சித்திரமே 19
![]()
“மன்னிப்பு கேட்கச்சொல்லு” என்று சித்தாரா அழுத்தமாக பேச, விக்ரமுக்கு முதலில் யார் பக்கம் பேசுவதென்றே புரியவில்லை. தங்கையின் செயலில் ஒரு பக்கம் அதிர்ந்து போனான் என்றால், அக்கா விட்ட வார்த்தை அவனை என்னவோ செய்து விட்டது.
தன்னை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டவன் விசாகாவிடம் தான் வந்தான்.
“விசாகா”
“…”
“விசாகா மன்னிப்பு கேளு” என்று விக்ரம் அதட்ட, “அவ ஏன் மன்னிப்பு கேட்கனும்?” என்று வேதா வந்தாள்.
“கேட்டுத்தான் ஆகனும்” – சித்தாரா.
“முடியாது. அதுவும் இவ கிட்ட என் தங்கச்சி மன்னிப்பு கேட்கனுமா? எங்கப்பாவ மயக்கி, தன்னோட குறைய மறைச்சு, சொத்துக்காகவும் பணத்துக்காகவும் ரெண்டாந்தாரமா வந்தவ இவ. இவள வச்சு பார்க்கும் போது என் தங்கச்சி பண்ணது தப்பே இல்ல”
“ஆமா இது பெரிய ராஜ பரம்பரை உங்கப்பன் குடிகாரன் ராஜராஜசோழனுக்கு பேரன். கொட்டிக்கிடக்குற சொத்து மேல ஆசை வந்து உங்கப்பன மை வச்சு மயக்குனாங்க. ஏய் தண்ட சோறு. உன்னை மூடிட்டு இருக்க சொன்னேன். பேசிட்டே போன சோத்துல விசம் வைக்க சொல்லிடுவேன்”
“யாருடி தண்ட சோறு? இது எங்கப்பா சொத்து”
“இப்ப என் சொத்து. நீ தின்னுறது என் புருஷனோட உழைப்பு. புகுந்த வீட்டுல புருஷனோட வாழ துப்பில்ல. பெத்த புள்ளைங்கள வளர்க்க வக்கில்ல. நீ ஆண்ட்டிய பேசுறியா? பல்ல தட்டிருவேன்”
“அப்படி தான்டி பேசுவேன். அவ எங்க சொத்துக்காக எங்கப்பாவ மயக்கி தான் வந்தா”
இவர்கள் பேசும் போதே, அல்லியிடமிருந்து அழுகை வெடித்தது.
“இந்த அவமானம் தேவையானு தான் நான் பேசுறதே இல்ல சித்துமா. விட்டுரு” என்று அவர் கதற, “ஆண்ட்டி” என்று சித்தாரா அதட்டினாள்.
“இப்ப எதுக்கு அழுறீங்க? சாக்கடைய சுத்தம் பண்ணும் போது அழுக்கு மேல படத்தான் செய்யும். அதுக்கு பயந்து விட்டா கொஞ்ச நாள்ல விசமா மாறி நம்மலயே கொன்னுடும். ஆல்ரெடி குடும்பமே விசமா தான் மாறி இருக்கு. தங்கச்சி லவ்வர் கூட நைட் ஸ்பெண்ட் பண்ணுறது தப்பே இல்லனு சொல்லுற அக்கா. அத கேட்டுட்டு நிக்கிற கூடப்பிறந்தவன். இப்படி குடும்பம் எங்க அமையும்?”
“ஏய் நிறுத்துடி. என் குடும்பத்த பத்தி தப்பா பேசுன அவ்வளவு தான். எங்கள சொல்லுற. நீ மட்டும் எப்படியாம்? கல்யாணத்துக்கு முன்னாடியே என் தம்பி கூட ப*** தான?” என்று கேட்டு மொத்தமாய் விக்ரமை நொறுக்கி இருந்தாள் வேதவல்லி.
இது தன் தம்பியையும் சேரும் என்று யோசிக்காமல் வேதா பேசி விட, விக்ரம் சோபாவில் தலையைப்பிடித்தபடி அமர்ந்து விட்டான்.
சித்தாரா வேதாவை உறுத்து விழித்து விட்டு, விக்ரமை பார்த்தாள். அவன் உடைந்து போனது நன்றாக தெரிந்தது. சித்தாராவிற்கு இப்போது திருப்தியாக இருந்தது. அவனை உடைக்க வேண்டும் என்று தானே நினைத்தாள்? அதை வேதா செய்து விட்டாள்.
