வரம் 9
![]()
வீடு வந்து சேர்ந்த வைசாலி எதையோ யோசித்துக் கொண்டே உள்ளே செல்ல, “சாலி இங்க வா. சாப்பிட்டியா நீ?” என்று சித்ரா கேட்டார்.
“ம்ம்?” என்று கேள்வியாக பார்த்தவள், சுற்றியும் பார்த்தாள்.
உணவுண்ட மயக்கத்தில் ஹாலிலேயே ஆண்கள் அனைவரும் உறங்கி இருக்க, பெண்கள் ஒரு அறையில் படுத்திருந்தனர்.
தன் அறை காலியாக இருப்பதைப் பார்த்தவள், “ம்மா இங்க வாங்க” என்று அழைத்தபடி உள்ளே சென்றாள்.
தந்தையை பார்த்து கைகாட்டி விட்டு செல்ல, அவரும் மகள் பின்னால் சென்றார்.
அறைக்குள் சென்று கதவை பூட்டி விட்டு, தாய் தந்தை இருவரையும் அமர வைத்தாள்.
“என்ன பாப்பா? யார பார்க்கப் போன?”
“அரசனபா”
“அரசன் இங்க இருக்கானா? வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டியது தான?”
“இப்ப வர்ர சூழல்ல அவர் இல்லபா. எதோ கேஸ் விசயமா அலையுறார்”
“ஓஓ.. சரிமா. உன்னை பார்க்கக் கூப்பிட்டானா? கல்யாணத்துக்கு வர சொன்னியா? பத்திரிக்கை வைக்கும் போது அரசன் வீட்டுல இல்ல”
“அத பத்தி பேசத்தான் உங்கள கூப்பிட்டேன்” என்றவள் இருவரின் முன்பும் அமர்ந்து கொண்டாள்.
“என்ன பாப்பா?” ஜோதிலிங்கம் மகளின் முகத்தை ஆராய்ந்தபடி கேட்டார்.
“அரசன் ஒரு கேஸ் விசயமா அலையுறார்பா. அவர் ஃப்ரண்டோட தம்பி வொய்ஃப் ஆக்ஸிடென்ட்ல செத்துட்டாங்க.”
“அடடா” என்று சித்ரா வருத்தப்பட்டார்.
“ஆனா அவங்க மெடிக்கல் ரிப்போர்ட்ல, அவங்க சாகலனு இருக்கு. உயிரோட இருக்கவங்கள செத்துட்டாங்கனு போலி ரிப்போர்ட் கொடுத்து, அத நம்ப வச்சுருக்காங்க. இதுல அந்த பொண்ணு மாசமா வேற இருந்துருக்கு”
“அடப்பாவிங்களா! அப்புறம் என்ன ஆச்சு? போலி டாக்டரா அவன்? பிடிச்சுட்டாங்களா?”
“பிடிச்சுட்டாங்களாம். அவன் காசு வாங்கிட்டு வேற யாருக்காகவோ அத பண்ணிருக்கானாம். காசு கொடுத்தது யார் தெரியுமா? டாக்டர் மாதவன்”
வைசாலி விசயத்தை உடைத்து விட, சித்ரா அதிர்ந்து போனார். ஜோதிலிங்கம் கூட இதை எதிர்பார்க்கவில்லை.
“என்ன பாப்பா சொல்லுற? நம்ம மாப்பிள்ளையா? நிஜம்மவா?”
“ஆமாபா. ஆனா இனி அவர் மாப்பிள்ளை கிடையாது. அப்படிக் கூப்பிடாதீங்க.” என்று அழுத்தமாக சொன்னவள் அதிர்ந்து போன சித்ராவை பார்த்தாள்.
“சாலி.. கல்.. கல்யாணம் நின்னுடும்ல?”
“ம்மா.. ரிலாக்ஸ் மா. கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி ஒரு விசயம் நடந்து இருந்தா? நம்ம நிலைமை என்ன ஆகி இருக்கும்? நல்ல வேளை முன்னாடியே தெரிஞ்சுருச்சுனு சந்தோசப்படுவோம்”
வைசாலி சித்ராவின் பதட்டத்தை தணிக்க முயன்றாள். அது வரை பேரதிர்ச்சியில் அமர்ந்து இருந்த ஜோதிலிங்கம், தன்னை சுதாரித்துக் கொண்டார்.
