சாரா 17

Loading

அனுசயா கணினியில் வேலையாக அமர்ந்திருந்தாள். அவளது கணினியில் வைரவரின் தொழிலின் மொத்த விவரங்களும் இருக்க, அதில் தேவையானதை எல்லாம் வழக்கம் போல் எடுத்து பத்திரபடுத்திக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் குரு வந்து நின்றான். அனுசயா அவனை கவனிக்காமல் போக, மேசையில் ஒரு ஹார்ட் டிஸ்க்கை வைத்தான்.

அனுசயா அதை கேள்வியாக பார்க்க, “பூபதி அனுப்பினான்” என்றான்.

அதை தூக்கி திருப்பிப் பாரித்தவள், “எப்போ?” என்று கேட்டாள்.

“தீவுக்கு கிளம்புறதுக்கு முன்னாடி”

“உனக்கு அனுப்புனானா? என் கிட்ட கொடுக்க வேண்டியது தான?”

“நீ அடிச்ச அடிக்கு நானா இருந்தா உன்னை கொன்னுருப்பேன். அவன் பேசாம போனான்னு சந்தோசப்படு”

“அவன் பண்ணது தப்பு” என்றவள் தான் செய்து கொண்டிருந்த வேலையை ஓரம் கட்டி விட்டு, பூபதி கொடுத்த டிஸ்க்கை ஆராயும் வேலையில் இறங்கினாள்.

“அவன் தப்பே பண்ணிருந்தாலும் நீ அடிச்சது தப்பு தான்”

“உன் அண்ணனுக்கு ஓவரா சப்போர்ட் பண்ணாத. இவனும் சேர்ந்து போய் தான அந்த டிரைவர பிடிச்சுருக்கான்? முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணிருந்தா, அவன நாம தூக்கியிருக்கலாம்”

“ப்ச்ச்.. அதான் சொல்லுறானே.. அவனுக்கே விசயம் அங்க போனப்புறம் தான் தெரியும்னு. அங்க வச்சு எதாச்சும் பண்ணி சாரா கிட்ட மாட்டியிருந்தா செத்துருப்பான்”

“நல்ல வேளை அந்த டிரைவருக்கு பெருசா எதுவுமே தெரியல. தப்பித் தவறி நம்ம யாரையாவது பார்த்து உளறி இருந்தான்னா என்ன ஆகியிருக்கும்?”

“அதான் நடக்கலல.”

“இப்ப உன் அண்ணன் எங்க?”

“அந்த தீவுக்கு நைட்டே கிளம்பிட்டான்”

“சாரா?”

“அவன் அந்த பொண்ணு கூட எங்கயோ கிளம்பி போயிட்டான்”

“ராகவி கூடயா?”

“ம்ம். காசி கூட போகல போல. அவன் வைரவர பார்க்க போயிட்டான். சாராவும் அந்த பொண்ணும் தனியா போயிட்டு இருக்காங்க?”

“எங்க?”

“தெரியல”

“ஃபாலோவ் பண்ணுறது யாரு?”

“நிரூபன் தான்”

அனுசயா எதையோ யோசித்து விட்டு, கிண்டலாக சிரித்தாள்.

“இங்க அவன் தம்பிய கடத்தி இருக்காங்க. அத பத்தி கவலை இல்லாம, அவ கூட ஜாலி டிரிப் போயிட்டு இருக்கான். இவனுக்கு போய் பொண்ணுங்கள பிடிக்காதுனு ஊரு நம்பிட்டு இருக்கு”

“அதுல உனக்கு ரொம்ப பொறாமை போல?” என்று நக்கலடித்தவன், “நீ ஆரம்பிச்ச வேலை என்னாச்சு?” என்று விசயத்திற்கு வந்தான்.

“அதையும் அந்த சாரா சொதப்பிட்டானே. வேலைய சீக்கிரமா முடிக்கலாம்னு வைரவர பார்க்க போனா, சாரா ஃபைல வாங்கி படிச்சுட்டு அப்புறமா வந்து சைன் வாங்குனு என்னை துரத்தி விட்டுட்டான்”

“இன்னைக்கு போய் வாங்கிடு. அதான் சாரா பக்கத்துல இல்லையே”

“இன்னைக்கு வைரவர் வீட்டுல இல்ல. யாரையோ பார்க்கனும்னு வெளிய போயிட்டாரு”

“சரி சீக்கிரம் வாங்க பாரு. நான் போய் வேலைய பார்க்குறேன்” என்ற குரு கிளம்பி விட, அனுசயா பூபதி அனுப்பிய டிஸ்கில் இருந்த விவரங்களை படிக்க ஆரம்பித்தாள்.

