அத்தியாயம் 8
![]()
ஜீவிதாவை நோக்கி வேகமாக வந்த நறுமலர், அவள் கை காட்டியதும் நின்று விட்டாள். அந்த நிமிடம் வள்ளியம்மைக்கு இதயமே நின்று விட்டது.
சேந்தன் ஏதோ சொல்ல வ,ர அவருக்கும் கை காட்டி நிறுத்தினாள்.
“என்னகா என் மேல கோபமா? நான் எதுவும் பண்ணலயே?” என்று நறுமலர் கூற, “உன் மேல கோபம் எல்லாம் இல்லமா. ஆனா, பக்கத்துல வராத. அங்கயே நில்லு” என்றாள்.
ஜீவிதாவின் குரலில் எந்த உணர்ச்சியும் இல்லை. சாதாரணமாக அவள் கூறியது, அங்கிருந்தவர்களுக்குள் பல வித உணர்வுகளை கிளப்பியது.
“அக்கா… நறு…” என்று நிலவன் ஆரம்பிக்க, “ம்ம்.. தெரியுது. ஆனா, உன் தங்கச்சிய உன்னோட வச்சுக்க. என் கிட்ட அவ வர வேணாம்” என்றாள்.
“அவ எப்ப வருவானு கேட்டுட்டே இருந்தீங்க. இப்போ இப்படிச் சொல்லுறீங்க?”
நிலவன் அதிர்ச்சியோடு கேட்க, “ஹேய்..! அத பாசம்னு நினச்சுட்டியா?” என்று கேட்டு சிரித்து வைத்தாள்.
அவளது புறக்கணிப்பில், நறுமலரின் முகம் வாடி கண்ணீரும் துளிர்த்து விட்டது.
“ஏய் அவ கிட்ட என்ன பேச்சு? நீ வா. பாட்டி உனக்கு நிறைய வாங்கி வச்சுருக்கேன் வந்து பாரு” என்று தங்கமணி அவள் கையைப் பிடித்து இழுக்க, அவளோ அசையாமல் ஜீவிதாவையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நறு உன்னை தான் வாங்குறேன்” என்று பாட்டி கையைப் பிடித்து இழுக்க, ஜீவிதாவோ அதை ஏதோ நாடகத்தைப் பார்ப்பது போல் பார்த்து வைத்தாள்.
நிலவனுக்கு நறுமலரை நினைத்து கவலையாக இருந்தது. ஜீவிதா இப்படி செய்ய வேண்டாம் என்று தோன்றியது அவனுக்கு.
அவன் பேச வாய் திறக்க, ஜீவிதாவின் கைபேசி இசைத்தது. அவசரமாக அதை எடுத்துக் காதில் வைத்தாள்.
“வந்துட்டீங்களா? நான் இதோ வர்றேன்” என்று கூறி விட்டு, “நிலா உன் பைக் சாவி தரியா?” என்று கேட்டாள்.
“எங்க இப்போ போறீங்க?”
“தருவியா மாட்டியா?”
“சொல்லுங்க”
“சரி போ.. நான் ஓடியே போய்க்குறேன்” என்று வேகமாக வெளியே வந்தாள்.
நிலவனுக்கு மனம் கேட்காமல், வெளியே வந்து அவளிடம் சாவியை கொடுத்தான். உடனே எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
நறுமலருக்கு அழ வேண்டும் போல் இருந்தது. வள்ளியம்மை முதலிலேயே சமையலறை பக்கம் சென்று, அதைத் தான் செய்து கொண்டிருந்தார். சேந்தனுக்கோ மனம் துடித்தது. நறுமலரின் கண்ணீர் அவரை பாதித்தது. இது போல் தானே ஜீவிதாவும் என்ற எண்ணம் மேலும் கொன்றது.
“அழாத நறு. அக்கா முதல்ல எங்க கிட்டயும் இப்படித் தான் இருந்தாங்க. சீக்கிரம் சரியா போயிடுவாங்க” என்று நிலவன் கூற, “என்ன அவங்களுக்குப் பிடிக்காதா நிலா?” என்று கேட்டாள்.
“அப்படிலாம் இல்ல. நீ என்ன தப்பு பண்ண பிடிக்காமப் போறதுக்கு? கண்டத நினைக்காத. போய் முகத்த கழுவு போ” என்று அனுப்பி விட்டான்.
இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், ஜீவிதா அவசரமாக எங்கே கிளம்பிச் சென்றாள்? என்ற யோசனையும் அவனுக்கு இருந்தது.
அவள் நேராக சென்ற இடம், பேருந்து நிலையம். அங்கே ஒரு கார் அவளுக்காகக் காத்திருந்தது.
“ஹேய் ஜீவி…” என்று உள்ளே இருந்து இறங்கிய ஒருவன் ஆர்வமாக கூவ, “ஹாய் விபின்” என்றாள்.
“பைக் எப்படி?”
“கடன் வாங்குனேன். ஓகே எங்க அவன் நிது?”
“இதோ” என்று மறுபக்கம் இருந்து இறங்கி வந்தான் நிதுலன்.
“என்னைலாம் தேட மாட்டியே?” என்று கோபத்தோடு ஒரு குரல் கேட்க, “அது நம்ம தாரண்யா தான?” என்று சிரிப்போடு கேட்டாள்.
“பேர மறக்கல போல”
“நீயுமா வந்த?”
“பின்ன உன்னை பார்க்க ஒரு சான்ஸ் கிடச்சா வராம இருப்போமா?”
“வா வா.. பைக்ல போய் எவ்வளவு நாள் ஆச்சு. இன்னைக்கு ஒன்னா போகலாம்” என்று ஜீவிதா கூப்பிட, தாரண்யா வேகமாக வந்து பின்னால் ஏறிக் கொண்டாள்.
“போகலாமா?” என்று ஜீவிதா கேட்க, “அதுக்கு முன்னாடி இந்த ஊருல உனக்கு என்ன வேலை? அத சொல்லு” என்று விபின் கேட்டான்.
“நான் போகும் போது எல்லாம் சொல்லுறேன். இப்போ வாங்க. வந்த வேலையைப் பாருங்க”
“நோ.. நீ சொல்லாம கிளம்ப முடியாது” என்று நிதுலன் முன்னால் வந்து நின்று கொண்டான்.
“ஸப்பா… இந்த ஊரு தான் நான் பிறந்த ஊரு போதுமா?”
“ரியலி..! இந்த ஊரா?” என்று கேட்டு அந்த ஊரைச் சுற்றிப் பார்த்தனர்.
“இப்படி ஒரு அழகான வில்லேஜ்லயா பிறந்த?” என்று தாரண்யா வாயைப் பிளக்க, “ஆமா.. ஆமா.. இந்த ஊரு அழகு நீங்க வந்துருக்க லட்சணத்துல தெரியல. வாய கிளறாம கிளம்பி வாங்க” என்று பைக்கை எடுத்து விட்டாள்.
மற்றவர்கள் அவளை பின் தொடர்ந்தனர்.
“ஏன் ஜீவி வந்த இடத்துல சும்மா இருக்க மாட்டியா? பிறந்த ஊருக்கு வந்து இப்படி கேஸ கட்டிட்டு அலையுற?” என்று தாரண்யா கேட்க, “நான் அப்படித் தான்.” என்றாள்.
நேராக கார்த்திக்கின் வீட்டில் சென்று நின்றனர். மூவரையும் ஜீவிதாவே உள்ளே அழைத்துச் சென்றாள்.
கார்த்திக் தான் முதலில் தென்பட்டான். ஜீவிதாவின் பின்னால் வந்தவர்களை பார்த்து விட்டு, யோசனையோடு முன்னால் வந்தான்.
“சாரி கார்த்திக்” என்று மெல்லிய குரலில் கூறிய ஜீவிதா, “உங்க அண்ணன் யாதவ் கிருஷ்ணன கூப்பிடுங்க” என்றாள்.
“எதுக்கு?” – கார்த்திக்.
“கூப்பிடுங்க சொல்றோம்” – விபின்.
அவன் கூப்பிடாமலே யாதவ் கிருஷ்ணன் கீழே இறங்கி வந்தான். வெளியே கிளம்பும் வேலை இல்லாததால், டீ சர்ட் ஜீன்ஸ் அணிந்து இருந்தான். இதில் அவன் வயதானவன் போல் தெரியவில்லை.
“என்ன விசயம்?” என்று யாதவ் கிருஷ்ணன் கேட்க, “நாங்க சிஐடில இருந்து வரோம். உங்க இடத்துல மர்மமான முறையில மூணு பொண்ணுங்க இறந்துருக்காங்க. அத பத்தி உங்கக் கிட்ட விசாரிக்கனும்” என்று விபின் கூறினான்.
