வரம் 25
![]()
அந்த மண்டபம் மொத்தமும் ஆட்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரத்தில் நிச்சயதார்த்தம். நாளை காலை திருமணம்.
மொத்தமும் மதுரையில் தான் ஏற்பாடாகி இருந்தது. சொந்தபந்தங்கள் நட்புக்கள் எல்லோரும் சேர்ந்து, ஆளுக்கொரு வேலையாக விழாவை கவனித்துக் கொண்டிருந்தனர்.
அந்த ஆர்பாட்டங்களை வெறுப்பாக பார்த்தபடி உள்ளே நுழைந்தான் மாதவன்.
திருமணத்தை நிறுத்தியே தீருவேன் என்று முடிவு செய்து சென்றவனை, எந்த வேலையும் செய்ய விடாமல் கட்டிப்போட்டது அவனுடைய தந்தையின் உடல் நிலை.
ஆனால் இன்று நிச்சயதார்த்தம். நாளை திருமணம் என்பதால் ஓடோடி வந்திருந்தான்.
முன்னால் இருந்த பெண்களும் ஆண்களும் அவனை வரவேற்றனர்.
“வாங்க தம்பி உட்காருங்க” என்று உபசரிக்க, “நான் உட்கார வரல” என்று எரிச்சலாகக் கூறினான்.
அவனது முகத்தில் தெரிந்த அதீத எரிச்சலை பார்த்த பெண்மணி, “நீங்க எல்லாரும் போய் மத்த வேலைய பாருங்க” என்று மற்றவர்களை அனுப்பி வைத்தார்.
“நீங்க யாரு தம்பி? அரசனுக்கு ஃப்ரண்டா?” என்று கேட்டு வைக்க, மாதவன் பல்லைக்கடித்தான்.
“இல்ல.. நான் வைசாலியோட லவ்வர். எனக்கும் அவளுக்கும் தான் கல்யாணம் நிச்சயமாச்சு” என்று கூற, அவர் அதிர்ந்தாலும், “கொஞ்சம் பொறு பா. வர்ரேன்” என்று வேகமாக சென்று விட்டார்.
அப்போது தான் மாதவனின் கோபம் மட்டுப்பட்டது. இந்த விசயம் பரவினால், நிச்சயமாக திருமணத்தில் குளறுபடி ஏற்படும். அதை வைத்து, தான் நினைத்ததை சாதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
அவனிடம் விசயத்தை கேட்டு விட்டு சென்றவர், ஒரு பெரியவரை அழைத்து வந்தார்.
“இந்த பையன் தான்” என்று காட்ட, அவர் தோளில் இருந்த துண்டை உதறி போட்ட படி, வேகமாக மாதவனிடம் வந்தார்.
“தம்பி.. கொஞ்சம் இப்படி வாங்க”
“யார் நீங்க?”
“வாங்க தம்பி சொல்லுறேன். அரசனுக்கு தாத்தா தான் நானு. வாங்க” என்று மாதவனை வழுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு, அந்த மண்டபத்தின் மேல் தளத்துக்குச் சென்றார்.
அங்கு சில அறைகள் தங்குவதற்கு இருந்தது. அதில் ஒரு அறைக்குள் நுழைந்தனர்.
“இப்ப சொல்லுங்க தம்பி.. என்ன விசயம்?”
மாதவன் சொன்னதையே திருப்பி சொல்ல, “முன்னாடி நிச்சயமாகி இருந்துச்சு.. இப்ப இல்ல அதான? அத ஏன் இப்ப வந்து சொல்லுற?” என்று கேட்டு வைத்தார்.
இந்த கேள்வியை மாதவன் எதிர் பார்க்காமல் தடுமாறி விட்டான். திருமண வீட்டில், எதைச் சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்று நினைத்து விட்டான் போலும். இது சினிமாவோ நாடகமோ அல்ல. யார் வந்து எதைச்சொன்னாலும் நம்பி, உடனே பிரச்சனையை கிளப்புவதற்கு. நான்கையும் ஆராயாமல் பேசுவது இல்லை என்று புரியவில்லை அவனுக்கு.
உடனே சுதாரித்து, “நானும் வைசாலியும் லவ் பண்ணோம் சார். கல்யாணம் நிச்சயமாகிடுச்சு. எதோ பிரச்சனையால நின்னு போச்சு. இப்ப அவளுக்காக வந்துருக்கேன். அதுக்குள்ள அந்த அரசன் அவள ஏமாத்தி கல்யாணம் பண்ண பார்க்குறான்” என்று பல்லைக் கடித்தான்.
அரசன் ஏமாற்றுகிறான் என்று சொன்னதும், அவருக்கு கோபம் வந்து விட்டது.
மீசையை முறுக்கிக் கொண்டு, “தம்பி பார்த்துப்பேசு. அரசன் அந்த பொண்ண ஏமாத்தல. பொண்ணோட சம்மதத்துல தான் இந்த கல்யாணம் நடக்குது” என்று அதட்டினார்.
எதிர்பார்த்த திசையை விட்டு விசயம் வேறு பக்கம் திரும்பவது போல் இருக்க, மாதவனுக்கு எரிச்சலாக வந்தது.
அவன் சொல்வதை உடனே நம்பிக் கொண்டு, இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் எதிர்பார்த்தான். நடக்கவில்லை.
“சார்.. இப்ப இந்த கல்யாணம் நிக்கலனா.. நான் போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுப்பேன். என் கிட்ட நாங்க நிச்சயம் பண்ணிக்கிட்ட ஃபோட்டோ இருக்கு.” என்று பயமுறுத்த, அவர் உக்கிரமாக பார்த்து வைத்தார்.
“எங்க அரசனே பெரிய போலீஸ் தான் தம்பி. இந்த போலீஸ் பூச்சாண்டி எல்லாம் என் கிட்ட காட்டாத.” என்று எச்சரித்தவர், “இரு.. உன் கிட்ட பேச வேற ஆள கூப்பிடுறேன். நான் இன்னும் கொஞ்சம் பேசுனா நீ அடி வாங்காம போக மாட்ட” என்றார்.
மாதவன் அதிர்ந்து நிற்க, தன்னிடமிருந்த கைபேசியில் அமுதவல்லியை அழைத்து அங்கு வர வைத்தார்.
