சாரா 4

Loading

மூன்றாம் நாள் சுடிதாருக்கு மாறியதுமே ராகவி அறையை விட்டு வெளியே வந்து விட்டாள். இனி நர்ஸ் தேவை இல்லை என்று அவள் கிளம்பி விட, ராகவி அவள் பின்னாலேயே அறையை விட்டு வெளியே வந்தாள்.

தயக்கத்துடனே வந்து வீட்டை பார்த்தவள், வாயைப்பிளந்து கொண்டு சுற்றியும் பார்த்தாள்.

“வாவ்…!” என்று தன்னை அறியாமல் சொன்னவள், சுற்றியும் பார்த்து விட்டு, “இப்படிலாம் டிவில தான் பார்த்துருக்கேன்” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

மாடியில் தான் இருந்தாள். அறைகளின் கதவுகள் மூடப்பட்டிருந்தது. சுவர் முழுவதும் விதவிதமாக அலங்கரிக்கப்பட்டிருக்க சில ஓவியங்களும் மாட்டப்பட்டிருந்தது. விட்டத்தில் இருந்த விளக்குகள் கூட கலைநயத்துடன் அமைந்திருந்தது.

“வீடு மட்டும் பெருசா இருக்கு. ஒரு ஆளையும் காணோம்?” என்று அவள் அங்கும் இங்கும் சென்று எட்டிப்பார்த்ததுக் கொண்டிருக்க, “ம்க்கும்” என்று தொண்டையை கணைக்கும் சத்தம் கேட்டது.

“அம்மாடி” என்று பதறிப்போய் திரும்பிப்பார்த்தாள்.

பூபதி அவளை ஆராய்ச்சி பார்வையோடு பார்த்துக் கொண்டு நிற்க, நெஞ்சில் கை வைத்து மூச்சு வாங்கியவள், “சாரி சார். பயந்துட்டேன்” என்றாள்.

“இங்கயும் அங்கயும் எதுக்கு நடந்துட்டு இருக்க?”

“சாணக்கியராஜ் சார பார்க்கனும். நான் கிளம்பனும்” என்று கூறியவள் சட்டென நிறுத்தி, அவனை கூர்ந்து பார்த்தாள்.

“சார்.. நீங்க தான என்னை முதல்ல பார்த்து கார்ல ஏத்தி விட்டது?” என்று அவள் சந்தோசமாக கேட்க, அவன் இமையை கூட சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ரொம்ப ரொம்ப நன்றி சார். நீங்க இல்லனா உடைஞ்ச காலோட நடுரோட்டுல தான் கிடந்துருப்பேன்.” என்றவள் கை கூப்பி நன்றியை தெரிவிக்க, பூபதி தலையாட்டிக் கொண்டான்.

“சார பார்த்து சொல்லிட்டு கிளம்பலாம்னு பார்த்தேன். எங்க இருக்காரு?”

“நான் சொல்லிக்கிறேன். நீ கிளம்பு”

“இல்ல எனக்காக நிறைய செலவு பண்ணிருக்காங்க. அத…”

“திருப்பி தர தேவையில்ல.”

அவனை ஆராய்ச்சியோடு பார்த்தவள், “நீங்க அவருக்கு பாஸா? நான் அவரல்ல பெரிய ரௌ.. ஆளுனு நினைச்சுட்டு இருந்தேன்” என்றாள்.

“யாரா இருந்தா என்ன? உன் வேலை முடிஞ்சதுல? கிளம்பு.” என்று படிகள் பக்கம் கை காட்ட, உதட்டை பிதுக்கி விட்டு, “வர்ரேன் சார்” என்றதோடு இறங்கி கீழே வந்தாள்.

வீடு மொத்தமும் அழகாக இருக்க, “வாவ்!” என்று அதை ரசித்துக் கொண்டே நடந்தவள், கார்பெட்டை மிதித்து, “ஆத்தி..” என்று தடுமாறி நிற்க முயற்சித்து, அருகே நின்றவன் மீது மோதினாள்.

