சாரா 1

Loading

பனி கொட்டும் டிசம்பர் மாதம். அம்மாவாசை நாள் போலும். வானம் வெறுமையாக காட்சியளித்தது. இருளும் போர்த்திக் கொண்டு உறங்கும் அந்த நேரத்தில், கையில் கைபேசியின் வெளிச்சத்தை பிடித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தான் பூபதி.

சுற்றி இருக்கும் இருளை பற்றிக் கவலை இல்லை என்றாலும், குளிர் உடலை துளைக்காமல் ஜெர்க்கினை அணிந்து கொண்டிருந்தான்.

கைபேசியில் கவனமாக வந்து கொண்டிருந்தவனை கலைத்தது கொலுசு சத்தம். விட்டு விட்டு கேட்டது. ஒற்றைக்கொலுசின் சத்தம் என்று சரியாக கணித்தவன் நிமிர்ந்து பார்த்தான்.

எதிரே ஒரு பெண் ஓடி வந்து கொண்டிருந்தாள். தலை தெறிக்க ஓடிவருகிறாள் என்று புரிய, புருவம் சுருக்கி பார்த்தவன் அப்படியே நின்று விட்டான்.

அந்த பெண்ணும் வேகமாக ஓடி நெருங்கி வந்தாள். இருளில் அவள் முகம் தெரியவில்லை. அருகே வர வர கூர்ந்து கவனிக்க முயற்சித்தான். ஆனால் அவளோ அவனை ஒரு பயத்தோடு பார்த்து விட்டு விலகி ஓடினாள்.

ஒன்றும் புரியாமல் திரும்பிப் பார்த்தவன், கைபேசி வெளிச்சத்தை அவள் மீது பாய்ச்ச பின் பக்க ஆடை கிழிந்து போயிருந்தது தெரிந்தது. அவள் நிற்காமல் ஓடி பார்வையை விட்டு மறைய, பூபதி திரும்பிப் பார்த்தான்.

தூரத்தில் எவனோ வந்து கொண்டிருந்தான். இரு பக்கமும் பார்த்துக் கொண்டு அவன் வர, பூபதிக்கு விசயம் புரிந்து போனது.

வாய்க்குள் தகாத வார்த்தையில் அவனை திட்டி விட்டு, ஓடிப்போனவளை பார்க்க நினைத்து திரும்பி நடந்தான். உதவி செய்யும் எண்ணத்துடன்.

அந்த பெண் எவ்வளவு தூரம் ஓடினாளோ? என்ற சந்தேகத்தோடு நடையை வேகப்படுத்த, அவளோ தூரத்தில் நடு சாலையில் விழுந்து எழுந்து அமர்ந்திருந்தாள்.

“ப்ச்ச்.. விழுந்துட்டா” என்றவன் உடனே அவளை நோக்கி ஓடினான்.

பூபதி வருவதை பார்த்து அவள் மிரண்டு போய் எழுந்து ஓட பார்க்க, “ஏய்.. லிசன்.. நான் ஹெல்ப் பண்ண தான் வந்தேன். வெயிட்” என்று அவசரமாக பேசினான்.

அவன் பேசியதில் அவள் தயங்கி நின்றாலும், அழுத கண்ணில் அவ்வளவு மிரட்சி.

“நான் ஒன்னும் பண்ண மாட்டேன். பயப்படாத. இப்படியே எவ்வளவு நேரம் ஓடுவ? நான் கார் ஏற்பாடு பண்ணுறேன். இரு”

“இல்ல வேணாம். நான்.. நான் பார்த்துக்கிறேன்..”

தடுமாறி சொல்லி விட்டு அவள் திரும்ப, “வெயிட். உன் டிரஸ் கிழிஞ்சு இருக்கு. இப்படியே போவியா?” என்று அவன் அதட்டியதும் பதறிப்போய் தன் உடலை மறைத்தாள்.

“அவன் உன்னை தேடி அந்த பக்கம் போயிட்டான். இப்ப கார் வந்துடும். அதுல போய் எங்க வேணுமோ இறங்கிக்கோ” என்றவன் அதோடு முடித்து விட்டு சாலையை பார்க்க, காரின் வெளிச்சம் தெரிந்தது.

அவளோ இவனை நம்புவதா? வேண்டாமா? என்ற சந்தேகத்தில் நின்றிருந்தாள். சற்று முன்பு கிடைத்த பாடம் அப்படி.

