வரம் 15

Loading

வைசாலி அமைதியாக நின்றிருந்தாள். அரசன் சித்ராவை தொடர்பு கொண்டு, தன்னிடம் பேசுவான் என்று எதிர்பார்க்கவே இல்லை. அரசன் பேசும் வரை அவளும் மௌனமாக நிற்க, “கால் அட்டன் பண்ணு லாலி” என்றான்.

அதற்கு வைசாலி பதில் பேசும் முன்பே அழைப்பு துண்டிக்கப்பட, கைபேசியை வெறித்துப் பார்த்தாள்.

“அதிகாரம்” என்று முறைத்தவள், அதை அங்கேயே வைத்து விட்டு அறை பகக்ம் திரும்பினாள்.

அரசனின் அழைப்பை பார்த்து விட்டு, “எல்லாம் திமிர்..” என்று பல்லைக் கடித்தபடி அழைப்பை ஏற்றாள்.

ஆனால் முகம் தெரியாதபடி, கேமராவை கை வைத்து மறைத்துக் கொண்டாள்.

முதலில் புரியாமல் பார்த்தவன் அவளது வேலை புரிய, “லாலி.. கேமராவ ஏன் மறைச்சு இருக்க?” என்று கேட்டான்.

“எதுக்கோ மறைச்சு இருக்கேன். இப்ப எதுக்குங்க இத்தனை தடவ கால் பண்ணுறீங்க? உங்க வேலை எல்லாம் முடிஞ்சதா? சாவகாசமா என் நினைப்பு வந்துடுச்சா?”

“லாலி..”

“எதுக்கு கால் பண்ணீங்க? நலம் விசாரிக்கவா? நான் ரொம்ப நல்லா இருக்கேங்க. வச்சுடுறீங்களா?”

“ஏய்.. என்னை பேச விடு”

“உங்களுக்கு சாவகாசமா தோனும் போது பேசுவீங்க. இல்லனா வருச கணக்கா மறந்து போவீங்க. நான் உங்க கூட பேசனுமா?”

“என்ன காரம்டா.. அமைதி லாலி.. முதல்ல கைய எடு”

“முடியாது. நான் வைக்கிறேன்”

“என்ன டாக்டர் நீ? ஒரு பேஷண்ட் கிட்ட பொறுமையா பேசனும். இப்படி சண்டை போட்டா எப்படி?”

“யாரு பேஷண்ட்?” என்றவள் அவன் முகத்தை ஆராய்ந்தாள்.

“நான் தான்”

“மூஞ்சிய பார்த்தா நல்லா தான இருக்கு”

“முகமெல்லாம் நல்லா தான் இருக்கு. கைய பாரு” என்று கையை காட்டியதும் வைசாலி கேமராவை மறைத்திருந்த கையை எடுத்து விட்டாள்.

“என்னாச்சு?” என்று பதட்டமாக கேட்க, “அத நான் சொல்லுறேன்” என்று அமுதவல்லி வந்தார்.

“இத குடி” என்று சூப்பை அரசன் அருகே வைத்து விட்டு, அவன் கையைப்பிடித்து கைபேசியை திருப்பினார்.

“என்னாச்சு ஆண்ட்டி?”

“இந்த போலீஸ்காரன் ஒரு நாலு பேர அடிச்சுப்போட முடியாம கைய உடைச்சுட்டு வந்துருக்கான்.” என்று அமுதவல்லி கிண்டலாக கூற, “ம்மா” என்று அரசன் பல்லைக் கடித்தான்.

“உண்மைய தானடா சொல்லுறேன். நாலே பேரு.. அடிச்சுப்போட முடியல உன்னால.. இதுல நீ பெரிய போலீஸ்காரன் ஆகி நாட்டையே காப்பாத்துவனு என் மாமனார் கனவு கண்டார். இப்ப அவர் எங்க இருந்து பார்த்து வருத்தப்படுறாரோ?”