“அம்மா..” என்றபடி நெற்றியை தேய்த்துக் கொண்டு நிமிர, சாணக்கியன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“போச்சு” என்று வாய்விட்டு சொல்லி விட்டு உடனே நாக்கை கடித்தவள், “சாரி சார்.. கவனிக்காம வந்துட்டேன்” என்று மழுப்பினாள்.

‘எம்புட்டு சாரி?’ என்று அவளது மனசாட்சியே கேட்டு வைத்தது.

“பின்னாடி பார்த்துட்டே நடந்தா இப்படித்தான் விழனும். நேரா பார்த்து நட” என்றவனை கார்பெட் முறைத்து வைத்தது.

அவள் கவனிக்கவில்லை என்பதை அறிந்து, கார்பெட்டை இழுத்து தட்டி விட்டதே அவனல்லவா?

நல்ல பிள்ளை போல் தலையை ஆட்டியவள், “நான் கிளம்புறேன் சார்” என்றாள்.

“எங்க?”

“என் வீட்டுக்கு….”

“ஓஓ..” என்றவன் சோபாவில் சென்று அமர்ந்து கொள்ள, அவள் புரியாமல் பார்த்தாள்.

“போ” என்று வாசல் பக்கம் கை காட்ட, ‘தப்பிச்சோம்’ என்ற எண்ணத்துடன் உடனே திரும்பி நடந்தாள்.

வாசலை நெருங்கும் போதே சொடக்கு போடும் சத்தம் கேட்க, ‘நம்மல இல்ல’ என்ற நினைப்பில் நிற்கவில்லை.

“ராகவி” என்று குரல் கேட்டதும், சட்டென நின்று திரும்பி பார்த்தாள்.

ஒற்றை விரலால் அவளை அழைக்க, ‘என்ன போக விட்டு திரும்ப கூப்பிடுறாரு..? மாட்டுனமோ?’ என்று நினைத்தவள், எச்சிலை விழுங்கிக் கொண்டு அவனிடம் வந்தாள்.

“என்ன சார்?”

பதில் சொல்லாமல் கையை நீட்டினான். கையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள், புரியாமல் தலையை சொறிந்தாள்.

“என்னாச்சு சார்?” என்று மீண்டும் கேட்க, “என் பணத்த திருப்பி தர்ரேன்னு சொன்ன?” என்று கேட்டான்.

“ஆமா.. ஆனா உங்க பாஸ் தர வேணாம்னு சொல்லிட்டாரு”

“பாஸா? யாரு?”

“மேல இருந்தாரு.. அங்க” என்று கை காட்ட, படியில் இறங்கி வந்து கொண்டிருந்தான் பூபதி.

“அவரு தான் திருப்பி எல்லாம் தர வேணாம்னு சொன்னாரு” என்று பூபதியை காட்டி கூறினாள்.

“செலவு பண்ணது நான். நான் தான் சொல்லனும் தரனுமா வேணாமானு” என்று சாணக்கியன் கோபமாக பேச, ராகவி அப்பாவியாய் பார்த்து வைத்தாள்.

“எவ்வளவுனு சொல்லுங்க. எடுத்துட்டு வந்து தர்ரேன்”

“எடுத்துட்டு வந்தா? பணத்த கையில வைக்காம நீ இந்த வீட்ட விட்டு வெளிய போக முடியாது” என்று குண்டை தூக்கிப்போட, பூபதியும் ராகவியும் சேர்ந்தே அதிர்ந்தார்கள்.

“ராஜ்!” என்று பூபதி அதிர்ச்சியாக பார்க்க, “பேசிட்டு இருக்கேன்” என்றான் சாணக்கியன் அலட்டிக் கொள்ளாமல்.

“சார்.. இப்ப என் கிட்ட பணமே இல்ல. இருக்கது இந்த கொலுசு தான். அதுவும் வெள்ளி எல்லாம் கிடையாது. வெளிய போய் தான் யார் கிட்டயாச்சும் வாங்கிட்டு வந்து கொடுக்கனும்”

“பணத்த வச்சுட்டு வெளிய போ”

“சார்.. பாஸ் சார்.. நீங்களாச்சும் சொல்லுங்களேன்.” என்று பூபதியின் பக்கம் பார்க்க, அவன் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டு நின்றிருந்தான்.