பூபதி அனுசயாவிற்கு முன்பே சாராவோடு இணைந்தவன். இருவரும் நண்பர்களாகவும் மாறி விட்டனர். ஆனால் பூபதியின் வேலை எதுவும் சராவின் சட்டவிரோதமான தொழிலுக்குள் வராது. அவனது வேலை எல்லாம், சாராவின் சட்டபூர்வ அதிகாரம் பெற்ற வைர தொழிலில் தான் இருந்தது.

சாராவின் சட்டத்திற்கு புறம்பான வேலைகள் எல்லாம், திவாகரும் காசியும் தான் பார்த்தனர். பூபதி நண்பனாக இருந்தாலும், வயது வித்தியாசம் பார்க்காமல் பழகினாலும், எல்லையில் தான் இருந்தான்.

சிவாவை கடத்தும் திட்டமும் கூட, முதலில் பூபதியின் தலையில் தான் உருவானது.அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்களை உள்ளே நுழைத்திருந்தான்.

பல மாத திட்டம் போட்டு சிவாவை கடத்தி வைத்து விட, வைரவரின் கவனம் மகன் மீது போக, வைரவரின் தொழிலில் தங்களது வேலையை சுலபமாக காட்ட ஆரம்பித்தது அவர்களது குழு.

சிவா வைரவருக்கு மட்டுமல்ல சாராவுக்கும் பலவீனப்பகுதி. இருவரும் நான்கு மாதங்களாக சிவாவை தேடாத இடமில்லை. அப்படி அலைந்து கொண்டிருந்தவர்களின் கவனங்களை திசை திருப்பியபடி, தங்களது வேலைகளை ஓரளவு முடித்துக் கொண்டனர்.

ஆனால் எல்லாம் வைரவரிடம் தான் வேலை செய்தது. சாரா திவாகரை தவிர யாரையும் உள்ளே விடுவதாக இல்லை. திவாகருக்கும் சிவா உயிர் நண்பன் தான். ஆனால், திவாகர் தொழில் என்று வந்து விட்டால், ஒருத்தரையும் நம்புவது கிடையாது.

அவனை மடக்கி, சிவாவின் உயிரை பணயம் வைத்தனர். அவர்கள் சொன்னது செய்யவில்லை என்றால், சிவாவின் உயிர் போய் விடும் என்று மிரட்டினர்.

அந்த கூட்டத்தில் மற்ற யாரையும் அவன் பார்க்கவில்லை. ஆனால் பூபதி மட்டும் தன் முகத்தை காட்டி விட்டான். பூபதியை பார்த்த திவாகருக்கு, அதிர்ச்சியில் இதயம் வெடிக்காத குறை தான்.

தப்பத்தவறி சாராவின் காதுக்கு சிவா கடத்தப்பட விசயத்தை சொல்லி விட்டால், அடுத்த நொடி சிவாவின் உயிர் போய் விடும் என்று மிரட்டியதும் பூபதி தான்.

சாரா விசயம் அறிந்து பொருளை மீட்டுக் கொண்ட போது, பூபதிக்கு திவாகரின் மீது தான் சந்தேகம் வந்தது. ஆனால் திவாகரை கண்டு பிடித்து சாரா கட்டி வைத்திருக்கும் போது, பூபதி தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள அடித்து உதைத்துக் கொண்டிருந்தான்.

அவன் முன்பே, சிவாவின் விசயத்தையோ, ஏன் செய்தான்? என்ற விசயத்தையோ திவாகர் எப்படிச் சொல்வான்?

சாராவை வீணாய் உசுப்பி விட மட்டுமே செய்தான். பூபதி இல்லாமல் சாரா வந்தால், விசயத்தை சொல்லி விட்டு செத்து போய் விடலாம் என்று அவன் காத்திருக்க, சாரா தனியாக வரவே இல்லை.