அரசனுக்கு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. ஒரு கை கட்டுப் போட்டு இருக்க, மற்றொரு கையில் கைபேசி. நினைத்ததை செய்ய முடியாமல் பல்லைக் கடித்தான்.

பதட்டத்தில் இருந்த வைசாலி கூட, அமுதவல்லியின் பேச்சில் சிரித்து விட்டாள். அந்த சிரிப்பு வேறு அரசனை மேலும் தூண்டியது.

“ம்மா.. போங்க முதல்ல”

“போறேன் போறேன். இந்த சூப்ப குடிடா. சூடா இருக்கும் போதே குடிக்கனும்.” என்று கூறி விட்டு சென்று விட்டார்.

அரசன் வைசாலியை பார்க்க, அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன சிரிப்பு?”

“இல்ல.. உங்க போலீஸ் ட்ரைனிங்ல ஒரு நாலு பேர அடிக்க சொல்லிக் கொடுக்கலயா?”

“லாலி.. போதும். ஆல்ரெடி இங்க ரெண்டு பேர் டேமேஜ் பண்ணிட்டாங்க. கை சரி ஆகட்டும். இதே கையால அவனுங்களுக்கு இருக்கு”

வைசாலி நன்றாக சிரித்து விட்டாள்.

“வீர சபதமா? கை பத்தரம் கிங்”

வைசாலி கோபம் மறந்து சிரித்துக் கொண்டிருக்க, சித்ரா வந்து விட்டார்.

“பேசிட்டியா?” என்று வர, “இங்க வாங்க.. அரசனுக்கு அடி பட்டுருச்சாம்” என்று அன்னையின் பக்கம் திருப்பினாள் வைசாலி.

“அச்சச்சோ..” என்று பதறியவர், அரசனை நலம் விசாரித்து முடித்தார்.

இருவரும் பேசி முடித்ததும், அரசனின் மருத்துவ விவரங்களை காட்ட சொல்லி படித்து விட்டு, பெரிய காயம் இல்லாததில் திருப்தியானாள்.

“ப்ராக்ச்சர் ஆகல. அது வரை தப்பிச்சீங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க.”

அரசன் தலையாட்டி விட்டு, “கோபம் போயாச்சா?” என்று புன்னகைத்தான்.

வைசாலி மறுப்பாக தலையசைக்க, “சாரி” என்றான்.

அப்போதும் வைசாலி மறுப்பாக தலையசைத்தாள். அவனது மன்னிப்பை அவள் ஏற்பதாக இல்லை.

“சூப்ப குடிச்சியா இல்லையா?” என்று அமுதவல்லி வந்து நின்றார்.

அது அவர் வைத்த இடத்தில் அப்படியே இருக்க, “இத குடி முதல்ல.. வைசாலி கிட்ட பேசிட்டியா?” என்று விசாரித்தார்.

“இன்னும் இல்ல”

“சொன்னியா?”

“எத?”

“இங்க கொடு. நீ இத குடிச்சு காலி பண்ணு. நாங்க பேசிக்கிறோம்” என்று கைபேசியை பிடுங்கிக் கொண்டு சென்று விட்டார்.

அரசனும் சூப்பை குடித்து விட்டு அமர்ந்திருந்தான். அமுதவல்லி சத்தமில்லாமல் அவன் கைபேசியை கொடுத்து விட்டு செல்ல, அரசனுக்கு சந்தேகம் எதுவும் வரவில்லை. ஆனால் மறுநாள் வைசாலி வந்து முன்னால் நிற்கும் போது, அவன் அதிர்ந்து போனான்.

மாலை தூக்கத்தில் இருந்தவன், கதவு தட்டும் சத்தம் கேட்டு விழித்தான். அமுதவல்லி கதவை தட்ட மாட்டார். வேறு யார் என்ற சந்தேகத்துடன், “உள்ள வாங்க” என்று கூறியபடி எழுந்து அமர்ந்தான்.

