வரம் 22

Loading

தோப்புக்குள் நுழைந்து இரண்டு நிமிடம் கடந்தும், வைசாலி வாயைத்திறப்பதாக இல்லை.

“இன்னுமா மலையிறங்கல?” என்று அரசன் கேட்டதும் வைசாலி முறைக்க, “என்ன கோபம்?” என்று கேட்டான்.

“லூசா நீ? நேத்து ஒரு வார்த்தை பேசுனியா?”

“பேசுனேனே?”

“எங்க பேசுன? ஆளாளுக்கு கல்யாணத்த பத்தி பேசுறாங்க. நீ என் கிட்ட கேட்டியா?”

“நீ ஏன் ஊருக்கே சொன்ன? முதல்ல என் கிட்ட தான சொல்லி இருக்கனும்?”

“அது வேற கணக்கு. ஆனா விசயம் தெரிஞ்சதும் பேசுனியா? மாலைய கொடுக்குறாங்க வாங்கி போடுற. தாலிய கொடுத்தாலும் வாங்கி கட்டி இருப்பியா?”

“வேற வழி?”

பிடி கொடுக்காமல் பேசியவனை முறைத்தவள், கீழே தேடி பார்த்து ஒரு குச்சியை எடுத்தாள்.

“உன்ன..” என்று அடிக்க ஓங்க, அந்த குச்சியை பிடித்துக் கொண்டான்.

“என் மேல கோபப்பட்டு நோ யூஸ் லாலி.. நான் அப்ப கேட்டப்போவே நீ ஓகே சொல்லி இருந்தா, இந்த பிரச்சனை இருக்காது. நீ மாட்டேன்னு சொல்லிட்ட. இப்ப தான் எனக்கு ஒரு சான்ஸ் கிடச்சுருக்கு. லபக்குனு அத பிடுச்சுக்குவனா? இல்ல இப்பவும் உன் கிட்ட பர்மிஸன் கேட்பனா?”

“இதெல்லாம் நல்லா பேசு.. நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?”

“அப்படி எல்லாம் நம்ம வீட்டுல பண்ண மாட்டாங்க. நேத்து மாலை மாத்த சொன்னது, சின்னதா கோவில்ல வச்சு நிச்சயம் பண்ண மாதிரி இருக்கட்டும்னு தான்.”

குச்சியை வேகமாக தூக்கிப்போட்டு விட்டு, வைசாலி முகத்தை திருப்பிக் கொண்டு நடக்க, “இன்னும் நீ ஏன் ஊரெல்லாம் சொன்னனு சொல்லவே இல்லையே” என்று அவளோடு நடந்தபடி விசாரித்தான்.

“அது.. அந்த பொண்ணு பேரென்ன? மீனாட்சி.. அந்த பொண்ண உனக்கு நிச்சயமான பொண்ணுனு பேசுனாங்க. அது பிடிக்கல. உன் கிட்ட வந்து என்னனு விசாரிக்கலாம்னா நீ நம்பிக்கை அது இதுனு பேசிட்டு போயிட்ட. ஒரே கடுப்பு.”

“எதுக்கு?”

“நான் நம்பிக்கையில்லாம கேட்டேன்னு சொன்னியே அதுக்கு”

அரசன் அமைதியாய் நடக்க, “நான் நம்பிக்கை இல்லாம கேட்கல கிங். எனக்கு கூட தான் ஏற்கனவே ஒரு தடவ நிச்சயமாகி கல்யாணம் வரை போயிட்டு வந்துருச்சு. அது போல இதுவும் இருக்குமோனு நினைச்சு தான் கேட்டேன். நம்பிக்கை இருக்குலனு கேட்டதும் ஒரு மாதிரி ஆகிடுச்சு. அப்புறம் என்ன செய்யுறதுனு யோசிச்சுட்டு, உடனே அத்தை கிட்ட பேசிட்டேன். ஆனா அது மொத்த ஊருக்கும் பரவுச்சு பாரு.. ஆளாளுக்கு வந்து கேட்டப்போ, உள்ள பயந்து வெளிய கெத்தா காட்டிக்கிட்டேன். அப்பவும் ஒரு திருப்தி.” என்று நிறுத்தியவள் கண்ணில் மின்னல்.

அரசன் புருவம் உயர்த்த, “அந்த பொண்ணு நிச்சயமான பொண்ணா இருக்கலாம். ஆனா நான் பொண்டாட்டினு ஊரே சொல்லுதுல?” என்றவளின் வார்த்தைகளில் வெட்கமும் சந்தோசமும் போட்டி போட்டது.

அந்த சந்தோசத்தை பார்த்தவனுக்கு, அவளை அள்ளி அணைக்க ஆசையாக இருந்தது. வெறும் புன்னகையை சிந்தி அதை அடக்கினான்.