விக்ரமுக்கு தலைநிமிர்ந்து யாரையும் பார்க்க பிடிக்கவில்லல. தங்கைக்கு தான் எப்படிப்பட்ட உதாரணமாக இருந்திருக்கிறோம் என்று புரிய, உள்ளுக்குள் செத்துப்போனான்.
அவனை பார்த்த சித்தாரா, ‘ஓகே. ரெண்டு பேர மட்டும் கவனிக்கலாம்னு இருந்தேன். இவனும் சிக்கிட்டான். மூணு பேரையும் மொத்தமா கவனிச்சுடலாம். வேலை மிச்சம்’ என்று நினைத்துக் கொண்டாள்.
“இத பத்தி நீ ஏன் உன் தம்பி கிட்ட கேட்க கூடாது?” என்று வேதாவை பார்த்து அமைதியாக கேட்டாள்.
தான் விட்ட வார்த்தையில் ஒன்று சித்தாரா பொங்கி எழுவாள். அல்லது அவமானத்தில் ஓடிவிடுவாள் என்று பார்த்தால், அமைதியாக நிற்கிறாளே என்று வேதா தான் குழம்பி விட்டாள்.
“சொல்லுங்க சார். உங்க குடும்பத்துல உள்ளவங்க கேட்குறாங்களே.. சொல்லுங்க. லவ் பண்ணுற பொண்ண ஏமாத்துறது உங்களுக்கு அத்துபடி ஆச்சே. அதுல நீங்க எப்படி எல்லாம் ஏமாத்துனீங்கனு சொல்லுங்க. விது எப்படிப் பிறந்தான். நீங்க என்ன பண்ணீங்கனு சொன்னா.. உங்க தங்கச்சியோட லவ்வருக்கு ஃபியூச்சர்ல உங்க தங்கச்சிய கழட்டி விட ஈசியா இருக்கும்”
வலித்த இதயத்தில் கத்தியை விட்டு திருகினாள் சித்தாரா.
அவன் நிமிர்ந்து பார்க்க, அவன் மனதில் வலி கண்ணில் தெரிந்தது.
“வலிக்குதா விக்ரம்? வலிக்கட்டும். அப்படியே உன் அக்காவுக்கு விசயத்த சொல்லலாம்ல?” என்று கேட்டாள்.
விக்ரம் வாயைத்திறக்கவே இல்லை.
“இவன் பேச மாட்டான். சரி இவன விடு. நானே சொல்லுறேன். நீ சொன்ன மாதிரி, நான் கல்யாணம் பண்ணாம தப்பு பண்ணிட்டேன்னே வச்சுக்க. அதுல சரி பங்கு உன் தம்பிக்கு இருக்குல? அப்ப ஒத்துக்க. உன் குடும்பம் கேடு கெட்ட குடும்பனு ஒத்துக்க. நான் ஒத்துக்கிறேன். நான் நல்லவ இல்ல கெட்டவ தான்னு தைரியமா ஒத்துக்கிறேன். நீங்களும் ஒத்துக்கோங்க. முக்கியமா உன் தம்பிய இப்படி தலைய நிமிர்த்தி.. நான் ஒரு கேடு கெட்டவன். அதுனால என் தங்கச்சி எக்கேடு கெட்டாலும் என் அக்கா என்ன பேசுனாலும், நான் கண்டுக்கவே மாட்டேன். நாங்க அப்படித்தான்னு சொல்ல சொல்லு. இந்த பேச்ச முடிச்சுக்கலாம்” என்று செக் வைத்தாள் சித்தாரா.
சொல்லி விட முடியுமா என்ன? சொல்லி விட்டால் அவன் ஒரு நல்ல அண்ணனாக இருக்க முடியுமா? இல்லை நல்ல தம்பியாக இருக்க முடியுமா?
ஆனால் இப்போது அவன் நல்ல கணவாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்குள் வந்து விட்டான். முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவன், வேதாவை பார்த்தான்.
“நாங்க பிரியுறதுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்று போட்டு உடைத்து விட்டான்.
சித்தாரா இப்போது ஆர்வமாக வேதாவின் முகத்தை பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போல், வேதாவின் முகம் பேயறைந்தது போல் இருந்தது.
“நம்ப முடியலயா வேதா டார்லிங்? அவன் பர்ஸ்ல நாங்க கோவில்ல கல்யாணம் பண்ணப்போ எடுத்த ஃபோட்டோ இருக்கு. எடுத்து வேணா காட்டு விக்ரம். உன் அக்கா நெஞ்சு வெடிச்சு செத்துட போறா. அதுக்குள்ள காட்டிரு. அப்ப தான் ஆத்மா சாந்தி அடையும்”
வேதா தம்பியை பார்த்துக் கொண்டே இருக்க, அவனிடமிருந்து பெருமூச்சு எழுந்தது.
“நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் ஒரே வீட்டுல இருந்தோம். அன்னைக்கு உன்னை வெளிய அனுப்பிட்டு தாலிய கழட்டி எறிஞ்சுட்டு தான் தாரா போனா.. அதான் உனக்கு தெரியல” என்று விக்ரம் சொல்ல, விசாகா கூட இப்போது அதிர்ச்சியாக தான் பார்த்தாள்.
“இப்ப பேசுடி ஓசி சோறு. வாழாவெட்டி நீ ஆண்ட்டிய பார்த்து தப்பு தப்பா பேசுற. இதுல உன் அருமை தொங்கச்சிக்கும் சொல்லிக் கொடுக்குற. இதோ பார் இனி இங்க இருக்கனும்னா மூடிட்டு இருக்கனும். உனக்கும் சேர்த்து தான் சொல்லுறேன். அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் அடங்கி இருக்கதுனா இருங்க. இல்லனா வீட்ட விட்டு வெளிய போங்க. உங்க கறுமத்த எல்லாம் பார்த்துட்டு இருக்க எனக்கு நேரமில்ல. அப்படியே கூட சேர்ந்து இவனயும் கூட்டிட்டு கிளம்புங்க. ஆனா என்னை பத்தியோ ஆண்ட்டி பத்தியோ இனி உங்க வாயில எதாவது வந்துச்சு? என்ன நடக்கும்னு இப்பவே புரிஞ்சுருக்கும் ஜாக்கிரதை”
விரல் நீட்டி எச்சரித்தவள், அங்கு நடப்பதை தடுக்கவோ பேசவோ தெம்பில்லாமல் சுவற்றில் சாய்ந்திருந்த அல்லியின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
மரத்திற்கு அடியில் போட்டுருந்த பென்ச்சில் அமர வைத்து விட்டு, “அழுறதுனா அழுதுடுங்க. இங்க யாரும் வர போறது இல்ல” என்று கூறி விட்டு திரும்பிச் சென்றாள்.
அல்லியின் கண்கள் கண்ணீரை கொட்டத்தான் செய்தது. சில நிமிடங்கள் தனியாக அழுது தேறிக் கொண்டு அமர்ந்திருக்க, விதார்த்தோடு சித்தாரா வந்தாள்.
“பாட்டி.. பாட்டி..” என்று அவன் பேச ஆரம்பிக்க, அல்லி துக்கம் மறைந்து சிரிக்க ஆரம்பித்தார்.
அன்று எல்லோருமே ஆளாளுக்கு அறையில் அடைந்து கிடக்க, சித்தாரா அல்லியின் அறைக்கு வந்தாள்.
விது அல்லியின் மடியில் படுத்து உறங்கிக் கொண்டிருக்க ,”கொடுங்க” என்று தூக்க வந்தவளின் கையைப்பிடித்தார் அல்லி.
“இங்க உட்கார்” என்று அருகே அமர வைத்து, அவளது தோளில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டார்.
சித்தாரா ஆச்சரியமாக திரும்பிப் பார்த்தாலும், விலகாமல் அமர்ந்தாள். நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டார் அல்லி.
“நான் சாயந்தரம் ஏன் அழுதேன் தெரியுமா?” என்று கண்ணை திறக்காமலே கேட்க, சித்தாரா பதில் சொல்லவில்லை.
“அவங்க திட்டுனதுக்கோ பேசுனதுக்கோ அழல. இங்க கல்யாணம் முடிஞ்சு வந்ததுல இருந்து பல தடவ இந்த மாதிரி நிறைய கேட்டுருக்கேன். ஏன் இதுக்கும் மேல பேசுவாங்க. அதெல்லாம் எனக்கு பழகிப்போச்சு. ஆனா.. முதல் தடவ அவங்கள எதிர்த்து எனக்காக பேச ஒரு ஆள் இருக்காங்கனு தெரிஞ்சதும்… மனசு ஒரு மாதிரி இருந்துச்சு…” என்றவருக்கு குரல் தளுதளுக்க ஆரம்பிக்கவும், லேசாக செறுமிக் கொண்டார்.
