சித்திரமே 35 (final)

Loading

மித்ரா அந்த இருள் அறையில் அமர்ந்து இருந்தாள். சுற்றியிருந்த இருளை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், அவளது யோசனை வெண்பனியிடம் இருந்தது. அவள் பேசியதை எல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

தான் ஒரு கதையின் கதாபாத்திரம் என்று அவளுக்கு எப்போதோ தெரியும். அது தெரிந்த சில வினாடிகளில், அவள் மொத்தமாய் கண்மூடி செயலிழந்த நிலைக்குச் சென்றிருந்தாள்.

மீண்டும் அவள் விழிக்கும் போது, கதையின் ஆசிரியையே பார்ப்பாள் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?

வெண்பனி பேசியது, தான் கதைக்குள் நுழைந்தது, எல்லாமே அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

நான் படைத்த பொருள் தானே? உன்னை ஆட்டி வைக்க எனக்கு உரிமை உண்டு என்று, அவளை போட்டு உடைத்து விடவும் வெண்பனிக்கு முழு அதிகாரம் இருந்தது.

ஆனால், வெண்பனி அவளை சுதந்திரமாக விட்டாள். எதையும் பேசவும், எதையும் செய்து கொள்ளவும் அனுமதி கொடுத்தாள்.

“அவங்க கடவுள் இப்படித்தான் அவங்கள சுதந்திரமா போசிக்கவும் பேசவும் விடுவாங்க போல” என்று சிரித்துக் கொண்டாள்.

சித்திரமே சிதைவதேனோ கதையின் உள்ளே சென்றதிலிருந்து, அடிக்கடி வெண்பனியிடம் வாயாடி பேசியது வரை, எல்லாமே அவளுக்கு மிகவும் விசேசமான நிமிடங்கள்.

அன்று அந்த கதையின் முடிவை படித்தபோது, வெண்பனியிடம் சண்டை போட்டாள். அவளுக்கு வெண்பனி எழுதிய கதை முடிவு பிடிக்கவில்லை. சித்தாரா சாவதோ, இல்லை சுலபமாக விக்ரமை ஏற்றுக் கொள்வதோ, அவளுக்குப் பிடிக்கவில்லை.

கடைசியாக தான், வெண்பனி அவளுக்கு வேறு ஒரு வாய்ப்பை கொடுத்தாள்.

கதையிலிருந்து மொத்தமாக விலகிவிடுவது. கேட்க சற்று வருத்தமாக இருந்தாலும், கதையின் முடிவை ஏற்க முடியாமல் விலக முடிவு செய்து விட்டாள் மித்ரா.

கடைசி வரை நின்று, விக்ரமை ஒரு வழி செய்து, விவாகரத்து வாங்கிக் கொண்டு, பெற்றோரிடம் சென்று  விட வேண்டும் என்பதே மித்ராவின் ஆசை.

ஐந்து வருடம் சித்தாரா துடித்தது போல், அடுத்த ஐந்து வருடம் விக்ரமை துடிக்க வைத்து விட வேண்டும் என்று தான் நினைத்தாள்.

அவன் செய்ததை, கணக்கு மாறாமல் திருப்பிக் கொடுக்க ஆசைப்பட்டாள். அவளது உளறலால், பெற்றோர் விடு வெளிநாடாக மாறியது. அப்போதும் அது பெரிய விசயமாக தோன்றவில்லை.

இங்கிருந்தால் விக்ரம் வந்து பார்த்துக் கொண்டே இருப்பான். வெளிநாடும் கூட நல்ல முடிவு தான் என்று நினைத்து விட்டாள்.

ஆனால் அது எதையும் செய்ய முடியாமல், கதையின் முடிவு நெருங்கியது. வெண்பனி முடிவுக்கு வந்து விட்ட போது, அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. கதையிலிருந்து விலகி விடு என்று வெண்பனி கூறவும், உடனே சம்மதித்து விட்டாள்.

