சாரா 7

Loading

“போச்சு போச்சு. எல்லாம் போச்சு.. இப்படி பண்ணிட்டு போயிட்டாளே பாதகத்தி.. நல்லா இருப்பாளா?” என்று புலம்பியபடி ராகவி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, ஏகாம்பரமும் பூபதியும் வந்து சேர்ந்தார்கள்.

ஏகாம்பரத்திடம் எதோ சொல்லிக் கொண்டே வந்த பூபதி, நடு ஹாலில் நடந்து கொண்டிருந்தவளை விசித்திரமாக பார்த்து வைத்தான்.

“ராகவி” என்று அதட்டல் போட, “என்ன?” என்று பதறிப் போய் திரும்பிப் பார்த்தாள்.

“என்ன பண்ணிட்டு இருக்க நீ?”

“ஒன்னும் இல்லையே” என்றவள் உடனே வெளியே ஓடி விட்டாள்.

“இவள எதுக்கு தான் வீட்டுல வச்சுருக்கானோ?” என்று பூபதி சலிப்பாய் பேச, “அவர் நினைக்கிறது யாருக்குப் புரியும்?” என்று கையை விரித்தான் ஏகாம்பரம்.

“அனுப்ப சொன்னா வீம்புக்கு வச்சுருப்பான். என்ன தான் நினைச்சுட்டு இருக்கான்னு தெரியல” என்று கடுப்பாக சொல்லி விட்டு பூபதி சென்று விட, ஏகாம்பரம் வேலையை பார்த்தான்.

அந்த வீட்டில் இருப்பது சாராவை தவிர்த்து நான்கு நபர்கள் தான். வாசலில் இருக்கும் இரண்டு காவல்காரர்கள். ஏகாம்பரம் மற்றும் பூபதி.

புதிதாய் முளைத்திருந்த ராகவிக்கு என்ன செய்வது என்றே புரியாமல் போக, அறையில் அமர்ந்திருந்தாள். ஏகாம்பரத்திற்கு உதவ வேண்டும். கடனை அடைக்க வேண்டும் என்பதெல்லாம் அவளுக்கு மறந்து போனது.

இங்கிருந்து எப்படி ஓடுவது? என்ற சிந்தனை தான் மிஞ்சி இருந்தது.

“ராகவி” என்று ஏகாம்பரம் அவளை தொட்டு உலுக்கவும், பதறி அடித்து எழுந்தாள்.

“எந்த உலகத்துல இருக்க நீ?” என்று ஏகாம்பரம் திட்ட, அவளது கண்கள் கலங்கி விட்டது.

எப்போது சாரா வந்து கையைப்பிடித்து இழுத்துச் சென்று தாலி கட்டுவானோ? என்று பயந்து போயிருந்தாள்.

“எதுக்கு இப்படி நிக்கிற? வந்து வேலையைப் பாரு”

“இல்ல.. மாட்டேன். நான் இங்க இருந்து போகனும்”

“அப்ப கடன அடைக்குறது?”

“அதெல்லாம் கேட்காதீங்க. எனக்கு இங்க இருந்து போகனும். இங்க இருக்க பிடிக்கல”

“என்ன புதுசா பேசுற?”

“ஏகாம்பரம்.. எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்.. நான் இங்க இருந்து எப்படியாவது தப்பிக்கனும்”

“உன்னை ரொம்ப நல்ல பொண்ணுனு நினைச்சேனே. கடைசியில பணத்த கொடுக்காம ஓடப்பார்க்குற நீ?”

“அதுக்காக? ஒரு ரௌடிய கல்யாணம் பண்ணிக்க சொல்லுறீங்களா? முடியவே முடியாது” என்று கத்தியிருந்தாள்.

கண்ணீர் கண்ணை விட்டு கீழே விழுவேன் என்று பயமுறுத்த, உடனே துடைத்துக் கொண்டாள்.

“கல்யாணமா?”

