அத்தியாயம் 21
![]()
உள்ளே நுழைந்து கதவை அடைத்து விட்டு ரோஷினி நிற்க அவளை பார்த்து புன்னகைத்தான் சத்ருகணன்.
“வா..” என்றவன் தானே சென்று கதவை தாழிட்டு விட்டு கையோடு அழைத்து வந்து நிறுத்தினான். அப்போதும் அவள் அசையாமல் நிற்க “உட்காரு ரோஷினி..” என்று தோளைப்பற்றி அமர வைத்தான்.
அவளும் பொம்மையாக அமர்ந்து விட்டாள்.
அருகே அவளை ஒட்டிக் கொண்டு அமர்ந்தவன் அவளது அலங்காரத்தை நன்றாக ரசித்தான். அவளும் அவன் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அழகா இருக்கடா” என்றவன் அவள் கையைப்பற்றி உள்ளங்கையில் முத்தமிட்டான்.
அவன் எதிர்பார்த்த கூச்சமும் வெட்கமும் அவளிடம் வரவே இல்லை. கையை அவனிடம் கொடுத்து விட்டு பார்வை மாறாமல் அமர்ந்திருந்தாள்.
அவளது பார்வையை சந்தித்தவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகு நேற்று பேசியது நினைவில் வந்தது.
“நேத்து பேசுனத மறந்துடு என்ன? அத நினைச்சு நம்மலோட சந்தோசமான நேரத்த கெடுத்துக்க கூடாது. ம்ம்?” என்று கேட்டு நெற்றியில் முத்தமிட அப்போதும் அதே நிலை தான்.
நேற்று ஒரு பார்வைக்கே வெட்கி வேறு பக்கம் பார்த்தவள் இன்று முத்தத்திற்கு கூட அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“என்னமா?” என்று அவன் பொறுமையாக கேட்க இடவலமாக தலையசைத்தாள்.
“எதுவா இருந்தாலும் சொல்லு” என்று தூண்டினான்.
தரையை பார்த்து பெருமூச்சு விட்டாள்.
“என் மேல இன்னும் கோபமா? அத பத்தி நினைக்காத.. அது எனக்கும் உன் அண்ணனுக்கும் இருக்க பிரச்சனை. நமக்குள்ள அது வேணாம் என்ன?”
அப்போதும் அவள் அமைதி காக்க அவள் முகத்தை பற்றி நிமிர்த்தி பார்த்தான். உணர்ச்சியே இல்லாத முகம். தனி அறையில் புதுமணத்தம்பதிகளாக அமர்ந்திருக்கும் போது இந்த உணர்வற்ற முகம் எவ்வளவு கொடுமை?
“எதாவது பேசு” என்று அழுத்திச் சொல்ல “எனக்கு பேசவே தோணல” என்றாள் வாயைத்திறந்து.
“அப்படினா என்ன அர்த்தம்?”
“எதுமே மிஞ்சல பேசுறதுக்கு. அவ்வளவு தான்”
“உங்கண்ணன பிடிக்கலனு சொன்ன கோபமா? அத நமக்குள்ள இழுத்துட்டு வராத ரோஷினி..”
“இல்ல.. நான் ஏன் கோபமா இருக்கேன்னு உங்களுக்கு புரியவே இல்ல”
“என்ன சொல்ல வர்ர? தெளிவா பேசு”
“நான் சொன்னாலும் உங்களுக்கு புரியாதுங்க. நீங்களா ஒரு நாள் புரிஞ்சுப்பீங்க”
“முதல்ல சொல்லு.. புரியுதா இல்லையானு பார்க்குறேன்”
இமைக்காமல் இரண்டு நொடி பார்த்தவள் “ஏமாந்துட்டேன்னு தோணுது” என்றாள்.
இதைக்கேட்டதுமே கோபம் வந்து விட அவள் கையை விட்டு விட்டு எழுந்து நின்றான்.
“ஏமாந்துட்டியா? என்ன ஏமாந்த? நான் உன்னை ஏமாத்துனனா?” என்று கோபமாக கேட்க “நீங்க ஏமாத்தல.. நானே தான் ஏமாந்து போயிட்டேன்” என்றாள்.
“அப்படி எதுல ஏமாந்த?” என்று கேட்டவனின் குரலில் கோபம் கூடியது.
“நீங்களும் என் அண்ணன் மாதிரி நல்லவர்னு நினைச்சேன். ஆனா.. ப்ச்ச்..”