“சரி. நான் வெளிய வந்துடுறேன். எனக்கு பதிலா சித்தாரா போனா, கதையில இது வரை நடந்தது மாறுமா?” என்று கேட்க, வெண்பனி மறுப்பாக தலையசைத்தாள்.

அதனால், கொடுத்தவரை போதும் என்று முடிவு செய்து விட்டாள்.

கதையிலிருந்து விலகுவதற்கான நேரமாக வெண்பனி தேர்ந்தெடுத்து தான், அந்த விபத்து. அந்த விபத்தில் எல்லாம் முடிந்து விடும் என்று தெரிந்ததால், தாலியை கழட்டி விட்டாள். விதார்த்துக்கு உணவு ஊட்டி, கொஞ்சி விடை பெற்றாள். அல்லியிடம் விடைபெற வழி இல்லை. எப்படியும் அவளுக்கு பதில் வேறு ஒருத்தி வந்து விடுவாள். அப்போது அவர்கள் எதையும் குழப்பிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அதனால் உளறியவரை போதும் என்று வாயை மூடிக் கொண்டாள். கிளம்பும் போதும், விக்ரமோ விதார்த்தோ உடன் வரக்கூடாது என்று, முதலிலேயே தனியாக கிளம்பி விட்டாள்.

கடைசியாக இங்கு வந்து சேர்ந்து விட்டாள். இப்போது அங்கிருக்கும் சித்தாரா என்ன செய்து கொண்டிருப்பாள்? யோசனை தான் ஓடியதே தவிர, கணிக்க முடியவில்லை.

எப்படியும் தன் அளவுக்கு ஒவ்வொருவரையும் அங்கிருப்பவள் ஆட்டிப்படைக்க மாட்டாள் என்று தெரியும். அது தான் அத்தனை கதைகளையும் படித்து, அதில் இருக்கும் நாயகி கதாபாத்திரத்தை தெரிந்து கொண்டாளே.

“ஓய்..” என்று வெண்பனியின் குரல் பின்னால் கேட்க, திரும்பிப் பார்த்தாள்.

“கதை முடிஞ்சதா?” என்று பரபரப்பாக கேட்க, “ம்ம்” என்று தலையாட்டினாள் வெண்பனி.

“நான் படிக்கலாமா? எங்க படிக்கிறது?”

“கடைசியா போட்ட எபிசோட உனக்கு காட்டுறேன். ஆனா நான் கேட்குறத நீ செய்வியா?”

“என்ன? மறுபடியும் எதாச்சும் கதைக்குள்ள போகனுமா?” என்று மித்ரா சலிப்பாக கேட்க, வெண்பனி மேலும் கீழும் தலையாட்டினாள்.

“வாட்?” என்று மித்ரா அதிர்ந்து போய் கேட்டாள்.

விளையாட்டாக தான் அவள் கேட்டது. உண்மையில் வெண்பனி ஆமோதிப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.

“மறுபடியும் முதல்ல இருந்தா?”

“ஏன் பயமா?”

“என்னால முடியாது. நீ கதைக்குள்ள போனு சொல்லுவ. அங்க போய் எல்லாம் பண்ணிட்டா, முடியும் போது எனக்கு பிடிக்காத க்ளைமேக்ஸ் வைப்ப. நான் வரல. வேற யாரையும் அனுப்பிக்க”

“ஏன் மித்ரா? சித்தாராவும் விக்ரமும் சந்தோசமா வாழுறது உனக்கு பிடிக்கலயா?”

“இல்ல.”

“விது பாவம்னு சொன்ன?”

“அவன் பாவம் தான். ஆனா அந்த விக்ரம ஈசியா மன்னிக்கிறது, உடனே அக்சப்ட் பண்ணிக்கிறது, எல்லாம் என்னால ஜீரணிக்கவே முடியல. அது எப்படி முடியும்?”

