அத்தியாயம் 30 (final)
![]()
தொலைகாட்சியின் முன்பாக அமர்ந்திருந்தாள் ரோஷினி. எப்போதும் போலில்லாமல் முகத்தில் கோபம் தாண்டவமாடியது.
சத்ருகணன் அவளை பார்ப்பதும் கணினியை பார்ப்பதுமாக இருந்தான். அவள் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
“எவ்வளவு நேரம்டா கோபமா இருப்ப?” என்று கேட்டவனை முறைத்து விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
“ரொம்ப நேரம் டிவி பார்க்காத. போய் தூங்கு” என்றதற்கு பதில் வராமல் போக அவனே தொலைகாட்சியை அணைத்து விட்டான்.
ரோஷினி விருட்டென எழுந்து செல்ல சத்ருகணன் பெருமூச்சு விட்டான்.
கணினியை மூடி வைத்து விட்டு அவள் பின்னால் அறைக்குள் சென்றான்.
மனைவியின் கோப முகம் சிரிப்பை கொடுத்தாலும் சிரித்து வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டான்.
“ரோஷீ” என்று பின்னாலிருந்து அணைக்க கையில் அடித்தாள்.
“அடிக்கிற? நான் பாவம்”
“கைய எடுங்க”
“எப்படி இருக்க? டாக்டர் என்ன சொன்னாங்க?”
அவள் பதில் சொல்லாமல் நிற்க “அழகே சுகமா? உன் கோபங்கள் சுகமா?” என்று பாட ஆரம்பித்து விட்டான்.
“என்ன டைட்டில் சாங்கா? பிச்சுடுவேன்”
“அதே தான். எப்பவும் என் கிட்ட கோபப்பட்டுட்டே இருக்கியே.. உனக்கு போரடிக்கலயாடி?”
“அடிக்கல. உங்கள வேணா நாலு அடி அடிக்கிறேன்.”
“அடிச்சுக்கோ. இப்ப டாக்டர் என்ன சொன்னாங்கனு சொல்லு”
“உங்கள விட்டு தூரமா ஓட சொன்னாங்க”
“அப்படியா சொன்னாங்க? சரியில்ல டாக்டர மாத்திடுவோம்”
“பேசாம போறீங்களா?”
“சரி சரி சாரி.. எதோ தெரியாம நடந்துடுச்சு”
ரோஷினி அதிர்ச்சியோடு பார்க்க சொன்னதன் அர்த்தம் புரிந்து சிரித்து விட்டான்.
“சரி தெரியம நடக்கல. நான் வேலைய முன்னாடியே ஒதுக்கிருக்கலாம். இப்ப நம்ம பாப்பாக்காக பார்க்க வேண்டியிருக்கு. டாக்டர் வேற டிராவல் பண்ண கூடாதுனு சொல்லிட்டாங்க. என்ன செய்ய முடியும்?”
“பாப்பா பிறந்ததும் ஹனிமூன்க்கு பதிலா ஃபேமிலி மூன் போகலாம். இப்ப என்னை விடுங்க. தூங்கனும்” என்று அவனை தள்ளி விட்டுச் சென்று படுத்து விட்டாள்.
திருமணம் முடிந்து நான்கு மாதங்களாகிறது. தேன்நிலவுக்குச் செல்ல ஆசை இருந்தும் நேரம் கிடைக்கவே இல்லை. நான்கு மாதங்களுக்குப்பிறகு ஒரு வழியாக நேரத்தை ஒதுக்கிக் கிளம்ப நினைக்க ரோஷினி கருத்தரித்து விட்டாள்.
மருத்துவர் பயணங்களுக்கு தடை போட்டார். ரோஷினியின் உடல் மிகவும் சோர்ந்து இருப்பதால் முழு ஓய்வு வேண்டும் என்று விட பயணம் ரத்தானது.
இப்போது பாட்டி வேறு ரோஷினியை அவரிடம் விடச்சொல்லி விட்டார்.
“நீ பார்த்தது போதும். அவ ரொம்ப வீக்கா இருக்கா. பிள்ளை பெக்குற வரை நல்லா கவனிக்கனும். ரெண்டு பேரும் வந்து இங்க இருங்க. இல்லனா அவள மட்டும் இங்க விட்டுட்டு நீ உன் வேலையைப்பாரு” என்று முடித்து விட்டார்.
