அத்தியாயம் 6

Loading

ஜீவிதாவை வீட்டில் விடுவதாக இளமாறன் கூற, “ஏன் சந்தேகமா? திரும்ப இந்த வீட்டுக்கே வந்துடுவேன்னு?” என்று கேட்டாள்.

அவனும் அதை நினைத்து தான் சொன்னான். ஆனால், அதை அவள் முன்னால் ஒப்புக் கொள்ள முடியாதே.

“இங்க இருந்து தூரமாச்சே ஊரு. அதான் கேட்டேன்” என்று சமாளிக்க, “நான் ஊருக்குள்ள போகல. வெளிய போறேன். நீங்க உங்க பாதையில போங்க. பயப்படாதீங்க. இன்னைக்குத் திரும்ப அங்க போக மாட்டேன்” என்று கூறி விட்டு முன்னால் நடந்தாள்.

இருவரும் இளமாறனின் ஜீப் வரும் வரை அமைதியாகவே நடந்தனர். ஜீவிதா எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டே வந்தாள்.

அந்த ஜீப்பையும் கடந்து அவள் போக்கில் நடக்க, அவளை அழைக்க இளமாறனுக்கு மனம் இல்லை.

யோசனையுடன் அவள் போக்கில் நடந்து கொண்டே இருந்தாள். நேராக பேருந்து நிலையம் சென்று சேர்ந்தாள். அவள் பின்னால் வந்து கொண்டிருந்தான் இளமாறன்.

அதை அவளது மூளை உணர்ந்த போதும், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு, எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். பத்து நிமிடம் கழித்து பேருந்து வர, அதில் ஏறிக் கொண்டாள்.

அவளுக்குப் பின்னால் இவ்வளவு நேரம் நின்றிருந்த இளமாறனை, அவள் திரும்பியும் பார்க்கவில்லை. நம்பிக்கையில்லாமல் நிற்கிறான் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி சந்தேகப்படுபவனிடம் பேச அவளுக்கு விருப்பம் இல்லை.

ஜீவிதா பேருந்து ஏறியதும் தான், இளமாறன் அங்கிருந்து சென்றான். பேருந்து நகர்ந்ததும் ஜீவிதா யாரையோ அழைத்தாள்.

“வந்துட்டு இருக்கேன்” என்று கூறி விட்டு, அழைப்பை துண்டித்து விட்டாள்.

இளமாறன் யாதவ்வை தேடிச் சென்றான். நடந்ததை அப்படியே கூற, “லூசு.. எதுக்கு போட்டோ எடுக்க விட்ட?” என்று யாதவ் கொதித்தான்.

“என்னைய போலிஸ்னே நம்ப அந்த பொண்ணு தயாரா இல்ல யாதவ். நான் ஒரு ஜெர்னலிஸ்ட்னு சொல்லி போட்டோ எடுக்குறவள தடுத்தா, முதல் பக்கத்துல என் பேர எழுதி என் வேலைக்கு உலை வச்சுடுவா”

“ப்ச்ச்… நிலா உன் அக்கா இன்னொரு தடவ குறுக்க வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” – யாதவ்

“அவங்கள வீட்டுல சொல்லி தடுக்க முடியுதானு பார்க்குறேன். கோவப்படாதீங்க” – நிலவன்.

“போன தடவையும் உன் அக்காவால தான் சொதப்புச்சு. இந்த தடவையும் சொதப்புச்சுனா, அவ்வளவு தான் சொல்லிட்டேன்”

“ஒன்னும் ஆகாது. அக்காவ வீட்டுல இருக்க வச்சுடுறேன்”

‘உன் அக்கா அப்படியே கேட்டுட்டு தான் வேற வேலை பார்ப்பா.’ என்று நினைத்துக் கொண்ட யாதவ், இதற்கு வேறு வழியை யோசிக்க ஆரம்பித்தான்.