“நீ விக்ரம லவ் பண்ணல. அதான் உனக்கு அவன் ஒரு குற்றவாளியா மட்டும் தெரியுறான். சித்தாரா அவன உயிருக்குயிரா லவ் பண்ணுறா. அவன அவளால வெறுக்க முடியாது. உன்னை போல ஈவு இரக்கமில்லாம தூக்கி எறிஞ்சு பேச முடியாது. லவ் பண்ணி பாரு மித்ரா. அப்போ தான் உனக்கு புரியும்”

“என்னை இம்ப்ரஸ் பண்ணுற அளவுக்கு உன் ஹீரோவுக்கு திறமை இல்ல”

“விக்ரம் ஆன்டி ஹீரோ அதான் உனக்கு பிடிக்கல. ஹீரோவ உனக்கு நிச்சயமா பிடிக்கும்”

“நீயா எழுதுனா தான் உண்டு. எனக்கெல்லாம் பிடிக்காது”

“சரி.. நீ ஹீரோ கிட்ட இம்ப்ரஸ் ஆகாத ஆன்டி ஹீரோயினா போறியா?”

“ஆன்டி ஹீரோயின்?”

“ம்ம். அது ரொம்ப சிம்பிள். இந்த கதையில எப்படி ஹீரோயினா இருந்துட்டு அம்புட்டும் வில்லத்தனமா பண்ண? அது போல மொத்த கதையும் இருக்கும். நோ ரூல்ஸ். அத்தனையும் பண்ணலாம்”

“இது கூட நல்லா இருக்கே”

“போறியா? இல்லனா இந்த இருட்டுல நிரந்தரமா படுத்துருக்கியா?”

“வேணாம் வேணாம். சும்மா கிடக்குறதுல என்ன யூஸ்?”

“அப்ப போற? குட்”

“கதைய பத்தி சொல்லேன். கொஞ்சமாவது தெரிஞ்சுக்கிறேன்”

“கதையில ஆன்டி ஹீரோயினியோட அக்காவ ஒருத்தன் ஹரஸ்  பண்ணுறான். அதுல அக்கா பைத்தியமாகுற நிலைமைக்கு போறா. அவன பழிவாங்க ஹீரோயின் அவன் ஆஃபிஸ்ல வேலைக்கு சேருறா”

“அப்புறம்?”

“அப்பறம் என்ன? எப்படி பழிவாங்குறங்குறது தான் கதை.”

“இதுல ஹீரோ?”

“அப்படி எவனும் இல்ல. ஒரு வேலை, அங்க யாரு மேலயாச்சும் உனக்கு லவ் வந்துட்டா அவன் தான் ஹீரோ”

“வேற வேலை இல்ல?” என்று மித்ரா நொடித்துக் கொண்டாள்.

“அந்த கதைக்குள்ள நீ போயிட்டா, கதை முடிஞ்சு நீ இங்க வர்ர வரைக்கும், சித்திரமே சிதைவதேனோ கதைய மொத்தமா மறந்துடுவ. ஓகே வா?”

“ஓஓஓ..”

“அதே போல அங்க இருக்க யார் கிட்டயும், இது கதை உலகம்னு சொல்லக்கூடாது.  இடையில என்னை திட்டிட்டு இருக்காம வேலைய பார்க்கனும். புரியுதா?”

“எல்லாம் புரியுது. அந்த எபிசோட காட்டு. பார்த்துட்டு கிளம்புறேன்”

வெண்பனி அவளுக்கு பின்னால் கண்ணை காட்ட, திரும்பி பார்த்தாள். கதையின் கடைசி அத்தியாயம் ஓட, படித்து முடித்தாள்.

“இவ லைட்டா என்னை மாதிரி பேசுறா. ஆனா ஹீரோயின்னு அப்பட்டமா தெரியுது. அவன் மன்னிப்பு கேட்டான். இவ மன்னிச்சுட்டா. இதான எப்ப பாரு ஆன்டி ஹீரோ கதைக்கு முடிவா வைக்கிறீங்க?”

