வரம் 18

Loading

அரசனும் பார்த்தசாரதியும் ஒன்றாக உள்ளே வர, வைசாலி தனியாக நின்றிருந்தாள்.

பார்த்தசாரதியை பார்த்ததும் அடையாளம் தெரிந்திருந்தது. அஞ்சனாவின் திருமண ஆல்பத்தில் எல்லோரையும் பார்த்து இருந்தாள்.

பார்த்தசாரதி தான் வைசாலியை நன்றாக பார்த்தான். அவனுக்கு வைசாலியின் பெயர் தெரிந்திருந்ததே தவிர, முகத்தை பார்த்ததில்லை.

“இவங்க யாரு மாமா?” என்று மணிகர்ணிகா அரசனிடம் வைசாலி பக்கம் கை நீட்டி கேட்க, “இவங்க..” என்று இழுத்து விட்டு, “உனக்கு அத்தை” என்றான்.

வைசாலி அவனை முறைத்து விட்டு, “அத்தையா? எந்த வகையில?” என்று கேட்டு வைத்தாள்.

“”எல்லா வகையிலயும்”

“எதாவது ஒன்னு சொல்லுங்க”

“எனக்கு தங்கச்சி வகையில.. ஏன் டாக்டர் எனக்கு தங்கச்சியா இருக்க மாட்டீங்களா?” என்று பார்த்தசாரதி வர, அரசன் புருவம் உயர்த்தி, “எப்படி?” என்று பார்த்து வைத்தான்.

பார்த்தசாரதியும் அரசனும், அவளது பாவனையில் எழுந்த சிரிப்பை அடக்கினர்.

ஒரு நொடி வைசாலி திருதிருத்து விட்டு, “இருக்கலாமே.. ஆனா நல்லா யோசிச்சுக்கோங்க.. என்னை தங்கச்சினு சொன்னா நான் சொத்துல பங்கு கேட்பேன்” என்று சிரித்தாள்.

“என்னோட ஓனர் கிட்ட தான்மா இத நீ பேசனும். சொத்தெல்லாம் அவங்க டிப்பார்ட்மெண்ட்” என்றவன் சிரிப்போடு அஞ்சனா பக்கம் சென்று விட்டான்.

“மணி அத்தைக்கு ஹாய் சொல்லு” அரசேந்திரன்.

“ஹாய் அத்த..” என்று மணிகர்ணிகா மாமன் சொல்லிக் கொடுத்தபடி கையாட்ட, “ஹாய் மணிகர்ணிகா..” என்று வைசாலி புன்னகைத்தாள்.

“என் பேரு தெரியுமா?”

“தெரியுமே.. உங்களயே தெரியும் எனக்கு. நீங்க தான் மறந்துட்டீங்க”

“மணி.. உனக்கு ஊசி போட்ட டாக்டர் இவங்க தான்” என்று அரசன் எடுத்துக் கொடுக்க, மணி பயந்து விட்டாள்.

“ஊசி போடுவாங்களா?” என்று கேட்டு வேகமாக மாமன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

அரசனை முறைத்த வைசாலி, “நான் ஊசி போடல.. நர்ஸ் தான் போட்டாங்க மணி. நான் ஊசி எல்லாம் போட மாட்டேன்” என்றாள்.

“நிஜம்மா?”

“நிஜம்மாடா.. உங்க மாமா பேட்.. பொய் சொல்லுறார். இவருக்கு தான் இப்போ பொய் சொல்லுறதுக்கு வாய்ல ஊசி போடனும்”

மணி இதைக்கேட்டு சிரிக்க, “உனக்கு யாராவது என்னை டேமேஜ் பண்ணா குதூகலமா இருக்குமே” என்று அரசன் மணியின் கன்னத்தை கிள்ளி வைத்தான்.

“என் கிட்ட வர்ரீங்களா?” என்று வைசாலி கை நீட்ட, “ஊசி போடலனா வர்ரேன்” என்றாள்.

“போடமாட்டேன்” என்றதுமே மணி வைசாலியிடம் தாவ, அதில் வைசாலி தடுமாறினாள்.

