அத்தியாயம் 20
![]()
இரண்டு பெண்கள் முகத்திலும் முடிந்தவரை மேக் அப் பூசி முகத்தின் களைப்பை போக்கினர் மேக்அப் போட்டவர்கள். மணப்பெண்கள் இருவருமே தோழிகளின் கிண்டலுக்கு பதில் தராமல் போக அவர்களுக்கே சலிப்பாகி விட்டது. தங்கள் வேலையை பார்க்கச் சென்று விட்டனர்.
அலங்காரம் முடிந்து புடவை கட்டி முழுமையாக தயாராகி இருக்க சுப்ரியாவும் தனுஜாவும் வந்து சேர்ந்தனர்.
இருவரும் ரோஷினிடம் வளவளத்து அவளை இயல்பாக்க சோபனாவின் தோழிகளால் அதுவும் முடியவில்லை.
சோபனா நேற்று இரவு அவள் அழைத்த போது ரஞ்சித் பேசியதை தான் நினைத்தாள்.
ரஞ்சித்திடம் இருந்த இயல்பான நெருக்கம் தொலைந்து போனது. அதை புகைப்படங்கள் எடுக்கும் போது நன்றாகவே உணர்ந்திருந்தாள். அதைப்பற்றி அப்போது பேசக்கூட முடியவில்லை.
இரவு அதையே நினைத்து தூக்கத்தை தொலைத்தவள் ரஞ்சித்தை அழைத்திருந்தாள். அவனும் ஏற்றான் தான். ஆனால் பேசவே இல்லை.
“ஏன் இப்படி பண்ணுற? இதுக்கு என் மேல கோபப்பட்டு பிரேக் அப் பண்ணிட்டு போயிருந்துருக்கலாம். கல்யாணம் வரைக்கும் வந்துடுச்சு.. ஆனா யாரோ மாதிரி என்னை நடத்துற” என்று கேட்டவளுக்கு தன்னையும் மீறி குரல் உடைந்து விட்டது.
அழுதவளை அவன் சமாதானம் செய்யவில்லை. அமைதியாக இருந்தான். பழைய ரஞ்சித் அவள் முகத்தை சுருக்கினாளே கொஞ்ச ஆரம்பித்து விடுவான். இப்போது? அவள் அழும் போதும் அமைதியாக இருக்கிறானே?
“எனக்கு இந்த கல்யாணமே பிடிக்கல.. நான் நிறுத்துறேன்” என்று பேசிப்பேசி கடைசியாக சொல்ல “சரி” என்று விட்டான்.
ஒரே நொடியில் அவளது இதயம் நின்று விட்டது.
“என்ன சொன்ன? சரியா? அப்ப இந்த கல்யாணம் நடக்க வேணாமா?” என்று கேட்டவளுக்கு கோபமும் அழுகையும் ஒன்றாக வந்தது.
“நிறுத்தப்போறேன்னு சொன்னது நீ. என்னை கேட்குற?”
“நீயும் தான் சரினு சொல்லுற.. அப்ப என்ன அர்த்தம்?”
“அத நீயே யோசி. எனக்கு தூக்கம் வருது” என்றவன் பட்டென வைத்து விட்டான்.
அடுத்து அழைத்த போது அணைத்து வைக்கப்பட்ட பதில் தான் வந்தது. அழுது அழுது தூக்கத்தை கெடுத்துக் கொண்டாள். யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. அவள் காதலித்தவனையே அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இவர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனையை சொல்லி திருமணத்தை நிறுத்தி விட்டால்? நினைக்கவே பகீரென்றது. ரஞ்சித்தை விட்டு வேறு ஒரு வாழ்வை வாழ்வதா? முடியவே முடியாது. அதனால் பல்லைக்கடித்து தனியாக வேதனையை அனுபவித்தாள்.
கடைசியாக இதோ திருமணம் வந்து விட்டது. மணமேடையில் ரஞ்சித் அருகே அமர்ந்து விட்டாள்.
முதல் திருமணம் ரஞ்சித்துக்கும் சோபனாவுக்கும் தான். ரோஷினி நாத்தனார் முடிச்சுடுவதற்காக பின்னால் நின்றிருந்தாள். தாலியை கொடுத்ததும் ரஞ்சித் கட்டி முடிச்சிட சோபனாவிற்கு மனதில் இருந்த பாரமெல்லாம் இறங்கி போக கண்கலங்கி விட்டது.
நாத்தனார் முடிச்சை ரோஷினி போட்டதும் அவர்களுக்கான சடங்கு விரைவில் நடந்து முடிந்தது. அடுத்ததாக ரோஷினியும் சத்ருகணனும் மேடையில் அமர்ந்திருந்தனர். இப்போது சோபனாவும் ரஞ்சித்தும் அவர்கள் பின்னால் நின்றிருந்தனர்.
