சாரா 15
![]()
பதறி அடித்து சாணக்கியனிடமிருந்து ஓடி வந்தவள் ஏகாம்பரத்திடம் வந்து மோதப்போக, அவன் பிடித்து நிறுத்தினான்.
“நில்லு நில்லு விழுந்துடாத” என்று பிடித்து நிறுத்தியவன், அவளது முகத்தை பார்த்து விட்டு, “ஏன் பேய பார்த்த மாதிரி ஓடி வர்ர?” என்று கேட்டான்.
“பேயில்ல பூதம்”
“பூதமா?”
“மறுபடியும் பூதம் கிளம்பிடுச்சு ஏகாம்பரம்.. இதுக்கு தான் அப்பவே ஓடிப்போறேன்னேன். நீங்க தான அப்படி இல்ல இப்படி இல்லனு பேசி இருக்க வச்சீங்க”
“என்ன உளறிட்டு இருக்க நீ? தெளிவா பேசு. எந்த பூதம் கிளம்புச்சு?”
“உங்க பாஸ் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்குறாரு” என்று அழாத குறையாக சொல்ல, ஏகாம்பரம் ஒரு நொடி ஆச்சரியப்பட்டான்.
‘அதுக்குள்ள கேட்டுட்டாரா?’ என்று நினைத்தவன், “சரி அதுக்கென்ன?” என்று கேட்டு வைத்தான்.
“அதுக்கு? என்னவா?”
“ஆமா அதுக்கென்ன? அதுக்கு ஏன் பூதம் பேய்னு சொல்லிட்டு இருக்க?”
“யோவ் ஏகாம்பரம்.. நான் சொன்னது புரியலயா? உங்க பாஸ் என்னை கல்யாணம் பண்ண நினைக்கிறாருயா”
“தமிழ்ல தான பேசுற? நல்லாவே புரியுது”
ஏகாம்பரம் அசராமல் பேச, ராகவி தான் எங்கே போய் முட்டிக் கொள்வது என்று புரியாமல் பார்த்து வைத்தாள்.
“அவரு கேட்டது சரி. நீ என்ன பதில் சொன்ன?”
“நான் ஓடி வந்துட்டேன்”
“அப்ப உனக்கு இஷ்டமில்லையா?”
“இஷ்டமா! ம்ஹும்”
பலமாக தலையாட்டி வைத்தாள்.
“உனக்கு பாஸ பிடிக்காதா?”
“அப்படி எப்ப சொன்னேன்?”
“பிடிக்குமா?”
“அதுவும் தெரியல.” என்றவள், தொய்ந்து தரையில் அமர்ந்து விட்டாள்.
ஏகாம்பரமும் அவள் முன்னால் அமர்ந்து கொண்டான். இன்று விடை கிடைக்காமல் விடக்கூடாது என்று முடிவு செய்து விட்டான் போலும்.
ராகவி தரையை பார்த்துக் கொண்டு குழப்பத்துடன் அமர்ந்திருக்க, “உனக்கு பாஸ பிடிக்குமா? பிடிக்காதா? எதாவது ஒரு பதில் சொல்லு” என்று பொறுமையாக கேட்டான்.
“நான் சொன்னா போய் அவர் கிட்ட போட்டுக் கொடுக்கக்கூடாது. ப்ராமிஸ்?” என்று கையை நீட்டிவளை பார்த்து புன்னகை வந்தாலும், அதை காட்டாமல் அவளது கையை பிடித்துக் கொண்டான்.
“சொல்ல மாட்டேன்”
“முதல்ல எனக்கு சாரா முதலாளிய சுத்தமா பிடிக்காது. அவர பத்தி ஊருக்குள்ள எவ்வளவு பேசுறாங்க தெரியுமா? ரௌடி. கடத்தல் பண்ணுறவன். கருணையே கிடையாது. எல்லா தப்பும் பண்ணுறவன்னு எல்லாம் சொல்லுவாங்க. ஆனா இப்ப.. என்னை காப்பாத்தி ட்ரீட்மெண்ட் பார்த்து பொழைக்க வச்சுருக்காங்க. அன்னைக்கு அங்க இவங்க வரலனா நான் செத்து போயிருப்பேன்.”
உணர்ச்சிமயமாக அவள் பேச, ஏகாம்பரம் அவளது தோளை தட்டிக் கொடுத்தான்.
