அத்தியாயம் 28
![]()
ரோஷினி எதுவும் நடக்காதது போல் பையை தூக்கிக் கொண்டு செல்ல, சத்ருகணன் வேகமாக அவளிடம் சென்றான்.
சமையலறையில் நுழைந்ததும் மனைவியின் தோளை பிடித்து திருப்பினான்.
“நில்லு.. என்ன சொல்லிட்டு வர்ர? அவ புருஷன பார்த்து பொறாமைப்படுவியா?” என்று அவன் முறைக்க ரோஷினிக்கு சிரிப்பு வந்தது.
“நான் ஏன் படனும்? எனக்கு இப்படி மூக்கு மேல கோவத்த வச்சுட்டு உண்மைய உடைச்சு பேசுற என் புருஷனே போதும்” என்று அவனது மூக்கைப்பிடித்து ஆட்ட சிரிப்போடு அவளை அணைத்து முத்தமிட்டான்.
“போதும் போதும். சமைக்கிற வேலைய பார்ப்போம்.”
“அவங்க ரெண்டு பேரும் செய்யட்டுமே”
“இருக்க நிலைமையில அவங்க செய்ய வாய்ப்பில்ல. அவங்களுக்காக வெயிட் பண்ணா நாம தான் பட்டினி கிடக்கனும்”
“சரியில்லயே.. இனி இங்க வர்ரத பத்தி யோசிக்கனும் போல. இவங்களுக்கும் சேர்த்து சமைச்சு போட்டுட்டு இருக்கதுக்கு நாம நம்ம வீட்டுலயே இருந்துருக்கலாம்”
“பரவாயில்ல விடுங்க”
“ஏன் அப்படி பேசுன?”
“அண்ணி கிட்ட பேசுனதா? எல்லாத்தையும் ஒரு நாள் பேசனும்னு தான் நினைச்சேன். இன்னைக்கே வாய்ப்பு கிடைச்சுருச்சு. இதுக்கும் மேல கோபமா தான் இருப்பாங்கனா அது அவங்க இஷ்டம்.”
“அவளுக்கு எல்லாம் பத்து தடவ சொல்லனும். அப்ப தான் தலையில நுழையும். புத்தி தெளியும். நீ சொன்னத எப்படி எடுத்துக்கிட்டானு தெரியல”
“எப்படி வேணா எடுத்துக்கட்டும். நானும் விட்டுர மாட்டேன். இத கழுவுங்க நாம வேலைய பார்ப்போம்” என்றதோடு வேலையில் இறங்கி விட்டாள்.
ரஞ்சித்துக்கு மனம் உடைந்து போனது. சோபாவில் சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தான்.
அவன் எல்லாம் வாங்கி வரும் போது சத்ருகணன் வெளியே நின்றிருந்தான்.
“என்ன இங்க நிக்கிறீங்க?”
“என் பொண்டாட்டி வெளிய போடானு துரத்தி விட்டுட்டா. சோபி கிட்ட எதோ தனியா பேசனுமாம்”
“தனியாவா? சண்டை எதுவும் போடுறாங்களோ?” என்று பதட்டமானான்.
அவனுக்குத்தான் தெரியுமே சோபனாவுக்கு ரோஷினியை பிடிக்காது என்று.
“ரோஷினி சண்டை போட மாட்டானு தான் நினைக்கிறேன்”
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ரோஷினியின் சிரிப்பு சத்தம் காதில் விழுந்தது.
“முடிஞ்சதுனு நினைக்கிறேன். சிரிக்கிறா” என்று ஆர்வமாக சத்ருகணன் உள்ளே வர ரஞ்சித்தும் வந்து விட்டான்.
ஆனால் அதன் பின்பு ரோஷினி பேசியது இருவரின் காதிலும் தெளிவாக விழுந்தது. ரஞ்சித் தான் மனம் உடைந்து போனான். இதை பற்றி ரோஷினி ஏற்கனவே சத்ருகணனிடம் சொல்லி இருந்ததால் அவனுக்கு பெரிய அதிர்ச்சி இல்லை.
ஆனால் ரஞ்சித் மிகவும் உடைந்து விட்டான். அவனுடைய தங்கை அவனது காதலை ஏற்றுக் கொண்டாள் என்பது அவனுக்கு சந்தோசமாக தான் இருந்தது. ஆனால் உண்மையில் அவன் அவளது நம்பிக்கையை உடைத்திருக்கிறான்.