“என்னங்க பெரியப்பா?” என்று உள்ளே வந்தவர், மாதவனை பார்த்து ஆச்சரியபட்டார். ஆனாலும் அவன் பக்கம் திரும்பாமல் நின்று கொண்டார்.
“இந்த தம்பி என்னென்னவோ பேசுது அமுதா. என்னனு கேளு”
“நான் பேசுறேன். நீங்க போங்க”
“இல்லமா.. நான் இருக்கேன்”
“இருக்கட்டும் பெரியப்பா”
மாதவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, “அப்ப நான் வாசல்ல நிக்கிறேன். எதுனாலும் சத்தம் கொடு” என்றவர் மீசையை முறுக்கிபடி மாதவனை முறைத்துக் கொண்டே சென்று விட்டார்.
“சொல்லுபா டாக்டர் தான நீ?” என்று அமுதவல்லி கேட்க, மாதவனுக்கு அவரை தெரியவில்லை.
“என்னை தெரியுமா?”
“தெரியும். என்ன விசயமா வந்த?”
“இங்க பாருங்க.. இந்த கல்யாணம் நடக்க கூடாது. வைசாலி எனக்கு நிச்சயமான பொண்ணு”
“அந்த கல்யாணம் தான் நின்னுடுச்சே. அது முடிஞ்சு ஒரு வருசத்துக்கு மேல ஆகுதே. இப்ப ஏன் அதைச்சொல்லுற?”
மாதவன் அவரை அதிர்ச்சியாக பார்த்து விட்டு, “நீங்க யாரு?” என்று கேட்டான்.
“நான் அரசனோட அம்மா. நீ இங்க வருவனு சொன்னான் என் மகன். நீயும் வந்துருக்க”
‘அம்மாவா! சொன்னானா?’ என்று அவன் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக பார்த்தான்.
“பழசை ஏன் தூக்கிட்டு அலையுற? விட வேண்டியது தான?” என்று அமுதவல்லி அமைதியாக கேட்டதும், மாதவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“முடியாது. உங்க மகன் என் வாழ்க்கைய பறிப்பான். நான் சும்மா வேடிக்கை பார்ப்பனா?”
மாதவன் கோபத்தில் கத்த, அமுதவல்லி அவனை பாவமாக பார்த்தார்.
“உன் அப்பாவுக்கு உடம்பு முடியலனு வந்தியாமே. இப்போ எப்படி இருக்கார்?” என்று விசாரிக்க, மாதவன் குழம்பி விட்டான்.
அவன் ஒன்றை பேசுகிறான். அவர் ஒன்றே கேட்கிறாரே?
“இங்க பாருங்க.. விசயத்தை டைவர்ட் பண்ணாதீங்க. வைசு என் காதலி. எனக்கு மனைவி. உங்க பையன் நடுவுல வந்து தட்டி பறிக்கிறான். இதுக்கு நான் விட மாட்டேன்”
“இன்னும் பத்து நிமிசத்துல பொண்ணு வீட்டுக்காரவங்க வந்துடுவாங்க. வைசாலிய நானே இங்க கூட்டிட்டு வரேன். பேசி முடிவுக்கு வரலாம். சரினா இங்கயே உட்காரு” என்று கூறி விட்டு, அமுதவல்லி கிளம்பி விட்டார்.
மாதவனுக்கு அவரது அணுகுமுறை புரியவே இல்லை. சரியாகத்தான் பேசுகிறோமா? என்று குழம்பி விட்டான்.
பத்து நிமிடங்களில், வைசாலி தன் குடும்பத்தோடு அங்கே வந்து சேர்ந்தாள். வரவேற்பு உபசரிப்பு எல்லாம் முடித்து விட்டு, வைசாலியை அமுதவல்லி கையோடு அழைத்துக் கொண்டு சென்றார்.
மாதவனை விட்டு வந்த அறைக்கு முன் அரசன் ஏற்கனவே நிற்க, வைசாலி புரியாமல் பார்த்தாள்.
“என்னாச்சு?” என்று கண்ணால் அரசனை வினவ, “உள்ள வா” என்று அழைத்துச் சென்றான்.
உள்ளே அமர்ந்து இருந்த மாதவன் நிமிர்ந்து பார்த்தான்.
‘வந்துட்டானா!’ என்று வைசாலி அவனை ஆச்சரியமாக பார்க்க, “ஹாய் மாதவன்” என்றான் அரசன்.
மாதவன் அரசனை கவனிக்கவில்லை. மணப்பெண் கோலத்தில் இருந்த வைசாலியை தான் பார்த்தான். அதீத அலங்காரம் என்று தோன்றியது.
அவனோடு நடந்த நிச்சயத்தின் போது, வைசாலி மிகவும் சாதாரணமான மேக்அப் தான் போட்டு இருந்தாள். இப்போது முகமெல்லாம் பளிச்சென மின்னியது. அது சந்தோசம் ஆர்பரிப்பு என்று புரியவில்லை.
“நீங்க பேசுங்க” என்று கூறி விட்டு, அமுதவல்லி கதவுக்கு வெளியே நின்று விட்டார்.
மாதவன் வைசாலியை பார்த்துக் கொண்டே எழுந்து நிற்க, அவள் அரசன் அருகே சென்று நின்றாள்.
“எனக்கு வைசு கிட்ட பேசனும். தனியா” என்று கூறிய மாதவனின் பார்வை மொத்தமும் அவள் மீது தான் இருந்தது.
அரசன் வைசாலியை திரும்பிப் பார்க்க, அவள் அரசனின் கையைப்பிடித்து விரல்களை கோர்த்துக் கொண்டாள்.
“எப்படியும் நீங்க பேசி முடிச்சதும் எல்லாத்தையும் இவர் கிட்ட சொல்லிட தான் போறேன் மாதவன். அதனால இப்படியே பேசுங்க” என்று அமைதியாக பதிலளித்தாள்.
மாதவனின் பார்வை அவர்களது இணைந்த கைகளை வெறித்துப் பார்த்தது. அவனை பொறுத்தவரை நடக்கும் திருமணம், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதுவும் அரசனால் ஏற்பாடாகி இருக்கிறது.
வைசாலிக்கு அரசன் வெறும் நண்பன் மட்டுமே. அதையும் மாதவன் அறிந்து இருந்தான். தோண்டித்துருவி கேட்காமல், வைசாலிக்கே சந்தேகம் வராமல் விசாரித்து இருந்தான்.