யாதவ்வின் பார்வை வேகமாக ஜீவிதாவை பார்த்தது. அவளோ எனக்கென்ன? என்று பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
“இது உங்க வரை எப்படி ரீச் ஆச்சுனு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேள்வியை அங்கே வைத்து விட்டு, பார்வையை ஜீவிதாவின் மேல் வைத்திருந்தான்.
“சாரி சார். அது கான்ஃபிடன்ஸியல். ப்ளீஸ் கோ ஆப்ரேட் வித் அஸ்”
தூங்கிக் கொண்டிருந்த உமா மகேஸ்வரி எழுந்து வந்து விட்டார். புதிய ஆட்களை பார்த்து அவர் முழிக்க, கார்த்திக் அதிர்ந்து போய் நின்று இருந்தான்.
“என்னபா யாரு இவங்க?” – உமாமகேஸ்வரி.
“ஒன்னும் இல்லமா. நீங்க உள்ள போங்க” என்று யாதவ் கூற, “இல்ல சொல்லு என்ன விசயம்?” என்று கேட்டார்.
கார்த்திக் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்து, ஜீவிதாவை முறைத்தான்.
“ஒன்னும் இல்லமா” என்று யாதவ் சமாளிக்க, “இவங்க அண்ணன கூட்டிட்டுப் போக வந்து இருக்காங்க” என்றான் கார்த்திக்.
“எங்க? ஏன்?”
“நம்ம இடத்துல தான் மூணு பேரு செத்து போயிருக்காங்களாம். அதுக்கு விசாரிக்க. இவங்க சிஐடியாம்”
உமா மகேஸ்வரி அதிர்ந்து போனார்.
“யாதவா” என்ற அவரது அழைப்பில் பயமும் பதட்டமும் நிறைந்து இருந்தது.
“கார்த்திக் அம்மாவ உள்ள கூட்டிட்டு போ”
“அண்ணா..”
“போனு சொன்னேன்”
கார்த்திக் ஜீவிதாவை முறைத்து விட்டு, அன்னையை அறைக்குள் அழைத்துச் சென்று விட்டான். யாதவ் நேராக ஜீவிதாவிடம் வந்தான்.
அவளை நோக்கி குனிந்தவன், “உனக்கு மூளை அரைகுறையா தான் வேலை செய்யும்னு நினைச்சேன். ஆனா, மொத்தமா வேலை செய்யாதுனு இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்” என்றான்.
அவனது வார்த்தையில் கோபம் வருவதற்கு பதில், சிரிப்பு வந்தது அவளுக்கு. சுற்றிலும் வேலை செய்பவர்கள் பார்த்துக் கொண்டு நின்று இருந்தனர். அதை கவனித்த ஜீவிதா, “தமிழ் இங்கிலிஷ் தவிர வேற என்ன மொழி தெரியும் உங்களுக்கு?” என்று ஆங்கிலத்தில் மெல்லிய குரலில் கேட்டாள்.
‘இது என்ன தேவையில்லாத பேச்சு’ என்று யாதவ் புருவம் சுருக்க, “சொல்லுங்க” என்று அழுத்தி கேட்டாள்.
“தெலுங்கு ஹிந்தி அப்புறம்…” என்று யாதவ் யோசிக்க ஜீவிதா மளமளவென தெலுங்கில் பேச ஆரம்பித்தாள். இடையே ஹிந்தி சொல்லும் கலந்து வந்தது. சுற்றியிருப்பவர்களில் பலருக்கு தமிழ் மட்டும் தான் தெரியும். அதில் படித்தவர்கள் சிலர் இருப்பதால் ஆங்கிலமும் புரியும்.
அதனால், யாருக்கும் புரியாத ஒரு மொழியை தேர்வு செய்து, சொல்ல வேண்டியதை மளமளவென யாதவ்விடம் கூறி விட்டாள்.
அவள் பேசிய வார்த்தை, அவளுக்கும் யாதவ்விற்கும் அவளது நண்பர்களுக்கும் மட்டுமே புரியும் படி இருந்தது.
அவள் சொன்னதை கேட்டு யாதவ் ஆச்சரியமாகப் பார்க்க, “இனி உங்க சாமர்த்தியம். நான் நாளைக்கு இங்க இருக்க மாட்டேன். முடிஞ்சா திரும்ப சந்திக்கலாம்” என்று கூறி முடித்தாள்.
