அத்தியாயம் 5

Loading

ரோஷினி பயிற்சி முடிவதை பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.

“ரெண்டு நாள்ல முடிஞ்சுடும் பாட்டி. அடுத்து வேலை எங்க போடுறாங்கனு பார்த்து வீடு பார்க்கனும்”

“இங்கயே போட்டா இங்கயே இருந்துடேன்” என்றார் பாட்டி ஆர்வமாக.

இவ்வளவு நாளும் தனிமையில் இருந்தவருக்கு பேசுவதற்கும் துணையாகவும் ரோஷினி இருப்பது பிடித்திருந்தது. ரோஷினியும் எல்லாவற்றிலும் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க மாட்டாள்.

அதனால் இங்கேயே தங்க வைக்க நினைத்தார்.

“இங்கயே வேலை கிடைச்சா தான் உண்டு. வேற பிரான்ச் மாத்திட்டா நான் அங்க தான் போகனும் பாட்டி. ரெண்டு நாள் இருக்குல? முடியும் போது பார்ப்போம்” என்று விட்டாள்.

அடுத்த நாள் இரவு ரஞ்சித்தின் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தாள் ரோஷினி.

பாட்டி எப்போதோ தூங்கி இருக்க அதிகாலை நேரம் வீடு வந்து சேர்ந்தான் ரஞ்சித்‌.

ஓடிச் சென்று கதவை திறந்தவளுக்கு திடீரென கண்கலங்கி விட்டது.

“அண்ணா..”

“ஹேய்.. என்ன எமோஷனலாகுற? நீ என் தங்கச்சி தானா?”

“நான் எங்க எமோஷனல் ஆனேன்? கொட்டாவில கண்கலங்குது.. உள்ள வா” என்று வழி விட்டாள்.

அவனும் உள்ளே வந்து விட “பாட்டி தூங்குறாங்க. உனக்கு காபி வேணுமா?” என்று உபசரித்தாள்.

“உனக்கு போடத்தெரியுமா?”

“எல்லாம் தெரியும். அது வாஸ் ரூம்.. ஃப்ரஸ் ஆகிக்கோ. பாட்டி சீக்கிரம் எந்திரிக்க மாட்டாங்க. எந்திரிச்சதும் பேசலாம்”

ரஞ்சித்தை முகம் கழுவ அனுப்பி விட்டு இருவருக்கும் காபி போட்டுக் கொண்டு வந்தாள் ரோஷினி. வாங்கிக் குடித்தவன் “நல்லா இருக்கே.. இன்ஸ்டன்ட் தான?” என்று கேட்டான்.

“அதையும் பால்ல கலந்து தான் குடிக்கனும்” என்று நொடித்துக் கொண்டாள்.

இருவரும் தங்களது காபியை உறிஞ்சி விட்டு நிம்மதியாக உணர்ந்தனர். இருவருக்கும் உலகில் இருக்கும் ஒரே சொந்தம் இருவர் மட்டுமே அல்லவா?

“வேலை எப்படி போகுது? போன்ல சரியா கேட்கவே முடியல”

“நல்லா தான் இருக்கு. இப்போதைக்கு ட்ரைனிங் தான? முடிஞ்சதும் பார்க்கலாம். உன் வேலை எப்படி போகுது?”

“குட்”

“இன்னும் சிங்கிளாவே இருக்கியாணா?”

அவளது கேள்வியில் அவன் ஆச்சரியமாக புருவம் உயர்த்த “ஏன் இப்படி பார்க்குற?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“உன் கேள்வி தான்”

“உனக்கு பொண்ணு பார்க்க அம்மா இல்ல. அவங்க இருந்தா இந்நேரம் பொண்ணு பார்க்குறத பத்தி கண்டிப்பா பேசிருப்பாங்க. இப்ப நமக்கு நாம தான இருக்கோம்? அதான் நீ யாரையாச்சும் லவ் பண்ணா சந்தோசமா இருக்கும்னு கேட்குறேன்”

“எனக்கு பொண்ணு பார்க்குறத மட்டும் தான் பேசுவாங்களா? உனக்கும் மாப்பிள்ளை பார்த்துருப்பாங்க. தெரியுமா?”

‘மாப்பிள்ளையா? சத்ருகணன் மாதிரி அழகான பையனா இருந்தா நல்லா இருக்கும்’ என்று மனதில் நினைத்தவள் தன் அண்ணனை பார்த்தாள்.