இப்போது தந்தையின் உடல்நிலைக்காக வெளியே வந்தவனுக்கு, வைசாலி அரசனின் திருமண ஏற்பாடு தெரிய அதிர்ந்து போனான்.
அப்போதும் வைசாலியை அவன் சந்தேகப்படவில்லை. அரசன் தான் விருப்பப்பட்டு இருக்க வேண்டும். தங்களது திருமணத்தை வேண்டுமென்றே பிரித்து, வைசாலியை ஏமாற்றி, திருமணம் செய்ய கிளம்பி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
வைசாலி தன் மீது கோபமாக இருப்பாள். அவள் கோபம் மட்டும் தணிந்து விட்டால், நிச்சயமாய் தனக்காக காத்திருப்பாள் என்றே நம்பினான்.
ஆனால் இங்கு கையை கோர்த்துக் கொண்டு நிற்கிறாள். வைசாலிக்கு மோதிரம் அணிவித்த நேரத்தை தவிர, மாதவனின் விரல் கூட வைசாலியை தீண்டவில்லை. அவர்களது பேச்சும் கூட காதலாக இருக்காது. முக்கியமாக பேச நேரமும் கிடைக்காது.
தன்னிடம் அத்தனை தூரம் கண்ணியம் காத்தவள், இன்று அரசனின் கையை பிடித்துக் கொண்டு நிற்கிறாள்.
‘ஏன் வைசு?’ என்று மாதவன் மனம் கதறியது.
கண்ணை மூடி ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டவன், “ஒரே ஒரு கேள்வி தான் வைசு.. ஒரு வேளை இந்த விசயமெல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சுருந்தா, எனக்காக காத்திருப்ப தான?” என்று கேட்டான் மாதவன்.
வைசாலி அரசனை திரும்பிப் பார்த்தாள். அவன் அமைதியாகவே நின்று இருந்தான்.
மாதவன் பக்கம் திரும்பியவள், “இல்ல” என்றாள்.
ஒரே வார்த்தையில் மாதவனை உடைத்து இருந்தாள்.
“நீங்க என்ன நினைக்கிறீங்க மாதவன்? நீங்க ஜெயிலுக்கு போனதால தான் அந்த கல்யாணம் நின்னுடுச்சுனா? உங்களுக்கு விசயம் தெரியுறதுக்கு முன்னாடியே, அரசன் என் கிட்ட வந்து சொன்னாரு. நடந்தத எல்லாம் சொல்லி முடிச்சதுமே, நான் அந்த நிமிஷமே கல்யாணத்த நிறுத்த முடிவு பண்ணிட்டேன்.”
மாதவன் வலியோடு பார்க்க, வைசாலி அதை கருத்தில் எடுக்காமல் பேசினாள்.
“அன்னைக்கு நீங்க பொறுமையா பேசி இருந்தா, நானும் இதெல்லாம் சொல்லிருப்பேன். எடுத்த எடுப்புல எங்க கல்யாணத்த நிறுத்த பார்க்குறீங்க. அதான் நானும் கோபமா பேசிட்டேன். இப்ப நேரம் கிடைச்சுருக்கு. இதோட பேசி முடிச்சுருவோம்.” என்று ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டாள்.
“நீங்க கேட்ட இதே கேள்விய அரசனும் அன்னைக்கு கேட்டார். இப்படி சட்டுனு கல்யாணத்தையே நிறுத்துறியே.. நடந்து முடிஞ்சுருந்தா என்ன செய்வனு? அப்போ அவருக்கு பெருசா நான் பதில் சொல்லல. ஆனா என்ன நினைச்சேன் தெரியுமா? நல்ல வேளை நடக்கலனு நினைச்சேன். அப்படி நடந்துருந்தாலும் அது சக்ஸஸ் ஆகியிருக்காது. ஃபெயிலாகி இருக்கும்”
ஒரு நொடி நிறுத்தி மாதவனை பார்த்தவள், “உங்க தங்கச்சி விசயத்துல நீங்க பொய் சொன்னதுக்கு ஆயிரம் காரணம் இருக்கட்டும். ஆனா அந்த பொண்ணு செத்ததுக்கு? அதை மறைச்சதுக்கு? எந்த காரணமும் சொல்ல முடியாது. நாம எல்லாம் டாக்டர்ஸ் மாதவன். ஒரு உயிரோட வேல்யூ மத்த எல்லார விடவும் நமக்கு நல்லா தெரியும்.
தியோட்டர்ல சின்ன மிஸ்டேக்ல எல்லாம் உயிர் போகும் போது மனசளவுல எவ்வளவு பாதிக்க பட்டுருப்போம்? ஒரு உயிர காப்பாத்த எவ்வளவு போராடி இருப்போம்? ரெண்டு உயிரா இருந்த பொண்ணு.. உங்க எல்லாரோட சுயநலத்துல செத்துட்டா.
அத மறந்து உங்க கூட இயல்பா ஒரு வாழ்க்கைய வாழுற அளவுக்கு, என் மனசாட்சி இன்னும் சாகல. கண்டிப்பா அந்த கல்யாணம் நடந்து இருந்தா பிரிஞ்சுருப்போம்.” என்று முடித்தாள்.
கேட்டதை எல்லாம் ஜீரணிக்க முடியாமல் மாதவன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
அரசன் வைசாலியும் வேறு எதுவும் பேசாமல் நிற்க, சில நிமிடங்கள் அமைதியில் கடந்தது.
மாதவன் மெல்ல நிமிர்ந்து பார்த்தான். இன்னும் இருவரின் கையும் பிணைந்த நிலையில் தான் இருந்தது.
“ஒரு வேளை.. ஒரு வேளை.. அரசன் இப்படி ஒரு தப்பு பண்ணா?” என்று மாதவன் கேட்க, “பண்ண மாட்டாரு” என்று சற்றும் தாமதிக்காமல் பதில் வந்தது வைசாலியிடம்.
வைசாலி அரசனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே, “நான் நம்புறேன். இவர் எப்பவும் நேர்மையா இருப்பாரு. இன்னைக்கு நேத்து இல்ல.. கிட்டத்தட்ட என்னோட அஞ்சு வயசுல இருந்து இவர் எப்படினு பார்த்து தான் வளர்ந்தேன்” என்று புன்னகைத்தாள்.
