சித்திரமே 26
![]()
விசாகா வாகனம் ஓட்டும் பயிற்சியில் இறங்க, அதை முடித்துக் கொண்டு அலுவலகம் வந்தால் போதும் என்று விக்ரம் கூறியிருந்தான்.
வாகனம் ஓட்டும் பயிற்சி ஒரு பக்கம் போக, சமையல் பயிற்சியும் ஒரு பக்கம் போனது. அல்லியும் விசாகாவும் இயல்பாக பேச ஆரம்பித்தனர். இருவரிடையே பிரச்சனையை கிளப்பி விட ஆள் இல்லையே. அதுவே இருவரும் சுமூகமாக போக வசதியாக இருந்தது.
விசாகாவின் காதலன் விசாகாவிடம் திரும்பிப்பேசவே இல்லை. அவனுக்கு சித்தாரா அடித்த கோபம் போகவில்லை. அவனிடம் பேசவும், அவனோடு ஊர் சுற்றவும் விசாகாவுக்கு இப்போது நேரமில்லை.
வீட்டில் நிம்மதியும் சந்தோசமும் கிடைக்காமல் தான் வெளியே சுற்றினாள். இப்போது வீடே சந்தோசத்தை தர, மற்றது எல்லாம் மறந்தே போனது.
இவர்களின் நிம்மதி வேதாவுக்கு பிடிக்கவில்லை. அதுவும் தங்கை தன்னிடம் ஒரிரு வார்த்தைக்கு மேல் பேசாமல் அழைப்பை துண்டித்து விடுவது, வேதாவுக்கு எரிச்சலாக இருந்தது.
சுந்தர் மீண்டும் வேலையாக கிளம்ப, அன்று காலையே தம்பியின் வீட்டுக்கு கிளம்பி வந்து விட்டாள்.
விதார்த்தோடு, படிகளை எண்ணிக்கொண்டே இறங்கி வந்து கொண்டிருந்தாள் சித்தாரா. மகனுக்கு எண்களை சொல்லிக் கொடுத்த மாதிரியும் இருந்தது. விளையாட்டாகவும் இருந்தது.
கடைசி படியில் விதார்த் குதித்து கை தட்ட, சித்தாரா அவனது கன்னத்தைக்கிள்ளி முத்தமிட்டாள்.
“கரெக்ட்டா சொல்லிட்டியே.. எதாச்சும் பரிசு கொடுக்கனுமே.. என்ன வேணும்?”
“ம்மா.. ஐஸ்..” என்றதும், “வர வர ஐஸ் பைத்தியமாகிட்ட நீ” என்று திரும்பியவள், வாசலில் ஏறி வந்து கொண்டிருந்த வேதாவை பார்த்து விட்டு, “பாட்டி வெளியில இருப்பாங்க. போய் கூட்டிட்டு வந்து ஐஸ்க்ரீம் எடுத்து கொடுக்கச்சொல்லு” என்றாள்.
விதார்த் குதித்தபடி பாட்டியைத்தேடி ஓடி விட்டான்.
“ஏய்.. வாழாவெட்டி.. என்ன மறுபடியும் பொறந்த வீட்டுக்கே வந்துட்டியா ஓசி சோறு திண்ண?” என்று நக்கலாக கேட்டபடி வேதாவை நோக்கிச் சென்றாள்.
வேதா முறைத்துக் கொண்டே வர, பின்னால் அதிர்ந்து நின்றிருந்தான் சுந்தர். அவனை பார்த்து சித்தாரா அதிரவில்லை.
“நீங்களும் வந்துருக்கீங்களா..? வாங்க உள்ள வாங்க” என்று இயல்பாய் வரவேற்றாள்.
சுந்தர் தான் குழம்பி விட்டான். சற்று முன் தன் மனைவியை தரக்குறைவாக பேசி விட்டு, உடனே தன்னை உபசரிக்கிறாளே?
“என்ன பார்க்குறீங்க?” என்று கேட்டவள் ஒரு நொடி யோசித்து விட்டு, “உங்க பொண்டாட்டிய திட்டுனதுல கோபமா? உள்ள வாங்க பேசிடுவோம்” என்று அழைத்தாள்.
அவன் உள்ளே வந்து சித்தாராவை வெற்றுப்பார்வை பார்த்து விட்டு, மனைவியை தான் முறைத்தான்.
“என்ன இதெல்லாம்?”