அதிர்ஷ்டவசமாக கௌசல்யா இந்த விசயத்தில் மாமியாரின் பக்கம் நிற்க நாளை காலை ரோஷினியை பெற்றோரிடம் அனுப்பி வைக்க முடிவு செய்திருந்தான்.
அதற்காக தான் ரோஷினி இப்போது முறைத்துக் கொண்டிருந்தாள்.
“என்னை பார்த்த நாள்ல இருந்து கோபப்பட்டுடே இருக்க நீ. இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்”
“எதே?”
“ஆமா.. காலேஜ்ல முதல் முதலா பார்த்தப்போவும் கோபப்பட்ட. அப்புறம் பாட்டி வீட்டுல பார்த்தப்போவும் அதே தான். கல்யாணத்தப்போ கூட கோபம் தான். ஃபர்ஸ்ட் நைட்ல கூட கோச்சுட்டு தூங்கிட்ட. இப்ப ஹனிமூன்ல கோபம். உனக்கு ரோஷினினு பேர் வச்சா ரோஷமாவே இருப்பியா?”
“ஹலோ.. நான் கோபப்பட்ட எல்லா நேரமும் தப்பு உங்க மேல தான். இப்பவும் உங்க மேல தான் தப்பு. எனக்கு ஆசை பாரு உங்க மேல கோபப்படனும்னு”
“நான் தான். நான் பண்ண தப்பு தான் இப்படி வயித்துல இருக்கு”
“இது தப்பா?” என்று கேட்டவளுக்கே சிரிப்பு வந்து விட சேர்ந்து சிரித்தான் அவள் கணவன்.
காலையில் விடியும் போதே கைபேசி இசைக்க ரோஷினி அதை எடுத்து சத்ருகணனிடம் கொடுத்து விட்டு உறங்கி விட்டாள்.
சத்ருகணன் அவளை தட்டிக் கொடுத்தபடி கைபேசியை பார்த்தான்.
“பாசக்கார அண்ணன்.. காலையிலயே கூப்பிட்டான்” என்று சிரித்தவன் காதில் வைத்தான்.
“ரோஷினி தூங்குறா ரஞ்சித்” என்று கூற “பேசுறது நானு” என்றாள் சோபனா.
“என்ன நீ கூப்பிட்டுருக்க?”
“நாளைக்கு லீவ் போட்டு உங்கள பார்க்க வர்ரோம். இல்ல.. உன்னை இல்ல. என் மருமகன பார்க்க வர்ரோம். அத சொல்ல தான் கூப்பிட்டேன்”
“அத இப்ப தான் சொல்லனுமா?”
“வேலைக்கு இப்ப தான கிளம்பிட்டு இருக்கோம். இப்ப தான் சொல்ல முடியும். ரோஷினி அம்மா கூட இருக்க போறதா அம்மா சொன்னாங்க. அதான் நேரா அங்கயே வந்துடலாம்னு பார்த்தோம்”
“சரி வாங்க”
“ஆமா ஹனிமூன் ப்ளான் என்னாச்சு?”
“அடிப்பாவி! அத ஏன் இப்ப கேட்குற?” என்றவன் பதறிப்போய் தூங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான்.
“டாக்டர் டிராவலே பண்ண கூடாதுனு சொல்லிட்டாங்களாமே. இந்த தடவையும் போச்சா? இனி ஃபேமிலி மூன் தானா?”
“இந்தமா.. உனக்கு எதுக்கு இந்த விசாரணை? நீ உன் ஆள் கூட நல்லா சுத்திட்டு வந்துட்டல? அப்ப பேசாம வேலைக்கு போற வழிய பாரு” என்றவன் உடனே வைத்து விட்டான்.
முதல் முறை திட்டமிடும் போதே சோபனாவும் ரஞ்சித்தும் கிளம்பி விட்டனர். சத்ருகணன் தான் அவசர வேலையில் தள்ளிப்போட்டான். அவர்களது டிராவல்ஸ் வழியாகவே சென்று வந்து விட்டனர். அதனால் தான் இப்படிக்கேட்டு வைத்தாள்.
