Episode 17

Loading

ஆறு வயது சுலோக்ஷனா சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தாள். பின்னால் நித்தின் நடந்து வந்து கொண்டிருந்தான். சைக்கிள் ஓட்ட பழகி கொண்டிருந்தவள், “அப்பா பின்னாடி வரீங்கள்ள?” என்று சத்தமாக கேட்க, “வரேன் மா ” என்று பதிலளித்தார் நித்தின்.

“அப்பா.. வரீங்கள்ள?” என்று சிறிது இடைவேளை விட்டு கேட்க, நித்தினிடமிருந்து பதில் வரவில்லை. மெல்லிய பயம் சூழ்ந்து கொண்டது. கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்தவள், “அப்பா…” என்று கத்தியபடி திரும்பிப் பார்த்தாள். நித்தின் ஓடி வந்து கொண்டிருந்தான். அவனை பார்த்து விட்டு முன்னால் திரும்ப, மரத்தில் சைக்கிள் மோதியது.

கீழே விழாமல் அவள் தன்னை தானே சமாளித்து கொண்டிருக்க, நித்தின் வந்து அவளை தூக்கிக் கொண்டான். சைக்கிள் மட்டும் தான் கீழே விழுந்ததது. தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டவள் கண்ணை மூடிக் கொண்டாள்.

பட்டென கண்ணை திறக்க, மெத்தையில் படுத்து இருந்தாள். அத்தனையும் கனவு. ஆனால் நிஜமாக நடந்த விசயம். எழுந்து அமர்ந்தவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. சிறு வயதில் நடந்தவை அவளுக்கு கனவாக வந்தால், நிச்சயமாக எதோ விபரீதம் காத்துக் கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.

அன்று அப்படி விழுந்தபின் சுலோக்ஷனா சைக்கிளை கண்டு பயந்து பக்கத்திலேயே போக மாட்டாள். நித்தின் தான் அவளது பயத்தை போக்கி கற்றுக் கொடுத்தான்.

பள்ளியில் படிக்கும் போது இப்படித் தான் கனவு வந்தது. அன்று விளையாட்டு மைதத்தில் விளையாடிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென வியர்த்து கொட்டியது. மனம் தந்தையை தேட, “அப்பா…” என்று கத்தி விட்டாள்.

பக்கத்திலிருந்த மாணவிகள் அவளுக்கு என்னவோ ஏதோவென்று அவளிடம் ஓடி விட அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில், சுவரை உடைத்துக் கொண்டு ஒருலாரி வந்து நின்றது.

ப்ரேக் பிடிக்காமல் பள்ளி சுவற்றில் மோதி உள்ளே வந்திருந்தது. அங்கு விளையாடிய குழந்தைகள் எல்லாம் சுலோக்ஷனா ஓடிய திசைக்கு சென்றதால், மயிரிழையில் தப்பித்து விட்டனர்.

அதன் பிறகு அந்த கனவு என்றாலே அவளுக்கு பயம் தான். கல்லூரியில் மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்று இருந்தனர். அங்கு இருக்கும் போது இந்த கனவு வந்து முழித்து விட்டாள்.

மறுநாள் மலையின் மீது மொத்த மாணவர்களும் நிற்க, அவளது கண் முன் அந்த கனவு வந்து வந்து போனது. கனவில் கத்துவதாக நினைத்து நிஜமாகவே கத்தி விட்டாள். காதை மூடிக் கொண்டு அவள் கத்தியதில், பதறிப்போன நண்பர்கள் அவளை அழைத்துக் கொண்டு பேருந்துக்கு வந்து விட்டனர்.

மொத்த மாணவர்களும் அவர்களின் பின்னால் வந்து விட, அவர்கள் முதலில் நின்று இருந்த இடம் பெரிய சத்தத்துடன் சரிந்து விழுந்தது. அதை பார்த்த எல்லோரும் அதிர்ந்து நிற்க, சுலோக்ஷனா கண்ணை மூடி தோழியை அணைத்துக் கொண்டாள்.

அதன் பின்னும் இரண்டு முறை கனவு வந்து இருக்கிறது. ஆனால் அடுத்த நாள் முழுவதும் நித்தினின் பாதுகாப்பில் இருப்பாள். எல்லா வேலைகளையும் செய்வாள். எங்கு வேண்டுமானாலும் செல்வாள். பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தபடியே!

அதே கனவு இப்போது வரும் போது நடுங்காமல் எப்படி இருப்பாள்? எழுந்து அமர்ந்தவளின் இதயம் தாறுமாறாக துடித்தது. இடது பக்க மார்பில் கைவைத்து அழுத்திக் கொண்டாள். இதயம் சமன்பட மறுத்தது. மூச்சுக்களை வேகமாக இழுத்து விட்டாள்.