“உன் அண்ணன் நல்லவனா? வாயக்கிளறாத ரோஷினி”
“என் அண்ணன் நல்லவர் தான். நீங்க அவர பிடிக்கலனு சொன்னது கூட என்னால ஏத்துக்க முடியும். ஆனா என்னை கல்யாணம் பண்ணுறதுக்காக என் அண்ணனுக்கு உங்க தங்கச்சிய கட்டி வைச்சதா சொன்னத தான் ஏத்துக்கவே முடியல..”
“ரோஷினி.. உன் அண்ணன் எப்படிப்பட்டவன் தெரியுமா? எதுவும் தெரியாம பேசாத”
“என்ன தெரியும் உங்களுக்கு? சொல்லுங்க”
“கல்யாணத்துக்கு முன்னாடியே சோபனா கூட ஒரு வருசமா லிவ் இன்ல இருந்துருக்கான். அது தெரியுமா உனக்கு?” என்று பட்டென போட்டு உடைத்து விட்டான்.
ரோஷினி அதிர்ந்து பார்த்தாள். ஆனால் சில நொடிகளில் அவளது முகத்தில் இருந்த அதிர்ச்சி காணாமல் போனது. அதற்கு பதில் கோபம் தான் வந்தது.
“இது வரை நீங்க என் அண்ணன தப்பா நினைச்சத கூட ஏத்துக்கிட்டேன். ஆனா இப்ப ஒன்னு சொன்னீங்களே.. வாவ்..! இப்ப தான் உங்க மேல இருந்த மரியாதையே காணாம போயிடுச்சு.”
“ஏய்.. லிவ் இன்ல இருந்தது அவன்”
“சோ வாட்?” என்று அவனுக்கு சமமாக கோபத்தோடு கேட்டவள் சட்டென நிதானத்துக்கு வந்தாள். பிறகு மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு அவனை பார்த்தான்.
அவனோ அவளது கோபத்தை சற்று ஆச்சரியமாக தான் பார்த்தான். அவனிடம் கோபப்படாமல் தன்னிடம் கோபப்படுகிறாளே?
“எனக்கு இந்த சடங்கு எதுவும் பிடிக்கல.. நான் தூங்கனும். ரொம்ப டயர்டா இருக்கு” என்றவள் மெத்தை மீதிருந்த பூக்களை ஓரம் கட்டி விட்டு படுத்து விட்டாள்.
அவனை பார்க்கவும் இல்லை. அவன் நிற்பதை பொருட்படுத்தவும் இல்லை.
போர்வையையும் இழுத்து போர்த்திக் கொள்ள சத்ருகணனின் இரத்த கொதிப்பு எகிறியது. அவள் செய்த எதுவுமே அவனுக்கு பிடிக்கவில்லை.
அவளுடைய அண்ணனை குறை சொன்னால் கோபம் வரும் தான். அதற்காக அவனை தூக்கி எறிந்து பேசுவாளா? கோபமாக வந்தது. அதுவும் “சோ வாட்?” என்கிறாளே? அவளுடைய அண்ணன் அப்படி செய்ததை பற்றி அவளுக்கு அக்கறையே இல்லையா? என்ன பாரபட்சம் இது? அவனை மதிக்காமல் அவள் போக்கில் படுத்துக் கொண்டாளே?
பிடிக்கவில்லை என்று விட்டு படுத்தவளை தொல்லை செய்யும் அளவு அவன் நாகரீகமற்றவன் அல்ல. அதனால் அறைக்குள் இங்கும் அங்கும் நடந்தான்.
சில நிமிடங்களில் ரோஷினி நன்றாக உறங்கி விட்டாள். நேற்று முழுவதும் உறங்காதது அலைச்சல் எல்லாம் சேர்ந்து அவளை அறியாமலே உறங்கி இருந்தாள்.
சத்ருகணனுக்கு அதற்கும் கோபம் வந்தது. அவனை கண்டு கொள்ளாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறாளே! அங்கேயே இருக்க முடியாமல் வெளியே செல்ல நினைத்தான். நள்ளிரவு வந்திருந்தது. வெளியே யாரும் இருக்க வாய்ப்பில்லை.
அதனால் கதவை சத்தமில்லாமல் திறந்து வெளியே வந்தான். உள்ளேயே இருந்து மூச்சு முட்டுவதை விட மாடிக்கு சென்று சில நிமிடங்கள் நின்றால் மனம் சமன் படும் போல் தோன்றியது. மாடிக்கு ஏற அங்கே ஏற்கனவே யாரோ இருந்து பேசும் குரல் கேட்டது. சற்று கூர்மையாக கவனிக்க சோபனா அழுது கொண்டிருந்தாள்.