அரசன் வைசாலியை ஒருகையால் அணைத்து பிடித்துக் கொண்டு, மணிகர்ணிகாவை அவளிடம் கொடுத்தான். கொடுத்த உடனே விலகி விட்டான்.

ஆனால் அந்த நொடி நேர செயலை, அத்தனை பேரும் பார்த்திருந்தனர்.

அதை இருவரும் கவனிக்கவில்லை.

“என்ன படிக்கிறீங்க?”

“செகண்ட் ஸ்டாண்டர்ட்”

“நல்லா படிப்பீங்களா?”

“நீங்க ஏன் ங்க ங்கனு சொல்லுறீங்க?”

“ஏன்? சொல்லக்கூடாதா?”

“அம்மா அப்பா மாமா எல்லாம் மணி தான் சொல்லுவாங்க.”

“அவங்கள பொறுத்த வரை நீங்க சின்ன பொண்ணு.. ஆனா எனக்கு அப்படி இல்ல. நீங்க பிக் கேர்ள்.. மணி பிக் கேர்ள் தான?”

“ஆமா” என்றவள் சந்தோசமாக வைசாலியின் கழுத்தை கட்டிக் கொண்டு, அவளது கன்னத்தில் கன்னம் வைத்து உரசினாள்.

அதைப்பார்த்த அரசனின் முகத்தில் புன்னகை விரிந்தது.

“அத்தைய பிடிச்சுருக்கா மணி?” அரசேந்திரன்.

“ரொம்ப பிடிச்சு இருக்கு”

“இங்கயே வச்சுப்போமா?”

“ம்ம்” என்று அவள் பலமாக தலையாட்ட, வைசாலி இதைக்கேட்ட பின் அரசனை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

“டாக்டர் அத்த இங்கயே இருங்க”

“நான் டாக்டர் அத்தை இல்ல மணி.. என் பேர் லாலி.. லாலி அத்த சொல்லு பார்ப்போம்”

சட்டென அரசனின் புன்னகை மறைந்து, அவளை முறைத்து வைத்தான்.

“லாலி அத்தை” என்று மணிகர்ணிகா கூப்பிட்டு வைக்க, “லாலி இல்ல.. வைசாலி.. சாலி அத்தை சொல்லு மணி” என்று திருத்தினான்.

வைசாலிக்கு இப்போது சிரிப்பு வர, “லாலியா சாலியா?” என்று மணிகர்ணிகா குழம்பி விட்டாள்.

லாலி என்று யார் அழைத்தாலும் அரசனுக்கு பொறுத்துக் கொள்ள முடியாது.

“லாலினு கூப்பிடு தங்கம். அவர் கிடக்குறாரு..”

“ஓய் டாக்டரம்மா..” என்று அரசன் அதட்டினான்.

“”சொல்லுங்க போலீஸ் ஆபீசர்?”

“பிச்சுடுவேன். சாலினு சொல்லிக் கொடு”

இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்கும் போதே, பெரியவர்கள் மிகப்பெரிய விசயத்தை பேசி முடித்திருந்தனர்.

அரசன் வைசாலியை அணைத்ததை பார்த்து விட்டு, பார்த்தசாரதியின் பெற்றோர்கள் ஆச்சரியப்பட்டனர்.

அமுதவல்லி எல்லாவற்றையும் கவனித்து விட்டு, “இத பேசனும்னு தான் இருந்தேன். இப்பவே பேசிடலாம். சித்ரா உன் மகள என் மகனுக்கு கொடுப்பியா?” என்று பட்டென கேட்டிருந்தார்.

கேட்டதும் சித்ராவின் முகம் மலர்ந்து போனது.

“அண்ணே.. நீங்க சொல்லுங்க. உங்க மக வைசாலிய என் மகன் அரசனுக்கு கொடுப்பீங்களா?”

ஜோதிலிங்கம் மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு, “அவங்க ரெண்டு பேருக்கும் சம்மதம்னா எங்களுக்கு பூரண சம்மதம்மா” என்று கூறி விட்டார்.

பார்த்தசாரதியின் பெற்றோர்களும் இந்த பேச்சில் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் வைசாலியை பிடித்திருந்தது. வந்ததும் இரண்டொரு வார்த்தை பேசியிருந்தனர்.

