சாரா 2
![]()
கண்ணை திறந்த போது எதுவும் புரியவில்லை அவளுக்கு. பார்வையை சுழற்றி பார்த்தவளுக்கு, திடீரென உடலெல்லாம் தீப்பற்றி எரிவது போல் எரிய, உணர்வு முழுதாய் மீண்டு விட்டது.
இருக்கும் இடத்தை பற்றி அறியாமல் எழ முயற்சித்தவள், திடீரென அதிர்ந்தாள்
அவள் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையை தவிர, எதுவும் அவள் அணியவில்லை. பதறிப்போய் போர்வையை இறுக்கமாக பிடிக்க, ஒரு கையில் ஊசி சுருக்கென வலியை ஏற்படுத்தியது.
சில நொடிகள் அசைவை நிறுத்தி விட்டு, மூளைக்கு வேலை கொடுத்தாள். ஒரு விசாலமான அறையில் பஞ்சு மெத்தையில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். ஆடை எதுவும் இல்லை. ஆனால் போர்வை அவளை மறைத்திருந்தது.
அறையில் பரவிய நறுமணத்தையும் தாண்டி, அவள் மீது பூசப்பட்டிருந்த மருந்து நெடி அவளது மூக்கை துளைத்தது. அவளது காயங்களுக்கெல்லாம் மருந்து தடவப்பட்டிருந்தது. இது யாருடைய வீடு? என்று புரியாமல் போக ,போர்வையை அழுந்த பிடித்துக் கொண்டாள்.
கையில் ஏறிக் கொண்டிருந்த செலனை பார்த்தான். பாதி தான் முடிந்திருந்தது. இதை போட்டு விட்ட ஆள் அருகே இருக்கிறார்களா? என்று கேள்வி வந்தது.
“யாராவது இருக்கீங்களா? ஹலோ.. யாராவது இருக்கீங்களா?” என்று குரல் கொடுக்க, யாரோ வேகமாக அறையின் மறுபக்கமிருந்து வந்தனர்.
செவிலியர் உடையில் ஒரு பெண் அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டே வந்தாள்.
“முழிச்சுட்டீங்களா? இப்ப எப்படி இருக்கு?”
“வலிக்குது. நீங்க?”
“பெயின் கில்லர் எதுவும் போடல. டாக்டர் கிட்ட கேட்டுட்டு போடுறேன். நான் உங்கள பார்த்துக்க இருக்க நர்ஸ்” என்றவள் அவளை பரிசோதித்து விட்டு கைபேசியை எடுத்தாள்.
“என் டிரஸ் எங்க சிஸ்டர்?”
“உங்க காயம் ஆறனும்னு நான் தான் ரிமூவ் பண்ணேன். மருந்து போட்டுருக்கேன். சீக்கிரம் சரியாகிடும்”
போர்வை ஒரு கையால் தூக்கி உடலை பார்த்தவள், “நான் வாஸ் ரூம் போகனும்” என்றாள்.
“வாங்க கூட்டிட்டு போறேன்” என்றாள் நர்ஸ்.
போர்வையை நன்றாய் சுற்றிக் கொண்டு அவள் எழ, நர்ஸ் செலனை நிறுத்தி கழட்டி விட்டு அழைத்துச் சென்றாள்.
நடக்கும் போது கால்கள் வலியெடுத்தது. தாங்கி தாங்கி நடந்து கழிப்பறையை அடைந்தாள்.
“ரொம்ப சூடான தண்ணியா யூஸ் பண்ணாதீங்க” என்று கூறி விட்டு நர்ஸ் விலகிக் கொள்ள, அவள் மட்டும் உள்ளே சென்றாள்.
நர்ஸ் முதலில் மருத்துவரை அழைத்து பேசி விட்டு, சாணக்கியனுக்கு விசயத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்ததாள்.
கழிப்பறை விட்டு வெளியே வந்தவளை, நர்ஸ் அழைத்து வந்து அமர வைத்தாள்.
