சாரா 12

Loading

ஏகாம்பரம் பேச வேண்டாம் என்றதும் அமைதியான ராகவி, தன்னுடைய உடைந்து போன கைபேசியை எடுத்தாள். மிகவும் பழைய பட்டன் வைத்த கைபேசி அது. பல அடிகள் வாங்கி இருக்க, அதை சரிபடுத்தும் முயற்சியில் இறங்கினாள்.

அது சரியாக மாட்டேன் என்று அடம் பிடித்தது.

“இத ரிப்பர் பண்ண கொடுக்கலாமா ஏகாம்பரம்?” என்று முன்பக்கம் சாய்ந்து அவனிடம் வினவ, “இது உன்னோடதா?” என்று கேட்டான்.

“இல்ல என்னது தொலைஞ்சு போச்சு. இது பாட்டியோடது”

“இவ்வளவு அடி வாங்கி இருக்கு. எதுக்கு இத சரி பண்ண கேட்குற? பேசாம புதுசு வாங்கு”

“காசு எங்க இருக்கு?” என்று நொடித்தவள், சட்டென நினைவு வந்து தன்னிடம் இருந்த பணத்தை எடுத்தாள்.

“இந்தாங்க சார். இத எடுக்க பேங்குக்கு போனோம். என் கிட்ட இருக்கது இவ்வளவு தான். மிச்சத்த வேலை பார்த்து அடைச்சுடுறேன்”

பணத்தை சாராவிடம் நீட்ட, அவன் பணத்தையும் அவளையும் மாறி மாறி பார்த்து வைத்தான்.

“எவ்வளவு இருக்கு?”

“கிட்டதட்ட நாற்பதாயிரம்”

“நாற்பதாயிரம் எங்க இருக்கு? ரெண்டரை லட்சம் எங்க இருக்கு?”

“இத பத்தாதுனு எனக்கும் தெரியுமே. அதான் இத வச்சுக்கோங்க. மிச்சத்துக்கு வேலை பார்க்குறேன்னு சொல்லுறேன்”

“இத நீ உன் செலவுக்கு வச்சுக்க. எனக்கு வேலை பார்த்தா போதும்”

“பாஸ்.. இது அநியாயமா இல்லையா? சீக்கிரம் கடன அடைக்கலாம்னு பார்த்தா விட மாட்டேங்குறீங்க?”

“சீக்கிரமா கடன அடைச்சுட்டு எங்க ஓடப்போற?”

“ஓடப்போகல. ஆனா உங்க வீட்டுலயேவா காலம் முழுக்க இருக்க முடியும்?”

பதிலுக்கு கேள்வி கேட்டவளை இமைக்காமல் பார்த்து வைத்தான் சாரா. அவனது பதிலுக்காக, காரில் இருந்த மூவருமே காத்திருந்தனர்.

“ரெண்டரை லட்சத்த அடைக்க காலம் முழுக்க ஆகுமா என்ன?” என்று கேள்வியை திருப்பினான் அவன்.

“இப்படி போனா அப்படித்தான் ஆகும் போல”

சொல்லிக் கொண்டே பாதையை கவனித்தவள், “எங்க போறோம்?” என்று கேட்டு வைத்தாள்.

“நீ பார்க்க வேண்டிய இடத்துக்கு”

“நானா? நான் எந்த இடத்த பார்க்கனும்?”

“சுறாவ பார்க்கனும்னு ஏகாம்பரத்திக்கிட்ட கேட்டியாமே?”

“ஆமா ஆமா. அங்கயா போறோம்? நான் பார்த்ததே இல்ல சுறாவ.”

“பார்த்தா என்ன செய்வ?”

“சுறாவ போய் தொடவா முடியும்? தள்ளி நின்னு எட்டி பார்க்க வேண்டியது தான்”

“நீ பக்கத்துல போயே பார்க்கலாம்”

“நிஜம்மாவா?”

“ம்ம்.. இன்னைக்கு சுறாவுக்கு போட மீன் எதுவும் கிடைக்கலையாம். அதான் உன்னை கொண்டு போய் போட கூட்டிட்டுப் போறேன். நீ பக்கத்துல போனா அது உன்னை முழுங்கிடும். எனக்கு வேலை மிச்சம் பாரு”

முகம் பயத்தில் வெளிறிப்போக, “இல்ல பொய் சொல்லுறீங்க” என்று சமாளிக்கப்பார்த்தாள்.

“பொய்யா இல்லையானு வந்து பாரு”

அதோடு சாரா திரும்பிக் கொள்ள, ராகவி பயந்து போய் ஏகாம்பரத்தை பார்த்தாள். அவன் திரும்பவே இல்லை.

