சாரா 16

Loading

ஏகாம்பரம் சொன்னதை கேட்ட சாராவிற்கு, கோபத்திற்கு பதில் சிரிப்பு வந்தது.

“இப்படி எல்லாமா ஊருக்குள்ள என்னை பத்தி பேசுறாங்க?”

“ராகவி சொல்லி தான் எனக்கும் தெரியும் பாஸ்”

“நான் வைர வியாபாரி தான?”

“கடத்தல் மன்னனாம்”

“அது உண்மை தான். ஆனா அந்த சுறா மேட்டர் தான் இடிக்குது. யார் கிளப்பி விட்டதா இருக்கும்?”

“தெரிஞ்சா அந்த ஆளு கற்பனை சக்திக்கு அவார்ட்டே கொடுக்கலாம்”

“கற்பனையா ஏன் வைக்கனும்? நாளைக்கு சுறாவ பார்க்க போகலாம்னு அவ கிட்ட சொல்லு”

“பாஸ்”

“எஸ். பார்க்கனும்னு ஆசையா கேட்டாளே. காட்டிறலாம்”

“அப்ப உங்கள பத்தி கேட்டது?”

“அதுக்கு முதல்ல கல்யாணம் பண்ணனும். நீயே என்னை மாத்திடுவ போல?” என்று கேட்டு முறைக்க, ஏகாம்பரம் கப்பென வாயை மூடிக் கொண்டான்.

“நாளைக்கு நானும் ராகவியும் மட்டும் தான் போறோம்” என்று அழுத்திச் சொல்ல, ஏகாம்பரம் புரிதலோடு தலையாட்டினான்.

மறுநாள் விடிந்தது. காலையில் அறையைவிட்டு வெளியே வரும் முன், ராகவி கதவை திறந்து தலையை மட்டும் விட்டு நோட்டம் பார்த்தாள். சாரா இருந்தால், அவன் முன்னால் போகக்கூடாது என்று தீர்மானம்.

தலையை மட்டும் விட்டு பார்த்தவளை, எதிரே நின்று பார்த்து வைத்தான் சாணக்கியன்.

“ஆத்தி” என்று வாய்விட்டு பதறியவள், படக்கென தலையை உள்ளே இழுத்துக் கதவை மூடி விட்டாள்.

இதயம் வேகமாக துடிக்க, “அய்யோ பார்த்துட்டாரே” என்று பயந்து போய் நின்று விட்டாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்க, துள்ளி குதித்து தள்ளிச் சென்றவள், “போச்சு.. பார்த்துட்டு மறுக்கா கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டா என்ன பதில் சொல்லுறது?” என்று கையை உதறிக் கொண்டு நின்றாள்.

“ராகவி” என்ற ஏகாம்பரம் அழைக்கும் குரல் கேட்க, “ஏகா.. ஏகாம்பரம்” என்று சந்தோசமடைந்தவள், ஓடிச் சென்று கதவை திறந்தாள்.

“எந்திரிச்சுட்டா வெளிய வர மாட்டியா? வந்து காபிய குடி”

“உங்க பாஸெங்க?”

“அவர ஏன் கேட்குற?”

“இங்க தான் இருந்தாரு. காணோம் அதான்.”

“பாஸ் உங்கள ராகவி தேடுது” என்று ஏகாம்பரம் குரல் கொடுக்க, பதறிப்போனவள் பாய்ந்து வந்து அவனது வாயை அடைத்தாள்.

“யோவ் நான் தேடுனேனு பார்த்தியா?” என்று எகிற, அவள் கையை விலக்கி விட்டவன், “இப்ப தான காணோம்னு கேட்ட?” என்று கேட்டு வைத்தான்.

“கேட்டேன். தேடல. மாட்டி விடாதீங்க” என்று கெஞ்சியவள், குடுகுடுவென சமையலறை பக்கம் ஓடினாள்.

“இன்னைக்கு நீ தப்பிக்க முடியாது மகளே.” என்று சிரித்துக் கொண்டு பின்னால் சென்றான் ஏகாம்பரம்.

காலை உணவை மேசையில் வைத்து விட்டு, ராகவி சமையலறைக்குள் பதுங்கிக் கொள்ள, சாணக்கியன் வந்து விட்டான். ஏகாம்பரம் உணவை எடுத்து வைக்க சாணக்கியன் சாப்பிட்டபடி சுற்றியும் பார்த்தான். ‘ஆள் எஸ்கேப்’ என்று புரிந்தது.

“எங்க அவ?”

“உள்ள தான்”

“சாப்பிட்டாளா?”

“ம்ம்”

“அப்ப சரி நீ கிளம்பு”

தலையாட்டிய ஏகாம்பரம் நேராக ராகவியிடம் சென்று, “பை ராகவி. அப்புறமா பார்க்கலாம்” என்று கூறி மறைத்து வைத்திருந்த பையை தூக்கிக் கொள்ள, ராகவி அதிர்ந்து போய் பார்த்தாள்.

