சித்திரமே 18

Loading

மகன் எழும் வரை சித்தாராவும் அவன் அருகே படுத்து உறங்கி இருந்தாள். மதிய உணவுக்கும் இறங்கி வரவில்லை. வெளியில் சாப்பிட்ட ஐஸ்கிரீமும், அடுத்தடுத்து சாப்பிட்ட சிற்றுண்டிகளும் வயிறை நிரப்பித்தான் இருந்தது. அதை விட விசாகாவை என்ன செய்வது என்று யோசித்தபடியே படுத்திருக்க, தூக்கம் வந்து விட்டது.

மாலை நன்றாக தூங்கி எழுந்து, மகனையும் எழுப்பிக் கொண்டு கீழே வர, அங்கு போர்களம் வெடித்திருந்தது.

அல்லியும் மதியம் முழுவதும் அறையில் அமர்ந்து, தன்னையே நொந்து கொண்டிருந்தார். அவரால் ஏன் இந்த மூன்று பிள்ளைகளையும் சரியாக வளர்க்க முடியவில்லை?

அவர்கள் மூவரும் அல்லியிடம் சிறு பாசம் காட்டியிருந்தாலும் கூட, அல்லி அவர்களை நன்றாக பார்த்திருப்பார். சரி தவறை சொல்லிக் கொடுத்திருப்பார். பக்குவமாய் வளர்த்திருப்பார். வேதா அத்தனையும் கெடுத்ததோடு, தவறான போதனைகளையும் ஊட்டிக் கொண்டிருக்கிறாள்.

அல்லிக்கு மனம் ரணமானது. அவரை இங்கு திருமணம் செய்து அழைத்து வந்ததே, பிள்ளைகளை வளர்க்கத்தான். அதையே அவர் சரியாக செய்யவில்லையே. அந்த வருத்தம் மனதை அழுத்த, கண் கலங்க பல மணி நேரம் அமர்ந்து இருந்தார்.

மாலை வெளியே வர, விசாகாவும் வேதாவும் பிடித்துக் கொண்டனர்.

“எவ்வளவு தைரியமிருந்தா என்னை தரதரனு இழுத்துட்டு வருவீங்க? என்னை பெத்த அம்மானு நினைப்பா? என் கிட்ட அதிகாரம் பண்ண யார் உரிமை கொடுத்தது?” என்று விசாகா கத்த, “அதான? எல்லாம் அந்த சித்திராங்கி கொடுத்த தைரியம். திமிரு” என்று வேதா பேசினாள்.

“உங்களால அவன் என் கிட்ட கோவமா இருக்கான். இப்ப நீங்களா சமாதானபடுத்துவீங்க? நான் நல்லா இருந்தா பிடிக்காதா? என் வாழ்க்கையில நீங்க ஏன் தலையிடுறீங்க? சித்தி கொடுமை பண்ண நினைக்கிறீங்க இல்ல?”

அபாண்டமாக அல்லியின் மீது விசாகா பழி சுமத்த, அல்லிக்கு அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை. இப்படி எல்லாமே அவருடைய தவறு போல் மாற்றி விட்டாளே.

“முதல்ல யாரக்கேட்டு என்னை ஃபாளோவ் பண்ணீங்க? அறிவில்ல?” என்று கத்திக் கொண்டிருக்கும் போது தான், சித்தாரா கீழே வந்தாள்.

“மனசுல பெரிய சிஐடினு நினைப்பு” என்று வேதா நக்கலாக பேச, அது காதில் விழுந்தாலும் சித்தாரா நிற்காமல் மகனோடு நடந்தாள்.

“பாரு திமிர.. கண்டுக்காம கொட்டிக்கப் போறா” என்று வேதா பல்லைக்கடித்தாள்.