பூபதி எந்த நேரமும் உடனிருந்தான். கடைசியாக வைரவர் அவனை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்து விட்டார். அப்போதும் திவாகருக்கு வாயைத்திறக்க பயம் தான். காரணம் அங்கு இருந்தது பல பேர். யார் எந்த ரூபத்தில் உள்ளே உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனுக்கே தெரியாது.

வாயைத்திறந்து அது எங்காவது போய் விட்டால்?

அப்போதைக்கு அவன் நம்புவது சாரா, காசி மற்றும் வைரவர் மட்டும் தான். பெற்ற தந்தையையும் கூட ஒதுக்கி விட்டான்.

காசி, சிவா, திவாகர் எல்லாரும் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். காசியின் தந்தையும், திவாகரின் தந்தை போல் இங்கு வேலை செய்தவர் தான். எல்லாரையும் விட பெரியவனான சாரா மட்டும் யாரோடும் ஒட்ட மாட்டான்.

சிவா, தன் பின்புலம் மறந்து சகஜமாக பழகுபவன். இவர்களை தவிர, இப்போது யாரை பார்த்தாலும் திவாகருக்கு சந்தேகமாகத்தான் இருந்தது.

காசியிடம் சொல்லும் போதே, நிறைய நபர்கள் உள்ளே உலாவுவது பற்றி தெளிவாக சொல்லி விட்டான்.

“எத்தனை பேர்னு தெரியல. ஆனா நிறைய பேர் நம்ம கூடவே இருக்காங்க. அதுல பூபதியே சாட்சி. பார்த்து டீல் பண்ணுங்க” என்று கூறி வைத்தான்.

இப்போது காசி வைரவரை தனிமையில் சந்தித்து விசயத்தைக்கூறினான்.

“எத்தனை பேர சந்தேகப் பட முடியும்னு நினைக்கிற?”

“எல்லாரையும். சாரா பாஸ் ஒரு லிஸ்ட் கொடுத்துருக்கார். அத்தனை பேரையும் கண்காணிப்புல கொண்டு வரச்சொன்னார்” என்று கூறி பட்டியலை அவரிடம் கொடுக்க, வாங்கிப் ‌பார்த்தவர் பெருமூச்சு விட்டார்.

இதை எல்லாம் ‌சாராவின் கையில் கொடுத்து விட்டு, ஒதுங்கிக் கொள்ள தான் அவர் நினைத்திருந்தார். அதற்குள் மகன் தொலைந்து போனான்.

“பார்த்துக்கலாம்” என்றதும் காசி விடை பெற, அவருக்கு நம்பிக்கையான ஆட்களை அழைத்து விசயத்தைக் கூற, அடுத்த நிமிடமே அந்த பட்டியலில் இருந்தவர்கள் மீது கண்காணிப்புக்கான வேலைகள் ஆரம்பமானது.

*.*.*.*.*.*.*.*.*.*.

முடிந்தவரை சாராவிடம் வாயை திறக்காமல் உதடுகளுக்கு பூட்டு போட்டுக் கொண்டு வந்தாள் ராகவி.

ஏகாம்பரத்திடம் பேசுவது போல் சாராவிடம் பேச பயமாக இருந்தது. எதாவது நினைத்துக் கொள்வானோ? இல்லை கோபப்படுவானோ? என்ற பயம் அவளுக்கு.

சாலையிலும் பாதையிலும் மட்டுமே கண்ணை வைத்திருந்தவள், அடிக்கடி எதையாவது பேச வந்து, சாராவின் முகத்தை பார்த்து கப்பென வாயை மூடிக் கொண்டாள்.

அதை எல்லாம் கவனித்தாலும், சாரா கண்டு கொள்ளாமல் இருந்து விட்டான்.

கார் படகுத்துறையில் வந்து நின்றது. காரை நிறுத்தி விட்டு சாரா இறங்கி, இருவரின் பையையும் தூக்கிக் கொண்டு காரை பூட்டினான்.

ஆயிரம் கேள்வி தோன்றிய போதும், கஷ்டப்பட்டு வாயை மூடிக் கொண்டு அவனோடு நடந்தாள் ராகவி.

இருவரும் படகின் அருகே வந்ததும், வாய் பூட்டு அவிழ்ந்து விட்டது.

“வாவ்!” என்று தன்னை மீறி சொன்னவள், “போட்ல போறோமா?” என்று ஆர்வமாக கேட்டாள்.

“இல்ல மிதந்து போறோம்?”

“ஹான்?”

