Episode 12
![]()
சூரியனை வரவேற்று நிலவு விடைபெற்று விட, இருளாக இருந்த வானம் நீல நிறத்தை பூசிக் கொண்டது. வழக்கமான நேரத்தில் துயில் கலைந்து எழுந்த செழியன், கையணைப்பில் படுத்திருந்த சுலோக்ஷனாவை பார்த்தான். தூக்கத்தில் புரண்டு அவன் புறம் திரும்பி இருந்தாள்.
கண்ணை மூடி குழந்தையாய் தூங்குபவளை மனம் நிறைய ரசித்துக் கொண்டிருந்தான். அவனது காதல் நெஞ்சை திமிரால் தட்டி எழுப்பியவள், கை வளைவில் இருக்கிறாள். இதை விட வேறு என்ன வேண்டும்?
கலைந்திருந்த முடியை சரி செய்தவன், அவளை அணைத்துக் கொண்டு சில நிமிடங்கள் அப்படியே கிடந்தான். மனம் நேற்று நடந்ததை பற்றி அலசிக் கொண்டிருந்தது.
தன்னையும் மீறி அவளது இதழின் சுவையறிந்த தருணம் தித்திப்பாய் மனதில் எழ மீண்டும் சுவைக்க சொல்லி மனம் ஏங்கியது.
“இப்படிலாம் ஆச படுறது தெரிஞ்சா உன்னை என்ன நினைப்பா? அடக்கி வாசி செழியா” என்று மனம் அதட்ட, தன்னை மீட்டுக் கொண்டான்.
அவளை மெத்தையில் படுக்க வைத்து விட்டு எழுந்தவன், காலை கடன்களை முடித்து விட்டு அறையை ஒட்டி இருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்து கொண்டான்.
செழியன் எழுந்து சென்று ஒருமணி நேரம் கழித்து சுலோக்ஷனா கண் விழித்ததாள். முழித்ததும் சுற்றி இருந்த அறையை பார்த்து குழம்பி போனாள். என்ன இடம் இது? என்பது போல் பார்த்தவளின் மூளையில் மணியடித்தது. அப்போது தான் அவளுக்கு திருமணமானது ஞாபகம் வந்தது. அவசரமாக எழுந்தாள்.
செழியன் அருகில் இல்லை என்பதே போதுமானதாக இருந்தது. தன் உடமைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள். குளித்து முடித்து தயாராகி அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு, அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.
செழியன் எங்கு இருக்கிறான்? என்றும் தெரியவில்லை. அறைக்குள் இருந்த மூன்றாவது கதவை திறந்து சென்றாள். அது செழியன் உடற்பயிற்சி செய்யும் இடம். சுற்றி காற்று பலமாக அடித்தது. காற்றோட்டமான பகுதியில் அமைந்து இருந்த ஜிம் மை வாயை பிளந்து பார்த்தாள்.
“வாவ்” என்ற அவளது சத்தத்தை கேட்டு ஓடிக் கொண்டிருந்த செழியன் திரும்பி பார்த்தான்.
“எப்படி இப்படி? சூப்பரா இருக்கு இந்த இடம்” என்றவள் சன்னலை நோக்கி சென்றாள்.
பெரிய பெரிய சன்னல்கள். காற்று உள்ளே வர எந்த தடையும் இல்லை. வீட்டின் பின்பக்கமாக அமைந்திருப்பது வேறு இன்னும் வசதியாக இருந்தது. முகத்தில் மோதிய காற்றை ஆழ்ந்து சுவாசித்தாள்.
“சுத்தமான காற்றோட்டத்துல தான் ஓடனும். இருக்க வேலைக்கு பீச் பக்கம் போக டைம் இல்ல. இந்த இடத்துல இயற்கை காற்று தான் வருது. சோ இங்கயே செட் பண்ணிட்டேன்”
“பரவாயில்லையே மளிகை கடக்காரருக்கும் மூளை இருக்கே” என்று சுலோக்ஷனா சொல்ல, செழியன் முறைத்து பார்த்தான்.
