சித்திரமே 25
![]()
பழைய நினைவுகளில் விக்ரம் மூழ்கிக் கிடக்க, கைபேசி சினுங்கி அவனை நிகழ்காலத்திற்கு அழைத்தது. முகத்தை தேய்த்துக் கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
இரண்டு மணிநேரம் வேலையில் மூழ்கிக் கிடக்க, கதவு தட்டும் சத்தம்.
“எஸ்” என்றதும் அவனுடைய பிஏ எட்டிப்பார்த்தான்.
“சார்.. டீனா மேடம் வந்துருக்காங்க” என்றதும் அவனது புருவம் சுருங்கியது.
“என்ன விசயமா?”
“பர்ஷ்னல்னு சொல்லுறாங்க”
“வரச்சொல்லு” என்றதும் அவன் அகன்றான்.
‘இவ இப்ப எதுக்கு வந்தா? இருக்குற டென்சன் பத்தாதா?’ என்று நினைத்துக் கொண்டாலும், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
டீனா கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.
“ஹாய் விக்ரம்” என்று ஆர்பாட்டமாக ஆரம்பிக்க, விக்ரம் தலையை கூட அசைக்கவில்லை. அவளை கேள்வியாக பார்த்திருந்தான்.
“எப்படி இருக்க?” என்று விசாரித்தபடி டீனா அமர, “ஃபைன். என்ன விசயம்?” என்று நேரடியாக விசயத்திற்கு தாவினான்.
“அப்பாவோட ரிடயர்மெண்ட்க்கு பங்சன் வச்சுருக்கோம். இன்விடேஷன் கொடுக்க வந்தேன்” என்று கூறி அழைப்பிதழை எடுத்து முன்னால் வைத்தாள்.
“என்னைக்கு?”
“வீக்கெண்ட்ல. மறக்காம வந்துடு. எந்த சாக்கும் சொல்லாத. அப்பா உன்னை எதிர்பார்ப்பார். அப்புறம் உனக்கு கல்யாணம் ஆன விசயம் கேள்வி பட்டதால தனியா வந்துடாத. உன் வொஃய்ப் பையன் கூட வரனும்” என்று கூறி பத்திரிக்கையை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அதை வாங்கி பிரித்துப் பார்த்தவன், “ஓகே. பார்க்கலாம்” என்றான்.
“அப்போ கிளம்புறேன். பார்ட்டில பார்க்கலாம்” என்று கூறி விட்டு கிளம்பி விட்டாள்.
அந்த பத்திரிக்கையை நன்றாக படித்து பார்த்தவன், அந்த நாளில் வேறு எந்த வேலையும் இல்லாமல் ஒதுக்கினான்.
டீனா தான் அவனுக்கு வேண்டாதவள். அவளுடைய தந்தை வழக்குரைஞர். அதுவும் கடந்த ஐந்து வருடமாக நீதிபதி பதவியில் இருந்து இப்போது ஓய்வும் பெறுகிறார். அவர் விக்ரமுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அதனால் போயே ஆக வேண்டும்.
சித்தாரா வருவாளா? என்று சந்தேகம் எழுந்தது. காதலிக்கும் போது பார்ட்டி என்றாலே காத தூரம் ஓடிவிடுவாள். அவளை பொறுத்தவரை பார்ட்டி எல்லாம் செய்யக்கூடாத செயல்களில் ஒன்று.
ஆனால் இப்போது மார்டனாக இருக்கிறாள். அழைத்தால் வருவாள் என்றே தோன்றியது. மாலை வீட்டுக்கு சென்றதும் பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்து விட்டான்.
இரவு…
சித்தாரா இரவு அணியும் உடையை அணிந்து கொண்டு, மகனைத்தேடி விக்ரமின் அறைக்குள் நுழைந்தாள். அவன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். அருகில் விக்ரமும் மகன் மேல் கையைப்போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் கையை விலக்கி விட்டு விதார்த்தை தூக்கப்போக, சட்டென அவள் கையை பிடித்தான் விக்ரம்.
