Episode 14
![]()
செழியனுக்கு வீட்டில் அடைந்து இருப்பது ஒரு மாதிரியாக இருந்தது. வெளியே சென்றால் மற்றவர்கள் அவனை ஒரு மாதிரி பார்க்கின்றனர். சுலோக்ஷனாவிடம் பேசலாமென்றால் கோபம் வேறு வந்து தடுத்தது. அவனது கோபம், பிரச்சனை என்று வந்ததும் தன் மனைவி தன்னை அழைக்கவில்லை என்பது தான்.
ஏன்? வந்ததற்கு பிறகு கூட வாயை திறந்து ஒரு வார்த்தை பிரச்சனையை பற்றி பேசினாளா? இல்லையே? பேச்சை தவிர்த்து ஓடத் தானே முயற்சி செய்தாள். வழிய சென்று கேட்க ஈகோ தடுத்தது. நேற்றே அவளாக தான் வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டான்.
எதுவாக இருந்தாலும் அவளாக சொல்ல வேண்டும். சொல்லவில்லை என்றால் இப்படித் தான் கோபத்தைக் காட்டுவான். அதை அவளும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான். இவனுக்கு மேல் கோபத்தில் இருந்தாள் சுலோக்ஷனா.
வெயில் கொளுத்துவது கூட தெரியாமல், வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் புல் தரையில் அமர்ந்து இருந்தாள். இவ்வளவு நேரம் கோபத்தில் நடந்து விட்டு, கால் வலி பொறுக்காமல் காலை பிடித்து விட்டு கொண்டிருந்தாள்.
“அப்படி என்ன இவன் சொத்தையா கேட்டுட்டேன். இப்படி பதில் சொல்லுறான். ச்ச… இதுக்கு தான் அப்பா மாதிரி ஒரு ஹஸ்பண்ட் வேணும்னு கேட்டேன். அப்பா எவ்வளவு பொறுமையா இருப்பார். சும்மா ரெண்டு கேள்வி கேட்டதுக்கு இப்படி பேசுறான். சுத்தமா அப்பா மாதிரி இவனுக்கு பொறுமை இல்ல. இன்னும் என்னலாம் இல்லையோ… கடவுளே தெரியாத்தனமா சம்மதம் சொல்லிட்டேனோ? அப்போ அப்பாவோட சோகத்த பத்தி யோசிச்சேன். என் லைஃப் பத்தி யோசுச்சு இருக்கனுமோ? ராமா.. என்ன பிரச்சனையா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். ஆனா இது… நோ… நோ ப்ளீஸ்” என்று மனதினுள் பேசியவள் கடைசி வாக்கியத்தை வாய் விட்டு சத்தமாக கூறி விட்டாள்.
அவளை காணவில்லை என்று தேடி வந்து செழியன், அவளது வார்த்தையை கேட்டு விட்டு எதிரில் சென்று நின்றான். சுலோக்ஷனா கண்ணை மூடி கையை கூப்பி பலமாக வேண்டிக் கொண்டிருந்தாள்.
அவள் அமர்ந்து இருந்த தோரணை செழியனுக்கு சிரிப்பை வரவழைத்தது. “க்கும்” என்று தொண்டையை லேசாக செரும, கண்ணைத் திறந்து பார்த்தாள். அவளை பார்த்தவன் வானத்தை நிமிர்ந்து பார்த்தான். உச்சியில் நின்றிருந்த சூரியனை பார்க்க முடியவில்லை. குனிந்து புல் தரையை பார்த்து விட்டு அவளை பார்த்தான்.
பார்த்த பார்வையில் அத்தனை கேலி நிறைந்து இருந்தது.
“அங்க வள்ளுனு விழுந்துட்டு இங்க சிரிச்சுட்டு நிக்குறத பாரு..” என்று முனங்கியவள், “இப்போ எதுக்கு முன்னாடி வந்து நிக்கிறீங்க? போய் லாப்டாப்ப கட்டிட்டு குடும்பம் நடத்துங்க. தள்ளுங்க” என்றாள்.
‘நான் என்னமோ இவ கூட குடும்பம் நடத்த மாட்டேன்னு சொன்ன மாதிரி பேசுறா?’ என்று நினைத்தவன், “அது இருக்கட்டும் இதென்ன மொட்ட வெயில்ல புல்லுல உட்கார்ந்து இருக்க?” என்று கேட்டான்.