“ஆமா சித்ரா.. கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சுருந்தா நம்ம பொண்ணு வாழ்க்கை என்ன ஆகி இருக்கும்? இப்ப பாரு.. ஒன்னுமே ஆகல. நம்ம புள்ளய இப்படி பட்ட பையனுக்கு கொடுக்காம தப்பிச்சுட்டோம். அதுனால நீ பதறாத”
சித்ராவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக பதட்டம் குறைந்தாலும், வைசாலி சோதித்து பார்த்ததில் இரத்த அழுத்தம் கூடியிருந்தது. பேசிப்பேசியே அன்னையை சமாதானம் செய்து, மாத்திரையும் கொடுத்து அவரை சரிபடுத்தினாள்.
அரசன் சொன்னது நினைவு வந்தது.
“ஆண்ட்டி ஹெல்த் கண்டீஷன்க்காகவும் தான் இத முன்னாடியே உன் கிட்ட வந்து சொல்லுறேன். கவனம்” என்று எச்சரித்தான்.
அதே கவனத்தில் இருந்ததால், வைசாலி சித்ராவை சரியாக கவனித்துக் கொண்டாள்.
சில நிமிடங்கள் மாதவனா இப்படி? என்ற புலம்பலில் கடக்க, “இது பத்தி இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேணாம்பா. எப்படியும் அரெஸ்ட் பண்ணதும் நியூஸ் வரும். அதுனால கல்யாணம் நின்னுட்டதாவே இருக்கட்டும். அது வரை நாமலா யாருக்கும் சொல்ல வேணாம்” என்றாள்.
“எல்லாரும் என்ன நினைப்பாங்க?” என்று சித்ரா தனக்குள் முணுமுணுக்க, “அடுத்தவங்க நினைக்கிறது இப்ப ரொம்ப முக்கியமா? இது நம்ம குடும்ப விசயம். யார் என்ன நினைச்சா என்ன?” என்று சித்ராவை அதட்டினாள்.
அதில் கப்பென வாயை மூடிக் கொண்டவருக்கு, மகளுக்கு நிச்சயத்த திருமணம் நடக்கவில்லை என்ற சோகம் மனதில் இருந்தது. அதே நேரம் மாதவனா இப்படி? என்ற அதிர்ச்சியும் இருந்தது.
“ஆனா.. பாப்பா.. மா.. மாதவன் ஏன் பணம் கொடுக்கனும்? அந்த பொண்ணுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?”
“வேணாம்பா. இது தெரிய வேணாம். அரசன் ரகசியமா வச்சுக்கனும்னு நினைக்கிறாரு. கேஸ் கோர்ட்டுக்கு வந்தா எல்லாருக்கும் தெரியும் போது பார்த்துக்கலாம். இப்போ உங்களுக்கு தெரிய வேணாம்”
பெற்றோர் இருவரும் மௌனமாக, “அதுவும் உங்களுக்குத்தெரியவே கூடாது. யாராவது எதையாவது பேசுனா உங்க வாய் உளறி வச்சுடும்.” என்று சித்ராவிடம் கூறினாள்.
“அதுவும் சரிதான். உங்கம்மா பேச உட்கார்ந்தா மனசுல இருக்கத பூராம் ஒப்பிச்சுட்டு தான் எந்திரிப்பா. இரகசியத்த எல்லாம் சொல்லி வைக்க முடியாது”
மகளையும் கணவனையும் மாறி மாறி முறைத்த சித்ரா, “நான் என்ன வேணும்னா சொல்லுறேன்? பேச்சுவாக்குல வந்துடுது” என்றார்.
“அது தான் தப்பு. அதிகமா பேசுனா மனசுல எதுவும் தங்காது. நம்மல அறியாம கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் உளறிடுவோம். நீங்க அப்படித்தான் உளறுவீங்க. சரி போய் படுத்து தூங்குங்க. நியூஸ் வர்ர வரை ரூம விட்டே வெளியே வராதீங்க. ப்பா.. இவங்கள பேசவே விடாதீங்க”
பொறுப்பை தந்தையிடம் கொடுத்து அனுப்பி விட்டாள்.