“என்ன?” என்று கண்திறந்து கேட்க, “விதுவ தூக்க வந்தேன்” என்றாள் சித்தாரா.
“அவன் தூங்குறான்ல? தூங்கட்டும் விடு” என்று கூறி மகனை நன்றாக அணைத்துக் கொள்ள, அவனும் தந்தையின் மீது காலைப்போட்டுக் கொண்டு தூங்கினான்.
இருவரையும் பார்த்தவள், இடுப்பில் கை வைத்து நின்றாள்.
“இதுங்க கொழுப்ப பாரேன்” என்று முறைத்தவள், விக்ரமின் கையை வேகமாக தட்டினாள்.
“ப்ச்ச்.. என்னடி?”
“விதுவ விடுடா. நைட் நான் பக்கத்துல இல்லனா அழுவான்.”
“அப்ப நீயும் இங்கயே படு” என்றவன், வேகமாக கண்ணை மூடிக் கொண்டான்.
“இங்கயா?” என்று அதிர்ச்சியாக பார்த்தவள் விக்ரமை முறைக்க, அவன் தூங்கி விட்டான்!
விதார்த்தும் அவனோடு ஒட்டிக் கொண்டு தூங்க, “பேசாம இவன இங்கயே விட்டுரலாமா?” என்று யோசித்தாள்.
ஆனால் நிச்சயமாக விதார்த் எதாவது கனவு கண்டால் அன்னையை தேடுவான். கிடைக்கவில்லை என்று அழ ஆரம்பித்தால், சமாதானம் செய்வதற்குள் விடிந்து விடும்.
மெத்தையை பார்த்தாள். அவளுக்கு தாராளமாக இடமிருந்தது. ஆனால் விக்ரமோடு ஒரே மெத்தையில் படுத்துக் கொள்ள விருப்பம் இல்லை. சில நொடிகள் நின்று இருந்தாள். பிறகு விறுவிறுவென வெளியேறினாள்.
அவள் சென்றதும் கண்ணை திறந்தவன் விக்ரம், “என்ன போயிட்டா?” என்று முகத்தை சுருக்கினான்.
அல்லியோடு மகனும் மனைவியும் உறங்க, தான் மட்டும் தனியாய் உறங்குவதா? என்ற பொறாமையில் தான், இன்று விதார்த்தை தன் அறைக்கு தூக்கி வந்து உறங்க வைத்து விட்டான். விதார்த் இருந்தால் நிச்சயமாக சித்தாராவும் இருப்பாள் என்ற நம்பிக்கை.
ஆனால் இப்போது வெளியே சென்று விட, விக்ரமின் முகம் வாடியது.
‘ப்ளான் சொதப்பிடுச்சு. விது அழுவானோ? அழுதா தூக்கிட்டுப்போய் கொடுப்போம்’ என்று முடிவு செய்து கண்ணை மூட, சில நிமிடங்களில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. காதை கூர்மையாக்கி விட்டு, தூங்குவது போல் அமைதியாக கிடந்தான்.
சித்தாரா தரையில் விரித்துப்படுக்கும் மெத்தையை தூக்கி வந்து போட்டாள். இடம் பெரிதாக இருக்க அந்த மெத்தை போதுமானதாக இருந்தது. தலையணையை போர்வையை எடுத்து வந்து போட்டு விட்டு, மகனை பார்த்தாள். நன்றாக உறங்கி இருந்தான்.
‘ஓகே. முழிச்சா இங்க தான இருக்கோம். பார்த்துக்கலாம்’ என்று முடிவு செய்து விளக்கை அணைத்து விட்டு, கீழே படுத்து போர்வையை போர்த்திக் கொண்டு தூங்கவும் ஆரம்பித்து விட்டாள்.