“முன்னாடி பார்த்து நட” என்றவன் அவள் தலையை திருப்பி விட்டு உடன் நடந்தான்.

சொகுசு கப்பல் ஒன்று இருக்க, அதில் முதலில் இறங்கிய சாரா கை கொடுத்து அவளையும் இறக்கி விட்டான்.

ஆர்வத்தில் கடலை பார்க்க அருகே சென்றவளுக்கு, திடீரென உள்ளங்கால்கள் கூச ஆரம்பித்தது. இது போன்ற கப்பல்களில் அவள் பயணித்தது இல்லை. ஏன் நேரில் பார்த்ததும் இல்லை.

ஆர்வம் அதிகமிருந்தும் பயத்தில் அவள் பின் வாங்க, பின்னால் நின்றிருந்த சாரா அவள் தோளில் கைபோட்டு அணைத்து நிறுத்தினான்.

மேலே விழுந்த கையில் அதிர்ந்து திரும்பிப் பார்த்தவள், சாராவை இமைக்காமல் பார்த்தாள்.

“என்ன?” என்பது போல் சாரா புருவம் உயர்த்த, எச்சிலை விழுங்கிக் கொண்டவள், அவனது கையை மெல்ல விலக்கப்போக ,சாரா மேலும் அருகே இழுத்துக் கொண்டான்.

“சார்..” என்று இழுக்க, சாரா அவள் காதருகே குனிந்தான்.

“இங்க நாம லவ்வர்ஸ்” என்று மெல்லிய குரலில் சொன்னவன், அவளது கன்னத்தில் நாசியை உரசி விட்டு நிமிர்ந்தான்.

‘எதே? லவ்வரா?’ என்று அவள் உள்ளே அலறுவது பார்வையிலேயே சாணக்கியனுக்கு புரிந்தது.

“நாம எப்ப…” என்று ஆரம்பித்தவள் அவன் கையை விலக்கி விட பார்க்க, அவன் விடவில்லை.

“கல்யாணம் பண்ணி பொண்டாட்டி தான் ஆகல. லவ்வராவும் இருக்க மாட்டியா?” என்று கேட்டு சாரா புன்னகைக்க, ‘இது புது வம்பா இருக்கே?’ என்று பதறினாள்.

“சார்.. இதெல்லாம் சரியில்ல” என்றவள் அவனை விட்டு விலகி நின்றாள்.

“அப்ப என்னை லவ் பண்ணவோ கல்யாணம் பண்ணவோ மாட்ட?” என்று பாக்கெட்டில் கை விட்டுக் கொண்டு அவளை நோக்கி குனிந்தபடி அவன் கேட்க, மறுப்பாக தலையசைத்தாள்.

தலையசைத்து முடிக்கும் போதே படகு கிளம்ப, அதில் ஏற்பட்ட அதிர்வில் பயந்து போய், அடுத்த நொடி தானாகவே சாராவை கட்டி பிடித்துக் கொண்டாள்.

“அம்மா.. போட் ஆடுது.. என்னை இறக்கி விடுங்க” என்று அவனை கட்டிக் கொண்டு கத்த, சாரா சிரிப்போடு இரண்டு கையாலும் அவளை அணைத்துக் கொண்டான்.

மீண்டும் படகு ஒரு முறை அதிர்ந்து கிளம்பி விட, “அய்யோ போட் ஆடுது.” என்று மீண்டும் கத்தினாள்.

அவனிடம் பதில் இல்லாமல் போக “எனக்கு பயமா இருக்கு. இறக்கி விடுங்க” என்று கத்திக் கொண்டே இருந்தாள்.

“அசையாம இரு. இல்லனா தண்ணிக்குள்ள விழுந்துடுவ” என்ற சாரா, அவளை அணைத்துக் கொண்டு கடலை பார்த்தான்.

படகு மெல்ல கிளம்பி நகர்ந்து வேகமெடுக்க ஆரம்பிக்க, “இப்ப திரும்பி பாரு” என்றவன், ராகவியை திருப்பி நிறுத்தி கடலை காட்டினான்.

பயத்தில் அவனோடு ஒட்டிக் கொண்டு நின்றவள், வேகமாக செல்லும் படகையும் முகத்தை மோதும் காற்றையும் ஆச்சரியத்தோடு ரசிக்க ஆரம்பித்தாள்.

