Episode 15

Loading

கணினியை குடைந்து கொண்டிருந்த செழியனின் கைபேசி மெல்லிய ஒலி எழுப்ப, திரும்பிப் பார்த்தான். தெரியாத எண். அழைப்பை யோசனையோடு எடுத்து காதில் வைக்க, “ஹலோ மிஸ்டர் அன்பு செழியன். எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரித்தான் தீனா.

“நீங்க யாருனு சொல்லலயே?”

“என்ன அன்பு செழியன் உன் பொண்டாட்டி என் ஜாதகத்தையே வச்சு இருக்கா. என்னை பத்தி உன் கிட்ட சொல்லி வைக்கலையா?” என்று கேட்க, செழியனுக்கு புரிந்து போனது.

“அத சொல்ல தான் போன் பண்ணியா?”

“அட! பொண்டாட்டி மேல ஆசை எல்லாம் இல்லையா உனக்கு? கல்யாணம் முடிச்சோமா ஹனிமூன் போனோமானு இருக்காம இதென்ன விளையாட்டு?”

அந்த பக்கம் தினகரன் நாற்காலியில் சாய்ந்து கொண்டு வினவிக் கொண்டிருக்க, செழியன் மெத்தையில் சாய்ந்து கொண்டு, “ஹூம்ம்.. உனக்கு இருக்க அக்கறை என் பொண்டாட்டி இருக்கனுமே. சீக்கிரமா இந்த பிரச்சனைய முடிச்சுட்டு வர சொன்னா இழுத்தடிச்சுட்டு இருக்கா” என்று சோகமாக கூறினான்.

“என்ன நக்கலா?” என்று தினகரன் உறும, “அட இல்ல பா. உனக்கு கூட கல்யாணமாகி ஒரு பொண்ணு இருக்குல. என் ஃபீலிங் உனக்கு கூட வா புரியல” என்று செழியன் சோகத்தை பிழிந்தான்.

“அப்ப அந்த ஆதாரத்தை எல்லாம் என் கிட்ட கொடுத்துட்டு அவள கூட்டிட்டு கிளம்பு. பொழச்சு போங்கனு விட்டுறேன்”

“அடேங்கப்பா அவ கிட்ட வேகலனு என் கிட்ட காட்டுறியா? ஒரு விசயம் தெரிஞ்சுக்க. நீ பேசிட்டு இருக்கது அன்பு செழியன் கிட்ட. அன்புனு பேர்ல இருக்கதால ரொம்ப அன்பா இருப்பேன்னு நினைக்காத. இந்த சென்னை குள்ள தான இருக்க? விசாரிச்சுட்டு அப்புறம் பயமுறுத்து. கடைசி விசயம் எங்க பாதுகாப்பு எல்லாம் நிவிக்கு தேவை இல்லை. அவளே அவள பார்த்துப்பா. முடிஞ்சா அவள தொடு. அப்புறம் பேசலாம் டீல்” என்று கூறி முடித்தவன், பதிலை எதிர் பாராமல் துண்டித்து விட்டான்.

அறையில் சுலோக்ஷனா இருப்பது அவனுக்கு தெரியாது. அவனது ஜிம் பகுதி அவளுக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. அதற்குள் அடிக்கடி நுழைந்து கொள்வாள்.

செழியன் ஒரு முறை, “அடிக்கடி உள்ள வர கொஞ்சமா வொர்க் அவுட் பண்ணா என்ன ?” என்று கேட்டான்.

“என்னது? எங்கப்பா கஷ்டபட்டு சம்பாதிச்சு எங்கம்மா கடுகையும் மிளகையும்” என்று இழுக்க, ” உப்பு காரம்” என்று செழியன் எடுத்து கொடுத்தான்.

“ஆமா இப்படி எல்லாத்தையும் பார்த்து பார்த்து போட்டு சமைச்சு எனக்கு கொடுக்க… அத சாப்பிட்டு வந்து இங்க ஒடி வேஸ்ட் பண்ணனுமா? நெவர்

“சிறந்த கொள்கை. அப்படியே இரு அதான் எனக்கும் நல்லது”

‘என்ன… மாத்தி மாத்தி பேசுறான்’ என்று சுலோக்ஷனா குழம்பிக் கொண்டிருக்க அருகில் வந்தவன், ” பெட்டே தேவை பாடாது” என்று அவள் காதில் முணுமுணுத்து விட்டு தோளை இடித்துக் கொண்டு சென்று விட்டான்.

முதலில் இடித்த இடத்தை தடவி கொடுத்த சுலோக்ஷனா, அவன் சொன்னதை பிறகு தான் யோசித்து பார்த்தாள். சட்டென மூச்சை இழுத்து பிடித்தவள், “அய்யய்யோ இவன் என்ன அடிக்கடி வில்லங்கமா பேசி வைக்குறான்.” என்று அலறினாள்.