அவள் நடமாட்டம் குறைந்து சில நிமிடங்கள் அமைதியாக கடக்கவும், விக்ரம் அரைக்கண்ணில் நோட்டம் விட்டான். அறை இருளாக இருக்க, கண்ணை நன்றாக திறந்து தேடினான். சித்தாரா கண்ணில் விழவில்லை.
‘ரூம்ம விட்டு வெளிய போற சவுண்ட் கேட்கலயே’ என்று யோசித்தபடி தலையை தூக்கியவன், கீழே படுத்திருந்தவளை பார்த்து அதிர்ந்து விட்டான்.
‘அடிப்பாவி! நான் ஒரு ப்ளான போட்டா இவ ஒரு ப்ளான போடுறாளே? இவளுக்கு இதெல்லாம் யாருடா சொல்லிக் கொடுக்குறது? இந்த பெட்ட எக்ஸ்ட்ராவா வாங்கி வச்ச என்னை சொல்லனும்’ என்று அந்த மெத்தையையும் அதில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த மனைவியையும் முறைத்து விட்டு, தலையனையில் விழுந்தான்.
நள்ளிரவு விதார்த் திடுக்கிட்டு எழ, விக்ரம் அருகே இருந்த மகனை கண்ணை திறக்காமலே தட்டிக் கொடுத்தான். ஆனால் விதார்த் அதை எல்லாம் கவனிக்காமல் கண்ணை கசக்கி, “ம்மா..” என்று அருகே தேடினான்.
மெத்தையில் அவள் இல்லை.
“ம்மா.. ம்மா..” என்றவன் வேகமாக மெத்தையிலிருந்து இறங்க விக்ரம் விழித்து எழுந்தான்.
“ம்மா.. ம்மா..” என்று அழைத்துக் கொண்டே நடந்தவனை, தூக்கத்தோடு சித்தாரா கைநீட்டி இழுத்தாள்.
அன்னை அருகே இருப்பதை பார்த்து விட்டவன், வேகமாக அவளருகே படுத்துக் கொள்ள, அவனுக்கும் போர்வை போர்த்தியபடி சித்தாரா தட்டிக் கொடுத்தாள்.
சில நொடிகளில் இருவருமே உறங்கி விட, விக்ரம் தான் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தான்.
விதார்த் சித்தாராவை மெத்தைக்கு இழுத்து வருவான் என்று பார்த்தால், இவனே கீழே சென்று படுத்து விட்டானே?
மகனை முறைத்து பார்த்து விட்டு, கீழே இறங்கி விறுவிறுவென ஹாலுக்குச் சென்றவன், கைபேசியை எடுத்தான். முகப்பு பக்கத்தில் மணி இரண்டு மற்றும் பத்து நிமிடங்கள் என்று காட்டிக் கொண்டிருந்தது. அதை கொஞ்சமும் கவனிக்காமல், உள்ளே நுழைந்து நண்பன் என்று பதிந்து வைத்திருந்த துரோகியை அழைத்தான். வாகீசன் தான்.
நன்றாக கவிழ்ந்து படுத்து ஏசியில் தூங்கிக் கொண்டிருந்த வாகீசன், பாட்டு பாடி எழுப்ப முயன்ற கைபேசியை, தாலாட்டு பாடுவதாக நினைத்து விட்டான். கைபேசி பாடலில் ஆரம்பித்து, கடைசியாக கதற ஆரம்பிக்க, அதன் பின்பு தான் தூக்கம் கலைந்தது.
சட்டென எரிச்சல் வர, “எவன்டா அது” என்று எடுத்து காதில் வைக்க, அந்த பக்கம் விக்ரம் பேசிய பேச்சில் தூக்கம் தூரப்போனது. பதறியடித்து எழுந்தவனுக்கு, ஏசி மறைந்து அடுப்பில் அமர்ந்தது போல் வியர்க்க ஆரம்பித்து விட்டது.