“ரொம்ப மெலிஞ்சுருக்கணா”

“ஏய்.. பேச்ச மாத்தாத”

“மாத்தலாம் இல்ல. ஆனா நீ மெலிஞ்சு தான் இருக்க. நிறைய வேலையா?”

“ஆமாடா.. வேலை நிறைய தான்.”

“உடம்பையும் பார்த்துக்கோ.. நீயே தான சமைக்குற? நல்லா சமைச்சு சாப்பிடு”

“செஞ்சுடலாம். இப்ப நீ கூட சமையல் கத்துக்கிட்டு இருக்க.. அப்ப உனக்கு மாப்பிள்ளை பார்க்கட்டுமா?”

“பார்த்தியா? இதான வேணாங்குறது?”

“என்னது?”

“நீ லவ் பண்ணுறியானு நான் கேட்குறேன். .ஆனா நீ மாப்பிள்ளை பார்க்கட்டுமானு கேட்குற? ஏன் நான் ஒருத்தன லவ் பண்ணி கூட்டிட்டு வந்தா ஏத்துக்க மாட்டியா?”

சிரிப்போடு அவள் கேட்க ரஞ்சித்துக்கு என்னவோ போல் ஆகி விட்டது.

அவன் காதலிப்பது பெரிதாக தெரியவில்லை. ஆனால் தங்கை ஒருவனை காதலிப்பாள் என்பது என்னவோ அவனுக்கு பிடிக்கவே இல்லை. அதனால் தான் அப்படி கேட்டு விட்டான். ஆனால் அவள் வாய் விட்டு கேட்ட போது மனதை காயப்படுத்தி விட்டது.

“என்ன பதில் வரல?”

“லவ் பண்ணுறது தப்பில்லடா.. ஆனா நல்லவனா இருக்கனும். அதான் பார்க்குறேன்”

“கவலையே படாத.. அவன் நல்லவனா இல்லையானு கூடவே இருந்து பார்த்து தெரிஞ்சுட்டே லவ் பண்ணி கல்யாணம் பண்ணுறேன்” என்று கிண்டலாக சொல்லி விட்டு காபியை குடித்து முடித்தாள்.

“கூடவே இருந்தா?”

“ஆமா.. இப்ப தான் ஃபாரின் கல்ச்சர் மாதிரி லிவ் இன்ல இருக்காங்களே பலர். அப்படி நானும் கூட இருந்து தெரிஞ்சுட்டு வந்து சொல்லுறேன்” என்றவளுக்கு சிரிப்பு வந்தது.

சிரித்துக் கொண்டே கப்பை எடுத்துக் கொண்டு செல்ல ரஞ்சித்தின் முகம் உணர்வுகள் இழந்து மங்கியது.

தங்கை ஒருவனோடு திருமணம் செய்யாமல் தங்குவதா? நினைக்கவே முடியவில்லை. ஆனால் அவனும் அதை தானே செய்து கொண்டிருக்கிறான்?

அப்படிப் பார்த்தாலும் அவன் கதை வேறு. அவன் சோபனாவை ஏமாற்ற போவது இல்லை. திருமணம் செய்து கொள்ள தான் போகிறான். ஆனால் தங்கை எதாவது ஒரு அயோக்கியனிடம் மாட்டி விட்டால்?

நினைக்கும் போதே கோபம் தான் வந்தது.

“லிவ் இன் அளவுக்கு யோசிக்கிற.. யாரையாவது பிடிச்சுருக்கா என்ன?”

“இப்போதைக்கு இல்ல. பின்னாடி பிடிச்சுருந்தா முதல்ல உன் கிட்ட தான் சொல்லுவேன். கவலையே படாத. எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா? அண்ட் நீயும் என் கிட்ட மறைக்காம சொல்லனும். வரப்போற அண்ணிய பத்தி நானும் தெரிஞ்சுக்கனும்ல?”

பேசிக் கொண்டே கப்பை கழுவி வைத்து விட்டு வந்தவள் “கொஞ்ச நேரம் தூங்குறதுனா தூங்கு. பாட்டி எந்திரிக்க நேரமிருக்கு. எனக்கு இப்ப கொஞ்சம் வேலை இருக்கு. நான் சமைக்கனும்” என்றாள்.

