அத்தியாயம் 11
![]()
மூன்றரை வயது சிறுமி ஜீவிதா. அவளது தம்பி நிலவன் ஒரு வயதாக இருக்கும் போது, வள்ளியம்மை மீண்டும் கருவுற்றார். அவருக்கு வயிற்றில் இருப்பது குழந்தை தான் என்று தெரிந்த நாளில் இருந்து, சோதனை காலம் ஆரம்பமானது.
எதையாவது மேலே கொட்டிக் கொள்வார். இல்லை என்றால் எங்காவது விழுகப் போய் தப்பித்து விடுவார். மேலும் மேலும் பல பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. மனம் பயப்பட ஆரம்பித்தது.
வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எதாவது ஆகி விடுமோ? என்று பயம் தொற்றிக் கொண்டது. தங்கமணி இதை கவனித்து விட்டு, ஒரு ஜோசியரை தேடிச் சென்றார்.
அவர்கள் ஊரில் இருந்த ஜோசியர் ஊர் மாறிச் சென்று விட, அருகில் இருந்த வேறு ஊரில் ஒருவரை தேடிச் சென்றனர்.
வீட்டில் இருப்பவர்கள் எல்லோருடைய ஜாதகத்தையும் கொடுக்க, பார்த்து விட்டு ஒரு குண்டைத் தூக்கி போட்டார்.
“உங்க மூத்த மகளோட ராசி, வயித்துல இருக்க பொம்பள பிள்ளைய வர விடாம தடுக்குது. உங்க மக உங்களோட இன்னொரு மகளுக்கு எமனா இருக்கா”
அவர் சொன்ன வார்த்தையில் வள்ளியம்மை அதிர்ந்து போனார். இதற்கு வேறு வழி இருக்கிறதா? என்று கேட்டனர்.
“இந்த பிள்ள பிறக்குற வர உங்க மூத்த மகள வேற எங்கயாவது உங்கள விட்டு தூரமா அனுப்பிடுங்க. பிள்ளை பிறந்ததும் உங்க குல தெய்வத்துக்கு பூஜை பண்ணி கும்பிட்டுட்டுத் திரும்பக் கூட்டிட்டு வந்துடுங்க. சரியா போயிடும்”
இதைக் கேட்டு வள்ளியம்மைக்கு உள்ளம் துடித்தது. பிறக்காத பிள்ளைக்காக உடன் இருக்கும் மகளை பிரிய வேண்டுமா? அவரால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வேதனை தாங்கிய முகத்துடன் பேருந்தில் ஏறி ஊருக்குக் கிளம்ப, அந்த பேருந்தில் கோளாறு ஏற்பட்டு மரத்தில் சென்று மோதியது. நல்ல வேலையாக உள்ளே இருந்தவர்கள் தப்பி விட்டனர். ஆனால் வள்ளியம்மைக்கு காலில் காயம் ஏற்பட்டு விட்டது.
இதை எல்லாம் கவனித்த தங்கமணி ஒரு முடிவுக்கு வந்து விட்டார். வள்ளியம்மை காலில் அடி பட்டு மருத்துவமனையில் கிடக்க, தங்கமணி ஜீவிதா அழைத்துச் சென்று தன்னுடய மகள் அலர் வீட்டில் விட்டு விட்டார்.
முதலில் ஜீவிதாவிற்கு எதுவும் தெரியவில்லை. அத்தை வீட்டில் இருக்கப் போகிறோம் என்ற குதூகலம் தான் இருந்தது. ஆனால், நாட்கள் வாரங்களாகி மாதங்களாகும் போது தான், அங்கிருக்க அவளுக்குப் பிடிக்கவில்லை.
அலரின் குடும்பத்திற்கோ பணக் கஷ்டம் நிறைய இருந்தது. ஒரு பிள்ளையையே வளர்க்க பாடுபடுவதால், அவர்கள் அடுத்த பிள்ளை கூடப் பெற்றுக் கொள்ளவில்லை. இப்படிப் பட்ட நேரத்தில் ஜீவிதாவை வளர்க்க அவர்களால் முடியவில்லை.