“வாவ்..! செம்மல?” என்று கேட்டு சாராவை நிமிர்ந்து பார்க்க, அவன் அவளை நோக்கி குனிந்தான்.

திடீரென நெருக்கத்தில் அவனை பார்த்ததும் பதறி விலகப்போனாள். சாரா விடாமல் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டு, “இப்ப நாம எங்க போறோம் சொல்லு?” என்று கேட்டான்.

இப்படி ஒரு நிலையில் கேட்டால் அவளுக்கு பேச்சு எங்கே வரும்? மூச்சு தான் தாறுமாறாக வந்தது.

“உனக்கு பிடிச்ச சுறாவ பார்க்க போறோம்”

அவன் சொன்னதை உணரவே அவளுக்கு சில நொடிகள் பிடித்தது. புரிந்ததும் இருக்கும் நிலையை கூட மறந்து, அவன் பக்கம் வேகமாய் திரும்பினாள்.

“நிஜம்மாவா? நிஜம்மாவே சுறாவ பார்க்க போறோமா?” என்று கேட்டு துள்ளியவள் படகு அசைந்ததில் விழப்போக, அவளை தாங்கிப் பிடித்தான்.

“இங்க நின்னு குதிக்காத. உள்ள போகலாம் வா” என்றவன், அவளை விடாமலே உள்ளே அழைத்துச் சென்றான்.

அங்கு இருவர் மட்டுமே இருந்தனர். சாராவுக்கு தலை வணங்கி விட்டு அவர்களது வேலையை பார்க்க, சாரா ராகவியை அங்கிருந்த ஒற்றை அறைக்கு அழைத்துச் சென்றான்.

“ஹய்யோ.. செம்மையா இருக்கு” என்றவள் சுற்றி சுற்றி பார்க்க, “இங்க தான் ரெண்டு நாள் இருக்க போறோம்” என்றான்.

ராகவி அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.

“இந்த ஒரு ரூம்லயா?”

“ஆமா”

“நீங்களும் நானும்?”

“ஆமா”

“விளையாடாதீங்க பாஸ்.”

“விளையாடனும்னு தான கூட்டிட்டே வந்தேன்”

“பாஸ்!”

“என்னமோ நான் அவனானு கேட்டியாமே?” என்று கேட்டபடி அவளை நெருங்க, விழிவிரிய அசைவற்று நின்று விட்டாள்.

‘அடப்பாவி ஏகாம்பரம்’ என்று அவள் உள்ளே அதிர, சாணக்கியன் அவளை நெருங்கியிருந்தான்.

“இப்ப வா நான் அவனா இல்லையானு தெரிஞ்சுப்ப” என்றவன் அவளை ஒரு கையால் இழுத்து அணைத்தான்.

“பாஸ் அது எதோ தெரியாம…”

“தெரியாமலா? உனக்கு வயசு இருபத்தி ஏழு தான?”

“வயசுக்கும் இதுக்கும் என்ன பாஸ் சம்பந்தம்?” என்று கேட்டு வைத்தாள்.

அவளை பயமுறுத்த நினைத்திருந்தவன் கூட, இதைக்கேட்டு பக்கென சிரித்து விட்டான்.

“அடியே உன்னை வச்சுட்டு நான் என்ன செய்ய போறேனோ?”

“அடியே வா? பாஸ் மரியாதை மரியாதை”

“கொடுக்க முடியாது” என்றவன் அவள் முகத்தில் விரலால் கோலமிட, கன்னங்கள் சிவக்க ஆரம்பித்தது.

“பாஸ்.. என்ன பண்ணுறீங்க?” என்றவள் கூச்சத்தோடு அவன் கையை விலக்க பார்க்க, “என்ன பண்ணுறேன்னு தெரியலயா?” என்று காதருகே வந்து கேட்டான்.

“தெரியுது”

“என்னது?”

“என்னை மயக்க பார்க்குறீங்க தான? ஆனா எனக்கு மயக்கம் வரல பாஸ். வயிறு தான் குறுகுறுனு ஒரு மாதிரி இருக்கு. பாத்ரூம் எங்க பாஸ் இருக்கு?”

அவனை விலக்கி விட்டு வயிற்றை பிடித்துக் கொண்டு அவள் கேட்ட கேள்வியில், சாரா வாய் விட்டு சிரித்தான்.

தொடரும்.

Leave a Reply