காது புகையும் வரை திட்டி ஓய்ந்து விட்டு, விக்ரம் அழைப்பை துண்டித்து விட்டான். ஐடியா கொடுத்தவன் வாகீசன் தானே? பிள்ளையை உன் அறையில் வைத்து, சித்ராவையும் உன் அறைக்கே இழுத்து வந்து விடு என்று! அதற்காகத்தான் இந்த திட்டு.
வாகீசனை திட்டி முடித்து விட்டு, மீண்டும் வந்து விக்ரம் படுத்து விட்டான். ஆனால், அங்கு வாகீசன் நிலை தான் மோசமாகி இருந்தது. திட்டி முடித்து பல நிமிடங்கள் வரை வாகீசனுக்கு அதிர்ச்சி விலகவில்லை. இன்னும் காதில் வார்த்தைகள் ஒலித்துக் கொண்டிருந்தது.
மெல்ல சுரணை வந்து கைபேசியை காதிலிருந்து எடுத்துப் பார்த்தான். அது அணைந்து கிடந்தது.
“திட்டி முடிச்சு வச்சுட்டானா? எப்ப?” என்று பார்த்து விட்டு மீண்டும் அழைக்கப்போனவன், வேகமாக கையை பின்னால் இழுத்துக் கொண்டான்.
“இப்ப கூப்பிட்டா இன்னும் கேவலமா கிழிப்பான். காலையில பார்ப்போம்” என்று நினைத்தவன், வேகமாக கைபேசியை அணைத்து போட்டு விட்டான்.
“பொண்டாட்டி ஊருக்கு போயிருக்கானு சந்தோசமா தூங்குனது குத்தமாடா? இப்படி அநியாயமா போன போட்டு…” என்று தனியாக புலம்பியவன், வராத கண்ணீரை துடைத்து விட்டு மெத்தையில் குப்புர விழுந்தான்.
காலையில் விக்ரம் எழும் போது விதார்த் அவனுருகே படுத்திருக்க, சித்தாராவையும் காணவில்லை. மெத்தையையும் காணவில்லை.
“வாட்? எல்லாம் கனவா?” என்று எழுந்து அமர்ந்தவன், ஒன்றும் புரியாமல் சுற்றியும் பார்த்தான்.
“இங்க தான படுத்திருந்தா?” என்று யோசனையாக சுற்றிப்பார்த்து விட்டு கைபேசியை எடுத்துப்பார்க்க, அதில் வாகீசனிடம் பேசியது பதிவாகி இருந்தது.
“ஓஓ.. அப்ப கனவு இல்ல. திரும்ப விதுவ இங்க படுக்க வச்சுட்டு போயிருக்கா” என்று புரிய, அமைதியாய் சில நொடிகள் படுத்திருந்து விட்டு எழுந்து கொண்டான்.
கீழே வந்து பார்த்தால், அதிசயமாக விசாகா அல்லியோடு சமையல் செய்து கொண்டிருக்க, விக்ரமுக்கு நெஞ்சு வலி வரும் போல் இருந்தது.
“சித்தி.. அண்ணா வந்தாச்சு” என்று கூறியபடி உணவு பாத்திரங்களை எடுத்து வந்து வைத்தாள்.
“நீ சமைச்சியா?”
“இல்ல. அவங்க சொல்ல சொல்ல கொஞ்சமா செஞ்சேன். ஆனா இட்லி நான் தான் ஊத்துனேன்” என்று பெருமையாக பேச, “இந்த அதிசயம் எப்படி நடந்தது?” என்று ஆச்சரியமாக கேட்டான்.
“நேத்துல இருந்து தான்” என்று பதில் சித்தாராவிடமிருந்து வந்தது.
அவளும் உள்ளே இருந்து வந்தாள். கையில் ஒரு பழச்சாறு டம்ளர். அதை குடித்துக் கொண்டே, “சாப்பிடு. உன் தங்கச்சி ஆசையா சுட்டுருக்கா இட்லி” என்று கூறி விட்டு லிஃப்ட் பக்கம் சென்று விட்டாள்.