ரஞ்சித் தங்கையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்பதை தவிர வேறு எதுவும் அவன் மனதில் இல்லை.
சோபனா கடனே என்று நின்றிருந்தாள். நாத்தனார் முடிச்சை போட அவளுக்கு சுத்தமாக விருப்பமில்லை. ஆனால் சடங்கை மீறவும் முடியாதே.
சத்ருகணன் தாலியை வாங்கி கட்டியபடி ரோஷினியை பார்க்க அவள் தலை குனிந்து இருந்தாள். முகத்தின் உணர்வுகள் சுத்தமாக தெரியவில்லை.
“இங்க பாருங்க” என்று புகைப்படம் எடுப்பவன் அழைத்தபோது இருவரும் நிமிர்ந்து பார்த்தோடு சரி.
சோபனா ஒரு முடிச்சை போட்டு விட்டு நகர்ந்து விட்டாள். அவர்களது சடங்குகள் முடிந்ததும் விருந்தினர்கள் பரிசை கொடுத்து விட்டு கிளம்ப ஆரம்பித்தனர்.
இரண்டு ஜோடிகளுமே தேவையை தாண்டி பேசிக் கொள்ளவே இல்லை. சத்ருகணனுக்கும் சோபனாவுக்கும் தான் கடுப்பாக இருந்தது. மிக முக்கியமான நாள். நிம்மதியாக அனுபவிக்க முடியவில்லை என்ற கோபம்.
ஆனால் அது ரஞ்சித் ரோஷினிக்கு புரிந்தால் தானே? இருவருமே ஏமாந்து போன உணர்வை தான் மறைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தனர்.
உணவு முடிந்து சத்ருகணன் பெற்றோர்கள் இருக்கும் வீட்டுக்குத்தான் சென்றனர். நாளை தான் ரஞ்சித் ரோஷினியின் ஊருக்குச் சென்று வர வேண்டும்.
வீட்டுக்கு வந்ததும் உட்கார வைத்து பாலும் பழமும் கொடுக்கப்பட்டது. சத்ருகணனின் பெற்றோர்கள் விஐபிகளை அனுப்பும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பாட்டி தலைமையில் தான் அனைத்தும் நடந்தது.
மோதிர விளையாட்டு எல்லாம் முடிந்ததும் மணமக்களுக்கு சற்று ஓய்வு கிடைத்தது. வரவேற்பு எதுவும் வைக்கவில்லை. திருமணத்திற்கு வந்து விட்டுச் சென்றாலே போதும் என்று முடிவு செய்திருந்தனர்.
சோபனாவும் ரோஷினியும் பெற்றோர்கள் அறையில் இருக்க ரஞ்சித்தை சோபனா அறைக்கு அனுப்பி விட்டனர்.
சோபனா வந்ததுமே படுத்து கண்ணை மூடிக் கொண்டாள். கவலைப்பட கூட நேரமில்லாமல் போனது அவளுக்கு. ரோஷினிக்கு தான் மேக்அப் முகத்தில் அதிகமாக இருக்க கழுவி விட வேண்டும் போல் இருந்தது.
ஆனால் யாராவது எதாவது சொல்வார்களோ? என்ற கவலையும் இருந்தது. மலர் சொந்தபந்தங்களை எல்லாம் மண்டபத்தில் வைத்தே வழி அனுப்பி விட்டு அதன் பிறகு தான் வருவார்.
யாரிடம் பேசுவது? என்று தெரியாமல் அவள் அமர்ந்திருக்க பாட்டி கையில் குளிர்பானத்தோடு வந்து விட்டார்.
“பாட்டி..” என்று நிம்மதி பெருமூச்சோடு ரோஷினி எழுந்து வந்து அவரிடம் வாங்கிக் கொண்டாள்.
“ரெண்டு பேருமே ஒழுங்கா சாப்பிடலனு வாங்கிட்டு வந்தேன். இவ தூங்கிட்டாளா? நீயும் படுக்க வேண்டியது தான? சாயந்தரம் ஒருக்கா கோவிலுக்கு போகனும்ல?”
“அண்ணி ரொம்ப டயர்ட் போல.. எனக்கு இந்த மேக்அப் எல்லாம் கலைக்காம தூக்கம் வராது பாட்டி”
“புதுப்பொண்ணு எல்லாத்தையும் கலைச்சுட்டு நிப்பியா?” என்று பாட்டி அதட்ட “அதுக்காக இதே அலங்காரத்தோட எவ்வளவு நேரம் தான் இருக்கது?” என்று பாவமாக பார்த்தாள்.
“மலர் எதாவது மாத்து சேலை கொடுத்து விட்டாளா?”
“அவங்க வீட்டுக்கு போயிட்டு எடுத்துட்டு வருவேன்னு சொன்னாங்க”
“அப்ப அதுவரை இப்படியே இரு”
“முகத்த வேணா கழுவிக்கவா?”