அடுத்து கோவிலுக்கு சென்று வரலாம் என்று முடிவாக, பார்த்தசாரதியின் பெற்றோர்கள் பயணக்களைப்பில் மறுத்து விட்டனர்.

பெரியவர்கள் எல்லோரும் ஒதுங்கிக் கொள்ள, “நீங்க நாலு பேரும் மணியோட போயிட்டு வாங்க” என்று அமுதா முடித்து விட்டார்.

அஞ்சனா அறைக்குள் வந்ததும், “நம்ம கல்யாண நாள கொண்டாடலாம்னு சொல்லி கூப்பிட்டுட்டு, அடுத்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுறீங்க?” என்று பார்த்தசாரதி சிரிப்போடு கேட்டதும் சலித்துக் கொண்டாள்..

“இப்பவாவது பேசுனாங்களே.. இன்னும் இழுத்துட்டே இருக்காம”

“அரசனுக்கு ஓவர் பொறுமை..”

“ம்க்கும்.. இதுல மட்டும் தான் பொறுமைய கொஞ்சம் அதிகமா காட்டுறான். நீங்க ஃப்ரஸ்ஸாகுங்க. நான் மணிய கூட்டிட்டு வர்ரேன்” என்று அஞ்சனா வெளியே வந்தாள்.

அரசனும் வைசாலியும் ஆளாளுக்கு ஒரு பெயரை சொல்லி மணிகர்ணிகாவை குழப்பிக் கொண்டிருக்க, “இங்க என்ன ஆர்கியூமெண்ட் ஓடுது?” என்று அஞ்சனா வந்து நின்றாள்.

“ம்மா.. இவங்க லாலியா? சாலியா?”

“ரெண்டும் இல்லையே.. வைசாலி” என்று அஞ்சனா அவள் பங்குக்கு சொல்ல, மணிகர்ணிக்கா மொத்தமாய் குழம்பி விட்டாள்.

“அடப்போங்கயா.. உங்க பேரே வேணாம்” என்று அவள் தலையில் அடிக்க, மூவருக்குமே சிரிப்பு வந்து விட்டது.

“ஆமா பேரே வேணாம். அத்தைனு கூப்பிடு போதும். வா கோவிலுக்கு கிளம்பனும். ட்ரஸ் மாத்திக்க. நீங்களும் போய் ரெடியாகுங்க” என்று கூறி விட்டு, மகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

பயணக்களைப்பு தீர குளித்து முடித்து கிளம்பி வர, மற்றவர்களும் வந்து விட்டனர்.

“அம்மன் கோவில் பக்கத்துல தான் இருக்கு. அங்க போயிட்டு வரலாம்” என்று அஞ்சனா கூற, நால்வரும் காரில் ஏறிக் கொண்டனர்.

மணிகர்ணிகா அஞ்சனா பார்த்தசாரதி மூவரும் பின்னால் அமர, வைசாலி அரசனோடு முன்னால் அமர்ந்து கொண்டாள்.

பேச்சும் சிரிப்புமாக கோவிலுக்கு சென்று சேர்ந்தனர்.

காரை விட்டு இறங்கியதும், மணிகர்ணிக்கா அரசனிடம் வந்து விட்டாள்.

“விவரம்.. யாரு கேட்தெல்லாம் வாங்கி தருவாங்களோ அவங்க கிட்ட வந்துடுறது” என்று அரசன் மருமகளை கோபமாக பார்த்தான்.

“ஹிஹி.. மாமா ஐஸ்” என்று அருகே இருந்த ஐஸ் வண்டி பக்கம் கை காட்டினாள்.

“முதல்ல சாமி கும்பிடுவோம். அப்புறமா உங்கம்மா கிட்ட கேட்டுட்டு ஐஸ் வாங்குவோம்” என்று உள்ளே அழைத்துச் சென்று விட்டான்.

மாலை நடந்த அலங்காரத்துடன் அம்மன் காட்சயளிக்க, எல்லோரும் கண்மூடி நின்று தங்களது வேண்டுதல்களை முன்வைத்தனர்.

