சித்திரமே 27
![]()
காலையில் வந்த வேதவல்லியை துரத்தி விட்டதை நினைத்து, நீச்சல் உடையில் மகனோடு நீச்சல் குளத்தில் விளையாடி சிரித்துக் கொண்டிருந்தாள் சித்தாரா.
“ஏன்மா இப்படி பேசுன?” என்று அல்லி சற்று வருத்தப்பட்டார்.
என்ன இருந்தாலும் அவள் இவ்வீட்டு பெண். அவளை அவளது கணவனிடம் குறை கூறுவது தவறல்லவா? அல்லிக்கு வேதாவிடம் எவ்வளவு கோபம் இருந்தாலும், அவரால் இதை ஏற்க முடியவில்லை.
“நீங்க சாஃப்ட் ஆண்ட்டி. உங்களுக்கு இது கஷ்டமா தான் இருக்கும். ஆனா இப்படி யோசிங்க. எப்பவும் இங்கயே கிடக்குறது நல்லதா? அவளும் குடும்பம் குழந்தை குட்டினு பார்த்தா தான பொறுப்பு வரும்? நாளைக்கு அந்த பிள்ளைங்க வளர்ந்து நிக்கும் போது, இவ அவங்களுக்கு என்ன செய்வா? இப்ப அவ வீட்டுக்காரு காதுல விசயத்த போட்டாச்சு. இனிமேலாச்சும் அவரு அவள நல்லபடியா குடும்பத்தலைவியா மாத்தட்டும்” என்று கூறி அவரை சமாதானம் செய்து விட்டு, மகனை கவனித்தாள்.
தண்ணீருக்குள் அவனுக்கு நீச்சல் பழகிக் கொடுத்தாள். மிதக்கும் வளையங்களை மாட்டிக் கொண்டு, அவன் கையை காலை ஆட்டி குதூகலமாக விளையாடினான்.
அவனை மிதக்க வைத்து, அவனோடு மிதந்து சித்தாராவும் விளையாட, அல்லி கரையில் அமர்ந்து வேடிக்கை தான் பார்த்தார்.
இருள் சூழ்ந்து தண்ணீர் குளிர ஆரம்பிக்கவும், மகனை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
விதார்த்துக்கு முகத்தை துடைத்தவள், சட்டென மேலே நிமிர்ந்து பார்த்தாள். விக்ரம் அங்கு நின்று இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனை பார்த்து உதட்டை சுழித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். இன்னும் விக்ரமுக்கு வேதா வந்து சென்ற விவரம் தெரியாது. யாரும் சொல்லவும் இல்லை.
இரவு சாப்பிட்டு விட்டு, அல்லியிடமும் விசாகாவிடமும் சித்தாரா கதை பேசிக் கொண்டிருக்க, விக்ரம் முதலிலேயே மாடிக்கு சென்று விட்டான்.
“ம்மா.. தூங்கு” என்று விதார்த் கண்ணை கசக்க, “சரி நீங்களும் போய் படுங்க. அய்யாவுக்கு தூக்கம் வந்தடுச்சு” என்று எழுந்து அறைக்கு வந்தாள்.
அங்கு அவளை வரவேற்க விக்ரம் அமர்ந்து இருந்தான்.
“ஹாய்..” என்று அவன் கையாட்ட, “நீ இங்க என்ன பண்ணுற?” என்று சந்தேகமாக கேட்டாள்.
“நான் இங்க தான் தூங்க போறேன். என் பையன் கூட” என்றவன் மெத்தையை தட்டி, “விது வா.. அப்பா கூட தூங்கலாம்” என்றான்.
விதார்த் வேகமாக குதித்துக் கொண்டு ஓடினான்.
“வாட்? நீ ஏன் இங்க தூங்கனும்?”
“ஏன் நீ மட்டும் தான் விது கூட தூங்கனும்னு சட்டமா என்ன? நானும் தூங்குவேன். விது அப்பா இங்க தூங்கட்டுமா? வேணாமா?”
“வேணும்.. இங்கயே தூங்கலாம்” என்று விதார்த் அவன் தோளில் தொங்க, சித்தாராவை மிதப்பமாக பார்த்தான் விக்ரம்.
“இப்ப எதுக்கு இந்த வேலை?” என்று சித்தாரா சந்தேகமாக பார்க்க, “என் புள்ளைக்காக. அவனுக்கு அம்மா மட்டும் போதாது. அப்பாவும் வேணும்” என்று வசனம் பேசினான்.