கார் அருகே வந்ததும் டிரைவர் பக்கம் சென்றவன் “இந்த பொண்ண சொல்லுற இடத்துல டிராப் பண்ணிடு காசி” என்றான்.

அந்த காசி தலையாட்ட “உள்ள உட்காரு” என்றான்.

தயங்கி தயங்கி என்றாலும் சாலையை ஒரு பார்வை பார்த்து விட்டு ஏறி அமர்ந்து விட்டாள்.

கார் கிளம்பியதும் தான் பார்த்தாள். அவளருகே வேறு ஒருவன் அமர்ந்திருந்தான். திடீரென பார்த்து துள்ளி குதித்து அவள் கதவோடு ஒன்ற யாரும் அவளை கண்டு கொள்ளவில்லை.

அவளருகே அமர்ந்திருந்தவன் கண்ணை மூடி இருந்தான்.

‘தூங்கிக் கொண்டிருக்கிறானோ?’ என்று அவள் சந்தேகமாக பார்க்க அவனது கை விரல்கள் மடியில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது.

டிரைவரையும் அவனையும் மாறி பார்த்தாள். காரில் ஏறியது தவறோ? என்று யோசிக்கும் போதே அருகே இருந்தவன் கண்ணை திறந்தான்.

காதில் இருந்த ஏர் பாட்ஸை கழட்டி விட்டு திரும்பியவன் “காசி லைட் போடு” என்றான்.

காருக்குள் எறிந்த விளக்கு வெளிச்சத்தை கண்டு அவசரமாக அவள் தன் உடலை மறைக்க, அருகே இருந்தவன் அவளை நன்றாக பார்த்தான்.

ஒரே ஒரு நொடி புருவம் சுருங்கி விரிந்தது.

“எங்க போகனும்?” என்று கடினமான குரலில் கேட்க “வீட்… வீட்டுக்கு..” என்றாள்.

“எந்த ஏரியா?”

தடுமாறி இடத்தை சொன்னாள்.

அவளை மீண்டும் ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தவன் “அங்க இருக்க உனக்கு இங்க என்ன வேலை?” என்று கேட்டான்.

மழுக்கென வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு “வேலை.. பார்க்குறேன்” என்றாள்.

குரலில் அடக்க முடியாத அழுகை அப்பட்டமாய் தெரிந்தது.

“வேகமா போ” என்று காசிக்கு கட்டளையிட்டவன் அதற்கு மேல் பேசவில்லை.

கார் பறந்து சென்று அவள் சொன்ன தெருவில் நின்றது. உடனே கதவை திறந்து இறங்கியவள் “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று கை கூப்பி கும்பிட்டாள்.

அவன் தலையசைக்கவும் திரும்பி நடந்தாள்.

காசி காரை எடுத்து விட பின்னால் இருந்தவன் தீவிர சிந்தனையில் இருந்தான்.

சில நொடிகளில் சிந்தனை கலைந்தவன் கண்ணில் விழுந்தது அவளது கொலுசு. கழண்டு விழுந்தது தெரியாமல் இறங்கி இருக்கிறாள்.

“ஸ்டாப்” என்று காரை நிறுத்தச் சொன்னவன் அந்த கொலுசை எடுத்து பார்த்தான்.

காசி திரும்பிப் பார்த்தான்.

“இத கொண்டு போய் கொடுத்துடு” என்று சொல்ல வாயெடுத்து விட்டு நிறுத்திக் கொண்டான்.

என்ன நினைத்தானோ அவனே கொடுக்க கிளம்பி விட்டான்.

“எந்த வீடு சொன்னா?” என்று யோசித்துக் கொண்டு நடக்க ஒரு வீட்டின் முன்னால் அவனது கால்கள் தன்னால் நின்றது.

அவன் மனம் இது தான் என்று அடித்துக் கூற உடனே சென்று கதவை தட்டினான்.

சில நொடிகள் கடந்தும் திறக்கப்படாமல் இருக்க பலமாக தட்டினான்.

சில நொடிகள் கடந்த பிறகு ஒருவன் அரைகுறை உடையுடன் வந்து கதவை திறந்தான்.

“யார் நீ?” என்று அதிகாரமாக கேட்க வாசலில் நின்றவன் பார்வை உள்ளே படிந்தது.

உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்தது.

“உன்னை தான் கேட்குறேன். யார் நீ?” என்று கேட்டவனை தள்ளி விட்டு விட்டு உள்ளே நுழைந்தான்.

தள்ளிய வேகத்தில் கீழே விழுந்து எழுந்தான் அவன்.