“இங்க இருக்கப்போ எனக்கு அவர் கெட்டவர்னு தோணல. தோணல இல்ல நானே மறந்துட்டேன். பார்த்தா மட்டும் பயமா இருக்கும். ஆனா நல்லவர் தான்னு தோணுது. பிடிக்காம எல்லாம் இல்ல”
“சரி இப்ப ஏன் கல்யாண பேச்ச கேட்டு ஓடுற?”
“அது எப்படி சொல்லுறது? திடீர்னு எப்படி ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க முடியும்? எனக்கு வேற யாருமே இல்ல. நான் எப்படி உடனே நம்பி உங்க பாஸ கல்யாணம் பண்ணுறது? இல்ல யாருமே இல்லாததால இஷ்டத்துக்கு முடிவெடுக்கலாமானு கூட புரியல. ப்ச்ச் நீங்க பொண்ணா இருந்தா தான் என் நிலைமை புரியும்.”
“இதுக்காக ஆப்ரேஷன் பண்ணிட்டு வர முடியாது. இப்படியே புலம்பு புரிஞ்சுக்கிறேன்.”
ஏகாம்பரம் கிண்டலாக சொல்ல, ராகவியின் முகத்தில் புன்னகை லேசாக எட்டிப்பார்த்தது. அதுவரை பதட்டத்திலும் குழப்பத்திலும் தான் அமர்ந்திருந்தாள்.
“எனக்காக ஆப்ரேஷன் பண்ணிட்டு வர மாட்டீங்களா ஏகாம்பரம்?”
“உனக்காகவா? யார் நீ?”
“என்ன ஏகாம்பரம் நாம அப்படியா பழகியிருக்கோம்?”
“நீ யாருனே எனக்குத் தெரியாது. எந்திரிச்சு ஓடிப்போ”
“ஓடவா? ஒரு வேளை தப்பித்தவறி உங்க பாஸ கல்யாணம் பண்ணிட்டேன்னா, நான் தான் உங்களுக்கு பாஸம்மா தெரியுமா?”
“அது தான் நடக்காதே. நீ தான் குழம்பிட்டே ஓடிட்டு இருக்கியே”
“ஒரு வேளை நடந்துட்டா?”
“அப்பவும் உனக்கு மரியாதை எல்லாம் தர மாட்டேன்”
“ஏன்? ஏன்? ஏன்?”
“சக்கரை சாம்பார் வைக்கிறவளுக்கு எல்லாம் மரியாதை கிடையாது.” என்று கூறி, அவளது முறைப்பை வாங்கிக் கொண்டான்.
“ஆக்ட்சுவலி.. எனக்கு என்னமோ பாஸ்க்கு அனுசயா தான் பொருத்தமோனு தோனுது”
“அவள பத்தி மட்டும் பேசாத மேன். எல்லாம் அவளால தான். அவளுக்கு ஒரு நாள் இருக்கு. திரும்ப பார்த்தா மண்டையில நங்குனு கொட்டுறேன். பிசாசு”
“அவங்க உன்னை விட ஹைட். அப்படி எல்லாம் கொட்ட முடியாது” என்று கிண்டலடித்தான் ஏகாம்பரம்.
“நீங்க என்ன அவளுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க?”
“ஒரு வேளை அவங்க எனக்கு பாஸம்மாவா வந்துட்டா? அதான் இப்ப இருந்தே காக்கா பிடிக்கிறேன்”
“அவ பாஸம்மா ஆகிட்டா மரியாதை கொடுப்பீங்க?”
“ஆமா.. கொடுத்து தான ஆகனும்”
புஸுபுஸுவென மூச்சு விட்டு அவனை முறைத்தவள், “போ அவளயே பாஸாக்கிக்க. எனக்கொன்னும் வேணாம்” என்று கூறி வெடுக்கென திரும்பிக் கொண்டாள்.
அவளது பொறாமையை கண்டு புன்னகைத்தவன், “சரி சரி பாஸ் உன் பதிலுக்கு வெயிட் பண்ணுவார். போய்… நான் உங்களுக்கு சரிவர மாட்டேன். ஒரு நல்ல பொண்ணா.. முக்கியமா அனுசுயா மாதிரி நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்கனு சொல்லிட்டு வா.” என்றான்.
“யோவ்.. அனுசயா நல்லவ நான் கெட்டவளா?” என்று சட்டென எழுந்து நின்று கேட்டவள், அருகே இருந்த ரிமோட்டை எடுத்து அடிப்பது போல் ஓங்கிக் கொண்டு நின்றாள்.