சோபனாவால் ரோஷினியிடம் ஒட்ட முடியாவிட்டாலும் ரோஷினி அமைதியா இருக்கவில்லை. எல்லாம் மறந்து நன்றாகவே பேசினாள். அண்ணி என்ற மரியாதை குறையாமல் அவள் நடக்கும் போது சோபனாவுக்கு தான் மட்டும் சிறு பிள்ளைத்தனமாக நடப்பது போல் தோன்றியது.
முன்பிருந்த பொறாமை இல்லை என்றாலும் மிகவும் நெருங்கவுமில்லை. எப்போதாவது ஒரு வார்த்தை பேசுவதோடு கடந்தது.
ரோஷினியை அழைத்துச் சென்று பெற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டான் சத்ருகணன்.
“நாளைக்கு ரஞ்சித் சோபனா வர்ராங்க. ஊர்ல இருந்து மாமா அத்தையும் வர்ராங்களாம்” என்று கூறி விட்டு கிளம்பி விட்டான்.
பாட்டியும் ரோஷினியை பார்ப்பதற்காக அங்கு வந்து தங்கி விட்டார். கௌசல்யாவுக்கு ரோஷினியை கவனிக்கத் தெரியாது. அருகே இருந்து சொல்லிக் கொடுக்க வந்து சேர்ந்து விட வீடு நிறைவாக இருந்தது.
சத்ருகணனுக்கு தான் வீடு திரும்பும் போது நிறைய சமாளிக்க வேண்டியிருந்தது. ரோஷினி சொன்னது போலவே நிற்க வைத்து கேள்வி கேட்டு திட்டவும் செய்தனர்.
அதையெல்லாம் மனைவியிடம் குறையாக சொன்னால் அவள் வாய்விட்டு சிரித்தாள்.
“அடிப்பாவி! இப்படி சிரிக்கிற?”
“பின்ன? என்னை ஹனிமூன் கூட்டிட்டு போகலல? நல்லா வாங்குங்க. எனக்கென்ன?” என்று விட்டாள்.
அடுத்த நாள் சோபனாவும் ரஞ்சித்தும் வர ரோஷினி அவர்களை பார்த்ததும் புன்னகைத்தாள். ரஞ்சித் பாசமாய் பேச சோபனாவுக்கு என்ன பேசவென்று தெரியவில்லை.
“என்ன அண்ணி?” என்று ரோஷினி தானாகவே ஆரம்பிக்க “இது… கிஃப்ட். உனக்கு வாங்கிட்டு வந்தே..தோம்” என்று நீட்டினாள்.
“அட! கொடுங்க”
“நானும் தான் அப்பாவாக போறேன். எனக்கு எதுவுமில்லயா?” என்று சத்ருகணன் கேட்க “குழந்தை பிறந்தப்புறம் உனக்கு வாங்கி தர்ரேன். அது வரை இல்ல” என்றான் ரஞ்சித்.
ரோஷினி பரிசை பிரித்துப் பார்த்தாள். உள்ளே கர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய புத்தகங்களும் சில யோகா சீடிக்களும் இருந்தன.
“என்னடா இது? ஹார்லிக்ஸ் பூஸ்ட்னு வாங்கி கொடுப்பனு பார்த்தா?” என்று சத்ருகணன் கேட்க “அத நீ வாங்கி கொடுணா. நீ கவனிக்காம தான் ரோஷினி ஒல்லியா இருக்கானு பாட்டி உன்னை கிழி கிழினு கிழிச்சுட்டாங்க. கேட்டு என் காதுலயே ரத்தம் வந்துடுச்சு. அவள கவனிக்க வேண்டியது உன் பொறுப்பு” என்றாள் சோபனா கிண்டலாக.
“உள்ள இருக்க எங்க மருமக புள்ளைய கவனிக்க வேண்டியது எங்க பொறுப்பு” என்ற ரஞ்சித் தங்கையை பார்த்து புருவம் உயர்த்தினான்.
“கரெக்ட். நீங்க தான் என்னை ஊட்டி வளர்க்கனும் பாஸ். ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்தா தான் உங்க பிள்ளை வயித்துல தானா வளருமாம். தெரியுமா?’