“அப்புறம்?”

“அப்புறம் என்ன அப்புறம்? நான் நினைச்சு பார்க்காத ஸ்பீட்ல எல்லாம் போயிட்டு இருக்கு. ஆனா நீ மட்டும் சைலண்டா இருக்க”

“முதல்ல என்ன சொல்லுறதுனு தெரிஞ்சா தான?” என்று அரசன் கையை விரிக்க, வைசாலி கேள்வியாக பார்த்தாள்.

“யோசிச்சு பாரேன்.. நான் விரும்புற பொண்ணு கேட்டும் வேணாம்னு சொல்லி, ஒரு வருசம் அவ கிட்ட பேசாம சுத்திருக்கேன். திடீர்னு ஒரு நாள் ஊரே அவள என் கிட்ட கொண்டு வந்து கொடுக்குது. எப்படி இருக்கும்?”

கேள்வியாய் நிறுத்த, வைசாலியின் முகத்தில் புன்னகை விரிந்தது.

“ஒரு சந்தோசம். அதுல பேச்சும் வரல.. பேசவும் தோணல. அந்த மூமண்ட் என்ஜாய் பண்ணனும்னு தோனுச்சு. பண்ணேன்.”

“போயா.. சப்பையா முடிச்சுட்ட”

“கண்ண மணியேனு காதல் வசனம் பேசுவேன்னு எதிர்பார்த்தியா?” என்ற அரசன் சிரித்து விட, வைசாலி முகத்தை திருப்பினாள்.

“பேசிட்டாலும்? நான் டிஸ்டர்ப் பண்ணுறேன்னு போனவரு தான? ஆமா கேட்கனும்னு இருந்தேன். நான் எப்படி உங்கள டிஸ்டர்ப் பண்ணேன்?”

“மறுபடியும் மரியாதை வருதே?” என்று சிரிப்போடு கேட்க, “நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க கிங்” என்றாள்.

“டிஸ்டர்ப் பண்ணுறத எப்படி சொல்லுறது?”

“எப்படி டிஸ்டர்ப் பண்ணேன்? என்ன ஆச்சு? அதெல்லாம்?”

அவள் கேட்பது புரிந்தாலும், “அதெல்லாம் சொல்ல முடியாது லாலி.. அது ஃபீலிங்” என்றான்.

“சமாளிப்பு”

“நீ இத விடேன். நான் மீனாட்சி பத்தி வந்து சொல்லுறேன்னு சொன்னேன். நீ அதை கேட்கவே இல்லையே?”

“ஆமால.. சரி யாரு அந்த பொண்ணு? சொல்லுங்க”

“சீரியஸா? நீ ஆர்வமா கேட்கலையா?”

“ஆர்வமா தான் கேட்குறேன்”

“இல்லையே.. ஏய் நீ என்னை லவ் பண்ணுறியா?”

“கிங் பேச்ச மாத்தாதீங்க”

“நோ நான் கரெக்ட்டா தான் கேட்குறேன். உனக்கு அந்த மீனாட்சி யாருனு தெரிஞ்சுக்க ஆர்வம் இல்ல. அவள என் பேரோட சேர்த்து பேசுனாங்கனு பொறாமை இல்ல.”

“பொறாமை இல்லாம தான் ஊரே சொல்ல வச்சனாக்கும்?” என்று வைசாலி முறைக்க, “அப்போ நீ ஆர்வமா என்னனு கேட்கவே இல்லையே?” என்று கேட்டான்.

“தோணல. அந்த பொண்ணு யாரா இருந்தா என்ன? அதெல்லாம் இனி தேவைபடாது. நான் தான் வருங்காலம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அதுனால கேட்கவே இல்ல. இங்க நம்ம வாழ்க்கையே படு ஸ்பீட்ல யோசிக்க விடாம போயிட்டு இருக்கு. அந்த பொண்ண பத்தி எங்க நினைக்க?”

அரசனுக்கு அவளை பார்த்து ஆச்சரியமாக இருந்தது.

“பொறாமையும் படுவ.. ஆனா யார்னு தெரிஞ்சுக்க ஆர்வம் காட்ட மாட்ட. என்ன கணக்கு இது?”

“காந்தி கணக்கு. சொல்லுறதுனா சொல்லு சொல்லாட்டி போயா” என்று வைசாலி முறைத்ததும், அரசன் அவள் கையைப்பிடித்துக் கொண்டான்.

“பெரிய விசயம் எல்லாம் இல்ல. ஆனா அது நம்ம குடும்பத்துல நிறைய இழப்புகள கொண்டு வந்துடுச்சு” என்று பெருமூச்சு விட்டான்.

