, சுடிதாரை எடுத்துக் கொண்டு குளித்து விட்டு வந்தாள்.இருள் சற்று விலக ஆரம்பிக்க, சமையலறைக்குள் நுழைந்தாள். அவளுக்கு சமைக்கத்தெரியாது. ஆனால் முன்னாள் நாயகிக்கு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.சமையலறை முழுவதும் பொருள்கள் இருக்க, சுற்றிசுற்றி ஒரு முறை பார்த்தாள்.”இந்த ப்ரட் ஜாம் எல்லாம் வாங்க மாட்டாளா? எல்லாம் அரிசி, பருப்பு, மிளகாய் பொடினு இருக்கே. இத வச்சு என்ன செய்யுறது?” என்று தலையை சொறிந்து கொண்டு, வேகமாக ஓடி தன் கைபேசியை எடுத்து வந்தாள்.அதை திறந்து, சமையல் வீடியோவை பார்த்தபடி சமைக்க ஆரம்பித்தவள் கை, தானாகவே வேலை செய்ய, குழம்பி விட்டாள்.”என்ன எல்லாம் தெரிஞ்ச மாதிரி கை தானாவே வேலை செய்யுது?” என்று தனக்குத்தானே கேட்டாலும், சமைத்து முடித்து விட்டாள்.மதிய உணவை முடித்து விட்டு, காலையில் சாப்பிட தோசை சுட்டு முடிக்க, மகன் எழுந்து வந்து விட்டான்.”ம்மா..” என்று தூக்கத்தோடு வந்து அவளது காலை கட்டிக் கொள்ள, ஒரு நிமிடம் சித்தாரா உறைந்து போனாள்.உடனே வேலையை போட்டு விட்டு, மகனை தூக்கிக் கொண்டாள்.அவள் முதலில் இருந்த கதையில், அவளுக்கு பாசம் காட்ட யாரும் இருந்தது இல்லை. நாயகனை கூட வெண்பனி எழுதியதால் காதலித்து இருந்தாள் அவ்வளவே. அவனும் அவள் மீது பாசம் காட்டியது இல்லை.இந்த கதையில் பாசம் காட்ட மகன் இருக்கிறான். நினைப்பே தித்திக்க, மகனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.”விது கண்ணா.. பல்லு விளக்கி குளிக்க போகலாமா?” என்று கேட்டுக் கொண்டே அடுப்பை அணைத்து விட்டு மகனோடு வந்தாள்.அவனோடு விளையாடிபடி அவனது வேலைகளை எல்லாம் ஆர்வமாகவே செய்தாள்.’இது தான் தாய்மை போலும். எல்லோரும் கதையின் கதாபாத்திரங்கள் என்று தெரிந்தும் அவன் மீது பாசத்தை வளர்க்கவே செய்தாள்’குளித்து முடித்து விது என்கிற விதார்த் பள்ளிக்கு தயாராக, சித்தாராவும் வேலைகளை முடித்து விட்டு, மகனுக்கு ஊட்டி தானும் சாப்பிட்டு முடித்தாள்.கூடவே யோசனைகளும் ஓடியது.’இங்க ஹீரோயின் என்ன செய்வா? எதாவது வேலைக்கு போவாளா? போய் தான் ஆகனும். என்ன வேலைனு தெரியலயே’ என்று யோசித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.விதார்த் பிரச்சனை எதுவும் செய்யாமல் சிரித்து கதை பேசியபடி சாப்பிட, அவளுக்கு இதமாக இருந்தது.சாப்பிட்டு முடித்து வீட்டை ஒதுக்கி வைத்து விட்டு, கைப்பையை எடுத்து ஆராய்ந்தாள்.அருகில் உள்ள ஒரு மில்லில் சூப்பிரவைசராக நாயகி வேலை பார்த்திருக்கிறாள்.’சித்தாரா.. இதான் என் பேரா? அது சரி. நல்லா இருக்கு.’ என்றவள் அந்த அடையாள அட்டையை பார்த்தாள்.அவளது முகம் தான் இருந்தது. ஆனால் சிறு பிள்ளை முகமாக இருந்தது.’