“உங்கள பார்க்க இப்ப ஆள் வருவாங்க. கொஞ்சம் ரெடியாகிக்கோங்க”
“இந்த நிலைமையிலயா? என் டிரஸ்ஸ கொடுங்க ப்ளீஸ்”
“அது கிழிஞ்சுருச்சு மேடம். இப்ப அத நீங்க போடவும் முடியாது. உங்க காயத்தை பார்த்தீங்க தான? இப்ப நீங்க இப்படி இருக்கது தான் நல்லது. நீங்க படுத்துக்கோங்க. வர்ரது லேடி டாக்டரும் சாரும் தான். பிரச்சனையில்ல” என்று பேசி அவளை படுக்க வைத்து போர்த்தி விட்டாள்.
‘சாரா? எவன் அவன்?’ என்று அவள் பதறிக் கொண்டு வாயைத்திறக்கும் போது கதவு திறக்கும் சத்தம் கேட்க, அசையாமல் படுத்து விட்டாள்.
உள்ளே மருத்துவர் முதலில் வர, பின்னால் வந்து நின்றான் சாணக்கியன். பார்த்ததும் அவளுக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை. அவன் மருத்துவரிடம் திரும்பி எதோ பேச, பக்கவாட்டு முகத்தை வைத்து கண்டு பிடித்து விட்டாள்.
‘நேத்து லிஃப்ட் கொடுத்த ஆள் தான?’ என்று யோசித்தவள், ‘இவர் வீடு தானா இது?’ என்று யோசித்தாள்.
சாணக்கியன், “நீங்க செக் பண்ணிட்டு கூப்பிடுங்க” என்றதோடு வெளியேறி விட்டான்.
மருத்துவர் அவரது வேலையை பார்த்தார். பெல்டால் அடித்த காயங்கள் நகக்கீரல்களோடு உடல் கொடூரமாக தான் இருந்தது. எல்லாவற்றின் மீதும் மருந்து பூசும் போது துடித்துப்போனாள்.
கண்ணீர் ஒரு பக்கம் வர, அதை துடைத்துக் கொண்டே மருத்துவர் கேட்டதற்கு பதிலை சொல்லி முடித்தாள்.
மருத்துவம் முடிந்ததும் மீண்டும் அவளுக்கு போர்வை போர்த்தி விட்டு, சாணக்கியனை அழைத்தனர்.
உள்ளே வந்தவன் அழுதிருந்த அவளது கண்களை ஒரு நொடி பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டான். மருத்துவர் அவளது உடல் நிலையை விளக்கி சொல்லி விட்டு, “ஹெல்ப்க்கு ஆள் வைச்சுக்கிறதுனா வச்சுக்கலாம்” என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்.
நர்ஸ் மட்டும் இருக்க, சாணக்கியன் வாசல் பக்கம் விரலை காட்டினான். உடனே நர்ஸும் வெளியேறி விட, மெத்தையில் படுத்திருந்தவள் பதறி விட்டாள்.
இருக்கும் நிலை அப்படி அல்லவா? ஆனால் காப்பாற்றியவனிடம் சண்டை போடவும் முடியாது என்று மூளை சொல்ல, எச்சிலை விழுங்கிக் கொண்டு பார்த்தாள்.
“பேரென்ன?” என்று முதல் கேள்வியை அவன் கேட்க, “ராகவி” என்றாள்.
“வயசு?”
“ஏன்?”
அவன் புருவம் மட்டும் உயர்த்த, “இருபத்தி ஏழு” என்றாள்.
“என்ன படிச்சுருக்க?”
“டாலி டிப்ளமோ பண்ணிருக்கேன்”
“எங்க வேலை பார்க்குற?”
“ஒரு கடையில..”
“பேரு?”
“முருகன் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்”
“உன்னை துரத்திட்டு வந்தவன் யாரு?”
“அந்த கடை முதலாளி”
சொல்லும் போதே அவளது முகம் வெறுப்பில் சுருங்கியது.
“உன் வீட்டுல இருந்தானே அவன் யாரு?”
“என் மாமா”
“அவன் தான் அடிச்சதா?”
தலையை மட்டும் ஆட்டினாள்.
“ஏன்?”
மழுக்கென கண்ணீர் வந்து விட, தலையை தொங்க போட்டுக் கொண்டாள்.
“கேட்டேன்?” என்று அவன் பொறுமை இழந்த குரலில் கேட்க, “அத கேட்காதீங்க ப்ளீஸ்” என்றவள் கண்ணீரை துடைக்காமல் அவனை ஏறிட்டு பார்த்தாள்.
