சித்திரமே 3

Loading

“எனக்கு என் பையன் வேணும்” என்று விக்ரம் கேட்டது காதில் விழ, சித்தாரா இமை தட்டி விழித்தாள்.

‘இங்க வந்துட்டோமா? இப்ப நாம இங்க இருந்து மறைஞ்சோமா? இவன் பார்த்தானா?’ என்று யோசித்து அவன் முகத்தை ஆராய்ந்தாள். அதில் தீவிரம் மட்டுமே இருந்தது.

அவள் பேசாமல் நிற்க, விக்ரமுக்கு பொறுமை பறப்பது போல் இருந்தது.

ஒரு நீண்ட மூச்சை வெளிவிட்டவன், “நான் சொன்னது உன் காதுல விழுந்ததா? இல்லையா?” என்று கேட்டான்.

“விழுந்துச்சு”

“அப்புறம் அமைதியா நிக்கிற?”

“உனக்கு உன் மகன் வேணும்னு சொன்ன. நான் என்ன சொல்லனும்?”

“உனக்கு நான் அவன கூட்டிட்டு போறதுல பிரச்சனை இல்லையா?”

“எந்த பிரச்சனையும் இல்ல. தாராளமா கூட்டிட்டுப் போ. வச்சு வளர்த்து நல்லா பார்த்துக்கோ” என்று கூறி விட்டு வேகமாக வெளியே சென்றாள்.

விக்ரம் தான் அதிர்ந்து போனான். இப்படி ஒரு பதிலை அவன் சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. அவன் நினைத்து வந்ததே வேறு.

ஒருவாரம் முன்பு போலியோ சொட்டு மருந்து போட்டு விட்டு, காய்ச்சல் வந்தது என்று சித்தாரா மருத்துவமனைக்கு மகனோடு சென்று இருந்தாள்.

விக்ரம், அவனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் மூத்தத்தலைமுறையை சேர்ந்த ஒருவர், உடல்நிலை சரியில்லாமல் மெடிக்கல் லீவ் எடுத்து இருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்து இருந்தது. நிறுவனம் சார்பாக பணம் கொடுத்து விட்டு, நேரில் விசாரிக்கலாம் என்று வந்து சேர்ந்திருந்தான். அப்போது தான் சித்தாராவையும் அவள் கையில் இருந்த மகனையும் பார்த்தான்.

விதார்த்தை பார்த்ததுமே மனம் சொன்னது, அவனுடைய பிள்ளை என்று. உருவ ஒற்றுமை இருவருக்கும் நிறையவே இருந்தது.

அப்போதே அவர்களுக்கு தெரியாமல் தொடர்ந்து, வீட்டைக் கண்டு பிடித்து விட்டான்.‌ காய்ச்சலில் மகன் படுத்திய பாட்டில், சித்தாரா இதை கவனிக்கவில்லை.

இவர்களது முழு விவரத்தையும் சேகரித்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

விக்ரமும் சித்தாராவும் பிரிந்தபின், ஒரு மாதம் கடந்த பின்பு தான், தான் கருத்தரித்த விவரம் சித்தாராவிற்கு தெரிய வந்திருந்தது. அவளுடைய தாயார் அதைக் கலைக்கச் சொல்ல, தந்தை மருந்தையே வாங்கி வந்து கொடுக்க, சித்தாரா எதற்கும் மசியவில்லை.

பிள்ளை வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து விட்டாள். ஆனால், பிள்ளையோடு அவர்களிடம் தங்காமல், அவளது ஒன்று விட்ட அத்தையின் வீட்டுக்கு சென்றாள்.

அத்தை ஒரு விதவை. குடும்பம் கைவிட தையல் வேலையை பார்த்துக் கொண்டு, ஒரு கிராமத்தில் தனியாக வாழ்ந்து கொண்டிருந்தார். சித்தாரா செல்லும் போது, அவருக்கு உடலில் பலவீனம் அதிகமிருந்தது. பிள்ளையோடு இவளை எப்படிப்பார்ப்பது? என்று அவர் தடுமாறி மறுத்தார்.