“நறுமலர் வந்துட்டா அக்கா இந்த ஊர விட்டு போயிடும்னு நினைச்சேன். ஆனா இப்போ நடக்குறதெல்லாம் பார்த்தா எதுவுமே புரியல” என்று நிலவன் குழம்ப, “உன் அக்காவாச்சு நீயாச்சு. என் விசயத்துக்குள்ள வர வேணாம் அவ்வளவு தான்” என்று கூறி விட்டு அமைதியானான்.

வீட்டில் கார்த்திக்கிடம் தன்னை சித்தப்பா என்று கூறிய தாக்கம், இன்னும் அவனிடமிருந்து போகவில்லை. இதில் மற்ற வேலைகளை குழைக்க வந்து விட்டாள்.

அவன் எதோ யோசித்துக் கொண்டிருக்க, கார்த்திக்கிடம் இருந்து அழைப்பு வந்தது. உடனே என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டான்.

மாலை நேரம், மீண்டும் ஜீவிதா ஊருக்குள் வந்து இறங்கினாள். இப்போது தெரு விளக்கு நன்றாக எறிந்து கொண்டிருந்தது. அதை கவனித்து விட்டு, மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். அவளோடு பேருந்தில் இருந்து இறங்கியவர்கள், ஊருக்குள் நடக்க ஆரம்பித்தார்கள்.

அவளும் நடந்தாள். ஆளுக்கொரு கதையை பேசிக் கொண்டு வந்தவர்கள், ஜீவிதாவை கவனித்தார்கள்.

“ஏம்மா? நீ வள்ளி மக தான?”, என்று ஒருவர் கேட்க, “ஆமாங்க” என்றாள்.

“பல வருசம் கழிச்சு வந்துருக்கனு சொன்னாக. படிச்சுருக்கியாமே.‌ என்ன படிச்சுருக்க?”

“இன்ஜினியரிங்”

“அட! அது தான் என் மகனும் படிக்கிறான். இந்த கட்டடம் கடுவாங்களாம்ல. அத படிக்குறான். இவ மகன் ஏதோ வேற படிக்கிறானாம். சரியா ஞாபகம் இல்ல. நீ என்ன படிச்ச?”

“நான் சாஃப்ட் வேர். கம்பியூட்டர் வச்சு படிப்பாங்களே அது”

“அப்படியா..? சரி சரி. நல்லா படிச்சு சம்பாதி.‌ பொம்பள பிள்ள நல்லா படிக்கனும்.‌ படிச்சா தான் நாளைக்கு புகுந்த வீட்டுல கூட மதிப்பு கிடைக்கும்”

அந்த பெண்மணியின் பேச்சு ஜீவிதாவிற்குப் பிடித்து விட்டது.‌ அவரோடு பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டில் எல்லோரும் இருந்தனர். ஜீவிதா யாரிடமும் பேசாமல் உள்ளே செல்ல, “இவ்வளவு நேரம் எங்கக்கா போனீங்க? கையில என்ன?” என்று நிலவன் கேட்டான்.

“சாப்பிங்.‌ சில பொருள் தேவைப்பட்டது. அத வாங்க சிட்டி பக்கம் போனேன்.”

“என் கிட்டச் சொல்லி இருந்தா வாங்கிட்டு வந்துருப்பேன்ல?”

“இதுக்கு முன்னாடி யாரும் எனக்கு வாங்கி கொடுத்தது இல்ல நிலா.‌ இனிமேலும் யாரும் எனக்கு வேணாம். என்னோடத நானே வாங்கிப்பேன்”

“ஏன் கா இப்படிப் பேசுறீங்க? நான்‌ உங்க தம்பி தான?”

“வேணாம் நிலா பேச வைக்காத. நான் வாய திறந்தா யாராலயும் தாங்க முடியாது. விட்டுரு”

“அக்கா…” என்று அவன் அழைப்பதை பொருட்ப்படுத்தாமல் அறைக்குள் சென்றாள்.