கதவை திறந்து உள்ளே வந்த வைசாலியை, அவன் சுத்தமாய் எதிர் பார்க்கவில்லை.

“லாலி!” என்று ஆச்சரியமாக பார்க்க, “கை எப்படி இருக்கு?” என்று விசாரித்தாள்.

“நல்லா இருக்கு. என்ன திடீர்னு வந்து நிக்கிற? எப்ப வந்த? ஆண்ட்டி அங்கிள் வந்துருக்காங்களா?”

“யாரும் வரல. நான் தான் வந்தேன்”

“தனியாவா?”

அரசன் ஏகத்திற்கும் ஆச்சரியப்பட, வைசாலி புருவம் உயர்த்தினாள்.

“ஏன் தனியா வந்தா என்ன?”

“ஒன்னும் இல்ல” என்றவன் சற்று யோசித்து விட்டு, “வெளிய இருக்கியா? ஃப்ரஸ்ஸாகிட்டு வர்ரேன்” என்றான்.

வைசாலி வெளியேறி விட, அரசனின் மூளை படுவேகமாக யோசித்து கணக்கு போட ஆரம்பித்தது. அதன் ஊடே தன் வேலையை முடித்துக் கொண்டு வந்து விட்டான்.

அமுதவல்லி மகனை பார்க்காமல் வைசாலியிடமே கண்ணாக இருக்க, அவரை முறைக்க முடியாமல் வைசாலியை பார்த்தான்.

“டீ சாப்பிடுறீங்களா கிங்?”

“வேணாம்.” என்றவன் அமுதவல்லியை பார்க்க, அவர் திரும்பினால் தானே?

“நீங்க பேசிட்டு இருங்க.. மாடியில துணி காயுது.. எடுத்துட்டு வந்துடுறேன்” என்று கூறி விட்டு வேகமாக எழுந்து சென்று விட்டார்.

மறந்தும் கூட மகன் பக்கம் திரும்பாமல் போக, ‘என்னத்த சொல்லி வச்சுருக்கீங்கமா?’ என்று பல்லைக்கடித்தான்.

வைசாலி அரசனை பார்க்க, அவள் முன்னால் சென்று அமர்ந்து கொண்டான்.

“இங்க ஏன் வந்த லாலி?”

“இந்த வீட்ட விக்க போறாங்களாம். வாங்கலாம்னு வந்தேன்”

“லாலி..”

“உங்கள பார்க்க தான் வந்தேன் கிங். இது என்ன கேள்வி?”

“நேத்து அவ்வளவு கோபமா பேசுன. இன்னைக்கு தனியாவே கிளம்பி வந்துருக்க. என்ன விசயம்?”

“உங்களுக்கு விஷ் பண்ணலாம்னு. கல்யாணம் பண்ணிக்க போறீங்களாமே..”

‘அம்மா..’ என்று அரசனால் மனதில் தான் அலற முடிந்தது.

“பொண்ணு கூட போலீஸாம்.”

வைசாலியை பார்த்தவன், அவள் முகத்தில் தெரிந்த அபரிமிதமான கோபத்தில், மேல் உதட்டை கடித்து சிரிப்பை அடக்கினான்.

“அதான் பார்த்து விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்”

“இத போன்லயே சொல்லிருக்கலாம்ல? இவ்வளவு தூரம் வந்து விஷ் பண்ணுற உன் அக்கறைய என்ன சொல்ல?” என்று எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி வைத்தான்.

“ம்ம்.. சொல்லிருக்கலாம். ஆனா உடம்பு சரியில்லாதவங்கள நேர்ல வந்து பார்க்கனும்ல? அதான்.. ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு பார்த்துட்டு போயிடலாம்னு..”

உண்மையில் பழங்கள் வாங்கி வந்திருந்தாள். அதைக்கண்ணால் காட்ட, “ஓஓ.. இதுக்காக மட்டும் தான் இவ்வளவு தூரம் வந்தியா?” என்று கேட்டான்.