மணிகர்ணிக்கா  பொறுக்காமல் ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடிக்க, அஞ்சனா மகளை அதட்ட ஆரம்பித்தாள்.

“மணி என் கூட வா. பிரகாரம் சுத்தலாம்” என்று வைசாலி தான் அவளை திசை திருப்பி அழைத்துச் சென்றாள்.

ஊரில் இருந்த சொந்தங்கள் சிலர் அஞ்சனா அரசனை பிடித்து பேச ஆரம்பிக்க, பார்த்தசாரதி வெளியே சென்று விட்டான்.

பிரகாரம் சுற்றி முடிக்கும் போது, “நீ அமுதா வீட்டுக்கு வந்த புள்ள தான?” என்று ஒரு பெண்மணி நிறுத்தினார்.

திரும்பிப் பார்த்த வைசாலிக்கு யாரென்று தெரியவில்லை.

“நம்ம அஞ்சனாவோ ஃப்ரண்டுனு வந்தியே.. போன தடவ பார்த்தோமே?”

“ஓஓ.. சாரிங்க மறந்துட்டேன்”

“நல்லா இருக்கியாமா? அம்மா நல்லா இருக்காங்களா?”

“நல்லா இருக்காங்க” என்றவள் அங்கும் இங்கும் ஓடிய, மணிகர்ணிகாவை தூக்கிக் கொண்டாள்.

“அஞ்சனா மக தான?” என்று கொஞ்சி விட்டு, “எங்க அரசனுக்கும் நிச்சயம் பண்ணபடி கல்யாணம் நடந்து இருந்தா, இன்னோரம் இதே மாதிரி ஒரு புள்ள இருந்திருக்கும்” என்றார்.

“அரசனுக்கா?”

“ஆமா.. அரசனுக்கும் எங்க மீனாவுக்கும் பல வருசத்துக்கு முன்னாடியே பேசி வச்சாச்சு. இன்னும் நாள் தள்ளிப்போய்கிட்டே இருக்கு. எப்ப நல்ல நேரம் வருமோ?” என்று இழுத்தார்.

அவரது பேச்சில் வைசாலி அதிர்ந்தாலும், கூடவே யோசனையும் வந்தது.

‘அப்படி எல்லாம் அரசன் கிடையாதே? இந்தம்மா பொய் சொல்லுதா?’ என்ற யோசனை தான் அதிர்ச்சியையும் தாண்டி முன்னால் வந்தது.

ஆனால், அடுத்த ஒரு பெண்மணி வந்து விசயத்தை உறுதிப்படுத்தினார். தங்கமீனாட்சிக்கும் அரசேந்திரனுக்கும் திருமணம் செய்து வைப்பதாக, பல வருடங்களுக்கு முன்பே பெரியவர்கள் பேசி வைத்திருக்கிறார்களாம். அரசன் காவல்துறை வேலையில் சேர்ந்ததால், தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறதாம்.

இருவரும் ஒன்று போல் சொல்லி விட்டு, மூன்றாவது ஒரு பெண்ணையும் அழைத்து அதையே சொல்ல வைத்தனர்.

‘இது சரியில்லயே’ என்று தான் வைசாலிக்குத் தோன்றியது.

ஆனாலும் முகத்தில் எதையும் காட்டாமல், “அப்படியா?” என்று கேட்டு வைத்தாள்.

“மணி..” என்று அஞ்சனா தேடி வந்து விட, “அம்மா..” என்று மணி இறங்கி ஓடினாள்.

“நானும் கிளம்புறேங்க” என்று பொதுவாக சொல்லி விட்டு, வைசாலியும் விறுவிறுவென நடந்து விட்டாள்.

அங்கிருந்து கிளம்பி வீடு வந்த பின்னும், வைசாலிக்கு யோசனை ஓடிக் கொண்டே இருந்தது.

“இப்படி ஒரு பொண்ண நிச்சயம் பண்ணிருக்கதா ஆண்ட்டியும் சொல்லல. அரசனும் சொல்லல.. ஒருவேளை பொய்யா? பொய்னா நான் இவங்க கிட்ட கேட்பேன்னு அவங்க யோசிக்க மாட்டாங்களா?”