“ஹான்… தவம் பண்ணுறேன்”
“எந்த கடவுள பார்க்க?”
“என்ன படைச்சு உங்க கிட்ட மாட்டி விட்ட கடவுள”
“கூப்புடு கூப்புடு.. நானும் பஞ்சாயத்து வைக்கனும்” என்று செழியன் சொல்ல முறைத்து பார்த்தாள்.
“சரி இப்படி ஒரு தவத்த உனக்கு யாரு சொல்லி கொடுத்தது?” என்று கேட்டவனின் உதடுகள் சிரிக்க துடித்துக் கொண்டிருந்தது.
“பெருமாள் கோவில்ல மணியடிக்குறவன்” என்று பட்டென வந்த பதிலில், தன்னை மறந்து சிரித்து விட்டான். சுலோக்ஷனா உதட்டை சுழித்து திரும்பிக் கொண்டாள்.
“நல்ல தவம் கன்டினியூ… ஆனா சாப்பிட்டு வந்து பண்ணு” என்று சிரித்தபடி சொல்ல, “எனக்கொன்னும் வேணாம். தவம் பட்டினியா தான் பண்ணனும்” என்றாள்.
“ரொம்ப சந்தோசம் அப்புறம் சாப்பாடு இல்லனு என்ன குறை சொல்ல கூடாது” என்று நடக்க ஆரம்பித்து விட்டான். சுலோக்ஷனா அப்போதும் வரவில்லை. வருவாள் என்ற நம்பிக்கையில் மேசையில் சென்று அமர்ந்து விட்டான்.
அவள் வருவாளா? என்று வாசலையே பார்த்து கொண்டிருக்க, வேலை செய்பவர் பரிமாற ஆரம்பித்தார்.
“சுலோக்ஷனா வரட்டும்” என்று சொல்ல, “அம்மா எப்பவோ சாப்பிட்டாங்களே” என்றார் வேலை செய்பவர்.
‘அடிப்பாவி நல்லா தின்னுட்டு போய் தான் வெயில உட்கார்ந்து இருக்கியா?’ என்று நினைத்தவன் பழச்சாறை எடுத்துக் கொண்டு செல்ல, “யாருக்கு இது?” என்று கேட்டான்.
“அம்மா தான் கேட்டாங்க. உங்களுக்கும் கொண்டு வரவா?” என்று கேட்க, பதிலே வரவில்லை.
“போ போ” என்பது போல் சைகை செய்தவன், ‘நம்மல முட்டாளாக்கிட்டாளே…’ என்று நினைத்துக் கொண்டான். அன்று இரவு படுக்கையில் அமர்ந்து இருந்தவனிடம், “கொஞ்ச நாள் உசாரா இருங்க” என்று மொட்டையாக சொன்னாள் சுலோக்ஷனா.
“ஏன்?”
“இன்னைக்கு நடந்த விசயம் அப்படி” என்று ஆரம்பித்தவள் எல்லாம் சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டவன் பதில் எதுவும் சொல்ல வில்லை.
“நான் இந்த கேஸ்ல இன்னும் டீப் ஆ இறங்கல. இதுக்கே இவ்வளவு பண்ணுறான். அடுத்து யார டார்கெட் பண்ணுவான்னு தெரியாது. அதான் உங்க கிட்ட சொல்லுறேன். கேர் ஃபுல்” என்று கூறி முடிக்க, அப்போதும் அமைதியாக தான் இருந்தான்.
‘என்ன ஆச்சு? கேட்டா காலையில மாதிரி அசிங்க படுத்துவானோ?’ என்று யோசித்து கொண்டிருந்தாள்.
“அவங்க வந்ததும் நீ ஏன் எனக்கு கால் பண்ணல?” என்று கேட்க துடித்த நாவை அடக்கி கொண்டு அமர்ந்து இருந்தான். சிறிது நேரம் அமைதியாக கழிய,
“எனக்கு எதுவும் பிரச்சனை வராது. உனக்கு பிரச்சனை வராம பார்த்துக்க” என்றதோடு முடித்துக் கொண்டான்.
*.*.*.*.*.*.
மதிய நேரம், இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள் யாழினி. சாலினி வழக்கம் போல் பாட்டை போட்டு ஆடிக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்த விரேந்திரன், “சாலு போதும். கீழ யம்மு கத்திட்டு இருக்கா” என்று பாட்டை நிறுத்தி விட்டு கூறினான்.