“இல்ல. இங்க ஒரு கான்ஃப்ரண்ஸ் இருக்கு. அத அட்டன் பண்ண வந்தேன். சைட்ல இந்த வேலை. நீங்க உங்க சொந்த ஊர்ல இருந்திருந்தா வந்துருக்க மாட்டேன். இங்க இருக்கதா ஆண்ட்டி தான் சொன்னாங்க.”

“ஆண்ட்டி வேற என்னாலாம் சொன்னாங்க?”

“ஏன்?”

“சொல்லு.. கேட்போம். பொழுது போகனும்ல?”

“அவங்க சொன்னத அவங்களயே கேளுங்க. பொண்ணு போட்டோ இருக்கா?” என்று கையை நீட்டினாள்.

அரசன் அவளையும் கையையும் மாறி மாறி பார்த்து விட்டு, “அவசியம் பார்க்கனுமா?” என்றான்.

“ஆமா..”

எழுந்து சென்று கைபேசியை எடுத்து வந்து நீட்டினான். அதில் காவல் உடையில் ஒரு பெண் இருந்தாள். அவளது விவரங்களை நேற்றே அமுதவல்லி கூறியிருந்தார்.

“என்ன? எனக்கு பொருத்தமா இருப்பாளா?”

வைசாலி பல்லைக்கடித்து விட்டு, உடனே முகத்தை சரி செய்தபடி நிமிர்ந்தாள்.

“பொருத்தமெல்லாம் ஓகே. பட் ஒரு நாலு பேர அடிக்க முடியாம கைய உடைச்சுட்டு நிக்கிற உங்கள இவங்க கட்டுவாங்களானு கேட்டுக்கோங்க”

“ஏய்..”

கைபேசியை வைத்து விட்டு, அவனது கோபத்தை அசால்டாக பார்த்து வைத்தாள்.

ஒற்றை விரலில் பத்திரம் காட்டியவனை பார்த்து, வைசாலி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

“சரி டைம் ஆச்சு” என்று எழுந்தவள், “ஆண்ட்டி கிட்ட சொல்லிட்டுப் போறேன்” என்று மாடியருகே சென்றாள்.

அரசன் அவளது நடவடிக்கையில் குழம்பி விட்டான்.

“வைசாலி” என்றதும் திரும்பி பார்க்க, “உனக்கு எதாவது கோபமா?” என்று கேட்டான்.

“என் கோபத்த நீங்க மைண்ட் பண்ண வேணாம்” என்று கூறி விட்டு, “ஆண்ட்டி” என்று குரல் கொடுத்தாள்.

“வந்துட்டேன் வைசாலி” என்று அமுதவல்லி வேகமாக வந்தார்.

அவர் கையில் இருந்து உடைகளை வாங்கி சோபாவில் போட்டு விட்டு, “நான் கிளம்புறேன் ஆண்ட்டி. கொஞ்ச நேரத்துல ஒரு மீட்டிங் இருக்கு. இப்ப போன தான் சரியா இருக்கும்” என்றாள்.

“சாப்பிட்டு போகலாம்ல?”

“இல்ல ஆண்ட்டி. டைம் ஆச்சு. நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம்” என்றவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

“பை ஆண்ட்டி” என்று கூறி விட்டு வேகமாக வாசலுக்கு செல்ல, அரசன் பின்னால் சென்றான்.

“எதுல வந்த?”

“ஆட்டோல” என்று திரும்பியும் பார்க்காமல் பேசி விட்டு, வேகமாக சாலையில் இறங்கி நடந்தாள்.

அரசன் அவள் பின்னால் வரும் முன், அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கிளம்பி விட்டாள்.

வேகமாக உள்ளே வந்தவன், உடைகளை மடித்துக் கொண்டு சாதுவாக அமர்ந்திருந்த அன்னையிடம் வந்து நின்றான்.

“என்னமா சொல்லி வச்சீங்க அவ கிட்ட?”