“இவ வாய்க்கு எங்கயாவது நல்லா வாங்கி கட்டப் போறா” என்று தங்கமணி நல்ல வார்த்தை கூறி வைக்க, “ரொம்ப நன்றி. அது நீங்களா இல்லனா இன்னும் சந்தோசம்” என்று ஜீவிதா அறைக்கு வெளியே எட்டிப் பார்த்து கூறி விட்டு, கதவை அடைத்து விட்டாள்.

*.*.*.*.*.*.

இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த கார்த்திக், அன்னையிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். யாதவ் வந்து சாப்பிட அமர, அவனுக்கும் உமா மகேஸ்வரி எடுத்து வைத்தார்.

சாப்பிட ஆரம்பித்தவன், “அந்த லோட் பிரச்சனை முடிஞ்சதா?” என்று மொட்டையாக கேட்டாலும், கார்த்திக்கிற்கு உடனே புரிந்து விட்டது.

“முடிஞ்சதுணா”

“இனி பிரச்சனை வராதே?”

“இல்ல இல்ல. எல்லாம் பேசி சரி பண்ணிட்டேன்”

“அப்போ சரி.”

“ம்ம்.. நான் காலேஜ்ல படிக்கப் போறேன்னு சொல்லி இருந்தனே”

“ம்ம். எந்த காலேஜ்னு முடிவு பண்ணிட்டியா?”

“பண்ணிட்டேன்”

“அப்ளை பண்ணிட்டு சொல்லு”

“ஓகேணா”

“இப்போலாம் வேலைய ஒழுங்கா பார்க்கவும் படிக்குற ஆசைய விட்டுட்டனு நினைச்சேன்”

“அதெல்லாம் விட மாட்டேன்.”

“உன் புது ஃப்ரண்ட் கூட ஊரு சுத்தப் போகலையா?”

“ஜீவிதாவ சொல்லுறீங்களா? அந்த பொண்ணுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காம்.‌ பிசியா இருக்கா”

‘தேவையில்லாத விசயத்த ஆராய்ச்சி பண்ணுற வேலை தான?’ என்று‌ நினைத்து பல்லை கடித்துக் கொண்டு, “பிசியா? இங்க வேலை பார்க்குதா அந்த பொண்ணு?” என்று கேட்டான்.

“தெரியலையே.. ஆனா அந்த பொண்ணு வேலை பார்க்குது. அது மட்டும்‌ உறுதி.”

“என்ன வேலை?”

“தெரியல. கேட்கல. ஜீவிதாவும் சொல்லல”

‘யாருக்குமே சொல்லாம இளா கிட்ட‌ மட்டும் சொல்லி இருக்காளே. போலீஸ்ங்குறதாலயா?’‌ என்று நினைத்தவன், “என்ன படிச்சுருக்கு?” என்று கேட்டான்.

“எம்.இ”

‘எம்.இ க்கும் ஜெர்னலிசம்க்கும் என்னடா சம்பந்தம்?’ என்று தோன்றிய போதும், அவன் வாய் திறந்து கேட்கவில்லை.

ஜீவிதாவை பற்றிய தெளிவான முடிவுக்கு அவனால் வர முடியவில்லை. இவளை இந்த ஊரை விட்டு‌ முதலில் அனுப்ப வேண்டும். வந்ததிலிருந்து தொந்தரவு மட்டுமே செய்து கொண்டிருக்கிறாள். இனியும் விட்டு வைத்தால் காரியம் கெட்டுப் போகும்.

அதை யோசித்துக் கொண்டே, அறைகுறையாக சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டான்.

கார்த்திக் அவனது முகத்தை யோசனையுடன் பார்த்து விட்டு, “என்னமா ஆச்சு அண்ணனுக்கு ?”‌ என்று கேட்டான்.

“அவன தான் கேளு.‌ என் கிட்ட‌ என்ன சொல்லுறான்?” என்று உமா மகேஸ்வரி கழண்டு கொண்டார்.