மூன்று நேர உணவு அவளுக்கு அவர்களால் போட முடியும். அதைத் தாண்டி அவளுக்கு ஆகும் செலவை, அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஜீவிதாவும், அம்மா அப்பா வேண்டும் என்று அடிக்கடி அழுது காய்ச்சலில் விழ ஆர்மபித்தாள். அவளது காய்ச்சலுக்கும் சேர்த்து அவள் மீது அலருக்கு கோபம் வளர்ந்தது.
வள்ளியம்மை ஜீவிதாவை சென்று பார்க்கக் கூடாது என்று தங்கமணி கண்டிப்பாகக் கூறி விட்டார். சேந்தன் மட்டும் வந்து ஜீவிதாவை பார்த்தார். அவர் மாதம் ஒரு முறை வரும் போதெல்லாம், ஜீவிதா அங்கிருந்து அழைத்துச் செல்லச் சொல்லி அழுவாள். ஆனால், சேந்தனோ அவளுக்கு செலவாகும் பணத்தை அலரிடம் கொடுத்து விட்டுக் கிளம்பி விடுவார்.
சேந்தன் எப்போது ஜீவிதாவை பார்க்க வந்தாலும் அங்கு வள்ளியம்மைக்கு எதாவது நடந்து விடும். அதனால், பிள்ளை பிறக்கும் வரை ஜீவிதாவை யாரும் பார்க்க கூடாது என்று தங்கமணி கட்டளை போட்டார்.
மாதம் ஒரு முறை வந்த சேந்தனும் வராமல் போக, ஜீவிதா ஒடுங்கிப்போனாள். அலர் கோபத்தை காட்டுவது வேறு, அவளால் தாங்க முடியாமல் போனது. அவளது வேலைகளை அவளே நான்கு வயதில் பார்க்கக் கற்றுக் கொண்டாள்.
ஜீவிதாவிற்கு வேதனையில் பல மாதங்கள் கழிய, ஒரு வழியாக வள்ளியம்மை அவரது மூன்றாவது மகளை பெற்று எடுத்தார்.
ஜோசியர் சொன்னது போல் பெண் குழந்தையே பிறந்து விட்டது. அதன் பிறகு குல தெய்வத்திற்கு வழிபாடு நடந்தது. வழிபாடு முடிந்ததும், மறுநாள் ஜீவிதாவை அழைத்து வர தீர்மானித்தனர். ஆனால், அன்று இரவே நறுமலருக்கு ஜன்னி கண்டது.
அவளை கவனித்தவர்கள் ஜீவிதாவை மறந்து போனார்கள். நறுமலரின் ஜன்னி இறங்கிய பின், மீண்டும் ஜோசியரை தேடிச் சென்றனர்.
இம்முறை ஜோசியரிடம் தங்கமணி மட்டும் தனியாகச் சென்றார். கைப்பிள்ளையோடு வள்ளியம்மையால் உடன் போக முடியவில்லை.
நறுமலரின் பிறந்த தேதி நேரத்தை வைத்து ஜாதகத்தை எழுதிக் கொண்டு, ஜீவிதாவின் ஜாதகத்தையும் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். அவர் என்ன சொன்னாரோ? தங்கமணி வீட்டுக்கு வந்து ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.
ஜீவிதாவிற்கு இருபத்தைந்து வயது ஆகும் வரை, நறுமலரின் அருகில் கூட வரக்கூடாது. அப்படி வந்தால் நறுமலரின் உயிருக்கு ஜீவிதா எமனாக இருப்பாள்.
தங்கமணி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, வள்ளியம்மை மயங்கி விழுந்து விட்டார்.
தான் பெற்ற இரண்டு பிள்ளைகளில் யாரை பார்ப்பது என்று அவருக்குப் புரியவில்லை. வள்ளியம்மை நறுமலரை விட்டு விட்டு ஜீவிதாவை பார்க்கப் போனால், நறுமலருக்கு எதாவது வந்து விடும்.
நறுமலர் நடக்க ஆரம்பித்த பின்னர் தான், விட்டு விட்டு ஜீவிதா பார்க்கச் சென்றார். ஒரு நாள் முழுவதும் ஜீவிதாவோடு தங்கி விட்டு வர, இங்கு நறுமலர் தண்ணிக்குள் விழுந்து காப்பாற்றி இருந்தனர்.