அரசன் சொன்னதை எல்லாம் யோசித்துக் கொண்டே இருந்தாள். நேரம் மடமடவென கடந்து போக, தூங்கியவர்கள் எல்லோரும் எழுந்து விட்டனர்.
பேச்சோடு பேச்சாக திருமணத்திற்கு உடையெடுக்க கிளம்ப ஆரம்பித்தனர். வைசாலியும் சித்ராவும் அறையை விட்டு வெளியே வரவில்லை. சித்ராவை ஜோதிலிங்கம் விடவில்லை.
“கல்யாணமே நின்னுடுச்சு. ட்ரெஸ் எடுக்க ஏன் கிளம்புறாங்க?” என்று கேட்டுக் கொண்டே வெளியே சென்ற சித்ராவை, ஜோதிலிங்கம் பிடித்து இழுத்து அமர வைத்தார்.
“எங்க போற நீ?”
“கிளம்ப வேணாம்னு சொல்ல”
“எதுக்கு?”
“கல்யாணம் நின்னுடுச்சே”
“அது உனக்கும் எனக்கும் தான் தெரியும். அவங்களுக்கு தெரியாது. தெரியவும் கூடாது. நினைப்பு இருக்கா இல்லையா?” என்று அதட்ட, அப்போது தான் சித்ராவிற்கு புரிந்தது.
“ஆமால” என்று தலையில் கொட்டிக் கொள்ள, “இங்கயே இரு. வெளிய வந்து எதையாவது உளறிட்டு இருக்காத. கேட்டா உனக்கு தலைவலி தூங்குறனு சொல்லுறேன்.” என்று அதட்டி வைத்தார்.
வைசாலி அறையில் அரசனின் செய்திக்காக காத்திருந்தாள். மாதவனை கைது செய்து விட்டதாக அரசன் செய்தி அனுப்ப, வைசாலியிடமிருந்து பெருமூச்சு எழுந்தது.
சில நிமிடங்களில், மாதவன் குடும்பத்திற்கும் வைசாலி குடும்பத்திற்கும் பாலமாக இருந்த தரகர் மூலமாக வீட்டில் எல்லோருக்கும் விசயம் தெரிய, அதிர்ந்து விட்டனர்.
வைசாலியிடம் ஓடி வந்து சொல்ல, அவள் பெரிதாக அதிராமல் தலையாட்டினாள்.
“என்ன இப்படி சாதாரணமா உட்கார்ந்து இருக்க? உனக்கு முன்னாடியே தெரியுமா?”
“என் ஃப்ரண்ட் சொன்னாங்கக்கா. பேசிட்டு தான் உட்கார்ந்து இருக்கேன். என்ன விசயத்துக்கு அரெஸ்ட் பண்ணாங்க எதாவது தெரியுமா?”
“தெரியல. அவங்க வீட்டுல யாரும் ஃபோன எடுக்கல. தரகர் விசாரிச்சு சொல்லுறதா வச்சுட்டார்”
“ஓஓஓ.. சரி” என்று வெளியே வந்தவள், “யாரும் அவங்களுக்கு ஃபோன் பண்ணாதீங்க. அவங்க அங்க என்ன நிலைமையில இருக்காங்களோ? விடுங்க. தரகர் தான் விசாரிக்கிறதா சொல்லிட்டாருல? அவர் சொல்லவும் பார்த்துக்கலாம்” என்றாள்.
“இல்லமா.. என்ன ஏதுனு..”
“எதுவும் கேட்க வேணாம் மாமா. நீங்க பந்தல் போட வர சொன்னவங்கள வேணாம்னு சொல்லுங்க. அக்கா அந்த பியூட்டி பார்லர்க்கு போன் பண்ணி கேன்சல் பண்ணிடு.”