அறைக்குள் சென்ற யாதவ், யாருக்கோ அழைத்தான். அவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு வைத்து விட்டான்.

*.*.*.*.*.*.

இரவு, வேலை செய்து கொண்டிருந்த ஜீவிதாவின் முன்னால் நிலவன் வந்தான்.

“பின் வாசல்ல உட்கார்ந்து என்ன பண்ணுறீங்க? அதுவும் இந்த நேரத்துல?” – நிலவன்.

“நீ தூங்கலையா?”

“தூக்கம் வரல”

“அதுக்காக இப்படி அலையாத போய் தூங்கு”.

“நீங்க என்ன பண்ணுறீங்க அத சொல்லுங்க”

“கேம் விளையாடுறேன் தெரியலையா?”‌ என்று மடிக்கணினியைத் திருப்பிக் காட்டினாள்.

உண்மையில் அதில் விளையாட்டு தான் இருந்தது.

“இன்னேரத்துல விளையாடினா தூங்குறது எப்போ?”

“எனக்கு எப்போ தூக்கம் வருதோ அப்போ தான். அது வரை கேம் தான். நீ விளையாடுவியா?”

“ம்ம். அப்போ‌ அப்போ”

“சரி போய் தூங்கு. கொட்டாவி வருது பாரு. தூங்கு குட் நைட்”

ஜீவிதா அவனை துரத்தி விட்டு விட்டு, விளையாடிக் கொண்டிருந்தாள்.

அவளது விளையாட்டு வேகத்தை பார்த்துக் கொண்டே நிலவன் சென்று விட்டான். அவன் அங்கிருந்து சென்றதும் கதவை அடைத்து விட்டு, ஜீவிதா உள்ளே வந்து விட்டாள்.

‘அந்த யாதவ் வேவு பார்க்க சொல்லி‌ இருப்பானோ? பாரு பாரு.. ரெண்டு நாள்ல உன் கதைக்கு ஒரு முடிவு கட்டுறேன்’‌ என்று நினைத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் காலை, கார்த்திக் அவளை தேடி வந்தான்.

“என்ன மேடம்‌ பிசியா?”

“இல்ல பா. ஊர சுத்தலாம்‌னு வெளிய கிளம்புனேன். வாயேன் உங்க அம்மாவயும் பார்த்து ரெண்டு நாள் ஆச்சு. அடிக்கடி வந்து‌ பார்க்க வேற சொன்னாங்க”

“போலாமே” என்று அழைத்துச் சென்றான்.

அங்கு யாதவ் இருந்தான். அவனோடு வேறு‌ யாரோ அமர்ந்து இருந்தனர்.

“இது‌ யாரு?” என்று ஜீவிதா மெல்லிய குரலில் கேட்க, “பக்கத்து ஊரு ஸ்கூல் வாத்தியார். ரொம்ப டேலன்ட்டட் பர்ஸன்” என்றான்.

“இங்க என்ன பண்ணுறாரு?”

“அந்த ஸ்கூல்ல நிறைய இல்லாத வீட்டு பிள்ளைங்க படிப்பாங்க. அவங்களுக்கு படிப்பு செலவ அண்ணன் கொடுப்பாரு. முதல்ல அப்பா கொடுத்தாரு. இப்போ அண்ணன் அத விடாம செய்றார். அந்த பிள்ளைங்களோட டீடைல் எல்லாம் அண்ணன் கிட்டக் கொடுப்பாங்க. அவரு விசாரிச்சுட்டு யாருக்கு உதவனுமோ உதவுவார்.”

“உங்க அப்பா க்ரேட் கார்த்திக்”

“அதுனால தான் சீக்கிரமே போய் சேர்ந்துட்டார்”

“ஏன் இப்படி பேசுற?”