ஆனால் சித்தாரா அவரை சம்மதிக்க வைத்து, தன்னையும் அத்தையையும் சேர்த்தே கவனித்துக் கொண்டாள்.

யாருமில்லாமல் தனிமையில் இருந்தவருக்கு சித்தாரா ஆறுதலாக இருக்க, அவரும் அவள் மீது பாசத்தை பொழிந்தார். பிள்ளை செலவை சித்தாராவின் தந்தை ஏற்றுக் கொள்ள பிள்ளையும் பிறந்தான்.

பிறந்த பிள்ளை மீது அத்தைக்கு பாசம் அதிகமாக வந்தது. தனக்குப்பின் தனக்கு சொந்தமான அந்த ஒரே வீட்டை, பேரன் விதார்த் பெயரில் எழுதி வைத்து விட்டார்.

விதார்த் ஒரு வயதாக இருக்கும் போது, என்ன முயன்றும் காப்பாற்ற முடியாமல் அவரது உயிர் பிரிந்து போனது. சித்தாராவை அவளது பெற்றோர் அழைத்தனர்.

அப்போதும் பிள்ளையை எதாவது இடத்தில் விட்டுத் தனியாக வளர்க்க ஏற்பாடு செய்யத்தான் அவர்களுக்குத் தோன்றியது.

சித்தாரா தான் அதை மறுத்து விட்டு, அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, இங்கு வந்து சேர்ந்திருக்கிறாள்.

வீட்டு வாடகை வருமானமாக வர, ஆறு மாதமாக வேலை தேடி, மகனின் இரண்டாவது வயதில் மில்லில் வேலைக்கு சேர்ந்து, மகனையும் அருகே இருந்த ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பி விட்டாள்.

அவளது படிப்பும் தகுதியும் அதிகமாக இருக்க, பதவி உயர்வு கிடைத்து மில்லில் சூப்பிரவைஸராக வேலை பார்க்கிறாள்.

பணத்தை பொறுத்தவரை எந்த தட்டுப்பாடும் இல்லை. அவளது சம்பளமும் வீட்டு வாடகையும் அவளுக்கு தாராளமாக வருகிறது. விதார்த்தை பொறுத்தவரை அப்பா இல்லை. இறந்து விட்டான் என்று ஊருக்குள் சொல்லி இருந்தாள். ஆனால், அதையே மகனிடமும் சொல்லி இருப்பாள் என்று விக்ரம் எதிர்பார்க்கவில்லை.

இவ்வளவும் தெரிந்த பிறகு, விக்ரமால் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியவில்லை. அதுவும் பள்ளிச்சீருடையில் தன்னை போன்ற சாயலில் மகனை பார்த்ததும் இருப்புகொள்ளவில்லை.

உடனே கிளம்பியவனுக்கு சில யோசனைகள் வர, அவனது நண்பன் வாகீசனிடம் கலந்து பேசினான்.

“இப்ப நீ போய் வானு கூப்பிட்டா உடனே சித்ரா வந்துடுவாங்களா? நடக்குறத பேசுடா” என்றான் வாகீசன்.

விக்ரமுக்கும் அது தெரியும். அவ்வளவு சுலபமாக சித்தாரா தன்னோடு வர மாட்டாள் என்று. எப்படி அவளையும் பிள்ளையையும் அழைத்து வருவது என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருக்க, நண்பனே யோசனையும் சொன்னான்.

“காலம் காலமா நடக்குறத.. இல்ல கதைகள்ள நடக்குறத இம்ப்ளிமெண்ட் பண்ணி பார்க்கலாம்” என்று கூறி விவரமும் சொன்னான்.

முதலில் திடீரென சித்தாராவின் முன் சென்று நிற்பது. திடீரென அவனை பார்த்தால் நிச்சயமாக அதிர்ந்து தடுமாறுவாள். அடுத்ததாக பிள்ளை. இது வரை அவளுக்கென இருக்கும் ஒரே உயிர். அவன் பெற்றவளை விட்டு விட்டு தந்தையோடு ஒட்டிக் கொண்டால், அவளுக்குள் உரிமை போராட்டம் ஏற்படும்.