சுற்றி பார்வையை ஓட்டியவன் பூட்டியிருந்த கதவு பக்கம் செல்ல “டேய்.. என்னடா உன் இஷ்டத்துக்கு உள்ள வர்ர?” என்று கேட்டுக் கொண்டு வந்தவனை ஒரே அடியில் கீழே படுக்க வைத்திருந்தான்.

கதவை திறந்து உள்ளே செல்ல அங்கு அவள் சுருண்டு போய் கிடந்தாள். உடலில் பெல்டால் அடித்த தடங்கள்.

“ஷி**” என்றவன் அவள் இருந்த அலங்கோலத்தை பார்த்து விட்டு ஒரு போர்வையை எடுத்து அவளை சுற்றி கையில் அள்ளிக் கொண்டான்.

“விடுங்க.. விடுங்க..” என்று அரை மயக்கத்தில் துள்ளினாள் அவள்.

“ஸ்ஸ்.. நான் ஒன்னும் பண்ண மாட்டேன். பேசாம இரு” என்றவன் அவளோடு வெளியே வர நடுவே வந்து வழி மறித்தான் அவன். அவளின் மாமா.

“அவள எதுக்குடா தூக்கிட்டு போற? இறக்கி விடுடா”

“இவளுக்கு நீ யாரு?”

“இவ என் அக்கா மக. மரியாதையா இறக்கி விடு”

“மாமாவா? அப்பா இல்லல?” என்று கேட்டவன் வயிற்றில் உதை விட்டிருந்தான்.

“பெல்ட்டால அடிப்பியா? இந்த கை தான அடிச்சது?” என்று கேட்டவன் அவனது கையை ஷு காலால் மிதிக்க ஆரம்பித்து விட்டான்.

கையை விடுவிக்க முடியாமல் அந்த மாமா கத்த அரை மயக்கத்திலிருந்தவள் “வலிக்குது” என்றாள்.

சட்டென கையை விட்டு விட்டு அவளை ஏந்திக் கொண்டு வெளியே வந்தான்.

அவனது கார் வாசலுக்கே வந்து நிற்க அவளோடு ஏறிக் கொண்டு அவளை மடியில் வைத்துக் கொண்டான்.

“பாஸ்? எங்க போக?” என்று காசி கேட்க ஒரு நொடி மடியில் கிடந்தவளை பார்த்து விட்டு “வீட்டுக்கு போ” என்றான் சாரா என்னும் சாணக்கிய ராஜ்.

காசி காரை எடுத்து விட சாணக்கியன் மடியில் கிடந்தவளை பார்த்தான். முழுதாய் மயங்கிக் கிடந்தாள். முகத்தில் அறை வாங்கிய தழும்புகள். சற்று முன் அழுது சிவந்த முகத்தோடு பார்த்தான். இப்போது அடியும் வாங்கி இருக்கிறாள்.

கன்னங்களை தொட எழுந்த கையில் மெலிதாய் ஒரு நடுக்கம் உருவாக சட்டென பின்னால் இழுத்துக் கொண்டு தன் கையை ஆச்சரியமாக பார்த்தான். கடைசியாக இந்த கைகள் எப்போது நடுங்கியது என்று அவனுக்கு நினைவே இல்லை. ஆனால் இன்று ஒரு பெண்ணின் கன்னத்தை தொட நினைத்தால் நடுங்குகிறது.

“பெண்கள் பேய்கள். ஆபத்தை மட்டுமே இழுத்து வருபவர்கள்” என்ற போதனை இப்போதும் காதுக்குள் ஒலித்தது தான்.

“அவள ஏன் மடில வச்சுருக்க? தள்ளிப்போடு” என்று சாணக்கியனுக்குள் இருந்த மிருகம் உறுமியது.

ஆனால் அதை காது கொடுத்துக் கேட்காமல் அவளை மடியிலேயே வைத்திருந்தான். எப்போதும் அந்த மிருகத்திற்கு தீனி போடுபவன் இன்று அதன் பேச்சை புறக்கணிக்கும் நிலைக்கு வந்திருந்தான்.

காரணம் மடியில் கிடந்தவள். ஒரு வாரம் முன்பு இவளை பார்த்தான். இப்படி அலங்கோலமாக அல்ல. அலங்கார பதுமையாக. பனியில் குளித்த மலர்கள் எல்லாம் வசனங்களில் மட்டுமே வாழும் போது அன்று மழையில் நனைந்து புது ரோஜாவாக நின்றிருந்தாள்.