“நல்லவங்க ரொம்ப காலம் உலகத்துல இருக்க மாட்டாங்க ஜீவிதா. அவங்கள கடவுளுக்கு ரொம்பப் பிடிச்சு போய் சீக்கிரம் கூப்பிட்டு வச்சுக்கிறார். எங்கப்பா இது மட்டும் இல்ல. பல விசயம் பண்ணி இருக்கார். அவரு இருந்த வர இந்த ஊருக்கு முடி சூடாத ராஜா அவர் தான். எந்த உதவினாலும் யோசிக்காம செய்வார். ஆனாலும் உதவி உண்மையிலயே தேவை படுதானு பார்த்து செய்வார். அவரோட ஷார்ப் எல்லாம் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது.”

“இப்பவும் அத தொடர்ந்து பண்ணிட்டு இருக்கீங்களே. அதுனால நீங்க உங்க அப்பாக்கு மகன்னு பெருமையா சொல்லிக்கலாம்”

“அப்படி இல்ல. அப்பா இருக்க வர எப்பவும் வீட்டுல கலகலனு இருக்கும். அவர் போனதும், அம்மா ரொம்ப பேசுறது இல்ல. அண்ணன் பிடிச்ச வேலைய விட்டுட்டு இங்க வந்ததுல ரொம்ப கஷ்டப்படுறார். நான் படிக்கவும் போக முடியல. அண்ணன தனியாவே எல்லாத்தையும் பாருனு விட மனசும் இல்ல. ஆனா, எனக்கும் இந்த ஊருல சொத்து அது இதுனு பார்க்க பிடிக்கல. படிக்க ஓடலாம்னு தான் தோனுது”

“உன் அண்ணனும் அப்படிதத் தான் விட்டா போதும் ஓட ரெடியா இருக்காரா என்ன?”

“இந்த நிமிஷம் சொன்னா கூட ஓடிருவார். அது தான் அம்மாவுக்கு பயம். அவருக்கு ஒரு கல்யாணம் பண்ணி பக்கத்துலயே வச்சுக்கனும்னு நினைக்கிறாங்க. பட் அமையல”

“ஓ.. உன் கிட்ட ஒன்னு கேட்கனும்னு நினைச்சேன். உங்க ஊருல பெரிய கோவில் ஏதோ இருக்காமே?”

“அதென்ன உங்க ஊரு?”

“சரி இந்த ஊரு..”

“கோவில் இருக்கு. அப்பாக்கு பிறகு அதுவும் பிரச்சனை ஆகிடுச்சு.”

“ஏன்?”

“அவருக்கு அப்புறம் அண்ணனுக்கு தான் முதல் மரியாதைனு நாங்க சொன்னோம். ஆனா அப்பாவோட தங்கச்சி வீட்டுல, அவங்களுக்கு தான் முதல் மரியாதை வேணும்னு கேட்டாங்க. சண்டை தான் மிஞ்சுச்சு”

“உங்கப்பாவுக்கு தங்கச்சியா? இந்த ஊருலயா இருக்காங்க?”

“ம்ம்.. அவங்க வீடு ஊருக்கு அந்த கடைசியில இருக்கு. இத விட பெரிய வீடு. புதுசா கட்டுனது.”

அதைச் சொல்லும் போது, கார்த்திக்கின் முகத்தில் ஒரு மெல்லிய சந்தோசம் தோன்றுவதை ஜீவிதா கவனித்தாள்.

“அத்த வீட்ட பத்தி பேசும் போது வாயெல்லாம் பல்லாகுதே?” என்று சந்தேகமாக கேட்க, “இல்லயே..” என்று சமாளித்தான்.

“சும்மா சொல்லு. யாருக்கும் சொல்ல மாட்டேன்”

“அது… அத்தைக்கு ஒரு மகனும் மகளும் இருக்காங்க”

“ஓ… மகள்…! புரிஞ்சுடுச்சு”

“நான் ஒன்னுமே சொல்லல” என்று கார்த்திக் நழுவ, “ஹான்.. இந்த எஸ்கேப் ஆகுற வேலை என் கிட்ட வேணாம். பொண்ணு பேரென்ன?” என்று கேட்டாள்.

