சாரா 20
![]()
ரத்தம் சொட்டிய கைகளில் கட்டு போட்டபடி சாவதானமாக காலை நீட்டி அமர்ந்திருந்தான் சாரா. ஒரு காவல்துறை அதிகாரியின் கண் முன்னால், ஒருவனை மயக்க நிலைக்கு அனுப்பி வைத்து விட்டு, எதுவுமே நடக்காதது போல் அவன் அமர்ந்திருந்த விதம், யாரையும் ரசிக்க வைக்கும்.
தோட்டா பாய்ந்து ரத்தம் பெருகி ஓடிய நிலையிலும், அதற்கு மருந்து போடும் போதும் அவன் முகத்தில் சிறு வலி கூட தெரியவில்லை. கையை மருந்து போட கொடுத்து விட்டு, கந்தனிடம் சாவதானமாக பேசிக் கொண்டிருந்தான்.
“உங்க தங்கச்சிய ஒன்னும் பண்ண மாட்டேன்” என்று கூறும் போதே அவன் முகத்தில் ஏளனம் நிரம்பி வழிந்தது.
‘எனக்கு தெரியாதுனு நினைச்சியோ?’ என்ற பார்வையை கந்தனின் மீது நக்கலாக பதித்திருந்தான்.
சாரா தங்கை என்று சொன்னதும், கந்தனே சற்று அதிர்ந்து போனான். இவனுக்கு ராகவியை தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவளை வீட்டிலேயே வைத்திருக்கிறான்.
தன்னுடைய தங்கை என்பதற்காக, பழி வாங்க அவளை எதுவும் செய்துவிடுவானோ? என்ற பயம் அவனுக்குள் சற்று அதிகமாகத்தான் இருந்தது. அதனால் மறுக்காமல் அவன் வாயாலேயே ஒப்புக் கொண்டான். ஆனால் மாமன் மச்சான் என்று சொன்னதை கேட்க சகிக்கவில்லை.
“என் மேல இருக்கத அவ கிட்ட காட்டாத சாரா. அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்” என்று விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய, சாராவிற்கு சிரிப்பு தான் வந்தது.
“இத்தனை நாள் அவள என் கிட்ட இருந்து தூக்க ட்ரை பண்ணீங்களே எஸ்பி நடந்துச்சா?” என்று மீண்டும் கிண்டலாக கேட்டான்.
நடக்கவில்லை தான். நடு இரவில், சாராவின் வீட்டிற்கு அவனே தூக்கிக் கொண்டு சென்று விட்டான் என்று கேள்விப்பட்டு, கந்தன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை தான்.
அவள் யாரென்ற விவரம் தெரிந்தால், சாரா என்ன செய்வான்? என்று யோசித்து பதறியது எல்லாம் அவனுக்கு தான் தெரியும்.
அவளை மீட்கவும் முடியாமல் அணுகவும் முடியாமல் அவன் பட்ட பாடும் அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
“சரி உட்காருங்க எஸ்பி. கப்பல் ரெண்டு நாள் கழிச்சு தான் கரைக்கு போகும். அதுவரைக்கும் என் கெஸ்ட்டா இருங்க. சீக்கிரம் சொந்தமா வேற ஆகப்போறோம்”
“யாருக்கு யாருடா சொந்தம்? ரௌடி உனக்கு போலீஸ் காரன் நான் சொந்தமா?”
சாராவிற்கு இதைக்கேட்டு கோபம் வருவதற்கு பதில் சிரிப்பு தான் வந்தது. ராகவியும் ரௌடி என்று தானே சொல்லி வைத்தாள்.
“அண்ணன் தங்கச்சி இதுல தான் ஒன்னா இருக்கீங்க. என்னை பார்த்தா ரௌடி மாதிரியா தெரியுது?” என்று தன்னை தானே காட்டி கேட்டு வைத்தான்.
இல்லை தான். அடர்சிவப்பு கோடுகள் பெரிதாக போட்டிருந்த வெள்ளை சட்டையும், அதை முழங்கை வரை மடக்கி விட்டுக் கொண்டு அமர்ந்திருந்த தோரணையும், அவனை ரௌடியாக காட்டவே இல்லை. அழகனாகத்தான் காட்டியது.
கையில் போடப்பட்ட கட்டு கூட அவனது கம்பீரத்தை குறைக்கவில்லை. சட்டை முழுவதும் அங்காங்கே இரத்தம் படிந்து இருக்க, ஒரு கையால் அதை கழட்ட ஆரம்பித்தான்.
“இப்படியே என்னை பார்த்தா உங்க தங்கச்சி மயங்கி விழுந்துடுவா இல்ல?” என்று கந்தனிடமே கேட்டு விட்டு, சட்டையை கழட்டி போட்டான்.
