வரம் 23

Loading

மீனாட்சி வீட்டுக்குள் நுழைய, அகிலாண்டேஸ்வரி மட்டுமே அமர்ந்து இருந்தார். அதுவும் வருத்தமாக கோபமாக..

அதை கவனித்தாலும், கவனிக்காதது போல் உள்ளே சென்று உடை மாற்றிக் கொண்டு, தன் வேலைகளை ஆரம்பித்து விட்டாள்.

என்று சபையில் வைத்து தன்னை அப்படிப்பேசினாரோ, அன்றிலிருந்து அவரிடம் பேசுவதே இல்லை.

அன்று அப்படி ஒரு அதிர்ச்சி கிடைத்த பிறகு, மீனாட்சிக்கு உயிரை விடும் எண்ணம் தான் பல முறை வந்து போனது.

அவளது இந்த எண்ணம் தெரிந்து, மகாலட்சுமி தான் அவளை தேற்றினார்.

படிக்க வேண்டும். வேலை பார்க்க வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும். இவர்களை விட்டு வெகு தூரம் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும். தன்னிடம் இருந்த குறையை மறந்து.. குறை காணும் மனிதர்களை மறந்து..

அவளது லட்சியமாகவே இது மாறி விட்டது. அவ்வளவு தூரம் அவளை உருவேற்றியது மகாலட்சுமி மட்டுமே. ராமலிங்கத்தால் பணம் கட்ட முடியாத சமயம் வந்த போது, மகாலட்சுமி அவளது படிப்பு செலவையும் கூட ஏற்றுக் கொண்டார். அவரில்லாவிட்டால் மீனாட்சி இன்று இல்லை என்றே சொல்லலாம்.

ஆனால், அதே மகாலட்சுமியை நேற்று அகிலா பேசிய பேச்சை கேட்டு, மீனாட்சிக்கு வெறுத்து விட்டது. பெற்ற அன்னையாய் அவள் பார்வையில் தாழ்ந்து கொண்டிருப்பது தெரியாமல், அகிலா மகளுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டிருந்தார்.

“மீனா..” என்று அகிலா அழைக்க, மீனாட்சி காதில் விழுந்தது போலவே தெரியவில்லை.

“ஏன்டி நீயும் இப்படி என்னை ஒதுக்கி வைக்கிற?”

அகிலா கண்ணீரோடு கேட்க, அதற்கும் பதில் இல்லை. சற்று முன் அரசேந்திரனோடு நடந்து போன பெண்ணை நினைத்துப் பார்த்தாள். மருத்துவம் படித்தவராம். அந்த பெண்ணின் அழகு கூட மீனாட்சிக்கு புன்னகையை வரவைத்தது.

அரசனும் படித்து தேர்வாகி வேலையில் சேர்ந்திருந்தான். அதே போல் அந்த பெண்ணும் படித்து வேலை பார்க்கிறாள். அழகில் கூட இருவருக்கும் மகா பொருத்தம் என்று தான் மீனாட்சிக்கு தோன்றியது.

அரசன் மீனாட்சியிடம் பேசுவதே இல்லை. எப்போது திருமண பேச்சு அவன் காதில் விழுந்ததோ, அப்போதிலிருந்து மீனாட்சியை பார்ப்பதை கூட தவிர்த்து விட்டான்.

ஊருக்கே வராமல் அவன் ஓட, மீனாட்சிக்கு அதைக்கேட்டு துக்கம் தான் வந்தது.

தன்னால் அடுத்தவர்கள் வாழ்வில் பல பிரச்சனை நடக்கிறதே என்ற துக்கம்.

அகிலாவை மதிக்காமல் வேலை முடிந்து படிக்க ஆரம்பித்தவள், மகாலட்சுமி வரவும் நிமிர்ந்து பார்த்தாள்.

“ஃபீஸ கட்டுனியா மீனா?” என்று கேள்வியோடு வர, “கட்டிட்டேன் பெரியம்மா” என்றவள் பில்லை எடுத்துக் கொடுத்தாள்.

