அத்தியாயம் 3

Loading

“எப்பமா வேலைக்கு போகனும்?”

“இன்னும் ரெண்டு நாள் இருக்கு பாட்டி. அது வரை எப்படி போகனும்? எந்த வழி போகனும்னு எல்லாம் பார்த்து தெரிஞ்சுக்கனும்”

“உனக்கு அண்ணன் ஒருத்தன் இருக்கான்ல? அவன் ஏன் வரல?”

“அவனுக்கு வேலை பாட்டி. பெங்களூர்ல வேலை பார்க்குறான். லீவ் கிடைச்சா தான் வர முடியும்”

“உன் செலவெல்லாம் அவன் தான் பார்க்குறானா?”

“இல்ல.. எங்க வீட்டுல ஒன்னு வாடகைக்கு விட்டுருக்கோம். அந்த பணம் வரும். அப்புறம் ஒரு கடை இருந்துச்சு. அப்பா அம்மா போனதும் அதையும் வாடகைக்கு தான் விட்டோம். ரெண்டு பணமும் எனக்கு வந்துடும். அதுல தான் காலேஜ் ஃபீஸ் கட்டுறது.. செலவு எல்லாம்”

“உன் அண்ணன் உன்னை பார்க்க மாட்டானா?”

“அவனோட செலவ அவன் பார்த்துட்டா போதாதா? எனக்கு தேவையானத நான் சம்பாதிச்சு என்னை நானே பார்த்துப்பேன்”

“என்னமோ சொல்லுற.. நீ தைரியமா இருந்தா சரி” என்று முடித்தார் பாட்டி.

இவர்கள் பேசும் நேரம் ரஞ்சித் அவனது காதலியுடன் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

இருவரும் ஒரு வருடமாக ஒரே வீட்டில் வாழ்கின்றனர். அவசரமாக திருமணம் செய்வதில் இருவருக்குமே விருப்பமில்லை. அதனால் தான் இந்த முடிவு.

“பேபி.. இன்னொரு ரோஸ்ட்” என்று கேட்டாள் சோபனா.

“இப்படி சாப்பிட்டுட்டு நான் குண்டாக நீ தான் காரணம்னு என்னை தான் திட்டுவ. போதும். கை கழுவு” என்றான் ரஞ்சித்.

“ஒரே ஒரு ரோஸ்ட் எக்ஸட்ராவா கொடுத்தா என்னவாம்?” என்று இமை கொட்டி கோபமாக கேட்க “நோ.. சொன்னா கேளு. கைய கழுவு” என்றான் ரஞ்சித்.

“ப்பே.. உனக்கு என் மேல இருந்த லவ் எல்லாம் காணாம போயிடுச்சு” என்று கோபமாக சொல்லி விட்டு கையை கழுவி விட்டாள்.

சில நிமிடங்கள் கழித்து “பேபி.. உனக்கு என்னை பிடிக்குமா? உன் தங்கச்சிய பிடிக்குமா?” என்று கேட்டாள் சோபனா.

“இத நீ ஆயிரம் தடவ கேட்டுட்ட. நானும் பலதடவ சொல்லிட்டேன். இப்படி கேட்காதனு”

“ஆனா ஒரு தடவ கூட என்னை பிடிக்கும்னு நீ சொல்லவே இல்ல”

“நீ காதலி.. அவ தங்கச்சி.. ரெண்டு பேரும் எப்படி கம்பேர் ஆக முடியும்? பேசாம போய் படு” என்று விட்டு அவனது வேலையை பார்த்தான்.

மெத்தையில் கோபமாக சோபனா படுத்திருக்க அவளருகே வந்து படுத்துக் கொண்டவன் அவள் மீது கையைப்போட்டான்.

“தள்ளு.. உனக்கு உன் தங்கச்சி தான பெருசு? தள்ளிப்போ” என்று தட்டி விட்டாள்.

“முடியாது” என்றவன் அவளை அணைத்து பின் கழுத்தில் மீசையில் குறுகுறுப்பூட்டினான்.

சோபனா திரும்பி முறைக்க “தூங்கு. நாளைக்கு வேலைக்கு போகனும்” என்று விட்டு கன்னத்தில் முத்தமிட்டு விட்டு தூங்க ஆரம்பித்தான்.

சில நிமிடங்களிலேயே அவன் உறங்கி விட சோபனாவிற்கு தூக்கமே வரவில்லை.