“அதெல்லாம் பேசாத. இப்படித் தான் அது முடியும். நான் கிளம்புறேன். உன்னை அடுத்த கதையில பார்க்குறேன்”

“அது வரைக்கும்?”

“இங்க புக் இருக்கும் படி” என்று கூறி விட்டு மறைந்து போனாள்.


சித்தாரா பல நாட்களுக்கு பிறகு மீண்டும் பட்டுப்புடவை கட்டியிருந்தாள். அதற்கு தேவையான நகைகளை அணிந்து கொண்டிருக்க, “ம்மா.. ம்மா” என்று விதார்த் ஓடி வந்தான்.

“என்னடா?”

“இன்னைக்கு பேபிக்கு பேர் வைக்க போறம் தான?”

“ஆமா விது. பேபி பேபினு கூப்பிட முடியாதுல?”

“என்ன பேருமா வைப்பீங்க?”

“அத வைக்கும் போது சொல்லுறோம்”

“எனக்கு இப்பவே சொல்லுங்க” என்று அவன் குதிக்க, “விது..” என்று அதட்டினாள்.

“நான் அப்பா கிட்ட போய் கேட்குறேன்” என்று ஓடி விட்டான்.

மகளுக்கு உடையை அணிவித்து, அவள் கையில் குட்டி குட்டியாய் வாங்கி இருந்த மோதிரங்களை அணிவித்துக் கொண்டிருந்தான் விக்ரம். மகள் நல்ல உறக்கம்.

“ப்பா..” என்று கத்தியபடி வந்த மகனை திரும்பி பார்த்து, “உஸ்..” என்று வாயில் விரல் வைத்தான்.

“உஸ்..” என்று விதார்த்தும் தன் வாயில் விரலை வைத்துக் கொண்டு, பூனை போல் நடந்து வந்து தங்கையை எட்டிப்பார்த்தான்.

“பேபி தூங்கிடுச்சா?”

“ஆமா.. எதுக்கு கூப்பிட்ட?”

“பேபிக்கு பேர் என்னபா?”

“உங்கம்மாவ தான் கேட்கனும்”

“உங்களுக்கு தெரியாதா?”

“இல்லையே” என்று உதட்டை பிதுக்கியவன், மகனை தூக்கி மடியில் அமர வைத்து, கைகடிகாரத்தை கட்டி விட்டான்.

கைக்குட்டை ஒன்றை எடுத்து மடித்து அவனது பாக்கெட்டில் வைத்து விட்டு, “போய் பாட்டி கிட்ட இரு. அப்பா பேபிய தூக்கிட்டு வர்ரேன்” என்று அனுப்பி வைத்தான்.

விருந்தினர்கள் எல்லோரும் வந்து சேர்ந்தனர். விக்ரமின் மகளுக்கு பெயர் சூட்டும் விழா. சித்தாராவை பட்டுப்புடவையில் பார்த்து விட்டு, விக்ரமுக்கு மயக்கம் தான் வந்தது.

“வளைகாப்பு அன்னைக்கு கட்டுன. திரும்ப இப்ப தான் கட்டுற” என்று விக்ரம் மனைவியிடம் ரகசியம் பேச, “நீ தினமும் வேட்டி சட்டையில இருக்கதா சொல்லு. நானும் சேலை கட்டுறேன். டீலா?” என்று வழக்கம் போல் கேட்டு வைத்தாள்.

அவனுக்கு வேட்டி கட்டுவது என்பது மலையை புரட்டும் செயல். அதோடு முழுநேரமும் இருந்து அலுவலகம் செல்வது என்றால்? வெற்றிகரமாக பின்வாங்கினான்.