வேதா உடனே கண்ணை கசக்கியபடி ஆரம்பிக்கபோக, “அட சொன்னது நானு.. என் கிட்டயே கேளுங்க ப்ரதர்.. உங்க பொண்டாட்டி எங்க வீட்டுல ஓசி சோறு தின்னுறானு இப்ப மட்டும் இல்ல.. ஏற்கனவே சொல்லி தான் உங்க வீட்டுக்கு துரத்தி விட்டேன். திரும்ப வந்து நிக்கிறா” என்றாள் சித்தாரா.
சுந்தருக்கு சட்டென கோபம் ஏறி விட்டது. தன் மனைவியை இப்படிப்பேசினால் யாருக்குத்தான் கோபம் வராது?
“இங்க பாருமா அவ்வளவு தான் லிமிட்”
“உங்க பொண்டாட்டி லிமிட்ட க்ராஸ் பண்ணும் போது நான் மட்டும் எப்படி லிமிட்டா இருப்பேன்?” என்று சித்தாரா பதிலுக்கு கேட்டாள்.
“அவ உன்னை வாழா வெட்டினு சொன்னாளா? இல்ல ஓசி சோறுனு சொன்னாளா?”
“இல்லயே.. அதுக்கும் மேல ஒன்னு சொன்னா.. என் புருஷன் என்னை வீட்டை விட்டு துரத்துனுமாம். உங்க அருமை பொண்டாட்டி ஆசைப்படுறாங்க” என்று பற்ற வைத்து விட்டாள்.
“வாட்? வேதா.. என்ன இது?” என்று அதிர்ச்சியாக அவளிடம் கேட்க, “இல்லங்க.. இவ என் தம்பிக்கு வேணாம். இவ அப்பா..” என்று இழுத்தாள்.
“அதுக்காக? உன் தம்பிக்கிட்ட பொண்டாட்டிய பிரிய சொல்லுவியா? என்ன வேதா இது? அடுத்தவங்க வாழ்க்கையில ஏன் தலையிடுற? அப்படிப்பேசப்போய் தான் இப்போ உன்னை கண்டபடி பேசுறாங்க”
“என் தம்பி அடுத்தவன் இல்ல”
வேதா சிலிர்த்தாள்.
“ஆனா நான் அடுத்த வீட்டுல இருந்து வந்தவ தான். என்னை டைவர்ஸ் பண்ணி துரத்துனு உன் தம்பி காதுல ஓதிட்டே இருக்கியே. அப்புறமும் நான் வாய மூடிட்டு இருந்தா, என்னை விட லூசு உலகத்துல யாரும் இருக்க முடியாது” என்று சித்தாரா பல்லைக்கடித்து பேசினாள்.
சுந்தர் கண்ணை மூடித்திறந்து கோபத்தைக்கட்டுப்படுத்தினான்.
“இதுக்கு நீ வேதா கிட்ட சண்டை போடலாம். திட்டலாம். ஆனா இது அவ தம்பி வீடு. இங்க இருக்க அவளுக்கு உரிமை இருக்கு. அத நீ ஓசி சோறுனு சொல்லக்கூடாது” என்று சுந்தர் மனைவிக்காக நின்றான்.
“தாராளமா உரிமை இருந்துட்டுப்போகட்டும். ஆனா, என் புருஷன் சம்பாதிக்கிறத என் பேர்லயும் என் பிள்ளை பேர்லயும் எழுதி வச்சா, இவளுக்கு ஏன் வலிக்குது? இவங்க குடும்ப சொத்து கூட இல்ல. விக்ரம் சுயமா சம்பாதிச்ச சொத்த என் பேர்லயும் விது பேர்லயும் எழுதி வைச்சா.. அவன தடுக்க உங்க பொண்டாட்டிக்கு என்ன உரிமை இருக்கு? என் புருஷன் சொத்து விசயத்துல இவ தலையிட்டா, அதுல சாப்பிடுற இவள ஓசி சோறுனு தான் சொல்லுவேன். நான் வந்து கேட்கட்டுமா? நீங்க எதுக்காக உங்க பொண்டாட்டிக்கு சேலை வாங்கி கொடுக்குறீங்க? நகை வாங்கி கொடுக்குறீங்கனு? அப்படி கேட்டா இவ என்னை விட்டுருவாளா?”
பற்ற வைத்த நெருப்பில் இப்போது தாராளமாக பெட்ரோலை ஊற்றினாள் சித்தாரா. அது திகுதிகுவென எரிய ஆரம்பித்தது.