வெற்று உடலோடு எழுந்து நின்றவன், “என் கெஸ்ட்டா இருக்கீங்களா எஸ்பி? பதில் சொல்லவே இல்லையே?” என்று கேட்டு வைத்தான்.
“நான் உனக்கு கெஸ்ட் இல்லடா.. எமன்”
“என்ன கந்தன்.. உங்க தங்கச்சியோட வருங்கால புருஷன போய் கொல்ல பார்க்கிறீங்க? இதுனால உங்க தங்கச்சி வருத்தப்பட மாட்டா?”
“அவள நீ கல்யாணமே பண்ணிருந்தாலும், உன்னை கொன்னுட்டு அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கட்டி வைப்பேன்”
கந்தன் கடுப்பாக பேச சாரா உதட்டை வளைத்து, ‘அப்படியா?’ என்பது போல் பார்த்து வைத்தான்.
“மரியாதையா அவள விட்டுரு சாரா. இல்லனா என்ன செய்வேன்னு தெரியாது”
“தெரிஞ்சுக்க தான் ஆசைப்படுறேன் எஸ்பி” என்றவன், “உள்ள போகலாம் வாங்க. குளுருது. அநேகமா மழை வரும்னு நினைக்கிறேன்” என்று சம்பந்தமில்லாமல் பேசி விட்டு உள்ளே நடந்தான்.
கந்தன் சாராவை வெறுப்போடு பார்த்தாலும் எச்சரிக்கையோடு உள்ளே வர, மயங்கிக் கிடந்தவனை தூக்கி வந்து ஓரமாக போட்டு விட்டனர்.
அங்கு போடப்பட்டிருந்த இருக்கையை கந்தனுக்கு காட்டி விட்டு, சாரா அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டான்.
அந்த அறையில் தான் ராகவி இருக்க வேண்டும் என்று கந்தன் புரிந்து கொண்டான்.
சாரா உடலில் இருந்த ரத்த கரைகளை கழுவி விட்டு ராகவியை பார்க்க, அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
சட்டையை போடாமலே அவளருகே வந்து அமர்ந்தான். தூங்கும் போது அமைதியாக இருப்பவளை பார்த்து புன்னகை மலர்ந்தது. அவளது கன்னத்தை வருடியவன், ஒரு பெருமூச்சு விட்டு விட்டு எழுந்து கொண்டான்.
சட்டையை போட்டுக் கொண்டு வெளியே வர, கந்தன் அவனையே பார்த்திருந்தான்.
சட்டை அணிந்ததும் சாராவின் கையிலிருந்த கட்டு மறைந்து போக, பழையபடி மாறி விட்டான். முழுக்கை சட்டையை மடித்து விட்டவன், “உட்காருங்க எஸ்பி. உங்க தங்கச்சி நல்லா தூங்குறா. இப்ப பார்க்க முடியாது” என்றவன் முதலில் சென்று அமர்ந்து கொண்டான்.
“அவள என் கிட்ட விட்டுரு சாரா”
“விட்டா? இங்க இருந்து நீந்தியே கூட்டிட்டு போவீங்களா என்ன? அவளுக்கு நீச்சல் கூட தெரியாதே”
கந்தன் பல்லைக்கடித்தபடி நிற்க, “என்ன சாப்பிடுறீங்க எஸ்பி? பீர் சொல்லவா?” என்று கிண்டலாக கேட்டு வைத்தான்.
கந்தனின் பார்வையில் உஷ்ணம் கூட, “டியூட்டில இருக்கீங்களோ? சரி காபியே சொல்லுவோம்” என்றான்.
“பிரமோத்.. ரெண்டு காபி போடு. ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸ் எங்க?”
பிரமோத் உடனே வந்து பெட்டியை கொடுத்து விட்டு, காபி கலக்கச் சென்று விட்டான்.
கந்தனை கண்டு கொள்ளாமல், முதலுதவி பெட்டிக்குள் இருந்து ஒரு மாத்திரையை தேடி எடுத்து விழுங்கிக் கொண்டான் சாரா.
கந்தன் அந்த மாத்திரை எடுத்து பெயரை படித்தான். வலி நிவாரணி மருந்து. வலிக்காதது போல் அவன் நடந்து கொண்டாலும், தோட்டா பாய்ந்து சென்ற இடம் வலியை கொடுக்காமல் போகுமா என்ன?
அவன் படித்ததை பற்றிக் கவலை இல்லாமல், சாரா அந்த மாத்திரையை வாங்கி பெட்டியில் போட்டு பூட்டி வைத்தான்.
கந்தன் நாற்காலியில் அமர்ந்தபடி சுற்றியும் பார்வையை ஓட்ட ஆரம்பிக்க, “நல்லா இருக்கா?” என்று கேட்டு வைத்தான்.
