சாரா 23

Loading

கந்தன் என்னவோ நடப்பது நடந்தே தீரும் என்ற எண்ணத்தில் இருக்க, சாரா அவனை பற்றி கவலை கொள்ளாமல், ராகவியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

கந்தனை வேறு அவளுக்கு அறிமுகம் செய்து வைக்க, ராகவி அவனுக்கு வணக்கம் வைத்ததோடு நிறுத்திக் கொண்டாள்.

“இவன் பிரமோத்” என்று கூற அவனுக்கும் ஒரு, “ஹலோ” சொன்னவள், “ஏகாம்பரமும் நம்ம கூட வந்துருக்கலாம்” என்றாள்.

“ஏன் ரெண்டு பேரும் பேசி இந்த போட்ல ஓட்ட விழுறதுக்கா?”

“ஹலோ நாங்க ஒன்னும் அவ்வளவு எல்லாம் பேச மாட்டோம். ஆமா ஏகாம்பரம் ஊருக்கு போயிருப்பாரா?”

“போயிருப்பான்”

“போன் பண்ணி பேசலாமா?”

“நடுக்கடல்ல உங்க அண்ணனா வந்து டவர் வச்சுருக்கான்?” என்று சாரா கேட்டு விட, கந்தன் வேகமாக திரும்பி முறைத்து வைத்தான்.

“இல்லாத அண்ணன் எங்க இருந்து வந்து டவர் வைக்க?”

“இவரு கூட உனக்கு அண்ணன் மாதிரி தான் கவி” என்று கந்தனை காட்டி சொல்லி வைக்க, “எனக்கு அண்ணன் எல்லாம் வேணாம்” என்றாள் ராகவி.

“ஏன்?”

“இருந்த சொந்தமெல்லாம் போய் சேர்ந்துருச்சு. புதுசா ஒரு அண்ணன் முளைச்சுட்டாலும்? வேணும்னா ஏகாம்பரத்த எனக்கு அண்ணன்னா வச்சுக்கலாம். ஜாலியா இருக்கும்”

‘அடிப்பாவி! ஒரிஜினலா ஒருத்தன் இருக்கான். அவன் வேணாமாம். நாலு நாள் பழகுனவன் அண்ணனாம்’ என்று நினைத்த சாரா கந்தனை பார்த்தான்.

அவன் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் இல்லை. ராகவிக்கு, காவல்துறையை சேர்ந்தவன் என்பதால் அவனிடமிருந்து தள்ளியிருப்பதே நல்லது, என்று தோன்றியது.

அதனால் கந்தனை பற்றிக் கவலைப்படாமல், அடுத்து என்ன சாப்பிடலாம்? என்று பார்க்கச் சென்று விட்டாள்.

சாரா தன் கைபேசியை ஒரு முறை எடுத்துப் பார்த்தான். இன்னும் அவனுக்கு வேண்டிய செய்தி வந்து சேரவில்லை. வந்து விட்டால் இந்த பயணத்தை நிறுத்திக் கொள்ளலாம்.

படகு இலக்கில்லாமல் சென்று கொண்டிருப்பது போல் தோன்றினாலும், குறிப்பிட்ட இடத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தது.

அதனால் சாரா தன் வேலையை பார்க்க, பிரமோத் சமைக்கும் வேலையை செய்தான்.

ராகவி சராவின் அருகே வந்து அவனது கையை சுரண்டினாள்.

சாரா நிமிர்ந்து பார்க்க, “அவரும் போலீஸா?” என்று பிரமோத்தை காட்டிக் கேட்டாள்.

“இல்ல. இவரு மட்டும் தான் போலீஸ்” என்று கந்தனை கை காட்டினான்.

“அப்ப அவரு யாரு?”

“லாயர்”

“லாயரா? பாஸ் நீங்க பெரிய ஆளு பாஸ்”

“இப்ப தான் தெரியுதா?”

“ஆமா பாஸ். ஒரு போலீஸ் ஒரு லாயர்.. அப்ப ஜட்ஜ் யாரு?”

“அது நான் தான்”

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே பிரமோத் வந்து விட்டான்.

“சிவா இருக்குற இடம் தெரிஞ்சுடுச்சு.” என்று சொன்னதும், சட்டென எழுந்து நின்றான் சாரா.

“யாரெல்லாம் போறது?”

“காசி இப்ப தான் இன்ஃபார்ம் பண்ணான். உங்களுக்கு மெஸேஜ் போட்டானாமே.”