“ஓய்… என்ன நக்கலா?” என்று கேட்க, அவள் கண்டுகொள்ளாமல் நின்று இருந்தாள்.
தூரமாக தெரிந்த கடலை ரசித்துக் கொண்டிருக்க, படுக்கையறையில் அவளது கைபேசி இசைத்தது. வேகமாக வெளியேறி விட்டாள். அழைப்பை ஏற்று, “ஹலோ நந்து” என்று பேசும் போதே கண்கலங்கி விட்டது. அடுத்த வார்த்தை வராமல் நின்று விட்டாள்.
“ஸ்பீட் பேபி ஜூஸ் சாப்டியா? என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட?”
அன்னை தரும் பழச்சாறுக்காக மனம் ஏங்க தான் செய்தது. உண்மை நிலையை மனதில் நிறுத்தி, “இன்னும் கீழ போகல. நீங்க எல்லாம் எந்திரிச்சுட்டீங்களா? அப்பா எங்க?” என்று கேட்டாள்.
“எல்லாம் டையர்ட்டாகி நல்லா தூங்குறாங்க. உன் கிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன். அத்தான் எங்க?”
“ஜிம்ல இருக்கார்.. இரு கொடுக்குறேன்”
வேகமாக வந்து அவனிடம் போனை நீட்ட, “யார்?” என்பது போல் புருவத்தை உயர்த்தினான். “நந்து” என்றாள் வாயசைவில்.
“ஹாய் நந்து” என்று பேச ஆரம்பித்து விட்டான்.
வந்ததிலிருந்து அந்த அறையை மட்டுமே பார்த்திருந்தவள், இப்போது தான் செழியனை கவனித்தாள். கையில்லாத பனியனும் ட்ராக் பேன்ட் மட்டும் தான் அணிந்து இருந்தான். ஓடியதிலும் உடற்பயிற்சி செய்ததிலும் வியர்வை வழிந்து ஓடியது.
சன்னல் பக்கத்தில் சென்று நின்றவன், தலையை கோதிக் கொண்டே நந்தனிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தான். அந்த உருவம் அழுத்தமாக சுலோக்ஷனாவின் மனதில் பதிந்து போனது.
இருவரும் ஒன்றாகவே இறங்கி வந்தனர். சுலோக்ஷனா சமையலறைக்குள் புகுந்து கொள்ள, செழியன் கையில் செய்தித்தாளை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து விட்டான்.
*.*.*.*.*.*.
“டேய் அந்த நிவி பத்தி முழுசா டீடெயில் கேட்டு இருந்தேன். இன்னும் என்னடா பண்ணுறீங்க?” என்று தினகரன் கைபேசியில் யாரிடமோ கத்திக் கொண்டிருந்தான்.
சாதாரணமாக தான் அவளை நினைத்து இருந்தான். காலையில் செய்தித்தாளில், தலைப்பு செய்தியாக இவளை பார்த்ததும் தான் அவளது உயரம் பெரியது என்பது புரிந்தது.
அவளை பற்றிய முழு விவரமும் அவனுக்கு தேவைப் பட்டது. காலையிலேயே விசாரிக்க சொல்லி விட்டான். இப்போது வரை செய்தி வராதது கடுப்பாக இருந்தது. சாதாரண ஆள் என்றால் கிடைத்துவிடும். சுலோக்ஷனாவை சுற்றியுள்ள பாதுகாப்பு இரும்பை விட பலமானது. அதை தாண்டி விசாரிக்க முடியாமல் அவனது ஆள் திணறிக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாக அன்று மாலை அவன் வேண்டிய விவரங்கள் வந்து சேர்ந்தது. நித்தின் ஜானவியின் மகள் என்று இருக்க, நித்தினை பற்றி விசாரித்துக் கொண்டான். அவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவள் ஏன் சாதாரண வேலையை செய்ய வேண்டும்? என்று அவனுக்குப் புரியவில்லை.