“ஆமா உங்க சாரா சார் என்னை கல்யாணம் பண்ணிக்க போறாராம். அத அனுசயா கிட்ட சொல்லுறாரு.. பாவி வந்த வேலைய பார்க்காம, எதையோ கிளப்பி விட்டு, இப்ப கல்யாணத்துல வந்து நிக்கிது. அய்யோ.. என்னால ஒரு ரௌடி கூட வாழ முடியாது. வாழவே முடியாது”

“சட் அப்” என்று ஏகாம்பரம் குரலை உயர்த்தி அதட்ட, பயந்து வாயை மூடினாள்.

“யார பார்த்து ரௌடிங்குற?”

ஏகாம்பரம் கோபமாக கேட்டதும் தான், உளறி விட்டதே அவளுக்கு புரிந்தது. உதடுகளை உள்ளே இழுத்து மூடிக் கொண்டவள், ஏகாம்பரத்தை பாவமாக பார்த்தாள்.

“சாரா சார தான் சொல்லுறியா? எவ்வளவு தைரியம் உனக்கு?” என்று கேட்டவன் முகத்தில் கோபம் அதிகரித்துக் கொண்டே போக, “தெரியாம சொல்லிட்டேன். பயத்துல எதோ வந்துடுச்சு. ஆனா அவரு பண்ணுறது சரியா? வைத்தியத்துக்கு காசு கேட்டாரு. அது போதாதுனு ஷால இழுத்துட்டு, பணத்துக்காக என்ன வேணா செய்வியானு கேட்குறாரு. இப்ப கல்யாணமே பண்ணிக்கிறேன்னு சொல்லுறாரு. நான் பாவமில்லையா? நான் என்ன தான் செய்யுறது?” என்று புலம்பி தீர்த்தாள்.

ஏகாம்பரம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கிடைத்ததில் வார்த்தையற்று சில நொடிகள் நின்று விட்டான்.

“இங்க இருந்து நான் போகனும். எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ். உங்கள அண்ணனா நினைச்சு கேட்குறேன்.” என்று அவள் கெஞ்ச, “முதல்ல என்ன நடந்ததுனு தெளிவா சொல்லு” என்று கேட்டான்.

அனுசயா பேசியதையும், சாணக்கியனின் பதிலையும் சொல்லி முடித்தாள்.

அவளது பதட்டத்திற்கான காரணம் புரிபட, ஏகாம்பரம் தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

“ரொம்ப யோசிக்காத ராகவி. அவர் சும்மா அப்படி பேசியிருக்கலாம்”

“சத்தியமா?” என்று கையை நீட்ட, “அப்படி தான் இருக்கும். நீ தேவையில்லாம யோசிக்கிறனு தோணுது” என்று பொறுமையாகவே கூறினான்.

“அப்ப எதுக்கு ஷால பிடிச்சு இழுக்கனும்?” என்று அவள் கேட்டதற்கு, அவனிடம் பதில் இல்லை.

“இங்க பாரு சும்மா எல்லாத்துக்கும் புலம்பிக்கிட்டு இருக்காத. சாரா சாருக்கு உன்னை கல்யாணம் பண்ணுற நினைப்பு இருந்தா, எப்பவோ பண்ணிருக்கனும். இது சும்மாவா தான் இருக்கும். அப்புறம்.. இன்னொரு தடவ அவர ரௌடினு சொன்னனா சும்மா விட மாட்டேன்.”

ஏகாம்பரம் விரல் நீட்டி எச்சரிக்க, “அதான அவரோட தொழில்? அத தான சொன்னேன்?” என்று முகத்தை தொங்க போட்டுக் கொண்டு கூறினாள்.

“அப்படினு உனக்கு யார் சொன்னா?”

“ஊரே சொல்லுது. சாரா ஒரு ரௌடினு”

“அப்படி என்ன அவர் பண்ணிட்டாராம்? ரௌடி மாதிரி நடு ரோட்டுல சண்டை போட்டாரா?”

“அப்படி அடிச்சா தான் ரௌடியா? கடத்தல் பண்ணுறவங்களும் ரௌடி தான்”

“கடத்தலா?” என்று ஆச்சரியமாக கேட்டான்.

எதுவும் தெரியாத பெண்ணென்று நினைத்தால், விசயம் அறிந்தவள் போல பேசுகிறாளே? என்று சந்தேகம் வந்தது.

