அத்தியாயம் 7
![]()
சத்ருகணன் கேட்டதும் ரோஷினி பேசத்தயாரானாள்.
“செலிபிரட்டி ஆக்டர் ஆக்ட்ரஸ்ல ரீசண்ட்டா மேரேஜ் ஆனவங்கள கூப்பிட்டு ஹனி மூன் டிரிப்க்கு ப்ளான் பண்ணுற போல ஆட் பண்ணலாம். இப்ப தான் நிறைய வெட்டிங் முடிஞ்சுருக்கு. எல்லாரும் ஹனிமூன் போற டைம். இந்த சீசன்ல ஹனிமூன் பேக்கேஜ் ட்ரை பண்ணலாம்.”
“ப்ளான் இருக்கா?”
“டிஸ்கஸன் முடிஞ்சு தான் ப்ளான் முழுசா ரெடி பண்ணலாம்னு இருந்தோம் சார்” என்று அவசரமாக சுப்ரியா சொல்ல சத்ருகணன் தலையாட்டினான்.
“மேல சொல்லுங்க”
“முதல்ல ஒரு நல்ல ஆட் கம்பெனிய தான் மீட் பண்ணனும். இது வரை எந்த ஆட் கம்பெனி கிட்டயும் போனது இல்லனு சொன்னாங்க. ஆனா இப்பலாம் நிறைய நல்ல கம்பெனிகள் இருக்காங்க. சோப்பும் சாம்ப்பும் தான் விளம்பர படுத்தனும்னு இல்ல. ஹாஸ்பிடலுக்கே விளம்பரம் வர ஆரம்பிச்சுடுச்சு. நம்ம கம்பெனிக்கும் டிவில ஆட் பண்ணலாம்.
கம்பெனி கிட்ட கேட்டா நம்ம பட்ஜெட்க்கு என்ன பண்ணலாம்னு அவங்களே சொல்லுவாங்க. அதுக்கேத்த மாதிரி நம்ம ஐடியாவ செட் பண்ணலாம். அடுத்தது டிவி கூட கொலாப்ரேஷன். இது வரை பெருசா எங்கயும் டூரிஸ்ட்டுக்கு விளம்பரம் வந்தது இல்ல. அதுனால எல்லா சேனல் கூடவும் நாம முதல்ல போய் கான்ட்ராக்ட் போடலாம்.”
ரோஷினியின் யோசனைகள் பிடித்து தான் இருந்தது. ஆனால் மேனேஜருக்கு பணத்தை பற்றிய கவலை தான் முதலில் வந்தது.
“ஆட் கம்பெனிக்கு போனா அவங்களே பாதி பணத்த சூட்டிங்க்குனு செலவு பண்ணிடுவாங்க. இதுல புது ஆள கூட்டிட்டு வந்து நடிக்க வச்சு?”
“எதுவும் ஆகாது சார். அவங்க கிட்ட நம்ம அமௌண்ட் சொல்லிட்டா போதும். அதுக்குள்ள சிறப்பா எப்படி முடிக்கிறதுனு அவங்களுக்கே தெரியும். அங்க நிறைய எக்ஸ்பர்ட்ஸ் இருப்பாங்க. நாமலும் ஒன்னும் சாதாரண கம்பெனிய தேடி போக போறது இல்லயே?”
“ஆட் கம்பெனி பத்தி ஐடியா இருக்கா?” – சத்ருகணன்.
ரோஷினி உடனே எழுதி வைத்திருந்த ஐந்து நிறுவனங்களின் பெயரைச் சொன்னாள்.
“இவங்க எல்லாருமே பெஸ்ட் ஆட் பண்ணவங்க. ரெண்டு கம்பெனி எக்ஸ்பென்சிவ். மத்த எல்லாரும் பட்ஜெட்க்குள்ள பண்ணுறவங்க”
“இவங்க டாப் ஃபைவ்வா?”
“எஸ் சார்”
“இத முழுசா பிரப்போஷலா ரெடி பண்ணி ரெண்டு நாள்ல கொண்டு வாங்க. பார்த்துட்டு சொல்லுறேன்” என்றவன் எழுந்து கொண்டான்.