அந்த குழப்பத்தில் இருக்கும் போதே பிள்ளையை மட்டும் கேட்பது. கேட்டால் நிச்சயமாக தர மாட்டாள். அப்போது அவளை மேலும் பயமுறுத்தி, கடைசியாக அவளையும் பிள்ளையோடு போனால் போகிறதென்று அழைத்துக் கொண்டு வருவது.

இதில் விக்ரமனின் கெத்து குறையாமல் இருக்கும். சித்தாராவும் அவனுக்காக இல்லாமல், மகனுக்காக என்று எந்த பிரச்சனையும் செய்யாமல் விக்ரமோடு வந்து விடுவாள். பிறகு ஒரே வீட்டில் இருந்தால், தானாக பழைய கதையை மறந்து காதல் மலர்ந்து விடும்.

இது தான் திட்டம்.‌ திட்டத்தில் பெரிய ஓட்டை எதுவும் இல்லை தான். ஆனால் இங்கிருந்தவள் தான் அவன் எதிர்பார்த்ததுக்கு நேர்மாறாக இருந்தாள்.

முதல் அடியே தோற்றது. விக்ரமை பார்த்து அவள் அதிரவில்லை. பிள்ளையோடு பழகுவதை தடுத்து உரிமை போராட்டம் தொடங்கவில்லை. அவன் பிள்ளையை பிரிப்பானோ? என்று பயப்படவும் இல்லை. கடைசியாக பிள்ளை வேண்டும் என்று கேட்டு விட்டான். அதற்கும் அமைதியாக சம்மதிக்கிறாள்.

குழம்பிப்போய் நின்றவனுக்கு, ‘முதலில் நான் சொன்னதை அவள் சரியாக கேட்டாளா?’ என்று சந்தேகமாக இருந்தது.

வேகமாக வெளியே சென்று பார்க்க, விளையாடிக் கொண்டிருந்த மகனை விட்டு விட்டு, சித்தாரா நாற்காலியில் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

‘இவளுக்கு புரியவில்லையோ?’ என்று நினைத்தவன் வேகமாக மகனிடம் சென்றான்.

“விது.. அப்பா கூட வர்ரியா?” என்று கேட்க, “வர்ரேன்பா” என்று எழுந்து விட்டான்.

“நாம நம்ம வீட்டுக்கு போகலாம். அங்க இத விட நிறைய பொம்மை வாங்கி வச்சுருக்கேன்” என்று கூறியபடி மகனை தூக்கிக் கொண்டான்.

“ஐஐ..” என்று கை தட்டி சந்தோசத்தை வெளிப்படுத்திய விதார்த், “போலாம் பா” என்று கழுத்தை கட்டிக் கொண்டான்.

சித்தாராவை பார்க்க, அவளிடம் அசைவே இல்லை.

“ம்மா.. வாமா போகலாம்” என்று விது அழைக்க, விக்ரமனின் மனம் சட்டென மலர்ந்தது.

‘விது கூப்பிடுறான். கரெக்ட். இது கூட நல்ல ஐடியா தான்’ என்று நினைத்து விட்டான்.

“ம்மா..” என்று விதார்த் மீண்டும் அழைக்க, சித்தாரா எழுந்து நின்று, “அம்மா எங்கயும் வரல விது. நீ போறதுனா நீயும் உன் அப்பாவும் மட்டும் போங்க. டாடா பை” என்று கையை வேறு ஆட்டி வைத்தாள்.

விதார்த்தின் முகம் சுருங்க ஆரம்பித்தது.

“நீயும் வாமா.. வாமா” என்று அடம் பிடித்து தந்தையிடமிருந்து இறங்கப்போக, விக்ரம் அவனோடு அவள் அருகே வந்து நின்றான்.

விதார்த் சித்தாராவின் மீது கையை போட்டுக் கொண்டு, “நீயும் வா மா. அப்பா கூட போகலாம்” என்று அழைத்தான்.

