சாரா 19

Loading

படகு தண்ணீரை கிழித்துக் கொண்டு உல்லாசமாக சென்று கொண்டிருக்க, மேல் தளத்தில் ராகவி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

தண்ணீரும் முகத்தில் அவ்வப்போது தெறித்து விளையாட, கலைந்த கூந்தலை சரி செய்யவும் மறந்து நின்றிருந்தாள்.

சாரா தன் கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் கப்பலில் ஏறி இரண்டு மணி நேரம் கடந்து விட்டது. கப்பல் எங்கே செல்கிறது என்று அவளுக்கு புரியவில்லை.

“கப்பல் எங்க போகுது?” என்று கேட்டுக் கொண்டு சாராவிடம் வந்து நின்றாள்.

“எங்கயும் போகல. ஜஸ்ட் கடல சுத்திட்டே இருக்கும். அவ்வளவு தான்”

“ஓஓ ரெண்டு நாளும் இந்த போட்லயே தான் இருக்க போறோமா?”

“கிட்டத்தட்ட. ஆனா இடையில எங்கயாவது நிக்கும். ஏன் உனக்கு கடல்ல இருக்கது எதுவும் பண்ணுதா?”

“ச்சே ச்சே. அதான் மாத்திரையும் போட்டேனே. ஜாலியா இருக்கு. என்ன ஏகாம்பரம் இருந்துருக்கலாம்.”

“அவன் எதுக்கு?”

“பேசிட்டு சமைச்சு சாப்பிடலாம்ல?”

“என் கூட பேசலாமே” என்றவன் அவளை இழுத்து மடியில் அமர வைத்துக் கொள்ள, பயந்து போய் விட்டாள்.

“ஆத்தி.. விடுங்க..” என்றவள் எழப்பார்க்க, “மாட்டேன். என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லு. இல்லனா இப்படியே தூக்கி கடல்ல போட்டுருவேன்” என்றவன், அவளை தூக்கிக் கொண்டு எழுந்தான்.

“வேணாம் எனக்கு நீச்சல் தெரியாது” என்று அலறியவள், அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள்.

“அப்ப வசதியா போச்சு. இப்ப ஓகே சொல்லிறியா? இல்ல கடல்ல போடவா?” என்று கேட்டவன் ஓரத்திற்கு நடந்து செல்ல, ராகவி அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

“ம்ம்.. இப்ப சொல்லு?”

“இப்படி எல்லாம் மிரட்டுறது நியாயமே இல்ல பாஸ்”

“இன்னும் பாஸ்னு கூப்பிடுறதுக்கு நிஜம்மாவே போட போறேன் பாரு”

“நோ நோ ப்ளீஸ்” என்ற கெஞ்சலோடு அவளை கட்டிக் கொண்டாள்.

“சரி போடல கண்ண திற” என்றவன், “ஆனா போறதுக்குள்ள சரினு சொல்லுற..” என்று கூறி விட்டே இறக்கி விட்டான்.

கீழே இறங்கியதும் நிம்மதியாக மூச்சு விட்டவள், “ஒரே ஒரு கேள்வி பாஸ்” என்றாள்.

“என்ன?”

“இந்த மாஃபியா கும்பல் லவ்வ கூட மிரட்டி தான் பண்ணுவீங்களா?”

“அடிங்…” என்றவனிடமிருந்து தப்பி ஓடப்பார்த்தவளை எட்டிப்பிடித்தவன், திரும்பிப் பார்த்தான்.

அவர்களது படகு தனியாக தான் சென்று கொண்டிருந்தது. சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர் மட்டும் தான் இருந்தது. படகை செலுத்துபவன் மட்டுமே அங்கிருக்க, ராகவியின் பக்கம் திரும்பினான்.

அவளோ அவனது கையை விலக்கி ஓடத்தயாராக இருந்தாள்.

மீண்டும் அவளை மொத்தமாக அள்ளிக் கொள்ள, “அய்யோ போட்டுறாதீங்க” என்று அலறி அவனை கட்டிக் கொண்டாள்.

சிரிப்போடு தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான். அறையில் வந்து அமர வைத்தவன், “ஓவரா வாய் பேசுற உனக்கு இன்னைக்கு சாப்பாடு கிடையாது. உள்ளயே இரு” என்றவன், அவளை உள்ளே விட்டு பூட்டி விட்டு வெளியே வந்தான்.

“எதே? அய்யோ இருங்க” என்றவளின் குரல் கேட்டும் அவன் பூட்டி விட, “ஹும்” என்று முகத்தை தூக்கிக் கொண்டாள்.

பிறகு அவளே தெளிந்து விட்டாள்.