“ஆனா…”
“ஸ்ஸ்… எல்லாருக்கும் தமிழ் புரியும். இதுக்கு மேல பேச தேவையில்லனு நினைக்கிறேன்”
தனது ஆச்சரியத்தை விழுங்கிக் கொண்டு, யாதவ் நிமிர்ந்து நின்றான்.
ஜீவிதா மற்றவர்களுக்கு கண் காட்ட, வேகமாக இரண்டு ஆண்களும் யாதவ்வின் பின்னால் வந்து நின்று கொண்டனர்.
ஜீவிதாவும் தாரண்யாவும் முன்னால் நடக்க யாதவ் நடுவில் நடந்தான். யாதவ்வுடன் மற்றவர்களை காரில் ஏற்றி விட்டு ஜீவிதா பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டாள்.
அவள் வரும் முன் செய்தி வேகமாக பரவி விட்டது. பைக்கை நிறுத்தி விட்டு ஜீவிதா உள்ளே வர, “எங்க போயிட்டு வர்ர?” என்று கோபமாக தங்கமணி கேட்டார்.
வள்ளியம்மை முகத்திலும் கோபம் இருந்தது. சேந்தனும் நிலவனும், யாதவ்வின் வீட்டை பார்க்க முதலிலேயே கிளம்பி சென்று விட்டனர். சேந்தனுக்கு யாதவ் முதலாளி. நிலவனுக்கு நண்பன். பார்க்காமல் எப்படி இருப்பார்கள்?
“எங்க போயிட்டு வந்தா உங்களுக்கு என்ன?”
“ஜீவிதா.. பாட்டி கிட்ட மரியாதை இல்லாம பேசாத” என்று வள்ளியம்மை அதட்ட, “பாட்டியா? யாரு யாருக்கு பாட்டி? இவங்க எனக்கு பாட்டியா? எப்போ இருந்து?” என்று கேட்டாள்.
“இந்த வீட்டுக்கு படியளந்த மகராசன் பிள்ளைய போலீஸ்ல பிடிச்சு கொடுத்துட்டு வந்துருக்கியே…? நீயெல்லாம் நல்லா இருப்பியா?” – தங்கமணி.
“தப்பு பண்ணாரு ஜெயிலுக்குப் போயிருக்காரு. இதுல நான் நல்லா இருக்கது எங்க வந்துச்சு?”
“எப்படிப் பேசுறா பாரு உன் மக”
“ஜீவிதா பாட்டி கிட்ட இப்படி தான் பேசுவாங்களா?” என்று வள்ளியம்மை அதட்ட, “எப்படிப் பேசனும்னு நீங்க சொல்லி கொடுத்த மாதிரி கேட்குறீங்க?” என்று சாதாரணமாக ஒரு கேள்வி கேட்டு வைத்தாள்.
வள்ளியம்மைக்கு அடுத்து பேச்சே வரவில்லை. நறுமலரோ அதிர்ந்து போனாள். பாட்டிக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“ஏய்.. இங்க நாங்க சொல்லுறது கேட்டு இருக்கதுனா இரு. இல்லனா இப்பவே வீட்ட விட்டு போ” என்று பாட்டி கூற, “அய்ய.. இந்த வீட்டுல இருக்க யாருக்கு ஆசை? நான் போக தான் போறேன். ஆனா நாளைக்கு காலையில. இன்னைக்கு இன்னும் சில வேலை இருக்கு முடிச்சுட்டு நாளைக்கு கிளம்பிடுவேன்” என்று கூறி விட்டு சுபாஷினியைத் தேடிச் சென்று விட்டாள்.
சுபாஷினி வீட்டில் இருக்க, சுஜியும் அவளது தங்கையும் தொலைகாட்சியின் முன்னால் அமர்ந்து இருந்தனர். சுபாஷினியின் கணவன் இருவரிடமும் பேசிக் கொண்டே தொலைகாட்சியை பார்த்துக் கொண்டிருந்தான்.
“அக்கா…” என்று ஜீவிதா அழைக்க, “சுபா.. உன்னை தேடி யாரு வந்துருக்காங்க பாரு.. உள்ள வாமா” என்றான் அவளது கணவன்.
“அக்கா என்ன பண்ணுறாங்க?”