“ப்பா…” என்று சாலினி சினுங்கினாள்.
“யாழு எந்திரி. இவ்வளவு சத்தத்துல எப்படி தூங்குற நீ?” என்று அவளை உலுக்கி எழுப்பினான்.
“அதெல்லாம் பழகிடுச்சு பா” என்றவள் மேலும் இழுத்து போர்த்திக் கொண்டாள்.
“காலையில சீக்கிரமா எந்திரிச்சு யோகா பண்ணிட்டு லன்ச் டைம் தூங்குறத பாரு.. யாழு ஒழுங்கா சாப்பிட வா. இல்ல உன் சாக்லேட்ட காலி பண்ணிடுவேன்” என்று முடிப்பதற்குள், “அடி பிண்ணிடுவேன் சாக்லேட் மேல கை வச்சனா” என்று குரல் வந்தது.
“இதுல மட்டும் உசாரு தான்” என்று சாலினி நொடித்துக் கொள்ள, யாழினி எழுந்து விட்டாள். இருவரும் சாப்பிட கீழே வந்தனர். யமுனா வகைவகையாக சமைத்து வைத்திருந்தாள். ஆம் யமுனாவே தான்.
மேசையில் அமர்ந்த சாலினி, “என்ன சொல்லுங்க அத்த கை பக்குவம் உங்களுக்கு வரவே வராது. பாட்டிங்க கூட வேஸ்ட். அத்த தான் பெஸ்ட்” என்றாள். இந்த விசயத்திற்கு யமுனா கோபப்படவில்லை. அவளது குரு ஜானவி தானே.
“எப்படிமா இவ்வளவு நல்லா சமைக்க கத்துகிட்டீங்க?” என்று யாழினி கேட்க, “உங்கம்மா எங்க சமைக்க கத்துகிட்டா. எல்லாம் உங்க தாத்தா பண்ண வேலை.” என்று பதிலளித்தான் விரேந்திரன்.
“அப்படி என்ன பண்ணார்? என்று சாலினி ஆர்வமாக கேட்டாள்.
திருமணம் செய்வதற்கு யமுனா வைத்த முக்கிய நிபந்தனை சமைக்க மாட்டேன் என்பது தான். ஆனால் திருமணம் முடிந்த ஒரு மாதத்தில், விரேந்திரனின் தந்தை அவளிடம் சமைப்பதை பற்றி கேட்டார்.
“எத்தனை நாள் தான் இந்த சமையல் காரவங்க சமைச்சு சாப்பிடுறது. உனக்கு தெரிஞ்சா ஒரு நாள் சமைச்சு போடுமா” என்று கேட்க, யமுனா முழித்தாள்.
அவளுக்கு சாப்பிடுவதை தவிர வேறொன்றும் சாப்பாட்டை வைத்து செய்ய தெரியாது. அவள் முழிக்க, விரேந்திரன் அவளது கண்டீசனை போட்டு உடைத்து விட்டான்.
மாமனாரின முகம் வாடுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. தந்தையின் பாசத்தை இழந்தவள் அவர் மூலமாக தான் மீட்டுக் கொண்டாள். அவர் வருத்தப்பட்டால் தாங்குமா?
உடனே சமையல் கற்றுக் கொள்ள கிளம்பி விட்டாள். அதற்கு பலி விரேந்திரன் தான். அவனை சாப்பிட வைத்து அதில் உள்ள குறைகளை குறித்து, அதற்கு என்ன செய்ய வேண்டும் என ஜானவியிடம் கேட்பாள். ஓரளவு நன்றாக வந்த பின்னே மற்றவர்களுக்கு கொடுப்பாள்.
“அந்த சோதனை எலி இன்னும் எப்படி மா உயிரோட இருக்கு?” என்று தந்தையை இருவரும் ஆச்சரியமாக பார்க்க, அவன் முறைத்து பார்த்தான்.
“நீங்க எல்லாம் பிறக்குறதுக்குள்ள எல்லா எக்ஸ்பெரிமென்டையும் என்னை வச்சு முடிச்சுட்டா” என்று விரேந்திரன் சோகமாக சொல்ல, யமுனா முறைக்க, மற்றவர்கள் சிரித்தனர்.