மழை பெய்து மரம் விழுந்து சாலை போக்குவரத்து தடை பட்டிருந்தது. போக வேண்டிய வேலையை நினைத்து எரிச்சலுடன் காரில் அமர்ந்திருந்த சாணக்கியன் சன்னல் பக்கம் திரும்பும் போது தான் அந்த அற்புதம் நடந்தது.

அது அப்போதும் இப்போதும் அற்புதம் தானா? என்ற கேள்வி உள்ளே ஓடிக் கொண்டு தான் இருந்தது.

கொட்டும் மழையில் நனைந்து விடாமல் ரெயின் கோட் அணிந்து இருந்தாள். ஆனால் முகம் முழுவதும் காலை நேர பனியில் குளித்தது போல் மழைத்துளிகள் சிதறிக் கிடந்தது.

இன்று போல் கிழிந்த சுடிதாரில் இல்லை. அன்று சேலையில் இருந்தாள். மிதமான அலங்காரம் தான். ஆனால் பேருந்து நிறுத்தத்தில் எதற்காகவோ காத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அவள் முன்னால் இருந்த குழந்தை அவளை பார்த்து சிரிக்க அவளும் பதிலுக்கு சிரிக்க அதை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் சாணக்கியன்.

ஒரு பெண்ணை அவனால் ரசிக்க முடியும் என்பதே அவனுக்கு அன்று தான் தெரியும். எத்தனை வகை பெண்களை பார்த்திருப்பான். யாரை பார்த்தாலும் “ஆபத்து” என்ற வாக்கியம் மட்டும் தான் அவனுக்குள் ஓடும். அதில் விழிப்புணர்வு கூடும்.

அந்த ஆபத்தை அவன் நெருங்க விட்டதும் இல்லை. நெருங்க நினைத்ததும் இல்லை.

அவனுடைய குணத்திற்கு மாறாக முதல் முறையாக அவளை ரசித்துக் கொண்டிருந்தான். அன்றைக்கென்று மிகவேகமாக காவல் பணியில் இருந்தவர்கள் வேலை செய்து சாலை போக்குவரத்தை சரி செய்து விட்டனர்.

கார் நகரும் போது “போகாதே” என்று சொல்ல நினைத்து சொல்லாமலே விட்டு விட்டான்.

பார்வை மட்டும் அவள் மறையும் வரை அவள் மீதே இருந்தது.

அதன் பிறகு எப்போதாவது மூளையில் மின்னல் போல் வந்து மறைந்து போவாள். அதை பற்றி அவன் ஆராயவும் இல்லை. இன்று மீண்டும் மடியில் கிடக்கிறாள்.

அதுவும் கிழிந்த நாராக. இவளை இப்படி செய்தவனை வெட்டி வீசும் வேகம் வந்தது. ஆனால் எதற்கு இப்படி ஒரு கோபம் என்று புரியாமல் அமைதி காத்தான்.

கார் பறந்து சென்று வீட்டின் முன்னால் நின்றது. மிக குறுகிய பயணமாக தோன்றியது.

அவளை அள்ளிக் கொண்டு மருத்துவரை அழைக்கும் படி காசிக்கு கட்டளையிட்டு விட்டு வீட்டுக்குள் சென்றான்.

பிரம்மாண்டமான வீடு. கதவை திறந்து விட்ட வேலைக்காரன் சாணக்கியன் கையில் இருந்த பெண்ணை ஒரு நொடி ஆச்சரியமாக பார்த்து விட்டு உடனே வழி விட்டு நின்றான்.

சாணக்கியன் அவளை தூக்கிக் கொண்டு நேராக மேலே மாடியேறி விட காசி கூட புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

“யாரு அந்த பொண்ணு?” என்று வேலைக்காரன் ஏகாம்பரம் கேட்க “ரோட்டுல பார்த்தோம். ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தா.. விசயம் சீரியஸா போகுதே” என்று இழுத்தான் காசி.

“பூபதி சாருக்கு தெரியுமா?”

“அவர் தான் ஏத்தி விட்டதே. கொண்டு போய் வீட்டுல விட சொன்னாரு. இப்ப இங்க வந்துருக்கோம். எதுக்கும் இன்ஃபார்ம் பண்ணிடுறேன்” என்ற காசி பூபதியை அழைத்துக் கொண்டே நகர்ந்து விட்டான்.

தொடரும்.

2 Comments

Leave a Reply