‘நம்ப மாட்டேன்’ என்பது போல் சித்தாரா பார்க்க, “விது.. நீ உன் பொம்மைய எடுத்துட்டு வா. நாம தூங்கலாம்” என்றதும், வேகமாக இறங்கி ஓடினான் மகன்.
“பயப்படாத.. அப்படி உன்னை ஒன்னும் பண்ணிட மாட்டேன். நடுவுல தான் விது இருப்பானே” என்று விக்ரம் சிரித்தபடி கூற, சித்தாரா நக்கலாக சிரித்தாள்.
“அப்படியா? பார்ப்போம்” என்று கூறி விட்டு, உறங்க ஆயத்தமானாள்.
அவனறைக்கு அவளை வர வைப்பது கடினமாக இருந்தது. அதற்காக அவனே அவளுடைய அறைக்கு வந்து விட்டான். இங்கு அவள் கீழே மெத்தையை விரித்து படுக்க மாட்டாள் அல்லவா?
விதார்த்தை நடுவில் வைத்து விட்டு, ஆளுக்கொரு பக்கமாக இருவரும் படுத்து விட்டனர். சித்தாரா விக்ரமை கணக்கில் கொள்ளாமல் தூங்க ஆரம்பித்து விட, விக்ரம் தான் இருவரையும் பார்த்தபடி விழித்துக் கிடந்தான்.
தூக்கம் வரவில்லை. நிம்மதியாக இருந்தது. பல நாட்களாக தனிமையில் தூங்காமல் கிடந்தவனுக்கு, இவர்கள் அருகே இருப்பது நிம்மதியை கொடுத்தது. அதே நிம்மதியோடு கண்ணை மூடினான்.
நள்ளிரவு.. புரண்டு படுக்கும் போது தூக்கம் தடை பட்டது. அருகே விதார்த் உருண்டு புரண்டு தூங்கிக் கொண்டிருந்தான். அவனது தலையை வருடி விட்டு, எழுந்து கழிவறை சென்றான். திரும்பி வரும் போது, விதார்த் மேலும் உருண்டிருக்க, சித்தாராவுக்கும் மகனுக்கும் இடையில் தாராளமாக இடமிருந்தது.
தூக்கத்தில் மகன் தள்ளிப்போனது தெரிய, மெல்ல நெருங்கி மனைவியின் அருகே வந்து படுத்துக் கொண்டான். சில நொடிகள் அமைதியாக சித்தாராவை பார்த்து விட்டு, பிறகு அவள் மீது கைபோட்டுக் கொண்டு, கண்ணை மூடி படுத்துக் கொண்டான்.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவள், அவன் கை மேலே பட்டதும் பட்டென கண்ணை திறந்து விட்டாள்.
கையை ஒரு முறை பார்த்து விட்டு திரும்பிப் பார்த்தாள். மகன் நடுவே இல்லை. விக்ரம் தான் அருகே இருந்தான். தூக்கத்தில் மகன் தள்ளிப்போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.
விக்ரம் கையை பார்த்தவள், சிறு சலிப்பும் எரிச்சலுமாக எடுத்து விட்டாள்.
‘லூசு’ என்று மனதில் திட்டிக் கொண்டு, கண்ணை மூடினாள்.
ஆனால் சில நொடிகளில் மீண்டும் அவன் கை வந்து மேலே விழுந்தது. பட்டென கண்ணை திறந்து கையை பார்த்தவளுக்கு கோபமும் வந்தது.
‘என்ன திரும்ப கைய போடுறான்?’ என்ற யோசனையோடு திரும்பி பார்க்க, அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இல்லை அப்படி நடித்துக் கொண்டிருந்தான்.
‘என் மேல கைய போட்டு தான் தூங்குவீங்களோ? இரு மவனே’ என்று பல்லைக்கடித்தவள், தன்னிடம் இருந்த ஊக்கு ஒன்றை எடுத்தாள்.
‘ரொமான்ஸ் சீன் வைக்கிறியா வெண்பனி.. இப்ப கொடுக்குறேன் பாரு டுவிஸ்ட்டு’ மனதில் வெண்பனியை வறுத்தாள்.
ஊக்கை திறந்தவள், ஒரு கள்ளச்சிரிப்போடு தன் மீது கிடந்த விக்ரம் கையில் நச்சென குத்தி எடுத்து விட்டாள்.
“ஆஆஆ…” என்ற அலறலோடு அவன் பதறி எழ, அவளுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. வாய் விட்டு சிரித்தாள்.