“அப்படி எல்லாம் பட்னி போட மாட்டாரு பாஸ். ரொம்ப நல்லவர்” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு, அறையில் இருந்த தொலைகாட்சியை உயிர்பித்தாள். அதில் நான்கைந்து திரைப்படங்கள் இருக்க, எதையாவது பார்க்கலாம் என்று முடிவு செய்தாள்.

“ஒரு தமிழ் படம் கூட இல்ல. நம்ம அரைகுறை இங்கிலீஷ்க்கு இத பார்த்தா தூக்கம் தான வரும்?” என்று புலம்பிக் கொண்டே ஒரு படத்தை போட்டு விட்டாள்.

வெளியே வந்து கதவை பூட்டிய சாணக்கியன், படகோட்டியை நோக்கிச் சென்றான்.

சாணக்கியனை பார்த்ததும் மறைத்து வைத்திருந்த பெட்டியை எடுத்து மேலே வைத்தான் அவன். சாணக்கியன் பெட்டியை திறக்க, உள்ளே விதவிதமான துப்பாக்கிகள் காட்சியளித்தது. ஒன்றை எடுத்து சரி செய்து பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டான்.

உள்ளே படத்தை போட்டு விட்டு, புரியாத மொழியை புரிந்து கொள்ள போராடிக் கொண்டிருந்தாள் ராகவி. சில நிமிடங்களில் கதவை திறந்து வந்தான் சாணக்கியன்.

உணவை சிறிய மேசையில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தான்.

“ஹை..! பாஸ்.. எனக்கா?”

“பின்ன எனக்கா?”

“வெளியே வச்சு சாப்பிடலாம்ல?”

“காத்துல எல்லாம் பறக்குறதுக்கா?”

“ஆமால.. சரி வாங்க சாப்பிடுவோம்”

“எனக்கு பசிக்கல. நீ சாப்பிடு”

“ஏன் பசிக்கல?”

“டிராவல்ல பசிக்காது. சாப்பிடு” என்றவன் மூடியை திறக்க, உள்ளே மீன்களை பொறித்து வைத்திருந்தனர்.

அப்போதே பிடித்து பொறித்தது என்பதால் மிகவும் சுவையாக இருக்க, நன்றாக சாப்பிட்டு முடித்தாள்.

“செம்ம டேஸ்ட். ஃப்ரஸ் மீன் இல்ல?” என்று கேட்க, சாணக்கியன் தலையை ஆட்டி விட்டு தொலைகாட்சியில் தான் கண்ணை வைத்திருந்தான்.

சாப்பிட்டு முடித்து விட்டு அவனுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, ஒன்றும் புரியாமல் கொட்டாவி தான் வந்தது.

“இங்கலீஷ் படமே இதுக்கு தான் பார்க்க மாட்டேன். கொட்டாவியா வருது” என்று கொட்டாவி விட்டுக் கொண்டே பேசியவள், சில நிமிடங்களில் தூங்கி விட்டாள்.

நன்றாக தூக்கத்திற்கு சென்று விட்டாளா? என்று சோதித்து விட்டு, போர்வையை இழுத்து போர்த்தி விட்டான்.

வெளியே வந்து கதவை பூட்டியவன், அங்கு திடீரென முளைத்திருந்தவன் பக்கம் கண்ணை காட்டி விட்டு, படகின் மேல் தளத்திற்கு சென்றான்.

கையை பின்னால் கட்டிக் கொண்டு, கடலும் சூரியனும் சங்கமிக்கும் இடத்தில் பார்வையை பதித்திருந்தான். சூரியன் உட்சத்தில் தகித்துக் கொண்டிருக்க, கடலலைகளின் சத்தம் கூட கேட்காத அமைதியான நேரம் அது.

தன்னந்தனியாய் டெக்கில் நின்றிருந்தவன் காதில், வேறு ஒரு கப்பல் வேகமாக வருவது கேட்டது. அப்போதும் அசையாமல் நின்றிருந்தான்.

நடக்கப்போகும் பிரளயத்தை அறிந்தோ என்னவோ கடலும் அமைதி காத்திருக்க, இரண்டு படகுகளும் ஒரே வேகத்தில் சென்று கொண்டிருக்க, திடீரென ஒரு துப்பாக்கி ரவை சாராவின் தோளை உரசிச் சென்றது.

எதிர்பார்த்தது என்றாலும், கையை பிடித்துக் கொண்டு அவன் கீழே விழுந்து விட, எதிர் கப்பலில் இருந்தவர்களின் தலை, சந்தோசத்தில் வெளியே தெரிய ஆரம்பித்தது. அவ்வளவு தான் அடுத்த நொடி அத்தனை‌ பேரின் உடலிலும் துப்பாக்கி ரவைகள் ஒரே நேரத்தில் இறங்கியது.