அவளது வார்த்தைகளிலும் கண்ணிலும் வழிந்த காதல், மாதவன் உயிரை குடிக்க போதுமானதாக இருந்தது. இந்த பார்வை மாதவனை பார்த்து இருக்கிறாளா? ம்ஹும். நினைவடுக்கில் எங்குமே இல்லை.
அரசனும் அவளுக்கு சளைக்காத பார்வை பார்த்து வைக்க, மாதவன் வேகமாக எழுந்து விட்டான்.
இருவரின் பார்வையும் அவன் பக்கம் திரும்ப, “தாங்க்ஸ். பதில் சொன்னதுக்கு” என்றவன் வேகமாக வெளியேறி விட்டான்.
அதன் பிறகு, எந்த பிரச்சனையும் இல்லாமல் நிச்சயதார்த்தம் ஆரம்பித்தது.
அடுத்த நாள் அதிகாலையில் வைசாலி எழுந்து பார்க்க, அப்போதும் மண்டபம் பரபரப்பாக இருந்தது. நேற்று இரவு பாதிக்கும் மேல் தூங்கவே இல்லை. வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மணமக்கள் மட்டுமே நிம்மதியாக தூங்கி எழுந்திருந்தனர். திருமண வேலைகள் மளமளவென ஆரம்பிக்க, முகூர்த்தபுடவையை கட்டிக் கொண்டு வந்து நின்றவளை, அரசன் பார்த்துக் கொண்டே இருந்தான்.
“பார்த்து கழுத்து சுழுக்க போகுது” என்று பார்த்தசாரதி அரசனின் முகத்தை திருப்பி விட, “பழி வாங்குறீங்களா அத்தான்?” என்று கேட்டான்.
“பின்ன? எங்க கல்யாணத்துல எவ்வளவு அராஜகம் பண்ண? இன்னைக்கு இருக்கு உனக்கு”
“அத்தான்.. வேணாம்.. அழுதுடுவேன்…”
“அழு மகனே.. எப்பவும் கல்யாண பொண்ணு தான் அழனுமா? இன்னைக்கு நீ அழுற..” என்று அமுதா வந்து சொல்லி விட்டு நடக்க, அரசன் பாவமாக பார்த்து வைத்தான்.
அஞ்சனாவின் கல்யாணத்தின் போது, அவன் செய்த கலாட்டா கொஞ்சம் நஞ்சமில்லை.
பார்த்தசாரதியை அவ்வளவு கிண்டலடித்து வைத்திருந்தான். அஞ்சனாவோடு கிளம்பும் போது, அஞ்சனா பெற்றவர்களை பிரியும் துக்கத்தில் அழுது விட்டாள்.
அமுதவல்லி சமாளித்துக் கொண்டாலும், சக்கர நாற்காலியில் இருந்த மகேந்திரன் கண்ணீர் விட, அஞ்சனா மேலும் அழ, பார்த்துக் கொண்டிருந்த பார்த்தசாரதிக்கே என்னவோ போல் ஆகி விட்டது.
எல்லாவற்றையும் பார்த்த அரசன், அஞ்சனாவை அனுப்ப முடியாது என்று கையைப்பிடித்துக் கொண்டு நின்று விட்டான்.
“எங்கக்கா அழும் போது எப்படி அனுப்ப? அதுனால நீங்க மட்டும் கிளம்புங்க அத்தான்” என்று கூறி விட, கூட்டம் மொத்தமும் அதிர்ந்து விட்டது.
ஆளாளுக்கு அரசனை அதட்ட, அவன் அசையவும் இல்லை. அஞ்சனாவின் கையையும் விடவில்லை. பிடித்தபிடியில் நின்று இருந்தான். அந்த கலாட்டாவில் அஞ்சனாவின் அழுகை குறைந்து நின்றே விட்டது.
பார்த்தசாரதி அவளை பாவமாய் பார்த்து அரசனை நோக்கி கண்காட்ட, அஞ்சனாவின் முகத்தில் புன்னகை படர்ந்தது.
“நான் அழ மாட்டேன் அரசா.. சந்தோசமா கிளம்புறேன். சரியா?” என்று அஞ்சனா தம்பியிடம் பேச, “சத்தியமா? அழாம சந்தோசமா அத்தான் கூட கிளம்பனும். சிரிச்சுட்டே..” என்று கையை நீட்டினான்.
அந்த கையை பிடித்துக் கொண்டவளுக்கு, பாசத்தில் தொண்டை அடைத்தாலும் அழாமல் புன்னகைத்தாள்.
“மீறி கண்ணு கலங்குச்சுனா உன்னை விட மாட்டேன். சந்தோசமா போயிட்டு வரனும். ஓகே?”
அஞ்சனா அவனது அக்கரையில் அகமகிழ்ந்து சந்தோசமாக தலையாட்ட, அவனே அழைத்து வந்து காரில் அமர வைத்தான்.
“சிரிச்சுட்டே கிளம்புக்கா. அழுது அத்தானையும் சேர்த்து அழ வச்சுடாத. இப்பவே பாதி அழுற மாதிரி தான் நிக்கிறாரு” என்று கூறி, அஞ்சனாவின் தலையை ஆட்டி வைத்தான்.
பார்த்தசாரதியின் முகத்தை பார்த்தவள், மேலும் புன்னகை விரிய தலையாட்டினாள்.
அந்த சந்தோசம் சற்றும் குறையாமல், பார்த்தசாரதியோடு கிளம்பினாள் அஞ்சனா. அப்படி ஒரு புன்னகையோடு ஆரம்பித்த பயணம். இன்று வரை எந்த மனசுணக்கமும் இல்லாமல் இயல்பாய் இன்பமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இன்று வைசாலி அழுதால், தான் செய்த வேலை திருப்பி நடப்பது உறுதி என்று அரசனுக்கு புரிய, வைசாலியின் பக்கம் குனிந்தான்.
“லாலி.. கிளம்பும் போது அழுவியா?”
“நான் ஏன் அழப்போறேன்? என் கூட வாழப்போறத நினைச்சு நீங்க பயந்து அழாம இருந்தா சரி”
“அடிங்க.. இப்ப வீர வசனமெல்லாம் பேசிட்டு கிளம்பும் போது அழுது வச்ச பிச்சுடுவேன்” என்று மிரட்டினான்.
“அதான் அழ மாட்டேன்னு சொல்லுறேன்ல?”
“அப்ப சரி” என்று அமைதியாகி விட்டான்.