சட்டென உடல் விறைத்தது. கோபம் இப்போது பன்மடங்கு அதிகரித்தது. அவளது தங்கை திருமணமான அன்று மாடியில் நின்று அழுகிறாளா? கோபத்தோடு மேலே ஏற ரஞ்சித்தின் குரலும் கேட்க அப்படியே நின்று விட்டான்.
°°°
சோபனா தனியாக அறைக்குள் செல்லவே பயத்தோடு தான் சென்றாள். எவ்வளவு பேச முயற்சித்தும் பேசாத ரஞ்சித்திடம் இன்று தனியாக மாட்டப்போகிறாள். மனதில் பயம் எல்லையை தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் விட்டால் மயங்கியே விழுந்து விடுவாள். அப்படி இருந்தது.
மற்றவர்கள் முன்பு காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் அறைக்குள் நுழையும் போது வியர்த்து விட்டது. அவளுடைய அறை தான். இன்றைய இரவு இங்கு தான். நாளை அவர்களது சொந்த ஊருக்கு சென்று விட்டு அங்கிருந்து பெங்களூரு புறப்பட வேண்டும்.
உள்ளே வந்து கதவை அடைத்ததும் ரஞ்சித் அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான்.
“ரஞ்சித்” என்று மெதுவாக அழைத்தாள். பதில் இல்லை.
அருகே சென்று நின்றாள்.
“என் மேல இன்னுமே கோபமா? நான் ஏன் அப்படி செஞ்சேன்னு சொல்லிட்டேனே. ப்ளீஸ்.. ஐம் சாரி”
“ஓகே”
ஒட்டாத குரலில் பதில் வர அவளால் தாங்க முடியவில்லை. வாய் விட்டு அழ வேண்டும் போல் இருந்தது.
“ப்ளீஸ்டா.. இப்படி யாரோ மாதிரி பேசாத. நமக்கு கல்யாணமே முடிஞ்சது. நான் உன் பொண்டாட்டி”
“தெரியும்”
“ஏன்டா இப்படி பேசாம தண்டிக்கிற? கோபம் வந்தா ரெண்டு அடி கூட அடிச்சுடு” என்று கேட்டு கேவ அவளை நக்கலாக பார்த்தான்.
“கை நீட்டி உன்னை அடிக்கனுமா? அடிக்கட்டுமா? அடிச்சா என்னாகும்? நீ என்னை ஏமாத்துனது இல்லனு ஆகிடுமா? என் வாயக்கிளறாத. பேசாம போய் உன் வேலைய பாரு”
“நான் ஏமாத்தனும்னு பண்ணல.. என்னால உன்னை விட முடியல” என்றதும் பட்டென எழுந்து நின்றான்.
“பேசாத சோபனா.. பேசிப்பேசி என்னை ரொம்ப காயப்படுத்தாத. நான் உன்னை கல்யாணம் பண்ணிட்டேன். உன்னை அவ்வளவு பிடிக்கும்னு தான் கல்யாணம் பண்ணிருக்கேன். அத காப்பாத்திக்கனும்னு ஆசை இருக்கு. கெடுத்துடாத” என்றவன் விருவிருவென கதவருகே சென்றான்.
“தூங்கு.. நான் மாடிக்கு போறேன்” என்று விட்டு கதவை திறந்து வெளியேறி விட்டான்.
சோபனா வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அவன் பின்னால் ஓடினாள். அவன் மாடிக்கு செல்ல அவளும் வந்தாள்.
“ஹேய் இங்க வந்து ஏன் நிக்கிற? யாராவது பார்த்துட்டா தப்பா நினைப்பாங்க. ப்ளீஸ் ரூம்க்கு வா” என்று கெஞ்ச “உன்னை யாரு பின்னாடியே வர சொன்னது?” என்று கேட்டான்.
“ப்ளீஸ்டா.. உள்ள வச்சே பேசு”
“உன் கிட்ட பேச பிடிக்கலனு தான் வந்தேன். புரியுதா இல்லையா?”
“உன் பொண்டாட்டி கிட்ட உனக்கு பேசப்பிடிக்கலயா?” என்று சோபனா கேட்க அவன் பதில் சொல்லவில்லை.
“ஏன்டா இப்படி பண்ணுற? நான் பொய் சொன்னேன் தான். ஏமாத்துனேன் தான். ஆனா உன் கிட்ட வர வேற வழி தெரியல எனக்கு”
“அதுனால?”