வள்ளியம்மைக்கு மனம் பதறி விட்டது. அதன் பின் ஜீவிதாவை பார்க்கச் சென்றால், அவளோடு தங்குவதே இல்லை. ஆனால், அவர்கள் சென்று வரும் நேரத்திற்குள், நறுமலருக்கு எதாவது காயம் வந்து விடும்.
அதன் பின் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மட்டும் ஒரு மணி நேரம் ஜீவிதாவை பார்த்து விட்டுத் திரும்பி விடுவார்கள். ஜீவிதா அழுது புரண்டாலும், அவளை உடன் அழைத்து வந்ததே இல்லை.
ஜீவிதாவை அலர் தான் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். இவர்கள் தேவையான பணத்தை கொடுப்பதோடு நிறுத்தி விடுவார்கள்.
நறுமலருக்கு ஒரு நொடி கூட அன்னையை விட்டுப் பிரியக் கூடாது. எங்கும் போகாமல் இருந்து பார்த்துக் கொண்டாலும், ஜீவிதாவை பார்க்க சென்றால் அவளுக்கு எதாவது நடந்து விடுகிறது.
நறுமலர் வேறு தங்கமணியை உரித்து வைத்துப் பிறந்து இருந்தாள். அதனால், தங்கமணிக்கு அவள் என்றால் உயிர். அவளுக்கு எதாவது ஒன்று நடந்து விட்டால், யாரென்று பாராமல் விளாசி விடுவார்.
அதனாலே ஜீவிதாவை பார்க்கும் நேரங்கள் குறைந்து போனது. அழுது அழுது பார்த்த ஜீவிதா, ஒரு கட்டத்தில் ஓய்ந்து போனாள். அவளது பத்து வயது வரையும் இது தான் நீடித்தது.
பூப்பெய்தும் நாளும் வந்தது. அன்று தான் அலர் அவரது கணவரிடம் ஜீவிதாவைப் பற்றிப் பேசுவதைக் கேட்டாள்.
வள்ளியம்மை நறுமலருக்கு காய்ச்சல் என்பதால் வர மாட்டார் என்று கூறினார். அதோடு அவளது ஜாதக விசயத்தையும் பேசி வைக்க, ஜீவிதாவிற்கு எல்லாமே தெளிவாக விளங்கியது.
அன்று அளவிற்கு அதிகமாக அழுதாள். ஆனால், அன்றோடு அழுகைக்கு முழுக்கு போட்டாள். விழா முடிந்து மீண்டும் பள்ளி கிளம்பியவள் மனதில், இனி அத்தைக்கு பாரமாக இருக்கக் கூடாது என்ற எண்ணமே இருந்தது. ஒரு மாதம் எந்த முடிவும் எடுக்க முடியாமல் கடக்க, அன்று பள்ளி விட்டு வரும் போது, லாரி அவளை அடித்து விட்டுச் சென்று விட்டது.
பறந்து போன வேகத்தில், இனி யாருக்கும் பாரமாக இருக்க மாட்டோம் என்ற நினைவுடன் கண்ணை மூடி விட்டாள். அவளது நிலைமையைப் பார்த்து யாரோ, அவளைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அவளது புத்தகப்பை தொலைந்து போக, அவள் யாரென்று யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு வாரம், முழு மயக்க நிலையில் இருந்து விட்டு, அதன் பிறகே கண் விழித்தாள்.
உடலெல்லாம் காயத்திற்கு தையல் போட்டு இருந்தனர். கால் உடைந்து கட்டு போட்டு இருந்தனர். கிழிந்து போன தசைகளை ஒன்று சேர்த்து ஓரளவு சரி செய்து இருந்தனர்.
கண் விழித்ததும் ஜீவிதா எதுவும் பேசவில்லை. அவளது தலையில் இனி பிரச்சனை வர வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறி விட்டனர்.
அவளை காப்பாற்றியவர் அவளிடம் விசாரிக்க, ஒரு நாள் முழுவதும் அவள் பதில் பேசவில்லை. அடுத்த நாள் அவளது நாடியிலிருந்த காயம் சரியானதும், மெல்ல பேசும் பயிற்சியில் பேசத் தொடங்கினாள்.