ஐயர் தன் வேலைகளை முடித்து தாலியை நீட்ட, அரசன் அதை எடுத்துக் கொண்டான்.
அவன் சரியாக பிடித்திருக்கிறானா என்று மற்றவர்கள் தாலியை ஆராய, அரசன் வைசாலியை பார்த்தான். அவள் ஒற்றை புருவத்தை உயர்த்தினாள். அதில் புன்னகையோடு கட்டி ஒரு முடிச்சை மட்டுமே போட்டான்.
மீதம் இரண்டை அஞ்சனா போட்டு முடிக்க, குங்குமம் வைத்தான். அதில் மிக அருகே கைக்குள் வந்தவளிடம், “வெல்கம் டூ மை லைஃப் மிஸஸ் சோப்பு” என்று கூற, வைசாலிக்கு தன்னையும் மீறி சிரிப்பு வந்து விட்டது.
சிரிப்பை அடக்கியபடி அரசனை நோக்கி பார்வையை உயர்த்த, அந்த தருணத்தை அழகாக புகைப்படம் எடுத்து வைத்தனர்.
சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் செய்து, விருந்தினர்களோட புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
எல்லாம் முடிந்து சாப்பிட்டு முடிக்கும் போது, இருவருமே களைத்துப்போனார்கள்.
“என்னால முடியல.. டயர்ட்டா இருக்கு” என்று ரகசியமாக வைசாலி சினுங்க, “ஓகே ஓகே.. கார்ல போகும் போது ரெஸ்ட் எடுக்கலாம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கமா” என்று சமாதானம் கூறினான்.
குடும்பம் மொத்தமாய் அரசனின் சொந்த ஊருக்கு கிளம்ப, வைசாலியின் பெற்றோர்களையும், அவர்களது நெருங்கிய சொந்தங்களையும் சேர்த்தே ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
அதனால் வைசாலி பிரிவுத்துயரில் அழாமல் காரில் ஏறி விட, அரசன் பார்த்தசாரதியை பார்த்து சிரித்தான்.
“எப்புடி அத்தான்?”
“உனக்கு கொடுத்து வச்சுருக்கு மச்சான்” என்று சிரித்து விட்டு, அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.
அவனோடு அஞ்சனாவும் மணிகர்ணிகாவும் ஏறிக் கொண்டனர். அமுதவல்லி, வைசாலி பெற்றோர்களோடும் சொந்தங்களோடு, பேருந்தில் கிளம்பினார்.
வைசாலி காரில் ஏறியதுமே, கண்ணை மூடி சாய்ந்து விட்டாள். அவ்வளவு தூரம் களைத்துப்போயிருந்தாள்.
அரசனும் சாய்ந்து கண்ணை மூடி அமைதியாக வர, மணிகர்ணிகா மட்டும் பார்த்தசாரதியிடம் பேசிக் கொண்டே வந்தாள்.
“சாஞ்சுக்கோ அஞ்சு..” என்று பார்த்தசாரதி சீட்டை இறக்கி விட, அவளும் படுத்து விட்டாள்.
எல்லோருமே வேலையில் சுகமாக களைத்து இருக்க, அந்த ஓய்வு அவர்களுக்கு தேவைப்பட்டது.
பார்த்தசாரதி பின்னால் பார்த்தான். அரசனின் தோளில் வைசாலி சாய்ந்திருக்க, அரசன் அவள் தலையில் கன்னத்தை வைத்திருந்தான்.
“ஏன்டா மச்சான்.. இதெல்லாம் ஓவரா இல்ல?”
“ரோட்ட பாருங்க அத்தான். பின்னாடி பார்த்து கண்ணு வைக்காதீங்க”
அரசன் கண்ணைத்திறக்காமலே பேச, “நேரம்டா.. உங்கக்கா எல்லாம் உங்களயே திரும்பி திரும்பி பார்த்துட்டு வந்தா.. அப்புறம் ஊர வேடிக்கை பார்த்தா. பக்கத்துல இருக்க என்னை மனுசனா கூட மதிக்கல. இங்க என்னடானா.. ம்ம்.. உனக்கு நிஜம்மாவே அதிர்ஷ்டம் இருக்குடா” என்று பெருமூச்சு விட்டான்.
கேட்டிருந்த மூவருமே அடக்க முடியாமல் சிரித்து விட்டனன்.
வீடு வந்து சேர்ந்ததும் அடுத்த கட்ட வேலைகள் இழுத்துக் கொண்டது.
இரவு அலங்காரம் முடிந்து, அஞ்சனா வைசாலியை அழைத்துக் கொண்டு நடந்தாள்.
உறவுப்பெண்கள் எல்லோரும் வைசாலியை கிண்டலாக பேசி சிரிக்க, “நானே டாக்டர்.. என்னமோ எனக்கு தெரியாதத பேசிட்ட மாதிரி சிரிக்கிறத பாருங்களேன் ஆறு” என்று அஞ்சனாவின் காதைக்கடித்தாள் வைசாலி.
அஞ்சனாவிற்கு தான் பக்கென சிரிப்பு வந்து விட்டது.
“அவங்க ஜாலிய கெடுப்பானேன்? விடு விடு” என்று அழைத்துச் சென்று அரசனின் அறை முன்னால் விட்டாள்.
“அவன் குளிச்சுட்டு இருக்கான். உள்ள போ. வந்துடுவான்” என்று கூறி விட்டு அஞ்சனா திரும்ப, “ஹலோ ஃபைவ் அண்ணி.. வேர் இஸ் பால் சொம்பு?” என்று நிறுத்தினாள்.
அவளது சத்தத்தில் அதிர்ந்த அஞ்சனா, “உஸ்ஸ்.. மானத்த வாங்காத. உள்ள ஏற்கனவே வச்சாச்சு. போய் தொலை” என்று துரத்தி விட்டாள்.
வைசாலி சிரித்தபடி உள்ளே சென்றாள்.
அறை முழுவதும் அலங்காரத்தில் ஜொலித்தது. கலைந்து கிடைந்த பொருட்கள் எல்லாம் ஓரம் கட்டப்படிருந்தது. முதலில் அவள் வந்த போது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது.
அப்போது அரசன் மட்டுமே உபயோகித்து இருந்தான். இப்போது திருமணவேலைகளில் நிறைய பொருட்களை அந்த அறையில் வைத்து எடுத்திருக்கின்றனர்.