‘ஆத்தி.. தெரியாம கார்ல ஏறிட்டோமோ?குதிச்சு ஓடிரலாமா?’ என்று அவள் யோசிக்கும் போதே, கார் வைரவரின் வீட்டுக்குள் நுழைந்தது.

“சுறாவ வீட்டுலயா வச்சுருக்கீங்க?”

“வீட்டுல வைக்காம?”

“இல்ல அது தண்ணில தான இருக்கும்?”

“பெரிய கண்டு பிடிப்பு தான்” என்று நக்கலடித்தான்.

கார் நின்று விட, ராகவிக்கு பயத்தில் வியர்க்கும் போல் இருந்தது.

“சார் சத்தியமா என்னை தூக்கி சாப்பாடா போட்டுருவீங்களா?”

“ஏன்?”

“நான் செத்துப்போயிட்டா உங்க கடன யாரு அடைப்பா?”

“பரவாயில்ல. எனக்கு ரெண்டரை லட்சத்த விட என் சுறாவோட பசி தான் முக்கியம்”

“சார் நான் அழுதுடுவேன்” என்றவள் அழுவது போல் சொல்ல, “இறங்கு” என்று விட்டு தானும் இறங்கிக் கொண்டான்.

ராகவி ஏகாம்பரத்தை பார்க்க, “சும்மா சொல்லுறாரு. வா.” என்றான் அவன்.

“சத்தியமா?” என்று கையை நீட்ட, “சத்தியமா” என்று அவளது கையை பிடித்துக் கொண்டவன், “இப்ப இறங்கு உள்ள வந்து எதுவும் பேசி வைக்காத. அமைதியா இரு. உள்ள இருக்கது சாரா சாருக்கு அப்பா” என்று முன்னெச்சரிக்கை கொடுத்து விட்டே இறங்க வைத்தான்.

“இவருக்கு அப்பா இருக்காருனா ஏன் தனியா இருக்காரு?” என்று கேட்க, “இந்த கேள்விய வீட்டுக்கு போனதும் கேளு. இங்க அமைதியா இரு” என்று அடக்கி விட்டான்.

‘இந்த மாஃபியா கும்பலே வினோதம்பா’ என்று நினைத்துக் கொண்டு ஏகாம்பரத்தோடு நடந்தாள்.

சாரா உள்ளே சென்று விட, ராகவி வாசலிலேயே ஏகாம்பரத்தோடு நின்று கொண்டாள்.

சுற்றியும் பார்வையை ஓட்டியவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘நூறு வீட்ட கட்டுற இடத்துல ஒரே வீட்ட கட்டி வச்சுருக்கானுங்க. காசு இருந்தா இப்படித்தான் செலவு பண்ண தோனும் போல?’ என்று நினைத்துக் கொண்டவள், பாதையை ஒட்டி நடக்க ஆரம்பித்தாள்.

புல் தரைகளோடு செடிகள் இருக்க, தூரமாய் சில ஆட்கள் நின்றிருந்தனர். யாரையும் கண்டு கொள்ளாமல் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தவள், திடீரென அலறிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.

அவளை இரண்டு நாய்கள் குறைத்தபடி  துரத்த ஆரம்பிக்க, “ஏகாம்பரம் காப்பாத்துங்க” என்று அலறிக் கொண்டே ஓட, பேசிக் கொண்டிருந்த ஏகாம்பரம் திரும்பிப் பார்த்தான்.

ராகவி நாயைப்பார்த்து ஓட, இரண்டு நாய்களும் அவள் ஓடுவதை பார்த்து துரத்த, ஏகாம்பரமே பதறி விட்டான்.

அவன் உதவிக்கு ஓடும் முன், “டின்கர் டஃப்பி” என்ற அதட்டல் குரல் வந்தது.

சாணக்கியன் நாய்களின் பெயரைச்சொன்னதுமே அவை நின்று விட, ராகவி மட்டும் தூரமாய் ஓடிச் சென்று மூச்சு வாங்க நின்றாள்.

திரும்பி நாய்களை பாதுகாப்பவனை ஒரு பார்வை பார்த்தான் சாணக்கியன். அந்த பார்வைக்கு அரண்டு போனவன், உடனே நாய்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.

“அவள கூட்டிட்டு உள்ள வா” என்று ஏகாம்பரத்திற்கு கட்டளை விதித்து விட்டு, சாணக்கியன் மீண்டும் உள்ளே சென்று விட்டான்.

