Episode 13

Loading

“என்ன மேடம் கல்யாணம் நல்லா படியா முடிஞ்சுடுச்சு போல” தினகரன் தான் சுலோக்ஷனாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

“ஆமா சார் ரொம்ப நல்லாவே முடிஞ்சது” என்று சாதாரணமாக சொல்லி விட்டு, அழைப்பை துண்டித்து விட்டாள்.

தினகரனுக்கு எரிச்சல்.. வயித்தெரிச்சல். திருமணத்தன்று அவளை மிரட்ட வேண்டும் என்று நினைத்தவன், இரண்டு பேரை அனுப்பி இருந்தான். இப்போது வரை அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சுலோக்ஷனாவை மிரட்டவென்று அழைப்பு விடுத்தால், அவளோ பட்டென துண்டித்து விட்டாள்.

விரேந்திரனுக்கு விசயம் தெரியும் முன் அவளை தூக்க வேண்டும். இப்போது தான் திருமணம் முடிந்ததால் வெளியே வர மாட்டாள். வெளியில் வரும் போது தான் எதுவும் செய்ய வேண்டும் என்று யோசித்து வைத்திருக்க, அதில் மண்ணை லாரிலாரியாக கொட்டினாள் அவள். விரேந்திரன் அந்த நிமிடமே விசயத்தை குடைய ஆரம்பித்து விட்டான்.

இவர்கள் ஆட்டம் எது வரை?

*.*.*.*.*.*.

மாலை விசாலாட்சி செய்த சிற்றுண்டியை எல்லாரும் கொறித்துக் கொண்டிருக்க, “நானும் உன் அப்பாவும் நியூ யார்க் போறோம்டா” என்றார் விசாலாட்சி தன் மகனை பார்த்து.

செழியன் புரியாமல் பார்த்தான்.

“அப்பாக்கு தான அங்க வேலை. நீங்க ஏன் போறீங்க?”

“சும்மா தான இருக்கேன். அதான் கிளம்புறேன்” என்று பதில் வந்தது.

“என்ன அத்த.. செகன்ட் ஹனிமூன்னா?” என்று சுலோக்ஷனா கேட்க, “கிட்டத் தட்ட” என்று பதில் சொன்ன அன்பு செல்வம், மகனை பார்த்து கண்ணடித்தார்.

‘இவங்க வேற நேரங்காலம் தெரியாம… நேத்து கல்யாணமானவனுக்கு ஒன்னத்துக்கும் வழிய காணோம். இந்த வயசுல இவங்களுக்கு செகன்ட் ஹனிமூன்’ என்று நினைத்த செழியன், நினைக்க மட்டுமே செய்தான். வாயை திறக்கவில்லை.

மறுநாள் காலை அவர்கள் கிளம்பி சென்று விட, “இங்கீதம் தெரிஞ்ச அம்மா அப்பா” என்று சுலோக்ஷனாவின் காதில் விழும் படி முணுமுணுத்தான்.

அவள் திரும்பி பார்க்க கண்டுகொள்ளாமல் சென்று விட்டான்.

“என்ன சொன்னான்?” என்று இரண்டு விநாடிகள் யோசித்த பின்னே அவளுக்கு புரிந்தது.

‘அப்போ சரினு சொன்னான். இப்போ இப்படி பேசுறான். ஒரு வேளை நம்மல பிடிச்சுடுச்சோ?’

நினைக்கும் போதே குப்பென வியர்த்தது.

‘நோ நோ இவ்வளவு சீக்கிரம் பிடிக்க கூடாது. கடவுளே…’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு, அவனை பின்தொடர்ந்து நடந்தாள். வீட்டிற்கு வந்ததும் அவளை விட்டு விட்டு கிளம்பி விட்டான்.

அரைமணி நேரத்திற்குப் பின் யாரோ வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினர். வாசலில் பொருத்தியிருக்கும் சிறிய கண்காணிப்பு கேமரா, வீட்டில் எல்லோருடைய கைபேசியிலும் இணைத்து வைத்திருப்பர். காலையில் தான் விசாலாட்சி சுலோக்ஷனாவிடம் காட்டினார்.

வீட்டில் தனியாக இருப்பதால் முதலில் அந்த கேமரா பதிவை பார்த்தாள். மூன்று ஆண்கள் நின்று இருந்தனர். பார்த்தால் நாகரிகமாக தான் இருந்தனர். ஆனால் அதை நம்ப மறுத்து விட்டது நிவியின் மனம்.

வாசலில் நின்று இருக்கும் வாட்ச்மேனை அழைத்து, எதோ ஒரு வேலையை ஒப்படைத்தாள். அவர் அதை செய்ய வேகமாக சென்று விட, இரண்டு நிமிடம் கழித்து கதவை திறந்தாள்.