“உள்ள தான்மா ஏதோ பண்ணிட்டு இருந்தா” என்று கூறும் போதே சுபாஷினி வந்து விட்டாள்.
“ஏன் ஜீவி என்ன பண்ணி வச்சுருக்க?” என்று கேட்டுக் கொண்டே வந்த சுபாஷினி, அவளது கையை பிடித்து உள்ளே இழுத்துச் சென்று விட்டாள்.
“என்னக்கா?”
“போலீஸ் பிடிச்சுட்டு போயிடுச்சாமே அந்த யாதவ்வ..? நீ என்ன பண்ணி வச்ச?”
“போலீஸ் இல்ல கா. சிஐடி.”
“சி.ஐ. டி யா?”
சுபாஷினி அதிர்ந்து போக, ஜீவிதா புன்னகைத்தாள்.
“என்ன சிரிப்பு வேண்டி இருக்கு?”
“அந்த சி.ஐ.டி எல்லாம் என்னோட ஃப்ரண்ட்ஸ் கா”
“அய்யய்யோ..!”
“அதுனால பிரச்சனைய நினைச்சு பயப்படாதீங்க. நிஜம்மாவே இத பண்ணுறவங்க யாருனு எனக்கு ஒரு கெஸ் இருக்கு. யாதவ் கண்டே பிடிச்சுட்டார்னு நினைக்கிறேன். இன்னொரு டவுட் கூட இருக்கு”
“என்ன டவுட்?”
“அந்த மகிழினி நேரா தான் ஓடி வந்தா. என்னை பார்த்ததும் பாதை மாறி ஓடுனா. அன்னைக்கு அவ நேராவே ஓடி இருந்தா, தப்பிச்சு இருப்பாளோனு தோனுது”
“என்னன்னமோ சொல்லுற. எனக்கு ஒன்னுமே புரியல”
“இப்போதைக்கு புரியாதுகா. இன்னும் நிறைய மறைஞ்சு இருக்கு. சீக்கிரம் எல்லாம் தெரிய வரும். அப்போ ஒன்னு ஒன்னா புரியும்”
“என்னவோ போ. நீ தான் அவரப் பிடிச்சு உள்ள போட்ருக்கனு தெரிஞ்சா, ஊருல நிறைய பேர் உனக்கு எதிரியாவாங்க. பார்த்து இரு. இல்லனா ஊர விட்டு போயிடு”
“போயிடுவேன். நாளைக்கே. இன்னைக்கே போனா சரி வராது”
“அது வரை பத்திரமா இரு. உன் வீட்டுலயே உன்னை திட்டுவாங்க”
“ம்ம்.. ஆரம்பிச்சுட்டாங்க. பதிலுக்கு பேசிட்டு தான் உங்களப் பார்க்க வந்தேன். நாளைக்கு நான் கிளம்பும் போது உங்க கிட்ட சொல்லிட்டுப் போக முடியுமானு தெரியல. அதுனால இப்பவே சொல்லிடுறேன். சுஜிய குட்டி பாப்பாவ நல்லா பார்த்துக்கோங்க. திரும்ப இங்க வர மாட்டேன். போன் பண்ணவும் சான்ஸ் இல்ல. சோ கிளம்புறேன்”
“நீயும் நல்லா பத்திரமா இரு”
“ஓகே கா.. டாடா..”
வெளியே வந்தவள், சுஜியுடனும் அவளது தங்கை ஸ்ருதியுடனும் விளையாடி விட்டு விடை பெற்றுக் கொண்டாள்.
காரில் ஏறிச் சென்ற யாதவ், அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டே வந்தான். நேராக பக்கத்து ஊருக்குச் சென்று இளமாறனை சந்தித்தனர்.
“உங்கள நேரா கமிஷ்னர் ஆபிஸ்ல மீட் பண்ண சொல்லி ஆர்டர். நாளைக்கு வந்துடுங்க” என்று இளமாறனிடம் கூறி விட்டு, மீண்டும் கிளம்பினர்.
இந்த விசயம் அருகில் இருந்த பல ஊர்களில் பரவி விட்டது. எல்லாரும் இதை நம்ப முடியாத ஆச்சரியத்தில் இருக்க, யாதவ் கிருஷ்ணன் மட்டும் எதுவும் பேசினானில்லை.
“என்ன சார் தீவிர யோசனை?” – விபின்.