எத்தனை வருசமா வேலை பார்க்குறா? அய்யோ.. வெண்பனி இங்க வந்துட்டா எல்லாமே தெரியும்னு சொல்லுச்சே.. பல விசயம் புரியல. நான் என்ன செய்வேன்?’ என்று குழம்பி கண்ணை மூடியவள், கை விரலை நெற்றியில் தேய்க்க, பளிச்சென எல்லாம் மூடிய இமைக்குள் ஓடியது.அதிர்ந்து கண்ணை திறந்து விட்டாள்.’இப்ப என்ன ஓடுச்சு?’ என்று யோசித்து விட்டு, மீண்டும் அதே போல் கண்ணை மூடி நெற்றியை தேய்க்க, மீண்டும் காட்சிகள் விரிந்தது.சித்தாரா வேலை பார்க்கும் நிறுவனம். அதில் அவளது அனுபவங்கள். அவளுடன் வேலை செய்பவர்களின் விபரங்கள் எல்லாவற்றையும் மூளை ஒரு படமாக ஓட்டிக் காட்டி முடித்தது.”வாவ்…!” என்று அவள் வாய்விட்டு சொல்லி விட,”என்னமா?” என்று விதார்த் கேட்டான்.”ஹான் ஒன்னும் இல்ல விது.. வேலைய பத்தி நினைச்சேன். நாம கிளம்பலாமா?” என்று கேட்டவள், வேகமாக வீட்டை பூட்டி விட்டு மகனோடு வெளியே வந்தாள்.தெருவை தாண்டி பொது சாலைக்கு வர, வாகனங்கள் இங்கும் அங்கும் போய்க் கொண்டிருந்தது.”ஆட்டோ வந்தாச்சு” என்று விது கத்த, ‘ஆட்டோவா?’ என்று யோசித்தவள், உடனே கண்ணை மூடி நெற்றியை தேய்த்தாள்.அந்த ஆட்டோவின் விவரம் கிடைத்தது. அந்த ஆட்டோ ஓட்டுனர் பக்கத்து தெருவில் வசிப்பவர். விது படிக்கும் தனியார் பள்ளியில் பிள்ளைகளை இறக்கி விட்டு விடுவார். மாதம் ஒரு முறை பணம் கட்டினால் போதும். மிகவும் நம்பிக்கையானவர். அதனால் தான் சித்தாரா அந்த ஆட்டோவில் மகனை பள்ளிக்கு அனுப்புகிறாள்.சட்டென கண்ணைத்திறக்க, ஆட்டோ அவள் முன்னால் வந்து நின்றது.”ஏறிக்கோடா தம்பி” என்று ஆட்டோ ஓட்டுனர் சொல்ல, விதார்த் ஏறிக் கொண்டான். “பை மா” என்று அவன் கையாட்ட, சித்தாராவும் கையாட்டினாள்.ஆட்டோ கிளம்பி விட, சித்தாரா பேருந்து நிலையம் நோக்கி நடந்தாள். அங்கு சென்றதும் அவள் வேலை செய்யும் மில்லின் பேருந்தே வந்தது.அவளோடு மேலும் சிலர் ஏறிக் கொள்ள, பேருந்து புறப்பட்டது.”ஏய் சித்ரா என்ன இங்க வந்து உட்கார்ந்துட்ட? முன்னாடி உன்னை தேடி நீ இல்லனதும் வரலயோனு நினைச்சுட்டேன்’ என்று கேட்டபடி அருகே அமர்ந்தாள் நித்யா.நித்யா உடன் பணி புரிபவள். தோழியும் என்று புரிய, “இங்க நல்லா இருந்தது அதான்” என்றதோடு நிறுத்திக் கொண்டாள்.’இந்த கதையில ஹீரோ பிள்ளைய கேட்க வருவான்னு சொல்லுச்சே. ஏன் வரல அவன்?’ என்று யோசித்தபடியே அமர்ந்து இருந்தாள்.மில்லுக்கு சென்று அங்கிருந்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தவளை, தொந்தரவு செய்ய ஒருவன் வந்து நின்றான். அவனை பார்த்ததும் சித்தாராவிற்கு அடையாளம் தெரிந்தது. காலையில் பார்த்த நிகழ்வுகளில் இவனது முகமும் வந்தது.சித்தாராவிடம் தவறாக நடக்க முயற்சித்துக் கொண்டிருப்பவன். ஒரு முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது. அதில் சித்தாரா பயந்து போயிருந்தாள். அவன் வந்தாலே ஒதுங்கி சென்று விடுவாள்.