“அடிப்பாவி.. என்ன பண்ண?” என்று விக்ரம் கையை பார்த்துக் கொண்டே கத்த, சித்தாராவிற்கு சிரிப்பு பீறிட்டது.
“ஹான்.. வைத்தியம் பண்ணேன். மேல கை விழுகுது.. என்ன மேன் ரொமான்ஸா? பிச்சு புடுவேன். இன்னொரு தடவ கை மேல பட்டுச்சு…”
துளிர்த்த ரத்தத்தை துடைத்துக் கொண்டிருந்தவன் அவளை முறைத்து, “என்ன பண்ணுவ?” என்று எகிறினான்.
“நெக்ஸ்ட் டைம் ஊக்கு வராது. பெரிய கத்தியா எடுத்து கையில சொருகிடுவேன். போ தள்ளி” என்று அதட்டி விட்டு, திரும்பிப் படுத்து விட்டாள்.
அவன் தான் பயந்து போய் கையை மடக்கிக் கொண்டான். ஆனால் சித்தாரா மீண்டும் எழுந்து, விதார்த்தை தூக்கி நடுவில் போட்டு விட்டு, “ஒழுங்கா அங்குட்டு போய் படு. பக்கத்துல வந்த.. கொலை தான்” என்று மிரட்டி விட்டு படுத்து விட்டாள்.
விக்ரம் கையை தடவிக் கொண்டே அவளை பார்த்தபடி அமர்ந்து இருந்தான். கையை மேலே போட்டதற்கே இப்படியா?
“இவள எப்ப சமாதானம் பண்ணி.. விதுக்கு ஒரு தங்கச்சிய பெத்து…” என்று அவன் சலிக்க, “அதெல்லாம் கனவுல கூட நடக்காது. மூடிட்டு தூங்கு” என்று சித்தாரா அதட்டினாள்.
அப்போது தான் மனதில் நினைத்ததை வாய் விட்டு பேசி விட்டோம் என்று புரிந்தது.
“ஏன்டி நடக்காது?”
“ஏன்னா நான் மறுபடியும் உன் கிட்ட ஏமாற மாட்டேன். ஒழுங்கா தூங்கு. நாளையில இருந்து நீயே நினைச்சாலும் நிம்மதியா தூங்க மாட்ட. அதுனால இப்பவே தூங்கிக்க”
“வாட் யூ மீன்?”
சித்தாரா எதுவும் பேசாமல் தூங்க ஆரம்பிக்க, விக்ரமுக்கு அப்போதே தூக்கம் தொலைந்து போனது.
விடிந்ததும் வீடு வழக்கம் போல் இயங்க ஆரம்பிக்க, அலுவலகம் கிளம்பியவனை சித்தாரா தடுத்து நிறுத்தினாள்.
“ரெண்டு மணி நேரம் கழிச்சு போ”
“என்ன விசயம்?”
“ஏன் சொன்னா தான் இருப்பியா?”
“வேலை இருக்கு தாரா. என்னனு சொல்லு”
“இருக்கதுனா இரு. இல்லனா போ. ஆனா இப்ப நீ போயிட்டா காலத்துக்கும் வருத்தப்படுவ” என்று சித்தாரா எச்சரிக்க, அவளை முறைத்தவன் அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டான்.
நேற்றும் எதையோ சொல்லி வைத்தாள். இப்போதும் பேசுகிறாளே என்று யோசித்தவன், அசையாமல் அவள் முன்னால் அமர்ந்து இருந்தான்.
சித்தாரா கைபேசியை உத்து பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென வெளியே கார் சத்தம் கேட்க, உடனே எழுந்து சென்றாள்.
‘யார் வர்ரது?’ என்று யோசித்தபடி திரும்பி பார்த்தவன், படிகளில் ஏறியவர்களை எதிர்பார்க்கவில்லை.
வந்தது மருதநாயகமும் மகாதேவியும். அவர்களை எதிர்பார்க்காமல் அதிர்ந்தாலும், உடனே அவனது முகம் இறுகியது. எழுந்து வரவேற்கவில்லை. அசையாமல் அமர்ந்து இருந்தான்.
“உள்ள வாங்கபா.. வாங்கமா..” என்று இருவரையும் அழைத்து வந்தவள், “உட்காருங்க” என்று இடத்தைக் காட்டினாள்.
இருவரின் பார்வையும் அங்கு சிலையாக அமர்ந்து இருந்த விக்ரமின் மீது தான் படிந்தது.