“என்னாச்சு?”

“நான் டுவெல்த் எக்ஸாம் எழுதி முடிச்சுருந்தேன்ல.. அந்த டைம்ல தான். எப்பவும் லீவ்க்கு நானும் அஞ்சுவும் இங்க தான் வருவோம்.” என்றவனுக்கு அந்த நாள் நினைவுள் மனதில் நின்றது.

•••

எப்போதும் விடுமுறை என்றால், அஞ்சனா மற்றும் அரசேந்திரனை தாத்தா பாட்டியிடம் விட்டு விடுவார் அமுதவல்லி.

அவர்களும் பேரக்குழந்தைகளை ஆசையாய் வரவேற்பார்கள். தாத்தா பாட்டியிடம் செல்லம் கொஞ்சாத பேரப்பிள்ளைகள் ஏது?

வருடவருடம் நடப்பது போல், அந்த வருடமும் அஞ்சனாவும் அரசனும் வந்து விட்டனர். அப்போது அஞ்சனா கல்லூரி படிப்பை முடித்து இருந்தாள். அவளது திருமண பேச்சு அப்போது தான் வீட்டில் ஆரம்பித்து இருந்தது.

அவர்கள் ஊருக்கு வந்து ஒரு வாரத்திற்கு பிறகு, பிள்ளைகளை பார்க்க அமுதவல்லி மகேந்திரன் வந்து சேர்ந்தனர்.

மகேந்திரனின் ஒரே தங்கை மகாலட்சுமிக்கு கொழுந்தனார் உண்டு.

அவர் பெயர் ராமலிங்கம். அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. அவர்களது இரண்டு பிள்ளைகள்.. தங்கராஜன், தங்க மீனாட்சி.

தங்கராஜனும் அரசேந்திரனும் சமவயது உடையவர்கள். நெருங்கிய நண்பர்கள்.

அன்று அரசேந்திரன் தங்கராஜின் வீட்டின் முன்னால் சென்று நிற்க, வாசலில் இருந்த திண்ணையில் தங்கம்மாள் பாட்டி அமர்ந்து இருந்தார்.

“பாட்டி.. ராஜ் இருக்கானா?”

“இருக்கியான் அரசு.. ராசா.. இங்க வாபா” என்று குரல் கொடுக்க, தங்கராஜன் வந்தான்.

அரசனை பார்த்து விட்டு, “என்னடா? உள்ள வா” என்று அழைக்க, “நீ வெளிய வா. சுத்திட்டு வரலாம்” என்று அரசன் அழைத்தான்.

“இரு வர்ரேன்” என்று உள்ளே சென்று சட்டையை போட்டுக் கொண்டு வந்து, அரசனோடு கிளம்பி விட்டான்.

“வெயில்ல ஊர சுத்திட்டே இருக்காம சாப்பிட வந்துடுங்க” என்று பாட்டி சொன்னதற்கு, தலையை மட்டும் ஆட்டி விட்டு நடந்தனர்.

இருவரும் தங்களது பள்ளிக்கதை படிப்பு என்று பேசிக் கொண்டே நடந்தனர். தங்கராஜனுக்கு மெக்கானிகல் படிக்க ஆசை. அரசனோ காவல்துறை பணியில் சேர விரும்பினான்.

“பேருக்கு ஒரு டிகிரி போட்டுட்டு கோச்சிங் போகலாம்னு இருக்கேன்” என்று அரசன் சொன்னதை, தங்கராஜனும் வரவேற்றான்.

அதைப்பற்றி பேசிக் கொண்டே ஊரை சுற்றி நடந்தவர்கள், தங்கராஜனின் வயலருகே வந்திருந்தனர்.

“மச்சி டிராக்டர் ஓட்டலாம் வர்ரியா?” என்று ஆர்வமாக கேட்க, அரசன் திரும்பிப் பார்த்தான்.

ஓரமாக நின்றிருந்தது தங்கராஜன் வீட்டு டிராக்டர்.

“ஓட்டலாம்னா? சாவி வேணாமா?”

“இருக்கே” என்று ராஜன் எடுத்துக் காட்ட, “எடுத்துட்டு தான் வந்தியா?” என்று தோளில் அடித்தான்.

“ஆமா.. வா.. ஓட்டி பார்த்துட்டு போகலாம்” என்று ராஜன் வேகமாக நடந்தான்.

அரசனும் அருகே வந்து நிற்க, ராஜன் ஏறி அமர்ந்து கொண்டான்.

“நீயும் ஏறு..”

“எனக்கு ஓட்ட தெரியாதுடா..”

“கார் ஓட்டுற.. இது தெரியாதா?”