இப்போதும் வந்து பல்லைக்காட்டியபடி நின்றான்.”ஹாய் சித்து.. என்ன இன்னைக்கு சுடிதார்ல வந்துருக்க? ஆனா இதுல ரொம்ப அழகா இருக்க. ஒரு பையனுக்கு அம்மா மாதிரியே இல்ல” என்று அப்பட்டமாக வழிந்தான்.’இவன் எல்லாம் ஒரு ஆளுனு இவனுக்கு போய் பயந்துருக்கா பாரு ஹீரோயின். இருடா… ஹீரோயின் தான் பயப்படுவா. இந்த வில்லி என்ன செய்யுறானு காட்டுறேன்’ என்று நினைத்துக் கொண்டவள், பளிச்சென புன்னகைத்து, “நிஜம்மாவா சார்?” என்று ஆச்சரியப்பட்டாள்.உடனே, “சத்தியமா.. அப்புறம் இந்த சார விட்டுட்டு தவம்னு கூப்பிடுனு எத்தனை தடவ சொல்லாருக்கேன் சித்து” என்று அவள் புன்னகைத்ததில் குழைந்தான் தவம் என்கிற தவப்பாண்டி.சித்தாரா அவனிடம் சமாளிப்பாக புன்னகைத்தபடி அவன் கையைப்பார்த்தாள். புது மாடல் செல்பேசி பளபளத்தது.சித்தாராவின் பார்வை செல்பேசியில் பதிந்ததும், தவப்பாண்டி புரிந்து கொண்டான்.’ஓஓ.. இத பார்த்துட்டு தான் சிரிக்கிறாளா? இது தெரிஞ்சுருந்தா எப்பவோ வாங்கி கரெக்ட் பண்ணிருப்பேனே’ என்று யோசித்தவன், “இங்க பாரு சித்து.. நான் புதுசா வாங்குன மொபைல். நல்லா இருக்கா?” என்று காட்டினான்.உடனே கண்ணை விரித்து, “எனக்கு இந்த போன பத்தி எதுவும் தெரியாது.” என்றாள்.”பரவாயில்ல. நான் சொல்லித்தரேன்” என்று அதை திறந்து உள்ளே போக, யாரோ அவனை அழைத்தனர்.”இந்தா வர்ரேன்” என்றவன் திரும்பிப் பார்க்க, சித்தாரா அந்த கைபேசியை ஆர்வமாக பார்த்திருந்தாள்.”சரி நீ பார்த்துட்டு இரு. நான் வர்ரேன்” என்று கூறி அகன்றான்.அது புதிய கைபேசி. வாங்கி இரண்டு நாட்கள் தான் ஆகிறது. உள்ளே எதுவும் இல்லாத தைரியத்தில் கொடுத்து விட்டுச் சென்று விட்டான்.தவம் அவனுடைய சிறிய அறைக்குள் அமர்ந்து இருக்க, கைபேசியை நெஞ்சோடு பிடித்தபடி உள்ளே சென்றாள் சித்தாரா.”சார்..””வா சித்து.. போன் பிடிச்சுருக்கா?” என்று கேட்டவன், அவள் கையில் வைத்திருக்கும் நிலையை பார்த்து உள்ளே சிரித்துக் கொண்டான்.’இந்த போன்ல விழுந்துட்டா’ என்ற முடிவுக்கு வந்தவன், அவளை பார்த்து நன்றாக பல்லைக்காட்டினான்.”நல்லா இருக்கு சார். லேடஸ்ட் மாடல் தான?””ஆமா.. உனக்கு பிடிச்சுருந்தா நான் உனக்கு வாங்கித்தர்ரேன் சித்து””இது மாதிரியா? இதோட விலை…””அத பத்தி எல்லாம் கவலைப்படாத. உனக்காக நான் வாங்கித்தருவேன். நீ ம்ம்னு மட்டும் சொல்லு””ஆனா.. நீங்க ஏன் எனக்காக வாங்கித்தரனும்?””என்ன சித்து? உனக்காக நான் செய்யாம வேற யார் செய்வா?” என்று நெருங்கி வர, சித்தாரா இரண்டடி பின்னால் சென்றாள்.”எனக்காக நீங்க ஏன் செய்யனும்?””உனக்காக செய்யாம வேற யாருக்கு செய்வேன்?””அதான் ஏன்?””புரியாத மாதிரியே பேசக்கூடாது.. ஒரு புள்ளைய வேற வச்சுருக்க.. புருசன் வேற இல்ல.. நிறைய விசயத்துக்கு கஷ்டமா இருக்கும். என் கிட்ட வந்துடு.. உன்னை ராணி மாதிரி வச்சுக்கிறேன்.” என்று பேசியபடி தொட வர, சித்தாரா நகர்ந்து கொண்டாள்.”