சாரா தன் கைபேசியை எடுத்துப்பார்த்தான். அவன் நேரத்திற்கு அது சதி தான் செய்தது.

“உன் போன கொடு” என்று வாங்கியவன் அங்கிருந்து நகர்ந்து விட, “யாரு சிவா? புது பேரா இருக்கே?” என்று ராகவி புரியாமல் பார்த்தாள்.

“சிவா சாணக்கியனோட தம்பி” என்று கந்தன் பதில் சொன்னான்.

“ஓஓ இவருக்கு தம்பி எல்லாம் இருக்கா?”

“ஏன் உனக்கு தெரியாதா?”

“தெரியாதே.”

“சாரா பத்தி எதுவுமே தெரியாது போல?”

“அப்படி எல்லாம் சொல்ல முடியாது. ஆனா அவர் குடும்பத்த பத்தி எதுவும் தெரியாது. நீங்க அவருக்கு எப்படி சொந்தம்?”

“அப்படினு சாரா சொன்னானா?”

“ம்ம்”

“சொந்தமில்ல. தெரிஞ்சவர்னு வேணா சொல்லலாம்”

ராகவி தலையாட்டி விட்டு சாரா சென்ற திசையை பார்க்க, அவன் வெற்றிப்புன்னகையுடன் திரும்பி வந்தான்.

அவனது முகத்தை பார்த்த ராகவியின் முகமும் மலர, அதை கவனித்த கந்தனுக்கு விசயம் கைமீறி போவது போல் இருந்தது.

“கவி.. கொஞ்ச நேரத்துல ஒரு இடத்துக்கு போறோம். அங்க சுறாவ காட்டுறேன்”

“ஐ! நிஜம்மாவா?”

“எஸ்.”

அவள் துள்ளலை பார்த்து புன்னகைத்தவன், கந்தனை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியே செல்ல, கந்தனும் பின்னால் சென்றான்.

“உங்க ஆளுங்க இப்ப என் கையில எஸ்பி” என்றதும் கந்தன் பெரிதாக அதிரவில்லை.

இதை எதிர்பார்த்திருந்ததால் இறுகிய முகடத்துடன் நின்றான்.

“ஏசினா? பெரிய இவளா? என் தம்பிய தூக்கியிருக்கா. வச்சுருக்கேன் அவளுக்கு”

“மூணு வருசமா உன் இடத்துல ஏசிபி இருக்கும் போது உன்னால எதாவது பண்ண முடிஞ்சதா? இப்ப பேசுற?”

“அங்க தான் விட்டுட்டேன் எஸ்பி. அதுல தான் சிவா மேலயே கை வச்சுட்டா”

சாரா கோபத்தை அடக்கிய குரலில் பேச, கந்தன் பெருமூச்சு விட்டான்.

“நாலு மாசமா கூடவே இருந்து எல்லாத்தையும் அழிச்சுட்டு இருந்துருக்கா. இனி நான் யாருனு காட்ட வேணாம்? காட்டுறேன்” என்று சூளுரைத்தவன், அதன் பிறகு படகு கரைக்கு செல்லும் வரை எதுவும் பேசவில்லை.

சாரா இங்கே கோபமாக பேசிக் கொண்டிருக்க, அங்கே அனுபமா கமிஷ்னரிடம் விசயத்தை விளக்கி இருந்தாள்.

“எஸ்பி ஏன் இப்படி பண்ணுறாருனு தெரியல” என்று அவள் கோபமாக பேச, கமிஷ்னர் பொன்வண்ணன் அனுபமாவை ஒரு நொடி பார்த்து விட்டு, “எங்கயோ தப்பா இருக்கு அனுபமா” என்றார்.

“புரியல சார்”

“இல்ல.. எதுவோ தப்பா படுது. சாரா ரொம்ப அமைதியா இருக்கான். சிவாவ கடத்திட்டாங்கனு தெரிஞ்சப்புறம் அவன் இவ்வளவு அமைதியா இருக்கான்னா.. எங்கயோ எதையோ விட்டோம்”

அவர் சந்தேகத்துடனே பேசி விட்டு, “சிவராஜ் இருக்க இடத்த மாத்துங்க” என்றார்.

“சார் உடனே பண்ணா சந்தேகம் வந்துடாதா?”