“நீயே வச்சுரு”

“என் கிட்ட இருந்தா எங்கயாவது விழுந்துடும்.” என்று அவர் கையில் திணித்து விட, இதை அகிலா பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.

•••

“என்ன பண்ண போற நீ?”

“என்னமோ பண்ணுறேன். சரி முக்கால் மணி நேரம் ஆகிடுச்சு. திரும்புவோமா?” என்று வைசாலி கேட்க, அரசனும் மணியை பார்த்தான்.

“ஓஹோ.. அஞ்சு சொன்ன மாதிரி ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு போகனுமா?”

அரசன் கிண்டலாக சிரித்தபடி கேட்க, வைசாலிக்கும் சிரிப்பு தொற்றியது.

“ஆமா.. நாத்தனார் பேச்ச மீற முடியுமா?”

“அந்த நாத்தனார் கூட சேர்ந்துட்டு ப்ளான் போடுற நீ?” என்றவன் அவளது கன்னத்தை பிடித்து வலிக்காமல் கிள்ளினான்.

அவன் கையை தட்டி விட்டவள், “அதான் கடைசியில விட்டுட்டேனே” என்றாள்.

“ஆமா ஏன் விட்ட?”

“பார்க்க பாவமா இருந்துச்சு.. ரொம்ப கெஞ்சுனீங்களா.. அதான்”

“நான் கெஞ்சுனனா? ஆனாலும் இந்த வாய் இருக்கே.. ஓவரா பேசுறதுக்கு ஒரு நாள் இருக்கு”

“ஒரு நாள்னா எந்த நாள்?”

“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்னு வச்சுக்கிறேன்”

“அப்ப மட்டும் நாங்க பயந்துடுவோமா? அப்பவும் என் வாய் என் கிட்ட தான் இருக்கும். இப்படித்தான் பேசுவேன்”

“அப்படியா?” என்று கேட்டவன் பார்வை வித்தியாசமாக மாறி அவளது இதழில் படிய, அதிர்ந்து போனாள்.

உடனே திரும்பி கையை வீசியபடி நடக்க, ‘சமாளிக்கிறாளாம்’ என்று புன்னகைத்தான்.

அவளருகே வந்து வீசிக் கொண்டிருந்த கையை பிடித்துக் கொண்டவன், விரல் கோர்த்தபடி நடக்க ஆரம்பித்தான்.

பெரியவர்கள் நாள் குறித்து வந்து விட்டனர். நிச்சயம் திருமணம் இரண்டையும் அடுத்தடுத்த நாள் வைத்துக் கொள்ளலாம் என்று அரசன் கூற, அப்படியே நாளையும் குறித்து இருந்தனர்.

இரவு கவிழ ஆரம்பிக்க, வைசாலி அஞ்சனாவிடம் வந்தாள்.

“அண்ணி..”

“ம்ம்?”

“தங்கமீனாட்சி வீடு எங்க இருக்கு?”

“ஏன்?” என்று அஞ்சனா ஆச்சரியமாக கேட்க, “சொல்லுங்க” என்றாள்.

“அடுத்த தெரு தான்.”

“அப்ப வாங்க போகலாம்”

“எதுக்குடா? அரசன் சொன்னானா? எதுவும் வேணாம் விடு. உங்க கல்யாணம் முடிஞ்சுட்டா அவங்க தானா சரியாகிடுவாங்க”

“அண்ணி.. என் கூட வாங்க அவ்வளவு தான்” என்று வைசாலி அடம் பிடிக்க, “லாலிபாப்.. இது சின்ன விசயம் இல்லடா” என்று அஞ்சனா பொறுமையாகவே சொன்னாள்.

“நான் அத்த கிட்ட சொல்லிட்டு வர்ரேன். கிளம்புங்க” என்றவள் வேகமாக அமுதவல்லியிடம் சென்று கூற, அவரும் அஞ்சனா சொல்வதை போல் தான் பேசினார்.