சுந்தருக்கு இந்த விசயம் பிடிக்கவில்லை. விக்ரம் சம்பாதித்த பணத்தை, அவன் மனைவி மகனுக்கு கொடுப்பதில் வேதாவுக்கு என்ன பிரச்சனை வந்தது?
அவன் அதிருப்தியாக வேதாவை பார்த்தாலும், சித்தாரா முன்னால் மனைவியை விட்டுக் கொடுக்கவும் முடியவில்லை. ஆனால் சித்தாரா விடுவாளா?
“நீங்க கேட்காமலே சொல்லிடுறேன். ஏன் வாழா வெட்டினு கூப்பிடுறேன்னு தெரிஞ்சுக்கோங்க. பொண்ணுனா பிறந்த வீட்டுக்கு வரலாம். வாரத்துல ஒரு நாள். மாசத்துக்கு ஒரு வாரம்னு கூட வரலாம். வந்தா வரவேற்று வகை வகையா சமைச்சு போட்டு, சீராட்டி பாராட்டி அனுப்பி வைக்கலாம். அது முறை. ஆனா இவ?
நீங்க அந்த பக்கம் வேலைக்கு போனதும், இந்த பக்கம் உங்கம்மா சொல்லுற வேலைய செய்ய சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு, அவங்க கூட சண்டையும் போட்டுட்டு கிளம்பி இங்க வந்து உட்கார்ந்துடுறா. சரி நம்ம வீட்டு புள்ள தானனு இங்க இருக்கவங்க உட்கார வச்சு சோறு போட்டாலும், தின்னுட்டு கம்முனு இருக்காளா? இல்லையே.. குடும்பத்துல நூறு பிரச்சனைய கிளப்பி விடுறா.
பொண்ணுனா பொறுப்பு வேணும். புகுந்த வீட்டுல மாமியார் மாமனார கவனிச்சு, புருஷன் இல்லனாலும் புள்ளைங்கள பார்த்து, குடும்பத்தோட மொத்த முதுகெலும்பா நிக்கனும். இவ நிக்கிறாளா? கட்டுன புருஷன் இல்லனதும், மாமியார மதிக்காம பேசிட்டு, பெத்த புள்ளைங்கள ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டு, முகம் முழுக்க மேக் அப்ப அள்ளி பூசிக்கிட்டு, இளமையா இருக்கேன்னு சோ காட்டிட்டு இருக்கா. இவ எல்லாம் குடும்பத்தலைவியா? முதல்ல ஒரு நல்ல அம்மாவா இருக்கனும். அதுவே இவளால முடியல. இவ இங்க வந்து பேசுற பேச்சு இருக்கே?”
இடையில் நிறுத்திய சித்தாரா, பேயடித்தது போல் நின்றிருந்த வேதாவை முறைத்துப்பார்த்தாள்.
“இதுல கூட இவள நான் மன்னிச்சுடுவேன். ஆனா ஆண்ட்டிய மலடினு சொல்லுறா பாரு.. அத மட்டும் மன்னிக்கவே மாட்டேன். அவங்கள வார்த்தைக்கு வார்த்தை மலடினு சொல்லும் போது இனிக்குது.. இவ வாழாவெட்டினு சொன்னா மட்டும் கசக்குதோ? பிறந்த வீடே கதினு கிடந்தா வாழா வெட்டினு தான் கூப்பிட முடியும். வாம்மா மகாராணினு வரவேற்க முடியாது.”
மொத்தமாய் வெடியை கொளுத்திப்போட்டு, அது சுந்தரிடம் வெடிப்பதை பார்த்தபடி நின்றிருந்தாள்.
சுந்தருக்கு தன் மனைவியின் அலங்காரங்கள் பற்றித்தெரியும். தன் தாய்க்கும் மனைவிக்கும் ஒத்துப்போகவில்லை என்பதை புரிந்து வைத்திருந்தான். ஆனால் இப்படி பிறந்த வீட்டில் பிரச்சனையை இழுக்கிறாள் என்று தெரியவில்லை.