“எனக்கு பிள்ளை இல்லையேனு ரொம்ப வருத்தம் சித்துமா. எங்கப்பா சொகுசுக்கு பார்த்து அம்மா இவங்களுக்கு கட்டி வைக்காம, ஒரு தினக்கூலி பார்க்குறவனுக்கு கட்டி வச்சுருக்கலாம். நானும் சேர்ந்து உழைச்சு போட்டு, ஒரு புள்ளைய பெத்து சந்தோசமா வாழ்ந்துருப்பேனேனு பல தடவ நினைச்சுருக்கேன். பணமும், வகை வகையா சாப்பாடும், உடுத்த பட்டுத்துணியும் பொம்பளைங்களுக்கு போதுமா? கடவுள் கொடுத்த பெரிய வரம் பிள்ளை பெக்குறது. அத என் கிட்ட இருந்து இப்படி அநியாயமா பறிச்சுட்டாங்களேனு தனியா தான் கதற முடியும். வாயத்திறந்து பேச முடியாது. அதுக்கு எனக்கு தைரியம் வந்ததும் இல்ல. இன்னைக்கு எனக்காக பேசி, எல்லாரையும் அவங்க நிலைய புரியவச்சு அடக்கி வைக்க ஒருத்தி இருக்கானு தெரிஞ்சதும், மனசு நிறைஞ்சு போச்சு. எனக்கு ஒரு பொண்ணு பிறந்துருந்தா எனக்காக இப்படித்தான் பேசியிருப்பா. இப்ப நீ பேசுற. மருமகளா பேசுனியா? மகளா பேசுனியானு தெரியல. ஆனா மனசு இன்னைக்கு லேசானது உன்னால தான்”
கண்ணை மூடி அவள் தோளில் சாய்ந்தபடியே பேசியவர், அவள் கையைப்பிடித்துக் கொண்டார்.
“இதுக்கு நான் எப்படி நன்றி சொல்லுவேன்னு தெரியல. ஆனா வாழ்க்கை முழுக்க எனக்கு ஒரு நிம்மதிய கொடுத்துருக்க. நன்றிமா”
அவரது கை உணர்ச்சி வசத்தால் நடுங்க, அதை தட்டிக் கொடுத்தாள்.
“இதுக்கு போயா லிட்டர் லிட்டரா கண்ணீர் விட்டீங்க? கை தட்டி விசிலடிச்சு சந்தோசமா இருந்துருக்கனும் ஆண்ட்டி. உங்களுக்கு சந்தோசபடக்கூட தெரியல போங்க” என்று சித்தாரா கேலி பேச புன்னகைத்தார்.
திடீரென எதோ யோசித்தவள், “இருங்க வர்ரேன்” என்று எழுந்து சென்றாள்.
‘எங்க போறா?’ என்று பார்த்தாலும் அல்லி எதுவும் கேட்கவில்லை.
சில நிமிடங்களில் மீண்டும் அறைக்குள் வந்து கதவை அடைத்தாள் சித்தாரா. இப்போது இரவு தூங்கப்போகும் முன் அணியும் உடையில் இருந்தாள்.
“இது விதுவுக்கு மாத்தி விட்டா ஃப்ரீயா தூங்குவான். இன்னும் ஏன் மடியில வச்சுருக்கீங்க? பெட்ல போடுங்க. நீங்க அந்த பக்கம் நான் இந்த பக்கம் ஓகே?” என்று கேட்டவள் அல்லியின் புரியாத பார்வையை பார்த்து விட்டு, “இன்னைக்கு நானும் விதுவும் இங்க தான் தூங்கப்போறோம்” என்றாள்.
“நிஜம்மாவா?” என்று கேட்ட அல்லியின் முகத்தில் ஆயிரம் வாட்ச் பல்பின் வெளிச்சம்.
“ஆமா. அவனுக்கு ட்ரஸ்ஸ மாத்தலாம் வாங்க” என்று விதார்த்திற்கு உடையை மாற்றி விட்டு, இருவரும் ஆளுக்கொரு பக்கம் படுத்து விட்டனர்.
அல்லிக்கு தூக்கமே வரவில்லை. இருவரையும் பார்த்துக் கொண்டே இருக்க, “தூங்குங்க ஆண்ட்டி” என்று சித்தாரா அதட்டினாள்.
“தூக்கம் வரலையே.. ரொம்ப சந்தோசமா இருக்கதால தூங்கவே தோணல”
“அப்ப நாங்க மேல் ரூக்கு போயிடவா?”
“வேணாம் வேணாம்”
“அப்ப கண்ண மூடித்தூங்குங்க. நாங்க இங்க தான இருக்கோம்” என்று அழுத்திக்கூறியப் பின்பே கண்ணை மூடினார்.
நிம்மதியாய் ஒரு தூக்கம் விரைவில் வந்தது.
இங்கு மூவரும் நிம்மதியாய் உறங்கி விட, மற்ற மூவரும் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
தொடரும்.