“பணம் என்னது ராகவி. என் கிட்ட தான் நீ செட்டில் பண்ணனும்”

தலையை தொங்க போட்டவள், “எவ்வளவு ஆச்சு?” என்று கேட்டாள்.

“இவ்வளவு சோகமா கேட்குற? அப்ப கொடுக்குற ஐடியால இல்ல போலயே”

“சார்.. சத்தியமா உங்க பணத்த திருப்பி கொடுத்துடுவேன். ஆனா அத வீட்டுக்குள்ளயே வச்சுட்டு செய்னா எப்படி? கொஞ்சமாச்சும்.. யோசிங்க சார்”

“நான் செலவு பண்ண பணத்த எடுத்துட்டு நீ ஓடிப்போயிட்டா?”

“எதே?” என்றவள் உடனே குரலை தழைத்து, “பணத்த எடுத்துட்டு ஓடுவனா? ட்ரீட்மெண்ட்க்கு செலவு பண்ணது எப்படி எடுத்துட்டு ஓடுறது?” என்று கேட்டு அவனை புரியாமல் பார்த்தாள்.

“ரொம்ப கேள்வி கேட்காத. பணத்த வச்சுட்டு கிளம்பு”

“அஞ்சு பைசா கையில இல்ல. பணத்துக்கு எங்க போக? ஆமா எவ்வளவு ஆச்சுனு சொல்லவே இல்லையே”

“கம்மி தான். அஞ்சு லட்சம்”

“எம்மா…!” என்று நெஞ்சை பிடித்து விட்டாள்.

விட்டால் மயங்கி விழுந்திருப்பாள். அப்படி ஒரு அதிர்ச்சி அவளது முகத்தில்.

அதை பார்த்து வரத்துடித்த புன்னகையை அவசரமாக அடக்கிக் கொண்டான் சாணக்கியன்.

“சா.. சா.. சார்.. சத்தியமா அஞ்சு லட்சம் தானா?”

சிறு பிள்ளை போல் அவள் கையை நீட்டி திக்கித்திணறி சத்தியம் கேட்க, அவன் அவளையும் கையையும் மாறி மாறி பார்த்தான்.

அவனது பார்வைக்கு பின் சுதாரித்து கையை பின்னால் இழுத்துக் கொள்ள, சாணக்கியன் தன் கைவிரல்களை அழுந்த மூடிக் கொண்டு எழுந்து நின்றான்.

“பணத்த எண்ணி வச்சுட்டு நீ போகலாம்” என்றவன் திரும்பி நடக்க, “சார் சார்.. அய்யோ போகாதீங்க.. சார்.. இப்ப என்ன பண்ணனும்னு சொல்லுங்க. என் கிட்ட பத்து பைசா இல்லனு உங்களுக்கே தெரியும். வேற என்ன தான் பண்ணுறது? இங்க வீட்டு வேலை வேணா பார்க்கட்டுமா?” என்று கேட்டுக் கொண்டே பின்னால் ஓடினாள்.

“வீட்டுல வேலைனா?”

“இந்த துடைக்கிறது கூட்டுறது..”

“அதுக்கு ஆள் இருக்கு”

“இருக்கும் இருக்கும்.” என்று உடனே ஒப்புக் கொண்டவள், “அப்ப சமைக்கட்டுமா?” என்று கேட்டாள்.

“நீ நல்லா சமைப்பியா?” என்று நக்கலாக கேட்க, அவள் தலையை சொறிந்தபடி பார்த்தாள்.

“அதுக்கும் ஆள் இருக்கு”

“அப்ப தோட்ட வேலை? இல்லனா கேட்ல வாட்ச் மேனா இல்ல வாட்ச் உமனா நிக்கட்டுமா?” என்று கேட்டதும், சட்டென நின்று அவளை மேலும் கீழும் பார்த்தான்.

“உனக்கிருக்க ஸ்ட்ரென்த்துக்கு கேட்ட திறக்க கூட முடியாது. வாட்ச் உமன்?”

நக்கலாக கேட்டவனை, அவள் அழாத குறையாக பார்த்து வைத்தாள்.