“இங்க பாருங்க. இனிமே என் பின்னாடி வர்ரது, இப்படி அதிகாரம் பண்ணுறது எல்லாம் வேணாம். அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன். காசுக்காக எங்கப்பாவ மயக்கி வந்தீங்க. இங்க தான் எல்லா வசதியும் கிடைக்குதுல? அத மட்டும் பாருங்க. தேவையில்லாம என் விசயத்துல தலையிடாதீங்க”

“காசுக்காக கல்யாணம் பண்ணிட்டு வந்ததால தான், ஒரு புள்ள கூட பிறக்கல. புள்ள பிறந்துருந்தா அருமை தெரிஞ்சுருக்கும். இந்த முட்டாளுக்கு புள்ளையும் பொறக்கல. புள்ளைங்க கிட்ட எப்படி நடந்துக்கனும்னு தெரியல. இதனால நாம தான் அனுபவிக்கிறோம். தலையெழுத்து” என்று வேதா தலையில் அடித்துக் கொண்டாள்.

“அதான.. புள்ளைய பெத்துருந்தா இப்படி பசங்க ப்ரைவசிக்குள்ள நுழையக்கூடாதுனு தெரிஞ்சுருக்கும். நீங்க மலடி ஆச்சே…” என்று வார்த்தையை முடித்தது தான் தெரியும். காதில் கொய்ங் என்று சத்தம் கேட்டது.

ஒரு அறை.. ஒரே அறை.. விசாகாவின் கன்னங்கள் பழுத்ததா? இல்லையா? தெரியாது. ஆனால் அடித்த சித்தாராவின் கை சிவந்து போனது.

அத்தனை வேகத்தில் அறைவிட்டிருந்தாள். மகன் பசி என்று சொன்னதால், அவனை சமையல் செய்யும் பெண்ணிடம் ஒப்படைத்து கவனிக்கும் படி கூறி விட்டு இங்க வருவதற்குள், விசாகா வார்த்தையை விட்டிருந்தாள். வந்த சித்தாராவும் பதிலுக்கு அறை விட்டிருந்தாள்.

ஆனால் சித்தாராவோ, “அச்சோ.. அடிச்சுட்டேனா? சாரி” என்றாளே பார்க்கலாம்.

அடித்த போது அதிர்ந்ததை விட, அவள் பேசியதில் அருகே நின்றிருந்த வேதா அதிகம் அதிர்ந்து, தன் கன்னங்களை இரண்டு கையாலும் மறைத்துக் கொண்டாள்.

சொன்னவளுக்கு இந்த நிலைமை என்றால்? சொல்லிக் கொடுத்தவளுக்கு? பதறிப்போய் ஒரு அடி பின்னால் சென்றாள்.

“ரொம்ப வலிக்குதா?” என்று அடித்ததையும் அடித்து விட்டு அப்பாவியாக சித்தாரா கேட்க, அடி வாங்கியவளுக்கு கண்கலங்கி கோபமும் வந்து விட்டது.

அடுத்த நொடி விசாகா கையை ஓங்கி இருந்தாள். அதை நினைத்து பல நாள் வருத்தப்படப்போவது அறியாமல்..!

ஓங்கிய கையை கெட்டியாக பிடித்துக் கொண்ட சித்தாரா, அதை பின்னால் வளைத்தாள். கை வலியில் விசாகா துடிக்க ஆரம்பித்தாள்.

“ஆஆஆ.. ஏய் கைய விடு..” என்று கத்த, “அச்சோ வலிக்குதா? சாரி விசாகா. நான் உன் விசயத்தல தலையிடக்கூடாதுல?” என்று அமைதியாக அப்பாவியாக பேசினாள் சித்தாரா.

ஆனால் அதற்கு நேர்மாறாய், விசாகாவின் கை அவளிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது.

அவளது அதிரடியில் அல்லி அதிர்ந்து நிற்க, வேதா தங்கையின் கதறலில் சுதாரித்தாள்.