“நான் சொல்லுறேன்ல? உட்காருங்க” என்று சித்தாரா அதட்ட, மருதநாயகம் அமர்ந்து மனைவியை அருகே அமர்த்தினார்.
“வெயிட்” என்று வேகமாக உள்ளே சென்றவள், அல்லியோடு திரும்பி வந்தாள்.
“அல்லி ஆண்ட்டி…” என்று அறிமுக படுத்த, “வணக்கம் சம்பந்தி” என்று அல்லியே முதலில் பேசினார்.
“வணக்கம்ங்க” என்ற மகாதேவி, அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்க, சித்தாரா தாய் தந்தை இருவரின் கையிலும் தண்ணீர் பாட்டிலை திணித்தாள்.
கடையில் வாங்கி வந்தது. அந்த பாட்டிலை பார்த்து விட்டு பெற்றவர்கள் அதிர, “புடிங்க. குடிங்க” என்று இருவரையும் வற்புறுத்தினாள்.
கடையில் வாங்கிய பாட்டில்களை பார்த்து, அல்லியின் முகம் விழுந்து விட்டது. அவர் சித்தாராவை வருத்தமாக பார்த்தார்.
“சாரி ஆண்ட்டி.. இந்த வீட்டுல பச்ச தண்ணி கூட என் அம்மா அப்பா குடிக்குறதுல எனக்கு விருப்பம் இல்ல” என்று கூறி விட்டாள்.
அல்லிக்கு மனம் வலித்தது. நேற்றே சித்தாரா சிலவற்றை சொல்லி இருந்தாலும், அவருக்கு மனம் தாங்கவில்லை.
விதார்த் பந்தோடு ஓடி வந்து, “பாட்டி.. தாத்தா..” என்று மருதநாகயம் தம்பதியிடம் ஒட்டிக் கொள்ள, அதுவரை இருந்த அசௌகரியம் மாறி இருவரும் பேரனை கொஞ்ச ஆரம்பித்து விட்டனர்.
அவனோடு பேசி நேரம் போக, சித்தாரா மணியை பார்த்து விட்டு, “எப்பபா வர்ராங்க?” என்று விசாரித்தாள்.
“இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவாருமா.”
இவர்கள் பேசிக் கொள்ள, விக்ரம் அசையாமல் அமர்ந்து இருந்தான். என்ன தான் நடக்கும் என்று பார்த்து விட தோன்றியது.
அதுவும் மருதநாயகத்தை பார்க்கும் போது, வெறி வெறியாக வந்தது. வாயைத்திறந்தால் எதாவது பேசிவிடுவான். பதிலுக்கு சித்தாரா வெடிப்பாள். அதை விட விசயம் வெளியே வரும் வரை அமைதியாக இருந்து விடலாம் என்று நினைத்திருந்தான்.
ஆனால் சித்தாரா தண்ணீர் பாட்டிலை கொடுத்து காரணம் சொல்லும் போது, சுள்ளென கோபம் ஏறி விட்டது. அதை கொட்ட வாயைத்திறக்கும் முன் விதார்த் வந்து விட்டான். சிறுவனின் முன்பு சண்டை வேண்டாம் என்று பல்லைக்கடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
அவர்கள் எதிர்பார்த்தது போல், ஐந்து நிமிடத்தில் மற்றொரு கார் வந்து நின்றது.
இப்போதும் சித்தாராவே எழுந்து சென்று வரவேற்று அழைத்து வந்தாள்.
“நல்லா இருக்கேன் அங்கிள். நீங்க எப்படி இருக்கீங்க?” என்று பேசிக் கொண்டே வருபவளை அசால்ட்டாக திரும்பிப் பார்த்த விக்ரம், சட்டென எழுந்து நின்றான்.
வந்தது டீனாவின் தந்தை. அவனுக்கு மிகவும் வேண்டியவர். சிவஞானம்.
“ஹலோ அங்கிள்” என்று வேகமாக முன்னால் சென்று வரவேற்றான்.
அவரும் நலம் விசாரித்து, விதார்த்தை பார்த்து பேசி விட்டு அமர, அல்லி காபி கொடுத்து உபசரித்து விட்டு, விதார்த்தை தூக்கிக் கொண்டு சென்று விட்டார்.
“என்ன விக்ரம்? நான் கேள்வி படுறது உண்மையா?” என்று அதுவரை இருந்த இலகுத்தன்மை மறைந்து, சிவஞானம் ஒரு கூர்மையான பார்வையோடு விக்ரமை கேள்வி கேட்டார்.
தொடரும்.