முழுதாக திறக்காமல் பாதி திறந்த நிலையில், “யார் வேணும்?” என்று கேட்டாள். அவர்களின் நடுநாயகமாக நின்று இருந்தவன், “உள்ள போய் பேசலாமே” என்று கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

“வாட் இஸ் திஸ்? யார் நீங்க எல்லாம்?” என்று சுலோக்ஷனா கத்த, “ஸ்ஸ்… ஏன் மேடம் இப்படி கத்துறீங்க? வந்தவங்கள வாங்கனு கேட்டுப் பழகுங்க. ஏன் வந்தீங்கனு கேட்கீறீங்க?” என்றான்.

“அது தெரிஞ்சவங்களுக்கு… நீங்க இப்படி அராஜகமா உள்ள நுழைஞ்சுட்டு வரவேற்பு வேற வேணுமா? யார் நீங்க?முதல்ல அத சொல்லுங்க?”

“அட ஏன் மேடம் பிபி ஏத்திக்கிறீங்க. நான் தீனா சாரோட ரைட் ஹேண்ட். அவருக்கு எல்லாமே நான் தான். இப்போ தெரிஞ்சுடுச்சுல உட்காருங்க”

கூலாக சொன்னவனை கூர்ந்து பார்த்தாள்.

“இப்ப இங்க ஏன் வந்தீங்க?”

“உங்க கிட்ட சாருக்கு சம்பந்தபட்ட சில விசயங்கள் இருக்குனு கேள்வி பட்டேன். அத கொடுத்தா சம்பந்தப்பட்டவங்க கிட்ட ஒப்படைச்சுடுவேன்”

“தரலனா?”

தெனாவெட்டாவாகவே பதில் வந்தது சுலோக்ஷனாவிடமிருந்து.

“தரலனா எப்படி வாங்குறதுனு தெரியும் மேடம்.. டேய் போய் வீடு முழுக்க தேடுங்கடா” என்று உத்தரவு போட்டான். பின்னால் நின்றிருந்தவர்களிடம்.

அவர்களை தடுக்க முயற்சி செய்யாமல் சுலோக்ஷனா கையை கட்டிக் கொண்டு நின்றாள். அந்த இருவரும் ஒரு அடி எடுத்து வைக்கும் முன், அவர்களின் முன்னால் நான்கு பேர் நின்று இருந்தனர்.

காவலாளி தோட்டத்தில் வேலை செய்பவர்கள் இரண்டு பேருடன், மேலும் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து நின்றிருந்தார். அவர்களை பார்த்து அந்த இருவர் ஜெர்க் ஆனது என்னவோ உண்மை. பளிச்சென புன்னகைத்த சுலோக்ஷனா, “என்ன? பொண்ணு வீட்டுல தனியா தான் இருக்கா. அதுனால என்ன வேணா பண்ணலாம்னு வந்தீங்களா? இந்த ஃபீல்ட்ல நாலு வருசமா இருக்கேன். உங்கள போல எத்தன பேர பார்த்து இருப்பேன். ஃபோன போடு உன் சாருக்கு. போடு போடு” என்றாள்.

அந்த தலைவனின் முகம் தான் விகாரமாகியது.

“என்ன இந்த நாலு பேர அடிச்சு போட்டுட்டா எடுத்துடலாம்னு யோசிக்கிறீங்க போல” என்று அவர்கள் மனதில் நினைத்ததை சரியாக கணித்தவள், “நான் ஒரு ஆளே ரெண்டு பேர அடிச்சு மயக்கம் போட வைக்க முடியும். வீணா ஒரு பொண்ணு கையால அடி வாங்கிட்டு, அதுக்கு வேற பழினு சுத்துவீங்க. அதான் இவங்கள கூப்பிட்டேன். யு நோ வாட். உங்க சாரோட இல்லீகல் பிஸ்னஸ் பத்தி கிடச்சப்போ போலீஸ் ஹெல்ப் கேட்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா…” என்று இழுத்தவள், பக்கத்தில் நின்றிருந்த ஒருவனை ஆழமாக பார்த்தாள்.

பின்னால் நின்றிருந்த ஒருவன் காவல்துறையில் வேலை செய்பவன். அவனுக்கு அது ஒன்றும் அவமானமாக இல்லையோ அமைதியாக தான் நின்றிருந்தான்.

“ஆனா பாருங்க போலீஸ்ல யாரும் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யுறது இல்ல. கிடைக்குற லஞ்சத்துக்கு தான் மதிப்பு. அதான் நான் என் வேலைய நானே பார்த்துக்கலாம்னு வச்சுட்டேன். இப்போ வர அந்த கேஸ் இவ்வளவு சீரியஸ்னு எனக்கு தெரியாது. உங்கள எல்லாம் பார்த்து தான் புரியுது” என்று சிரித்த முகத்தோடு கூறி முடித்தவள், கையை திருப்பி மணி பார்த்தாள்.

கதவின் பக்கம் எட்டி பார்க்க, எதோ ஒரு வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவன் இரண்டு படிகளையும் ஒரே தாவலில் கடந்து வீட்டிற்குள் நுழைந்தான்.

“வாங்க மதன் சார்” என்று சுலோக்ஷனா வரவேற்க, கண்ணை மறைத்து இருந்த கூலிங் கிளாஸை கழட்டினான். நிவியை பார்த்து புன்னகைத்தவன், மற்றவர்களை பார்த்தான்.