“ஏய்.. கைய விடுடி. யாரக்கேட்டு என் தங்கச்சிய அடிச்ச?” என்று வேதா எகிறிக்கொண்டு அருகே வர, “ஏன் அந்த அடி உனக்கும் வேணுமா? லெஃப்ட்ல எனக்கு இன்னும் ஃபோர்ஸா வரும். விடவா ஒன்னு?” என்று கேட்டு கையை ஓங்கினாள்.

அதில் வேதா பயந்து விட, விசாகாவிற்கு கரகரவென கண்ணீர் கொட்டி விட்டது. கையை வளைத்துப்பிடித்திருக்க அது நன்றாக சிவந்து போனது. அப்படி ஒரு அழுத்தமான பிடி.

“எம்புட்டு கொழுப்பு இருந்தா மலடினு பேசுவ” என்றவள் மேலும் வளைக்க, விசாகா கதறி விட்டாள்.

“ஏய் விடு விடு” என்று வேதா இடையில் வந்து கையை பிரிக்க, அவளை ஒரே தள்ளாக தள்ளி விட்டாள் சித்தாரா. உடம்பை பேணுவதாக காற்றைப்போல் இருந்தவள், சித்தாரா தள்ளியதுமே கீழே விழுந்து விட்டாள்.

“மூடிட்டு இரு. இல்லனா இவ கைய உடைச்ச மாதிரி உன் வாய உடைச்சுடுவேன்” என்று எச்சரித்தவள், விசாகா கதறக்கதற கையை மேலும் மேலும் முறுக்கினாள்.

அவளது அலறல் வீடு முழுவதும் எதிரொலித்தது. இதற்கு மேல் போனால் கை உடைந்து போகும் என்ற நிலைமை வந்த பின்பு தான், சித்தாரா அவளை விட்டாள்.

கையைப்பிடித்துக் கொண்டு விசாகா கண்ணீர் விட்டு அழ, மீண்டும் ஒரு அறை கன்னத்தில் விழுந்தது.

“வயசுக்கு மரியாதை கொடுக்க வேணாம். அட்லீஸ்ட் அவங்கள ஒரு மனுசியாவாச்சும் மதிக்கனும். இல்லனா கைய உடைச்ச மாதிரி மொத்த எலும்பயும் நொறுக்கிடுவேன்” என்று எச்சரித்தாள்.

“என்ன நடக்குது இங்க?” என்று விக்ரமின் குரல் திடீரென கேட்க, வேதாவுக்கு அப்போது தான் உயிர் வந்தது.

வேகமாக தம்பியை பார்த்து வேதா அழ ஆரம்பித்து விட்டாள்.

“டேய்.. பாருடா உன் பொண்டாட்டி எங்கள கொடுமை படுத்துறா” என்று கண்ணீரை தாரைதாரையாக இறக்க, அவன் சித்தாராவை முறைத்தான்.

அவளோ, ‘வாடா வா. உன்னை தான் எதிர்பார்த்தேன்’ என்று பார்த்து வைத்தாள்.

“எதுக்கு இப்ப ரெண்டு பேரும் அழுறீங்க?” என்று கேட்டுக் கொண்டே அருகே வந்தான்.

“இவ விசாவ அடிச்சுட்டா. நான் கேட்கப்போனா என்னையும் தள்ளி விட்டுட்டா”

வேதா அழுதபடி பேச, விக்ரம் சரேலென சித்தாராவிடம் திரும்பினான்.

“யார கேட்டு இப்படி நடந்துக்குற நீ? முதல்ல சாரி கேளு” என்றான் விக்ரம சேனா.

‘தெரியுமே. எல்லா ஆன்டி ஹீரோவும் பைத்தியங்க தான். நடந்தது என்னனு விசாரிக்காதுங்க. நீயும் அதே குப்பை தான?’ என்று நக்கலாக நினைத்தாள்.