கத்தியைப்போன்ற வார்த்தை வர சோபனா திகைத்து நின்றாள்.
“சொல்லு அதுனால?”
“ப்ளீஸ்டா..”
“என்ன ப்ளீஸ்?”
“எதுனாலும் ரூம்ல வச்சு பேசு”
“உனக்கு புரியலயா சோபனா? ஏன் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிட்டு இருக்க?”
“உனக்கு ஏன் நான் சொல்லுறது புரியல? இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் ஆகியிருக்கு. இப்படி பர்ஸ்ட் நைட்ல மாடில வந்து நிக்கிறது தெரிஞ்சா எல்லாரும் என்ன நினைப்பாங்க? அதுவும் நாம லவ் மேரேஜ் வேற”
“இப்ப என்ன ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடனும் அதான? கொண்டாடிட்டா என்னை தனியா விட்டுருவியா? சரி வா” என்று கையைப்பிடித்து இழுக்க “ஏய்..” என்று பதறினாள்.
“என்ன நீ தான ஆசைப்பட்ட?” என்று நக்கலாக கேட்டான்.
சோபனா என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள்.
“உன் மேல எனக்கு கோபம் தான்டி.. ஆனா அது அவ்வளவு பெருசா இல்ல. உன் மேல லவ்வும் இருக்கு. நீ சொன்ன அத்தனை பொய்யும் மன்னிச்சு உன் கூட ஒரு நாள் வாழத்தான் போறேன். ஆனா அந்த நாள் இன்னைக்கு இல்ல”
“ரஞ்சித்…”
“ஆனா ஒன்னு.. உன்னை விட உன் குடும்பம் நல்லவங்க.. எப்படிடி இப்படி ஒரு குடும்பத்த அப்படியே மாத்தி சொன்ன? நீ சொன்ன பொய்யெல்லாம் நினைச்சா இப்ப சிரிப்பா வருது. இத எல்லாம் உண்மைனு நம்புன என்னை நினைச்சா இன்னும் கேவலமா இருக்கு.”
சோபனா உதட்டை கடித்து கண்ணீர் விட்டாள்.
“எப்படி எப்படி? உன் அப்பா கை கால் விளங்காதவரு.. உன் அம்மாவும் அப்பாவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்க. எதோ ஒரு கிராமத்துல இருந்து படிச்சு இந்த வேலைக்கு வந்துருக்க.. ப்பா.. பேசாம கதை எழுது.. ஒரு படமே எடுத்துடலாம்”
“ப்ளீஸ்டா.. அதெல்லாம் தெரியாம செஞ்சுட்டேன்”
“தெரியாம? வாய் கூசல இத சொல்லும் போது?”
“உன் மேல இருந்த லவ்வ மறக்க முடியாம…”
“சட் அப்.. திரும்ப இத சொல்லாத.. பத்திட்டு வருது. நல்லா இருக்க அப்பாவ நீயே சபிச்சுருக்கியே.. உன்னலாம்…?”
அவன் பல்லைக்கடிக்க சோபனா மட்டுமல்ல கேட்டுக் கொண்டிருந்த சத்ருகணனுக்கு கூட பேச்சு வரவில்லை.
“ஆனா ஒரே ஒரு நல்லது நடந்துருக்கு உன்னால.. ரோஷினிக்கு உன் அண்ணன் கிடைச்சுட்டார். உன் அண்ணன் உன்னை போல ஏமாத்து பேர்வழி இல்ல. ரொம்ப நேர்மை. பிடிக்கலனா பிடிக்கலடானு முகத்துக்கு நேராவே சொல்லுற அளவு நேர்மை இருக்கு.”
“உன்னை பிடிக்கலனு அண்ணன் சொன்னானா? எப்போ?”
“ஏன்? தெரிஞ்சு என்ன செய்ய போற? ஏன் உண்மைய சொன்னனு கேட்க போறியா?”
“ரஞ்சித்..”
“உன் அண்ணன் என்னை ஏன் பிடிக்கல சொன்னாரு தெரியுமா? நானும் நீயும் லிவ் இன்ல இருந்தோமாம். உன் சொந்த தங்கச்சிய இவ்வளவு பாதுகாக்குற. அடுத்தவன் தங்கச்சினா லிவ் இன் இருப்பியானு கேட்டாரு..”
சோபனா அதிர்ந்து தலையை தொங்க போட்டாள்.