“நாட் பேட்” என்று அந்த அறையின் அலங்காரங்களை பார்த்துக் கொண்டிருக்க, கதவு திறக்கப்பட்டது.
அரசன் உள்ளே வர அவனை மேலும் கீழும் பார்த்தாள். குளித்து வேறு வேட்டி சட்டைக்கு மாறியிருந்தான்.
“காலையில இருந்ததே நல்லா இருந்துச்சு” என்று கூற, தன்னை குனிந்து பார்த்தவன், “ரெண்டுமே அத்தான் செலக்ஷன் தான்” என்றபடி கதவை அடைத்து தாளிட்டான்.
வைசாலி அறையை வேடிக்கை பார்த்துக் கொண்டு திரும்பி நிற்க, அரசன் அருகே வந்து முகத்தை கூர்ந்து பார்த்தான். சாதாரணமாக இருக்க முயற்சித்து, பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டுக் கொண்டிருந்தாள்.
அவளது திணறலில் மெல்லிய மயக்கம் அரசனை சூழ்ந்தது. அதே மயக்கத்தோடு “லாலி” என்று அவளது தோளை வளைத்து அணைத்தான்.
படபடவென அடித்துக் கொண்ட நெஞ்சை வெளியே காட்ட முடியாமல், அவனது தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
“என்னமோ நானே டாக்டர்.. எனக்கு எதுவும் தெரியாம இல்லனு பேசிட்டு வந்தாளாமே.. அந்த பொண்ண பார்த்த?” என்று சிரிக்க, அவனது கையில் கிள்ளி வைத்தாள்.
அதற்கு வாய்விட்டு சிரித்தவன், “இந்த படபடப்பு போக என் கிட்ட ஒரு ட்ரீட்மெண்ட் இருக்கு.. பார்க்குறியா?” என்று அவள் முகத்தை நிமிர்த்தி கண் சிமிட்டி கேட்டான்.
அந்த பாவனையில் வைசாலி நடுங்கிய கைகளை கோர்த்துக் கொண்டு, பதில் எதுவும் சொல்லாமல் நின்றாள்.
“டாக்டருக்கே ட்ரீட்மெண்ட்டானு இப்ப நீ கேட்டுருக்கனும் தெரியுமா?” என்று அரசன் சிரிக்க, வைசாலிக்கு இயல்பாய் இருக்க முடியவில்லை.
தட்டுத்தடுமாறி பார்வையை எங்கெங்கோ சுற்ற விட, அவளை இழுத்துக் கொண்டு வந்து மேசையருகே நிறுத்தினான்.
அந்த மேசையில் இருந்த பொருட்களை எல்லாம் நன்றாக பார்த்தாள்.
அவள் வரைந்திருந்த படத்தை ப்ரேம் போட்டு வைத்திருந்தான். அதைப்பார்த்ததும் வைசாலியின் படபடப்பு குறைந்து முகத்தில் புன்னகை வந்தது. அடுத்ததாக கண்ணாடி டம்ளரில் பாலை மூடி வைத்திருந்தனர். அதை பார்த்து இன்னும் சிரிப்பு விரிய அடுத்ததை பார்த்தாள்.
பெரிதாக அலங்காரம் செய்த கூடை இருந்தது. அதில் துணியை போட்டு மூடி வைத்திருக்க, “திறந்து பாரு” என்றான்.
“ஃப்ரூட்ஸ் ஸ்வீட் இருக்கப்போகுது.. எத்தனை படத்துல பார்த்துருப்போம்?” என்று இயல்பாய் கிண்டலடித்துக் கொண்டே துணியை அகற்றினாள்.
உள்ளே அழகாக அடுக்கப்பட்டிருந்த முறுக்கை பார்த்து முதலில் அதிர்ந்தவள், பக்கென சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
“என்ன இது?” என்று கேட்டவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
முறுக்கை பார்க்க பார்க்க சிரிப்பு வந்து கொண்டே இருந்தது. அவள் நன்றாக சிரித்து ஓயும் வரை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவன், பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.
சட்டென சிரிப்பு குறைந்து வெட்கம் வந்து விட அமைதியானாள்.
“எவன் எவன் எதெதோ கொடுத்து கரெக்ட் பண்ணுறான். நீ இந்த முறுக்குல தான விழுந்த. அதான் உனக்கு நம்ம கல்யாணத்துக்கு என்னோட பரிசு.. முறுக்கு பிடிச்சுருக்கா?” என்று கேட்டவனின் அணைப்பு இறுக, வைசாலிக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது மறந்து போனது.
அவளை தன் பக்கம் திருப்பியவன், சிவந்து போன முகத்தை மெல்ல உயர்த்தினான்.
“லாலி..”
“….”
“நீ ஒன்னு கேட்ட தெரியுமா? எப்படி டிஸ்டர்ப் பண்ணுறனு.. இப்ப பதில் சொல்லவா?” என்று கேட்டு கண்ணடித்தான்.
“ஹான்..” என்று அவள் விழிக்க, அரசன் பதில் சொன்னான்.
“எனக்கு பதிலே வேணாம்” என்று வைசாலி திணறிப்போகும் அளவு பதிலை கொடுத்திருந்தான்.
அதிகாலை நல்ல தூக்கத்தில் இருந்தவன் காதில், அந்த சத்தம் விழுந்தது. எதோ ஒரு சத்தம் காதை மெல்ல தொட்டுச் செல்ல, கண்ணை திறக்காமலே சத்தத்தை ஆராய முனைந்தான். முடியவில்லை.
‘என்ன சவுண்ட் இது?’ என்ற சந்தேகத்தோடு கண்ணை திறந்து பார்க்க, மெல்லிய வெளிச்சம் அறையில் பரவியிருந்தது.
கட்டிலில் தெரிந்த வெள்ளை உருவத்தை, கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தான். அந்த உருவத்திடம் இருந்து தான் சத்தம் வந்து கொண்டிருந்தது.
சத்தமில்லாமல் எட்டிப்பார்த்தான். தலைவரை போர்வையை போர்த்திக் கொண்டு, கறுக் மொறுக் என்ற சத்தத்தோடு வைசாலி முறுக்கை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தாள்.
பார்த்தவனுக்கு பக்கென சிரிப்பு வரப்பார்க்க, உதட்டை கடித்து அடக்கினான்.