அவளது அசைவில் கண்விழித்த செழியன், அமர்ந்து இருப்பதை பார்த்து விட்டு விளக்கை போட்டான்.

“என்ன சனா?” என்று கேட்க, அவளிடம் பதில் இல்லை.

உருண்டு அவள் பக்கத்தில் வந்தவன், எழுந்து அமர்ந்து கொண்டான்.

“என்ன மா எதுவும் கனவு கண்டியா?” என்று கேட்க, ஆம் என தலையசைத்தாள்.

“கெட்ட கனவா?” என்று கேட்க, அமைதியாக இருந்தாள்.

எழுந்து சென்றவன் தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தான். வாங்கி குடித்து விட்டு அமைதியாகவே இருந்தாள். இந்த மாதிரி கனவு வரும் நேரம் அன்னையிடம் ஓடிச்சென்று விடுவாள். ஜானவியை அணைத்துக் கொண்டு உறங்கினால் தான் தூக்கம் வரும்.

இப்போது யாரை அணைப்பாள்? நினைக்கும் போதே இரு வலிய கரம் அவளை அணைத்துக் கொண்டது. அவளது உடலில் இருந்த வியர்வையை பார்த்த செழியன் ஏசியை கூட்டி வைத்தான். அவள் மேல் போர்த்தி இருந்த போர்வையை தள்ளி விட்டு விட்டு, பக்கத்தில் வந்து அமர்ந்து வாரி அணைத்துக் கொண்டான்.

அந்த அணைப்பு அவளுக்கும் தேவைபட்டதோ? மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள். முதுகை வருடி, தலையை வருடி அவளை தூங்க வைக்க முயற்சித்து வெற்றியும் பெற்றான். அவளது சீரான மூச்சு தூங்கி விட்டதை உறுதி படுத்தியது.

விளக்கை அணைத்தவன், அவளை அணைத்துக் கொண்டே உறங்கி விட்டான். அந்த அணைப்பில் நிச்சயமாக காமம் இல்லை. ஒரு அன்னையின் அன்பு மட்டுமே.

நன்றாக தூங்கி காலையில் எழுந்தவள் தெளிந்து இருந்தாள். அறையில் செழியன் இல்லை. எழுந்தவள் குளித்து முடித்து அலுவலகம் கிளம்பினாள். அவளது பழச்சாறை வேலை செய்பவர் வந்து கொடுக்க அதை வாங்கி குடித்தவள், ‘இவன் எங்க போனான்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

சுலோக்ஷனா கைசெயினை மாட்டிக்கொண்டே திரும்ப, செழியன் அறைக்குள் நுழைந்தான். அவள் முகத்தை பார்த்தவன் இரவின் தாக்கம் எதுவும் இருக்கிறதா? என்று ஆராய்ந்தான். இல்லை என்றதும் சிறு நிம்மதி ஏற்பட புன்னகையுடன், “குட் மார்னிங்” என்றான்.

“குட் மார்னிங்” என்ற சுலோக்ஷனா பதிலுக்கு புன்னகைத்தாள்.

“இன்னைக்கு எதுவும் முக்கியமான வேலை இருக்கா?” என்று செழியன் வினவ, “ஏன்?” என்று கேட்டவள் கைகடிகாரத்தை எடுத்தாள்.

“இன்னைககு நான் ஃப்ரி. அதான் உனக்கு வேலை இல்லனா மாமா வீட்டுக்கு போகலாம்னு நினைச்சேன்”

“அப்பா கிட்டயா?” என்று கேட்க, ஆம் என்று தலையசைத்தான்.

“ஒரு முக்கியமான வேலை இருக்கு. முடிச்சுட்டு ஈவ்னிங் போகலாமா?”

“ம்ம்.. உன் விருப்பம். நான் வீட்டுல தான் இருப்பேன்” என்றவன், மெத்தையை சரிசெய்து அதில் அமர்ந்து கொண்டான்.

“உங்க ஃபோன கொடுங்க” என்று கேட்டவள் அதை வாங்கி எதோ செய்தாள்.

“இதுல என் ஜி.பி.எஸ் அ கனெக்ட் பண்ணி இருக்கேன். நார்மலா வீட்டுல அப்பா, நந்து, மாமா கிட்ட என் ஜி.பி.எஸ் இருக்கும். மொபைல் ஜி.பி.எஸ் கிடையாது. இது வேற. பிரச்சனைனு வந்தா மட்டும் தான் ஆன் பண்ணுவேன்.” என்று கூறி கைபேசியை திருப்பிக் கொடுத்தாள்.

அதை வாங்கியவன், “இன்னைக்கு ரிஸ்க்கா எதுவும் செய்ய போறியா என்ன?” என்று கேட்டான்.