வைரவரிடம் பேசிக் கொண்டிருந்தவன், ராகவியின் அலறல் குரல் கேட்டு பேச்சை அப்படியே விட்டு விட்டு எழுந்து ஓடி வந்திருந்தான்.

மூச்சு வாங்க முகம் சிவங்க வியர்த்துப்போய் நின்றிருந்தாள் ராகவி. நாய்கள் திடீரென கால்களுக்கடியில் வரவும், பயந்து ஓட ஆரம்பித்தவளுக்கு வேறு எதுவும் நினைவில் இல்லை.

ஏகாம்பரம் வந்ததும், அவனை பார்த்து பாவமாய் விழித்தாள்.

“சத்தியமா நான் ஒன்னுமே பண்ணல ஏகாம்பரம். அதுங்க தான் துரத்திட்டு வந்துச்சுங்க”

“புது ஆளுங்கள பார்த்தா அப்படி தான் பண்ணும். அதுக்காக ஓடுவியா? என் கிட்ட வர வேண்டியது தான?”

“எனக்கு பயத்துல எதுவுமே தோணல”

“சரி வா. உன்னை பாஸ் கூப்பிட்டாரு”

“எதுக்கு? நாய் கிட்ட தப்பிச்சு சுறாவுக்கு போடுறதுக்கா? போங்கடா டேய். நான் எங்கயும் வரல”

“எதே? டா வா?”

ஏகாம்பரத்தின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தலையை சிலுப்பிக் கொண்டவள், தரையில் அமரப்போனாள். அவள் கையைப்பிடித்து நிறுத்தியவன், “இப்ப உள்ள போகலனா கண்டிப்பா எதுக்காச்சும் நாம டின்னர் ஆகிடுவோம். பேசாம வா” என்றவன் இழுத்தப்படி நடந்தான்.

‘கொலைகார கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டனே.. இதுக்குப்பேரு தான் எண்ணெய்ல தப்பி நெருப்புல விழுறதா?’ என்று புலம்பிக் கொண்டே பின்னால் சென்றாள்.

வீட்டுக்குள் வந்ததுமே, இருவருக்கும் பழச்சாறை நீட்டினான் சமையல்காரன்.

“இத குடிச்சுட்டு இங்க உட்காருங்க.” என்றதோடு அவன் சென்று விட, ஏகாம்பரம் ராகவியை பார்த்தான்.

எதையும் கவனிக்காமல் ஒரே மூச்சாக குடித்துக் கொண்டிருந்தாள். பயத்தில் நா உலர்ந்து போயிருந்தது.

குடித்து முடிக்கும் வரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஏகாம்பரம், தனக்கென கொடுத்ததை அவளிடம் நீட்டினான்.

“இதையும் குடி”

“உங்களுக்கு?”

“வேணாம். நீ குடி”

உடனே வாங்கியவள், அதையும் குடித்து முடித்து விட்டே ஓய்ந்தாள்.

“நீ எல்லாம் எப்படி தனியா இருந்த?”

“ஆசைப்பட்டா இருந்தேன்? எல்லாம் விதி. இப்ப விதியால இங்க இருக்கலயா? அப்படித்தான்”

சட்டென ஏகாம்பரம் எழுந்து நிற்க, அவனது பார்வை போன திசையை பார்த்து விட்டு, தானும் எழுந்து நின்றாள் ராகவி.

சாணக்கியனோடு வைரவர் வந்து கொண்டிருந்தார். அவரது பார்வை ராகவியை தான் அளந்தது. இவ்வளவு நேரமும் கடைவீதியிவ் அலைந்தது, இப்போது நாய் துரத்தி ஓடியது என்று கலைந்து போன ஓவியமாக இருந்தாள்.

ஏற்கனவே ஒல்லியான பெண் தான். இப்போது காயங்களுக்கு சிகிச்சை செய்ததில், மேலும் எடை குறைந்து போயிருந்தாள். அணிந்திருக்கும் சுடிதார் தான் அவளை சற்று உயிருள்ளவள் போல் காட்டிக் கொண்டிருந்தது.

“இங்க வாங்க” என்பது போல் அவர் கையசைக்க, ராகவி ஏகாம்பரத்தை பார்த்தாள்.

அவன் முன்னால் நடக்க, அவனுக்கு பின்னால் டம்ளரை பிடித்தபடி நடந்து வந்தாள்.

சமையல்காரன் ஓடி வந்து அவள் கையிலிருந்ததை வாங்கிக் கொண்டு சென்றான்.

“நீ தான் ராகவியா?”

மேலும் கீழும் தலையை ஆட்டி வைத்தாள்.