‘ஆனா நான் யார் தெரியுமா? சாரி கேட்க மாட்டேன்னு வரட்டு பிடிவாதம் பிடிச்சுட்டு உண்மைய சொல்லாம அழுற ஹீரோயின் இல்ல’ என்று நினைத்தவள், “நான் ஆல்ரெடி சாரி கேட்டாச்சு” என்று வெடியை வீசினாள்.

இந்த திருப்பத்தை நான்கு பேருமே எதிர்பார்க்கவில்லை. அடித்து விட்டு எதற்கு மன்னிப்பு கேட்டாள் என்று இப்போது தான் எல்லோருக்குமே விளங்கியது.

“நிஜம்மா கேட்டேன் விக்ரம். ஆண்ட்டி கிட்ட கேளு. இல்லனா இவ கிட்டயே கேளு. நான் ரெண்டு டைம் சாரி சொன்னேன்” என்றாள் ஒரு அப்பாவி முகபாவனையோடு. ஆனால் கண்ணில் கள்ளத்தனம் அதிகமாக இருந்தது.

விக்ரம் அடுத்து என்ன பேசுவதென்று புரியாமல் நின்று விட, “உன் முன்னாடி இன்னொருக்கா கேட்கவா?” என்று கேட்டாள்.

அவன் அவளை ஆராய்ச்சியாக பார்த்தபடி நிற்க, “இப்ப கேட்குறேன் பாரு” என்று விசாகாவிடம் சென்றாள்.

அவள் கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். சித்தாரா அருகே வரவும் பயந்து நிமிர்ந்து பார்க்க, “சாரி சொல்லட்டுமா?” என்று கேட்டாள்.

விசாகாவிற்கு உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது. இரண்டு முறை சாரி கேட்ட லட்சணத்தை தான் பார்த்து விட்டாளே. அடுத்த கன்னமும் கையும் சேர்ந்து சிவக்க வைக்க விருப்பமில்லை. அதனால் இடவலமாக தலை பயங்கரமாக ஆடியது.

“வேணாமா? ரெண்டு போதுமா?” என்று கேட்க, விசாகா எச்சிலை விழுங்கிக் கொண்டு, “அண்ணா..” என்று அவனிடம் தஞ்சமடைந்தாள்.

“தாரா..எதுக்கு அடிச்ச இப்போ?” என்று விக்ரம் கேட்க, சித்தாராவின் முகத்தில் பெரும் ஆச்சரியம்.

“அடேங்கப்பா..! சீக்கிரமா கேட்டுட்ட?” என்று அவள் போலியாக வியக்க, விக்ரம் முறைத்தான்.

“இப்ப சொல்லப்போறியா இல்லையா?”

“உன் அக்கா கிட்ட கேளு. உன் தங்கச்சி கிட்ட கேளு. என் கிட்ட ஏன் கேட்குற?” என்று அவனை நன்றாக சீண்டி விட்டாள்.

அவனது முழுக்கோபமும் வெளியே வர வேண்டும். வரட்டும். வந்த பிறகு அவள் கொடுக்கப்போகும் அடிகளில் மொத்தமாய் உடைய வேண்டும். அதற்காகவே அதிகமாக சீண்டி விட்டாள்.

“தாரா..” என்று அவன் பல்லைக்கடித்து அதட்ட, சித்தாரா எதிர் பார்த்த கோபம் வந்து விட்டது.

“உன் தங்கச்சி ஒருத்தன லவ் பண்ணுறா தெரியுமா?” என்று நக்கலாக கேட்க, விக்ரம் பதில் சொல்லாமல் அமைதியாக பார்த்தான்.

அந்த அமைதி தேவையான பதிலை சொல்லி விட, சித்தாராவின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

“அந்த லவ்வர் கூட இன்னைக்கு ஹோட்டல்ல ரூம் போட்டுருக்கா” என்று நேரடியாக விசயத்தை இறக்கினாள்.

விக்ரம் மட்டுமல்ல வேதாவும் இதைக்கேட்டு அதிர்ந்தாள். அவளுக்கு தான் முழுவிவரமும் தெரியாதே.