கந்தன் அவன் பக்கம் திரும்பிப்பார்க்க, “நிறைய செலவு பண்ணி வாங்குனேன். நல்லா இருக்கா?” என்று கேட்டான்.
கந்தன் பதில் சொல்லாமல் திரும்பிக் கொள்ள, காபி வந்து விட்டது.
“எடுத்துக்கோங்க எஸ்பி” என்றவன் ஒரு கப்பை எடுத்துக் கொள்ள, கந்தன் அந்த காபியையும் சாராவையும் மாறி மாறி பார்த்து வைத்தான்.
“பால் காபி இல்ல. பவுடர் தான். ஏன் விசம் வைச்சுடுவேன்னு பயமா?”
“நீ எப்போ இருந்து இவ்வளவு பேச ஆரம்பிச்ச?” என்று கேட்டே விட்டான் கந்தன்.
இந்த கேள்வியில் சாரா வாய் விட்டு சிரித்தான்.
“சகவாச தோசம். உங்க தங்கச்சி சொல்லிக் கொடுத்தது தான்”
“அவள விட மாட்ட நீ?”
“ஏன் விடனும்?” என்று கேட்டவன், காபியை உறிஞ்சி விட்டு சாய்ந்து அமர்ந்தான்.
இரத்தம் அதிகமாக வெளியேறி இருந்ததில், மிகவும் களைத்துப்போயிருந்தான். ஆனாலும் கம்பீரம் குறையாமல் கந்தனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”
“காதல்?” என்று கேட்டவனை கழுத்தை நெறித்துக் கொல்லும் வெறி தான் வந்தது கந்தனுக்கு.
“அவ இதுக்கெல்லாம் மசிய மாட்டா”
ஆமோதிப்பாய் தலையசைத்தவன், “அதான் நேரா கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டேன்” என்றான்.
“கல்யாணம்? நீ?”
“ஏன் மேன்? நானும் மனுசன் தான். கல்யாணம் பண்ண மாட்டனா?”
“நீ என்ன வேணா பண்ணு. ராகவிய விட்டுரு”
“நோ வே. ராகவி இந்த சாராவுக்கு தான். அத எஸ்பி கந்தன் மட்டும் இல்ல, எவன் வந்தாலும் தடுக்க முடியாது”
“சாரா.. அவ சின்ன பொண்ணு” என்று பல்லைக்கடித்துக் கொண்டு பேசிய கந்தனை அலட்சியமாக பார்த்தான் சாரா.
“கல்யாண வயசாகிடுச்சுல? எனக்கு அதுவே போதும்”
“நீ யாருனு தெரிஞ்சா அவ உன்னை ஏத்துக்க மாட்டா”
ஒரு நொடி ஆச்சரியமாக அவன் மீது பார்வையை பதித்தவன், “நான் யாருனு உங்க தங்கச்சிக்கு தெரியாதா? இது புதுக்கதையா இருக்கே” என்றான்.
கந்தன் கேள்வியாக பார்க்க, “என்னை விட என்னை பத்தி அவளுக்கு நல்லா தெரிஞ்சுருக்கு எஸ்பி..” என்றான்.
அதே நேரம் அவள் சொன்ன சுறா கதையை நினைத்து சிரிப்பும் வந்தது. அவனது மலர்ந்த முகத்தையும், சிரிப்பை அடக்கும் உதடுகளையும் கந்தனே சற்று ஆச்சரியமாகத்தான் பார்த்தான். எப்போதும் சாரா இவ்வளவு இயல்பாய் இருப்பவனே இல்லை.
ஏன்? என்ற கேள்விக்கு ‘ராகவி..’ என்ற பதில் உடனே கிடைத்தது.
“காபி ஆறுது பாருங்க” என்ற சாரா தன்னுடையதை குடிக்க ஆரம்பித்தான்.
கந்தன் தன்னுடைய காபியை தொடாமல் இருக்க, “ப்ச்ச்..” என்ற சாரா, அவன் கப்பிலிருந்த பாதியை தனக்கு ஊற்றி மொத்தமாக குடித்து முடித்தான்.
“இப்ப நம்பிக்கை வந்துடுச்சா குடிங்க. பேச தெம்பு வேணும்” என்று கூற, அவனை முறைத்தாலும் கந்தன் குடித்தான்.
சாய்ந்து சில நிமிடங்கள் அமர்ந்திருந்த சாராவை, கந்தனின் கண்கள் அளவெடுத்தபடி தான் இருந்தது.
“போட்ல முதல்ல பிரமோத் இல்லையே?”
கந்தன் சந்தேகத்தை கேட்க, சாராவின் இதழ்கள் விரிந்தது.
“பிரமோத் இல்லாம நான் இவ்வளவு தூரம் தனியாவே வருவேன்னு நினைச்சது உங்க மிஸ்டேக் எஸ்பி. அவன் நான் எங்க போனாலும் இருப்பான்”
கப்பலில் அவர்கள் ஏறும் போது பிரமோத் இல்லை தான். திடீரென எப்படி முளைத்தான்? என்பது கந்தனுக்கு புரியாத புதிராகவே இருந்தது.