சித்தாரா கையை எடுத்து விட்டு, “நீ போறதுனா போ விது. அம்மா வரலனு சொல்லிட்டேன்ல. கிளம்புங்க. எனக்கு தூக்கம் வருது. நான் எங்கயும் வர மாட்டேன். நீ உன் அப்பா கூட போய் இருந்துக்கோ.” என்றவள் வேகமாக சென்று விதார்த்துக்கு பிடித்த பொம்மையை எடுத்து வந்து கொடுத்து விட்டாள்.

“கிளம்புங்க. எத்தனை நாள் ஆனாலும் நான் வர மாட்டேன். அம்மா இல்லாம நீ தனியா போய்க்கோ விது. உனக்கு அப்பா போதும்ல? நான் வரல” என்று கூறி திரும்பி நின்று கொண்டாள்.

அவ்வளவு தான். புதிதாக வந்த தந்தையை விட, தாயின் முகத்திருப்பல் விதார்த்தை அசைத்து விட்டது. உடனே தந்தையின் கையிலிருந்து இறங்கப் போராட, விக்ரம் அதிர்ச்சியில் விட்டு விட்டான்.

விது வேகமாக சென்று அன்னையின் காலை கட்டிக் கொண்டான்.

“நீ வரலயா மா?” என்று அப்பாவியாக கேட்க, “வரல. இங்க தான்‌ இருப்பேன்” என்று கூறினாள்.

“அப்ப நானும் போகல” என்று விட்டு அவளை நோக்கி கை நீட்ட, சிரிப்போடு தூக்கிக் கொண்டவள் திரும்பி விக்ரமை பார்த்தாள்.

எத்தனை காலம் தான் பெற்ற அன்னைக்கு மட்டுமே குழந்தையிடம் பாசமிருப்பது போல் காட்டுவார்கள்? இவ்வளவு வருடம் தனியாக வளர்த்து பாசத்தை கொட்டிய அன்னையை விட்டு விட்டு, தந்தை வந்ததும் பிள்ளைகள் பின்னால் போய்விடுமாம். தந்தை பாசம் இருக்கலாம் தான். ஏக்கமும் கூட. ஆனால் அன்னையை மறந்து அவர்களால் ஒரு நொடியும் இருக்க முடியாது.

அதுவும் விது எல்லாவற்றுக்கும் அன்னையிடம் தான் வந்து நிற்பான். விக்ரமை அப்பாவாக அவள் சொல்லி தான் ஏற்றுக் கொண்டான். அவள் இல்லாமல் விது இருக்கவே மாட்டான்.

வந்து பிள்ளை வேண்டும் என்று கேட்டதும், அவள் கொடுத்து விடுவாள் என்ற எண்ணமா? அல்லது குழந்தைக்கு நான்கு பொம்மைகளும் சாக்லேட்களும் வாங்கிக் கொடுத்து விட்டால், அவர்களை கவர்ந்து அன்னையிடமிருந்தே பிரித்து விடலாம் என்ற எண்ணமா?

எதுவும் நடக்காது என்று காட்டத்தான் அவள் இவ்வளவு நேரமும் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்ததே. இதோ மகன் அவள் இல்லாமல் இந்த வீட்டின் வாசல்படியை தாண்ட மாட்டான் என்று காட்டி விட்டாள். மகனின் கன்னத்தில் முத்தமிட்டவள், விக்ரமனை கர்வமாக பார்த்து வைத்தாள்.

அவன் அப்படி ஒரு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான்.

“என் புள்ள வரலயாம். நீ மட்டும் போகலாம்” என்று தெனாவெட்டாக கூற, “ஏய்.. நீ சீட் பண்ணுற” என்று விக்ரமன் அதிர்ச்சியாக கூறினான்.

“ஆமா. அதுக்கென்ன?”

“என்ன நக்கலா? நான் நினைச்சா என் பிள்ளைய உன் கிட்ட இருந்து பிரிச்சுட்டு போக முடியும்” என்று விக்ரம் வார்த்தையை விட, விது பயந்து விட்டான்.