“மார்டன் காளியாத்தா. ரிமோட்ல அடிக்க வருது” என்று அப்போதும் வம்பிழுத்த ஏகாம்பரம், எழுந்து அவளது கையிலிருந்து ரிமோட்டை பறிக்க பார்த்தான்.
தராமல் இழுத்தவள், பிறகு அவன் மீது தூக்கி எறிந்து விட்டு வெடுக்கென அறைபக்கம் சென்று விட்டாள்.
கீழே விழுந்ததை எடுத்து வைத்து விட்டு திரும்பிப் பார்த்தான் ஏகாம்பரம். சாரா நின்றிருந்தான். ராகவி ஓடவும் அவள் பின்னாலேயே வந்து நின்று விட்டான்.
ஏகாம்பரம் சாராவிடம் செல்ல, சாரா கேள்வியாய் புருவம் உயர்த்தினான்.
“இதெல்லாம் உண்மையானு தெரியல. ஆனா அந்த பொண்ண வச்சு விளையாட மட்டும் நினைக்காதீங்க பாஸ். பாவம் குழந்தை மாதிரி இருக்கா. உடைஞ்சு போயிடுவா” என்று கூறி விட்டு சென்று விட்டான்.
சாரா ஒரு நொடி உதட்டை கடித்து உணர்வை கட்டுப்படுத்தினான். ஆனால் அடுத்த நொடியே மீண்டும் கம்பீரமாக நிமிர்ந்தான்.
‘அவள எனக்கு பிடிச்சுருக்கு. கல்யாணம் பண்ணிக்க கேட்டேன் அவ்வளவு தான்.’ என்று நினைத்தவன் மேலும் யோசிக்காமல் விட்டு விட்டான்.
............
சிவா கடத்தப்பட்டான் என்று தெரிந்தும் எந்த தகவலும் கிடைக்காமல் போக, வைரவர் சோர்ந்து போனார். காவல்துறையினரை அழைத்தவர் விசயத்தை சொல்ல, “நாங்க எங்க சைட்ல இருந்து தேடுறோம் சார்” என்றனர்.
“யாரு நீங்க? கடத்திட்டாங்கனு கூட தெரியாம நாலு மாசமா தேடியிருக்கீங்க. இதுக்கு எதுக்கு உங்களுக்கு போலீஸ் பதவியும், காக்கி சட்டையும், சட்டமும்?” என்று கேட்டு விட்டான் சாரா.
“சார்.. இதுல எங்க தப்பு எதுவும் இல்ல. பண்ணவன் பக்காவா பண்ணிருக்கான்”
இதைக்கேட்டு நக்கலாகவே சிரித்து வைத்தான் சாரா.
“உங்களுக்கு ஒரு விசயம் சொல்லட்டுமா? உண்மையான டார்கெட் சிவா கிடையாது. நானும் வைரவரும் தான். இதுக்கு மேல இந்த கேஸ நீங்க பார்க்க வேணாம். கிளம்புங்க. நாங்களே முடிச்சுக்கிறோம்”
சாணக்கியன் பேசிக் கொண்டிருக்கும் போதே அனுசயா வந்து விட்டாள். காக்கி உடைகளில் இருவர் இருந்ததால், சற்று தள்ளி நின்றவள் காதில் சாணக்கியனின் பேச்சு விழத்தான் செய்தது. முகம் மாறாமல் அமைதியாக நின்றவளுக்கு பயம் மட்டும் வந்தது.
இது வரை சாராவின் கையில் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தப்பித்தவறி எதையாவது அவர்களுக்குத் தெரியாமல் விட்டு வைத்திருந்தால், சாரா அனுசயாவை உயிரோடு விட மாட்டான்.
வைரவரும் சாணக்கியன் சொன்னதை ஆமோதித்து, இனி தாங்களே பார்த்துக் கொள்வதாக கூறி அனுப்பி விட்டார்.
அனுசயா, அவர்கள் சென்றதும் டாகுமெண்ட்டில் கையெழுத்து கேட்டு வந்து நின்றாள்.
“நீ பாரு” என்று சாராவிடம் கூறி விட்டு வைரவர் எழுந்து சென்று விட்டார்.
அனுசயா சாராவிடம் நீட்ட, அவன் அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் வாங்கி படிக்க ஆரம்பித்தான்.