“அது தாத்தா கூடவே இருந்து சொல்லிக் கொடுத்தது.. அவரில்லாம கார் பைக் எதையும் நான் எடுக்க மாட்டேன். லைசண்ஸ் அடுத்த வருசம் வாங்கிட்டு தான் எடுக்கனும்”

“இத நான் சொல்லிக் கொடுக்குறேன் வா”

“நீ ஸ்டார்ட் பண்ணு. நான் போய் இளநீர் வாங்கிட்டு வர்ரேன். தாகமா இருக்கு” என்று கூறி விட்டு நடந்தான்.

சில நிமிட நடையில் அவர்களது தோப்பு வர, உள்ளே சென்றான்.

இரண்டு இளநீரை வாங்கி அங்கேயே குடித்து முடித்தான்.

மேலும் இரண்டை வெட்டிக் கொடுக்க, வாங்கிக் கொண்டான். இரண்டு கையிலும் இளநீரை தூக்கிக் கொண்டு தோப்பை விட்டு வெளியே வர, ஒரு பெரும் சத்தம் காதில் விழுந்தது.

எதோ மரம் படீரென உடையும் சத்தத்தில், அரசன் அரண்டு போனான். கூடவே யாரோ அலறும் சத்தம் கேட்டது.

கையிலிருந்ததை கீழே போட்டு விட்டு, “யாருக்கோ என்னமோ ஆகிடுச்சு.. வாங்க” என்று தோப்பில் இருந்தவர்களுக்கு குரல் கொடுத்து விட்டு, சத்தம் வந்த பக்கம் ஓடினான்.

உள்ளே இருந்தவர்களும் பதறியடித்து ஓடிவர அங்கே..

முதலில் டிராக்டரை எடுத்ததும் நன்றாகவே ஓடியது. முன்னும் பின்னுமாக ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தான் தங்கராஜன். வளைத்து ஒடித்து திருப்பும் போது தான், பிரச்சனை ஆரம்பித்து விட்டது.

அப்போதும் அவன் ஒன்றும் பயந்து விடவில்லை. எப்படியாவது நிறுத்தி விடலாம் என்று முயன்று கொண்டிருக்க, டிராக்டர் தன் கட்டுப்பாட்டை இழந்தது.

அந்நேரம் தோப்பை நோக்கி வந்து கொண்டிருந்த மகேந்திரன், அதிர்ந்து போனார்.

அந்த டிராக்டரில் பிரச்சனை என்று, நேற்று தான் ராமலிங்கம் கூறியிருந்தார்.

“ராஜ் அத ஆஃப் பண்ணு” என்று கத்திக் கொண்டே அருகே ஓட, அவனால் நிறுத்த முடியவில்லை.

அண்ணனை சாப்பிட அழைக்க வந்த மீனாட்சி கூட, “அய்யோ அண்ணா.. நிறுத்து” என்று பயந்து போய் ஓடி வந்தாள்.

இருவரின் பேச்சும் காதில் விழுந்தாலும், ராஜனால் நிறுத்த முடியவில்லை. கீழே குதித்துவிட அவன் தீர்மானித்த நேரம், ட்ராக்டர் நேராக சென்று மரத்தில் பலமாக மோதியது.

மரம் ஒடிந்து விழும் நேரம், அதன் மேலிருந்த ஒரு கிளை முறிந்து, நேராக ராஜனின் தலையில் விழுந்தது.

காப்பாற்ற வந்த மகேந்திரனின் மீது அந்த மரம் மொத்தமாக விழுந்து விட, மீனாட்சி டயருக்கு அடியில் சிக்கி விட்டாள்.

அவள் அலறியது தான் அங்கு பலமாக கேட்டது.

ஓடி வந்த அரசன் இந்த கோரத்தை பார்த்து அதிர்ந்து விட்டான்.

“அப்பா…” என்று அலறிக் கொண்டு அவன் ஓடி வர, அவன் பின்னால் வந்தவர்கள் வேகமாக செயல் பட்டனர்.

மரத்தை எடுத்து, மீனாட்சியின் நசுங்கிய காலை எடுத்து, உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த ராஜனையும் தூக்கிக் கொண்டு, மருத்துவமனைக்கு ஓடினர்.

போகும் வழியில் ராஜனின் உயிர் பிரிந்து விட்டது. பலமான அடியோட மகேந்திரன் படுத்த படுக்கையாகி விட, மீனாட்சியின் கால்கள் சுயமாக நடக்க முடியாத நிலைக்கு சென்று விட்டது.

தங்கராஜனின் இறுதிக் காரியம் முடிந்ததும், அவனது பாட்டி ஆரம்பித்திருந்தார் புது பிரச்சனையை.