“எவ்வளவு அசிங்கமா இருந்துச்சு தெரியுமா? அப்பவே சொல்லிருப்பேன்.. யார பார்த்துடா இந்த கேள்வி கேட்குற? ஒரே ஒரு மெடிகல் ரிப்போர்ட் உன் தங்கச்சி கிட்ட வாங்குனா அது சொல்லும் நான் எவ்வளவு உத்தமன்னு கேட்டுருப்பேன்”
“ப்ளீஸ்டா.. கத்தாத.. யாருக்காச்சும் கேட்டுரும்”
“கேட்கட்டுமே.. அதான் கல்யாணம் முடிஞ்சு போச்சே.. ஆனா ஒன்னுடி.. உன் அண்ணன் கிட்ட என்னை உத்தமன்னு நிருபிச்சுட முடியும். நீ ஏமாத்துக்காரினு எப்படி நிரூபிக்கிறது? அதான் யோசனையா இருக்கு”
“அவன் கிட்ட நீ எதையும் நிரூபிக்க வேணாம்”
“ஆமா.. நிரூபிச்சு என்னாக போகுது? நான் நினைச்சுருந்தா உன் அண்ணன் என்னை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்டப்போவே அத்தனை உண்மையும் சொல்லிருக்க முடியும். சொல்லல.. ஏன் தெரியுமா? உன்னை லவ் பண்ணி தொலைச்சுட்டேன்டி. உன்னை உன் அண்ணன் முன்னாடி கூட அசிங்க படுத்த என்னால முடியலடி. வாய மூடிட்டு நான் அசிங்கபட்டு நின்னேன்”
சோபனாவால் அழத்தான் முடிந்தது.
“என்னமா நடிச்ச இல்ல? உன் அப்பாவுக்கு உடம்பு சரி இல்லையாம். ஹாஸ்டலுக்கு கட்ட பணமில்லையாம். தங்க இடமில்லனு நடு ராத்திரி போன் பண்ணி அழுதியே.. அத விட எந்த நடிகையும் சிறப்பா நடிக்க மாட்டா.. சொல்லு.. நீ தான என் கிட்ட சுத்தமா பணமில்ல.. ஹாஸ்டல விட்டு துரத்துறாங்கனு சொன்ன? அதுனால தான உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போனேன். அங்க உன்னோட மொத்த செலவும் நான் தான் பார்த்தேன். உன் சம்பளம் மொத்தமும் ஊருக்கு அனுப்புனு சொல்லிட்டு ஒரு வருசமா உன்னை நான் பார்த்தேன். ஒரு ரூபாயாச்சும் நான் உன்னை செலவு பண்ண விட்டனா? அப்படி நான் செலவு பண்ணும் போது உனக்கு கொஞ்சம் கூடவா உறுத்தல?”
சோபனா தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். ரஞ்சித் சில நிமிடங்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் நடந்தான். பிறகு அவளருகே வந்து அமர்ந்தான்.
“எனக்கு ஒரு விசயம் மட்டும் சொல்லு. ஒரு தடவ கூட என் கிட்ட உண்மைய சொல்லனும்னு உனக்கு ஏன் தோணவே இல்ல? நீயாவே வந்தப்போ எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா.. அவள நினைக்கும் போது உன் கூட கல்யாணமே இல்லாம நெருங்க முடியாதுனு சொன்னப்போ உனக்கு நான் வேணாமானு கேட்டுட்டு நின்னியே அப்ப என்ன நினைச்ச? இந்த ஒரு வருசத்துல உன்னை எப்படி வேணா யூஸ் பண்ண சான்ஸ் இருந்தும் உன்னை கிஸ் பண்ணத தவிர நெருங்காத என்னை பார்த்து தான்டி உன் அண்ணன் கேட்டான் அடுத்தவ தங்கச்சினா லிவ் இன் கேட்பியானு.. அந்த நிமிஷமே செத்துடுச்சுடி எல்லாமே”
“வேணாம்டா.. ப்ளீஸ்.. என்னை மன்னிச்சுடு.. நான் பண்ண தப்பால நீ இப்படி அசிங்கப்படுவனு நினைக்கல.. ப்ளீஸ்டா” என்று கும்பிட்டு மன்னிப்பு கேட்க அதையும் பார்க்க முடியாமல் எழுந்து திரும்பி நின்றான் ரஞ்சித்.
அழுது கொண்டிருந்தவள் குரல் சட்டென நின்று விட திரும்பிப் பார்த்தான். மயங்கிக் கிடந்தாள்.
தொடரும்.