உங்களுக்கு எவ்வளவு நல்ல மனசு சார்?””ஆமா பின்ன? இவ்வளவு அழகும் வேஸ்டா போறத என்னால எப்படி பார்க்க முடியும்? என் மனசு ரொம்ப கஷ்டப்படுது” என்று இம்முறை தோளில் கைவைக்க, அதை பார்த்து விட்டு சித்தாரா உதட்டை இழுத்து சிரித்தாள்.தவப்பாண்டி வெற்றியோடு அவளை மேலும் நெருங்க, “உங்க இந்த நல்ல மனசுக்கு நீங்க எங்கயோ போயிடுவீங்க சார். அதுவும் உங்கள இப்படி வளர்த்த குடும்பத்துக்கு கோவிலே கட்டலாம்” என்று கூறியவள், சட்டென கைபேசியை உயர்த்திப்பிடித்து கேமராவை திருப்பினாள்.”எல்லாம் பார்த்தீங்க தான? மிஸஸ் தவப்பாண்டி..? அப்புறம் அம்மா, அப்பா, அத்த, மாமனார் ,மச்சான்.. இவரு குணத்துக்கு கோவில் கட்டுற பொறுப்பு உங்களோடது. மறக்காம கட்டிருங்க” என்று கூறி வைத்தாள்.எல்லாம் வீடியோ காலில் இருந்தனர். கைபேசி தான் புதிது. ஆனால் அதில் சொந்தபந்தங்களின் எண்கள் எல்லாம் பதிந்து வைத்திருந்தான். அத்தனை பேரையும் அழைத்து நேரலையாக அவன் பேசியதை ஒளிபரப்பி இருந்தாள் சித்தாரா.திரையில் தெரிந்த முகங்களை பார்த்து தவப்பாண்டி அதிர்ந்து நிற்க, “இந்தா வச்சுக்க. வந்துட்டான் வழிய” என்று கைபேசியை தூக்கிப்போட்டாள்.தவப்பாண்டி அதிர்ச்சி விலகி கீழே விழாமல் பிடித்து விட்டு பார்க்க, குடும்பம் மொத்தமும் அவனை முறைத்துக் கொண்டிருக்க, அதை அணைக்க கூட தெரியாமல் தடுமாறி ஒரு வழியாய் அணைத்துப்போட்டவனுக்கு, வியர்த்து கொட்டியது.இத்தனையும் சன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண், சிரிப்போடு மற்றவர்களிடம் சொல்ல, விசயம் அந்த மில் முழுவதும் பரவி விட்டது.மாலை பேருந்தில் அமர்ந்து இருந்தாள் சித்தாரா. கண்ணை மூடி விரல்களால் தலையை தேய்த்தபடி அமர்ந்து இருக்க, நித்யா வந்தாள்.”சித்ரா.. கைய கொடு” என்று கேட்க, சித்தாரா கண் திறந்தாள்.”செம்மயா பண்ணிட்ட.. அந்தாளுக்கு வேணும்” என்று மெல்லிய குரலில் கூறி சிரிக்க, சித்தாரா புன்னகைத்து வைத்தாள்.”செம்ம டோஸ்.. பயத்துல வியர்த்து ஊத்த பேய பார்த்த மாதிரி உட்கார்ந்து இருந்தான். சிரிப்பு சிரிப்பா வந்துடுச்சு” என்று மெல்லிய குரலில் கூறியவள், சுற்றியும் ஒரு முறை பார்த்து விட்டு, “அவனோட ஜால்ரா மூஞ்சிய பார்க்கனுமே செம்மயா இருந்துச்சு” என்று சிரித்தாள்.’இந்தாளுக்கு ஜால்ரா வேற இருக்கா?’ என்று நினைத்தவள், எதுவும் பேசவில்லை.”காலையில இருந்தே சைலண்ட்டா இருக்கியே என்னாச்சு?” என்று அவளது அமைதியை கவனித்து விட்டு கேட்டாள் நித்யா.”ஒன்னும் இல்ல தலை லேசா வலிக்குது””ஓஓ.. சரி கண்ணை மூடிக்கோ.. நான் இதுக்கு பாராட்டனும்னு தான் உன்னை கூப்பிட்டேன்.” என்று கூறியதும், சித்தாரா கண்ணை மூடிக் கொண்டாள்.’இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போயிடுவோம். விது ஸ்கூல் முடிய லேட் ஆகும். எல்லாம் சரி. ஆனா இந்த கதை எந்த வகையில சரி? ஒன்னுமே புரியலயே.. ஹீரோ வருவான்னு சொன்னா. எங்க காணோம்? எப்ப தான் வருவான்? இது வரை படிச்ச கதைய எல்லாம் எடுத்து மறுபடியும் படிக்க முடிஞ்சா நல்லா இருக்கும்’ என்று விதவிதமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.அவளுடைய நிறுத்தம் வந்ததும், வேகமாக இறங்கி வீட்டுக்குச் சென்று சேர்ந்தாள்.கதவை திறந்து உள்ளே நுழைந்தது, உடல் கழுவி விட்டு வந்து அமர்ந்தாள்.’அடுத்து?’ என்று யோசிக்கும் போதே பசித்தது.”ஏன் பசிக்குது? நான் கதையோட கேரக்டர் தான? எனக்கு பசிக்கவே பசிக்காதுனு எழுதி வைக்கலாமே? இல்லனா.. அப்படியே சொடக்கு போடுற மாதிரி, நிமிசத்தில சாப்பாடு எல்லாம் கண்ணு முன்னாடி வந்துடுச்சுனு எழுதலாம். அத விட்டுட்டு பசிய வர வச்சு, அதுக்கு நானே சமைச்சு.. நானே சாப்பிட்டு.. அய்யோ.. வெண்பனி.. இதெல்லாம் கேட்டுட்டு தான இருப்ப? இல்ல நான் புலம்புறத சாவகாசமா எழுதிட்டு இருக்கியா? வந்து பதில் சொல்லிட்டுப்போ.. இப்படி நானே சமைச்சு தான் சாப்பிடனுமா? ஏன் ஹீரோயின் எல்லாம் இப்படி கஷ்டப்பட்டு எல்லா வேலையும் செய்யுற மாதிரி எழுதி தொலைக்கிறீங்க? அந்த கதையில நான் எவ்வளவு கெத்தா.. மாஸா இருந்தேன். இப்படி என்னை புலம்ப விடுறியே..”வாய் அதன் போக்கில் புலம்பினாலும், கை சமையலை செய்து முடித்தது. காரணம் பசி. எப்படியும் வெண்பனி உணவை கொடுக்க மாட்டாள் என்று தெரிந்ததால், அவளே சமைத்தாள்.நாம், இறைவனால் எல்லாம் கொடுக்க முடியும் என்று தெரிந்தும், நமக்கு நாமே உழைப்பது போல் அவளும் அவளுக்காக வேலை செய்ய கற்றுக் கொண்டாள்.நாமும் கடவுள் படைத்த கதாபாத்திரங்கள் தானோ? எதோ ஒரு வேலைக்காக சகல அறிவையும் கொடுத்து, வாழ்ந்து பார் என்று அனுப்பி வைக்கிறானோ? அது நம்மை படைத்து விதியை எழுதிய எழுத்தாளருக்கே வெளிச்சம்.தொடரும்.மக்களே.. இப்போ புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். இது ஒரு ஃபேன்டஸி கதை. நாம படிக்குற ஆன்டி ஹீரோ கதையில வர்ர ஹீரோயின் எல்லாம் தியாகச்செம்மலா இருப்பாங்க. ஹீரோ என்ன தப்பு பண்ணாலும் அவன ஒரு குழந்தை மாதிரி தான் ஹீரோயின் ட்ரீட் பண்ணும். எனக்கெல்லாம் கடுப்பா இருக்கும். அந்த தியாகச்செம்மல் ஹீரோயினுக்கு பதிலா ஒரு வில்லி போனா? அந்த வில்லியும் அது ஒரு கதை உலகம்னு தெரிஞ்சு போய் ஹீரோயினுக்கு நியாயம் வாங்கி கொடுத்தா? அதான் இந்த கதையில வரும். இது வெண்பனி எழுதுற கதையாவே போகும். அதுனால குழப்பிக்காம படிக்கலாம். ரெண்டு மூணு இடத்துல வெண்பனி வருவா. அப்புறம் எல்லாம் சித்தாரா தான் மெயின். இப்போ புரியுது தானே? ஆரம்பம் எப்படினு சொல்லிட்டுப்போங்க . நன்றி.