“என்னமா? கல்யாணம்…”
“நின்னுடுச்சு சித்தி. இதுக்கு மேல கல்யாணம் நடக்காது”
“ஒரு வேளை மாப்பிள்ளை மேல தப்பில்லனா? யோசிச்சு பேசுமா”
“இல்ல சித்தி. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. என்னை ஃபோர்ஸ் பண்ணாதீங்க. எல்லாத்தையும் கேன்சல் பண்ணிடுங்க. நான் கொஞ்ச நேரம் படுக்குறேன்”
வேகமாக அறைக்குள் சென்று விட, எல்லோரும் வைசாலிக்காக வருத்தப்பட்டனர். என்ன விவரம் என்று தெரியாமல் உடனே திருமணத்தை நிறுத்த பெரியவர்கள் யோசிக்க, ஜோதிலிங்கம் மகள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்றார்.
திருமண ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் நிற்க ஆரம்பித்தது. மிச்சமிருந்த பத்திரிக்கைகள் மூலைக்குச் சென்றது. அக்கம் பக்கம் இருந்தவர்கள், ஆளுக்கு ஒரு கேள்வியோடு படையெடுத்தனர்.
இதில் வந்த எல்லாருமே, கொலு பொம்மையாக வைசாலியை பார்க்கத்தான் விருப்பப்பட்டனர். அவளை பார்த்து ஆறுதல் என்ற பெயரில் என்ன சொல்வார்கள் என்று தெரிந்ததால், யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை.
பார்க்காததும், “ரூம்க்குள்ள உட்கார்ந்து அழுதுட்டு இருக்கா.. பாவம்” என்று கதை கட்டி விட்டனர்.
திருமணம் நின்று விட்ட செய்தி எல்லா இடமும் பரவியது. மாதவனின் வழக்கு சம்பந்தமாக வேறு கேள்விகள் எழுப்பப்பட, யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
விசாரிப்பதாக சொன்ன தரகரும், கையை விரித்தார்.
அக்கம் பக்கம் யாருக்கும் விவரம் தெரியவில்லை. மாதவனின் பெற்றோர்களும் வீட்டுக்கதவை அடைத்துக் கொண்டு திறக்கவில்லை. கேட் பகுதியிலிருந்து எட்டிப்பார்த்து விட்டு, எல்லோரும் திரும்ப வேண்டியிருந்தது.
இந்த கலவரங்கள் இங்கு நடந்து கொண்டிருக்க, மாதவன் வீட்டிற்குள் மிருதுளா அழும் சத்தம் மட்டும் தான் கேட்டுக் கொண்டிருந்தது.
பெற்றவர்கள் இருவரும் பிரம்மை பிடித்து மூலையில் அமர்ந்து இருந்தனர். மகன் மீது அவர்கள் வைத்த குற்றச்சாட்டு தெரிந்த பின் அதிர்ந்தவர்கள் தான். அதை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.
கைபேசிகள் அதன் போக்கில் அலறிக்கொண்டிருக்க, அதை எடுத்து பதில் சொல்ல தெம்பில்லாமல் அமர்ந்து இருந்தனர்.
“ம்மா” என்று மிருதுளா அழைக்க, அருந்ததி மகளை திரும்பிப் பார்த்தார்.
“நிஜம்மா அண்ணன் இப்படிப்பண்ணல தான?”
அழுது கொண்டே கேட்டவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல், அவளை இழுத்து மடியில் படுக்க வைத்துக் கொண்டார்.
“அழாதடா.. ரொம்ப அழக்கூடாதுல நீ? அழாத. மாதவன் தப்பு பண்ணிருக்க மாட்டான். நாம அப்படி அவன வளர்க்கல. நம்புவோம்டா”
மகளின் கண்ணீரை துடைத்து விட்டவர் அவளை அமைதிபடுத்தப் பார்த்தார்.
“அண்ணன் போய் ஒரு பொண்ணு சாவுக்கு காரணமா? ஏத்துக்கவே முடியலமா.. அவங்க சொன்னதும் அண்ணன் அமைதியா அவங்க கூடவே போயிடுச்சே. இல்லனு ஏன் சொல்லல?”