அரசன் தான் தங்கராஜின் இறப்புக்குக் காரணம் என்று கூற ஆரம்பித்தார்.

முதலில் அதிர்ந்தாலும், துக்கத்தில் எதோ பேசுகிறார்கள் என்று யாரும் பெரிது படுத்தவில்லை. ஆனால் அதே உறுதியாக பேசவும், அரசனின் தாத்தாவிற்கு கோபம் வந்து விட்டது.

“உன் பேரன் போனது துக்கம் தான். அவன காப்பாத்த போய் என் புள்ள படுத்த படுக்கையா இருக்கான். நீ என் பேரன் மேல பழி போடுறியா?”

“உன் பேரன் வந்து கூட்டிட்டு போகலனா என் பேரன் இன்னைக்கு உசுரோட இருந்துருப்பான். அவன கூட்டிட்டு போய் எமனுக்கு கொடுத்துட்டான் படுபாவி” என்று பழியை தூக்கி அரசனின் மீது போட்டு விட்டார்.

அரசன் கூட இதைக்கேட்டு குற்ற உணர்ச்சிக்கு ஆளானான்.

பதினேழு வயதை தாண்டாத அரசனின் மீது விழுந்த பழி, அவனை நிலைகுலைய வைத்திருந்தது.

அமுதவல்லி கணவரையும் பார்த்து, மகனையும் தேற்றினார். அஞ்சனா ஒரு பக்கம் குடும்பத்தை தாங்கினாள். ஏற்பட்ட இழப்பிலிருந்து மனதளவில் மீண்டு வர போராடிக் கொண்டிருந்தனர்.

தங்கம்மாள் சும்மா இருக்காமல், பிரச்சனை செய்து கொண்டே இருந்தார். பெண் கொடுத்த வீடு என்று, ஓரளவு பொறுத்து போனார்கள் அரசனின் குடும்பம்.

மகேந்திரன் உடல் நிலை காரணமாக, அவரது வேலை பறி போனது. அப்போதும் அவர்களுக்கு பணப்பிரச்சனை எதுவும் இருந்தது இல்லை.

ஆனால் அவரது உடல் நலம் குறைந்ததும், சற்றும் பொருத்தமில்லாதவர்கள் எல்லாம் அஞ்சனாவை பெண் கேட்டு வந்து நின்றனர். பார்த்துக் கொண்டிருந்த அமுதவல்லிக்கு இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அஞ்சனா நன்றாக படித்த பெண். அழகான பெண்ணும் கூட. அவளை படிக்காத பொறுப்பில்லாதவனுக்கு எல்லாம் பெண் கேட்ட போது, அமுதவல்லிக்கு பொறுக்க முடியவில்லை.

அரசன் அப்போது தான் தன் குற்ற உணர்ச்சியிலிருந்த மெல்ல தேறியிருந்தான். அவனுடைய தாத்தா தேற்றி இருந்தார்.

பக்கத்திலிருக்கும் எதோ ஒரு கல்லூரியில் அவன் சேர்ந்து கொள்வதாக முடிவு செய்தான். அப்போது தான் தந்தையையும் பார்க்க முடியும் என்ற எண்ணம்.

ஆனால், எதற்கும் அமுதா பணிந்து வரவில்லை. முதல் வேளையாக, மகனை தூரமாக இருக்கும் ஒரு பெரிய கல்லூரியில் வற்புறுத்தி சேர வைத்தார். அங்கு ஹாஸ்டலில் தங்க வைத்தனர்.

அவனது படிப்பு நிலையானதும், அமுதவல்லி தன் பிறந்த வீட்டினர் மூலம் பார்த்தசாரதியின் வரனை கொண்டு வந்தார்.

பார்த்த உடனே அஞ்சனாவிற்கும், குடும்பத்திற்கும் பிடித்துப்போனது. உடனே நிச்சயம் திருமணம் என்று முடிந்து விட்டது.

இடையில் யாரையும் வரவிடாமல் தடுத்து, மகளுக்கு ஏற்ற வாழ்வை முடித்துக் கொடுத்தார். மகனும் நிம்மதியாக படிக்க, அமுதவல்லிக்கு அப்போது தான் நிம்மதியே வந்தது.

இதெல்லாம் மகேந்திரனின் கனவு. அவரது உடல் நலம் குறைந்து, எல்லாம் குளறுபடியான போது அவரால் தாங்கவே முடியவில்லை. பிள்ளைகளை நினைத்து அவர் அதிகமாக புலம்ப, அமுதவல்லி கணவனின் ஆசைகளை நிறைவேற்றி வைத்தார்.