மெல்ல அவள் பக்கம் உருண்டு சென்று எழுந்து அமர்ந்து, அவளை ஒரு கையால் அணைக்க, திடுக்கிட்டு திரும்பி பார்த்து புன்னகைத்தாள்.
“தூங்கலையா?” என்று முறுக்கை வாயில் திணித்தபடியே கேட்டாள்.
“இந்நேரத்துல என்ன பண்ணிட்டு இருக்க?”
“பசிச்சது.. அதான்.. இந்த சத்தம் தான் எழுப்பிடுச்சா? சாரி.. இவ்வளவு நேரம் பால்ல ஊற வச்சு தான் சாப்பிட்டேன். பால் தீர்ந்து போச்சு. அதான் சத்தம் வந்துடுச்சு”
அருகே இருந்த டம்ளரை பார்த்தான். மொத்தமும் காலியாக இருந்தது. கூடையில் முறுக்கும் பாதியாகி இருந்தது
“பசிச்சா கிட்சன்ல எதையாவது சாப்பிட எடுத்து வர வேண்டியது தான? முறுக்கு அஜீரணம் ஆகிடாத?”
“அதெல்லாம் ஆகாது. ஆனாலும் பார்த்துக்கலாம். இந்நேரத்துல எப்படி கிட்சனுக்கு போறது? பார்த்தா ஓட்டுவாங்க.” என்றவள் தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.
“இப்ப ஓகே தூங்கலாம்” என்று தண்ணீர் டம்ளரை வைத்தவளை, பிடித்து தூக்கி தனக்குள் கொண்டு வந்தான்.
“ஹேய்..” என்று பதறியவள், “இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சுரும்” என்று சினுங்கினாள்.
“அதுனால?” என்றவன் சில்மிஷங்களை தொடங்க, “நான் தூங்கவே இல்ல.. இப்ப தூங்குனா தான் காலையில எந்திரிக்க முடியும்” என்று கெஞ்சினாள்.
“அது நீ எலி மாதிரி கொறிச்சு என்னை எழுப்புறதுக்கு முன்னாடி செஞ்சு இருக்கனும்”
“யோவ்.. பசிச்சதுனு சாப்பிட்டேன். அது குத்தமா?”
“சாப்பிட்டதும் தூங்கக்கூடாது லாலி..” என்று அரசன் கண்ணடிக்க, தலையணை வைத்து அவனை மொத்தினாள். அதையும் வாங்கிக் கொண்டு, அவனது காரியத்தில் கண்ணாக இருந்தான்.
அடுத்த நாள் காலை விடிய, அமுதவல்லி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.
“குட் மார்னிங் அத்த” என்று வைசாலி வர, அவளை திரும்பிப் பார்த்தார்.
குளித்து சுடிதாரில் வந்தாள்.
“ஃப்ரிட்ஜில பூ இருக்கு எடுத்து வச்சுக்கோ சாலி..”
“சாலியா?”
“சித்ரா அப்படி தான கூப்பிடும் உன்னை? அதான் நானும் பழகிட்டேன்” என்று அமுதவல்லி சிரிக்க, அவரது கன்னத்தை கிள்ளியவள், “சோ ஸ்வீட் அத்த” என்றாள்.
பூவை எடுத்து வைத்துக் கொண்டே அவரது வேலையை பார்த்து விட்டு, “இந்நேரத்துலயே வேலை பார்க்குறீங்க? மார்னிங் டிபன் மண்டபத்துலனு சொன்னாங்க” என்று கேட்டாள்.
“அங்க போற வரை எல்லாரும் பசி தாங்க மாட்டாங்க சாலி. எந்திரிச்சதும் டீ குடிக்கிற ஆளுங்களும் இருக்காங்க. போட்டு வச்சுட்டா குடிச்சுப்பாங்க. இட்லிய முன் பசிக்கு சாப்பிட்டுட்டு கிளம்பட்டும்னு ஊத்தி வைக்கிறேன்”
“நான் டீ போடுறேன்” என்று வைசாலியும் வேலையில் இறங்கி விட்டாள்.
அமுதவல்லி சொன்ன அளவில் போட்டு முடிக்க, சிலர் எழுந்து விட்டனர். வைசாலி அமுதவல்லியோடு பேசியபடி வேலை செய்வதை பார்த்து, அதிசயத்து விட்டார்கள்.
“அமுதா.. நீ கொடுத்து வச்சவ போ.. காலையில எழுந்து, முதல் நாளே உனக்கு வேலை பார்க்குது உன் மருமக. என் மருமகளுக்கெல்லாம் இன்னும் கடுகுக்கும் மிளகுக்கும் வித்தியாசம் தெரியல” என்று நொடித்துக் கொண்டே வைசாலியிடம் தேநீரை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.
இப்படி ஒரு சிலர் வந்து வம்பு பேசினாலும், எல்லோரையும் அமுதா அங்கு நிற்க விடாமல் எதாவது சொல்லி துரத்தினார். வைசாலி பேசவே இல்லை. வெறும் புன்னகை மட்டுமே.
“இங்க நின்னா பேசிட்டே இருப்பாங்க. போய் சேலைய கட்டி கிளம்பு போ”
“எந்த மாதிரி சேலை கட்டட்டும்?”
“பட்டு சேலை கட்டுமா. ஒரு வாரத்துக்கு பார்க்க வந்துட்டே இருப்பாங்க. பட்டு சேலை தான் சரியா இருக்கும்”
வைசாலி தலையாட்டி விட்டு திரும்ப, அரசன் வந்து விட்டான்.
“ம்மா.. டீ இருக்கா?”
“இப்ப தான் எல்லாம் எடுத்துட்டு போயிட்டாங்கனு மறுபடியும் பால அடுப்புல வச்சேன். போடுறேன் இரு”
“விடுங்க நான் போட்டுக்கிறேன்” என்றவன் வைசாலியை மேலும் கீழும் பார்த்து விட்டு, அருகே வந்து நின்று கொண்டான்.
அமுதாவிற்கும் அரசனுக்கும் நடுவில் வைசாலி நின்று இருந்தாள்.
இட்லிகளை சூடாக வேறு பாத்திரத்திற்கு மாற்றி மூடி வைத்துக் கொண்டிருந்தாள்.
அரசன் அவள் பக்கம் திரும்பாமல், கொதித்த பாலை தேவையான அளவு மட்டும் எடுத்து, அவனுக்கென தனியாக தேநீரை தயாரித்துக் கொண்டான்.