அவள் அமர்ந்திருக்க அவன் நின்றிருந்தான்.
“என்னை காப்பாத்துனதுக்கு தாங்க்யூ சோ மச். என்னால உங்களுக்கு நிறைய செலவாகி இருக்கும். அத நான் எப்படியாவது திருப்பி கொடுத்துடுறேன்”
அவள் பேசுவதை கேட்டவன், விருட்டென திரும்பி நடந்தான்.
“ஒரு நிமிஷம் சார்” என்று அவள் அவசரமாக அழைக்க சட்டென நின்று விட்டான்.
“வந்து.. உங்க பேரு?” என்று அவள் இழுக்க திரும்பிப்பார்க்காமல் சென்று விட்டான்.
“என்ன பேரு கூட சொல்லாம போயிட்டாரு?” என்று அவள் முகம் சுருக்கினாள்.
சில நொடிகளில் நர்ஸ் வந்தாள்.
“பசிக்குதா மேடம்? டிரிப்ஸ் முடிஞ்சா சாப்பிட எதாவது கொண்டு வர சொல்லுறேன்”
“இல்ல எனக்கு டிரஸ் தான் வேணும்”
“புண் எரியலயா?”
“எரியுது ஆனா…”
“இந்த ரூமுக்குள்ள என்னை தவிர யாரும் இனி வர மாட்டாங்க. அதுனால கவலையே படாதீங்க. உங்களுக்கு காயம் ஆறுறது தான் முக்கியம்”
நர்ஸ் சொன்னதையே திரும்பவும் சொல்ல, ராகவி சற்றே சலிப்போடு படுத்துக் கொண்டாள். பஞ்சு மெத்தை இதமாக தான் இருந்தது. ஆனால் காயங்கள் அவளை படுத்தி எடுத்தது.
செலைன் முடிந்ததும் கஞ்சியும் மாத்திரையும் வந்தது. எழுந்து சாப்பிட்டு விட்டு படுத்தவள், உடனே மீண்டும் உறங்கி விட்டாள். இந்த நர்ஸிடம் அவன் பெயரை கேட்பதா? வேண்டாமா? என்ற யோசனையுடன்..!
*.*.*.*.*.*.
இருட்டான அந்த அறைக்குள் ஒருவனை தலைகீழாக தொங்க விட்டு அடித்துக் கொண்டிருந்தனர். அடி வாங்கியவன் அலறவில்லை. பல்லைக்கடித்து வலியை தாங்கிக் கொண்டிருந்தான்.
சாணக்கியன் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, உணர்வே இல்லாத முகத்துடன் அதை பார்த்துக் கொண்டிருந்தான்.
அங்கே தொங்கிக் கொண்டிருந்தவன் மூன்று நாட்களுக்கு முன்பு வரை அருமையான நண்பன். தம்பி என்றே நினைத்திருந்தான்.
இன்று அவனது முகத்திரை கழண்டு விழுந்து விட, அடி வாங்கிக் கொண்டிருந்தான்.
அந்நேரம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார் குமாரசாமி. அடிவாங்கிக் கொண்டிருப்பவனின் தந்தை. மகனை ஒரு நொடி பார்த்தார். அடிப்பவனையும் ஒரு நொடி பார்த்தார். அடித்து கொண்டிருந்தது காசியும் பூபதியும்.
“எதாச்சும் சொன்னானா சாரா?”
“இல்ல”
“சொல்லாம செத்துட போறான். பார்த்துக்க” என்றவர் திரும்பி நடக்க, “யோவ்.. நீயெல்லாம் ஒரு அப்பனா?” என்று கத்தினான் திவாகர்.
நடந்தவர் நின்று திரும்பிப் பார்த்தார்.
“நீ பெத்த புள்ளைய போட்டு அடிக்கிறாங்க. காப்பாத்த வக்கில்லாம போற. நீ எல்லாம் ஆம்பளையா?”
திவாகர் கத்த, அவன் பக்கம் நன்றாய் திரும்பி நின்றார்.
“காப்பாத்தனுமா? உன்னை என் கையால கொல்லுற பாவம் கூட வேணாம்னு போறேன். உண்மைய சொல்லிட்டு செத்துட்டா கொல்லி வைப்பேன். சொல்லலனா நாய்க்கு தூக்கி போட்டுட்டு போயிடுவேன். இது தான் உன் அப்பன். தெரிஞ்சுக்க” என்றவர் விருட்டென திரும்பி நடந்து சென்றார்.