“எங்க போறீங்க?”

“எங்க ஊருக்கு”

“உங்க ஊருக்கா? ஏன் திடீர்னு?”

“திடீர்னு எல்லாம் இல்லையே. மாசம் மாசம் போய் பார்த்துட்டு ரெண்டு நாள் தங்கிட்டு வருவேன்”

“எதே? அது வரைக்கும் நான் இங்க… தனியா…”

“பாஸ் கூட இருப்பார் பயப்படாத”

“அதான பயமே” என்று மனதில் நினைப்பதாக எண்ணி வாய்விட்டு சொல்லி விட, “அவர பார்த்து என்ன பயம் உனக்கு?” என்று ஒன்றும் அறியா பிள்ளையை போல் கேட்டு வைத்தான் அவன்.

“விளையாடாதீங்க ஏகாம்பரம். என்னை தனியா விட்டு போறீங்க. அதுவும் உங்க பாஸ் கூட. உங்களுக்கு மனசாட்சி இருக்கா?”

“நீ பேசுற வாய்க்கு பாஸ உன் கிட்ட விடுறேனேனு தான் நான் வருத்தப்படனும்”

“நக்கலா? நான் உங்க பாஸ என்ன பண்ணிடுவேனாம்?”

“அது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்”

“பேசாம நானும் உங்க கூட வரட்டுமா? உங்க குடும்பத்த பார்த்துட்டு வரலாம்”

“சாரிமா. இப்ப முடியாது. அடுத்த தடவ கூட்டிட்டு போறேன். ஐ வாண்ட் பீஸ். பை” என்றவன் வெளியே வந்து விட, ராகவி அவன் பின்னால் ஓடி வந்தாள்.

“போயிட்டு வர்ரேன் பாஸ்” என்று சாணக்கியனிடம் அவன் விடைபெற, ராகவி அவசரமாக யோசித்தாள்.

சாரா தலையை மட்டும் ஆட்ட, “நானும் இவர் கூட போகவா?” என்று உடனே அனுமதி கேட்டு விட்டாள் ராகவி.

பயந்து கொண்டு நின்றால் வேலை நடக்காது என்று அவசரமாக பேசினாள்.

“எனக்கு சமைக்கவும் தெரியாது. வேலையும் ஒழுங்கா வராது. எனக்கு தனியா இருக்கதுனா ரொம்ப பயம். அதுனால நான் இங்க தனியா இருக்கதுக்கு இவர் கூட போயிட்டு வர்ரேனே. ” என்று கேட்க, சாரா ஏகாம்பரத்தை கேள்வியாக பார்த்தான்.

“இல்ல பாஸ்‌ இப்ப என்னால கூட்டிட்டு போக முடியாது. அடுத்த தடவ கூட்டிட்டு போறேன்.”

“நான் தனியா இருக்கனும்” என்ற ராகவி அழும் நிலைக்குச் சென்று விட்டாள்.

“பாஸ் எங்கயோ வெளிய போறாராம் ராகவி. அவர் கூட வேணா போயிட்டு வா. நான் கிளம்புறேன். லேட் ஆச்சு” என்றவன், இருவருக்கும் கையாட்டி விட்டு ஓடி விட்டான்.

ராகவி ஏகாம்பரத்தின் முதுகை பார்த்து உதட்டை பிதுக்கிக் கொண்டு நின்றாள். திடீரென கிடைத்த நண்பன், திடீரென பிரிந்ததும் அவளுக்கு வருத்தமாக இருந்தது.

வாசலில் நின்று அவனுக்கு கையாட்டியவள், உள்ளே செல்ல பயந்து கொண்டு சில நிமிடங்கள் வாசலிலேயே நின்றிருந்தாள்.

உள்ளே சென்று தான் ஆக வேண்டும் என்று புரிய, பெரு மூச்சு விட்டுத்திரும்ப, சாணக்கியன் பின்னால் நின்று அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

பார்த்ததும் ஜெர்க்காகி விட்டு, உடனே சமாளித்துக் கொண்டு, “ஹி ஹி” என்று பல்லை காட்டி வைத்தாள்.

“என்ன?”

“ஒன்னுமில்லயே”

“உள்ள வா”

அவன் திரும்பிச் சென்று விட, ‘ஏகாம்பரம் துரோகி. இப்படி நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாரே.. இந்த மனுசன் என்ன கேட்க போறாரோ?’ என்று புலம்பிக் கொண்டே உள்ளே வந்தாள்.

“போய் உன் டிரஸ் பேக் பண்ணு”

“எதுக்கு?”

சாணக்கியன் அவளே தலைசாய்த்து பார்க்க, “இல்ல எங்கனு தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி பண்ணுவேன்ல?” என்று பம்மினாள்.