“ஷைலபுத்ரி. ஷைலு”

“நான் பேரு தான் கேட்டேன். நீ எப்படி கூப்பிடுவனு கேட்கல”

ஜீவிதா சிரித்துக் கொண்டே கூற, “அது நான் கூப்பிடுறது இல்ல. எல்லாரும் அப்படித் தான் கூப்பிடுவாங்க” என்று அவசரமாக கூறினான்.

“பொழச்சு போ. பொண்ணு என்ன படிக்குதா? வேலை பார்க்குதா?”

“படிச்சு முடிச்சுட்டா. வீட்டுல தான் இருக்கா. வேலை பார்க்க சொன்னேன். வேலைக்கு போனா தூரமா போகனும்னு மாட்டேன்னு சொல்லிட்டா”

“என்ன ஒரு காதல்யா…? போ என்ஜாய்”

“உன்னை ஃப்ரண்டுனு சொன்னதுக்கு பொறாமையில பொங்கிட்டு இருக்கா. ஒரு நாள் உனக்கு காட்டுறேன்”

“பொஸஸிவ் லவ்… சூப்பர் சூப்பர்”

“நான் எங்க லவ்வுனு சொன்னேன்?” என்று கார்த்திக் பதற, “அடடா! அப்புறம்?” என்று நக்கலாகக் கேட்டாள்.

“அவள பிடிக்கும் அவ்வளவு தான்” என்று கார்த்திக் மழுப்பி பார்த்தான். ஜீவிதா பதிலே பேசாமல் சிரித்து வைத்தாள்.

“ச்சே.. ப்பே.. ” என்னு கார்த்திக் சலிப்பாக கூற, “சரி வாசல்லயே எவ்வளவு நேரம் நிக்கிறது? உள்ள போலாம் வா” என்றாள்.

இருவரும் உள்ளே நுழைய, அங்கு அமர்ந்து இருந்த ஆசிரியர் திரும்பிப் பார்த்தார். யாதவ் கிருஷ்ணனும் திரும்பிப் பார்த்தான்.

“ஹலோ சார்”

“என்ன பா கார்த்திக் நல்லா இருக்கியா?”

“நல்லா இருக்கேன் சார்”

“இந்த பொண்ணு யாருப்பா?”

“என் ஃப்ரண்டு. சேந்தன் சாரோட பொண்ணு”

“அப்படியா? அப்பா நல்லா இருக்காரா மா?” என்று கேட்க, ஜீவிதா தலையாட்டி வைத்தாள்.

“உன் அண்ணன் நல்லா இருக்கானாமா?” என்று கேட்க, ஜீவிதாவின் முகம் சுருங்கி போனது. கார்த்திக் அதை உடனே புரிந்து கொண்டான்.

“அது இவங்க தம்பி” – கார்த்திக்

“தம்பியா?”

“ஆமா இவங்க தான் மூத்த பொண்ணு”

“அப்படியா?” என்றவர் குரலில் நம்பிக்கை வரவில்லை.

“நீ மலர் தான மா?” என்று கேட்டு வைத்தார். ஜீவிதா மனதில் நொந்து போனாலும், “அவளுக்கு அக்கா நான்” என்றாள்.

“அப்படியா…? இப்படி ஒரு அக்கா இருக்கதே தெரியல” என்று கூறி வைத்தார்.

ஜீவிதா ஒன்றும் பேசவில்லை. மனதில் தோன்றிய குமுறல்களை எல்லாம் அடக்கிக் கொண்டு, வெளியே சாந்தமாக காட்சி அளிக்கும் எரிமலையாக நின்று இருந்தாள். யாதவ் எல்லாவற்றையும் மௌனமாக கவனித்து விட்டு, இடையில் புகுந்தான்.