அப்போதும் தன்னை பற்றிய விவரங்களை அவள் சொல்லவில்லை. ஒரு வாரத்திற்கு பிறகு தன்னைப் பற்றி எல்லாவற்றையும் கூறினாள். அவளது பெற்றோர்கள் செய்தது அவளது அத்தை அவளை வளர்த்தது, ஒன்றயும் மறைக்காமல் கூறினாள்.
“உங்களுக்கு என்னால நிறைய செலவு ஆகிடுச்சா?” என்று அவள் கவலைப்பட அவளை காப்பாற்றியவர் ஆறுதல் கூறினார்.
ஜீவிதாவிற்கு மீண்டும் பெற்றவர்களிடமோ அத்தையிடமோ போக விருப்பம் இல்லை. அதை அவரும் புரிந்து கொண்டார். இனி தன்னோடு இருந்து விடு என்று கேட்க, அவள் ஒப்புக்கொள்ள வில்லை.
இவருக்கும் தன்னால் சிரமம் தான் என்று தயங்கினாள். எதாவது ஆசிரமத்தில் விட்டு விடும் படி கேட்டாள். ஆனால், அவளை தனியாக விடாமல் அவர் தன்னோடு அழைத்துச் சென்று விட்டார். அன்றிலிருந்து அவருடன் தான் ஜீவிதா வாழ்கிறாள்.
அவளுக்கு தன் குடும்பத்தைத் தொடர்பு கொள்ளப் பிரியம் இல்லை. ஆனால், அவளை வளர்த்தவரோ நிச்சயமாகப் பேச வேண்டும் என்று கூறி விட்டார். அவரின் கட்டளைக்காகவே அவர்கள் வீட்டில் இருக்கும் தொலைபேசிக்கு அழைத்தாள்.
அவள் உயிரோடு தான் இருப்பதாகத் தெரிவித்தாள். அவர்கள் கூப்பிட வருவதாகக் கூற, ஜீவிதா சம்மதிக்கவில்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். வருடம் ஒரு முறை பேசுகிறேன். மற்ற படி என்னைதீ தேட வேண்டாம் என்று கூறி விட்டாள்.
அதன் பிறகு பதினைந்து வருடமும் அலைபேசியில் மட்டும் தான் பேசுவாள். அவர்களும் எண்ணை மாற்றவே இல்லை. அதனால் வருடம் ஒரு முறை பேசினாள். கடைசியாக அவளுக்கு இருபத்தைந்து வயது நிறைவு பெற்றது. அவளது பெற்றோர்கள் இனி வீட்டுக்கு வா என்று அழைக்க, அவளும் ஒரே வாரத்தில் கிளம்பி வந்தாள்.
அவள் உயிருடன் இருக்கிறாள் என்பதை தவிர, அவளை பற்றிய எந்த விவரத்தையும் அவள் கூறவில்லை.
யாரும் அவளை பற்றித் தெரிந்து கொள்வதில் அவளுக்கு விருப்பம் இல்லை. ஆனால், வேலைக்கு சென்றதும், அலரை சந்தித்து அவரது மகள் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டாள்.
அந்த விபத்து அவளுக்கு உண்மையில் வரமாக அமைந்தது. அந்த விபத்தில் மூளையில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. அவளது ஐ.க்யூ பல மடங்கு அதிகரித்தது. அதன் பலனாக படிப்பை மிக வேகமாக முடித்தாள். அவளது இந்த திறமையை ஊக்குவித்தது, அவளை காப்பாற்றி வளர்த்தவர் தான். வகுப்புகளை படிக்காமலே கடந்து பரிட்சைகளை எழுத ஆரம்பித்தாள்.
அவளுக்குத் தேவையான, ஆசைப் பட்ட அத்தனை படிப்பையும் படித்தாள். பல நிறுவனங்கள் அவளுக்குக் கல்வி உதவித்தொகை கொடுத்தது. பல நிறுவனங்கள் கல்விக் கடன் கொடுத்தது.
அத்தனையையும் சரியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேற ஆரம்பித்தாள். அவளுடன் அவளை போலவே படித்தவர்கள் எல்லோரும் நண்பர்கள் ஆனார்கள்.