“அத்த நான் பார்த்துக்கிறேன். ட்ரஸ்ட் மீ. அண்ணிய கூட்டிட்டு தான் போறேன்” என்று கூறி விட்டு அஞ்சனாவிடம் வந்தவள், கையைபிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள்.

“அடப்பாவி.. இருமா.. விட்டா தூக்கிட்டு போயிடுவ போல பொறு” என்று கூறி விட்டு சேர்ந்து நடந்தாள்.

அடுத்த தெருவில் இருந்த மீனாட்சியின் வீட்டுக்கு சென்றனர்.

“இதான்” என்றதும் வைசாலி உடனே கதவை தட்டினாள்.

“யாரு?” என்ற குரலோடு அகிலாண்டேஸ்வரி வந்து கதவை திறந்தார்.

வாசலில் நின்றிருந்த இருவரையும் அவர் எதிர் பார்க்கவில்லை. அதிர்ந்து போய் நிற்க, அகிலாவின் தம்பி மனைவி வந்து சேர்ந்தார்.

“நீங்க.. இங்க என்ன பண்ணுறீங்க?” என்று கேட்க, வைசாலிக்கு அவரை அடையாளம் தெரிந்தது.

கோவிலில் வம்பாக இழுத்து வைத்து பேசியவர் இவர் தான்.

“வீட்ட விலைக்கு வாங்க வந்துருக்கோம்” என்று நக்கலாக சொல்லியபடி வைசாலி நுழைந்து விட, அஞ்சனா தயக்கமாகவே உள்ளே சென்றாள்.

“என்னமா? நக்கலா?”

“ஆமா அதே விக்கல் தான். நீங்க கோவில்ல பார்த்தப்போ என்னமோ சொன்னீங்களே.. என்ன சொன்னீங்க?” என்று கேட்க அவர் பம்மினார்.

“பதில் சொல்லுங்க.. உங்க வீட்டுப்பொண்ணு அரசனுக்கு நிச்சயமான பொண்ணுனு சொன்னீங்க. ஆனா இப்ப ஊரு என்ன சொல்லுது தெரியுமா? நான் அரசனோட பொண்டாட்டினு சொல்லுது”

வைசாலி சிரிப்பு மாறாமல் பேச, அஞ்சனாவிற்கு பயமே வந்து விட்டது.

‘சும்மா இருக்க சங்க ஊதி கெடுத்துடாத ஆத்தா’ என்று மனதில் பதறினாலும் வெளியே ஒன்றும் காட்டவில்லை.

“ஏய்.. என்ன என் வீட்டுல வந்துட்டு எகத்தாளமா பேசிட்டு இருக்க? மரியாதையா போயிடு”

அகிலா கோபமாக பேச, அவர் பக்கம் திரும்பினாள்.

“நீங்க என் வீட்டுக்கு வந்து நான் நல்லாவே இருக்க மாட்டேன்னு சாபம் கொடுத்தீங்க. நான் உங்க வீட்டுக்கு வந்து சாபமா கொடுத்தேன்? பேசத்தான செஞ்சேன்?”

“இந்தா பொண்ணே..”

“என் பேரு வைசாலி.. அரசேந்தரனோட பொண்டாட்டி பேரு வைசாலி.. நல்லா நினைப்புல வச்சுக்கோங்க.”

வைசாலி முறைத்தபடி பேச, அஞ்சனா அசந்து போனாள்.

‘பார்ரா..!’ என்று நின்று இருந்தாள்.

“நீ யாரா வேணா இரு. முதல்ல இடத்த காலி பண்ணு” என்று கத்த, “வந்த விசயத்த சொல்லாம போக முடியாதே” என்றாள் சட்டமாய்.

“என்ன அஞ்சனா? பேச விட்டு வேடிக்கை பார்க்குற? எரியுற தீயில எண்ணெய ஊத்த வந்தீங்களா?” என்று அஞ்சனாவின் மீது பாய, “பேசுறதுனா வைசாலி கிட்ட பேசுங்க. அவ கிட்ட பேச முடியலனா என் பக்கம் திரும்புவீங்களா?” என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்டு வைத்தாள்.