“என்ன சொன்னேன்?”

“ம்மா”

“உனக்கு பொண்ணு பார்த்தேன். நீ வேலை முடிஞ்சு வந்ததும் அந்த பொண்ண பார்க்க போகலாம்னு இருந்தா இப்படி ஆகிடுச்சுனு சொன்னேன்”

“அத ஏன்மா அவ கிட்ட சொன்னீங்க?”

“வைசாலி என்ன வெளி ஆளா? நம்ம புள்ளடா”

“வேணும்னு தான பண்ணீங்க?”

“ஆமா. இப்ப அதுக்கென்னங்குற? வைசாலி தான் வேணும்னா நீ எதாவது செய். இல்ல மறந்துட்டு நான் பார்க்குற பொண்ண கல்யாணம் பண்ணு. அத விட்டுட்டு வேணாம்னு சொல்லிட்டானு அவள அவாய்ட் பண்ணி அவளையும் கஷ்டப்படுத்தி, நீயும் வேலையை பார்க்க போயிட்டா நான் என்ன பண்ணுறது?”

“ம்மா.. அவ இன்ட்ரெஸ்ட்டே வரலனு சொல்லிட்டா. ஃபோர்ஸ்ஸா பண்ண முடியும்?”

“பண்ணனும். பண்ண வேண்டிய நிலைமை வந்தா பண்ணனும்”

அரசன் அதிர்ச்சியாக பார்க்க, “உனக்கு வேணும்னா நீ தான் போராடனும். சும்மா நியாய தர்மம் பேசிட்டு வாழ்க்கைய இழந்துட்டு பின்னாடி புலம்ப கூடாது” என்றார் அழுத்தமாக.

அரசனுக்கும் புரிந்தது தான். ஆனால் அவனால் வைசாலியை வற்புறுத்த முடியுமா? அவள் மீது தன் காதலை திணிக்கவா முடியும்?

“இப்ப பார்த்தல. உன்னை வேணாம்னு சொன்ன பொண்ணு தான். ஆனா நீ பேசலனு வருத்தப்படுறா. உனக்கு வேற பொண்ணோட கல்யாணம்னு கேட்டா பதறுறா. ஒரு வேளை அவ மனசு அவளுக்கே புரியாம இருக்கும். புரிய வச்சா நீ ஜெயிப்ப. இல்லனா…”

கையை விரித்து விட்டு அமுதவல்லி வேலையை பார்த்தார்.

•••

மீட்டிங்கில் அமர்ந்து இருந்த வைசாலிக்கு, கவனத்தை அங்கு வைக்கவே முடியவில்லை. நேற்று வரை இந்த காண்ஃப்ரன்ஸிற்கு வரும் எண்ணம் அவளுக்கு இல்லவே இல்லை.

அரசனுக்கு பெண் பார்த்து திருமணம் என்று கேட்ட போது, என்னவோ அரசனை போல் முழுமனதாக அதில் சந்தோசப்பட முடியவில்லை.

அவளுக்கு மாதவனோடு திருமணம் என்ற போது, அரசன் முழுமனதாக சந்தோசப்பட்டான். அப்படி ஏன் அவளால் இருக்க முடியவில்லை?

அவள் தான் அரசன் கேட்ட போது அந்த எண்ணமே வரவில்லை என்று மறுத்தாள். அவனுக்கு வேறு திருமணம் என்ற போது ஏன் பதட்டப்பட வேண்டும்? உண்மை தானா? என்று அறிய ஏன் இப்படி ஓடி வர வேண்டும்?

“ஹேய்.. வைசு” என்று பக்கத்திலிருந்த பெண் தொட, சட்டென யோசனையில் இருந்து மீண்டாள். பிறகு தான் நிகழ்ச்சியை கவனித்தாள்.