தனக்குத்தானே பேசிக் கொண்டு, அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். உள்ளே வந்த சித்ரா அவளை யோசனையாக பார்த்தார்.

“என்ன சாலி? ஏன் இப்படி நடந்துட்டு இருக்க?” என்று கேட்டதும், “ஒரு டவுட்.. அரசன் கிட்ட பேசிட்டு வர்ரேன்” என்று வேகமாக வெளியேறி விட்டாள்.

அரசனின் அறை வீட்டிற்கு பின்பக்கம் தனியாக இருந்தது.

கதவு திறந்து கிடக்க, வேகமாக அவனை நோக்கி வந்தாள்.

“கிங் யாரு தங்கமீனாட்சி?”

நேரடியாக விசயத்துக்கு வர, “தங்கமீனாட்சியா? அந்த பொண்ண எங்க பார்த்த நீ?” என்று கேட்டான்.

“நான் பார்க்கல. ஆனா அந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் தான் கல்யாணம் பேசியிருந்தாங்களாமே?”

“அப்படினு உனக்கு யாரு சொன்னா?”

“யாரு சொல்லனும்? ஊரே சொல்லுது. உண்மையா இல்லையானு மட்டும் சொல்லுங்க”

“ஊரே சொல்லுச்சா? இல்ல ஒரு மூணு நாலு லேடிஸ் மட்டும் சொல்லுறாங்களா?”

அரசன் அலட்டிக் கொள்ளாமல் கேட்க, வைசாலி ஆச்சரியப்பட்டாள்.

“ஆமா.. மூணு லேடிஸ் தான் சொன்னாங்க”

“இதை பத்தி இப்பவே பதில் வேணுமா?” என்று அரசன் கேட்க, வைசாலி புரியாமல் பார்த்தாள்.

“நாளைக்கு பேசலாமா? அவ்வளவு நம்பிக்கை இருக்கு தானே?” என்று அரசன் சிரிக்க, அப்போது தான் கவனித்தாள் அரசன் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான்.

வைசாலி உள்ளே வரும் போதே அரசன் கிளம்பிக் கொண்டு தான் இருந்தான். அவள் தான் கவனிக்கவில்லை. அவளது கேள்விக்கு அலட்டிக் கொள்ளாமல் பேசி விட்டு, கார் சாவியை எடுத்துக் கொள்ள, “வெளிய கிளம்பிட்டீங்களா?” என்று விசாரித்தாள்.

“ம்ம். மதுரை போயிட்டு நாளைக்கு மார்னிங் வந்துடுவேன்”

“இங்க பங்சன்?”

“மார்னிங் தான? வந்துடுவேன் அதுக்குள்ள..” என்று அரசன் அறையை விட்டு வெளியேற, வைசாலி பின்னால் வந்தாள்.

அன்னையிடம் விசயத்தை சொல்லி விட்டு, “மார்னிங் வந்துடுவேன்மா.. பார்த்துக்கோங்க” என்றான்.

“சரிபா. காலையில கிளம்பும் போது போன் பண்ணு” என்று அமுதா முடித்துக் கொள்ள, வேகமாக வாசலை நோக்கிச் சென்றான்.

கதவருகே சென்றவன் திரும்பிப்பார்க்க, வைசாலி அவனை பார்த்துக் கையாட்டினாள். அதில் புன்னகை மலர கிளம்பிச் சென்றான்.

“அரசன் எங்கமா போறான்?” என்று அஞ்சனா கேட்க, “எதோ வேலையாம் வந்துடுவான்” என்று பொதுவாக சொல்லி முடித்துக் கொண்டார்.

அரசன் கிளம்பிச் சென்று விட்டாலும், வைசாலியின் மனதில் சில யோசனைகள் ஓடிக் கொண்டே இருந்தது.

“அரசனுக்கு நிச்சயம் செய்தவள் தங்கமீனாட்சி” என்ற வார்த்தை மனதில் குடைந்து கொண்டே இருக்க, “அவ்வளவு தான? பார்த்துக்கிறேன்” என்றவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

Leave a Reply