அது தான் பெற்றவர்களுக்கும் புரியவில்லை. இருவருமே அந்த கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருந்தனர்.
“இப்படியே உட்கார்ந்து இருக்க போறீங்களா? போய் மாதவன பாருங்க. பார்த்து என்ன செய்யலாம்னு கேளுங்க” அருந்ததி.
“ம்மா.. அண்ணி.. அவங்க வீட்டுல சொல்லனுமே”
“ஆமா.. அவங்களுக்கும் சொல்லனும். என்ன நினைப்பாங்கனு வேற தெரியல” என்று வேகமாக கைபேசியை எடுத்த அருந்ததி, கணவனிடம் நீட்டினார்.
“வைசாலி அப்பாவுக்கு ஃபோன் பண்ணி விசயத்த சொல்லுங்க.”
“அவங்க கல்யாணத்த நிறுத்தச் சொல்லுவாங்க” என்றார் பிரபாகரன்.
“சரினு சொல்லுங்க. இந்த கேஸோட கல்யாணம் நடத்த முடியாதுல?”
அருந்ததி பேசிக் கொண்டே இருந்தாலும், அவர் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டு தான் இருந்தது. அதைத் துடைத்துக் கொண்டு தைரியமாக காட்டிக் கொண்டார்.
“பேசிட்டு.. மாதவன போய் பாருங்க.. கிளம்புங்க” என்றதும் பெருமூச்சோடு ஜோதிலிங்கத்தை அழைத்தார்.
உடனே எடுத்துக் காதில் வைத்த ஜோதிலிங்கம், “சொல்லுங்க” என்றார்.
அந்த குரலில் இருந்த அந்நியத்தன்மை, விசயம் அவர்களுக்குத் தெரிந்து விட்டது என்று காட்டியது.
“மன்னிச்சுடுங்க. இங்க நடக்குறது உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்”
“ம்ம்.. கல்யாணத்த நிறுத்திடலாம்னு முடிவு பண்ணிட்டோம்”
பிரபாகரன் எதுவும் பேசாமல் மௌனம் சாதிக்க, “என்னடா காரணம் கூட கேட்காம நிறுத்துறாங்களேனு யோசிக்காதீங்க. பின்னாடி திரும்ப சந்திக்கிற நிலைமை வந்தா, இதை பத்தி பேசலாம். இப்ப அங்க தேவையானத பாருங்க. வச்சுடுறேன்” என்று கூறி விட்டு வைத்து விட்டார்.
பிரபாகரன் அணைந்து போன கைபேசியை தூக்கி போட்டு விட்டு, மனைவியை பார்த்தார்.
“அவங்க கல்யாணத்த நிறுத்திட்டாங்க” என்றவர் ஆழ மூச்செடுத்துக் கொண்டு, “மாதவன பார்த்துட்டு வர்ரேன்” என்று எழுந்து கொண்டார்.
•••
இரவு உணவு யாருக்கும் இறங்கவில்லை. ஆனால், வைசாலி எதையும் கவனிக்காமல் சாப்பிட்டு விட்டு படுத்து விட்டாள்.
சொந்த பந்தங்கள் தொடர்ந்து அழைத்த வண்ணம் இருக்க, முடிந்தவரை பதில் சொல்லி விட்டு எல்லோரும் புலம்பியபடியே இரவைக்கடக்க ஆரம்பித்தனர்.
வைசாலி எதையும் கவனிக்காமல் அமைதியாக படுத்திருக்க, அவளுடைய அக்கா யோசனையாகப் பார்த்தாள்.
“சாலி..”
“ம்ம்”
“நீ ரொம்ப சைலண்ட்டா இருக்க. உனக்கு கல்யாணம் நின்னதுல வருத்தமில்லையா?”
“இல்ல”
“ஏன் மாதவன அரெஸ்ட் பண்ணாங்கனு தெரிய வேணாமா?”
“வேணாம்”
“என்ன இது? ஏன் இப்படி இருக்க?”
“இப்ப என்ன பண்ணனும்? கல்யாணம் நின்னுடுச்சுனு அழனுமா? நிறுத்த சொன்னதே நான் தான்”
“அதான் ஏன்? உனக்கு மாதவன் மேல நம்பிக்கை இல்லையா?”