இரவு படுத்தவளுக்கு தூக்கமே வரவில்லை. காவல் உடையில் நின்றிருந்த பெண் நினைவில் வந்தாள். கம்பீரமாக இருந்தாள். அழகாகவும் கூட. நிச்சயம் அரசனுக்கு பொருத்தமான பெண் தான். அதை நினைக்கும் போதே மனதில் சுள்ளென ஒரு வலி வர, அந்த வலி அவளுக்குப்பிடிக்கவில்லை.

கடுப்பாய் எழுந்து விட, அருகே இருந்த மெத்தையில் படுத்திருந்த பெண் அவளை கேள்வியாக பார்த்தாள்.

“தூக்கம் வரல. நீங்க தூங்குங்க” என்று விட்டு சன்னல் அருகே வந்து நின்றாள்.

அறையில் ஏசி ஓடிக் கொண்டிருக்க, கண்ணாடி கதவை திறக்காமல் அதன் மேல் தலை சாய்த்து நின்றாள்.

மனம் போகும் பாதை புரியாமல் தவித்தவளுக்கு, என்னவோ ஒவ்வாத நிலை.

“கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று அரசன் கேட்டதை நினைவில் கொண்டு வந்தவள், ‘அப்படி நான் வேணாம்னு சொல்லிட்டா வேற பொண்ண பார்ப்பியா?’ என்று தனக்குள் கேட்டாள்.

“வேறு என்ன செய்வான்? நீ மறுத்து விட்டால் வாழாமல் இருந்துவிடுவானா?” என்று மனசாட்சி கேட்க, வைசாலிக்கு அது சரியாகவே தோன்றியது.

‘நாம கல்யாணத்துக்கு ஒத்துக்கல. வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறாங்க. ஹாப்பியா விஷ் பண்ணிட்டு சந்தோசமா இருக்காம ஒரு மாதிரி எரிச்சலா வருதே..’ என்று நினைத்தவளுக்கு அரசன் மீது கோபமும் வந்தது.

‘என் கிட்ட ஒரு வருசமா பேசல. இந்த கல்யாண விசயத்தையும் ஆண்ட்டி தான் சொல்லுறாங்க. அப்ப நான் முக்கியமில்ல?’ என்று நினைத்தவள், வேகமாக கைபேசியை எடுத்து அரசனை அழைத்தாள்.

அது நள்ளிரவு தூங்கியிருப்பான் என்ற எண்ணமெல்லாம் வந்தாலும், இப்போதே திட்ட வேண்டும் போல் இருந்தது.

அறையை விட்டு வெளியே வந்தவள், கைபேசியை காதில் வைத்தபடி லிஃப்ட் நோக்கிச் சென்றாள்.

இரவு நேரத்திலும் அந்த ஹோட்டலில் பணி செய்பவர்களின் நடமாட்டம் இருந்தது.

முதலில் அழைப்பு முழுதாக சென்று நிற்கும் வரை, அரசன் எடுக்கவில்லை.

மீண்டும் அழைத்துக் கொண்டே லிஃப்டை விட்டு வெளியே வந்தவள், அந்த ஹோட்டலின் உணவு பகுதிக்குள் நுழைந்தாள்.

அழைப்பு முடியும் நேரம் அரசன் ஏற்றான்.

“லாலி.. என்ன இந்த நேரத்துல?” என்று தூக்கம் கலையாமல் பேச, “எனக்கு உன்னை திட்டனும். கேட்டுட்டு அப்புறமா தூங்கு” என்று பல்லைக்கடித்தாள்.

அரசனுக்கு தூக்கம் பறந்து விட்டது. நேரத்தை ஒரு நொடி பார்த்து விட்டு, “திட்டு” என்றவன் குரலில் சிரிப்பிருந்தது.

வைசாலி வாயைத்திறக்கும் முன், வெயிட்டர் வந்து நின்றான்.

“ஆர்டர் மேடம்” என்று நிற்க, “ஒரு காபி” என்றாள்.

“இன்னேரத்துல காபியா?” என்று அரசன் கேட்க, “என் இஷ்டம்” என்றவள் குரலில் ஆவேசம்.