“ம்ம்.. ஒன்னும் இல்ல”
“இங்க ஸ்டே பண்ண நல்ல ஹோட்டல் எங்க இருக்குனு தேடனும்” – தாரண்யா.
“ஜீவி கிட்ட கேட்போமா?” – நிதுலன்.
“அவளே இந்த ஏரியாக்கு புதுசு. யாதவ் கிருஷ்ணன் சார். நீங்க சொல்லுங்க”
“இங்க வேணாம். விசயம் சீக்கிரம் தெரிஞ்சுடும் கொஞ்சம் தள்ளி இருக்க ஹோட்டலுக்குப் போயிடலாம்” என்று யாதவ் கூற, அதுவே எல்லாருக்கும் சரியென்று பட்டது.
“ஆமா என்ன யோசிச்சீங்கனு சொல்லலையே?” என்று விபின் விடாமல் கேட்க, “நீங்க எல்லாம் நிஜம்மாவே சிஐடியானு யோசிச்சேன்” என்றான்.
“இதுல சந்தேகமே வேணாம்” என்றவன் தன்னுடைய அடையாள அட்டையை எடுத்து நீட்டினான்.
வாங்கிப் பார்த்தவன், “அப்புறம் ஏன் வேலை எல்லாம் விட்டுட்டு இந்த சின்ன விசயத்துல நுழைஞ்சுட்டீங்க?” என்று கேட்டான்.
“வேலை இப்போ இல்ல. வெக்கேஷன்ல இருந்தோம். ஜீவி தான் இங்க நடக்குறத சொல்லி வரச் சொன்னா. அவளுக்கு ஹெல்ப் பண்ண நாங்களும் வந்தோம்”
“நடக்குறதெல்லாம் கொஞ்சம் மர்மமாவும் இருக்கு. உண்மையிலயே இதெல்லாம் யாரு பண்ணுறது?” – தாரண்யா.
“ஆதாரத்தோட அத சொல்லுறேன். இப்போ உங்க போன் கிடைக்குமா? ஒரு போன் பண்ணிக்கிறேன்” என்று கேட்டான்.
விபின் கொடுக்க, நிலவனுக்கும் கணிகனுக்கும் அழைத்து சில வேலைகளைக் கொடுத்து விட்டு, அழைப்பை துண்டித்து விட்டான்.
“என்ன ஒரு மாதிரியாவே இருக்கீங்க?” என்று நிதுலன் கேட்க, “உங்க ஃப்ரண்ட் ஜீவிதாவும் உங்கள போல சிஐடியா ?” என்று கேட்டான்.
“இல்ல”
“அப்புறம்?”
“அத நாங்க சொல்ல முடியாது. அவளா தான் அவ விவரத்த சொல்லனும்”
“சரி இப்போ அது எனக்குத் தேவை இல்ல. முதல் வேலையா உங்க ஃப்ரண்ட்ட இந்த ஊர விட்டுக் கூட்டிட்டுப் போங்க”
“ஏன்?”
“உங்களுக்கு பிரச்சனை எல்லாம் தெரிஞ்சு இருக்கும். மூணு பொண்ணுங்க செத்துட்டதா சொல்லி இருப்பாங்க”
“ஆமா”
“உண்மைய சொல்லனும்னா செத்தது எட்டு பொண்ணுங்க”
“வாட்?”
மூவரும் ஒரே குரலில் கேட்டனர்.
நிதுலன் பின்னால் இருந்த யாதவ்வை திரும்பி பார்க்க, “முன்னால பார்த்து ஓட்டுங்க” என்றான் யாதவ்.
“எட்டா?” என்று தாரண்யா அதிர்ச்சியோடு கேட்க, யாதவ் மேலும் கீழும் தலையாட்டி வைத்தான்.
“எப்படி?”
“அத இன்னொரு நேரம் விளக்கமா சொல்லுறேன். ஆனா ஒன்பதாவது.. கடைசி பொண்ணு யாரு தெரியுமா? உங்க ஃப்ரண்ட் ஜீவிதா தான்.”
நிதுலன் வேகமாக காரை நிறுத்தி விட்டான்.
“ஜீவியா…?” – நிதுலன்
“அய்யய்யோ!” – தாரண்யா
“நோ..!” – விபின்.
மூவரும் அதிர்ந்து போயிருக்க, யாதவ் மட்டும் தீவிர யோசனையிலேயே இருந்தான்.
தொடரும்.