“அதுக்கா அவ்வளவு நேரம் உட்கார்ந்து பூசுனாங்க?” என்று பாட்டி அதட்ட கப்பென வாயை மூடிக் கொண்டாள்.
எல்லாம் கழுவி துடைத்தால் தான் மூச்சு வரும் போல் இருந்தது. ஆனால் சோபனா படுத்தவள் தான் அசையவே இல்லை. தூங்கவும் இல்லை. பேசியது காதில் விழுந்தது தான். எழுந்து பேச மனமில்லை. அவளுடைய பாட்டியிடம் இந்த ரோஷினி எவ்வளவு உரிமையாக கொஞ்சுகிறாள்? என்று வயிறு தான் எரிந்தது.
பழச்சாறை குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்ள பாட்டி ஓய்வாக சோபனாவின் அருகே படுத்து விட்டார்.
ரோஷினிக்கு அறையை விட்டு வெளியே செல்ல மனமில்லை. இன்னும் சில சொந்தங்கள் மிச்சமிருந்தனர். அவர்களை எல்லாம் பார்த்து பேச கூச்சம் தடுத்தது. கௌசல்யாவும் வெளியே வர வேண்டாம் என்று சொல்லி விட்டார். யாராவது அறைக்குள் வந்தால் மட்டும் தான் பேச வேண்டும் என்று உத்தரவு.
நாற்காலியில் சாய்வாக அமர்ந்தவள் மனம் அவளது பெற்றோரிடம் சென்றது. காலையில் எழுந்ததிலிருந்து அவர்களை பற்றித்தான் மனம் சிந்திக்கிறது. ரஞ்சித் மற்றும் ரோஷினியின் திருமணம் ஒரே நாளில் நடக்கிறது. அனைத்தையும் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லவா?
‘இப்ப ஹாப்பியா இருக்கீங்களாமா? ரெண்டு பேரோட வாழ்க்கையுமே ஒன்னா செட்டில் ஆகிடுச்சு இல்லபா? நீங்க இருந்திருந்தா இன்னும் நிறைய சீர் வரிசைய அடுக்கிரூப்பீங்க தான? அண்ணனே நிறைய வாங்கிட்டான்பா’ என்று சிந்தனையில் பெற்றோருடன் உரையாடிக் கொண்டிருந்தாள்.
யாரோ வந்து எட்டிப்பார்த்து விட்டு சென்றது போல் இருந்தாலும் கண்ணை திறந்து பேச மனமில்லை. சில நிமிடங்கள் கௌசல்யா வந்து விட்டார்.
“ரோஷினி” என்றதும் பட்டென கண்ணை திறக்க “தூக்கம் வந்தா வேற ரூம்ல தூங்குறியா? அத்தையும் சோபியும் இங்க படுத்துருக்காங்க. நீ உட்கார்ந்துட்டே தூங்குறியே?” என்றார்.
“தூங்கல அத்த.. சும்மா கொஞ்ச நேரம் கண்ண மூடி இருந்தேன்.”
“அப்ப சாப்பிடுறியா? வெளியில எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க. அங்க வர்ரியா?”
“அண்ணி தூங்குறாங்களே.. கொஞ்ச நேரம் கழிச்சு நாங்க சாப்பிடுறோம்”
“அப்படிங்குற? சரி.. சதாவும் மாப்பிள்ளையும் கூட இன்னும் சாப்பிடல… கூப்பிடுறேன்.” என்று விட்டு வெளியேறினார்.
ரோஷினி மீண்டும் கண்ணை மூடி சோபாவில் கால் நீட்டி சாய்ந்து கொண்டாள்.
மீண்டும் கௌசல்யாவே வந்து மூவரையும் எழுப்பி சாப்பிட அழைத்துச் சென்றார். சத்ருகணன் உடன் அமர்ந்து சாப்பிட்ட போது அவள் மனதில் இருந்த மற்ற எல்லாம் மறந்து அவன் மட்டுமே நின்றான்.
இரண்டு ஜோடியும் மௌனமாக சாப்பிட்டு விட்டு இடத்தை காலி செய்தனர். மாலை கோவிலுக்கு சென்று வர மிச்சமிருந்த சொந்தங்கள் கிளம்பி விட்டனர்.
எல்லோரையும் புன்னகை குறையாமல் அனுப்பி விட்டு ரோஷினிக்கும் சோபனாவுக்கும் மீண்டும் அலங்காரம் நடந்தது. இப்போது தனித்தனி அறையில்.
ரோஷினியின் எண்ணம் முழுவதும் இப்போது சத்ருகணன் நிறைந்து வழிந்தான்.
நேற்று பேசியது எல்லாமே நினைவில் வந்து இம்சித்துக் கொண்டிருந்தது.
அதே யோசனையுடன் மலர் சொன்ன அனைத்துக்கும் தலையாட்டி விட்டு கணவனின் அறைக்குள் நுழைந்தாள்.
தொடரும்.