“இந்த பழமொழிக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்குனு இப்ப தான் எனக்குத்தெரியும்”
சத்ருகணன் முறைப்பில் மூவருமே சிரித்து விட்டனர்.
பாட்டி எல்லோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஆசைப்பட்டது இது தான். இதை தான் அவர் ரோஷினியிடம் சொல்லியிருந்தார்.
திருமணம் முடிந்து முதல் வாரம் வீட்டுக்கு வந்தவளிடம் நிறைய பேசினார்.
அன்று ரோஷினி சோபனாவுக்கு தன்னை பிடிக்கவில்லை என்ற விசயத்தை கூறியிருந்தாள்.
“நான் அவங்க கூட பேசுனதே இல்லயே பாட்டி? பிடிக்காதுனு அண்ணன் சொல்லிட்டான். பிடிக்கலனா போ.. நானும் பேச மாட்டேன்னு விட்டுட்டேன்” என்று அவள் முறுக்கிக் கொள்ள பாட்டி அவளை சமாதானம் செய்தார்.
அவர் தான் மெல்ல ரோஷினிக்கு புத்திமதிகளை சொல்லி சரியான பாதையில் யோசிக்க வைத்தார்.
ரோஷினி இயல்பிலேயே எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளும் தன்மையுடையவள். அதனால் அவளிடம் நல்லதை விதைப்பது அவரது கடமையானது.
விதைக்கவும் செய்தார். சொந்தபந்தங்களை எப்போது தள்ளி வைக்க வேண்டும்? எப்போது அரவணைக்க வேண்டும்? என்று சொல்லிக் கொடுத்தார்.
சோபனாவோ சத்ருகணனோ அவரது கையில் வளரவில்லை. அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு அமையவில்லை. பேரக்குழந்தைகள் நன்றாக இருந்தால் போதும் என்று அமைதி காத்தார்.
ஆனால் ரோஷினி அந்த குடும்பத்தின் எதிர்காலம். அவளால் தான் குடும்பம் நிலைக்கும். அவள் மனம் வைத்தால் மட்டுமே அனைத்தும் சரியாக நடக்கும்.
அந்த மனத்தில் நல்லது நிறைந்திருக்க வேண்டும். அதனால் அவளது சொந்த சிந்தனைகளை சிதைக்காமல் தன்னால் முடிந்தவரை நல்லதை கொடுத்தார்.
அந்த நல்லது ரோஷினியின் மனதை பக்குவப்படுத்தியது. யாரை எப்படிக் கையாள வேண்டும் என்று வழிகாட்டியது. பாட்டியோடு அவள் செலவிடும் ஒவ்வொரு நாளும் அவளது வாழ்வை மெருகேற்றியது.
அந்த மெருகோடு கலகலவென சிரித்தபடி பெயிருக்கேற்றார் போல் ஜொலித்து நின்றாள்.
சட்டென தன் பார்வையை மாற்றிய பாட்டி உடனே தன்னைத்தானே திட்டிக் கொண்டார்.
‘புள்ளத்தாச்சி புள்ளைய போய் கண்ணு வச்சுட்டேனே. நைட் சுத்தி போடாம தூங்க விடக்கூடாது’ என்று மனதில் குறித்துக் கொண்டார்.
மதியம் மலரும் ஆறுமுகமும் வந்து விட வீடு மொத்தமும் ஜகஜோதியாக இருந்தது. மகளுக்கென நிறைய வாங்கி வந்திருந்தார் மலர்.
“பார்த்து இரு. டாக்டர் சொன்னத எல்லாம் சரியா செய்யனும்” என்று ஏகப்பட்ட அறிவுரைகள்.
ரோஷினி பதில் சொல்லாமல் தலையாட்டி கேட்டுக் கொண்டாள்.
கௌசல்யா சோபனாவிடம் பேசி விட்டு “நீங்க எப்ப பிள்ளை பெக்கலாம்னு இருக்கீங்க?” என்று பேச்சோடு கேட்டு வைத்தார்.