“இங்க.. இங்க பேசுங்க.. என்ன சொன்னீங்க? பணம் அழகு அந்தஸ்து பார்த்து என்னை அரசனுக்கு கட்டி வைக்கிறாங்கனா?”

“ஆமா.. அது தான உண்மை.. எங்க வீட்டு பிள்ளை நொண்டினு தான…” என்று ஆரம்பித்த அகிலாவின் தம்பி மனைவி முடிக்கும் முன், “ஏய்…” என்று வைசாலி அதட்டி இருந்தாள்.

அஞ்சனா கூட, “என்னது? என்ன சொன்னீங்க? இன்னொரு தடவ இப்படி வாய்ல வந்துச்சு?” என்று குரலை உயர்த்தினாள்.

அகிலா கூட இவர்களது குரலில் அதிர்ந்து போய் நின்று விட்டார்.

“மனுசியா நீங்க? ஒரு சின்ன பிள்ளைய பார்த்து பேசுற பேச்சா இது? கேட்டுட்டு நிக்கிறீங்களே நீங்க அம்மா தானா?” என்று அகிலாவை வைசாலி கேட்க, “இத அவங்களே சொல்லுவாங்க” என்று மெல்லிய குரலில் பதில் வந்தது.

பதில் வந்த திசையை திரும்பிப் பார்க்க, தங்கமீனாட்சி நின்று இருந்தாள். கண்கலங்கி இருந்தது. ஆனால் அழக்கூடாது என்று திடமாக நின்று இருந்தாள்.

“ஊர் முன்னாடி உலகம் முன்னாடி.. நான் நொண்டி.. வீட்டுல பாரமா இருக்கேன். எல்லாம் சொல்லுவாங்க”

“மீனாட்சி” என்று அஞ்சனா வருத்தமாக அழைக்க, “பழகிடுச்சு அண்ணி. விடுங்க” என்றாள்.

“ஏன் அத்த அவள இப்படி படுத்துறீங்க?” என்று அஞ்சனா மீண்டும் அகிலாவிடம் பாய்ந்தாள்.

“அவங்கள குத்தம் சொல்லாதீங்க.. அன்னைக்கு என் அண்ணன பார்த்துட்டே போய் தடுமாறி டயருக்குள்ள விழுந்துட்டேன். அந்த டயரு கால்ல ஏறுனதுக்கு பதிலா கழுத்துல ஏறி இருந்தா….”

“மீனா” என்று அகிலா அலற, “மீனாட்சி வாய மூடு” என்று அஞ்சனா அதட்டியிருந்தாள்.

“என்ன பேச்சு இது? என்ன அர்த்தத்துல பேசுற நீ?” என்று வைசாலி முறைத்து பார்க்க, அவளை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் தரையைப் பார்த்தாள்.

“பாரமா இருந்தா இப்படித்தான் பேசுவாங்க” என்று மெல்லிய குரலில் கூற, “அதுக்காக? சாகனுமா?” என்று அஞ்சனா அருகே வந்து அதட்டலாக கேட்டாள்.

“சாகவும் தானே முடியல அண்ணி” என்றவள் கரகரவென கண்ணீர் விட, அஞ்சனா உருகிப்போய் அவளை அணைத்துக் கொண்டாள்.

“என் முன்னாடியே அண்ணன் தலையில மரம் விழுந்து செத்தது மறக்கலையே.. சாவுனா பயமா இருக்கு அண்ணி.. ஆனா இவங்க பண்ணுறத பார்க்குறத விட செத்துடலாம்னு தோனுது”

அழுகையோடு அவள் பேச, வைசாலி அகிலாவை தான் முறைத்தாள்.