“நான் இந்த டீடைல்ஸ் பார்த்துட்டு நாளைக்கு சொல்லுறேன் சார்” -யாதவ்

“சரி பா யாதவா”

உமா மகேஸ்வரி வீட்டில் இல்லை. பக்கத்தில் ஏதோ ஒரு கோவிலுக்குச் சென்று இருந்தார்.

கார்த்திக் ஜீவிதாவை அமரச் சொன்னான். யாதவ்விற்கு எதிரில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு அருகில் கார்த்திக்கும் அமர்ந்து கொண்டான்.

“இந்த ஊருக்கு இப்போ தான் வர்ரியாமா?” என்று அந்த ஆசிரியர் கேட்க, “ஆமாங்க” என்றாள்.

“சரி சரி. ஊரு ஒரு மாதிரி இருக்கும் போது வந்துருக்க. பார்த்து இரு மா”

“ம்ம்.. இந்த ஊருல இருக்கவங்களும் ஒரு மாதிரி தான் இருக்காங்க. நடக்குறதும் ஒரு மாதிரி தான் இருக்கு”

யாதவ்வின் பக்கம் பார்வையை திருப்பாமலே ஜீவிதா கூறிய போதும்‌, வார்த்தைகள் சரியாக அவனை தாக்கியது.

“இந்த ஊருல இருக்கவங்க எல்லாரும் நல்லவங்க தான். அவங்க கிட்ட என்ன குறைய கண்டுட்டாங்களாம் உன் ஃப்ரண்டு?” என்று கார்த்திக்கின் மீது பாய்ந்தான்.

“நேரா கேளுங்க சார். ஊருல மூணு பொண்ணுங்க செத்து போயிருக்காங்க. ஊருல பெரிய மனுசரா என்ன பண்ணீங்க?”

ஜீவிதா நேராகவே பேச ஆரம்பித்து விட்டாள்.

“நாங்க எதுவும் பண்ணலனு நீங்க பார்த்தீங்களா? நேத்து வந்துட்டு எதுவும் தெரியாம பேசக் கூடாது”

“எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன். இன்னைக்கு வர அவங்க செத்தத பத்தி கேஸும் கொடுக்கல. எதையும் கண்டும் பிடிக்கல. அப்புறம் எப்படி இவ்வளவு பேசுறீங்க? நீங்க சொன்னது சரி தான் சார். இந்த ஊரு பாதுகாப்பு இல்ல. ஏன் வந்தேன்னு இருக்கு”

யாதவ்விடம் ஆரம்பித்து ஆசிரியரிடம் முடித்தாள்.

“தேவை இல்லாம பேசாதீங்க. உங்களுக்கு இருக்கப் பிடிக்கலனா கிளம்பி போங்க. அத விட்டுட்டு எங்கள குறை சொல்லாதீங்க”

யாதவ் பல்லை கடித்துக் கொண்டு கூற, “அடடா… போதும் பா. சின்ன பசங்க மாதிரி சண்ட போட்டுட்டு இருக்கீங்க” என்று ஆசிரியர் நடுவில் புகுந்து வாக்குவாதத்தை நிறுத்தினார்.

“பேய் பிசாசுனு கதை கட்டி அநியாயமா மூணு பொண்ணுங்க தற்கொலைய மூடி மறச்சுட்டாங்க சார். நீங்களே இதுக்கு நியாயம் சொல்லுங்க”

“அவங்க மூடி மறைக்கல மா. அந்த இடத்துல எந்த ஆதாரமும் கிடைக்கல. அவங்களா போய் கிணத்துல குதிச்சுட்டாங்கனு தான் பார்த்தா உனக்கும் தோணும்.”

“அவங்களா போய் குதிக்கிறதுக்கு அவங்க என்ன பைத்தியமா?”

“ஆமா” என்றான் யாதவ். கார்த்திக்கும் ஜீவிதாவும் அதிர்ந்து போய் பார்த்தனர்.

தொடரும்.

Leave a Reply