இப்போதும் அந்த அறையில் தான் இருந்தாள். பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்தவள், செழியன் கடைசியாக பேசியதை கேட்டு ஆச்சரிய பட்டாள்.

‘என்ன ஒரு ஸ்டைல்! அரண்டு இருப்பான் தீனா’ என்று நினைத்தவள், அதை நேராக சொல்லவில்லை.

வேலைக்குப் போகாமல் ஒரு வாரம் வீட்டிலேயே தான் இருந்தாள். அது செழியனின் உபயம். மூன்றாவது நாள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தவளை முறைத்து பார்த்தவன், “ஒரு வாரம் லீவு போட்டுட்டு உடனே ஆபிஸ் போனா நமக்குள்ள ஒன்னும் சரி இல்லனு நினைப்பாங்க சுலோக்ஷனா” என்றான்.

“அடுத்தவங்களுக்காக நாம வாழல செழியன்” என்று சுலோக்ஷனாவும் விடாமல் பேச, ” அடுத்தவங்க முன்னாடி நம்ம பர்ஸ்னல்ல கடை பரப்ப வேணாம்னு சொல்லுறேன்” என்றான் முடிவாக.

அவன் சொல்வதும் சரியாக பட்டது. அதற்கு மேல் சுலோக்ஷனா வாயை திறக்கவில்லை.

வீட்டில் அடைந்து கிடந்து எப்போதடா வெளிமே செல்வோம் என்று விடுமுறை முடிந்ததும் பறந்து விட்டாள். போனதும் அவள் பார்த்த முதல் வேலை, அவளுக்கு கிடைத்த அந்த பென் ட்ரைவ்வை எடுத்தது தான். பத்திரமாக வைத்து இருந்த இடத்திலிருந்து எடுத்தவள், தன்னுடைய மடிக்கணினியில் இணைத்தாள்.

கிட்டதட்ட இரண்டாயிரம் கோடி கருப்பு பணம் தினகரனின் கையில் இப்போது இருக்கிறது. வாசனை திரவியங்கள், பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்பவன், இறக்குமதியின் போது போதை பொருட்களை வரவழைத்து இருக்கிறான்.

அவன் கைபேசியில் டீல் பேசியது. அவர்களது சட்டவிரோதமான ஒப்பந்த பத்திரம். இரண்டாயிரம் கோடி இப்போது யார் யாரிடம் இருக்கிறது? எங்கு இருக்கிறது? என மொத்த விவரங்களும் தனி தனி கோப்பாக போட்டு, தேவையானவைகள் எல்லாம் ஸ்கேன் செய்து வைத்து இருந்தான் சுலோக்ஷனாவிடம் ஆதாரத்தை கொடுத்தவன்.

பார்த்ததும் ஒரு நிமிடம் ஆடிப்போனாள்.

“அடப்பாவி.. இவ்வளவு பணத்த வச்சு என்னடா செய்ய போற? வெறும் மூனு வேளை தான்டா சோறு திங்க முடியும். ஆறு வேளை பணத்தையே திங்கலாம்னு நினைச்சுட்டு இருக்கானோ” என்று அவள் போக்கில் பேசிக் கொண்டே போக, பக்கத்திலிருந்தவள் பட்டென அவள் தலையில் அடித்தாள்.

“எரும மணி. எதுக்கு இப்போ அடிச்ச?”

“இவ்வளவு முக்கியமான விசயத்த பார்த்துட்டு இருக்க. அப்பவும் சோறு தான் ஞாபகம் வருதா உனக்கு?” என்று கேட்டு முறைத்தாள்.

“ஹி ஹி சோறு அதான எல்லாம்…” என்று சுலோக்ஷனா வழிய மணிமேகலை தலையிலடித்துக் கொண்டாள்.

“சரி சரி வெட்டி பேச்சு பேசாம வேலைய பாரு” என்ற சுலோக்ஷனா, மீண்டும் திரையில் தெரிந்த ஆதாரங்களை பார்த்தாள்.

“ஏன் மணி இந்த பென்ட்ரைவ் பத்தி உனக்கும் எனக்கும் மட்டும் தான தெரியும்?”

“ஆமா நிவி”

“இப்படி ஒரு ஆதாரம் நம்ம கிட்ட இருக்குனு தெரிஞ்சது நம்மல தவிர இன்னும் ரெண்டு பேர். அந்த ரெண்டு பேருல யாரோ தீனாவோட ஆள்” என்று நிவி சொல்ல மணிமேகலை அதிர்ந்து போனாள்.

“என்ன நிவி சொல்லுற?” என்று பதறி சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மெல்லிய குரலில் கேட்டாள்.