“இப்போதைக்கு இல்லமா. ஜாப் மாறுற ஐடியால இருக்கேன். இத விட்டதும் பிள்ளைய பத்தி யோசிக்கலாம்னு இருக்கோம். அப்போ தான் மேனேஜ் பண்ண முடியும். ரஞ்சித் என்ன சத்ருகணனா? ஆஃபிஸே வர வேணாம்னு பொண்டாட்டிய சொல்லுறதுக்கு. எங்க லைஃப் ஸ்டைலுக்கு வேற மாதிரி முடிவு பண்ணிருக்கோம்”
“ஆனா ரொம்ப தள்ளிப்போடாத. ரோஷினி பிள்ளை வளரும் போதே உனக்கும் பிள்ளை இருந்தா ஒன்னுக்கொன்னு துணையா இருக்கும்”
“ம்ம்.. அத விடுங்க. சுகப்பிரியாவுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்களாமே? என்னாச்சு?”
“ஃபாரின்ல வேலை செய்யுறானாம். இவள அவன் கூட அனுப்பி வச்சுடலாம்னு பார்க்குறாங்க. இங்க இருந்தா வீண் பிரச்சனை தான்.”
“அதுவும் சரி தான். எங்க கல்யாணத்துக்கு அவ வராததே எனக்கெல்லாம் பெரிய நிம்மதி”
“அவளுக்குள்ள இவ்வளவு கெட்டது இருக்கும்னு எனக்கு தெரியாது சோபி”
“மகா கேடிமா அவ. நல்ல வேளை அண்ணன் அவள துரத்திட்டு ரோஷினிய கட்டுனான். ஆமா கேட்கனும்னு இருந்தேன். உங்களுக்கு உங்க மருமகள பிடிச்சுருக்கா?”
“பிடிக்காம? நல்ல பிள்ளை அவ. பாட்டி சொன்னாலும் கேட்குறா. நான் சொன்னாலும் கேட்குறா. அவங்கம்மா அவள நல்லா வளர்த்துருக்காங்க. அவங்களும் இருந்திருந்தா நல்லா இருந்துருக்கும். நேத்துலாம் அவங்கம்மாவ பத்தியே தான் பேசிட்டு இருந்தா”
“மாசமா இருக்கும் போது தோணும் போல. நீங்க நல்லா பார்த்துக்கோங்க”
கௌசல்யா தலையசைத்து வைத்தார்.
சோபனா ரஞ்சித்திடம் கௌசல்யா கேட்டதை சொல்ல “உங்க அண்ணன் முதல்ல அப்பாவாகுறனா? மாமா ஆகுறனானு பார்க்கலாம்னு சொன்னான். அப்பாவாகிட்டான். உடனே அவன மாமாவாக்க நம்மலால முடியாது. கொஞ்சம் பொறுமையாவே போவோம். என்ன?” என்று கேட்டதும் சோபனா சிரித்து விட்டாள்.
“இப்படிலாமா சொன்னான்?”
“ஆமா. உன் அண்ணனுக்கு பேசவே தெரியாத மாதிரி கேட்காத” என்றவன் மனைவியை அணைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்.
கணவன் மடியில் தலையணையை வைத்து படுத்த படி புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள் ரோஷினி. எல்லாம் சோபனா கொடுத்தது தான்.
சத்ருகணன் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான். வேலையின் நடுவே மனைவியை பார்க்க படித்த புத்தகத்தை அப்படியே போட்டு விட்டு உறங்கி இருந்தாள்.
புன்னகையுடன் அவளை சரியாக படுக்கவைத்து விட்டு தன் வேலையை மூடி விட்டு படுத்து அணைத்துக் கொண்டான்.
தூங்கிக் கொண்டிருந்த மனைவியை ரசித்தவன் அவளது வயிற்றில் கைவைக்க ரோஷினி தூக்கத்திலேயே அவனது கையை பிடித்துக் கொண்டாள்.
மனைவியின் செய்கையில் புன்னகை மலர நிறைவான மனதோடு உறங்க ஆரம்பித்தான்.
காலமும் நாமும் அவர்களை வாழ்த்தி விடை கொடுப்போம்.
நிறைவு.

தாறுமாறு தக்காளி சோறு உங்களால மட்டும் தான் 30 எபிசோட் ல பயங்கரமா கதை எழுதுறிங்க
Thank you so much dhiya ❤️ ungalukku pidichathe santhosam ❤️