“நீ பண்ணவே வேணாம். இப்படியே கிளம்பு”

“எங்க?”

மீண்டும் ஒரு பார்வை பார்த்தான். அவனது பார்வையில், பட்டென வாயில் அவளே அடித்துக் கொண்டாள்.

“பத்தே நிமிஷம். பேக் பண்ணிடுறேன் முதலாளி.”

“வேணாம். அங்க போய் வேற வாங்கிக்கலாம் வா”

“நீங்க வாங்குனா பத்தாது” என்றவள் திரும்பி அறைக்குள் செல்ல, ஒரே எட்டில் அவளை பிடித்து நிறுத்தினான்.

“என்ன பத்தாது?” என்று கேட்டு வைக்க, “நீங்க வாங்கிக் கொடுக்குற டிரஸ் தான்” என்றாள்.

“நீ போட்டது நான் வாங்கல. அந்த நர்ஸ் வாங்குனது. நான் சரியான அளவுல வாங்கித்தர்ரேன் வா” என்றவன் பார்வை, அவளிடம் முதல் முறையாக உரிமையுடன் படிந்தது.

முதல் முறை அவளும் தடுமாறினாள்.

“வேணாம் வேணாம். நான் பேக் பண்ணிடுறேன்” என்றவள் அவனது கையை விலக்கி விட்டு, அறைக்குள் ஓடியிருந்தாள்.

‘என்னயா அவனானு கேட்ட? வா நான் யாருனு காட்டுறேன்’ என்று நினைத்தவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

இப்படி எல்லாம் நடந்து கொள்வது அவனுக்கும் புதிதாய் இருக்க, காது மடல் சிவக்க ஆரம்பித்தது.

பையை எடுத்து, கைக்கு கிடைத்ததை எடுத்து உள்ளே வைத்துக் கொண்டிருந்த ராகவியின் மனம் இங்கு இல்லை. சாராவின் பார்வையிலேயே நிலைத்து விட்டது.

‘என்ன இப்படி பார்க்குறாங்க?’ என்று கேட்டவளுக்கு வயிற்றில் குறுகுறுப்பாக இருக்க, வயிறை தடவிக் கொண்டே தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டாள்.

அவள் வெளியே வரும் போது, தானும் ஒரு பையோடு வந்தான் சாரா.

வீட்டை பூட்டி வெளியே வந்தததும், கார் சாவியை கொடுத்து விட்டு காசி ஒதுங்கிக் கொள்ள, சாரா காரை திறந்து இருவரின் பையையும் வைத்தான்.

“முன்னாடி ஏறு” என்று ராகவிக்கு கட்டளை போட்டு விட்டு அவனும் ஏறிக் கொள்ள, காசி அமைதியாய் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ராகவி காரில் ஏறியதும், “அவரு வரலயா?” என்று கேள்வி கேட்டாள்.

“ஏன் என் கூட தனியா வர பயமா இருக்கா?”

“ச்சே ச்சே” என்று திணறலோடு சமாளித்தவள், “நான் எப்ப அப்படி சொன்னேன்?” என்று கேட்டாள்.

“ஏகாம்பரத்துக்கிட்ட சொன்னியே.. என் கூட தனியா இருக்கது பயம்னு”

“ஓட்ட வாய் ஏகாம்பரம். எல்லாத்தையும் உளறிடுறாரு. வரட்டும் இருக்கு” என்று பல்லைக்கடித்தாள்.

“யாரு? ஏகாம்பரம் ஓட்ட வாய்?”

“ஆமா. பின்ன நான் எதைச்சொன்னாலும் அத உங்க கிட்ட வந்து ஒப்பிச்சுடுறாரு?”

“அப்ப நீ சொல்லியிருக்க”

உதட்டை கடித்துக் கொண்டு, மாட்டிக் கொண்ட பாவனையில் திருதிருவென விழித்தாள்.

“சொல்லுறதெல்லாம் நீ. ஏகாம்பரம் ஓட்ட வாயா? வா உனக்கு இருக்கு” என்று மிரட்டி வைத்தான்.

அவன் விளையாட்டாய் மிரட்டியதற்கே அவள் பதட்டத்தோடு எச்சிலை விழுங்கிக் கொள்ள, கார் வேகமெடுத்தது.

*.*.*.*.*.*.*.*.*.*.

பூட்டப்பட்டிருந்த அறையை யாரோ திறக்கும் சத்தம் கேட்டு, தலையை நிமிர்த்திப் பார்த்தான் திவாகர்.

சொந்த வீட்டில் சிறையிருக்கிறான். அவனுடைய தந்தை அவனிடம் பேசுவது இல்லை. மூன்று நேர உணவு மட்டும் அவனுக்கு வழங்கப்பட்டது. அவனாக ஏன் செய்தான்? என்ற உண்மையை ஒப்புக் கொள்ளாத வரை, அவன் சிறையில் தான் இருந்தாக வேண்டும்.