சித்தாராவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “நான் போக மாட்டேன்” என்று கத்த ஆரம்பித்தான்.

விக்ரமை முறைத்து பார்த்தவள், “அம்மா விட மாட்டேன் தங்கம். நீ பயப்படாத” என்று கூறி தேற்றியவள், “கெட் அவுட்” என்று வாசலைக்காட்டினாள்.

விது பயந்த பிறகு தான் தான் செய்த தவறு விக்ரமனுக்கு புரிந்தது. அவன் முன்னால் சித்தாராவை மிரட்ட துணிந்தது மகாத்தவறு.

“உன்னை தான் சொல்லுறேன். அவுட்” என்று அதட்டியவள், மகனை தட்டிக் கொடுத்தாள்.

வந்த காரியம் என்னமோ எங்கேயோ சொதப்புவது போல் தோன்றியது விக்ரமுக்கு. அவன் யோசனையோடு நிற்க, சித்தாரா மகனை அறைக்குள் தூக்கிச் சென்று படுக்க வைத்தாள்.

“ம்மா.. நாம போக வேணாம். அப்பா என்னை தூக்கிட்டு போயிடுவாரா?” என்று விதார்த் பயத்துடன் கேட்க, “அப்பா அப்படி எல்லாம் செய்ய மாட்டார். சும்மா விளையாட்டுக்கு சொன்னது. நீ இங்கயே தூங்கு. நான் அப்பா கிட்ட பேசிட்டு வரேன்” என்று போர்வையை போர்த்தி விட்டு வெளியே வந்தாள்.

விக்ரமன் எதோ யோசனையில் முகம் இறுக நிற்க, அவன் முன்னால் வந்து கையைக்கட்டிக் கொண்டு நின்றாள். அவளாக வாயைத்திறக்கவில்லை. சில நொடிகள் மௌனமாக கடக்க, “என்ன?” என்று அவனே கேட்டான்.

“உட்கார். பேசலாம்” என்றவள் அவனுக்கு ஒரு நாற்காலியை காட்டி விட்டு, தானும் அமர்ந்து கொண்டாள்.

“சொல்லு. என்ன விசயம்?”

“என்ன விசயம்னா?”

“எதுக்காக இங்க வந்த?”

“என் பிள்ளைய பார்க்க நான் வரக்கூடாதா?”

“இத்தனை வருசமா பிள்ள இருக்கதே தெரியாது. ஆனா இப்ப பிள்ளை பாசம் பொத்துக்கிட்டு வருதா? முதல்ல உனக்கெதுக்கு என் பிள்ளை?”

“எதுக்கா?”

“ஆமா எதுக்கு?” என்று கடுப்பாக கேட்டவள், உடனே மூச்சை இழுத்து விட்டாள்.

‘இவன் ஒரு ஹீரோனு எழுதி இருக்கா பாரு. அவள சொல்லனும்’ என்று நினைத்துக் கொண்டு நிதானமானாள்.

“இங்க பாரு விக்ரமசேனா. உனக்கும் எனக்கும் இருந்த பிரச்சனை அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடந்தது. நியாயமா பார்த்தா, நீ என்னை ஏமாத்துனதுக்கு உன்னை பார்த்த அடுத்த நிமிஷம் ஒரு அறையாச்சும் விட்டு கழுத்தப்பிடிச்சு வெளிய தள்ளியிருக்கனும். ஆனா பொறுமையா பேசிட்டு இருக்கேன். அத சோதிக்காத. முடிஞ்சு போன விசயத்துக்காக இப்ப நீ பிள்ளைய கேட்டு வந்து நிக்கிறது நியாயமா? உனக்கு தோனுனா இன்னொரு கல்யாணம் பண்ணி இதே போல பத்து பிள்ளைய பெத்துக்க வேண்டியது தான?”

“எனக்கு விது தான் வேணும்”

எரிச்சல் வர, “அவன் நான் இல்லாம இருக்க மாட்டான்” என்றாள்.

“சோ?”