“இல்ல சாரா எதையோ ஸ்மெல் பண்ணியிருக்கான். இல்லனா இவ்வளவு சைலண்ட்டா இருக்கவன் இல்ல”

“ஆனா இப்ப இடத்தை மாத்துனா நாமலே நம்மல காட்டிக் கொடுத்த மாதிரி ஆகிடும்”

“மாத்தாம இருக்கதாலயும் பிரச்சனை வரலாம். இந்நேரம் சிவராஜ் இருக்க இடம் அவனுக்கு தெரிஞ்சுருக்கும்னு தோணுது”

பேசிக் கொண்டிருக்கும் போதே, அனுபமாவின் கைபேசியில் அலாரம் அடித்தது.

சிவாவை வைத்திருக்கும் வீட்டில் உள்ள பூட்டின் அலாரம் அது. யாரோ உள்ளே நுழைந்திருப்பது பற்றி விவரம் வர, அனுபமா அதிர்ந்தாள்.

“சார்.. யாரோ சிவராஜ் இருக்க இடத்துல நுழைஞ்சுருக்காங்க” என்று பதட்டத்தோடு சொன்னவள், குருவை அழைக்க அவனுக்கு அழைப்பு செல்லவில்லை.

நிரூபனை அழைத்து பேசியபடி வேகமாக வெளியே ஓடினாள்.

காரை எடுத்துக் கொண்டு அவள் கிளம்பும் அதே நேரம், சிவா இருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

எழுதிக் கொண்டிருந்த சிவா, கதவு உடையும் சத்தம் கேட்டு எழுந்து நின்றான்.

கதவை உடைத்துக் கொண்டு காசியும் ஏகாம்பரமும் உள்ளே வர, சிவா அவர்களை ஆச்சரியமாக பார்த்து விட்டு பிறகு புன்னகைத்தான்.

“சாரி சிவா. ரொம்ப லேட் ஆகிடுச்சு” என்றதற்கு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தவன், “இதெல்லாம் எடுத்துக்கோங்க. கிளம்பலாம்” என்றான்.

அங்கிருந்த அத்தனை நோட்டுகளையும் ஏன்? எதற்கு? என்ற கேள்வியில்லாமல் இருவருமே எடுத்துக் கொள்ள, சிவா முதலில் வெளியேறினான்.

காசியும் ஏகாம்பரமும் வந்து சேர, கார் கதவை திறந்து சிவாவே ஓட்டுவதற்காக ஏறிக் கொண்டான்.

மூவரும் அங்கிருந்து சென்று பத்து நிமிடங்கள் கழித்து தான், நிரூபன் அடித்துப்பிடித்து வந்து சேர்ந்தான். அதற்கு பிறகே அனுபமா வந்தாள்.

சிவா இருந்த அறை காலியாக காட்சி அளிக்க, அனுபமா தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.

அத்தனை மாத போராட்டமும் வீண் என்று தோன்ற, உணர்ச்சி வசத்தில் கண் கூட கலங்கி விட்டது. நிரூபனுக்கும் அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.

“செஞ்சுட்டான். எத செய்வான்னு நினைச்சேனோ அத சத்தமில்லாம முடிச்சுட்டான்” என்ற அனுபமாவிற்கு உலகமே வெறுத்துப்போனது.

*.*.*.*.*.*.*.*.

சிவா காப்பற்றப்பட்ட செய்தி வந்து சேரும் போது, படகை விட்டு ஒரு தனித்தீவில் இறங்கி இருந்தனர் சாராவும் ராகவியும்

ராகவி அந்த தீவை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க, கந்தன் சாராவை தான் சத்தமில்லாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.

சாராவோ கைபேசியை கவனித்து செய்தி அனுப்பி விட்டு, ஒன்றுமே நடக்காதது போல் ராகவியை அழைத்துக் கொண்டு சென்றான். கந்தன் படகிலேயே நிறுத்தப்பட்டான். அதை விட்டு இறங்க அவனுக்கு அனுமதி இல்லை. பிரமோத் அவனுக்கு துணையாக(?) இருக்க, இருவரும் கிளம்பி விட்டனர்.

சற்று உள்ளே சென்றதும் அந்த தீவை நன்றாக பார்த்தவள், “வாவ்! பாஸ் செம்மையா இருக்கு” என்று வாயைப்பிளந்தாள் ராகவி.

“இங்க எனக்கு ஒரு ஹோட்டல் இருக்கு”

“ஹோட்டலா? சாப்பிட போறோமா?”

“அத தவிர வேற எதுவும் தோனாதா? இது தங்குற ஹோட்டல்”

“இதுக்குள்ள எப்படி பாஸ் கட்டுனீங்க?”