அங்கு நின்றிருந்த மற்றவர்களை அனுப்பி விட்டு, மதனை அமர சொன்னாள்.

“என்ன மிஸ்டர் பரிதி. இந்த வீட்டுல உங்களுக்கென்ன வேலை?” என்று கேட்டுக் கொண்டே எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.

தன்னுடைய சீனியர் ஆபிஷரை அங்கு அவன் எதிர் பார்க்கவில்லை. எச்சிலை கூட்டி விழுங்கினான். அந்த தலைவனுக்கும் வியர்க்க தொடங்கியது. மிரட்டி விட்டு சென்று விடலாம் என்று தான் நினைத்தான். அவள் திமிராக பேசியதற்கு பதில் கொடுக்கவே தேட சொன்னான்.

இவள் என்னடா வென்றால் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கிறாள். அவனுக்கு தன் வேலை தோற்றதை விட, தன்னுடைய முதலாளி மாட்டிக் கொண்டால் என்ன ஆகும் என்கிற பயம் தான்.

அவனும் தானே மாட்டுவான். மதனை பார்த்த மாத்திரத்தில் உள்ளுக்குள் குளிர் பரவியது. காட்டிக் கொள்ளாமல் இருக்க பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டியதாக இருந்தது.

“என்ன உன் கிட்ட தான் கேட்கிறேன்” என்று மதன் அழுத்தமாக கேட்க, பரிதிக்கு தொண்டை அடைத்தது. தலைவனே பதில் சொல்ல முன் வந்தான்.

“இங்க மேடம பார்க்க வந்தோம். ஏ.சி.பி சார். பரிதி என் நண்பன் தான்” என்று சொல்ல இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

“நண்பன் ஏன் முதுகுக்கு பின்னாடி நிக்குறான்? பார்த்து பின்னாடி எதாவது வெடிச்சுட போகுது”

மதன் சொன்னதும் பதறி திரும்பி பார்த்து விட்டான். அவனது செயலை பார்த்த சுலோக்ஷனா சிரிப்பை கட்டுபடுத்திக் கொண்டு நின்றாள்.

பரிதியோ முறைக்கவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தான்.

“தனியா இருக்க பொண்ணு கிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு? கிளம்புங்க.” என்று கூறி எழுந்த மதன், அவர்களை வெளியே தள்ளிக் கொண்டு சென்றான்.

“கதவ பூட்டிக்கோங்க நிவி” என்று கூறியவன், அவர்கள் கிளம்பிய பின்னே கிளம்பினான்.

“ஹப்பா…” என்று மூச்சு விட்டவள் அடுத்த வேலையை பார்க்க சென்றாள்.

*.*.*.*.*.*.

வெளியில் சென்று வீடு திரும்பிய செழியனிடம், காவலாளி காலை நடந்த விசயத்தை கூறிவிட்டான். அறைக்குள் நுழைந்த செழியன் எதுவும் பேசவில்லை.

சுலோக்ஷனாவிற்கும் காலை அவன் முணுமுணுத்து சென்ற வார்த்தை மனதில் உறுத்திக் கொண்டிருக்க, அவனிடம் பேசுவதை தவிர்த்தாள். ஆனால் பலமணி நேரமாகியும் அவனிடமிருந்து பேச்சு வராமலிருப்பது எதோ ஒரு வகையில் புதிதாக தாக்கியது.

‘என்னவானது இவனுக்கு?’ என்று யோசித்தாலும் அவனிடம் பேச முடியவில்லை. கையில் காபியோடு மடிக்கணினியோடு மூழ்கி இருந்தான். அவளுக்கே இந்த நிலைமை சங்கடத்தை கொடுத்தது.

புதிதாக திருமணமானவர்கள் இருக்கும் நிலை இது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அது அவளுக்குமே உறுத்தியது. வீட்டில் தனியாக இருப்பது வேறு போரடித்தது. செழியனிடம் சென்று அமர்ந்தவள், “என்ன மளிகை கடைக்காரர் மௌனவிரதமோ?” என்று கேட்டாள்.

அவனிடம் பதில் இல்லை.

“என்ன ஆச்சு எதுவும் பிரச்சனையா?”

“இருந்தாலும் உன் கிட்ட ஏன் சொல்லனும்?” என்று பட்டென பதில் வந்தது.

நேரடியாக கிடைத்த அவமானத்தில் சுலோக்ஷனாவின் முகம் இறுகியது.

“என்னனு கேட்டது என் தப்பு தான். இனி கேட்க மாட்டேன்” என்றவளுக்கும் சுயமரியாதை முக்கியமாக இருந்தது.

இன்னும் சுலோக்ஷனா பிடிக்கும் என்ற இடத்தில் இருந்து காதல் கடலுக்கு அருகில் கூட வரவில்லை.

அவன் அவமானபடுத்தினால் தன் மீது கோபமோ என்று யோசிக்கும் அளவுக்கு, அவர்களின் உறவு ஆழமாகவும் இல்லை. முதல் கோணல் முற்றிலும் கோணல் தான்.

Leave a Reply