அவளது உடன் பிறப்புகளுடன் விரேந்திரனை பார்த்து அதிர்ச்சியாகி நின்றான். இவனுடைய சட்டவிரோதமான அத்தனை தொழிலுக்கும் தொல்லையாக இருப்பவனாசயிற்றே விரேந்திரன். இவனிடம் மட்டும் நிவி கேட்டு விட்டால்? என்ன முயன்றாலும் அவனது தொழிலை காப்பாற்ற முடியாமல் போய்விடும்.
அவள் அமைதியாக இருப்பது இது வரை கேட்கவில்லை என்பதை உறுதி செய்தது. இந்த விசயத்தில் நிம்மதி பெருமூச்சு விட்டான். ஆனால் அந்த நிம்மதிக்கு நிவி அப்போதே குழிதோண்ட ஆரம்பித்து இருந்தாள்.
தன்னுடைய எதிரி வீட்டு மகளிடம் தன்னுடைய கருப்பு பக்கம் சிக்கி இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய ஆபத்து? பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான். இதில் செல்வம் குடும்பத்தில் வேறு இணைந்து விட்டாள்.
மொத்தத்தில் அவளது முடியை கூட அவனால் தொட முடியாது. இத்தனை பலம் இருக்கும் திமிரில் தான் இவ்வளவு ஆட்டமாடுகிறாள். அதை ஒடுக்கியாக வேண்டும் என்று முடிவெடுத்தவன், யாருக்கோ அழைப்பு விடுத்தான்.
“அடுத்த ஒரு வாரத்துக்கு இவ என்ன பண்ணுறானு வாட்ச் பண்ணுறது தான் உன் வேலை” என்று உத்தரவு பிறப்பித்து விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான்.
திடீரென அவனது காலை கட்டிக் கொண்டது இரு பிஞ்சு கரங்கள். குனிந்து பார்த்தவனின் முகம் கனிந்து விட்டது. அள்ளி எடுத்துக் கொண்டவன், இரண்டு கன்னங்களிலும் முத்திமிட்டான்.
“அம்முலு பாப்பா அப்பாவ தேடி வந்தீங்களா?” என்று கேட்க, குழந்தை அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.
முதுகைத் தட்டிக் கொடுத்தவன் திரும்பி பார்க்க, சாப்பாடு கிண்ணத்துடன் நின்றிருந்த மனைவியை பார்த்தான். பார்த்த நொடி முகத்தில் இருந்த கனிவு விடை பெற்று விட, “என்ன?” என்று எரிச்சலாக கேட்டான்.
“பாப்பா காலையிலையும் ஒழுங்கா சாப்பிடல. இப்போவும் ஓடுறா” என்றாள் அவளுக்கே கேட்காத குரலில். அதை கேட்டவன் மகளிடம் திரும்பி, “ஏன்மா சாப்பிட மாட்டேங்குறீங்க? சாப்பிட்டா தான அப்பா மாதிரி வளர முடியும்” என்று கொஞ்சினான்.
“பருப்பு சாதம் வேணா” என்று முகத்தை திருப்பினாள் குழந்தை.
“அப்படிலாம் சொல்ல கூடாது. பருப்பு சாதம் இப்போ சாப்பிடுவீங்களாம். நாளைக்கு பாப்பாக்கு பிடிச்ச பாயாசம் செஞ்சு தருவாங்களாம்” என்று கூற, சினுங்கினாலும் சாப்பிட சம்மதித்து விட்டாள் குழந்தை.
கீழே இறங்கி அன்னையிடம் ஓடிய தன்னுடைய நான்கு வயது குழந்தையை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆடு பலி கொடுக்கவாம். குட்டி மட்டும் கொஞ்சுறதுக்காம்” என்று வழக்கம் போல் நினைத்தாலும், வெளியில் சொல்லவில்லை பவித்ரா. குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று விட்டாள்.
விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தான். அவனது அடுத்த நோக்கம் இந்த பாதுகாப்பிலிருந்து நிவியை வெளியே கொண்டு வர வேண்டும். அதன் பின் இருக்கிறது என்று கறுவிக் கொண்டான்.
அதே நேரம், சுலோக்ஷனா அவனது ஜாதகத்தை அக்குவேறு ஆணிவேராக அலசிக் கொண்டிருந்தாள். அவனது தொழிலை எடுத்தவள், சற்று நேரம் யோசித்தாள். இப்போதைக்கு விரேந்திரன் தான் அவளுக்கு உதவ முடியும்.
யோசிக்காமல் அழைப்பு விடுத்தாள்.
“ஹலோ மாமா?”
“என்ன பேபி.. கல்யாணமாகி அந்த வீட்டுல பிசியா இருப்பனு நினைச்சேன். ஈவ்னிங் கால் பண்ணலாம்னு இருந்தேன். நீயே பண்ணிட்ட. எப்படிடா இருக்க?” என்று அவன் நலம் விசாரித்தான்.
“நல்லா இருக்கேன் மாமா. அத்த யாழு சாலுலா என்ன பண்ணுறாங்க?” என்று சில நிமிடங்கள் பொதுவான பேச்சுக்கு பின், “மாமா எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் ” என்றாள்.
“என்ன பேபி?” என்று கேட்க, “தினகரன் பத்தி” என்றாள்.
“அவனா? அவன பத்தி உனக்கு ஏன்டா?”
“எனக்கு இப்போ ஒரு இன்ஃபர்மேஷன் கிடைச்சு இருக்கு” என்றவள் தனக்கு கிடைத்த தகவல்களை எல்லாம் சொல்லி முடித்தாள்.
“அவன் இதுக்கும் மேல பண்ணி இருக்கான்மா. என் கிட்ட சில விசயங்கள் இருக்கு அனுப்புறேன். என்ன ஹெல்ப் வேணும் அத சொல்லு. அவன புதைச்சுட்டு தான் அடுத்த வேலை” என்றான் விரேந்திரன்.
மளமளவென தனக்கு வேண்டியதை கேட்டாள். அவனும் எல்லாம் செய்து விடுவதாக உத்திரவாதம் அளித்து விட்டான்.
பேசி முடித்து அழைப்பை துண்டித்த நேரம், செழியன் அறைக்குள் நுழைந்தான். தன் வேலைகளில் மூழ்கி போன சுலோக்ஷனா அவனை கவனிக்கவில்லை.
செழியனுக்கு தான் பெரும் ஏமாற்றம். புதிதாக திருமணமான சந்தோசம் அவனது முகத்தில் இல்லாததை பெற்றோர்கள் கவனிக்க தொடங்கியதும், அறைக்குள் புகுந்து கொண்டான்.
‘இவளுக்கு நம்மல பத்தி அக்கறையே இல்லையா?’ என்று நினைக்கும் போதே, அவனது கர்வம் அடிபட்டது. எந்த இடத்திலும் இப்படி அவன் முக்கியத்துவம் வேண்டும் என்று நினைத்தது இல்லை. அப்படி கிடைப்பதை அவன் விரும்பவும் இல்லை. ஆனால் மனைவியிடம் எதிர் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
சட்டென தலை தூக்கியது ஈகோ. அவளாக தன்னிடம் வர வேண்டும். தானாக செல்ல கூடாது என்ற முடிவுக்கு வந்தவன், அவளை கண்டுகொள்ளாமல் இருக்க பழகினான். ஆனால் காதல் கொண்ட மனம் தவிக்க தான் செய்தது. அதை தலையில் தட்டி அடக்கி வைத்தான்.

Thank you sis open aagiduchu
Enjoy the reading