அத்தியாயம் 6

Loading

ஒரு மாதமும் முடிந்திருக்க வேலையில் இருக்கப்போகும் நபரின் பட்டியல் வந்து சேர்ந்தது. மற்றவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு இருப்பவர்களை எல்லாம் மீண்டும் மீட்டிங் அறையில் அமர வைத்தனர்.

எல்லோரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் சத்ருகணன்.

எல்லோருமே எழுந்து நின்று வணக்கம் வைக்க ரோஷினி அவனை பார்வையால் அளந்தாள்.

‘கடைசியா தரிசனம் கிடைச்சுருச்சு.. அப்படியே தான் இருக்கான்’ என்று நினைத்துக் கொண்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்தாள்.

சத்ருகணனின் பார்வை எல்லோரையும் வலம் வந்தது. ஆனால் ரோஷினியின் கண்களை மட்டும் ஒரு நொடி நின்று ரசித்து விட்டு கடந்தது.

“குட் மார்னிங் எவ்ரி ஒன்..” என்று சந்தோசமாக ஆரம்பித்தவன் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி விட்டு சில நிமிடங்கள் பேசினான்.

பிறகு அங்கிருந்தவர்கள் யார் குழுவில் இணைகிறார்கள் என்று அறிவிக்கபட்டது. இருந்த எல்லோரும் தனித்தனி குழுக்களோடு கலக்க கடைசியாக இருந்தது என்னவோ ரோஷினி தான்.

“ரோஷினி நீங்க அட்வடைஸ்மெண்ட் டிப்பார்மெண்ட்டுக்கு போறீங்க”

கேட்டதும் விழிகள் விரிய திரும்பிப் பார்த்தாள். விளம்பர குழுவில் இருந்ததே இருவர் தான். இவள் மூன்றாவது நபர்.

“இவங்க கூட ஜாயின் பண்ணிக்கோங்க” என்று அந்த இருவரையும் காட்ட அவர்கள் இருவரும் அவளை பார்த்து புன்னகைத்தனர்.

‘நான் விளம்பரமா? இதென்ன புதுசா இருக்கு?’ என்று குழப்பத்துடனே எழுந்து அவர்களோடு சேர்ந்து நிற்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சத்ருகணன்.

‘நல்லா பேசுறல? அத விளம்பரத்துக்கு யூஸ் பண்ணு பார்க்குறேன்’ என்று நினைத்துக் கொண்டான்.

அவன் தான் எல்லோருக்கும் வேலையை பிரித்ததே. அது புரியாமல் ரோஷினி குழப்பத்துடன் நின்றிருந்தாள்.

சத்ருகணன் மீண்டும் எல்லோருக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு கிளம்பி விட்டான். எல்லோரும் கலைந்து அவரவர் இடத்திற்கு சென்றனர்.

“ஹாய் ரோஷினி.. என் பேரு சுப்ரியா இவ தனுஜா”

“ஹாய்”

“நாம மூணு பேரும் சேர்ந்து தான் இனி இத பார்க்கனும். என்ன நினைக்கிற?”

“எதுவும் இல்ல. எது வந்தாலும் சரி தான்”

“பரவாயில்ல.. பாசிட்டிவ்வா தான் இருக்க.. ஓகே இந்த வேலை பத்தி தெரியும்ல? ஆக்சுவலி நான் விஸ்காம் படிச்சுட்டு வந்தேன். தனுஜா தான் உன்னை மாதிரி எம்.பி.ஏ படிச்சவ”

“ஓகே..”

ரோஷினி புன்னகையுடன் தலையாட்டி கேட்டுக் கொண்டாள்.

“ஒரு விசயத்த முதல்லயே சொல்லிடுறேன்” என்று சுப்பிரியா ஆரம்பிக்க “வந்ததுமே பயமுறுத்தனுமா?” என்று கேட்டாள் தனுஜா.