சுப்ரியா சந்தோசமாக ஒத்துக்கொள்ள, சத்ருகணன் ரோஷினியை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறி விட்டான்.
“ரோஷினி நல்லா பேசுறமா” என்று மேனேஜர் கூறுவது காதில் விழ, ‘அதான் தெரியுமே’ என்று நினைத்துக் கொண்டு சென்றான்.
மற்ற விசயங்களை அலசி ஆராய்ந்து விட்டு, மீட்டிங் முடிந்து வெளியே வந்தனர்.
“முதல் தடவ… இந்தாளு வாயத்திறக்க முடியாம உட்கார்ந்து பார்க்குறேன். எல்லாம் பாஸ் வந்ததால” என்று சுப்ரியா சந்தோசபட, மற்றவர்களும் ஆமோதித்தனர்.
“இப்ப பண்ண வேண்டியது எல்லாம் ஒழுங்கா ஒரு பிரப்போஷல ரெடி பண்ணுறது தான். வாங்க வேலைய ஆரம்பிப்போம்”
மூவரும் அப்போதே வேலையில் இறங்கினர்.
வீட்டுக்கு வந்ததும் பாட்டி அவளை ஆர்வமாக பார்த்தார்.
“என்ன? வேலை என்னாச்சு?”
“இங்க தான் வேலை பாட்டி. இனி வீடு தான் தேடனும்”
“இங்கயே இருந்துடலாம்ல?”
“இல்ல பாட்டி.. உங்கள தேடி எத்தனையோ பேர் வர்ராங்க. எல்லாரும் நான் யாருனு கேட்குறாங்க. நீங்களும் பேத்தி தெரிஞ்சவங்க மகனு சொல்லிட்டு இருக்கீங்க. இந்த ஒரு மாசம் மட்டும்னு சொல்லி தான் வந்தேன். மொத்தமா இங்கயே எப்படி இருக்கது?”
“உனக்கு இங்க இருக்க பிடிக்கல? அதான?”
“அப்படி இல்ல. நான் இருக்கது பலருக்கு இடைஞ்சலா இருக்கலாம் இல்லையா?”
“இடைஞ்சலா எனக்கு இருக்கனும். எனக்கே இல்லனா மத்தவங்களுக்கு என்ன?”
ரோஷினி அமைதியாய் இருந்தாள். அவளது யோசனை எல்லாம் வேறு விதமாக இருந்தது. இங்கு வந்ததும் சத்ருகணனை பார்த்தாள். அதன் பிறகு மீண்டும் இன்று தான் அலுவலகத்தில் பார்க்கிறாள். இடையில் ஒரு முறை கூட சொந்த பாட்டியை வந்து பார்க்கவே இல்லை. அவளிருப்பதால் தான் வரவில்லையோ? என்ற கேள்வி தேவையில்லாமல் முளைத்தது. அதனால் தான் இங்கிருந்து செல்வதே நலம் என்று நினைத்துக் கொண்டாள்.
பாட்டி அவளது முகத்தை பார்த்து விட்டு “சரி இப்ப போ.. போய் முகத்த கழுவிட்டு உன் அண்ணனுக்கு போன் பண்ணி பேசு. அப்புறமா இத பேசிக்கலாம்” என்று அனுப்பி விட்டார்.
ரோஷினியும் உடனே சென்று விட்டாள். அவளுக்கும் இங்கிருக்க ஆசை தான். பாதுகாப்பாகவும் இருந்தது. தாயில்லா குறையை பாட்டி நிவர்த்தி செய்யும் போது விட்டுச் செல்ல மனம் ஒப்பவில்லை தான். ஆனால் எதோ ஒரு உறுத்தலும் இருந்தது.
பாட்டி சொன்னது போலவே தன் வேலைகளை முடித்து விட்டு ரஞ்சித்தை அழைத்து விசயத்தை சொன்னாள். சித்தி வீட்டினரை பார்த்து பேசிக் கொண்டிருந்தவன் தங்கையிடம் சந்தோசமாக பேசினான்.
“அப்ப அங்கயே தான் இருக்க போறியா? இல்ல வேற வீடு தேடனுமா?”