விழா ஆரம்பித்ததும் பூஜை நடந்தது. மடியில் இருந்த குழந்தையை தொட்டிலில் போட்டு, பெயரும் வைத்தனர். தேவசேனா என்று மூன்று முறை விக்ரம் கூற, அவனை தொடர்ந்து எல்லோரும் சொல்லிச் சென்றனர்.

“பேபி பேரு.. தேவசேனா..” என்று விதார்த் பெயர் தெரிந்த சந்தோசத்தில் குதித்தான்.

அவனையும் தங்கை காதுக்குள் சொல்ல வைத்து வேடிக்கை பார்த்தனர்.

விழாவின் விருந்து முடியும் வரை, குடும்பம் மொத்தமும் வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தது.

விழா முடிந்ததும், “பக்கத்து கோவில்ல மதியம் அன்னதானம் சொல்லிருக்கேன். போய் பார்த்துட்டு வாங்களேன்” என்று அல்லி கூற, விக்ரம் குடும்பம் சகிதமாக கிளம்பினான்.

அங்கு அன்னதானம் நடக்கும் இடத்தை பார்த்து விட்டு, சன்னிதானத்திற்கு வந்தனர்.

“என்னமா மதுரா.. இன்டர்வியூ எப்படி போச்சு?” என்று ஐயர் ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“அத ஏன் சாமி கேட்குறீங்க? எனக்கு பயத்துல நாக்கு மேல ஒட்டிக்கிச்சு. பேசவே முடியல தெரியுமா?”

“யாரு உனக்கு பயம்? நாக்கு ஒட்டிக்கிச்சு?”

“ஆமா.. பின்ன?”

“அம்பாள் முன்னாடியே பொய் பேசுற? இரு அம்பாள் உன் கண்ண நோண்டுவா” என்று சிரித்தபடி பிரசாதத்தை கொடுக்க, வாய் விட்டு சிரித்தபடி அதை வாங்கிக் கொண்டு திரும்பினாள்.

அவள் வரும் நேரம், விக்ரம் குடும்பம் சகிதமாக உள்ளே நுழைந்தான்.

மதுரா அவர்களை கவனிக்காமல் கடக்க, சித்தாரா மட்டும் மதுராவை யோசனையோடு பார்த்தாள்.

“வாங்க.. நீங்க தான அன்னதானம் சொல்லி இருந்தீங்க?” என்று ஐயர் பேச, விக்ரம் அவரோடு பேசினான்.

சித்தாரா அதை கவனிக்காமல், குதிரைவால் கூந்தல் துள்ளி விழ படிகளில் இறங்கி சென்றவளை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“தாரா..” என்று விக்ரம் அழைக்க, “ஹான்..” என்று திரும்பினாள்.

“சாமி கும்பிடு.. எங்க வேடிக்கை பார்க்குற?”

“அந்த பொண்ண எங்கயோ பார்த்துருக்கேன் விக்ரம்”

“எந்த பொண்ணு?”

“இப்ப போனாளே..”

“அத விடு. இப்ப சாமி கும்பிடு” என்று விட்டு, கண்ணை மூடி கடவுளை வேண்ட ஆரம்பித்து விட்டான். சித்தாராவும் திரும்பிக் கொண்டாள்.

வெளியே வந்து செருப்பை மாட்டிக் கொண்ட மதுரா, ஸ்கூட்டியில் அமர்ந்து ஹெல்மெட்டை மாட்டினாள். சற்று முன் முகத்தில் இருந்த சிரிப்பு எல்லாம் காணாமல் போயிருந்தது. அவனை நினைத்து விட்டால் சிரிப்பு அத்தனையும் தொலைந்து, கொலை வெறி மட்டுமே அவள் மனதில் இருக்கும்.

‘வர்ரேன்டா.. எனக்கு வேலை கிடைக்கட்டும். உன்னை நேரடியா டீல் பண்ணுறேன்’ என்று நினைத்து கொண்டு, வண்டியை எடுத்தாள்.

மித்ரா அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்தாள்

நிறைவு.

Leave a Reply