அவன் மட்டும் தான் உலகம் என்று வாழ்ந்தவளிடம் அனைத்தையும் மறைத்திருக்கிறான். அவளாக கேட்ட போது கூட அவன் சொல்லவில்லை. ஒரு வருடம் தினம் தினம் பேசிக் கொண்ட போது கூட அவன் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. இப்படி ஒருத்தி தன் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை அவள் அறிந்த போது எவ்வளவு ஏமாற்றமாக இருந்திருக்கும்?
நினைத்ததும் சட்டென எதோ இதயத்தில் பாய்ந்தது. இதைத்தானே சோபனாவும் அவனுக்குச் செய்தாள்? அவளும் அவளது குடும்பத்தை பற்றிய உண்மையை சொல்லவில்லை. அவனும் தன் வாழ்வின் முக்கியமான நிகழ்வைப்பற்றி ரோஷினியிடம் சொல்லவில்லை.
இருவரின் தவறும் சமம் தான். அவனுக்கு மட்டும் ரோஷினியின் மன்னிப்பு சுலபமாக கிடைத்து விட்டதால் தவறு பெரிதாக தெரியவில்லை. ஆனால் சோபனாவை அவன் மன்னிக்கவில்லை.
அங்கிருந்த நான்கு நபர்களில் மிகவும் சிறிய பெண் ரோஷினி. ஆனால் அவள் தான் மூவரையும் விட உயர்ந்து இருந்தாள்.
அண்ணனை மன்னித்தாள். அண்ணியை சமாதானம் செய்கிறாள். கணவனின் கோபத்தையும் தவறையும் சுட்டிக் காட்டுகிறாள். மற்ற மூவரும் அவளை விட இறங்கித்தான் போனார்கள்.
ரஞ்சித்துக்கு தங்கையின் நம்பிக்கையை உடைத்து விட்டோம் என்ற கவலை மனதை அரிக்க உடனே சென்று பேசத்தோன்றியது.
ஆனால் அதற்கு முன்பு மனைவியிடம் பேசச் சென்றான்.
சோபனா தரையைப்பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளுக்கு ரோஷினி பேசிய விதம் பிடிக்கவில்லை தான். ஆனால் அவள் பேசியது எல்லாம் உண்மை தான்.
ரஞ்சித் அவளுக்காக நிறையவே செய்திருக்கிறான். தங்கையை பார்க்க கூட விடாமல் தடுத்த போதும் ரஞ்சித் அவளை குறை சொன்னதே இல்லை. அப்படி பார்த்தால் அவளுக்கு மிகவும் நல்ல கணவன் தான் கிடைத்திருக்கிறான்.
சத்ருகணனுக்கு சுகப்பிரியாவின் மீது தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை. சுகப்பிரியாவிற்கும் சோபனாவுக்கும் நடக்கும் சண்டையில் தான் சத்ருகணனுக்கு அவளை பிடிக்காமல் போனது. தங்கைக்காக யோசிக்கும் அண்ணன் தான் அவன்.
இதை எல்லாம் அவள் தான் கவனிக்காமல் விட்டிருக்கிறாள். ரோஷினி சொன்ன பிறகு எதோ தன்னைத்தானே முட்டாளாக்கிக் கொண்டு வாழ்ந்தது போல் பிரம்மை வந்தது.
எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருக்க ரஞ்சித் வந்து அருகே அமர்ந்தான்.
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
“வந்துட்டியா?”
“ம்ம்”
சில நொடிகளுக்குப்பிறகு “பேசுனத கேட்டுட்டு தான் இருந்தேன்” என்றான்.
சோபனா அதிர்ச்சியோடு பார்த்து வைத்தாள்.
“அப்ப உனக்கு ரோஷினி மேல பொறாமை. நல்ல அண்ணன் நல்ல புருஷன் கிடைக்கலனு. அதுக்காக தான் அவள தேவையில்லாம வெறுத்துருக்க”
“அது.. ஆனா..”
“ஆனா ஒன்னு… உன்னையும் என்னையும் பொய் சொல்லுறதுலயும் மறைக்கிறதுலயும் சமமா வைக்கலாம். சத்ருகணனையும் ரோஷினியையும் உண்மைய வெளிப்படையா பேசுறதுல சமமா வைக்கலாம். நல்ல பொருத்தம்ல?”
ரஞ்சித் கேட்க சோபனாவுக்கு வலித்தது.