“இவ இன்னும் நிறைய பண்ணிருக்கா. இன்னொரு சாம்பிள் சொல்லுறேன். விசாகா அவளோட லவ்வரோட ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்க போனா. நானும் ஆண்ட்டியும் கண்டிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டோம். அதுக்கு மேடம் கேட்குறாங்க.. அதுல என்ன தப்பு? அவ அப்படித்தான் போவா.. பிள்ளை பெக்காத மலடி உனக்கு என்ன தெரியும்னு ஆண்ட்டிய கேட்குறா. இப்ப சொல்லுங்க. இத்தனைக்கு அப்புறமும் இவள நான் வீட்டுக்குள்ள நல்லபடியா வரவேற்கனுமா? அப்படி பண்ணா நாளைக்கு நாங்க தான் குடும்பத்தோட நடுத்தெருவுல நிக்கனும்”
இப்போது சில பல பிட்டுகளை சேர்த்து போட்டு கொளுத்தி விட, சுந்தர் வேதாவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான். பிறகு திரும்பி விறுவிறுவென நடக்க ஆரம்பித்து விட்டான். அவனது பார்வையில் உள்ளம் நடுங்கிப்போன வேதா, அவன் பின்னால் ஓடினாள்.
வந்தவளை வாசலிலேயே துரத்தி விட்டு விட்டு, கையில் இல்லாத தூசியை தட்டிக் கொண்டே அல்லியைத்தேடிச் சென்றாள் சித்தாரா. வேதா பயந்து பதறி ஓடியதை பார்க்க சிரிப்பாக இருந்தது.
‘வந்து பிரச்சனையா இழுக்குற? இப்ப உன் குடும்பத்து பிரச்சனைய சமாளி’ என்று நக்கலாக நினைத்துக் கொண்டாள்.
அல்லி வந்த மருமகனுக்கு காபி கலந்து கொண்டிருக்க, “அவங்க கிளம்பிட்டாங்க ஆண்ட்டி. அந்த காபிய எனக்கு கொடுங்க” என்று வாங்கிக் கொண்டாள் சித்தாரா.
வேதா ஓடிப்போய் சுந்தரின் காரில் ஏறிக் கொள்ள, அவன் இறுகிப்போன முகத்தோடு காரை ஓட்டினான்.
காலையில் சுந்தர் ஊரை விட்டுச்செல்வது தெரிந்ததும், “என் தம்பி வீட்டுல என்னை விட்டுருங்க” என்று வேதா அடம்பிடித்துக் கிளம்பியிருந்தாள்.
விட்டுச்செல்ல இங்கு வந்து, மனைவி நடந்து கொள்ளும் முறையை கேட்டவனுக்கு இதயம் நொறுங்கி விட்டது. அவளது செய்கையை தானே செய்தது போல் இருந்தது. அவளுக்கு கிடைத்த அவமானம், தனக்கு கிடைத்தது போல் உடைந்து போனான்.
உன் வீட்டில் வாழாமல், என் வீட்டில் வந்து என் வாழ்க்கையை குழைக்கிறாள் உன் மனைவி என்று, விரல் நீட்டி குற்றம் சாட்டி விட்டாள் சித்தாரா. தாங்கவே முடியவில்லை அவனால். ஸ்டியரிங்கில் ஓங்கி அடித்து தன் கோபத்தை கட்டுப்படுத்தினான். அந்த அவமானத்தை ஜீரணிக்க முடியவில்லை.
வேதா அவனது கோபத்தை பார்த்து மிரண்டு போய் அமர்ந்து இருந்தாள். வாயைத்திறக்கவே பயமாக இருந்தது. அவள் அவனை பார்ப்பதும் சாலையை பார்ப்பதுமாக இருக்க, தங்கள் வீட்டுக்கு வந்தவன் காரை விட்டிறங்கி வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்.
அவனுடைய அன்னை கோமதி, தலை வலிக்கு தைலம் தேய்த்தபடி படுத்திருந்தார். சட்டென நின்று அவரிடம் வந்தான்.
“என்னம்மா? தலை வலியா?”
“ஆமாபா.”
“மாத்திரை வாங்கிட்டு வரவா?”
“வேணாம். ஒரு கடுங்காபிய போட்டு குடிச்சா சரியாகிடும். மாத்திரைய போட்டு உடம்ப பழக்கி விடக்கூடாது. என்ன.. எந்திரிச்சு போய் போடனும். உடம்பெல்லாம் வலினு படுத்திட்டேன்”
“அப்ப நான் போடுறேன்” என்று வேகமாக திரும்பிய மகன் கையை பிடித்துக் கொண்டார்.