படித்து முடித்து, ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்தத் துறைக்குச் சென்றனர். ஜீவிதா விண்வெளியில் வேலை செய்ய விரும்பினாள்.
அவளது விருப்பமும் நிறைவேறியது. அவளது பணத்தில் பெரிய வீடு ஒன்று வாங்கினாள். அதில் தான் அவளை வளர்த்த குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தாள்.
இவர்கள் கூப்பிடவில்லை என்றாலும், அவர்களை முற்றும் முழுதுமாக தலை முழுக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தான் இருந்தாள். இன்று அந்த வாய்ப்பு கிடைத்தது. இன்றோடு எல்லாவற்றையும் முழுகி விட்டு வெளியே வர, அங்கு அவளை காப்பாற்றியவர் நின்று இருந்தார்.
ஜீவிதா அவரை ஆச்சரியமாகப் பார்க்க, அவளது கன்னத்தில் அறைந்து விட்டார். அடி தாங்காமல் ஜீவிதா கீழே விழுந்து விட, வேகமாக கார்த்திக் ஓடி வந்து அவளைத் தூக்கினான்.
“இப்ப எதுக்கு கை நீட்டுனீங்க?” என்று கார்த்திக் கோபமாக கேட்க, நிமிர்ந்து பார்த்த ஜீவிதாவின் முகத்தில் புன்னகை இருந்தது.
அடித்தவரை சந்தோசமாக பார்த்து வைத்தாள். அவரோ கறுப்பு நிற பர்தா அணிந்த ஒரு பெண்மணி. அவரை பார்த்து புன்னகைத்தவாறே எழுந்து அமர்ந்தாள்.
கன்னம் எரிந்தது கூட அவளுக்குத் தெரியவில்லை. லேசாக சிவக்க ஆரம்பிக்க கார்த்திக் வீட்டுக்குள் சென்று பனிகட்டியை எடுத்து வந்து அவளது கன்னத்தில் வைத்து விட்டான்.
“ஸ்ஸ்…” என்று ஜீவிதா எரிச்சல் தாங்காமல் அதை தட்டி விடப் போக, “சும்மா இரு.. கன்னம் சிவந்து போயிடும்” என்று அதட்டினான்.
“நீங்க எப்போகா வந்தீங்க? யாரு கூட்டிட்டு வந்தா?” என்று கேட்க, அந்த பெண்மணி பதில் பேசாமல் அனல் பறக்க பார்த்தார்.
“நான் தான்” – கார்த்திக்.
“இவங்கள எங்க பார்த்த?”
“பஸ் ஸாட்ன்ட்ல தான். ஜீவிதாவ தெரியுமானு கேட்டாங்க. உடனே இங்க கூட்டிட்டு வந்துட்டேன்”
“ரொம்ப தாங்க்ஸ் கார்த்திக்” என்று கூறி விட்டு எழுந்து நின்றாள். கார்த்திக்கின் கையில் இருந்த பனிகட்டியை வாங்கி, அவளே கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.
“சரியான நேரத்துக்கு தான்கா வந்து இருக்கீங்க. வாங்க போகலாம்” என்று ஜீவிதா அழைக்க, “நில்லு.. முதல்ல இவங்க எல்லாருகிட்டயும் மன்னிப்பு கேளு” என்றார்.
“முடியாதுகா” என்ற ஜீவிதாவின் குரல் தீர்மானமாக ஒலித்தது.
“இப்போ கேட்க போறியா? இல்ல இன்னொரு அடி வைக்கவா?”
“அடிச்சுக்கோங்க. ஆனா நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.”
“ஜீவி… என் பொறுமைய சோதிக்காத. நான் இப்படியா உன்னை வளர்த்தேன்? மைமூன் வளர்த்த பொண்ணுக்கு மரியாதை தெரியாதுனு பேரு வாங்கிக் கொடுக்கப் பார்க்குறியா?”