சோபனாவுக்கு தாய் தந்தை இருக்கின்றனர். ஆனால் வசதியற்ற குடும்பம். தினம் தினம் உழைத்தால் தான் எல்லாம். அப்படி இருக்க அவளை படிக்க வைத்து இங்கு வேலைக்கு அனுப்பி விட்டனர். அவளது சம்பளம் தான் ஓரளவு அவர்களது குடும்பத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இது தான் அவள் ரஞ்சித்திடம் சொன்ன கதை. ஆனால் உண்மை வேறு. அவளது குடும்பம் பணக்கார குடும்பம். அவளுக்கு சத்ருகணன் என்று ஒரு அண்ணன் இருக்கிறான். அவனிடமிருந்து தப்பிப்பதற்காக தான் இங்கு வேலை செய்ய ஓடி வந்தாள்.

வந்த இடத்தில் ரஞ்சித்தை காதலிக்க ஆரம்பித்து விட்டாள். காதலும் கை கூடி இதோ ஒரு வருடமாக ஒரே வீட்டில் இருக்கின்றனர். இன்னும் காதலை வீட்டில் சொல்ல அவளுக்கு தைரியம் வரவில்லை.

அவளது பெற்றோர்களை கூட சமாளித்து விடலாம். சத்ருகணன் சாதாரணமானவன் அல்ல. கல்லூரி காலத்தில் ஒருவனின் மீது சோபனாவிற்கு ஆர்வம் வந்து விட்டது. விசயத்தை மூடி மறைக்காமல் விட்டு விட சத்ருகணன் காதில் சென்று விழுந்தது.

அவனுக்கும் கூட சோபனாவை பிடித்திருக்கிறது என்று அறிந்தவன் இருவரையும் அழைத்து வந்து அமர வைத்து விட்டான். எதுவும் பேசவில்லை.

பல மணி நேரம் எதற்காக வந்திருக்கிறோம் என்றே தெரியாமல் இருவரும் மாறி மாறி பார்த்து விட்டு எதெதோ சொல்லி பார்த்தனர்.

கடைசியாக “ஜஸ்ட் பிடிச்சுருந்துச்சு. அவ்வளவு தான்ணா. அதுக்குமேல எதுவுமே இல்ல” என்று சோபனா அழுது விட அதன் பிறகே இருவரையும் போக விட்டான். இத்தனைக்கும் ஒரு வார்த்தை கூட சத்ருகணன் பேசவில்லை.

சோபனா அப்போதிலிருந்து தன் மனதில் தோன்றிய அனைத்தையும் மறைத்து வைக்க ஆரம்பித்தாள். படிப்பு முடிந்ததும் வேலைக்காக இங்கு ஓடி வந்து விட்டாள். ரஞ்சித்தை பற்றித் தெரிந்தால் அவன் என்ன செய்வானோ? என்ற கவலை ஒரு பக்கம். அதே நேரம் ரஞ்சித்தின் தங்கை ரோஷினி.

ரோஷினியை என்னவோ புகைப்படத்தில் மட்டும் தான் பார்த்திருக்கிறாள். ஆனால் அவள் மீது சோபனாவுக்கு நிறைய பொறாமை உண்டு. அவளுக்கு கிடைத்த அண்ணன் அவள் மீது நிறைய பாசம் வைத்திருக்கிறான்.

சோபனாவின் அண்ணனுக்கு அவள் மீது பாசமே இல்லை. ஆனால் ரோஷினி பாசத்தை அனுபவிக்கிறாளே? ரஞ்சித்தின் பாசத்தை ரோஷினிக்கு கொடுக்க கூடாது என்ற பிடிவாதம் அவளுக்குள் வளர ஆரம்பித்தது.

கல்லூரி படிப்பை முடித்தவளை பார்க்க கிளம்பிய ரஞ்சித்தை காய்ச்சலை வர வைத்து தடுத்து நிறுத்தியிருந்தாள். ரோஷினியை விட்டு ரஞ்சித்தை பிரித்தே ஆக வேண்டும் என்கிற வெறி அவளுக்குள் வளர ஆரம்பித்தது பாவம் ரஞ்சித்துக்கு தெரியாமல் போனது.