மொத்தமாய் மூன்று நபர்களை முடித்து விட்டாலும், சாரா எழவும் இல்லை. அசையவும் இல்லை. படுத்தபடியே கிடந்தான். மீண்டும் அதே அமைதி. ஆனால் இம்முறை ரத்தம் கலந்த அமைதியோடு காட்சியளித்தது கடல்.

படகுகள் இன்னும் ஒரே வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அதிலேயே இன்னும் அந்த படகில் ஆட்கள் இருப்பது புரிய, சாரா அசையாமலே கிடந்தான்.

நொடிகள் கடந்து நிமிடங்களானது. சாராவின் உடலில் இருந்து ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. அப்போதும் அவன் அசையாமலே கிடக்க, எதிர் படகில் வந்தவர்கள் குழப்பமடைந்தார்கள்.

உயிரோடு இருந்தால், நிச்சயம் யாரையாவது அவன் உதவிக்கு அழைத்திருப்பான். இது பயத்தில் நடத்தப்பட்ட எதிர் தாக்குதலாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர்.

திடீரென சாணக்கியன் இருந்த கப்பல், திசை மாற்றி மீண்டும் கரைக்கு செல்வது போல் திரும்ப ஆரம்பிக்க, அவர்களுக்கு விசயம் உறுதியானது.

சாணக்கியனை காப்பதற்காக படகு திரும்புவதாக நினைத்தவர்கள், மிக வேகமாக கப்பலை விரட்டிக் கொண்டு பின்னால் வந்தனர். உள்ளே எஞ்சி இருந்தவர்கள் இப்போது வெளியே வந்தனர்.

படகோட்டியை தவிர, மற்ற இருவரும் துப்பாக்கியை நீட்டியபடி, சாணக்கியனை குறி பார்த்தனர்.

சாணக்கியன் மூச்சு கூட விடுகிறானா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

“சாகலனாலும் இவ்வளவு நேரத்துல மயங்கி இருப்பான்” என்று ஒருவன் கூற, “உள்ள எத்தனை பேர் இருக்காங்க?” என்று விசாரித்தான்.

“ரெண்டு பேர் தான். ரெண்டு பேருல ஒருத்தன் தான் சாராவோட ஆள்”

“ஒருத்தன் எப்படி ஒரே நேரத்துல இத்தனை பேர வரிசையா சுட முடியும்?”

“அது தான் எனக்கும் குழப்பமா இருக்கு”

“யாரா இருந்தாலும் இப்ப சாராவ காப்பாத்துறது மட்டும் தான் அவங்க எண்ணமா இருக்கும். அத மட்டும் நடக்க விடக்கூடாது” என்றவன், படகை செலுத்துபவனிடம் சைகை காட்ட, அவன் சாரா இருந்த கப்பலை வழி மறித்து நிறுத்த பார்த்தான்.

இரண்டு கப்பலும் பல முறை மோதும் நிலைக்கு வந்து, கடைசியாக கடலில் நிலைத்து நின்றது.

“சாராவ எங்க கிட்ட ஒப்படைச்சுடுங்க. உங்கள உயிரோட விடுறோம். இல்லனா இந்த போட்டோட நீங்களும் எரிஞ்சுடுவீங்க” என்று மிரட்டல் வர, “முடியாது” என்று கத்தினான் ஒருவன்.

“ஒழுங்கா போயிடு. இல்லனா கொன்னுடுவேன். எனக்கு எங்க பாஸ எப்படி காப்பாத்தனும்னு தெரியும்” என்று கத்தியபடி துப்பாக்கியை பிடித்திருந்தவன் முகத்தில் பீதி தான் அதிகம் தெரிந்தது.

அந்த பீதி மற்றவர்களுக்கு திருப்தி அளிக்க, அவனிடம் பேச்சுக் கொடுத்தபடி சாரா இருந்த கப்பலுக்கு தாவி விட்டனர்.

“ஏய் கிட்ட வராதீங்க.. எங்க பாஸ எதாவது பண்ணீங்கனா உங்கள கொன்னுடுவேன்” என்று மிரட்டியபடி அவன் பின்வாங்க, அவர்களும் விடுவதாக இல்லை.

“கன்ன கீழ போடு. நாங்க உன் பாஸ ஒன்னும் பண்ண மாட்டோம்” என்று கூறி அவனை நெருங்கினர்.

இருவரும் ஒருவனை நெருங்க, பின்னாலிருந்து பாய்ந்து அவர்களின் துப்பாக்கியை தட்டி விட்டான் பிரமோத். தட்டிய வேகத்தில் இரண்டுமே சாராவிடம் சென்று சேர்ந்தது.

ஒருவனை வளைத்துப்பிடித்து தலையில் துப்பாக்கியை வைத்தவன், அடுத்தவனை ஓங்கி எத்தி விட, அவனும் சென்று சாராவின் மீது விழுந்தான்.