“உங்க பேர எங்கயும் நான் கெடுக்க மாட்டேன்கா. ஆனா இந்த விசயத்துல நான் இறங்கி வர மாட்டேன். நான் பேசுனது தப்புனு தோனுனதும் ஒரு அறை விட்டீங்களே. அந்த அறை இவங்களால என்னை அறைஞ்சுட முடியுமா? முடியாது. ஏன்னா அவங்களுக்கே அவங்க லிமிட் தெரியும். நான் அவங்க பிள்ள இல்ல. நீங்க வளர்த்த பிள்ளனு உங்க வாயால வந்துடுச்சே. இன்னும் என்ன நின்னு பேசிக்கிட்டு? வாங்க போகலாம்”
ஜீவிதா வெளியே போகப் பார்க்க, மைமூன் அவளைப் பிடித்துக் கொண்டார்.
“நீ இவங்க கிட்ட மன்னிப்பு கேட்டா தான் என் கிட்டப் பேச முடியும். இல்லனா பேசாத” என்று கூறி விட்டு வீட்டில் இருந்த மற்றவர்களை பார்த்தார்.
யாருக்கும் அவரை யாரென்று தெரியவில்லை. நிலவனும் நறுமலரும் ஆளுக்கொரு பக்கம் அதிர்ச்சியோடு நின்று இருந்தனர். வள்ளியம்மை, கண்ணீர் வடிய ஜீவிதாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
தங்கமணி, ஜீவிதா அடி வாங்கி விட்டதில் திருப்தியாக அமர்ந்து இருந்தார்.
மைமூன் நேராக வள்ளியம்மையிடம் சென்றார்.
“அவ சின்ன பொண்ணு ஏதோ பேசிட்டா. அத போய் மனசுல எடுத்துக்காதீங்க. கண்ண துடைச்சுக்கோங்க” என்று மைமூன் கூற, ஜீவிதாவிற்கு இது பிடிக்கவில்லை.
“சாரி கேட்கப் போறியா இல்லயா?”
மைமூன் அதட்ட, ஜீவிதா எங்கோ பார்த்தாள். நிலமையை சரி செய்யும் பொருட்டு, கார்த்திக் ஜீவிதாவை வெளியே அழைத்துச் சென்று விட்டான்.
வாசலில் நின்றிருந்தனர் இருவரும். கார்த்திக் மௌனமாக இருக்க, “எப்போ வந்தீங்க?” என்று கேட்டாள்.
“நீ ஏ.டி.எம் கார்ட எடுத்து வச்சப்போவே வந்துட்டோம். ஆனா, யாருமே எங்கள பார்க்கல. அதுனால அமைதியா நின்னுட்டோம்”
“ஓ…”
“இவங்க தான் ஆக்ஸிடன்ட்ல உன்னை காப்பாத்துனாங்களா?”
“ஆமா. அவங்க ஹஸ்பண்ட் கவர்மென்ட் வேலை பார்த்தார். திடீர் ஒரு நாள் நெஞ்சுவலினு செத்துட்டார். அவருக்கு வந்த பணத்த தான் என் ட்ரீட்மெண்ட்க்கு செலவு பண்ணாங்க.”
“ரொம்ப நல்லவங்க இல்ல?”
“எனக்கு கடவுள நேர்ல பார்த்த மாதிரி இருக்கு. உனக்கு ஒன்னு தெரியுமா? அவங்க முஸ்லிம் நான் ஹிந்து. இன்னைக்கு வர என்ன மதம் மாறுனு அவங்க சொன்னதே இல்ல. கோவிலுக்கு தினமும் போவேன். என்னை தடுத்தது இல்ல. அவங்க வீட்டுல என் ரூம்ல சாமி படங்கள மாட்டி வச்சுருக்கேன். முடிஞ்சா வீட்ட துடைக்கும் போது அந்த படங்களையும் எனக்காக துடைச்சு கொடுப்பாங்க”
“கேட்கவே புல்லரிக்குது உடம்பு”
“கால் உடஞ்சு ஒரு வருசம் நான் நடக்கல. வீல் சேர் தான். என்னை முழுசா கவனிச்சுகிட்டாங்க. இவங்க ஒரு ஸ்கூல் டீச்சர். என்னோட ஐ.க்யூ லெவல்ல கண்டு பிடிச்சு, அத சரியா யூஸ் பண்ண வச்சு, முழு ஜீனியஸா மாத்தினாங்க. இவங்க இல்லனா நான் இல்ல”
“உண்மை தான்.”