இதே கேள்வியைத்தான் அரசனும் கேட்டான்.
“உனக்கு மாதவன் மேல நம்பிக்கை இல்லையா? அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுக்க மாட்டியா?” என்று அரசன் கேட்டு வைத்தான்.
“ப்ச்ச்.. அக்கா.. பேசாம தூங்கு. எனக்கு எதைப்பத்தியும் பேச விருப்பமில்லை”
பட்டென பேசி விட்டு கண்ணை மூடிக் கொண்டாள். ஆனால் தூக்கம் வருவனா என்று ஆட்டம் காட்டியது. மூளை முழுவதும் அரசன் கேட்ட கேள்விகள் பேச்சுக்கள் சுற்றிக் கொண்டிருக்க, கண்ணை மூடிக் கொண்டு அசையாமல் படுத்திருந்தாள்.
அடுத்த நாள் காலை விடிந்தது. வைசாலி வெளியே வந்து அமர்ந்து எல்லோரையும் ஒரு முறை பார்த்தாள்.
“என்ன மாமா? ஊருக்கு கிளம்புற வேலைய ஆரம்பிக்கலயா?” என்று கேட்க, அவரது மாமா முழித்தார்.
காலையில் தான் அவருடைய மகன், திருமணம் தான் இல்லையே உடனே வாருங்கள் என்று அழைத்திருந்தான்.
“இங்க கல்யாண வேலை இருந்துச்சு வந்தீங்க. இனி தான் வேலை எதுவும் இல்லையே. அங்க ஆயிரம் வேலை இருக்கும். கிளம்புங்க.”
“என்ன சாலி பேசுற..? இப்ப இருக்க நிலைமையில தனியா உங்கள விட்டுட்டு எப்படிப்போறது?” என்று அத்தை கேட்க, “எங்களுக்கு என்ன குறை? தப்பு நாங்களா பண்ணோம்? நாங்க நல்லா தான் இருக்கோம். நீங்க இதெல்லாம் நினைக்க வேணாம் கிளம்புங்க.” என்றாள்.
யார் பேசியும் வைசாலி கேட்கவில்லை. எல்லோரையும் கிளம்பச் சொன்னாள்.
வைசாலியை அவர்கள் எல்லோருக்குமே பிடிக்கும். அவளை செல்லமாகத்தான் வளர்த்தனர். யாரும் அவளை அதட்டியது இல்லை. அடித்தது இல்லை. மிரட்டியது இல்லை. எப்போதும் பாசம் தான். ஆனாலும் அந்த அதிக செல்லத்தில் வைசாலி கெட்டுப்போகவில்லை. குடும்பத்தினரை அதிகம் மதிக்கும் பெண்ணாக பொறுப்பாக வளர்ந்து இருந்தாள்.
அவளுக்கு நிச்சயித்த திருமணம் நடக்கவில்லை என்றது, மிகப்பெரிய வருத்தமாக இருந்தது அனைவருக்கும். சித்ரா வேறு நேற்று விசயம் தெரிந்ததிலிருந்து வாயை திறக்கவே இல்லை. கேட்டதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவரை தனியாக விட யோசித்தனர்.
ஆனால் சித்ராவை அதிகம் பேசவிடாமல் செய்து கொண்டிருந்தது ஜோதிலிங்கம்.
வைசாலி எல்லோரையும் மாலைக்குள் கிளப்பி விட்டே ஓய்ந்தாள்.
“ஏன்மா இப்படி துரத்துற மாதிரி அனுப்புற?” என்று ஜோதிலிங்கம் வருத்தப்பட, “இருந்தா முடிஞ்சதயே பேசிட்டு இருக்காங்க. அம்மா வேற எப்ப உளறி வைப்பாங்களோனு யோசிக்க வேண்டியிருக்கு. அவங்களுக்கும் வேலை இருக்கும்ல? போய் பார்க்கட்டும். அப்ப தான் இத மறப்பாங்க” என்று முடித்து விட்டாள்.

❤️❤️❤️❤️❤️❤️❤️