‘ரூம்மா? இத இவ சொல்லலையே?’ என்று தங்கையை பார்த்தாள்.

அவளும் காதலித்தாள் தான். ஆனால் சுந்தர் மிகவும் நியாயமானவன். நேர்மையானவன். வேதாவின் மீது உயிரை வைத்திருப்பவன். வேதா மற்ற விசயங்களில் குறையாக இருந்தாலும், கணவனை இன்று வரை மனதில் காதலித்துக் கொண்டிருக்கிறாள். எத்தனை பிரச்சனை வந்தாலும், கணவனை விட்டுக் கொடுக்க மாட்டாள்.

சுந்தரும் வேதாவும் காதலிக்கும் போது அதிகபட்சமாக கையைப்பிடித்திருக்கின்றனர். கட்டிப்பிடித்தது கூட இல்லை. சுந்தர் எங்குமே அவளது கண்ணியம் குறைய விட்டது இல்லை. இங்கு தங்கை திருமணத்திற்கு முன்பு காதலனோடு தனியறையில் தங்கப்போயிருக்கிறாள்.

வேதாவிற்கும் இதை ஜீரணப்பது சற்று சிரமமாகத் தான் இருந்தது. அதே நேரம் விக்ரமின் நிலையை கேட்க வேண்டாம். உட்சபட்ச அதிர்ச்சியில் இருந்தான்.

“விசா” என்று அவளை அழைக்க, அவள் நிமிர்ந்தால் தானே? வலித்த கையை தடவிக் கொண்டு குனிந்து அமர்ந்து இருந்தாள்.

“விசாகா” என்று விக்ரம் குரல் உயர்த்த, மெல்ல நிமிர்ந்தாள்.

“உண்மையா?” என்று கேட்டவன் விழிகளை, அவளால் சந்திக்க முடியவில்லை.

விக்ரமுக்கு சித்தாரா பொய் சொல்வாள் என்று தோன்றவில்லை. ஆனால், கடைசியா ஒரு நம்பிக்கையை இழுத்து வைத்திருந்தான். இதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். தவறான புரிதல் என்று தங்கை கூறிவிட மாட்டாளா? என்று பார்த்தான்.

ஆனால் அவள் மீண்டும் தலை குனிந்து கொள்ள, விக்ரம் உடைந்து விட்டான். அவளது காதல் விவகாரம் அவனுக்கும் தெரியும். அந்த காதலனும் பணக்காரன் தான். தங்கை திருமணத்திற்கு தயாரானதும் வந்து கேட்டால், மறுக்காமல் செய்து வைக்கத்தான் ஆசைப்பட்டான். ஆனால் இந்த திருப்பத்தை எதிர் பார்க்கவில்லை.

உடைந்து போனவனுக்கு கால்கள் தள்ளாடுவது போல் இருக்க, பல்லைக்கடித்து நிலையாக நின்றான்.

“கேட்டாச்சா? எப்படி? இந்த அற்புதமான செயல பாராட்டி தான் அவளுக்கு பரிசு கொடுத்தேன். இவள ரூம்க்குள்ள இருந்து சீக்கிரமே நானும் உன் சித்தியும் கூட்டிட்டு வந்துட்டோம்னு மேடம்க்கு ஒரே கோபம். அதுக்காக ஆண்ட்டிய கண்டபடி பேசுறா. அதான் விட்டேன் ரெண்டு.” என்று சித்தாரா பல்லைக்கடித்தாள்.

அதுவரை அதிர்ச்சியில் இருந்த வேதா, இப்போது சுதாரித்தாள்.

“என்ன விட்டா பேசிட்டே இருக்க? நீ மட்டும் பெரிய உத்தமியா? கல்யாணம் ஆகாம பிள்ளை பெத்தவ தான? அதையே என் தங்கச்சி பண்ணா திட்டுவியா?” என்று வார்த்தையை விட்டிருந்தாள்.