“ஆமா.. ஊருக்குள்ள யாருக்கும் எதுவும் தெரியாதுனு நினைச்சுட்டு இருக்கீங்க. எங்களுக்கு எல்லாம் தெரியும்”

“உனக்கு என்ன தெரியும்?”

கண்ணில் கூர்மையோடு அவளிடம் கேட்டான்.

“நிறைய வைரத்த கடத்துவாராம். தங்கத்த கடத்துவாராம். கடல்ல கிடைக்கிற நிறைய பொருள கடத்துவாராம். அதெல்லாம் கோடி கோடியா கொடுத்து வெளிநாட்டுகாரவங்க வாங்கிட்டு போவாங்களாம். இன்னும் நிறைய சொன்னாங்க. எல்லாருக்கும் எல்லாம் தெரியும். ஆனா இவரு மேல இருக்க பயத்துல யாரும் வாயத்திறக்கல”

“ஏன் பயம்?”

“யாராவது எதிர்த்து பேசுனா வெட்டி கடல்ல சுறாவுக்கு பிரேக் ஃபாஸ்ட்டா போட்டுருவார்ல? அதுனால தான். ஆனா இவர் நிஜம்மாவே சுறாவ பெட்டா வளர்க்குறாரா என்ன? நானும் வீட்டுக்கு வெளிய பார்த்தேன். காணோம். பெரிய சைஸ் சுறாவ நான் பார்த்ததே இல்ல”

“வேற என்னலாம் தெரியும்?”

“அப்புறம் நிறைய புரளி வரும். வீடு முழுக்க நிறைய பணம் வச்சுருப்பாருனு அள்ளி விடுங்க. அதெல்லாம் சின்ன பிள்ளைங்க வேணா நம்பலாம். இப்ப தான் லாக்கர்ஸ் இருக்கே. அது இருக்கும் போது எவனாவது பணத்த வீட்டுல வைப்பானா? அப்புறம் பிளாக் மணி வச்சுருக்காருனு சொல்லுங்க. அது எல்லா பணக்காரங்களும் வச்சுருக்கது தான? அப்புறம் போலீஸே இவர கண்டா நடுங்குமாம். அப்புறம் வீட்டுக்குள மர்மமா ரூம் கூட இருக்கும்னு சொல்லுவாங்க. பட் இதெல்லாம் புரளினு தெரியாத அளவு நான் லூசு இல்ல. ஆனா கடத்துறது உண்மை தான?”

கேள்வியாய் நிறுத்தியவளை பார்த்து, பொங்கி வந்த சிரிப்பை அடக்குவது ஏகாம்பரத்திற்கு பெரும்பாடானது. அவள் பேசப்பேச, ‘அட லூசே’ என்ற வார்த்தை தான் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

“நீங்க சொல்ல மாட்டீங்க உங்க பாஸ்ல. ஆனா என்னை கல்யாணம் பண்ணிக்க எல்லாம் ஆசைப்பட்டா நோ நோ தான். நான் நல்ல வாழ்க்கை வாழனும். எப்ப எவன் வந்து என் புருஷன கொல்லுவான்னு யோசிச்சுட்டே வாழ முடியாது” என்று பட்டென கூறி விட்டாள்.

பின்னால், அவனது வாழ்நாளுக்காக ஒவ்வொரு நாளும் அவள் போராட வேண்டியிருக்கும் என்பது விதியாய் இருக்க, இப்போது அவனை மறுத்துக் கொண்டிருந்தாள்.

“சார் உன்னை கல்யாணம் பண்ண மாட்டாருனு சொல்லுறேன்ல?”

“எனக்கு நம்பிக்கை இல்ல. அவர் கண்ணுல இனி படக்கூடாது. எதுக்கும் அவர் வெளிய போற நேரமா பார்த்து வர்ரேன். எல்லா வேலையும் செஞ்சுட்டு திரும்ப ஓடி வந்து உள்ள உட்கார்ந்துடுறேன்”

“இந்த ரூம்க்கு அவர் கிட்ட சாவி இருக்கே”

“அய்யய்யோ..! அப்ப நான் அந்த கொடோன்க்கு போறேன்” என்றவள் வேகமாக வாசலுக்கு ஓட, ஏகாம்பரம் சிரித்து விட்டான்.