“கல்லு சிமெண்ட் வச்சு தான்”

“பாஸ்”

“பேசாம வா. சுறாவ பார்க்கனுமா? வேணாமா?”

“பார்க்கனும். அந்த ஹோட்டல்லயா இருக்கு?”

“ஆமா.”

சற்று தூரம் சென்றதுமே, ஒரு கார் வந்து அவர்களை அழைத்துச் சென்றது.

ராகவி குதூகலமாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.

“நான் கூட சுறா எல்லாம் இல்லனு நினைச்சுட்டேன் தெரியுமா?”

“இல்லனு நினைச்சியா?”

“ஆமா ஏகாம்பரம் நான் சுறாவ பத்தி பேசுனாலே சிரிச்சாரா.. ஒரு வேளை அது புரளியா இருக்குமோ? சுறா எல்லாம் இல்லையோனு நினைச்சேன்”

“இருக்கு. வந்து பாரு”

கார் நேராக சென்று ஹோட்டலில் நிற்க, அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

முகப்பு பிரம்மாண்டமாக இருந்த போதும், அறைகள் எல்லாம் பரந்து விரிந்து தூரதூரமாக இருந்தது.

அங்கிருந்து சற்று தூரம் சென்றவர்கள், ஒரு கட்டிடத்தில் நுழைந்தனர். அங்கிருந்த லிஃப்டில் கீழே இறங்கி உள்ளே செல்ல, அங்கு இரண்டு பக்கமும் கண்ணாடி தடுப்பிருக்க, கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் நீந்திக் கொண்டிருந்தது.

நீலநிறம் கடலின் நிறமா? இல்லை அங்கிருந்த விளக்கின் நிறமா? என்று புரியவில்லை. அவ்வளவு அழகாக விளக்குகளுடன் அந்த இடம் காட்சி அளிக்க, ராகவி வாயில் கைவைத்து நின்று விட்டாள்.

“எவ்வளவு பெருசு!” என்று ஆச்சரியப்பட்டவள், “இந்த கண்ணாடி உடைஞ்சுடாதே?” என்று சந்தேகமாக கேட்டாள்.

“உடையாது. ஸ்ட்ராங்கா தான் இருக்கும். சுறா இதுல நீந்திட்டு இருக்கும். போய் பாரு”

“நீங்களும் வாங்க”

“நான் ஒரு ஃபோன் பேசனும். பேசிட்டு வர்ரேன்” என்றவன் அவளை அனுப்பி விட்டு, வெளியே வந்து காசிக்கு அழைத்தான்.

காசி உடனே அழைப்பை ஏற்றான்.

“சிவா எங்க?”

“அவரு கூட தான் வீட்டுக்கு போயிட்டு இருக்கோம் பாஸ்.”

“போகாத. நேரா ஃபார்ம் ஹவுஸ் போங்க. அங்க சாவி வாங்கிட்டு நான் சொல்லுற இடத்துக்கு போங்க”

“என்னாச்சு பாஸ்?”

“அப்பாவ அரெஸ்ட் பண்ண வாரன்ட் ரெடி பண்ணிருக்காங்க” என்று அமைதியாக சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த சிவாவும் மற்றவர்களும் அதிர்ந்து போனார்கள்.

“சாரா.. அப்பாவ..”

“ஒன்னும் ஆகாது. நீ அங்க போகாத. போனா உன்னையும் விசாரிக்கனும்னு கூட்டிட்டு போயிடுவாங்க. அப்பாவ மட்டும் அரெஸ்ட் பண்ணட்டும். அப்ப தான் மத்தத பார்க்க முடியும்”

“சாரா..”

“ட்ரஸ்ட் மீ மேன்.”

“ம்ம்”

அதோடு, எங்கே போக வேண்டும்? என்ற விவரத்தை எல்லாம் சொல்லி முடித்து விட்டு திரும்பியவன் முகத்தில், திருப்தி ஜொலித்தது.

அவன் இதற்கு தான் காத்திருந்தான். அவனை சீண்டாத வரை அவனால் ஒன்றும் செய்ய முடியாது. இப்போது சீண்டி விட்டார்கள் அல்லவா? இனி அவனிஷ்டம் தான் விளையாட்டு.

“ஆரம்பிச்சுட்டீங்கள்ள? முடிக்கிறேன்” என்றவனின் சிரிப்பு, சில நாட்களில் அனுபமாவையும் நிரூபனையும் அலற வைத்திருந்தது.

தொடரும்.

Leave a Reply