“ஐம் சாரி.. நான் உன் மேல இருக்க லவ்ல.. உன்னை அப்ரோச் பண்ண வழி தெரியாம தான் அப்படி சொன்னேன். உன் கூடவே இருக்கனும்னு ஆசைப்பட்டப்போ ஒரு ஃப்ரண்ட் கொடுத்த ஐடியா தான்.. அந்த ஃபீஸ் கட்ட முடியாத கதை. நிறைய தடவ சொல்லனும்னு நினைச்சுருக்கேன் தெரியுமா? நிஜம்மாவே நினைச்சேன். ஆனா உண்மை தெரிஞ்சா எங்க பிரேக் அப் பண்ணிட்டு போயிடுவியோனு பயம். அப்படி நீ போயிட்டா நான் என்ன செய்வேன்? அந்த பயத்துலயே நான் வாயமூடிட்டு இருக்க வேண்டியதா போச்சு. ப்ளீஸ்டா.. தெரியாம பண்ணிட்டேன்னு சமாளிக்க முடியாது. ஆனா வேற வழி தெரியாம இப்படி பண்ணிட்டேன். ஆனா நான் உன்னை லவ் பண்ணது நிஜம். அதுல எதுவும் பொய் இல்லடா.. ப்ளீஸ்”
சோபனா அவன் கையைப்பிடித்துக் கெஞ்ச ரஞ்சித்திடமிருந்து பெருமூச்சு தான் வந்தது. அன்று சோபனா உண்மையைச் சொன்ன போது அவன் அடைந்த ஏமாற்றமும் வலியும் இப்போது குறைந்து போயிருந்தது. அதனால் அவளது விளக்கத்தை கேட்கும் அளவு பொறுமை இருந்தது.
“நீயாவது எனக்காக பண்ணிட்டேன்னு காரணம் சொல்லிட்ட. நான் எப்படி ரோஷினி கிட்ட சொல்லுவேன்? என் காதலிக்காக உன்னை ஒதுக்கி வச்சுட்டேன். என் தங்கச்சியா இருந்தாலும் என் வாழ்க்கையில உனக்கு இடமில்லனு தள்ளி வச்சுட்டேன்னு சொல்லவா?”
“நான் வேணா சொல்லட்டுமா?”
“என்னனு?”
“நான் சொல்லி தான் நீ மறைச்சனு..”
“அவளுக்கே அது தெரியும். ஆனாலும் அவ என் கிட்ட கேட்கல. ஏன் மறைச்சனு கேட்கல. கோபப்படல. பேசாம இருக்கல. அப்படியே விட்டுட்டா.. அவ அளவு பரந்த மனசு எனக்கு தான் வரல”
“ஆனா உன் மேல தப்பில்ல. நான் தான எல்லாம் பண்ணேன். நானே சாரி கேட்டுடுறேன்”
“கேட்டா.. சரி மன்னுச்சுட்டேன்னு சொல்லுவா. ஆனா உடைஞ்ச நம்பிக்கை திரும்ப கிடைக்காது”
சோபனாவுக்கு இதற்கு மேல் என்ன செய்வது என்று புரியவில்லை.
“விடு. நானே பேசிக்கிறேன். இப்ப சமைக்கலாம் வா” என்று எழுந்து செல்ல சோபனாவும் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து வந்தாள்.
சமையலறையில் ரோஷினி சிரித்துக் கொண்டிருந்தாள்.
“இந்த சைஸ்ல வெட்டுனா சிங்கத்துக்கு இரையா போடலாம். நாம சாப்பிட முடியாது” என்று ரோஷினி சிரிக்க “ஏன்? நமக்கு பல்லு இல்லையா?” என்று சண்டைக்கு வந்தான் சத்ருகணன்.
“ஆமா ஆமா.. பல்லு இருக்குனு பச்சையாவே சாப்பிட வேண்டியது தான? சட்டில போட்டா வேக வேணாமா?”
“முழு கோழியவே வேக வைக்கிறாங்க. நான் வெட்டிட்டேன். இப்ப வேகாதா? எங்க அந்த அடுப்பு? எப்படி வேகாம இருக்குனு நானும் பார்க்குறேன்”
“அய்யோ.. ஒன்னு ஒழுங்கா வெட்டுங்க. இல்லனா என்னை வெட்ட விடுங்க. இப்படியே பேசிட்டு இருந்தா லன்ச்ச டின்னர்ல தான் சாப்பிடனும்”
“சரி சரி.. இப்படி வா.. எப்படினு சொல்லிக் கொடு” என்றவன் மனைவியை கைக்குள் நிறுத்தி வெட்ட ஆரம்பித்தான்.
அவர்களது நெருக்கத்தை பார்த்து விட்டு உள்ளே புக முடியாமல் மற்றவர்கள் பின்வாங்கினர்.
“நான்.. நான் துணி எல்லாம் காயப்போட மறந்துட்டேன். போட்டுட்டு வர்ரேன்” என்று சோபனா சென்று விட ரஞ்சித் அறைக்குள் சென்று விட்டான்.
தொடரும்.