“சொல்லிட்டா தான் புரிஞ்சு நடந்துப்பா.. நீ கேளு ரோஷினி. இந்த டீம்ல எந்த புண்ணாக்கும் பண்ண முடியாது. கரெக்ட்டா சொன்னா இங்க இருக்கது பூராமே தேவையில்லாத ஆணி தான். புடுங்கி போட வழி இருக்காது. நாம என்ன அட்வடைஸ் ஆட் தீம் செட் பண்ணாலும் அந்த மேனேஜர் ஒத்துக்கவே மாட்டான். இது செலவு அதிகம்.. அதுல அது குறை இதுல இது குறைனு சொல்லி துரத்திட்டே தான் இருப்பான். ரொம்ப நல்லதா ஒன்னு பண்ணிட்டு போய் கொடுத்தா அத வாங்கி அவன் பேர போட்டுட்டு போய் மேனேஜ்மன்ட்ல கொடுத்துருவான். அவன் ஹெட்டா இருந்து நாம பண்ணோம்னு பேரு வாங்கிடுவான். இதுல கொடுமையே.. அந்தாள கேள்வி கேட்க முடியாம நிறைய பேர் வேலையே வேணாம்னு போனது தான். ஏன் நான் கூட இப்ப வேற கம்பெனில வேலை தேடிட்டு இருக்கேன். கிடைச்சா எஸ்கேப் ஆகிடுவேன். நீ இந்த வேலைய மட்டும் நம்பி இருக்கத பத்தி யோசிச்சுக்கோ”

சுப்பிரியா மனதில் இருந்ததை கொட்டி முடிக்க ரோஷினிக்கு தலை சுற்றியது. ஏற்கனவே அவளை வேறு எந்த வெளி ஊருக்கும் அனுப்பவில்லை என்பது கவலை தான். அடுத்து இந்த வேலை பற்றி சரியாக தெரியாது. அதையும் மீறி செய்யலாம் என்றால் இங்கு ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கும் போலவே?

“சோ இங்க இருக்கதுல ஒரு யூஸ்ஸும் இல்லனு சொல்லுறீங்க?”

“கிட்டத்தட்ட.. ஆனா சம்பளம் சரியா வந்துடும். இன்க்ரிமண்ட் தான் கிடைக்காது”

“சரி.. முதல்ல ஆரம்பிப்போம். போக போக பார்த்துக்குறேன்”

“குட் கேர்ள்” என்று பாராட்டி விட்டு வேலையை விளக்கினாள்.

அவர்களது தலையாய வேலை அந்த நிறுவனத்தை விளம்பரப்படுத்துவது தான். இது வரை இரண்டு வகைகளில் மட்டுமே விளம்பரப்படுத்தியிருந்தனர்.

உண்மையில் அதற்கு விளம்பரம் தேவையிருக்கவில்லை. தரத்தை பார்த்து தானாகவே ஆட்கள் வரத்தான் செய்தனர். அதனால் தான் விளம்பரத்தை பெரிதாக நம்பாமல் விட்டு விட்டார்கள் போலும்.

“இப்ப என்ன செய்யனும்னா.. நம்மலோட ஐடியாக்கல கொண்டு போய் மேனேஜர் கிட்ட கொட்டனும். குரூப் டிஸ்கஸன் மாதிரி. மதியத்துக்கு மேல வந்து பேசுவார். அதுக்குள்ள நம்ம ஐடியாக்கான அத்தனை டீடைலும் எடுத்துக்கனும். ஓகே வா?”

“ஓகே புரியுது”

“உனக்கு எதாவது ஐடியா இருக்கா?”

“இருக்கு. எதாவது பெரிய நடிகைய வச்சு விளம்பரம் பண்ணலாம்”

“இத நான் போன மாசம் சொன்னதுக்கு அவங்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியிருக்கும் தெரியுமானு கத்திட்டாரு” – தனுஜா.

“அப்படினா பிட் நோட்டிஸ் அடிச்சு கொடுப்போமா? சீப்பா இருக்கும்”

ரோஷினி கிண்டலாக கேட்க இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

“போற போக்க பார்த்தா அதான் நடக்கும் போல”

“அத தவிர வேற எதுக்கும் அவன் ஒத்துக்க மாட்டான். ஆனா மாசம் மாசம் ஒரு ப்ளான் கூட வரவே இல்ல.. வேலைய விட்டு தூக்கவானு மிரட்டுவான்..” என்று சுப்பிரியா கடுப்பாக சொன்னாள்.