‘ஓஹோ.. இன்னைக்கு தூங்காம திட்டு வாங்க தயாராகிடுடா அரசா’ என்று நினைத்து எழுந்து அமர்ந்தான்.

இரவு நேரத்தில் நிறைய ஆட்கள் அங்கு இல்லை. வைசாலியோடு சேர்த்து வெறும் மூவர் தான் அமர்ந்து இருந்தனர்.

வைசாலி உடனே ஆரம்பிக்கவில்லை.

“லாலி..”

“வைசாலி.. கால் மீ வைசாலி.. எவ்வளவு திமிர் இருந்தா மெஸேஜ்ல வைசாலினு அனுப்பி இருப்ப நீ?”

“ஒரு ஃப்ளோவ்ல..”

“சட் அப் மேன். நான் பேசுறத மட்டும் கேளு. இனிமே லாலினு கூப்பிட்ட பல்ல பேத்துடுவேன்”

“அய்யய்யோ..”

“உனக்கு தோனுறப்போ லாலினு சொல்லுவ. இல்லனா வைசாலி டாக்டர்னு பேசுவ. என்ன உன் பிரச்சனை?”

“எதுவும் இல்லையே”

“இருக்கு.. சொல்லு. அதென்ன.. உனக்கு என்னை அவாய்ட் பண்ணுறது அவ்வளவு ஈசியா இருக்கு?”

“லாலி..”

“கூப்பிடாத.. பிச்சுடுவேன். ஒன்னு என் பேர கூட சொல்லாம அவாய்ட் பண்ண வேண்டியது. இல்லனா என் கிட்ட பேசாம என்னையே மொத்தமா அவாய்ட் பண்ண வேண்டியது. அவ்வளவு திமிரா உனக்கு?”

“சாரி..”

“தூக்கி கடல்ல போடு. சாரியாம் சாரி.. பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு சாரி.”

அவள் பொரிந்து தள்ளிக் கொண்டிருக்கும் போதே காபியை கொண்டு வந்து வைக்க, “தாங்க்ஸ்” என்று எடுத்துக் குடித்தாள்.

“தாங்க்ஸா?” என்று அரசன் இழுக்க, “உனக்கில்ல..” என்று எரிந்து விழுந்தாள்.

“ஓகே ஓகே..” என்று அரசன் இறங்கி வந்தான்.

“என்ன ஓகே? எனக்கு நாட் ஓகே. மனுசனா நீ? சொன்ன சொல்ல காப்பாத்துனியா நீ?”

“நானா? என்ன சொன்னேன்?”

“சொன்னத கூட மறந்துட்டியா?”

“நடு ராத்திரி எழுப்பி விட்டு இப்படி சண்டை போட்டா, எது தான் ஞாபகம் இருக்கும்?”

“எனக்கு இப்ப தான் சண்டை போடனும்.”

“என்னால முடியல லாலி.. என்ன சொன்னேன்னு நீயே சொல்லேன்”

“நான் உன் ப்ரப்போசல ரிஜெக்ட் பண்ணிட்டா, நம்ம ஃப்ரண்ட்ஸிப்க்கு பிரச்சனை வராதுனு சொன்னல? அப்பறம் ஏன் என் கிட்ட பேசல? ஒருவருசமா பேசல”

அரசன் மௌனம் காக்க, “பதில் சொல்லு..” என்று அதட்டினான்.

அத்தனை பேசி நாவரண்டு போக, காபி ஒரு பக்கம் உள்ளே போய்க் கொண்டிருந்தது.

“நான் வேலையா போயிருந்தேன்”

“உன் வேலைய பத்தி எனக்கு வேணாம். என் கிட்ட ஏன் பேசல? ஆன்ஸர் மீ?”

அதே இடத்தில் அவள் அசையாமல் நிற்க, அங்கு அரசன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான்.

One Comment

Leave a Reply