பூபதி விட்ட வேலையை தொடர, சாணக்கியன் கையை உயர்த்தி நிறுத்தினான்.
காசியும் பூபதியும் திவாகரை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருக்க, சாணக்கியன் எழுந்து அருகே வந்தான்.
“லாஸ்ட் கொஸ்ட்டின்… ஏன்?”
“நீ எத்தனை தடவ கேட்டாலும் பதில் வராது. நான் செத்தே போனாலும் எதுவும் சொல்ல மாட்டேன். நீ தான் பெரிய பு*ங்கி ஆச்சே. கண்டு பிடிடா. நான் செத்து போனா ஆவியா நின்னு கூட நீ திணறுறத ரசிப்பேன்.” என்றவன் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான்.
சாணக்கியன் முகத்தில் மெல்ல புன்னகை வந்தது.
“சேலன்ஜ் பண்ணிட்டல? டன். நான் கண்டு பிடிக்குற வரை நீ உயிரோட தான் இருக்கனும். கண்டு பிடிச்சுட்டு உன்னை என் கையால முடிக்கிறேன்” என்றவன் நக்கல் சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு கிளம்பி விட்டான்.
*.*.*.*.*.*.*.*.
ஒரு நாள் முழுவதும் ஓய்வெடுத்த பின், ராகவியின் உடல் நன்றாக தேறி இருக்க, காயங்களும் ஆறி இருந்தது.
நர்ஸ், “இந்த நைட்டிய போட்டுங்கோங்க” என்று நீட்ட, “நைட்டியா? எனக்கு சுடிதார் தான் வேணும்” என்றாள் ராகவி.
“முதல்ல இத போடுங்க. காயம் இன்னும் நல்லா ஆறினப்புறம் சுடிதார் போட்டுக்கலாம்” என்று வற்புறுத்தி அணிய வைத்தாள்.
எதுவும் அணியாமல் இருந்ததற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று ராகவியும் அணிந்து கொண்டாள்.
நேற்று முழுவதுமே நர்ஸை தவிர யாருமே அறைக்குள் வரவில்லை. உடை அணியாததால் ராகவியும் வெளியே சென்று எட்டிக்கூட பார்க்கவில்லை.
இன்று எழுந்து அமர்ந்து அறையை நோட்டம் விட்டுக் கொண்டிருக்க, கதவை தட்டி விட்டு உள்ளே வந்தான் சாணக்கியன்.
அவனை பார்த்ததும் நர்ஸ் எழுந்து நிற்க, ராகவி போர்வை கொண்டு தன்னை உடனே மறைத்துக் கொண்டாள்.
சாணக்கியன் உள்ளே வந்ததும் நர்ஸ் வெளியேறி விட, ராகவி அவனை பார்த்தாள். இம்முறை அவன் ஆரம்பிக்கும் முன்பே தான் கேட்டு விட வேண்டும் என்று முடிவு செய்தவள், அவன் வாயைத் திறக்கும் போதே கேட்டு விட்டாள்.
“சார்… உங்க பேரு சொல்லாமலே போயிட்டீங்க. இவ்வளவு உதவி பண்ணிட்டு, உங்க பேர் கூட எனக்குத் தெரியலனா எப்படி சார்?”
“நர்ஸ் கிட்ட கேட்கலயோ?” என்று கேட்டு புருவம் உயர்த்தினான்.
அவள் கேட்டிருப்பாள் என்று தான் அவன் நினைத்திருந்தான். அவளும் அதை யோசித்தாலும் கேட்காமல் விட்டு விட்டாள்.
“இல்ல. அவங்க உங்கள எனக்கு தெரியும்ங்குற மாதிரி நடந்துக்கிட்டாங்க. அவங்க கிட்ட கேட்டு எதாவது பிரச்சனையாகிடும்னு..” என்று இழுத்து நிறுத்தினாள்.
சாணக்கியன் திருப்தியாய் தலையசைத்து வைத்தான்.
“ஆனா நீங்க யாருனே தெரியல.. எனக்கு இவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்கீங்க. நிறைய செலவாகிடுச்சா? நான் திருப்பி தந்திடுறேன். எவ்வளவு ஆச்சு?”