எல்லாம் நன்றாக மாறி விட்ட சந்தோசத்தில் மூச்சு விட ஆரம்பிக்கும் போதே, மகேந்திரன் அதே நிம்மதியில் உயிரை விட்டு விட்டார்.

ஒரு பெரிய அடியை வாங்கியது அந்த குடும்பம்.

தான் உயிரோடு இருக்க, தன் மகனுக்கு பேரன் கொள்ளி வைப்பதை பார்த்து, தாத்தா மாரடைப்பில் விழுந்தார்.

அவரை கண்ணும் கருத்துமாக பார்த்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. மகன் பிரிந்த துக்கத்தில், மூன்றே மாதங்களில் அவரது உயிர் பிரிந்து விட்டது.

அடுத்த பெரிய அடியை தாங்க முடியாமல், அமுதவல்லி துவண்டு போனார். மாமியாரும் அவரும் மட்டுமே ஒருவருக்கொருவர் துணை என்றானது.

அரசன் தன் படிப்பை முடித்து, கூடவே காவல்துறைக்கான தேர்விலும் வெற்றி பெற்றிருந்தான்.

அஞ்சனா அப்போது தான் மணிகர்ணிக்காவை கருவுற்றிருந்தாள். சில நாட்கள் ஓய்வு வேண்டி பிறந்த வீடு வந்திருந்தாள்.

அரசன் மறுநாள் ஊருக்கு வருவதாக இருக்க, தங்கம்மாள் கலவரத்தை உண்டு பண்ண ஆரம்பித்தார்.

தங்கமீனாட்சி பூப்பெய்தி இருக்க, அதற்கான சீர்வரிசைகளை கொண்டு சென்ற அமுதாவை, பிடித்துக் கொண்டார்.

அரசனுக்கு தங்க மீனாட்சியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு!

அமுதவல்லி மட்டுமல்ல, அஞ்சனாவும் அவளது பாட்டியும் கூட இதைக்கேட்டு அதிர்ந்து போனார்கள். முதலில் மேம்போக்காய் மறுக்க, தங்கம்மாள் உறுதியானார்.

அமுதவல்லிக்கு கடுப்பாகி விட, அவரும் தீவிரமாக மறுத்து விட்டார். ஆனால், தங்கம்மாள் விடுவதாக இல்லை. அகிலாண்டேஸ்வரிக்கு கூட இது சரியென பட்டது.

“உங்க புள்ளையால தான் என் மக இப்படி இருக்கா. அவ வாழ்க்கைய சரி பண்ணுற கடமை உங்க புள்ளைக்கு இருக்கு” என்று அபாண்டமாக பேச, அஞ்சனாவிற்கு சட்டென கோபம் ஏறியது.

“உங்க மகன் வண்டி ஓட்ட தெரியாம ஓட்டி, அவன காப்பாத்த போன எங்கப்பாவ கொன்னுட்டான். உங்க மக கால காயப்படுத்திட்டான். அதுக்கு என் தம்பி மேல பழி போடுறீங்க? எங்கப்பா சாவுக்கு உங்க புள்ள தான் காரணம்னு நான் ஆரம்பிச்சா, தாங்க மாட்டீங்க சொல்லிட்டேன்” என்று கத்தி விட்டிருந்தாள்.

அமுதவல்லி கூட இதைத்தடுக்கவில்லை. அபாண்டமாக பேசுபவர்களிடம் அவர்கள் போக்கில் பேசினால் தான் விடுபட முடியும்.

“என் பேரன கூட்டிட்டுப்போய் கொன்னது உன் தம்பி” என்று தங்கம்மாள் எகிறிக் கொண்டு வர, “சரி.. அப்படியே வச்சுப்போம். அந்த கொலைகாரனுக்கு ஏன் ஆத்தா உன் வீட்டுப்பிள்ளைய கொடுக்குற? நல்லவனா பார்த்து கொடுக்க வேண்டியதுதான?” என்று கேட்டு வாயை திறக்க முடியாமல் செய்தாள்.

“என் தம்பிக்கும் நடந்த எதுக்கும் சம்பந்தம் கிடையாது. அவன் மேல பழிய போட்டு உங்க பொண்ண கட்டிக்க சொல்லுறது தப்பு. அத விட அப்படி அவன் மேல தப்பிருந்தா, தப்பு பண்ணவன் வீட்டுக்கு உங்க புள்ளைய அனுப்பக்கூடாது. பிள்ளையும் கிள்ளி தொட்டியையும் ஆட்டுவீங்களோ? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?”

“என்ன அமுதா மகள பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க?” என்று அஞ்சனாவை விட்டு விட்டு அமுதாவிடம் பாய, அவர் தூரமாக ஒன்றும் புரியாமல் அமர்ந்து இருந்த மீனாட்சியை தான் பார்த்தார்.