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, வீட்டுக்குள் ஏதோ சத்தம் கேட்டது.
“ஜீவி….” என்று மைமூன் அழைக்க, வேகமாக உள்ளே ஓடினாள். சேந்தன் நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்தார்.
“என்ன ஆச்சு? கார்த்திக் கார எடு” என்று அவசரமாகக் கூறிய ஜீவிதா, அங்கு வைத்திருந்த ஏ.டி.எம்மை எடுத்துக் கொண்டாள்.
கார்த்திக்கும் நிலவனும், சேந்தனை வேகமாகத் தூக்கிச் சென்றனர். பின்னாலே வள்ளியம்மை அழுது கொண்டே செல்ல, மைமூன் அவரைப் பிடித்துக் கொண்டே சென்றார்.
தங்கமணி ஒரு பக்கம், அழுகையோடு ஜீவிதாவை சபித்துக் கொண்டே வெளியே சென்றார். இதையெல்லாம் ஜீவிதா கவனிக்கவில்லை.
“நீ அப்பாவோட பழைய ரிப்போர்ட் எல்லாம் எடு போ” என்று நறுமலரை விரட்டினாள்.
அவள் வேகமாக எடுத்துக் கொண்டு வர, “நீயும் நிலாவும் பின்னாடி வாங்க. கிழவிய வீட்டுல இருக்கச் சொல்லு” என்று கூறி விட்டு, அவள் கையிலிருந்ததை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினாள்.
சேந்தனை தோளில் சாய்த்துக் கொண்டு, வள்ளியம்மை அழுது கொண்டே வர, மைமூன் அவருக்கு ஆறுதல் கூறினார்.
கார்த்திக்குடன் ஜீவிதா முன்னால் அமர்ந்து கொள்ள, கார் கிளம்பியது. நிலனும் நறுமலரும் ஒன்றாக பைக்கில் வந்தனர்.
அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் சேர்க்க, அங்கு அவரை கவனிக்க முடியவில்லை. உடனே அவசர ஊர்தியில் சேந்தனை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை ஆரம்பமானது.
“இது முதல் அட்டாக்கா?” என்று மருத்துவர் கேட்க, “ரெண்டாவது டாக்டர்” என்றாள் ஜீவிதா.
“முதல் அட்டாக் பத்தின ரிப்போர்ட்ஸ் இருக்கா?”
ஜீவிதா கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். நிலவன் முகத்தில் ஆச்சரியம் இருந்தது.
“என்ன? உங்களுக்குத் தான் என்னைப் பத்தித் தெரியாது. எனக்கு உங்கள பத்தி நல்லாவே தெரியும்.” என்று கூறி விட்டு திரும்பிக் கொண்டாள்.
ஒரு நர்ஸ் வந்து பணம் கட்டச் சொல்ல, உடனே கட்டினாள். சில நிமிடங்களில் மருத்துவர் அழைக்க, நிலவனும் ஜீவிதாவும் உள்ளே சென்றனர்.
மருத்துவர் நிலமையை விவரித்து விட்டு, அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தார். ஜீவிதா உடனே அதற்கு சம்மதம் கூறி விட்டாள்.
“எவ்வளவு செலவானாலும் சரிங்க டாக்டர். ஆப்ரேஷன்க்கு ரெடி பண்ணுங்க. நான் பில்ல செட்டில் பண்ணிடுறேன்” என்று ஜீவிதா கூறி விட, நிலவனால் எதுவும் பேச முடியவில்லை.
அறுவை சிகிச்சையை இரண்டு நாட்களில் வைத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் கூற, பணத்தை மொத்தமாகக் கட்டி விட்டாள்.
“இதுல மிச்சம் பத்து லட்சம் இருக்கு. தேவைபடும் வச்சுக்கோ” என்று நிலவனிடம் கொடுக்க, “வேணாம்கா” என்றான்.
“கூடப் பிறந்த கடமை இருக்கு நிலா. இது அந்த கடமைக்குத் தான் கொடுக்குறேன். முடிஞ்சா உன் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சுக் கொடு” என்று கூறி அவன் கையில் திணித்து விட்டாள்.
தொடரும்.