படித்து முடித்தவன், “நாளைக்கு வந்து வாங்கிக்க” என்றதோடு அந்த ஃபைலை தூக்கி ஓரமாக போட்டு விட்டு, தன் கைபேசியை எடுத்துக் கொண்டு நகர்ந்து விட்டான்.
“சாரா..” என்று அழைத்து பின்னால் சென்றவள், “சிவா சார பத்தி எதாவது தெரிஞ்சதா?” என்று கேட்டாள்.
“இல்ல”
“போலீஸ விசாரிக்க வேணாம்னு சொல்லிட்டீங்க. ஏன்? அவங்களும் விசாரிக்கலனா எப்படி கிடைப்பாங்க?”
“அது எதுக்கு உனக்கு? என் தம்பிய எப்படித்தேடனும்னு எனக்குத் தெரியும். நீ தேவையில்லாம கேள்வி கேட்டுட்டு இருக்காத”
“இல்ல சாரா.. நாலு மாசம் முடிஞ்சு போச்சு. இன்னும் எங்க போனார்னு தெரியல. ஒரு வேளை அவர் லவ் பண்ண பொண்ணோட போயிட்டாரானு கூட தெரியல.”
“என்ன வேணும் உனக்கு?”
“புரியல”
“புரியலனா கிளம்பு”
“சாரா”
“கிளம்புனு சொன்னேன்”
அவனை முறைத்து விட்டு, உடனே கிளம்பி விட்டாள்.
........
அன்றைய நாள் முழுவதும், ராகவி சாணக்கியன் இருந்த திசை பக்கம் கூட வரவில்லை. அவன் வீட்டிலிருந்த நேரம் அறைக்குள் அமர்ந்து கொண்டாள். இரவு, சாணக்கியன் சாப்பிட வரும் முன்பே உணவை எடுத்துக் கொண்டு அறைக்குள் ஓடி விட்டாள்.
காசியும் பூபதியும் இருந்ததால், ஏகாம்பரம் கூட ராகவியை பற்றி வாயைத்திறக்காமல் இருந்து கொண்டான்.
சிவாவை தேடும் முயற்சியில் காசியும் பூபதியும் இறங்கி இருந்தனர். ஆனால் அவர்களுக்கு பெரிதாக எதுவுமே கிடைக்கவில்லை.
அதைப்பற்றி பேசிக் கொண்டே சாப்பிட்டவர்கள், வேலையை பற்றிப்பேசினார்கள்.
நாளை அவர்களது கப்பல்கள் சிலவை ஒரு தீவுக்கு செல்கிறது. அங்கு வியாபாரம் நடப்பதாக இருக்க, பூபதியை அதற்கு அனுப்ப தீர்மானித்தான் சாணக்கியன்.
“நானா? வழக்கமா நான் பேறது இல்லையே?”
“திவாகர் தான் போவான். இப்ப அவன் இல்லையே” என்று காசி சொல்ல, பூபதி தலையை மட்டும் ஆட்டிக் கொண்டான்.
“நீ போய் முடிச்சுட்டு வா பூபதி. வேலையில யாராவது கூட இருக்கனும்” என்று கூறி விட, பூபதி ஒப்புக் கொண்டான்.
அவன் கிளம்பிச் சென்று விட, காசி அவனறைக்குச் சென்று விட, ஏகாம்பரம் சுடு தண்ணீரை வைத்து எடுத்துக் கொண்டு, ராகவியின் அறைக்குச் சென்றான்.
அவள் சாப்பிட்டு முடித்து விட்டு, தீவிர யோசனையில் அமர்ந்திருந்தாள்.
“இந்தாமா வருங்கால பாஸம்மா.. மாத்திரைய மறக்காம போட்டுட்டு தூங்கு”
“எதே வருங்கால பாஸம்மாவா? நக்கலா?” என்று ராகவி சீற, “சரி வருங்கால வேலைக்காரி ஆஃப் அனுசயா. இது ஓகேவா?” என்று கேட்டு கொம்பு சீவி விட்டான்.
“ஏகாம்பரம்.. சுடு தண்ணிய எடுத்து தலையில ஊத்திடுவேன்.”
“எப்படினாலும் ரெண்டுல ஒன்னு தான் நடக்கும். இருந்தாலும் ரொம்ப தான் பிகு பண்ணுற. ஒன்னு சரினு சொல்லனும். இல்லனா மாட்டேன்னு சொல்லனும். சும்மா குழப்பிட்டு இருக்க கூடாது”
“பேசாம போறீங்களா..? நானே கடுப்புல இருக்கேன்”
“ஏன் வீட்ட விட்டு ஓட முடியலனா?”