“ஆமா. ஒருத்தன கடத்தி மிரட்ட போறேன்” என்று சர்வசாதரணமாக கூற, செழியன் மெத்தையிலிருந்து குதித்து இறங்கினான்.

“மை  காட்! ரிப்போர்ட்டர கட்டி வைக்குறேன்னு தான சொன்னாங்க? இதென்ன ரவுடி மாதிரி கடத்த போறேன்னு சொல்லிட்டு இருக்கா?” என்று போலியாக அலறினான். ட்ரஸ்ஸிங் டேபிளில் இருந்த சீப்பை எடுத்து அவன் மீது எறிந்தாள் நிவி.

செழியன் அதை குதித்து பிடித்து விட, “மண்ட பத்தரம்” என்று ஒரு விரலை நீட்டி மிரட்டினாள். சீப்பை தூக்கி எறிந்தவன், “நிச்சயமா இத செஞ்சு தான் ஆகனுமா?” என்று கேட்டான் உண்மையான அக்கறையுடன். மேலும் கீழும் தலையசைக்க, அவள் முகத்தை பற்றியவன் நெற்றியில் முத்தமிட்டு, “பீ கேர் ஃபுல்” என்றான்.

கண்ணை மூடி அவனது முத்தத்தை ஏற்றுக் கொண்டவளின் மனதில் முழு தைரியமும் திரும்பி இருந்தது. அவளுக்கே அது ஆச்சரியமாக தான் இருந்தது.

வீட்டை விட்டு கிளம்பியவள் காதில் புளூ டூத்தை மாட்டிக் கொண்டாள். நேராக அலுவலகம் சென்றவள், பாஸ்கரை விட்டு விட்டு மாதவனை மட்டும் அழைத்தாள்.

“இன்னைக்கு நாம தீனாவோட ரைட் ஹேண்ட்… பேரு என்ன? ஹா.. குமரன் அவன பார்க்க போறோம். நீங்க நான் மட்டும் தான். மணி பாஸ்கர் ரெண்டு பேரும் இங்கயே இருக்கட்டும்” என்று கூறினாள்.

எதிரியை சந்திக்க துரோகியை அழைத்து செல்கிறாள். முழுதாக திரும்பி வருவாளா?

*.*.*.*.*.*.*.*.

விரேந்திரன் மீட்டிங்கில் அமர்ந்து இருந்தான். அவனை சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் ஆராய்ச்சியாளர்கள். புதிதாக ஒரு வாசனை திரவியத்தை கண்டு பிடிக்க சொல்லி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தான்.

அவர்களும் பல மாதங்களாக உழைப்பை கொட்டி கண்டு பிடித்து விட்டனர். கிட்ட தட்ட நாற்பத்தியெட்டு மணி நேரம் வாசனை நீடித்து இருக்கும் திரவியம். அதற்கான ஃபார்முலாவை அவர்கள் விரேந்திரனிடம் ஒப்படைத்தனர்.

அவர்களது தயாரிப்பு நிச்சயம் உலக தரம் வாய்ந்தது. கண்டு பிடித்தவர்களை பாராட்டி அவர்களுக்கு சன்மானம் கொடுத்தான். அந்த ஃபார்முலாவை ரகசியமாக கம்பெனியின் பெயரில் பதிவு செய்தான்.

சுலோக்ஷனா செய்ய சொன்ன வேலையை இனி ஆரம்பித்து விடுவான். இப்போது கண்டு பிடித்த இந்த ஃபார்முலா தினகரனது கைக்கு கிடைக்க வேண்டும். அதை வைத்து அவன் வேலையை ஆரம்பிக்கும் போது விரேந்திரன் அவன் மீது வழக்கு தொடுக்க வேண்டும். இது தான் சுலோக்ஷனா கேட்ட உதவி.

இவன் பல மாதங்களாக முயற்சித்து கொண்டிருந்த வேலையும் சரியாக இந்த நேரம் முடிந்தது இன்னும் வசதியாகிப் போனது. அடுத்த வேலை விரேந்திரனின் கம்பெனியில் இருக்கும் துரோகியை கண்டு பிடிக்க வேண்டும். நிச்சயம் இருப்பான் என்பதில் சுலோக்ஷனாவிற்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

“தேடி பாருங்க மாமா. துரோகி ஒருத்தன் இருப்பான். இது வரை நீங்க எல்லாத்தையும் பாதுகாப்பா வச்சதால அது உங்களுக்கு தெரியாம இருக்கலாம். ஒரு தடவ தூண்டில் போடுங்க” என்றாள். அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பதால் விரேந்திரன் ஒப்புக் கொண்டான்.

இந்த வியூகத்தில் தினகரன் மாட்டுவானோ சுலோக்ஷனாவே தவறி உள்ளே விழுவாளோ?

தொலைவான்.

Leave a Reply