“உனக்கு உடம்பு சரியில்லனு கேள்விப்பட்டேன்”

அதற்கும் வெறும் தலையாட்டல் தான்.

“பேச மாட்டியோ?”

‘யார பார்த்து என்ன கேள்வி கேட்குறீங்க?” என்று ஏகாம்பரம் தான் அதிர்ந்தான்.

ஆனால் ராகவி அதற்கும் மேலும் கீழும் தலையாட்டி வைக்க, ஏகாம்பரத்திற்கு இதயம் வெடிக்காத குறை தான்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சத்தம் கேட்டுச்சு. இப்ப பேச மாட்டேன்னு சொல்லுற?”

“ஏகாம்பரம் தான் பேசக்கூடாதுனு சொன்னாரு” என்றாளே பார்ப்போம்.

நியாயமாக பார்த்தால், ஏகாம்பரம் அந்த இடத்தில் மயங்கி விழுந்திருக்க வேண்டும். யார் செய்த பாவமோ? அவனுக்கு மயக்கம் மட்டும் வரவில்லை. அதற்கு பதிலாக அவன் பிஞ்சு மனம் வெடித்துப்போனது.

‘அடிப்பாதகத்தி!’ என்று அவள் உள்ளே அலறுவது சாணக்கியனுக்கு தெளிவாகவே கேட்டது.

“ஏன் அப்படி சொன்ன?” என்று வைரவரும் கேட்டு விட, ஏகாம்பரம் அழும் நிலையை அடைந்தான்.

“அய்யா.. இந்த பொண்ணு எதையாவது பேசி வைக்கும்னு அப்படிப் சொன்னேன். இப்படி போட்டுக் கொடுப்பானு தெரியாம போச்சு”

“நான் எங்க போட்டுக் கொடுத்தேன்? பேசாதனு சொன்னத சொன்னது போட்டுக் கொடுக்குறதா? போட்டுக் கொடுக்குறது உங்களுக்கு தான் வரும். நீங்க தான என்னை பத்தி போட்டுக் கொடுத்தீங்க?”

“அம்மா அமைதியா இருமா.. என்னை பலி கொடுக்காம போக மாட்ட போல?” என்று ஏகாம்பரம் கெஞ்ச, “அப்படி என்ன போட்டுக் கொடுத்தான்?” என்று வைரவர் கேட்டு விட்டார்.

‘தெய்வமே.. என்னை காப்பாத்துங்க’ என்று ஏகாம்பரம் பார்வையிலேயே சாணக்கியனின் காலில் விழுந்து விட, சாணக்கியன் கவனித்தால் தானே?

அவன் சுவாரஸ்யமாக ராகவியை பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் தெரியாம சொன்ன ஒரு விசயத்த, சாரா சார் கிட்ட போய் வத்தி வச்சுட்டாரு. இவருக்கு தான் போட்டுக் கொடுக்குறது எல்லாம் ஈசி” என்ற ராகவி ஏகாம்பரத்தை முறைத்து வைத்தாள்.

‘இதுக்கு தான் இவள பேச வேணாம்னு சொன்னேன்.’ என்று நினைத்து நொந்து கொண்டான் ஏகாம்பரம்.

“பேசாம நீயும் இவன பத்தி எதையாவது என் கிட்ட சொல்லிடு. ரெண்டும் சமமா போயிடும்” என்று சாணக்கியன் கேட்க, “நோ நோ. பழகுனவங்கள காட்டிக் கொடுக்குறது எல்லாம் எனக்குப் பிடிக்காது.” என்று திட்டமாக சொல்லி விட்டாள்.

“ஆனா இவன் உன்னை காட்டிக் கொடுத்தானே?” என்று கேட்டு கொக்கி போட்டு நிறுத்த, “அதுக்கு காரணம் அவர் உங்களுக்கு உண்மையா இருக்கனும்னு நினைச்சுருக்காரு. அதுக்காக நான் மன்னிச்சுட்டேன். ஆனா திரும்பி நடந்துச்சுனா, தூங்கும் போது கல்ல போட்டு கொன்னுடுவேன்” என்றாள்.

“நீ என்னத்த போட்டுக் கொடுத்த?” என்று வைரவர் ஏகாம்பரத்திடம் கேட்க, அவன் ஒரு நொடி திருதிருவென விழித்து விட்டு, “சொன்னா இந்த பொண்ணு தூங்கும் போது தலையில கல்ல போட்டு கொன்னுடும். வேணாம்யா. நான் பாவம்.” என்று பம்மினான்.

வைரவர் முகத்தில் புன்னகை படர்ந்தது.

தொடரும்.

Leave a Reply