இங்கு பேசுவது மீனாட்சியின் காதில் அறைகுறையாகத்தான் விழுந்தது. அவள் மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்து இருந்தாள்.

“உன் மகளுக்கு என் மகன நீ கேட்டுருக்கலாம் அகிலா. தப்பில்ல. உரிமையா கேட்ருக்கலாம். முறைய சொல்லி நீ கேட்டுருந்தா நான் என் மகன் கிட்ட பேசியிருப்பேன். ஆனா முன்னாடி நடந்தத காரணம் காட்டி, அவன கொலைகாரன்னு பேசி அதுக்கு தண்டனையா உன் மகள கல்யாணம் பண்ணி வைக்கனும்னு சொல்லுறியே.. இதுக்கு ஒத்துக்கிட்டா என் புள்ள வாழ்க்கை என்னாகுறது? முடியாது அகிலா. நிச்சயமா முடியாது.”

அமுதவல்லி அழுத்தமாக சொல்லி விட்டு, அப்போதே கிளம்பி விட்டிருந்தார்.

அவர் பேசியதை மொத்த ஊரும் கேட்டிருந்தது. அது சரியென்றே நினைத்தது.

நடந்த பிரச்சனையை மனதில் வைத்து மருகி, அமுதவல்லியின் மாமியாரும் உயிரை விட்டுருந்தார். அந்த பதட்டத்தில், அரசனுக்கு இந்த திருமண பேச்சு தெரியாமல் போனது.

மணிகர்ணிக்கா பிறந்து இரண்டு மாதங்களுக்குப்பிறகு தான், அரசன் பயிற்சி முடித்து வந்து சேர்ந்தான்.

அப்போது தான், தங்கமீனாட்சிக்கும் அவனுக்கும் திருமண பேச்சு நடந்ததே அவனுக்குத் தெரியும்.

“அப்போ நீங்க என்ன சொன்னீங்க?” என்று வைசாலி கேட்க, “யாரு இப்படி கேனைத்தனமா பேசுனது தான்” என்றான் அரசன்.

“ஏன்?”

“இப்ப தங்கமீனாட்சி வயசு என்ன தெரியுமா? பத்தொன்பது தான் இருக்கும். என் வயசு என்ன? அந்த புள்ள வயசு என்ன?”

வைசாலி உடனே கணக்கு போட்டு விட்டு, “அப்போ ஏழு வயசுலயே அப்படி ஆகிடுச்சா?” என்று வருத்தமாக கேட்டாள்.

அரசன் தலையசைத்தான்.

“அந்த பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணு. நான் ப்ளஸ்டூ முடிச்சுட்டேன். அது ரெண்டாவது படிச்சு முடிச்சுருக்கு. நினைச்சு பாரு. நாராசமா இல்ல?”

அரசன் கடுப்பாக கேட்க, வைசாலி மெல்ல தலையாட்டினாள்.

“எந்த லூசுடா இது இப்படி பேசுச்சுனு ஒரே கடுப்பு. ஆனா அம்மா இதை பத்தி பேசக்கூடாதுனு சொல்லிட்டாங்க. முக்கியமா என்னை அடிக்கடி ஊருக்கு வர்ரத தடுத்துட்டாங்க. திருவிழா வீட்டுல எதுவும் விசேஷம்னா மட்டும் தான் ஊருக்கு வரனும்னு சொல்லிட்டாங்க. அவங்க வர சொன்னாலும் என்னால வர முடியாது. அது வேற விசயம். முதல்ல நார்த்ல தான் போஸ்டிங் வந்தது. அது முடிஞ்சு இந்த பக்கம் ட்ராண்ஸ்பர் வாங்கிட்டு வந்துட்டேன். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி தான் மறுபடியும் இந்த பிரச்சனை வந்துச்சு”

“மறுபடியும் கல்யாணம் பத்தி பேசுனாங்களா?”

“ம்ம்.. திருவிழானு லீவ் போட்டு வந்துருந்தேன். அப்ப தான் அகிலா அத்த வீட்டுக்கு வந்து, நேரா என் கிட்டயே பேசுச்சு. பிடிச்சு திட்டிட்டேன். அப்பவும் விடாம ஊர் ஆளுங்க முன்னாடி பேசுச்சு” என்றவன் அந்த நாள் நினைவில் பல்லைக்கடித்தான்.

ஊர் பெரியவர்களை அழைத்து வைத்துக் கொண்டு அகிலாண்டேஸ்வரி பஞ்சாயத்து செய்ய, அரசனுக்கு கடுப்பாக இருந்தது. அமுதவல்லி முதலில் சொன்னதை தான் மறுபடியும் சொல்லி வைத்தார்.