சொல்லவும் தைரியம் இல்லாமல், மறைக்கவும் முடியாமல் அவன் தவிப்பது அவனுக்கே தெரியும்.

அறைக்குள் அடைந்து கிடப்பது பைத்தியம் பிடிப்பது போல் இருக்க, எதாவது காகிதத்தை எடுத்து கிறுக்கிக் கொண்டே இருந்தான்.

சுற்றியும் குப்பைகள் நிறைந்து கிடக்க, மெத்தையில் கிடந்தவன் கதவு திறந்த சத்தத்தில் தான் நிமிர்ந்தான். குமாரசாமி தட்டை எடுக்க வந்திருப்பார் என்று நினைக்க, உள்ளே வந்தது காசி.

காசியை பார்த்ததும், சட்டென துள்ளி குதித்து எழுந்தான் திவாகர்.

“காசி..” என்று ஆர்வமாக அழைத்தவன் கண்ணில் எதிர்பார்ப்பு தெரிய, காசி அவனை கூர்மையுடன் பார்த்து விட்டு, “வீட்டுக்குள்ளயே சந்தோசமா இருக்க போல?” என்று கேட்டு வைத்தான்.

அவனது பார்வையில் தெரிந்த கோபம், திவாகரை சோர்வடைய வைத்தது.

“இப்படியே இருந்துட்டா உண்மை எதுவும் சொல்ல தேவையில்லனு நினைப்பா?” என்று காசி அதட்ட, “சொல்ல முடியாத நிலைமையில இருக்கேன் காசி” என்று வருத்தத்தோடு கூறினான்.

“அது தான் எனக்குத் தெரியுமே”

சட்டென நிமிர்ந்த திவாகரின் கண்ணில் நம்பிக்கை தெரிந்தது.

“என்ன தெரியும்? எல்லாத்தையும் கண்டு பிடிச்சுட்டீங்களா?”

“ம்ம்”

“எனக்குத் தெரியும். சாரா கண்டு பிடிச்சுடுவான்னு எனக்கு தெரியும்.”

“ஆனா சிவா இருக்க இடம் மட்டும் தெரியல.”

“அதான் எனக்கும் தெரியல” என்ற திவாகருக்கு கண்கள் கலங்கியது.

சீக்கிரத்தில் அழாதவன், இத்தனை நாளும் வீட்டுக்குள் அடைந்து கிடந்ததில் பலவீனப்பட்டு இருந்தான்.

“நீ தேடலயா?”

“இல்ல. தேடுனா… சிவாவ எதுவும் பண்ணிட்டா?” என்று கேட்டவன், முகத்தில் இப்போதும் பயம் தெரிந்தது.

“எத்தனை பேருனாவது தெரியுமா?”

“தெரியாது. ஆனா நிறைய பேர் இருக்காங்க” என்றவன் பெருமூச்சு விட்டான்.

“சிவாவ காப்பாத்திடலாம் விடு”

“சாரா எங்க?”

“அவரு வேற வேலையா போயிட்டாரு”

“ஓஓ”

“இன்னும் கொஞ்ச நாள் இப்படியே இரு. உன் அப்பா கிட்டயும் சொல்ல வேணாம். உனக்கு எதாவது டீடைல் தெரிஞ்சா மட்டும் கேட்டுட்டு வரச்சொன்னாங்க பாஸும் அய்யாவும்”

“எனக்குத்தெரிஞ்சத சொல்லுறேன்.” என்றவன் அத்தனையும் விளக்கமாக சொல்லி முடிக்க, காசி பெரிதாக அதிராமலே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான்.

“சரி நான் கிளம்புறேன்”

“சிவாவ சீக்கிரம் கண்டு பிடிங்க”

“ம்ம்” என்று தலையாட்டியவன், அவன் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு கிளம்பி விட்டான்.

கண்களை தாண்டி வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, மீண்டும் மெத்தையில் விழுந்தான் திவாகர். சிவாவின் உயிர் நண்பன். சிவாவிற்காக உயிரை கூட விடத்துணிந்து இருந்தான்.

‘எங்கடா இருக்க? என்னடா பண்ணிட்டு இருக்க? உயிரோட தான் இருக்கியா?’ என்று மனதோடு நண்பனிடம் கேட்டவனுக்கு, பதிலே கிடைக்கவில்லை.

அதே நேரம் சிவாவிற்கு என்ன தோன்றியதோ? திவாகரை நினைத்தவன் முகத்தில் கவலை படர, புதிதாய் ஒரு நோட்டை எடுத்து இசையை வடிக்க ஆரம்பித்தான்.

தொடரும்.

Leave a Reply