“எங்க வீட்டுக்கு வந்து சாபம் கொடுத்ததுக்கு, நல்லா திருப்பி கொடுக்கனும்னு தான் வந்தேன். ஆனா.. இங்க அத விட பெருசா ஒன்ன பண்ணி வச்சுருக்கீங்க? உங்க மகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சு நீங்க நல்லது பண்ண வேணாம். இப்படி உடைஞ்சு அழ விடாம பார்த்துக்கோங்க” என்று எரிச்சலாக சொல்லி விட்டு, மீனாட்சியை பார்த்தாள்.

அஞ்சனா அவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இங்க பார்.. யாருக்காகவும் நாம வாழ முடியாது. யாருக்காகவும் நாம சாகவும் கூடாது. அது பெத்த அம்மாவா இருந்தாலும் சரி. பேசுறியா உன் வாய் வலிக்க பேசுனு காத மூடிட்டு நம்ம வேலைய பார்க்கனும். பத்தொன்பது வயசு இருக்குமா உனக்கு? இன்னும் வாழ்க்கையில எவ்வளவோ பார்க்கனும். இந்த வார்த்தைக்காக சாகனும்னா தினம் தினம் நீ செத்துட்டு தான் இருக்கனும். நம்ம சொஸைட்டி அப்படி. நாளைக்கு வேலைக்கு போனா அங்க ஒருத்தன் இதே வார்த்தைய சொல்லுவான். என்ன செய்வ? வேலையே வேணாம்னு ஓடுவியா? சொல்லுறியா சொல்லிட்டுப்போனு வாழப்பழகனும். இதுக்கு மேல அட்வைஸ் எல்லாம் பண்ண முடியாது. அறிவிருந்தா நீயே புரிஞ்சுப்ப.”

மளமளவென பேசியவள், “கிளம்பலாம் அண்ணி” என்றாள்.

அஞ்சனா மீனாட்சியின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு, “ப்ரேவ்வா இரு மீனாட்சி.” என்று விடை பெற்றாள்.

அகிலா மகள் பேசியதை ஜீரணிக்க முடியாமல் அமர்ந்து விட, மீனாட்சி அறைக்குள் சென்று அடைந்து விட்டாள்.

இந்த அடி போதாது என்று, மறுநாள் அகிலாவை கல்லூரிக்கு அழைத்தார் மீனாட்சியின் பேராசிரியை. வந்தவரிடம் மொத்த விசயத்தையும் சொல்லி, அறிவுரையும் வழங்கி அனுப்பி வைத்தனர்.

அப்போது தான் அகிலாவிற்கு மகளை எவ்வளவு நோகடித்து இருக்கிறோம் என்று புரிந்தது.

•••

வைசாலி அரசன் அறைக்கதவை தட்டி விட்டு, லேசாக திறந்தாள்.

“கிங்?” என்று எட்டிப்பார்க்க, அவன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தான்.

வைசாலியை நிமிர்ந்து பார்த்து விட்டு, பேச்சை முடித்துக் கொண்டான்.

“என்ன லாலி?”

“கிளம்பிட்டோம். சொல்ல வந்தேன்”

“ஓஓ.. இதோ வர்ரேன்” என்று அவன் வெளியே வர, “உள்ள எல்லாம் கூப்பிட மாட்டீங்களோ?” என்று வீம்புக்கு கேட்டாள்.

“அது நீயா வரனும். நான் கூப்பிட்டு தான் வருவியா? அன்னைக்கு நீயா தான வந்த?”

“அது ஒரு வேகத்துல வந்துட்டேன்”

“இப்ப ரூம பார்க்கனுமா? வா” என்று கையைப்பிடித்து இழுத்துச் சென்றான்.

வைசாலி அறையை சுற்றிபார்வையை ஓட்டினாள். அரசன் அவளை வேடிக்கை பார்த்தபடி நின்றான்.

சுற்றி பார்த்துக் கொண்டிருந்தவள், ஒரு இடத்தில் பார்வையை நிலைக்க விட்டாள்.

“அது என்ன?”

அரசன் திரும்பிப் பார்த்தான்.