“ஆமா. என் கல்யாணத்துக்கு முதல் நாள்ல இருந்து, இப்போ வர இத கொடுக்க சொல்லி நிறைய மிரட்டல். அப்படி என்ன இருக்குனு நாமலே பார்க்கல. இவங்களுக்கு எப்படி தெரிஞ்சதுனு யோசிச்சேன். அப்புறம் தான் கெஸ் பண்ணேன். நம்ம ஆளு யாரோ தான்னு. நீயும் நானும் சேர்ந்து அத இந்த இடத்துல ஒழிச்சு வச்சுட்டோம். சோ இருக்க இடம் தெரியாததால தான் இவ்வளவு மிரட்டல்.” என்று கூறி முடிக்க, மணிமேகலையால் நம்ப முடியவில்லை.

திடீரென எதோ பொறிதட்ட, “ஹேய்…” என்று நிவியின் தோளை பிடித்து தன் பக்கம் இழுத்த மணி காதில், “நீ லீவ்ல இருந்தப்போ பாஸ்கர் தான்டி என் கிட்ட ரெண்டு தடவ கேட்டார். அந்த ஆதாரத்த எடுத்து நாமலே எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்ணலாம். நிவி பாவம் புதுசா கல்யாணமானவங்கனு சொல்லி கேட்டான். நான் தெரியாது உன் கிட்ட இருக்குனு சொல்லிட்டேன். அதுக்கு எமோஷனலா கூட எதோ பேசினான்” என்று நிறுத்தினாள்.

அரை நிமிடம் யோசித்தவள், “ஹான்.. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையாம். ஏன் இப்படி எனக்கே தெரியாம மறைக்கனும்னு பிரைன் வாஸ் கூட பண்ணான்” என்றவள் பல்லை கடித்தாள். அவள் பக்கம் நன்றாக திரும்பி அமர்ந்த நிவி, “யு நோ வாட்? ரெண்டு பேருமே கூட்டு களவாணிங்க தான். கையும் களவுமா பிடிக்குறேன் பார்” என்றாள்.

மணிமேகலைக்கு தலை சுற்றியது.

“அடப்பாவிங்களா” என்று மணி அலற, பாஸ்கர் மாதவன் இருவருமே வேகமாக நிவியின் கேபினுக்குள் நுழைந்து விட்டனர்.

“என்னாச்சு மணி?” என்று பாஸ்கர் கேட்க, நிவி, “ஸ்ஸ் கத்தி தொலையாதடி” என்று அதட்டினாள்.

“அதெப்புடி நிவி கத்தாம இருக்க முடியும். எவ்வளவு பெரிய ஃப்ராடு. ஹய்யோ என்னடா சென்ட் பாட்டில்ல எல்லாம் கடத்தல் தொழில் பண்ண ஆரம்பிச்சுடீங்க” என்று மணிமேகலை விடாமல் புலம்பினாள்.

“இதுக்கும் மேல எல்லாம் பார்த்தாச்சு. பொறுமையா இரு. இவனுக்கு இனி வீழ்ச்சி தான்” என்று சொல்லிக் கொண்டே சுலோக்ஷனா மடிக்கணினியில் எதையோ தட்டிக் கொண்டிருந்தாள்.

“என்ன ஆதாரம் நிவி?” என்று பாஸ்கர் கேட்க, “தினகரன் ட்ரக்ஸ் இம்போர்ட் பத்தி யாரு கிட்டயோ டீட்டெயிலா பேசிட்டு இருக்க ஆடியோ இருக்கு. அப்புறம் ப்ளாக் மணி பத்தி பேச்சு அடிபடுது. இத வச்சு எவ்வளவு தூரம் கொண்டு போக முடியும்னு பார்க்கனும்” என்றாள் பட்டும் படாமல்.

மாதவன் குனிந்து விவரத்தை பார்ப்பதற்குள், அணைத்து விட்டு பென் ட்ரைவை கையில் எடுத்துக் கொண்டாள்.

“மோகன் சார் கிட்ட நானே விசயத்த சொல்லனும்னு தான் உங்கள எல்லாம் சொல்ல வேண்டாம்னு சொல்லி இருந்தேன். இப்போ சொல்லிட்டு வரேன். இத அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்” என்று கூறியவள், நிற்காமல் நடந்து விட்டாள்.

மாதவன் பாஸ்கர் இருவரது கண்ணும் கழுகு போல் அந்த நீல நிற பென் ட்ரைவை வட்டமிட்டன. அதை பார்த்த மணிமேகலை அதிர்ந்து, ‘பாவி பசங்க. இத கொடுக்க ஒருத்தன் உயிரையே விட்ருக்கான். அத பத்தி கூட நினைக்காம காசுக்காக இப்படி மாறிட்டீங்களே.. இருங்கடா உங்கள நிவி வச்சு செய்வா அப்புறம் இருக்கு’ என்று மனதிலேயே அர்ச்சனை செய்து விட்டு, வேலை பார்ப்பது போல் குனிந்து கொண்டாள். அவர்கள் இருவரும் வெளியேறி விட்டனர்.

Leave a Reply