“ஏய் நில்லு ராகவி” என்று கூறி அவளை பிடித்து நிறுத்தியவன், “இந்த மாதிரி எதாவது பண்ணிட்டு இருந்தா நிஜம்மா சுறாவுக்கு இரை ஆக வேண்டியது தான்.” என்று கூறினான்.

“நிஜம்மாவே அப்போ சுறா இருக்கா?” என்று மற்ற அனைத்தையும் விட்டு விட்டு அவள் ஆர்வமாக கேட்க, “ஏன் பார்க்கனுமா?” என்று கேட்டான்.

“பார்க்கலாமா?”

“வழி சொல்லுறேன் போறியா?”

“நீங்களும் கூட வாங்க”

“எதுக்கு? என்னையும் சேர்த்து சாப்பிடவா? நீ மட்டும் போ”

“எதே? நான் போய் செத்தா பரவாயில்லயா? உங்கள தான் இந்த கும்பல்ல நல்ல மனுசன்னு நினைச்சேன். ஆனா என்னை கொல்ல ப்ளான் போடுறீங்களே.. எனக்கு சுறாவும் வேணாம் புறாவும் வேணாம். நான் போய் பாத்திரத்த கழுவுறேன்”

“அப்ப சிங்கம் புலினு எதாவது பார்க்குறியா?”

“இங்க பாருங்க.. எதாவது கோபமிருந்த கைய காட்டுறேன். குச்சிய வச்சு நாலு அடி அடிச்சுடுங்க. சும்மா புலி பூனை பேரெல்லாம் சொல்லி பயமுறுத்தாதீங்க. அப்புறம் தூக்கம் வராது” என்று பேசிக் கொண்டே சென்றவள், சமையலறைக்குள் நுழைந்து பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள்.

அவள் அந்த பக்கம் சென்றதும், சாணக்கியனை தேடிச் சென்றான் ஏகாம்பரம். அவன் சட்டையிலிருந்த மைக்கை கழட்டி வைத்து விட்டு, ஒன்றும் பேசாமல் சென்று விட்டான்.

காதில் இருந்த புளூடூத்தை கழட்டி வைத்த சாணக்கியன் முகத்தில், பல நாட்களுக்கு பிறகு நிஜமான புன்னகை தோன்றியது. அவ்வப்போது புன்னகைப்பான். ஆனால் அதில் நக்கலோ வன்மமோ கோபமோ தான் நிறைந்திருக்கும். எதிர்மறை எண்ணங்களை கடந்து, முதல் முறையாக சிரித்தான்.

ராகவி காலையிலிருந்து ஏகாம்பரத்திடம் பேசி அனைத்துமே, சாணக்கியனின் காதில் ஒலித்துக் கொண்டு தான் இருந்தது. அவளை பற்றி விசாரித்தாலும், அவளாகவே சில விசயங்களை சொன்னாலும் முழுதாக அவளைப்பற்றி அறியாமல் வீட்டுக்குள் வைத்திருக்கும் அளவு அவன் முட்டாள் அல்ல.

அதற்காகவே, ஏகாம்பரத்திடம் அவளை பேச வைக்கும் பொறுப்பை ஒப்படைத்து இருந்தான். வாய் ஓயாமல் அவள் புலம்புவதும், வயதுக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் நடப்பதும் அவனுக்கு சுவாரஸ்யத்தை கொடுத்தது.

அவளை மேலும் நெருங்கி ஆராய முடிவு செய்தான். ஆனால் எதற்காக அவளை இவ்வளவு ஆராய வேண்டும்? என்று அவனுக்கு புரியவில்லை. அவனுக்குள் சத்தமில்லாமல் நுழைந்தவள், நல்லவளாக இருக்க வேண்டும் என்று ஆசையாக கூட இருக்கலாம். இல்லை வீட்டில் இருப்பவள், எப்படிப்பட்டவள்? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமாக இருக்கலாம்.

ஆனால் ராகவி நினைப்பது போல், பணத்துக்காக அவன் வைத்திருக்கவில்லை. அது அவன் நன்கறிந்த உண்மை.

தொடரும்.

Leave a Reply