“போறது பிரச்சனை இல்ல. போயிட்டா எனக்கு காரம் கம்மியா டேஸ்ட்டா சமைச்சு தர ஏகாம்பரம் இருக்க மாட்டாரேனு தான் வருத்தமா இருக்கு”
“இந்த ஐஸ் க்கு நான் உருகிடுவேன்னு நினைப்பா?”
“ஹி ஹி நல்லா இல்லையா?”
“சகிக்கல. எதுனாலும் நேரடியா கேளு”
“உங்க பாஸ மறந்துட்டு எனக்கு ஃப்ரண்டா ஒரு பதில் சொல்லுங்க. நானும் சாணக்கியராஜும் எந்த வகையில பொருத்தமா இருக்கோம்?”
“எந்த வகையிலயும் கிடையாது”
“அப்புறம் ஏன் அவர் அப்படிக்கேட்டாரு?”
“இத நீ அவர் கிட்ட தான் கேட்கனும்”
“பார்த்தாலே பயமா இருக்கு. எங்க கேட்க?”
“என் கிட்ட தான் உன் வாய் எல்லாம். அங்க டம்மி பீஸு தான்”
“எனக்கு பதிலா நீங்க கேளுங்களேன்”
“ஏதே? நானா கல்யாணம் பண்ணிக்க போறேன்?”
“ஏகாம்பரம்…” என்று இழுத்தவள், அவனை சந்தேகமாக சிரிப்பை அடக்கிக் கொண்டு பார்த்தாள்.
“கருமம் கருமம்” என்று ஏகாம்பரம் தலையில் அடித்துக் கொள்ள, ராகவி வாய் விட்டு சிரித்தாள்.
“உங்க பாஸ பார்த்தா ஆம்பளைங்களும் காதல்ல விழுந்துடுவாங்கனு கேள்வி பட்டேன். அது உண்மையில்லையா?”
“உன் காதுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி எல்லாம் விசயம் வந்து சேருதோ?”
“சத்தியமா சொன்னாங்க. இன்னொன்னும் இருக்கு” என்றவள் ,ஏகாம்பரத்தின் அருகே வந்து காதை கேட்டாள்.
அவன் குனிய, “உங்க பாஸ அவன்னு சொன்னாங்க. அதான் பொண்ணுங்கள வேலைக்கு வைக்க மாட்டாராம்னு…” எனும் போதே, “சட் அப்” என்று அதட்டி விட்டான்.
“இன்னொரு தடவ இப்படிப்பேசுன.. அவ்வளவு தான்”
அவனது அதட்டலில் பயந்து விட்டாள்.
“இத நான் ஒன்னும் சொல்லல. அவங்க தான் சொன்னாங்க” என்று முகத்தை தொங்க போட்டுக் கொண்டு பேசினாள்.
“எவங்க?”
“என் ஃப்ரண்ட்ஸ்”
“உன் ஃப்ரண்ட்ஸ்ஸா?”
“ஆமா. அவங்க எல்லாம் உங்க பாஸ் அப்படி இப்படினு ஜொள்ளு விடுவாளுங்க. ஆனா இவருக்கு பொண்ணுங்கள பிடிக்காதாம்டி. அவனா இருப்பார் போலனு சொல்லுவாங்க. நான் இல்ல” என்று அப்பாவியாய் விளக்கினாள்.
ஏகாம்பரம் இன்னும் முறைத்துக் கொண்டிருக்க, “சாரி சாரி. நான் அப்படி நினைச்சது இல்ல. கோவிச்சுக்காதீங்க” என்றாள்.
“அதுக்கு தான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லுறியா?”
“ச்சீ ச்சீ.. அதெல்லாம் இல்ல.” என்று வேகமாக சொல்ல, ஏகாம்பரம் சற்று தணிந்தான்.
“ஒழுங்கா மாத்திரைய போட்டுட்டு தூங்கு” என்றவன் அறையை விட்டு வெளியே வந்து, நேராக சாணக்கியனை தான் சந்திக்க சென்றான்.
சந்தேகமே வேண்டாம். ராகவி சொன்ன விசயத்தை சாணக்கியன் காதில் போட்டு, அவள் மனதில் கொஞ்ச நஞ்சம் சந்தேகம் இருந்தாலும் நீக்க சொல்லி கேட்பதற்காகத் தான் தேடிச் சென்றான்.
தொடரும்.