“நீயும் உட்காரு விசாகா”
“நான் சித்தி கூட சாப்பிடுறேன். நீ சாப்பிடு” என்றவள் அருகே அமர்ந்து கொண்டாள்.
“எனக்கு டூ வீலர் லைசன்ஸ் வேணும்ணா. க்ளாஸ் அரேன்ஜ் பண்ணுறியா?”
“பண்ணுறேன். ஸ்கூட்டி வாங்கனும்ல? எந்த மாடல் வேணும்?”
“அத நீ அண்ணி கிட்டயே கேளு. எனக்கு அதுல எல்லாம் எதுவும் தெரியாது. அவங்க ஒரு கார் புக் பண்ணிருக்காங்க. இன்னைக்கு வரும்னு சொன்னாங்க. இவங்களுக்கு மட்டும் எப்படி எல்லாமே தெரியுதோ தெரியல? சரி இரு.. நான் போய் என்னோட ஐடி ப்ரூஃப் எல்லாம் எடுத்துட்டு வர்ரேன். க்ளாஸ்க்கு அப்ளை பண்ணதும் லைசன்ஸ் வாங்கிடலாம்” என்று கூறி விட்டு வேகமாக எழுந்து படிகளை நோக்கி ஓடினாள்.
விக்ரம் இட்லியை கையில் பிடித்தபடி சிலையாக அமர்ந்து விட்டான்.
‘அண்ணி? அண்ணியா?’ என்று மலைத்தவனுக்கு, இப்படி அடுத்தடுத்து கிடைத்த அதிர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை.
மீண்டும் அறைக்கு வந்தவன், சித்தாராவிடம் சென்றான்.
அவள் விதார்த்தை குளிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.
“தாரா”
“நீ இன்னும் கிளம்பல?”
“கார் புக் பண்ணிருக்கியா?”
“ஆமா”
“சொல்லவே இல்ல?”
“ஏன் சொல்லனும்?”
“நான் போடுற பணத்துல தான வாங்குற?”
“அதுனால உனக்கு ரிப்போர்ட் கொடுக்கனுமா?”
பதிலுக்கு பதில் அவள் பேச, முறைத்துப்பார்த்தான்.
“இப்ப எதுக்கு இங்க வந்து நின்னு கேள்வி கேட்டுட்டு இருக்க?”
“ம்மா.. குளிச்சுட்டேன். போதும்” என்று விதார்த் தண்ணீரை விட்டு வெளியே வர, அவனை ஒரு துண்டால் சுற்றி தூக்கிக் கொண்டாள்.
விக்ரமை கடந்து வெளியே செல்ல, அவனும் பின்னால் வந்தான்.
“உன் கிட்ட இன்னொன்னு கேட்கனும். விசாகா எப்படி ஒரே நாள்ல இவ்வளவு மாறுனா?”
“விசத்தை ஏத்துறதுக்கு உன் அக்கா இல்ல. விசாகா ஃபோன வாங்கி ஆஃப் பண்ணி வச்சுட்டேன். அதான் இவ்வளவு மாற்றம். பேசிக்கா இதான் விசாகா. உன் அக்கா தான் அவள கெடுத்து வச்சுருக்கா”
“அக்காவ ஏன் இப்ப குறை சொல்லுற? அம்மாவுக்கு அப்புறம் அக்கா தான் எங்கள பார்த்துக்கிட்டது”
“கிழிச்சா.. அவ பார்த்துக்கிட்ட வட்சணத்துல தான் விசாகாவ ஹோட்டல்ல வச்சு கையும் களவுமா பிடிச்சேன். பார்த்திட்டாளாம்.. அதுவும் அம்மா மாதிரி..”
சித்தாரா பல்லைக்கடிக்க, விக்ரமிடம் வார்த்தைகள் இல்லை.
தொடரும்.