அவளது பேச்சில் வேகமாக விக்ரமை பார்த்தாள் சித்தாரா. அவனது முகம் அவமானத்தில் சிவந்து விட்டது.

அதைப்பார்த்ததும் சித்தாராவுக்குள் ஒரு ஏளன சிரிப்பு தோன்றியது.

“ஏய் ஓசி சோறு.. மூடிட்டு உட்காரு. உன் கருத்த யாரும் கேட்கல” என்று வேதாவின் மீது பாய்ந்திருந்தாள் சித்தாரா.

“ஓசி சோறா?” என்று வேதா அலற, “ஆமாடி.. என் வீட்டுல வந்து வாழாவெட்டியா தண்ட சோறு தின்னுட்டு என்னையே கேள்வி கேட்பியா?” என்று பதிலுக்கு பலவார்த்தைகளை விட்டாள் சித்தாரா.

“யார பார்த்துடி வாழாவெட்டிங்குற?” என்று கோபமா கேட்க நினைத்தாலும், அதீத அதிர்ச்சியில் வேதாவின் குரல் நடுங்கியது.

“நீ தான் வாழா வெட்டி. புகுந்த வீட்டுல வாழ துப்பில்லாம என் வீட்டுல வந்து ஓசி சோறு தின்னுட்டு உட்கார்ந்து இருக்க. சோறு ஒழுங்கா வேணும்னா வாய மூடிட்டு இருக்கனும். அத விட்டுட்டு ஓவரா பேசுன, கழுத்தப்பிடிச்சு வெளிய தள்ளுவேன். அப்புறம் சோத்துக்கு பிச்சை தான் எடுக்கனும்”

சித்தாரா பேசப்பேச, அத்தனை பேருக்கும் வார்த்தை வரவில்லை.

“நான் பிச்சை.. டேய்.. என்னடா சும்மா நிக்கிற? உன் பொண்டாட்டிய பேச விட்டு வேடிக்கை பார்க்குறியா?” என்று வேதா கண்ணீர் வடிக்க, விக்ரம் கண்ணை மூடித்திறந்தான்.

“இப்ப எதுக்கு தேவையில்லாம பேசிட்டு இருக்க சித்தாரா? நான் விசாகா கிட்ட பேசிக்கிறேன். நீ போய் உன் வேலைய பாரு”

“அப்படினா அவள ஆண்ட்டி கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லு. ஆண்ட்டிய மலடிங்குறா. யாரு மலடி? உன் அப்பாவும் பாட்டியும் அவங்கள பிள்ளை பெத்துக்க விடாம டார்ச்சர் பண்ணுவாங்க. உன் அக்காவும் தங்கச்சியும் வார்த்தைக்கு வார்த்தை அவங்கள மலடினு சொல்லுவாங்க. இதெல்லாம் கேட்டுட்டு கம்முனு போக, நான்‌ என்ன சொரண கெட்ட விக்ரம்னு நினைச்சியா? அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கல.. இன்னும் பேசுவேன்”

ஒருவரையும் விடாமல் சித்தாரா விளாச, அல்லிக்கு கண்ணீர் தான் வந்தது. ஆனால், சித்தாராவை அவர் தடுக்கவில்லை. அவரால் தான் நியாயம் கேட்கவும் சண்டைபோடவும் முடியாது. தனக்காக ஒருத்தி பேசும் போது, அதை தடுத்து தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட மனமில்லை. இந்த பிரச்சனை எப்படி முடிவுக்கு வந்தாலும் பரவியில்லை என்று நின்றிருந்தார். ஆனால் அதற்கு வேதா விட வேண்டுமே. அவள் மீண்டும் பேசினாள். இம்முறை அவள் எப்போதும் அல்லியை திட்டும் வார்த்தையை பயன்படுத்தினாள்.

தொடரும்.

Leave a Reply