ஆனால் அகிலாண்டேஸ்வரி வார்த்தைகளை விட்டிருந்தார். மகளுக்காக பேசுகிறேன் என்று, அவளது காலை பற்றி பேசி வைத்தார்.

“என் மவள நொண்டியாக்கிட்டு இப்படி பேசுறீங்களே.. பெத்த புள்ளைய பறி கொடுத்து பொம்பள புள்ளையும் நொண்டியா போய் வீட்டுல கிடக்குறா.. அவள நான் எப்படி கரையேத்துவேன்? காரணமானவக நீங்களே ஒரு வழி சொல்லுங்க” என்று அகிலா அழ, அமுதவல்லி அஞ்சனா இருவரின் பார்வையும் மீனாட்சியிடம் பாய்ந்தது.

அங்கு தான் நின்று இருந்தாள். பாதியில் தான் எதோ பிரச்சனையோ என்று வந்து சேர்ந்தாள்.

வந்தவள் காதில் விழுந்தது அந்த வார்த்தைகள். யார் யாரோ அவளை இதைச் சொல்லி நோகடித்து இருக்கின்றனர். அப்போதெல்லாம் அவளுக்கு அவ்வளவு வலித்தது இல்லை. பெற்ற அன்னை ஊர் முன்னால் தன்னை பேசியதை கேட்டு, உடைந்து போனாள்.

கண்ணில் வழிந்த நீரோடு அவள் அந்த இடத்தை காலி செய்ய, அமுதவல்லிக்கு மனம் துடித்தது. அந்த துடிப்பு அமுதாவின் மேல் கோபமாக திரும்பியது.

அவர் வாயைத்திறக்கும் முன், “போதும்.. கொஞ்சம் வாய மூடுறீங்களா?” என்று அரசன் கத்தியிருந்தான்.

“என் வாழ்க்கை இது. நீங்க போடுற பொய்யான பழிக்கா நான் என் வாழ்க்கைய பணயம் வைக்க முடியாது. ஊருக்கே தெரியும் அங்க என்ன நடந்துச்சுனு. நீங்க உங்க இஷ்டத்துக்கு பேசுனா எல்லாம் உண்மையாகிடுமா? நான் உங்க மகள கட்டிக்கிட்டா, நீங்க போட்ட பழிய எல்லாம் நான் ஏத்துக்கிட்டேன்னு ஆகிடும். முடியாது. கல்யாணம் பண்ண முடியாது. உங்களால என்ன முடியுமோ செய்யுங்க. பார்த்துடுறேன்”

சபையில் சத்தமிட்டவன், அப்போதே ஊரை விட்டு கிளம்பி விட்டான். திருவிழாவும் மறந்து..

“காப்பு கட்டின பிறகு ஊர விட்டு போகக்கூடாது” என்று தடுத்த ஊர் மக்களை அவன் கருத்தில் கொள்ளவில்லை.

அமுதவல்லி மகனை தடுக்கவில்லை. போகட்டும் என்று விட்டு விட்டார். இருந்தால் பேசிப்பேசியே மகனை மீண்டும் குற்ற உணர்ச்சியில் தள்ளி விடுவார்கள்.

எல்லோரும் அமுதவல்லியிடம் வர, அவரும் அரசன் பேசியதை தான் பேசினார். இனி இந்த பேச்சு வரக்கூடாது என்று முடித்து விட்டார்.

ஊரே ஒப்புக் கொண்டாலும், அகிலாண்டேஸ்வரி ஒப்புக்கொள்ளவில்லை. அவரது குடும்பம் ஒப்புக் கொள்ளவில்லை. ஊருக்குள் விசயத்தை சொல்லிக் கொண்டே இருந்தனர்.

“அப்போ காலையில வந்தவங்க மீனாட்சியோட அம்மாவா?” என்று கேட்க, “அம்மாவா? வந்தாங்களா?” என்று கேட்டான் அரசன்.

அகிலாண்டேஸ்வரி பேசியதை வைசாலி கூற, அரசனுக்கு புரிந்தது.

“அப்படித்தான் பேசிட்டு இருப்பாங்க. விடு. இவங்களா தான் திருந்தனும்”

“அப்ப என் கிட்ட சொன்ன லேடிஸ் யாரு?”

“அகிலா அத்தையோட தம்பி பொண்டாட்டி அக்கானு, அவங்க குடும்பம் மட்டும் தான் இத இன்னும் பேசிட்டு இருக்காங்க. அவங்களா தான் இருக்கும்.”

“ஓஹோ.. அவங்கள திரும்பி பார்த்தா பேசிக்கிறேன்” என்று முடித்தாள் வைசாலி.

One Comment

Leave a Reply