கவலையுடன் அவள் கேட்க, அவனிடமிருந்து பதில் எதுவும் இல்லை.
“உங்க பேரு சொல்லலயே?”
“சாணக்கியன்”
“ஓஓ.. சாணக்கியன் சார்.. நான் என் வீட்டுக்கு போகனும். இப்ப ஓரளவு சரியாகிட்டேன். இன்னும் இங்கயே இருந்து உங்களுக்கு செலவு வைக்க முடியாது. நான் கிளம்பட்டுமா?”
அவள் குற்ற உணர்வோடு பேச, “அன்னைக்கு என்ன நடந்துச்சுனு நீ சொல்லவே இல்லையே?” என்று அவன் கேட்டான்.
“அது எதுக்கு?”
“அத சொல்லாம நீ இங்க இருந்து போக முடியாது”
“சார்..” என்றவள் பயந்து போய் பார்த்தாள்.
‘இது என்ன புது பிரச்சனை.. அய்யய்யோ!’ என்று அவள் மனதில் பதறுவது முகத்தில் தெரிந்தது.
“நான் யார் தெரியுமா?”
“யாரு?”
“சாணக்கிய ராஜ் தெரியுமா? சாரா?”
“ரௌடி….” என்று ஆரம்பித்தவள், கப்பென வாயை துணி கொண்டு அடைத்துக் கொண்டு அவனை மிரண்டு போய் பார்த்தாள்.
சாணக்கியனை கேள்விப்படாமல் இருக்க அவன் என்ன குழந்தையா? அத்தனை அயோக்கிய தனத்தையும் செய்து விட்டு காவல்துறையை சுற்றலில் விட்டு வேடிக்கை பார்ப்பவன் என்று கதை கதையாக கேள்வி பட்டிருக்கிறாளே. அவன் முன்னால் அவன் வீட்டில் இருப்பதை நினைத்து கதி கலங்கியது.
“என்ன சொன்ன?” என்று கேட்டு அவன் ஒரு அடி முன்னால் வர, அவளுக்கு வியர்க்கவே ஆரம்பித்து விட்டது.
“சார்..” என்றவள் எச்சிலை கூட்டி விழுங்க, அவன் அவளை துளைக்கும் பார்வை பார்த்தான்.
“அது.. சார்.. நீங்களா அந்த சாரா?”
அவன் இன்னும் ஆழமாய் அவள் கண்களை பார்க்க, பார்வையை படக்கென திருப்பிக் கொண்டு வியர்வையை துடைத்துக் கொண்டாள்.
“என்னை பத்தி தெரியும் போல?”
“தெ தெரியும் சார்.. நீங்க ரொம்ப பெரிய.. பெரிய ஆளுனு தெரியும்” என்ற திக்கி திணறி அவள் பேச, சாணக்கியன் மேலும் ஒரு அடி எடுத்து வைத்து அருகே வந்தான்.
“பெரிய ஆளா? பெரிய ஆளுனா?” என்று கேட்டு அவளை நன்றாகவே சோதித்தான்.
“நாராயணா காப்பாத்து” என்று அவள் விட்டத்தை பார்த்து முணுமுணுப்பது அவனுக்கு தெளிவாக கேட்டாலும், கேட்காதது போல் அவள் பதிலுக்கு காத்திருந்தான்.
“ஹி ஹி.. சார்.. நீங்க ரொம்ப பெரிய ஆளு சார். என்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்து, ட்ரீட்மெண்ட் எல்லாம் பார்த்துருக்கீங்க. அதுலயே உங்க பெரிய மனசு தெரியுது. ஆனா நான் போகனும் சார். எனக்கு வேலை இருக்கு. அத பார்த்தா தான் உங்களுக்கு நான் பணத்த திருப்பிக் கொடுக்க முடியும். ஹி ஹி.. அதுனால நான் இங்க இருந்து போகனும்.. இல்ல எப்ப போறது?”
அவள் பயத்தை மறைக்க முயற்சித்து சமாளிக்க, அவனுக்கும் புன்னகை எட்டிப்பார்த்தது.
“நடந்தத சொல்லு.” என்று மட்டும் மீண்டும் கேட்டு வைக்க, அவள் தலையில் கை வைத்து விட்டாள்.
தொடரும்.