“நான் கொடுத்த கிஃப்ட் தான?” என்று கேட்டவள், “எங்கயோ தொலைச்சுட்டேன்னு சொன்னீங்க?” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

‘ஸ்ஸ்.. உள்ள வைக்கலயா இத’ என்று நினைத்தவன், “தொலைக்கலமா.. எங்க வச்சேன்னு தெரியலனு சொன்னேன்” என்றான்.

அரசனை கூர்ந்து பார்த்தவள், “நேரமாச்சு” என்று வேகமாக திரும்ப, அவள் கையைப்பிடித்து நிறுத்தினான்.

“நீ பண்ண கூத்துக்கு நான் தான் கோபப்படனும் லாலி. நீ கோவிச்சுட்டுப்போறது எல்லாம் நியாயமே இல்ல”

வைசாலிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தாலும், பல்லைக்கடித்து அடக்கிக் கொண்டாள்.

“நீங்க பொய் சொல்லிட்டீங்க. விடுங்க”

“கொழுப்பு தான உனக்கு? பண்ணுற சேட்டையெல்லாம் பண்ணிட்டு பொய் சொல்லிட்டேன்னு கோவிக்கிற?” என்றவன் இழுத்துச் சென்று அந்த பரிசை எடுத்தான்.

அதைத்திறந்து உள்ளே இருந்த படத்தை எடுத்தான்.

“ஹலோ.. கைய விடுங்க” என்று வைசாலி முறுக்கிக் கொண்டாள்.

அரசன் அவளது கோபத்தை பெரிதாக எடுக்காமல், அந்த படத்தை பார்த்தான்.

“அரசன் முறுக்கு ரொம்ப ரொம்ப நல்ல முறுக்கு” என்று மீண்டும் படித்தவனுக்கு, சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

சோப் விளம்பரத்தில் வரும் வசனத்தை மாற்றி எழுதி, அருகே அரசனின் முகத்தையும் வரைந்து, அதையும் அவனுக்குப்பரிசாகவே கொடுத்திருந்தாள். அவன் வாசித்த தோரணையில் வைசாலிக்கும் சிரிப்பு வர, முகத்தை திருப்பிக் கொண்டாள்.

பள்ளியில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தில் இருந்த அரசனின் முகத்தை, அதில் அச்சு அசலாக வரைந்திருந்தாள்.

“நல்ல முறுக்காம்ல? உனக்கு ஒரு நாள் இருக்கு”

“சோப் கம்பெனி வைக்க சொன்னா நீங்க தான் முறுக்க வச்சுருக்கீங்க. அதான் அதுக்கு விளம்பரம் எழுதுனேன். இதுல என்ன தப்பு?”

வைசாலி தலையை உயர்த்தி கண் சிமிட்டி கேட்க, கையை வேகமாக அவள் கன்னத்துக்கு உயர்த்தியவன் சட்டென சுதாரித்து கிள்ளி வைத்தான்.

“ஆஆ.. அரசன் சோப்பு.. விடுங்க”

“பேச்சு பேச்சு.. எல்லாம் ஓவர் பேச்சு..”

“பேசுவேன். இப்படித்தான் பேசுவேன்”

“இதுக்கு மேல இங்க இருந்தா விபரீதமாகும். கிளம்பு முதல்ல”

“ஏன் ஏன்?” என்று வைசாலி நெருங்கி, “சோதிக்காத.. அப்புறம் நீ தான் வருத்தப்படுவ” என்று எச்சரித்தான்.

“பட மாட்டேன்” என்று ரகசியமாக கூறி, அருகே சென்று கண் சிமிட்டினாள்.

அந்த நெருக்கத்தில் சட்டென அவளது கன்னத்தை பற்றினான். வைசாலி அதிர்ச்சியாக பார்த்தாள். சீண்டும் போது இருந்த தைரியம், இப்போது காணாமல் போய் விட்டது.

அவளது முக மாற்றங்களை கவனித்தவன், புன்னகையோடு குனிந்து கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

One Comment

Leave a Reply