அதற்குள் சிலர் வந்து மூவரும் நிற்பதை பார்த்து கேலி பேசி விட்டுச் சென்று விட்டனர்.
தேநீரை கையில் எடுத்தவன், “இங்க நின்னா ஆளாளுக்கு பேசுவாங்க. நான் ரூம்க்கே போறேன்” என்று கிளம்பி விட்டான்.
அவன் அந்த பக்கம் நகர்ந்ததுமே, அவன் தேநீர் தயாரித்த பாத்திரத்தை எடுத்தாள் வைசாலி. இரண்டு சொட்டு தான் அதில் மிச்சம் இருந்தது. அதை உள்ளங்கையில் ஊற்றி சுவை பார்த்தாள். அவனது சுவை ஓரளவுக்கு பிடிபடும் போல் இருந்தது.
வெளியே சென்ற அரசன் வைசாலியையும் அழைக்கலாம் என்று திரும்பி வர, அவன் கண்ணில் வைசாலி செய்த காரியம் தவறாமல் விழுந்தது.
மருமகளின் செய்கையும் மகன் அங்கே நிற்பதையும் பார்த்து விட்டு, அமுதவல்லி வேலையை போட்டு விட்டு வெளியேறி விட்டார்.
அவர் சென்றதும் கதவை அடைத்தவன், வைசாலியை பின்னாலிருந்து அணைத்தான்.
பயந்து போய் பாத்திரத்தை கீழே போடப்போனவள், சுதாரித்து வைத்து விட்டாள். அருகே அமுதவல்லி நிற்கிறாரா? என்று ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.
“இதையே குடிச்சு பார்க்கலாமே” என்று அரசன் டம்ளரை அவள் வாயருகே கொண்டு செல்ல, மறுக்காமல் குடித்தாள்.
“நைஸ்” என்றவள் அவனது கையைப்பிடித்து மீண்டும் ஒரு முறை குடித்தாள்.
“நல்லா இருக்கு கிங்.” என்று புன்னகைத்தவள், அவனது கையை விலக்கி விட்டு, இட்லியை எடுத்து விட்டு அடுத்த இட்லியை ஊற்றி வைத்தாள்.
அரசனின் பார்வை அவளிடமே நிலைத்து இருக்க, “இப்படியே பார்த்துட்டு இருந்தா கண்ண நோண்டிருவேன்” என்று மிரட்டினாள்.
“எங்க பண்ணு?”
“நீங்க கிளம்பலயா? மண்டபம் போகனும்”
“அத விட முக்கியமான வேலை இங்க இருக்கே” என்றபடி தேநீரை உறிஞ்சினான்.
அவனது பார்வையில் இருந்த குறும்பில் முறைத்து வைத்தவள், “நான் போய் கிளம்புறேன் அப்போ” என்று வெளியேறி விட்டாள்.
அறைக்குள் நுழையும் போது, அரசனும் பின்னால் வந்து விட்டான்.
தன் சேலை இருந்த பெட்டியை தூக்கி வைத்து திறந்தாள். விதவிதமான புடவைகள் இருக்க, எதை அணிவது என்று குழம்பி விட்டாள்.
“திறந்து வச்சுட்டு என்ன பார்க்குற?”
“நீங்க என்ன கலர் சர்ட் போடுவீங்க?”
“ஏன்?”
“மேட்ச்சா போடுவோம்” என்று வைசாலி கண்சிமிட்ட, அரசன் சிரிப்போடு அவனது அலமாரியை திறந்து காட்டினான்.
“இது எல்லாம் புதுசு தான். நீயே செலக்ட் பண்ணு” என்று கூறி விட்டு தேநீரோடு அவளையும் ரசிக்க ஆரம்பித்தான்.
அவனது சட்டைகளை அலசி ஆராய்ந்து, அதே நிறத்தில் தன்னிடமும் சேலை இருக்கிறதா? என்று பார்த்து, ஒன்றை தேர்வு செய்தாள்.
“இத போடுங்க இன்னைக்கு” என்றதும் அரசன் தலையசைத்தான்.
“சரி கிளம்புங்க. நான் சேலைய மாத்திக்கிறேன்” என்றதும், அரசனின் பார்வையில் குறும்பு கூடியது.
“இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல?” என்று கேட்டு சிரிக்க, அவனை பிடித்து வெளியே தள்ளியவளின் முகம் சிவந்து விட்டது.
அவள் தள்ளியபோது அலட்டிக் கொள்ளாமல் வெளியே வந்தவன் வாய்விட்டு சிரிக்க, ஒற்றை விரலில் பத்திரம் காட்டி விட்டு கதவை அடைத்து விட்டாள்.
அரை மணிநேரம் கழித்து அரசன் உள்ளே செல்ல, வைசாலி தயாராகி இருந்தாள். நேற்றை விட இன்று அதீத அழகோடு மிளிர்ந்தவளை, அரசன் ரசனையாக பார்த்தான்.
“என்ன லுக்கு?”
“தூங்கனும் தூங்கனும்னு சொல்லிட்டு எனக்கு முன்னாடி எந்திரிச்சுட்ட?”
“ஹாஸ்பிடல்ல நைட் டியூட்டி பார்த்து பழக்கம்”
அவள் என்னவோ சாதாரணமாகத்தான் சொன்னாள். அதற்கடுத்து அரசனின் பார்வை மாறியதில், அவளையும் மீறி முகம் சிவந்து விட்டது.
சிதறிக்கிடந்த பூவை தூக்கி அவன் மீது எறிந்து விட்டு, கண்ணாடியில் தன்னை நன்றாக பார்த்தாள்.
“ஓகே தான?” என்று அரசனை கேட்க, “டபுள் ஓகே” என்றான்.
அருகே வந்தவன் லேசாக எம்பி அவனது கன்னத்தில் இதழ் பதித்து விட்டு, கண்ணாடியை திரும்பிப் பார்த்தாள்.
“இப்ப லிப்ஸ்டிக் சரியா இருக்கு” என்று கூறி விட்டு வேகமாக வெளியேறி விட்டாள்.
அரசன் வேகமாக கண்ணாடியை பார்த்தான். அவன் கன்னத்தில் எதுவுமே இல்லை.
“ஃப்ராடு” என்று சிரித்துக் கொண்டே தயாரானான்.

❤️❤️❤️❤️