“இந்த தடவ என்ன நடக்குதுனு பார்க்குறேன்.” என்ற ரோஷினி தன் வேலைகளை ஆரம்பித்தாள்.

நேரம் கடந்தது. சாப்பிட்டு விட்டு வேலை ஆரம்பிக்க மேனேஜர் அவர்கள் மூவரையும் மீட்டிங் என்று அழைத்து விட்டார்.

“வார வாரம் இவனோட ஒரே அக்கப்போரு” என்று எரிச்சலாக முணுமுணுத்துக் கொண்டே சுப்பிரியா எழ மற்றவர்கள் அமைதியாக பின் தொடர்ந்தனர்.

மூவரும் மேனேஜர் முன்பு ஆஜராக மேனேஜர் பொன்னுச்சாமி கண்ணாடியை சரி செய்து கொண்டு மூவரையும் பார்த்தார்.

“என்ன நான் சொன்ன ப்ளான் எல்லாம் ரெடியா?”

“ரெடி சார்”

“உன் பேர் ரோஷினி தான?”

“ஆமாங்க சார்”

“இவங்க கிட்ட வேலையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டியா? சந்தேகம்னா கேளு”

“ஓகே சார்”

“இன்னைக்கு எதாவது புது ப்ளான் வச்சுருக்கீங்களா? இல்ல பழைசயே  வச்சு ஓட்ட போறீங்களா?” என்று கேட்க சுப்பிரியா வாயை திறக்க போக கதவு திறந்தது.

சத்ருகணன் வந்து சேர்ந்தான். அவனை பார்தத்தும் எல்லோரும் எழ “உட்காருங்க” என்றவன் தான் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து விட்டான்.

தனுஜாவிற்கு திடீரென பயம் வந்து விட்டது.

‘மேனேஜர் மட்டும் இருந்தாலே அந்த கிழி கிழிப்பாரு.. இவரு வேற வந்துருக்காரு.. என்ன ஆக போகுதோ?’ என்று பயந்தவளுக்கு வியர்த்து விடும் போல் இருக்க சுப்ரியாவின் கையை பிடித்துக் கொண்டாள்.

சுப்ரியா முகத்தில் பயத்தை காட்டாமல் இருக்க ரோஷினி தான் அவனை ஆராய்ச்சியாக பார்த்தாள்.

‘இவன் இன்னும் போகலயா?’ என்று நினைத்துக் கொண்டாள்.

“என்ன மீட்டிங்?”

“அடுத்த மாசத்துக்கான அட்வடைஸ்மெண்ட் சார்.. அத பத்தி..” என்று மேனேஜரே சொல்ல “என்ன ப்ளான்?” என்று கேட்டான்.

“ஒரு டிவி விளம்பரம் பண்ணலாம்னு ப்ளான் சார். அதுல செலிபிரட்டிய கூட்டிட்டு வந்து நடிக்க வச்சா நல்லா இருக்கும்” என்று சுப்ரியா பேச சத்ருகணன் அதை காதில் வாங்கியபடி ரோஷினியையும் கவனித்தான்.

“செலிபிரட்டி ஆக்டர்ஸ் எல்லாம் எவ்வளவு செலவாகும் தெரியுமா?” என்று வழக்கம் போல் பொன்னுச்சாமி கேட்க “ஆனா பட்ஜட் குள்ள இருக்க ஆளா பார்த்துக்கலாம் சார்” என்றாள்.

“நீங்க புதுசு தான?” என்று ஒன்றும் தெரியாதது போல் ரோஷினியை பார்த்து கேட்க முறைக்க தோன்றிய எண்ணத்தை கஷ்டப்பட்டு அடக்கினாள் ரோஷினி.

“எஸ் சார்”

“இந்த ப்ளான்ல உங்களுக்கும் பங்கு இருக்குல?”

“எஸ் சார்”

“அப்ப தெளிவா சொல்லுங்க”

கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கதை கேட்பது போல் அவன் கேட்க ரோஷினி மற்ற இருவரையும் ஒரு நொடி பார்த்து விட்டு பேச ஆரம்பித்தாள்.

தொடரும்.

Leave a Reply