“என்ன சோ? என் பிள்ளை நான் இல்லாம இருக்க மாட்டான். திடீர் காளானா முளைச்ச உன் பாசத்த தூக்கிட்டு நடைய கட்டு”

“அவன் இல்லாம இங்க இருந்து போக மாட்டேன்” என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவளை தோரணையாக பார்த்தான்.

“ரைட்” என்றவளும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவனை சவலாக பார்த்தாள்.

“முடிஞ்சா என் பிள்ளைய பிரிச்சு கூட்டிட்டுப் போ. ஆனா ஒரு நாள்.. இருபத்தி நாலு மணி நேரம் கூட நான் இல்லாம அவன் இருக்க மாட்டான். என் கிட்ட தான் வந்து நிற்ப. பார்க்குறியா?”

சித்தாராவும் அவள் பங்குக்கு பேச, விக்ரமுக்கு கடுப்பாகி விட்டது.

“அதையும் பார்க்குறேன்” என்று எழுந்து விட்டான்.

“முதல்ல கிளம்பு. நாங்க தூங்கனும். உன்னால என் புள்ள பயந்து போயிருக்கான்”

பயம் என்ற வார்த்தையில் விக்ரம் நிதானித்தான். சித்தாரா இன்னும் அசையாமல் அமர்ந்து இருக்க, “இதுக்கு வேற மாதிரி முடிவு கட்டுறேன்.” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் சென்றதும் மகனிடம் வந்தாள்.

“அப்பா போயாச்சு. நீ தூங்கு” என்றதும் தலையாட்டியவன், “நீ சாப்பிடலயாமா?” என்று கேட்டு வைத்தான்.

அப்போது தான் அந்த நினைவே அவளுக்கு வந்தது. மகனுக்கு மட்டும் ஊட்டியவள் தான் சாப்பிடவில்லை.

“பசிக்கல” என்க, “நைட் சாப்பிடாம படுத்தா பேய் வந்து வயிற கடிச்சு சாப்பிடும்ல? போமா.. சாப்பிடு” என்று பிடித்து தள்ளினான்.

“பேய் வயிற சாப்பிடுமா?” என்று கேட்க, “நீ தான சொன்ன.. பேய்க்கு சாப்பாடு பிடிக்காது. அது நம்ம வயித்துல இருந்தா நம்மல சாப்பிடாம போயிடும். இல்லனா கடிச்சு அவுக்குனு முழுங்கிடும்ல?” என்று விளக்கினான்.

சிரிப்பு வந்தாலும், “ஆமால.. சரி நான் சாப்பிட்டு வர்ரேன். நீ தூங்கு” என்று எழுந்து சென்றாள்.

______

வெண்பனி அத்தியாயத்தை எழுதி முடித்து வைத்து விட்டு, முந்தய அத்தியாயத்திற்கு வந்த கருத்துக்களை பார்வையிட்டாள். அவள் எதிர் பார்த்தது போல் தான் இருந்தது.

எல்லாவற்றையும் பார்த்து முடித்து விட்டு, பழைய கதையை எடுத்து அந்த அத்தியாயத்தை படித்தாள். அதிலிருந்த நாயகி, நாயகன் குழந்தையை கேட்டதும், பதறி, பயந்து தர மாட்டேன் என்று சண்டை போடுவாள்.

அவனோ, தானாக தரவில்லை என்றால், பிடுங்கிக் கொண்டு செல்வேன் என்று மிரட்டி விட்டு தான் செல்வான்.

அதை படித்து விட்டு, இப்போது இருக்கும் சித்தாரா செய்த வேலையை பார்த்தாள். சிரிப்பு வந்தது.

“கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு பறிச்சுக்கவும் செய்றாளே.. ஜகாஜால கேடி நீ. ஆனா இப்ப இருக்க ஹீரோ இனி இருக்க மாட்டான். உனக்கு ஏத்த மாதிரி ஒரு வில்லன இறக்குறேன். அப்புறம் பாரு ஆட்டத்த” என்று சிரித்தாள்.

தொடரும்.

Leave a Reply