விழுந்த நொடியில், சாரா அவனது கழுத்தை வளைத்துப் பிடித்து ஒரே திருப்பில் மயக்கமடைய வைத்திருந்தான்.

மாட்டிக் கொண்டவனை பார்த்து புன்னகைத்துக் கொண்டே எழுந்த சாரா, “எப்படி இருக்கீங்க போலீஷ் ஆபிஷர்? பார்த்து பல மாசமாச்சு?” என்று நலம் விசாரிக்க வேறு செய்தான்.

பிரமோத்திடம் மாட்டிக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரி கந்தன், சாராவை முறைத்துப் பார்த்தான்.

“பல மாசமா இத தான் ப்ளான் போட்டீங்களா? ஏன் ஆபிஷர் உங்க ஆளுங்கள கூட்டிட்டு வந்துருக்கலாம்ல? எப்ப பாரு இவனுங்கள கொன்னுட்டு, போலீஸ்னு உங்கள தப்பிக்க விடுறதே என் வேலையா போச்சு” என்று சலித்துக் கொண்டான்.

இரண்டு படகும் கணநேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் வர, அதை கவனிக்கச் சொல்லி பிரமோத்தை பார்த்தவன், “அப்படியே சார் கால்லயும் பின்னாடியும் மறைச்சு வச்சுருக்க கன்னயும் சேர்த்து எடுத்துட்டுப் போ” என்றான்.

கந்தனிடம் இருந்த மற்ற இரு துப்பாக்கிகளும் பறி போய் விட, நிராயுதபாணியாக சாராவின் முன்னால் நின்றிருந்தான்.

பிரமோத் அங்கிருந்து நகர்ந்து விட, படகில் எப்போதுமே இருப்பவன் முதலுதவி பெட்டியோடு வந்து நின்றான்.

“உங்க ப்ளான்க்காக எவ்வளவு ரத்தம் சிந்தியிருக்கேன் பாருங்க” என்று காட்டி சிரித்தான் சாரா.

“எப்பவுமே தப்பிச்சுட்டே இருக்க முடியாது சாரா” என்று கந்தன் கடுங்கோபத்தோடு பேச, சாரா நக்கலாக சிரித்தான்.

“ஒரு நாள் மாட்டுவ சாரா. அப்ப காட்டுறேன் போலீஸ் பவர்னா என்னனு?”

“அத பார்க்க தான் நானும் காத்திருக்கேன். ஆனா மூணு வருசமா நடக்க மாட்டேங்குதே.”

“எப்பவும் நல்ல நேரம் கூடவே இருந்துடாது”

“நல்ல நேரமா? நானே நல்லவன் இல்ல. என் நேரம் மட்டும் எப்படி நல்ல நேரமா இருக்கும்?”

“நீ நல்லவன் இல்லனு உனக்கே தெரிஞ்சுருக்கு. ஆனாலும் இதெல்லாம் விட மாட்டல?”

“முடியாது கந்தன் சார். ரத்தத்துல ஊறிடுச்சு”

“அந்த ரத்தத்தை எல்லாம் மொத்தமா ஒரு நாள் உன் உடம்ப விட்டு வெளிய எடுக்கிறேன்”

“ட்ரை யுவர் பெஸ்ட்”

சாராவை கோபமாக பார்த்து விட்டு, கந்தன் பார்லையை சுழல விட்டான். அவர்களை தவிர யாரும் அவன் கண்ணில் படவில்லை.

“என்ன தேடுறீங்க கந்தன்?” என்று ஒன்றும் அறியாதவன் போல் கேட்டான் சாரா. இன்னும் அமர்ந்து நிலையில் காயத்துக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தான்.

“உன் கூட இருந்தாலே அந்த பொண்ணு அவ எங்க?” என்று கந்தன் சந்தேகமாக கேட்க, “அவள ஏன் கேட்குறீங்க எஸ்.பி சார்?” என்று இழுத்தான்.

“எங்க?”

“உயிரோட தான் வச்சுருக்கேன். பயப்படாதீங்க. உங்க தங்கச்சிக்கு ஒன்னுமே ஆக விட மாட்டேன்”

“சாரா!”

“அட பாசம் பொங்குது போல? கூடிய சீக்கிரம் நாம மாமன் மச்சான் ஆகிடுவோம் கந்தன். அதுனால மச்சான்னே கூப்பிடுங்களேன்.”

“என் மேல இருக்கத அவ கிட்ட காட்டாத சாரா. அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்”

கந்தன் விரல் நீட்டி எச்சரிக்க, சாரா வாய் விட்டு சிரித்தான்.

தொடரும்.

Leave a Reply