பிரமோத்.. சாராவை விட உயரமானவன். உடலும் அதற்கேற்றார் போல் இருக்கும். துப்பாக்கி சுடுவதில் வல்லவன். சாராவின் நிழலை போன்றவன். அவனிருக்கும் வரை சாரா நெருங்கவும் யோசிக்க வேண்டும்.
பிரமோத் இருக்கும் போது, காசியோ மற்ற யாருமே சாராவிற்கு தேவையில்லை. பிரமோத் அதிகம் வாயைத்திறந்து பேச மாட்டான். அவனுக்கு சாரா என்றால் உயிர். அவனை காக்க பல முறை மரணவாயிலுக்கு சென்று திரும்பியிருக்கிறான்.
சாராவிடம் அவனுடைய பக்திக்கான காரணம் யாருக்குமே தெரியாது. சாராவும் பிரமோத்தையும் தவிர.
“போட்ட திருப்ப சொல்லு. நான் கரைக்கு போகனும்”
“என்ன அவசரம் எஸ்பி?”
“இங்க இருந்து என்ன செய்ய சொல்லுற?”
“உங்க தங்கச்சிய பாருங்க”
“தேவையில்ல”
“ஓஓ அவளுக்கு நீங்க யாருனே தெரியாதுல..?”
கந்தன் அவனை முறைக்க, “ஏன் எஸ்பி என் மேல இவ்வளவு கோபப்படுறீங்க?” என்று கேட்டான்.
“நீ ரௌடி. அக்யூஸ்ட். நான் போலீஸ்காரன். உன் மேல எனக்கு பாசமா வரும்?”
“ரௌடி? கொலை பண்ணுற எல்லாரும் ரௌடி தான எஸ்பி? அப்படினா நீங்களும் ரௌடி தான்”
“நான் பண்ணுறது என்கவுண்டர்”
“பார்ரா! அக்யூஸ்ட்ட பண்ணா தான் அது என்கவுண்டர். மத்தவங்கள கரெண்ட் சாக் கொடுத்து கொல்லுறது என்கவுண்ட்ர் லிஸ்ட்ல வராது” என்று கையை விரித்தான்.
கந்தனின் முகம் திடீரென உணர்ச்சியை தொலைத்து இறுக ஆரம்பித்தது. பிரச்சனையின் ஆரம்பம் அவனுக்கு பிடிபட்டு விட, சாரா அதை உணர்ந்து கொண்டு புன்னகைத்தான்.
“நான் நல்லது நினைச்சு தான் ராகவிய என் வீட்டுக்கு கூட்டிட்டுப்போனேன் எஸ்பி. அவ சரியானதும் அனுப்பி வச்சுருப்பேன். ஆனா.. இடையில நடந்த டுவிஸ்ட்.. ப்பா…! அண்ணன்னா இது அண்ணன்…! செம்ம அண்ணன் நீங்க!” என்று கூறி இரண்டு விரலால் சல்யூட் வைத்தான்.
கந்தன் இறுகிப்போய் அமர்ந்திருக்க, “அத நீங்க பண்ணலனா இந்நேரம் இந்த போட்ல நான் செத்து போய் கிடந்துருப்பேன் இல்ல?” என்று கேட்டான்.
கந்தன் அழுந்த கண்ணை மூடித்திறந்தான்.
“எப்படித்தெரியும்?” என்று கேட்க, “சொன்னா உங்க தங்கச்சிய கட்டி வைப்பீங்களா?” என்று பேரம் பேசினான் சாரா.
கந்தன் அவனை முறைக்க, சாராவிற்கு சிரிப்பாய் இருந்தது.
“மாட்டீங்களா? சரி நேரா கந்தர்வ மணம் பண்ணிக்க வேண்டியது தான்”
“ஹேய்..!” என்ற அதட்டலோடு கந்தன் எழுந்து விட, “ஈசி எஸ்பி ஈசி. அண்ணனா வந்து ஆசிர்வாதம் பண்ணா கல்யாணம். இல்லனா லிவ் இன்னு சொல்லுறேன். இது டீசண்ட்டா இருக்குல?” என்று கேட்டு வைத்தான்.
“என்ன தான்டா வேணும் உனக்கு?” என்று பொறுமை இழந்து கந்தன் கேட்க, “எனக்கு வேண்டியது எல்லாம் தன்னால நடந்துட்டு இருக்கு எஸ்பி” என்றான்.
“வாட்?”
“யூ ஆர் ட்ராப்ட்”
கையை விரித்து அழகாய் அவன் கூற, கந்தன் அதிர்ந்து போனான்.
தொடரும்.