“நானே போட்டுக்கிறேன். உனக்கு அதெல்லாம் தெரியாது. நீ போய் கிளம்பு போ. வேலைய வச்சுட்டு இங்க சுத்தாத”
“ஒரு காபி போடுறதுல நேரமாகிடுமா? நானே போடுறேன்”
“அடேய்.. உனக்கு தெரியாதுடா. நான் போடுறேன் போ. புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சு, வீடு நிறைய பேரன் பேத்திகளோட சந்தோசமா இருக்கலாம்னு நினைச்சேன். எங்க? ஒத்தையில கிடக்கனும்னு விதி. உனக்கும் காபி போடுறேன். குடிச்சுட்டு போ” என்று பேசிக்கொண்டே எழுந்து சென்று அவரே காபியை கலந்தார்.
சுந்தர் அவர் பின்னால் சென்று அருகிலேயே நின்று கொண்டான்.
வாசலில் நின்றிருந்த வேதாவுக்கு, இதயம் வாய்வழியே வந்து விடும் போல் இருந்தது.
“ம்மா.. நாளைக்கு பத்தாவது பதினோராவது புள்ளைங்க பரிட்சை முடியாதுமா. இந்த வருசம் உங்க பேரப்புள்ளைங்கள இங்க கூட்டிட்டு வந்து, இங்க இருக்க ஸ்கூல்ல சேர்க்கலாம்னு இருக்கேன்”
“உண்மையாவா சொல்லுற? புள்ளைகள கவனிச்சு எம்புட்டு நாளாகுது? ஹாஸ்டல் சாப்பாடுல வத்தலும் தொத்தலுமா வந்து நிக்கும் போது மனசே ஆற மாட்டேங்குது. என்னத்த போர்டிங் ஸ்கூலோ போ.” என்று பேசியபடி காபியை போட்டு, அதில் ஒரு டம்பளரை நன்றாக ஆற வைத்து மகன் கையில் திணித்தார்.
அதன் பிறகே தன்னுடையதை எடுத்துக் குடித்தார்.
இவர்கள் பேச்சை எல்லாம் வேதா கேட்டுக் கொண்டே நின்றிருந்தாள். வியர்த்து கொட்டி மயக்கம் வந்து விடும் நிலைமை அவளுக்கு.
காபியை குடித்தபடி வெளியே வந்த கோமதி, அப்போது தான் மருமகளை பார்த்தார்.
“இவ என்ன போன வேகத்துல திரும்பி வந்து நிக்கிறா? பிறந்த வீடே கதினு கிடப்பா. என்ன விசயம்?” என்று மகனை கேட்க, அவன் வேதாவை முறைத்து விட்டு, பதில் சொல்லாமல் அறைக்குள் சென்றான்.
‘எதுவும் சண்டையோ?’ என்று யோசித்தாலும், கோமதி அதற்கு மேல் எதுவும் யோசிக்காமல் காபியை குடித்து முடித்தார்.
அங்கே வேதா கணவனிடம் காலில் விழாத குறையாக கெஞ்சினாள். அவன் மசிந்தால் தானே?
அவன் போக்கில் கிளம்பி விட்டான். வேதா பேசிய எந்தபேச்சுக்கும் பதில் வரவில்லை. கடைசியாக நின்று அவளை திரும்பிப் பார்த்தான்.
“என் அம்மாவ நீயும், உன்னை என் அம்மாவும் நல்லா பார்த்துப்பீங்கனு நம்பித்தான் நான் நிம்மதியா ஊருக்கு போறேன். ஆனா, அவங்க தனியா கிடந்து தவிச்சுட்டு இருக்காங்க. அம்மாவுக்காக பொண்டாட்டிய விட்டுக்கொடுக்கவும், பொண்டாட்டிக்காக அம்மாவ விட்டுக் கொடுக்கவும் என்னால முடியாது. ஆனா நீ செய்யுறது.. இன்னைக்கு உன் தம்பி பொண்டாட்டி அசிங்கபடுத்துனது உன்னை மட்டும் இல்ல.. என்னையும் சேர்த்து தான். ஒழுங்கா பொண்டாட்டிய வச்சு வாழ துப்பில்லாம, பிறந்த வீட்டுக்கு வாழாவெட்டியா ஓசி சோறு தின்ன அனுப்பிட்டேன்னு சொல்லிட்டா. கேட்டு உடைஞ்சுட்டேன். திரும்ப அங்க போறதுனா போ. ஆனா இங்க திரும்பி வந்துடாத. எனக்கு மானம் ரோசம் தான் முக்கியம்” என்று கூறிவிட்டு, உடனே கிளம்பிச் சென்று விட்டான்.
தொடரும்.