“வேற என்ன தான் சார் பண்ணுறது? பணத்த கொடுனு கேட்குறீங்க. வேலையும் தரமாட்டீங்கனா? நடு வீட்டுல உட்கார்ந்து மேஜிக் போட்டு தான் வர வைக்கனும். ஆனா எனக்கு அது கூட தெரியாது சார்” என்று அழுவது போல் சொல்லி வைத்தாள்.

“நான் கேட்குறதுக்கு பதில் சொன்னா பாதி அமௌண்ட்ட கட் பண்ணிடுறேன்.” என்று மனமிறங்கி வர அவள் அதற்கும் விழித்தாள்.

‘பாதி மட்டும் தானா? மிச்சத்துக்கு எங்க போறது?’ என்று திணறியவள், ‘சரி பாதியவாச்சும் குறைப்போம்’  என்ற முடிவுக்கு வந்தாள்.

“கேளுங்க சார். எத்தனை வேணா கேளுங்க”

“உன் அம்மா அப்பா எங்க?” என்று ஒன்றும் தெரியாதது போல் ஆரம்பித்தான்.

“இறந்து போயிட்டாங்க சார்”

“அப்ப யார் கூட இருக்க?”

“பாட்டி கூட இருந்தேன். அவங்களும் இப்ப தான் போனாங்க.” என்றவள் முகம் வாடி வதங்கியது பாட்டியின் நினைவில்.

“அப்ப உன் மாமா?”

“அந்தாளு வீட்ட விட்டு எப்பவோ ஓடிப்போயிட்டான்.”

“உன்னை எதுக்கு அடிச்சான்?”

ஒரு நொடி அமைதி காத்தவள், “நான் பணம் கொண்டு வரலனு அடிச்சான்” என்று கூறி விட்டாள்.

“எந்த பணம்?”

உடனே பதில் சொல்ல முடியாமல் உதட்டை கடித்தவள், ஆழ மூச்செடுத்துக் கொண்டாள்.

“கடை முதலாளி கிட்ட என்.. என்னைப் பேரம்  பேசி இருக்கான். அட்வான்ஸ் வாங்கி இருக்கான். மிச்சத்த என் கிட்ட பணம் கொடுத்து அனுப்புறதா சொல்லிருக்கான். நா..க்கும்.. நான் தப்பிச்சு ஓடி வந்துட்டதால பணம் வரல. வீட்டுல நுழைஞ்சதும் பணத்த கேட்டான். விசயம் அப்ப தான் புரிஞ்சது. பணம் இல்லனு சொன்னதும் பெல்டால.. அடிச்சான். நான் இருந்த நிலமைக்கு தடுக்கவும் முடியல”

சொல்லிக் கொண்டே வந்தவளின் கண்ணில் கண்ணீர் இறங்க, துடைத்துக் கொண்டாள்.

“இப்ப உன் வீட்டுல அவன் இல்ல. எங்க போயிருப்பான்?”

சாணக்கியன் குரலிலோ முகத்திலோ மாற்றமே இல்லை. அவளை இமைக்காமல் பார்த்தபடி கேட்டுக் கொண்டிருந்தான்.

“தெரியாது”

“உனக்கு வேலை கொடுத்தவன் செத்துட்டான். இனி அங்க உனக்கு வேலை இல்ல. என் பணத்த எப்படிக் கொடுப்ப?”

“வேற வேலை தேடிக்கிறேன் சார். எப்படியாவது உங்க பணத்த கொடுத்துடுறேன்”

“நீ என்ன படிச்சுருக்கதா சொன்ன?”

“டாலி”

“டைப்பிங்?”

“ம்ம். பண்ணுவேன்” என்று தலையாட்ட, “உனக்கு பூபதி சார் வேலை தருவார். போய் கேளு” என்று பூபதியை காட்டி விட்டு, விறுவிறுவென நகர்ந்து சென்று விட்டான்.

ஒரு நிமிடம் புரியாமல் நின்றவள், “உங்க பேரு பூபதியா? எனக்கு வேலை கொடுக்கவா சொன்னாரு?” என்று சந்தேகமாக கேட்டாள்.

பூபதி இறுகிய முகத்துடன், “வா” என்று அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

தொடரும்.

Leave a Reply