“இல்லணா.. எனக்கு இங்க இருக்கது சரியா படல. பாட்டிக்கு நிறைய சொந்தம் இருப்பாங்க. நான் இங்க இருக்கது அவங்களுக்கு தொல்லையா இருக்கலாம். பாட்டிய பார்க்க வந்துட்டு என்னை பார்த்தா சங்கடமா இருக்கும்ல?”
“அப்படி சொல்ல வர்ரியா? அதுவும் சரி தான். அடுத்தவங்க பிரைவசில ரொம்ப நாள் குறுக்க நிக்கவும் கூடாது. ஆனா பாட்டி ரொம்ப நல்லவங்க. அவங்க கூட இருந்தா பாதுகாப்பா இருப்பனு நினைச்சேன்”
“இருக்கலாம் தான். இப்ப வேற வீடு பார்க்கலாம். நான் என் கூட வேலை பார்க்குறவங்க கிட்ட சொல்லிருக்கேன். பக்கத்துலயே கிடைச்சா சொல்லுறதா சொல்லிருக்காங்க”
“சரிமா.. அப்ப வீடு பார்க்குறதுனா நான் இன்னும் ஒரு நாள் இருக்கேன். வீட பார்த்து கொடுத்துட்டே கிளம்புறேன்”
“உனக்கு லீவ் இல்லனா பரவாயில்ல. நானும் சித்தி சித்தப்பாவும் பார்த்துக்குறோம்”
“நோ வே. நான் இருப்பேன். இப்ப போய் எதாவது சாப்பிடு. நான் இங்க தெரிஞ்சவங்கள பார்த்துட்டு நம்ம கடையயும் பார்த்துட்டு வர்ரேன். நைட் ஃபோன் பண்ணுறேன்”
“ஓகே..” என்று விட்டு வைத்து விட்டாள்.
சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். இதே ஊர் தான் என்றாலும் அவளது தகுதிக்கு இந்த வேலை கொஞ்சமும் திருப்தியில்லை தான். ஆனால் இதை விட்டு விடவும் அவளுக்கு மனமில்லை.
இதே வீட்டில் இருக்க விருப்பம் இருந்தாலும் அதையும் செய்ய முடியாது தவித்தாள்.
‘ஒன்னும் சரியா விளங்கல.. பேசாம நாம பெங்களூர் பிரான்ச்க்கே போயிருக்கலாம்’ என்று நினைத்தவள் பெரு மூச்சு விட்டுக் கொண்டு எழுந்து வெளியே சென்றாள்.
°°°
வீட்டுக்கு வந்து நன்றாக சாப்பிட்டு தூங்கி எழுந்தாள் சோபனா.
மாலை நேரம் எழுந்து வர “சோபி.. இங்க வா” என்று அழைத்தார் தந்தை குமாரவேல்.
“என்னபா?” என்று கேட்டுக் கொண்டே அவரிடம் சென்று சோபாவில் அமர்ந்தாள்.
“உன் கிட்ட உன் அம்மா எதோ பேசனுமாம். கேளு” என்று மனைவியை கை காட்டினார்.
சோபனா தாயை பார்த்தாள்.
“இரு உன் அண்ணன் வரட்டும். ஒரு முக்கியமான விசயம் பேசனும்”
“என்னமா?”
“வரட்டும் இரு” என்றவர் காபியை குடிக்க சோபனா அவளுக்கும் ஒன்றை வாங்கிக் கொண்டு அமர்ந்தாள்.
“இவன் எப்ப வர?” என்று எரிச்சலாக கேட்க “வந்துட்டு இருக்கேன்னு சொன்னான்” என்றார் கௌசல்யா.
சத்ருகணன் வந்து விட சோபனா அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள். அண்ணனின் மீது பாசமே இல்லை என்றல்ல. அவன் கொடுத்தால் அல்லவா திருப்பிக் கிடைக்கும்?
“இங்க உட்காரு சதா பேசனும்”
உடனே அமர்ந்து விட்டான். பேச வேண்டும் என்று அழைத்ததால் தான் வந்திருந்தான்.