‘இந்த ரோஷினிய முதல்ல யாருக்காச்சும் கட்டி வச்சு துரத்தி விடனும். அப்ப தான் ரஞ்சித்தோட முழு பாசமும் எனக்கு மட்டுமே கிடைக்கும்’ என்று தீர்மானித்துக் கொண்டாள்.

°°°

ரோஷினி புது இடத்தில் தூங்க போராடி தாமதமாக தூங்கி எழுந்தாள்.

அவளுக்கென பாட்டி ஒரு அறையை கொடுத்திருந்தார். அதற்குள் அவளது பொருட்களை வைத்துக் கொள்ளலாம். அறைக்கு பக்கத்தில் குளியலறையும் இருந்தது.

எழுந்து குளித்து தயாராகி வந்தாள்.

“பாட்டி.. என்ன பண்ணுறீங்க?”

“சத்து மாவு கஞ்சி பண்ணி குடிக்கிறேன். உனக்கு ஏத்த மாதிரி இங்க சாப்பாடு கிடைக்காதுமா. நீ தான் சமைக்கனும். சமைக்க தெரியுமா?”

“சுத்தமா தெரியாது. அம்மா இருந்த வரை கொஞ்சமா சொல்லிக் கொடுத்தாங்க. இப்ப அதெல்லாம் மறந்து போச்சு”

“அப்ப ஒரு மாசத்துக்கு என்ன செய்வ?”

“நான் பொருள் வாங்கிட்டு வந்து இங்க சமைக்கலாமா?”

“பண்ணு. நான் உனக்கு சொல்லித்தர்ரேன்”

“சூப்பர். அப்படினா என்னென்ன எவ்வளவு வேணும்னு சொல்லுங்க. போய் வாங்கிட்டு வர்ரேன்”

உடனே பட்டியலை தயாரித்து முடித்தாள்.

“இது ஒரு வாரத்துக்கு போதும். தேவைப்பட்டா அப்புறமா வாங்கிக்கலாம்”

“இப்பவே கிளம்புறேன்”

“பத்திரமா போயிட்டுவா” என்றதோடு பாட்டி விடை கொடுக்க உடனே கிளம்பி விட்டாள்.

இன்று பக்கத்திலிருக்கும் அத்தனை இடங்களையும் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தாள். முதலில் ஆட்டோ பிடித்து வேலையில் சேர வேண்டிய அலுவலகத்தை சென்று பார்த்தாள்.

போகும் பாதை பக்கத்திலிருக்கும் இடங்கள் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்தாள். இடையில் பசித்த போது பிஸ்கட் பாக்கெட்டில் வயிற்றை நிரப்பி விட்டு மாலை தான் வீடு வந்து சேர்ந்தாள்.

“ஒரே நாள்ல ஊர் மொத்தமும் பார்க்க போயிட்டியா?” என்று பாட்டி முறைத்துக் கொண்டே கேட்க “இல்லயே.. இதெல்லாம் வாங்க போனேன்” என்றாள்.

“அதான் எங்க வாங்கனும்னு சொன்னேனே”

“நீங்க சொன்ன இடம் எக்ஸ்பென்ஸிவ் பாட்டி. இதெல்லாம் குறைஞ்ச விலைக்கே வாங்கிட்டு வந்துட்டேன். வேலைக்கு சேர்ந்து சம்பளம் வர்ர வரை இருக்கத பார்த்து செலவு பண்ணனும்”

பாட்டி அவளை மெச்சதலாக பார்த்தார்.

“பரவாயில்ல.. கெட்டிக்காரியா தான் இருக்க.”

“சொல்லிக்கொடுக்க அம்மாவும் இல்ல. செலவு பண்ண அப்பாவும் இல்ல. நானே கெட்டிக்காரியா இருந்தா தான் பொழைக்க முடியும்” என்று புன்னகையுடன் பதில் சொன்னாள்.

வாங்கி வந்ததை வைத்து விட்டு “ஃப்ரஸ்ஸாகிட்டு வர்ரேன். சமைக்க ஆரம்பிக்கலாம்” என்று விட்டு அறைக்குள் சென்றாள்.

பாட்டியிடம் இருந்த கைபேசி வழியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான் சத்ருகணன்.

“அதான் வந்துட்டாள்ள பாட்டி. நான் ஃபோன வைக்கிறேன்” என்று விட்டு வைத்து விட்டான்.

தொடரும்.

Leave a Reply