அவளது பேச்சில் எழுந்த குற்ற உணர்வை எல்லாம் உடனே மறைத்தவன் “இன்னைக்கு நான் உனக்கு சமைச்சு தரவா?” என்று கேட்டான்.

அவளிடம் அனைத்தையும் மறைத்துக் கொண்டிருப்பதற்கு பரிகாரமாக..

“பண்ணேன். கிச்சன அழுக்கு பண்ணாம பண்ணா போதும்” என்றதும் உடனே எழுந்து சென்றான்.

இருவருமாக காலை மதிய உணவை சமைத்து முடித்து சமையலறையை சுத்தம் செய்து முடிக்க பாட்டி எழுந்து வந்து விட்டார்.

“வாபா..” என்று ரஞ்சித்தை வரவேற்க “நல்லா இருக்கீங்களா பாட்டி?” என்று நலம் விசாரித்தான்.

கைபேசியில் ஒரு முறை பேசி இருக்கிறான் அவ்வளவு தான்.

“நீங்க பேசுங்க. நான் ஆஃபிஸ் கிளம்புறேன். டைம் ஆச்சு” என்றவள் அறைக்குள் ஓடி விட்டாள்.

“உன் தங்கச்சி ரொம்ப பொறுப்பான புள்ளபா.. காச பார்த்து செலவு பண்ண தெரியுது. அதுக்காக கஞ்சமாவும் இல்ல. சொன்னா உடனே கேட்டுக்குறா.. உங்கம்மா அவள நல்லா வளர்த்துருக்காங்க” என்று பாட்டி பாராட்ட ரஞ்சித்துக்கு பெருமையில் தோள்கள் உயர்ந்தது.

“அம்மா இருந்துருந்தா இன்னும் நிறைய சொல்லி கொடுத்துருப்பாங்க.”

“விடுப்பா.. போனவங்கள சாமினு நினைச்சுக்க வேண்டியது தான். உன் வேலையெல்லாம் நல்லா போகுதா? இங்க தான் இருக்க போறியா?”

“இல்ல பாட்டி.. சித்தி வீட்டுக்கு போகனும். அங்க போயிட்டு நேரா ஊருக்கு கிளம்ப வேண்டியது தான். லீவ் இல்ல”

“சரி தான்.. சாப்பிட்டியா? உன் தங்கச்சி எதாவது செஞ்சாளா?”

“இருக்கு. இப்ப தான் பண்ணா. அவளும் வரட்டும். சேர்ந்து சாப்பிட்டு கிளம்புறேன்” என்று விட்டு காத்திருந்தான்.

ரோஷினி தயாராகி வர மூவருமாக சாப்பிட்டனர்.

“என் பேரன் பேத்திய இப்படி சாப்பிட கூப்பிடுறேன். வர மாட்டேங்குறாங்க. நீங்களாவது ஒருத்தர ஒருத்தர் விட்டுறாம இருங்க”

“இவனே விட்டாலும் நான் விட மாட்டேன். எனக்குனு இருக்க ஒரே அடிமை.. சாரி அண்ணா.. இவன் தான? என் பாசக்கார அண்ணா.. எனக்காக சமைச்சு கொடுத்துருக்கான் பாருங்க. என் அண்ணாவோட பாசம் போலவே சட்னில காரம்.. எங்கயோ போயிடுச்சு”

தண்ணீரை குடித்தபடி சொல்ல “நிறைய போட்டேனா? சாரி பழக்க தோசத்துல போட்டேன்” என்று மன்னிப்பு கேட்டான்.

“பரவாயில்ல. நீ சாப்பிடு. நான் கிளம்புறேன்” என்றவள் கைப்பையை எடுத்துக் கொண்டாள்.

“இன்னைக்கு யாருக்கு எந்த பிரான்ச்னு சொல்லுவாங்கனு நினைக்கிறேன். முடிஞ்சா பெங்ளூர் பிரான்ச் கேட்டு நானும் உன் கூட வந்து செட்டிலாக பார்க்கனும். ஈவ்னிங் கால் பண்ணுறேன். சித்திய கேட்டதா சொல்லு.. வர்ரேன் பாட்டி” என்று கடகடவென பேசி விட்டு கிளம்பி விட்டாள்.

ரோஷினி பெங்களூருக்கே வந்து விட்டால் நிம்மதியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அவளுக்கு கையாட்டி விடை கொடுத்தான் ரஞ்சித்.

தொடரும்.

Leave a Reply