“என் அண்ணன் எப்ப கல்யாணத்த வச்சுக்கலாம்னு கேட்குறாரு?”
“எனக்கா?”
“வேற யாருக்கு?”
“நீங்களா சுகப்பிரியாவ பேசிட்டு, இப்ப என் கிட்ட கேட்டா என்ன அர்த்தம்?”
“ஹேய் உனக்கு பிடிச்சு தான பேசுனோம்?”
“எனக்கு பிடிச்சுருக்குனு நான் எப்பமா சொன்னேன்?”
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“இப்ப என்ன சொல்ல வர்ரா? சுகப்பிரியாவ வேணாம்னு சொல்லுறியா?”
“வேணாம் இல்ல. கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லுறேன்”
“ஏன்?”
“காரணம் எல்லாம் சொல்ல முடியாது. இதுக்கு தான் கூப்பிட்டீங்களா?”
“இன்னொன்னும் பேசனும்”
“என்ன?”
“சோபனாவுக்கு ஒரு நல்ல வரன் வந்துருக்கு”
எதோ கதை கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்தவள் இதைக்கேட்டு அதிர்ந்து போனாள்.
“யாரு?”
“நம்ம மினிஸ்டர் பையன். சொந்தமா கம்பெனி வச்சுருக்கான். நல்ல பையன்னு தான் சொல்லுறாங்க”
“ம்மா.. இப்ப எதுக்கு என் கல்யாணத்த இழுக்குறீங்க?” – சோபனா
“ஏன்? இப்ப இல்லாம வேற எப்ப பண்ணுறதா இருக்க? இப்படியே காலம் பூராம் இருந்துடலாம்னு நினைப்பா? கல்யாணம் பண்ணி உன்னை புருஷன் கிட்ட அனுப்புனா தான் நிம்மதி. வேலை பார்க்குறேன்னு போய் அங்க உட்கார்ந்துக்குற. ஒரு ஃபோன் பண்ணி பேசுறதுக்கு கூட உனக்கு கஷ்டமா இருக்கு”
“அதுக்காக? கல்யாணம் பண்ணிக்கனுமா? என்னால முடியாது”
“இப்ப ஏன் கத்துற?” என்று சத்ருகணன் அதட்ட சோபனா அவனை முறைத்தாள்.
“பக்கத்துல தான இருக்கோம்? காது நல்லா கேட்கும். மெதுவா பேசு”
அவன் அதட்ட கோபம் வந்தாலும் வாயை மூடிக் கொண்டாள்.
“இங்க பாருங்க.. உங்க ரெண்டு பேருல ஒருத்தருக்காச்சும் இப்ப கல்யாணம் நடந்தே ஆகனும். யாருனு நீங்களே முடிவு பண்ணுங்க”
“என்னால பண்ண முடியாது” என்று சோபனா திட்டவட்டமாக சொல்ல “ஏன்?” என்று கேட்டார் தந்தை.
“எனக்கு வேலை பார்க்கனும்”
“அந்த பையன கல்யாணம் பண்ணிட்டா வேலை பறிபோயிடும்னு யார் சொன்னா? கல்யாணம் பண்ணிட்டு கூட உன் வேலைய நீ பார்க்கலாம்”
“முடியாது. எனக்கு கல்யாணம் வேணாம்”
“என்ன வரட்டு பிடிவாதம் இது?” என்று தாய் அதட்ட சோபனா பயந்து விட்டாள்.
“எதாவது வேலிட் ரீசன் சொல்லிட்டு அப்புறமா பேசு”
“இவன் கிட்ட மட்டும் கேட்கல?”
“அவனையும் விட மாட்டோம். முதல்ல நீ பதில் சொல்லு”
“எனக்கு பிடிக்கலனா விடுங்களேன்”
“யாரையாச்சும் லவ் பண்ணுறியா?” என்று சத்ருகணன் கேட்க தூக்கிவாரிப்போட்டது சோபனாவிற்கு.
“என்ன… இல்லையே” என்று பதட்டத்தோடு சமாளிக்க அவளௌ திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.
அவன் கண்ணில் பறந்த பொறியில் சோபனா தலை குனிந்தாள்.
தொடரும்.
